Remove ads
தென் மேற்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
கேரளம் (ஆங்கில மொழி: Kerala) இந்தியாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும்.[13] 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் முறையைப் பின்பற்றி 1 நவம்பர் 1956 அன்று இது உருவாக்கப்பட்டது. கொச்சி, மலபார், தென் கன்னட மாவட்டம் மற்றும் திருவாங்கூரின் அப்போதைய பகுதிகளின் மலையாளம் பேசிய பகுதிகளை இணைத்து இது உருவாக்கப்பட்டது.[14][15] இதன் பரப்பளவு 38,863 சதுர கிலோமீட்டர் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் 21வது மிகப் பெரிய இந்திய மாநிலமாக கேரளம் உள்ளது. இதற்கு வடக்கு மற்றும் வடகிழக்கே கருநாடகமும், கிழக்கு மற்றும் தெற்கே தமிழ்நாடும், மேற்கே இலட்சத்தீவுக் கடலும்[16] எல்லைகளாக உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தில் 3.3 கோடி மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையின் அடிப்படையில் 13வது மிகப் பெரிய இந்திய மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது. இது 14 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் தலைநகரம் திருவனந்தபுரம் ஆகும். கேரளத்தில் மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாக மலையாளம் உள்ளது. இம்மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியும் கூட இது தான்.[17]
கேரளம் | |
---|---|
கேரள அரசு தலைமைச் செயலகம் மெரைன் டிரைவ், கொச்சி | |
அடைபெயர்(கள்): கடவுளின் சொந்த நாடு , இந்தியாவின் மசாலாத் தோட்டம், தேங்காய் நிலம், மரங்களின் நிலம், தென்னிந்தியாவின் நகை [1] | |
கேரளத்தின் வரைபடம் | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | திருவனந்தபுரம் |
மாவட்டங்கள் | |
அரசு | |
• நிர்வாகம் | கேரள அரசு |
• ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
• முதலமைச்சர் | பிணறாயி விஜயன் (இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)) |
• சட்டப் பேரவை | கேரள சட்டமன்றம்
ஓரவை (141 உறுப்பினர்கள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | கேரள உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 38,863 km2 (15,005 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 21வது |
உயர் புள்ளி (ஆனைமுடி) | 2,695 m (8,842 ft) |
தாழ் புள்ளி | −2.2 m (−7.2 ft) |
மக்கள்தொகை (2018)[2] | |
• மொத்தம் | 3,46,30,192 |
• தரவரிசை | 13வது |
• அடர்த்தி | 890/km2 (2,300/sq mi) |
GSDP (2020-2021) | |
• மொத்தம் | ₹9.78இலட்சம் கோடி |
• தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி | ₹2,81,872 (US$3,500) |
மொழி | |
• அலுவல் மொழி | மலையாளம்[4] |
• கூடுதலான அலுவல் மொழி | ஆங்கிலம்[5][6] |
நேர வலயம் | ஒசநே+05:30 (இசீநே) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KL |
வாகனப் பதிவு | KL |
மனித மேம்பாட்டுச் சுட்டெண்(2019) | 0.782[7] (High) · 1வது |
படிப்பறிவு (2018) | 96.2%[8] |
பாலின விகிதம் (2011) | 1084 ♀/1000 ♂[9] |
இணையதளம் | kerala |
சின்னங்கள் | |
சின்னம் | கேரள அரசு சின்னம் |
மொழி | மலையாளம்[4] |
விலங்கு | இந்திய யானை[10] |
பறவை | மலை இருவாட்சி[10] |
மீன் | முத்துப்புள்ளி மீன் |
மலர் | கொன்றை[10] |
பழம் | பலாப்பழம்[11] |
மரம் | தென்னை [10] |
பூச்சி | பாபிலியோ புத்தா[12] |
கேரளத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த முதல் முக்கியமான இராச்சியம் சேரர் ஆவர். தூரத் தெற்கிலிருந்த ஆய் நாடு மற்றும் வடக்கே இருந்த புலி நாடு ஆகியவை பொ. ஊ.யின் தொடக்க ஆண்டுகளில் பிற இராச்சியங்களைக் கொண்டிருந்தன. பொ. ஊ. மு. 3,000ஆம் ஆண்டிலிருந்து இப்பகுதியானது ஒரு முக்கியமான மசாலாப் பொருள் ஏற்றுமதியாளராக இருந்துள்ளது.[18] பொ. ஊ. 100 வாக்கில் பிளினி மற்றும் பெரிப்ளசு கையேட்டு நூல்களில் வணிகத்தில் இப்பகுதியின் முக்கியத்துவமானது குறிப்பிடப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் மசாலாப் பொருள் வணிகமானது போத்துக்கீசர்களைக் கேரளத்திற்கு ஈர்த்தது. இந்தியாவின் ஐரோப்பியக் காலனிமயமாக்கத்திற்கு வழி ஏற்படுத்தியது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய விடுதலை இயக்கத்தின் காலத்தில் இரு முக்கியமான மன்னர் அரசுகள் கேரளத்தில் இருந்தன. அவை திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவையாகும். 1949இல் அவை ஒன்றிணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சி அரசை அமைத்தன. கேரளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள மலபார் பகுதியானது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்குப் பின் சென்னை மாநிலத்தின் பகுதியாக இது ஆனது. 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்திற்குப் பிறகு சென்னை மாநிலத்தின் மலபார் மாவட்டம் (நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வட்டம், இலட்சத்தீவுகள், ஆனைமலை இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப் பூங்கா, அனைக்கட்டிக்குக் கிழக்கில் உள்ள அட்டப்பாடி காடு தவிர்த்து), தென் கன்னட மாவட்டத்தில் உள்ள காசர்கோடு வட்டம் (தற்போது காசர்கோடு மாவட்டம்), மற்றும் அப்போதிருந்த அரசான திரு-கொச்சி (கன்னியாகுமரி மாவட்டத்தின் நான்கு தெற்கு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வட்டங்களைத் தவிர்த்து) ஆகியவை இணைக்கப்பட்டு நவீன கால கேரளம் மாநிலமானது உருவாக்கப்பட்டது.[15]
3.44%துடன் இந்தியாவிலேயே மிகக் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி வீதம்; 2018இல் 0.784 (2015இல் 0.712) என்ற மிக அதிகமான மனித மேம்பாட்டுச் சுட்டெண்; 2018இல் இந்தியாவின் தேசியப் புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட கல்வி அறிவு ஆய்வில் 96.2%துடன் மிக அதிக எழுத்தறிவு வீதம்;[8] 77.3 ஆண்டுகளுடன் மிக அதிக சராசரி ஆயுள் எதிர்பார்ப்பு; 1,000 ஆண்களுக்கு 1,084 பெண்கள் என்ற மிக அதிக பாலின விகிதம் ஆகியவற்றைக் கேரளம் கொண்டுள்ளது. நிதி ஆயோக்கின் நீடித்த வளர்ச்சி இலக்குகள் தகவல் முகப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தியப் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்களின் கையேடு ஆகியவற்றின் படி இந்தியாவிலேயே வறுமை குறைந்த மாநிலம் கேரளமாகும்.[19][20] 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 47.7% நகர்ப்புற மக்கள் தொகையுடன் நாட்டிலேயே இரண்டாவது மிக அதிக நகரமயமாக்கப்பட்ட முக்கிய மாநிலமாகக் கேரளம் உள்ளது.[21] 2019இல் பதிப்பிக்கப்பட்டது நிதி ஆயோக்கின் வருடாந்திர அறிக்கையின் படி வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்களை எட் டிய மாநிலங்களில் நாட்டிலேயே கேரளம் முதலிடம் பிடித்தது.[22] இந்தியாவிலேயே மிக அதிக ஊடக வெளிப்பாடு உள்ள மாநிலமாகக் கேரளம் உள்ளது. ஒன்பது மொழிகளில் இங்கு பத்திரிக்கைகள் முதன்மையாக மலையாளத்திலும், சில நேரத்தில் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்படுகின்றன. இம்மாநிலத்தின் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இதைத் தொடர்ந்து இசுலாம் மற்றும் கிறித்தவம் ஆகியவை மிகப் பெரிய சமயங்களாக உள்ளன.
2019-20இல் மொத்த மாநில உள் உற்பத்தியில் ₹8.55 டிரில்லியன் (US$110 பில்லியன்) ரூபாய்களுடன் இந்தியாவிலேயே 8வது மிகப் பெரியதாக கேரளத்தின் பொருளாதாரம் திகழ்ந்தது. நிகர மாநில உள் உற்பத்தி தனி நபர் வருமானமானது ₹2,22,000 (US$2,800) ஆக இருந்தது.[3] 2019-20இல் மொத்த பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்புக்கு மூன்றாம் படி நிலைத் துறையானது சுமார் 65%ஐப் பங்களித்தது. அதே நேரத்தில் முதன்மையான துறையான மூலப் பொருட்கள் சார்ந்த துறையானது 8%ஐ மட்டுமே பங்களித்தது.[23] 1970கள் மற்றும் 1980களின் தொடக்கத்தில் வளைகுடா பெருக்க வள காலத்தின் போது வளைகுடா நாடுகளுக்கு இம்மாநிலத்தின் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பணியாளர்கள் இடம் பெயர்ந்தனர். அயல்நாட்டில் வாழும் ஒரு பெரும் மலையாளிகளின் சமூகத்திடமிருந்து அனுப்பப்படும் பணங்களைச் சார்ந்து இதன் பொருளாதாரமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு உள்ளது. மிளகு மற்றும் இயற்கை மீள்மத்தின் உற்பத்தியானது மொத்த தேசிய உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பங்களிக்கிறது. வேளாண் துறையில் தென்னை, தேநீர், காப்பி, முந்திரி மற்றும் மசாலாப் பொருட்கள் முக்கியமானவையாக உள்ளன. இம்மாநிலமானது மேற்கே அரபிக் கடல் மற்றும் கிழக்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ளது. மாநிலத்தின் கடற்கரையானது 595 கிலோ மீட்டருக்கு நீண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 11 இலட்சம் மக்கள் மீன்பிடித் துறையைச் சார்ந்துள்ளனர். இது மாநிலத்தின் வருவாய்க்கு 3% பங்கை அளிக்கிறது. தேசியப் புவியியல் பயணி[24] எனும் பத்திரிகையின் படி உலகின் 10 சொர்க்கங்களில் ஒன்று என்று கேரளம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் பயணிகள் வருகை புரியும் மிக முக்கியமான இடங்களில் கேரளமும் ஒன்றாகும். தென்னை மரங்களையுடைய மணல் கடற்கரைகள், உப்பங்கழிகள், மலை வாழிடங்கள், ஆயுர்வேத சுற்றுலா மற்றும் வெப்ப வலய பச்சைத் தாவரங்கள் ஆகியவை இதன் முக்கியமான ஈர்ப்புகளாக உள்ளன.
கேரளம் என்ற சொல்லானது மௌரியப் பேரரசர் அசோகர் (பொ.ஊ.மு. 274–237) விட்டுச் சென்றிருந்த, நலத் திட்டம் குறித்த கல்வெட்டுகளில் ஒன்றான பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டுப் பாறைக் கல்வெட்டில் முதன் முதலில் கேரளபுத்தோ (கேரளபுத்திரர், 'சேரர்[களின்] மகன்') என்று பதிவிடப்பட்டுள்ளது.[25] அந்நேரத்தில் செந்தமிழில் இப்பகுதியில் இருந்த மூன்று அரசுகளில் ஒன்று சேரளம் என்று அழைக்கப்பட்டது. சேர மற்றும் கேர ஆகியவை ஒரே சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் ஆகும்.[26] கேரள மன்னர்களின் மிகப் பழமையான அறியப்பட்ட அரசமரபைக் குறிக்க சேரள் என்ற சொல் பயன்படுகிறது. 'ஏரி'க்கான பழமையான தமிழ் மொழிச் சொல்லிலிருந்து இது தருவிக்கப்பட்டுள்ளது.[27] கேரளம் என்ற சொல்லானது செந்தமிழ் சொல்லான செரிவே-அளம் 'மலைச்சரிவு'[28] அல்லது சேர அளம் 'சேரர்களின் நிலம்' என்பதிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஒரு நாட்டுப்புறச் சொற்பிறப்பியலானது கேரளத்தை மலையாளச் சொல்லான கேர 'தென்னை மரம்' மற்றும் அளம் 'நிலம்' ஆகியவற்றில் இருந்து தருவிக்கிறது. இவ்வாறாக 'தென்னை மரங்களின் நிலம்'[29] என்று பொருள் படுகிறது. ஏராளமான தென்னை மரங்கள் இருப்பதன் காரணமாக உள்ளூர் மக்களால் இம்மாநிலத்திற்கு வழங்கப்படும் செல்லப் பெயராக இது உள்ளது.[30]
கேரளத்தை சேரபாதம் என்று குறிப்பிட்ட தொடக்க கால சமசுகிருத நூலானது பிந்தைய வேத கால நூலான ஆரண்யகம் ஆகும். இரு இந்து இதிகாசங்களான இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் கூட கேரளம் குறிப்பிடப்பட்டுள்ளது.[31] தச்சுடைய கைமாள்களின் இறைப்பணி சார்ந்த அலுவலகத்தை கந்த புராணமானது குறிப்பிடுகிறது. இவர்கள் மாணிக்கம் கேரளர் என்று குறிப்பிடப்படுகின்றனர். கூடல்மாணிக்கம் கோயிலின் தெய்வத்துடன் இது ஒத்த பொருளுடையதாக உள்ளது.[32][33] கிரேக்க-உரோமை வணிக வரைபடமான செங்கடல் செலவு கேரளத்தை சேலோபோத்ரா என்று குறிப்பிடுகிறது.[34]
கேரளமானது மற்றொரு பெயரில் அயல் நாட்டு வாணிக வட்டங்களில் மலபார் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் தென் மேற்குக் கடற்கரையில் கேரளத்துடன் நிலப்பரப்பில் தொடர்ச்சியாக அமைந்துள்ள துளு நாடு மற்றும் கன்னியாகுமரியைக் குறிப்பிடவும் மலபார் என்ற சொல்லானது பயன்படுத்தப்பட்டது. நவீன மாநிலமான கேரளத்தையும் சேர்த்துக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டது.[35][36] மலபாரின் மக்கள் மலபார்கள் என்று அறியப்பட்டனர். பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் வருகை வரை மலபார் என்ற சொல்லானது கேரளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பெயராக இருந்தது.[14] பொ. ஊ. 6ஆம் நூற்றாண்டில் கிரேக்க வணிகரான காசுமசு இநதிகோப்லியேஸ்தசுவின் காலம் முதல் அரேபிய மாலுமிகள் கேரளத்தை மலே என்று அழைத்துக் கொண்டிருந்தனர். எனினும், இப்பெயரின் முதல் காரணியானது காசுமசு இநதிகோப்லியேஸ்தசுவால் எழுதப்பட்ட இட அமைப்பியல் என்ற நூலில் ஏற்கனவே ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இது ஒரு மிளகுச் சந்தையான மலே என்று அழைக்கப்பட்ட இடத்தைக் குறிப்பிடுகிறது. இதுவே தெளிவாக மலபார் ('மலேகளின் நாடு') என்ற சொல்லுக்குத் தன் பெயரைக் கொடுத்தது. திராவிடச் சொல்லான மலை என்ற சொல்லிலிருந்து மலே என்ற பெயர் வந்திருக்கலாம் என்று எண்ணப்படுகிறது.[37][38] இப்பகுதியை மலபார் என்று அழைத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் அல்-பிருனி (பொ. ஊ. 973–1048) ஆவார்.[14] இபின் கோர்தாத்பே மற்றும் அல்-பலதூரி போன்ற எழுத்தாளர்கள் தங்களது நூல்களில் மலபார் துறைமுகங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.[39] அரேபிய எழுத்தாளர்கள் இப்பகுதியை மலிபார், மனிபார், முலிபார் மற்றும் முனிபார் என்று அழைத்துள்ளனர்.[40] மலபார் என்ற சொல்லானது மலநாடு என்ற சொல்லை நினைவூட்டுகிறது. இதன் பொருள் மலைகளின் நிலம் என்பதாகும். மலபார் மாவட்ட ஆட்சியராக இருந்த வில்லியம் லோகன், மலபார் என்ற சொல்லானது திராவிடச் சொல்லான மலை மற்றும் பாரசீக/அரபு மொழிச் சொல்லான பார் (நாடு/கண்டம்) ஆகியவற்றின் இணைவில் இருந்து தோன்றியது என்று குறிப்பிட்டுள்ளார்.[41]
சங்க இலக்கிய நூலான புறநானூறின் படி கன்னியாகுமரி மற்றும் இமயமலைக்கு இடைப்பட்ட நிலங்களைச் சேர மன்னன் செங்குட்டுவன் வென்றான்.[42] சமமான எதிரிகள் கிடைக்காததால் கடலுக்குள் தன்னுடைய ஈட்டியை எறிந்து அதைத் தாக்கினான்.[42][43] 17ஆம் நூற்றாண்டு இந்துத் தொன்மவியல் நூலான கேரளோல்பதியின் படி கடலில் இருந்து கேரளாவின் நிலங்களானவை பரசுராமரால் மீட்கப்பட்டன. விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக, கோடாரியை ஆயுதமாகக் கொண்ட போர் வீரன்-முனிவராகப் பரசுராமர் குறிப்பிடப்படுகிறார். எனவே, இந்துத் தொன்மவியலில் கேரளம் பரசுராம சேத்திரம் ('பரசுராமரின் நிலம்') என்றும் கூட அழைக்கப்படுகிறது.[44] பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியைக் கடலுக்குள் தூக்கி எறிந்தார். கோடரி அடைந்த இடம் வரை நீர் உள் வாங்கியது. பழங்கதை மரபின் படி நிலத்தின் இந்தப் புதிய பகுதியானது கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரை விரிவடைந்திருந்தது.[45] கடலில் இருந்து எழுந்த நிலமானது உப்பால் நிரப்பப்பட்டிருந்தது; வாழ்வதற்குத் தகாத இடமாக இருந்தது. எனவே, பரசுராமர் பாம்புகளின் மன்னனாகிய வாசுகியை அழைத்தார். தன்னுடைய புனிதமான விஷத்தை அது துப்பியது. மணலானது செழிப்பான பச்சைப் பசேல் நிலமாக மாறியது. பதில் மரியாதைக்காக வாசுகி மற்றும் அனைத்துப் பாம்புகளும் இந்நிலத்தின் பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். பி. டி. சீனிவாச அய்யங்காரின் கோட்பாட்டின் படி, பரசுராமர் பழங்கதையால் சேரன் செங்குட்டுவன் அகத்தூண்டுதல் பெற்று இருக்கலாம். இக்கதையானது தொடக்க கால ஆரியக் குடியிருப்பாளர்களால் கொண்டு வரப்பட்டதாகும்.[46]
கேரளத்துடன் தொடர்புடைய மற்றுமொரு மிக ஆரம்ப புராணக் கதாபாத்திரம் மகாபலி சக்கரவர்த்தியாவான். ஓர் அசுரன் மற்றும் முன் மாதிரியான எளிமையான மன்னன் இவனாவான். இவன் கேரளத்திலிருந்து உலகை ஆண்டான். தேவர்களுக்கு எதிராகப் போரை வென்று, அவர்களை வெளியேறி வாழும் நிலைக்குத் தள்ளினான். விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டனர். அவர் தன்னுடைய ஐந்தாவது அவதாரமான வாமனராக வந்தார். தேவர்களின் சினத்தைத் தணிப்பதற்காக மகாபலியை பாதாளத்தில் தள்ளினார். ஓணம் பண்டிகையின் போது ஆண்டுக்கு ஒரு முறை மகாபலி கேரளத்திற்குத் திரும்பி வருகிறார் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.[47] 18 புராணங்களில் மிகப் பழமையானவற்றில் ஒன்றான மச்ச புராணம் மச்சாவதாரத்தின் கதை அமைந்த இடமாக மலாயா மலைகளைப் பயன்படுத்துகின்றது.[48][49] மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும். மனு முதல் மனிதனும், இப்பகுதியின் மன்னனும் ஆவான்.[50][51]
பூவார் பகுதியானது அதன் செல்வத்திற்காக அறியப்பட்ட விவிலிய ஓபிர் பகுதியுடன் அடிக்கடி அடையாளப்படுத்தப்படுகிறது.[52]
சேரமான் பெருமாள்கள் தொன்மமானது கேரளத்தின் சேரமான் பெருமாள்களுடன் (இலக்கிய ரீதியான பொருள் சேர மன்னர்கள்) தொடர்புடைய நடுக் காலப் பாரம்பரியம் ஆகும்[53]. வரலாற்றின் ஓர் ஆதாரமாக இத்தொன்மத்தின் முறைமையானது ஒரு நேரத்தில் தென்னிந்திய வரலாற்றாளர்கள் மத்தியில் அதிகப் படியான விவாதத்தை ஏற்படுத்தியது.[54] கேரளத்தின் தலைவர்களைக் கொண்ட அரசுகளால் தங்களது ஆட்சியை முறைமை உடையதக்க இத்தொன்மமானது பயன்படுத்தப்பட்டது. நடுக் காலக் கேரளத்தின் முதன்மையான தலைவர்களின் குடும்பங்களில் பெரும்பாலானவை தங்களது பூர்வீகத்தைப் பெருமாள் கொடுத்த தொன்மவியல் பங்களிப்பிற்குத் தடயமாகக் கொண்டிருந்தன.[55][56] தொன்மவியலின் படி, சேரமான் பெருமாளின் மேலாட்சியாளரான ராயர் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குக் கிழக்கே இருந்த ஒரு நாட்டில் வாழ்ந்தார். கடைசிப் பெருமாளின் ஆட்சியின் போது கேரளத்தின் மீது படையெடுத்தார். படையெடுத்து வந்த படைகளைத் திருப்பி அனுப்பப் பெருமாள் தன்னுடைய தலைவர்களின் படைத்துறைசாராப் படையினரை அழைத்தார். உதயவர்மன் கோலத்திரி, மனிச்சான் மற்றும் ஏறநாட்டின் விக்கிரன் போன்றோர் இதில் அடங்குவர். ஏற நாட்டின் தலைவனான ஏறடியர்கள் சேரமான் பெருமாளிடம் ராயரால் நிறுவப்பட்ட கோட்டையைக் கைப்பற்றுவோம் என்று உறுதி அளித்தனர்[57]. மூன்று நாட்களுக்கு இந்த யுத்தம் நீடித்தது. ராயர் இறுதியாகத் தன்னுடைய கோட்டையைக் காலி செய்தார்.[57] பெருமாளின் துருப்புகளால் கோட்டை கைப்பற்றப்பட்டது. பிறகு கடைசி சேரமான் பெருமாள் கேரளம் அல்லது சேர இராச்சியத்தைத் தன்னுடைய தலைவர்கள் மத்தியில் பிரித்தார். மர்மமாக மறைந்தார். இவரைப் பற்றி எந்த ஒரு தகவலையும் கேரள மக்கள் அதற்குப் பிறகு கேட்கவில்லை.[53][55][56] கோழிக்கோட்டின் சமோரின்கள் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட நெடியிருப்பின் ஏறடியர்களுக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்ட போது எதுவும் வழங்கப்படவில்லை. இவர்களுக்குச் சேரமான் பெருமாளின் வாளானது ("இறக்க, மற்றும் கொல்ல, மற்றும் கைப்பற்றுவதற்கான அனுமதியுடன்") கொடுக்கப்பட்டது.[56][57]
மேற்குக் கடற்கரைத் தாழ் நிலங்கள் மற்றும் நடு நிலத்தின் சமவெளிகள் உள்ளிட்ட கேரளத்தின் ஒரு குறிப்பிடத் தகுந்த பகுதியானது பண்டைய காலங்களில் கடலின் அடியில் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கனாச்சேரிக்கு அருகிலுள்ள பகுதியில் கடல்வாழ் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறாக இக்கோட்பாட்டுக்கு ஆதரவாக உள்ளன.[58] இடுக்கி மாவட்டத்தின் மறையூர் பகுதியில் புதிய கற்காலச் சகாப்தத்தைச் சேர்ந்த கல்திட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுக்கு முந்தைய தொல்லியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு உயர் நிலத்தில் இடுக்கி மாவட்டமானது அமைந்துள்ளது. இப்பகுதி உள்ளூர் அளவில் "முனியரா" என்று அறியப்பட்டது. முனி (முனிவர்) மற்றும் அரா (பெருங் கற்காலச் சமாதி) ஆகிய சொற்களிலிருந்து இது தருவிக்கப்பட்டது.[59] வயநாடு மாவட்டத்தில் உள்ள எடக்கல் குகைகளில் உள்ள பாறை செதுக்குருவங்களானவை பொ. ஊ. மு. 6000ஆம் ஆண்டு காலத்தை ஒட்டிய புதிய கற்காலத்திற்கு காலமிடப்படுகின்றன.[60][61] தொல்லியல் ஆய்வுகளானவை கேரளத்தில் இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலத் தளங்களை அடையாளப்படுத்தியுள்ளன[62]. இந்த ஆய்வுகள் பண்டைக்கால கேரள சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் அதன் பண்பாட்டை பழைய கற்காலத்தில் இருந்து தொடங்கி இடைக் கற்காலம், புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்காலம் வரை சுட்டிக் காட்டுகின்றன.[63] இந்தப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு அயல் நாட்டுப் பண்பாட்டு தொடர்புகள் உதவிகரமாக இருந்துள்ளன;[64] வெண்கலக் காலத்தின் பிற்பகுதி மற்றும் இரும்புக் காலத்தின் தொடக்கப் பகுதியின் போது சிந்துவெளி நாகரிகத்துடன் ஒரு சாத்தியமான வகையிலான உறவு முறையானது இருந்தது என வரலாற்றாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.[65]
பொ. ஊ. மு. 3,000இலிருந்து கேரளமானது ஒரு முதன்மையான மசாலாப் பொருள் ஏற்றுமதியாளராக இருந்துள்ளது. சுமேரியப் பதிவுகளின் படி மற்றும் இன்றும் கூட கேரளமானது "மசாலாப் பொருட்களின் தோட்டம்" அல்லது "இந்தியாவின் மசாலாத் தோட்டம்" என்று குறிப்பிடப்படுகிறது.[66][67]:79 கேரளத்தின் மசாலாப் பொருட்களானவை பண்டைக்கால அரேபியர்கள், பாபிலோனியர், அசிரியர்கள் மற்றும் எகிப்தியர்களை மலபார் கடற்கரைக்கு பொ. ஊ. மு. 3ஆம் மற்றும் 2ஆம் ஆயிரமாண்டுகளில் ஈர்த்துள்ளது. இக்காலத்தின் போது போனீசியா கேரளத்துடன் வணிகத்தை நிறுவியது.[68] மசாலாப் பொருட்களை வணிகம் செய்வதற்காக மலபார் கடற்கரைக்குள் நுழைந்த முதல் நபர்கள் அரேபியர்கள் மற்றும் போனீசியர்கள் ஆவர்.[68] கேரளம் மற்றும் பிற கிழக்கு நாடுகளுக்கு முதல் நீண்ட பயணத்தை யெமன், ஓமான், மற்றும் பாரசீக வளைகுடாவின் கடற்கரையில் இருந்த அரேபியர்களே மேற்கொண்டிருக்க வேண்டும்.[68] மத்திய கிழக்கிற்கு கேரளத்திலிருந்து இலவங்கப்பட்டைகளை இவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்.[68] பொ. ஊ. மு. 5ஆம் நூற்றாண்டு கிரேக்க வரலாற்றாளரான எரோடோட்டசு அவருடைய காலத்தில் எகிப்தியர்கள் மற்றும் போனீசியர்களால் இலவங்கப்பட்டை வணிகத் துறையானது ஏக போக உரிமையுடன் நடத்தப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.[68]
சேர மன்னன் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் பெரும்பாலான நவீன கேரளத்தைத் தன்னுடைய தலைநகரான குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தான் என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[69][70] முசிறித் துறைமுகத்தையும் இவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஆனால், அதன் தென்பகுதி முனையானது பாண்டிய இராச்சியத்தில் இருந்தது.[71] இது ஒரு வணிகத் துறைமுகத்தைக் கொண்டிருந்தது. சில நேரங்களில் பண்டைக்கால மேற்குலக ஆதாரங்களில் கொல்லத்தில் உள்ள நீலகண்ட நகரம் (அல்லது நீசிந்தி) இது அடையாளப்படுத்தப்படுகிறது.[72] திந்திசு சேரர் மற்றும் உரோமைப் பேரரசுக்கு இடையில் ஒரு முதன்மையான வணிக மையமாக இருந்தது.[73] முக்கியத்துவத்தில் முசிறித் துறைமுகத்துக்கு அடுத்த இடத்தில் இருந்தது. குறைவாக அறியப்பட்ட ஆய்சு மற்றும் முசிக இராச்சியங்கள் சேரப் பகுதிகளுக்கு முறையே தெற்கு மற்றும் வடக்கே அமைந்திருந்தன.[74][75] பொ. ஊ. 1ஆம் நூற்றாண்டில் மூத்த பிளினி திந்திசு துறைமுகமானது கெப்ரோபோதோசின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்தது என்று குறிப்பிடுகிறார்.[76] திந்திசுவில் துறைமுகத்துக்கு வடக்கே அமைந்திருந்த வடக்கு மலபார் பகுதியானது சங்க காலத்தின் போது எழிமலை இராச்சியத்தால் ஆளப்பட்டது.[14] கிரேக்க-உரோமை நூல்களில் முசிறித் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த திந்திசு துறைமுகமானது கோழிக்கோட்டைச் சுற்றிய பகுதியில் அமைந்திருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.[14] இதன் துல்லியமான அமைவிடம் விவாதத்திற்குரியதாக உள்ளது.[14] பொன்னானி, தானூர், பேப்பூர்-சாலியம்-கடலுண்டி-வள்ளிக்குன்னு, மற்றும் கொயிலாண்டி ஆகியவை இதன் அமைவிடமாகப் பரிந்துரைக்கப்படும் இடங்களாகும்.[14]
மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த வணிகர்கள் கேரளத்தில் கடற்கரைக் காவலிடங்கள் மற்றும் குடியிருப்புகளை நிறுவினர்.[77] கேரளத்துடனான இசுரேலியத் (யூத) தொடர்பானது பொ. ஊ. மு. 573இல் தொடங்கியது.[78][79][80] கேரளத்துடன் வணிகத் தொடர்புகளை அரேபியர்களும் கூடக் கொண்டிருந்தனர். பொ. ஊ. மு. நான்காம் நூற்றாண்டுக்கு முன்னர் இது தொடங்கியது. கேரளத்திலிருந்து அரேபியர்களால் வாங்கி வரப்பட்ட பொருட்கள் ஏடனில் இருந்த இசுரேலியர்களிடம் (ஈப்ரு யூதர்கள்) விற்கப்பட்டன என்று எரோடோட்டசு (484–413 பொ. ஊ. மு.) குறிப்பிட்டுள்ளார்.[81] 4ஆம் நூற்றாண்டில் நனயா அல்லது தெற்கு கிறித்தவர்களும் கூட ஈரானில் இருந்து கேரளத்துக்கு இடம் பெயர்ந்தனர். தொடக்க காலத்தில் வந்த சிரிய கிறித்தவ சமூகத்துடன் வாழ்ந்தனர். சிரிய கிறித்தவர்கள் புனித தோமா கிறித்தவர்கள் என்று அறியப்படுகின்றனர். 1ஆம் நூற்றாண்டில் தோமாவின் மதப்பரப்புச் செயல்பாடுகளுக்குத் தங்களது பூர்வீகத்தை இவர்கள் தடயமாகக் கொண்டுள்ளனர்.[82][83]
மகோதயபுரத்தின் (தற்கால கொடுங்கல்லூர்) குலசேகர அரசமரபு என்றும் அறியப்பட்ட ஓர் இரண்டாவது சேர இராச்சியமானது (அண். 800–1102) குலசேகர வர்மனால் நிறுவப்பட்டது.[85] நவீன கேரளத்தின் முழுப்பகுதி மற்றும் நவீன தமிழ்நாட்டின் ஒரு சிறிய பகுதியை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பை இவர் ஆண்டார். குலசேகர காலத்தின் தொடக்கப் பகுதியின் போது நாகர்கோவிலிலிருந்து திருவல்லா வரையிலான தெற்குப் பகுதியானது ஆய் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது. ஆய் மன்னர்கள் 10ஆம் நூற்றாண்டில் தங்களது அதிகாரத்தை இழந்தனர். இது இப்பகுதியை குலசேகரப் பேரரசின் ஒரு பகுதியாக மாற்றியது.[86][87] குலசேகர ஆட்சியின் கீழ் கலை, இலக்கியம், வணிகம் மற்றும் இந்து சமயத்தின் பக்தி இயக்கம் ஆகியவை வளர்ச்சி அடைந்த ஒரு காலத்தைக் கேரளமானது கண்டது.[88] தமிழர்களிடமிருந்து வேறுபட்ட ஒரு கேரள அடையாளமானது இக்காலத்தின் போது ஏழாம் நூற்றாண்டு வாக்கில் மொழியியல் ரீதியாகப் பிரிந்தது.[89] கொல்ல ஆண்டின் தொடக்கமானது பொ. ஊ. 825ஆம் ஆண்டுக்குக் காலமிடப்படுகிறது.[90][91][92] உள்ளூர் நிர்வாகத்துக்காக நடுவழிகளின் ஆட்சியின் கீழ் பேரரசானது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாகாணமும் ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தேசங்களைக் கொண்டிருந்தன. இதைத் தேச வழிகள் என்றழைக்கப்பட்ட தலைவர்கள் ஆண்டனர்.[88] பாரதப்புழா ஆற்றின் கரையில் குட்டிப்புரத்திற்கு அருகில் திருநாவாயில் கேரளத்தின் மிகப் பெரிய உள்ளூர் விழாவான மாமாங்கம் திருவிழா நடத்தப்படுகிறது.[40][14] ஆழ்வஞ்சேரி தம்பிராக்களின் தலைமையகமான ஆதவநாடும் கூட திருநாவாய்க்கு அருகில் அமைந்துள்ளது. ஆழ்வஞ்சேரி தம்பிராக்கள் கேரளத்தின் நம்பூதிரி பிராமணர்களின் உச்சபட்ச சமயத் தலைவர்களாகக் கருதப்படுகின்றனர்.[40][14]
தாணு இரவி வர்மாவின் (பொ. ஊ. 9ஆம் நூற்றாண்டு) ஆட்சியின் போது கேரளத்துக்கு வருகை புரிந்த ஒரு பாரசீக வணிகரான சுலைமான் அல்-தசீர் அந்நேரத்தில் கேரளம் மற்றும் சீனாவுக்கு இடையில் விரிவான வணிகமானது இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இது கொல்லத்தில் இருந்த துறைமுகத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.[93] கடற்கரைப் பட்டணங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முசுலிம் மக்களின் இருப்பு குறித்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அயல்நாட்டு நூல்கள் குறிப்பிடுகின்றன. பகுதாதுவின் அல்-மசூதி (பொ. ஊ. 896-956), முகம்மது அல்-இத்ரிசி (பொ. ஊ. 1100-1165), அபுல்பெதா (பொ. ஊ. 1273-1331), மற்றும் அல்-திமஷ்கி போன்ற அரேபிய எழுத்தாளர்கள் கேரளத்தில் இருந்த முசுலிம் சமூகங்கள் குறித்து எழுதியுள்ளனர்.[94] தெற்காசியாவில் முதல் பூர்வீகக் குடியமர்ந்த முசுலிம் சமூகமாக மாப்பிளமார்களைக் கருதலாம் என சில வரலாற்றாளர்கள் எண்ணுகின்றனர்.[95][96] கேரளத்தின் முசுலிம்கள் குறித்த அறியப்பட்ட தொடக்க காலக் குறிப்பானது குயிலோன் சிரிய தாமிரத் தகடுகளில் உள்ளது.[84]
11ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு தொடர்ச்சியான சேர-சோழப் போர்களால் ஏற்பட்ட தயக்க உணர்வானது கேரளத் துறைமுகங்களில் அயல் நாட்டு வணிகத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது. மேலும், 15ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசப் படையெடுப்புகளானவை பௌத்தம் மற்றும் சைனம் ஆகிய இரு முதன்மையான சமயங்கள் இந்நிலத்தில் இருந்து மறைவதற்குக் காரணமாயின. கேரளத்தின் மலபார் பகுதியில் இருந்த மேனன்கள் உண்மையில் சைன சமயத்தின் வலிமையான நம்பிக்கையாளர்களாக இருந்தனர் என்பது அறியப்பட்ட ஒன்றாகும்.[97] சாதியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட பிரிவுகள் சமூக அமைப்பில் விரிசலை உருவாக்கின.[98] இறுதியாக, 1102இல் பிற்காலப் பாண்டியர் மற்றும் இடைக்காலச் சோழர்களின் ஒன்றிணைந்த தாக்குதலால் குலசேகர அரசமரபானது அடிபணிய வைக்கப்பட்டது.[86] எனினும், 14ஆம் நூற்றாண்டில் தெற்கு வேணாடு இராச்சியத்தின் ரவி வர்ம குலசேகரனால் (1299-1314) தென்னிந்தியா மீது ஒரு குறுகிய காலமே நீடித்திருந்த உச்ச நிலையை நிறுவ முடிந்தது.
ரவி வர்ம குலசேகரனின் இறப்பிற்குப் பிறகு ஒரு வலிமையான மைய சக்தி இல்லாதிருந்த நிலையில் அரசானது அப்போது சிறிய, தங்களுடன் போரிட்டுக் கொண்ட வேள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வடக்கே கோழிக்கோட்டின் சமோரின் இராச்சியம், தூரத் தெற்கே கொல்லம், தெற்கே கொச்சி மற்றும் தூர வடக்கே கண்ணூர் ஆகியவையே இவற்றில் மிக வலிமையானவையாக இருந்தன. கோழிக்கோட்டில் இருந்த துறமுகமானது கேரளத்தில் ஒரு உச்சபட்ச பொருளாதார மற்றும் அரசியல் நிலையைக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் கொல்லம் (குயிலோன்), கொச்சி மற்றும் கண்ணூர் (கன்னனூர்) ஆகியவை வணிக ரீதியாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன.[99] கோழிக்கோட்டின் சமோரின் உண்மையில் ஏறநாட்டின் ஆட்சியாளர் ஆவார். ஏறநாடானது தற்போதைய மலப்புறம் மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் அமைந்திருந்த ஒரு சிறிய வேள் பகுதியாகும்.[14][100] சமோரின்கள் அரேபிய மற்றும் சீன வணிகர்களுடன் கூட்டணி வைத்தனர். கோழிக்கோட்டில் இருந்து பெற்ற பெரும்பாலான செல்வத்தைத் தங்களது இராணுவ சக்தியை மேம்படுத்தப் பயன்படுத்தினர். நடுக் காலத்தின் போது மலையாளம் பேசிய பகுதியில் மிக சக்தி வாய்ந்த இராச்சியமாகக் கோழிக்கோடு உருவானது.[101][100]
தங்களது ஆட்சியின் உச்ச நிலையின் போது கோழிக்கோட்டின் சமோரின்கள் தெற்கே கொல்லம் (கொல்லம்) முதல் வடக்கே பந்தலயினி கொல்லம் (கொயிலாண்டி) வரையிலான ஒரு நிலப்பகுதி மீது ஆட்சி செய்தனர்.[101][100] கோழிக்கோடு நகரத்திற்கு ஆறு முறை வருகை புரிந்த இப்னு பதூதா (1342–1347) நகரில் வாழ்வின் தொடக்க கால கண நேரக் காட்சிகளைக் கொடுக்கிறார்.[102] செங் கேவுக்குக் கீழான ஏகாதிபத்திய சீனக் கப்பல் குழுவின சீன மாலுமிகள் பிரிவைச் சேர்ந்த மா குவான் (பொ. ஊ. 1403)[103] இந்நகரத்தை ஒரு பெரும் வணிகச் சந்தை என்றும், உலகம் முழுவதிலும் இருந்த வணிகர்கள் இங்கு அடிக்கடி வந்து சென்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அப்துர் ரசாக் (1442–43), நிக்கோலோ டா கொன்ட்டி (1445), அபனசி நிகிதின் (1468-74), லுதோவிகோ டி வர்தேமா (1503-1508), மற்றும் துவார்த்தே பர்போசா ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தில் முதன்மையான வணிக மையங்களில் ஒன்றாக இந்நகரத்தைக் கண்டனர். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்களை இங்கு காணலாம் என்று குறிப்பிட்டனர்.[104][105]
விசயநகரப் பேரரசின் மன்னன் இரண்டாம் தேவ ராயன் (1424-1446) 15ஆம் நூற்றாண்டில் தற்போதைய கேரள மாநிலத்தின் முழுப் பகுதியையும் வென்றான்.[100] கோழிக்கோட்டின் சமோரினை இவன் தோற்கடித்தான். 1443 வாக்கில் கொல்லத்தின் ஆட்சியாளரையும் தோற்கடித்தான்.[100] விசயநகரப் பேரரசின் மன்னனுக்கு சமோரின் திறை செலுத்த வேண்டி இருந்தது என்று பெர்னாவோ நுனிஸ் கூறுகிறார்.[100] தங்களது விசயநகர மேலாட்சியாளர்களுக்கு எதிராகப் பின்னர் கோழிக்கோடு மற்றும் வேணாடு கிளர்ச்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஆனால், இரண்டாம் தேவ ராயன் கிளர்ச்சியை ஒழித்துக் கட்டினார்.[100] அடுத்த 50 ஆண்டுகளில் விசயநகரத்தின் சக்தியானது குறையத் தொடங்கிய போது கோழிக்கோட்டின் சமோரின்கள் கேரளத்தில் மீண்டும் முக்கியத்துவம் பெற்ற நிலைக்கு உயர்ந்தனர்.[100] 1498இல் பொன்னானியில் ஒரு கோட்டையை இவன் கட்டினான்.[100]
நடு மற்றும் பிந்தைய நடுக் காலங்களின் போது அரபிக் கடலில் மசாலாப் பொருட்களின் கடல் வாணிகத்தின் ஏகபோகத் தனியுரிமையானது அரேபியர்களுடனேயே இருந்தது. எனினும், ஐரோப்பியக் கண்டுபிடிப்புக் காலத்தில் மத்திய கிழக்கு வணிகர்களின் ஆதிக்கமானது சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. 1498இல் கோழிக்கோட்டின் காப்பாட்டில் வாஸ்கோ ட காமாவின் வருகைக்குப் பிறகு கிழக்குக் கடல் பயணங்கள் மீது போத்துக்கீசர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். குறிப்பாக, மசாலாப் பொருள் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர்.[a][107][108][109] 1498இல் ஐரோப்பாவிலிருந்து மலபாருக்குக் கடல் வழியைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து போத்துக்கீசர் தங்களது நிலப்பரப்புகளை விரிவாக்கத் தொடங்கினர். ஓர்முசு மற்றும் மலபார் கடற்கரை மற்றும் தெற்கே சிலோனுக்கு இடைப்பட்ட கடல்களை ஆட்சி செய்தனர்.[110][111] 1502ஆம் ஆண்டின் போது கொல்லத்தின் தங்கசேரியில் ஒரு வணிக மையத்தை, அங்கிருந்து மசாலாப் பொருள் வணிகத்தைத் தொடங்க வேண்டும் என கொல்லத்தின் அப்போதைய அரசி விடுத்த அழைப்பின் பேரில் நிறுவினர்.[112]
கோழிக்கோட்டின் சமோரின்களுக்கு அடி பணிந்திருந்த தானூர் இராச்சியத்தின் ஆட்சியாளர் போத்துக்கீசருடன் இணைந்து கோழிக்கோட்டிலிருந்த தங்களது மேலாட்சியாளருக்கு எதிராகச் செயல்பட்டார்.[14] இதன் விளைவாக இந்தியாவில் தொடக்க கால போத்துக்கீசக் காலனிகளில் ஒன்றாக தானூர் இராச்சியம் (வேட்டத்துநாடு) உருவானது. எனினும், கொச்சி யுத்தத்தில் (1504) கோழிக்கோட்டின் சமோரின்களுக்காக தானூர் படைகள் தங்களது மன்னனுக்குக் கீழ் போரிட்டன.[40] எனினும், கோழிக்கோட்டின் சமோரின்களுக்குக் கீழான தானூர் பகுதியின் மாப்பிளமார் வணிகர்கள் சமோரின்களுடனான தங்களது கூட்டணியை இன்னும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.[113] சமோரின் மற்றும் கொச்சி மன்னனுக்கு இடையில் இருந்த பகைமையைத் தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்திக் கொண்ட போத்துக்கீசர் கொச்சியுடன் இணைந்தனர். 1505இல் போத்துக்கீச இந்தியாவின் அரசப் பிரதிநிதியாக பிரான்சிஸ் கோ டீ அல்மெய்டா நியமிக்கப்பட்ட போது அவரது தலைமையகமானது கோழிக்கோட்டில் இல்லாமல் கொச்சிக் கோட்டையில் (இமானுவேல் கோட்டை) நிறுவப்பட்டது. இவரது ஆட்சிக் காலத்தின் போது கொச்சியுடனான உறவு முறைகள் மீது போத்துக்கீசரால் ஆதிக்கம் செலுத்த முடிந்தது. அவர் கடற்கரையில் சில கோட்டைகளை நிறுவினார்.[114] எனினும், தெற்கு மலபாரில் சமோரின் படைகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களால் போத்துக்கீசர் தடங்கல்களைச் சந்தித்தனர். குஞ்ஞாலி மரைக்காயர்கள் என்று அறியப்பட்ட கோழிக்கோட்டுக் கடற்படைத் தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நடந்த கடற்படைத் தாக்குதலால் குறிப்பாகத் தடங்கல்களைச் சந்தித்தனர். ஓர் ஒப்பந்தத்தை வேண்டும் நிலைக்குப் போத்துக்கீசரை இது தள்ளியது. இந்தியக் கடற்கரையில் முதல் கடற்படைத் தற்காப்பை ஒருங்கிணைத்தவர்களாக குஞ்ஞாலி மரைக்காயர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.[115] நவீன மலையாள இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் போத்துக்கீசர் காலத்தின் போது திரூரில் (வேட்டத்துநாடு) பிறந்தார்.[40][14]
1571இல் சலியம் கோட்டை யுத்தத்தில் சமோரின் படைகளால் போத்துக்கீசர் தோற்கடிக்கப்பட்டனர்.[116] கொல்லம் துறைமுகத்தில் அரேபியர் மற்றும் போத்துக்கீசருக்கு இடையிலான ஒரு கலகமானது கொல்லத்தில் போத்துக்கீசர் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. கோலாத்திரிக்கு அடி பணிந்திருந்த, கண்ணூருக்கு அருகில் இருந்த அரக்கால் இராச்சியத்தின் அலி இராசாக்களின் முசுலிம் வழித் தோன்றல்கள் இலட்சத் தீவுகளை ஆண்டனர்.[117] காசர்கோட்டுக்கு அருகே உள்ள பேக்கால் கோட்டையானது கேரளத்தில் உள்ள கோட்டைகளிலேயே மிகவும் பெரியதாகும். இது கேளடியின் சிவப்பா நாயக்கரால் 1650இல் கட்டப்பட்டது.[118] இடச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தால் போத்துக்கீசர்கள் வெளியேற்றப்பட்டனர். கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையிலான சண்டைகளின் போது டச்சுக்காரர்கள் வணிகத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றனர்.[119] மலபார் கடற்கரையில் பிரித்தானியரின் வருகையானது 1615ஆம் ஆண்டுக்குக் குறிப்பிடப்படுகிறது. அப்போது கேப்டன் வில்லியம் கீலிங் தலைமையிலான ஒரு குழுவானது கோழிக்கோட்டிற்கு மூன்று கப்பல்களைப் பயன்படுத்தி வந்திறங்கியது.[14] பிரித்தானியத் தூதுவராக சர் தாமசு ரோ இத்தகைய ஒரு கப்பல்களில் தான் வந்தார். நான்காவது முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரைச் சந்திக்கச் சென்றார்.[14] 1664இல் கொச்சிக் கோட்டையின் நகராட்சியானது டச்சு மலபார் பகுதியால் நிறுவப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் முதல் நகராட்சியாக இது இருக்கிறது. 18ஆம் நூற்றாண்டில் டச்சு அதிகாரம் பலவீனமடைந்த போது இது கலைக்கப்பட்டது.[120]
திருவாங்கூர் அரச குடும்பத்தின் மார்த்தாண்ட வர்மனுடனான இடைவிடாத யுத்தங்களால் பதிலுக்கு டச்சுக்காரர்கள் பலவீனம் அடைந்தனர். 1741இல் டச்சுக்காரர்கள் குளச்சல் போரில் தோற்கடிக்கப்பட்டனர்.[121] "மாவேலிக்கரா ஒப்பந்தம்" என்று அறியப்பட்ட ஒப்பந்தமானது 1753இல் டச்சுக்காரர்கள் மற்றும் திருவாங்கூர் இடையே கையொப்பம் இடப்பட்டது. இப்பகுதியில் உள்ள அனைத்து அரசியல் ஈடுபாடுகளிலிருந்தும் விலகிக் கொள்ள டச்சுக்காரர்கள் இந்த ஒப்பந்தத்தால் கட்டாயப்படுத்தப்பட்டனர்.[122][123][124] 18ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் மன்னன் சிறீ மார்த்தாண்ட வர்மன் கொச்சி வரை உள்ள அனைத்து இராச்சியங்களையும் இராணுவப் படையெடுப்புகள் மூலம் இணைத்தார். கேரளத்தில் திருவாங்கூரின் வளர்ச்சியானது முதல் நிலைக்குச் செல்வதற்கு இது வழி வகுத்தது.[125] அனிசம் திருநாளுடன் கொச்சி ஆட்சியாளர் அமைதிக்காக வேண்டினார். கொச்சிக் கோட்டை பகுதி, தங்கசேரி, தெற்கு கேரளத்தில் உள்ள அஞ்சுதெங்கு ஆகியவற்றுடன் கேரளத்தின் வடக்கு மற்றும் வடக்கு-நடுப் பகுதிகள் (மலபார் மாவட்டம்) இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரித்தானிய ஆட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.[126][127] 1755இல் புரக்கத் யுத்தத்தில் கோழிக்கோட்டின் சக்தி வாய்ந்த சமோரினைத் தோற்கடித்ததன் மூலம் திருவாங்கூர் கேரளத்தில் ஆதிக்கம் மிகுந்த அரசாக உருவானது.[128]
1761இல் பிரித்தானியர் மாகேவைக் கைப்பற்றினர். குடியிருப்பானது கடத நாட்டு ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.[129] 1763ஆம் ஆண்டின் பாரிசு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரித்தானியர் மாகேவைப் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைத்தனர்.[129] 1779இல் ஆங்கிலேய-பிரெஞ்சுப் போர் ஏற்பட்டது. மாகேவைப் பிரெஞ்சுக்காரர்கள் இழப்பதற்கு இது காரணமானது.[129] 1783இல் இந்தியாவிலிருந்த பிரெஞ்சுக் குடியிருப்புகளை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப் பிரித்தானியர் ஒப்புக் கொண்டனர். 1785இல் பிரெஞ்சுக்காரர்களிடம் மாகே ஒப்படைக்கப்பட்டது.[129] 1757இல் கோழிக்கோட்டின் சமோரினின் படையெடுப்பை எதிர்ப்பதற்காக மைசூரின் ஐதர் அலியின் உதவியைப் பாலக்காட்டு இராஜா வேண்டினார்.[100] 1766இல் ஹைதர் அலி அந்நேரத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் கூட்டாளியாக இருந்த கோழிக்கோட்டின் சமோரினைத் தோற்கடித்தார். கோழிக்கோட்டைத் தன்னுடைய அரசுக்குள் உள்வாங்கிக் கொண்டார்.[100] கொளத்துநாடு, கோட்டயம், கடதநாடு, கோழிக்கோடு, தானூர், வள்ளுவநாடு மற்றும் பாலக்காடு உள்ளிட்ட கேரளத்தின் வடக்கு மற்றும் வடக்கு-நடுப் பகுதிகளில் (மலபார் பகுதி) இருந்த சிறிய வேள் பகுதி அரசுகள் மைசூர் ஆட்சியாளர்களின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டன. பெரிய மைசூர் அரசின் ஒரு பகுதியாக உருவாயின.[130] ஐதர் அலியின் மகனும், அவருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவருமான திப்பு சுல்தான் விரிவடைந்து கொண்டிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராகப் படையெடுப்புகளைத் தொடங்கினார். நான்கு ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் இரண்டு போர்கள் ஏற்பட இது வழி வகுத்தது.[131][132] மூன்றாவது ஆங்கிலேய-மைசூர்ப் போர் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட சிறீரங்கபட்டின உடன்படிக்கையின் விளைவாக 1790களில் கிழக்கிந்திய நிறுவனத்திடம் மலபார் மாவட்டம் மற்றும் தென் கன்னட மாவட்டம் ஆகியவற்றை விட்டுக் கொடுக்க திப்பு ஒப்புக் கொண்டார். முறையே 1792 மற்றும் 1799 ஆகிய ஆண்டுகளில் இரண்டுமே பிரித்தானியப் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் (இது இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் இருந்த பிற பகுதிகளையும் கூட உள்ளடக்கி இருந்தது) இணைக்கப்பட்டன.[133][134][135]
18ஆம் நூற்றாண்டின் முடிவில் ஒட்டு மொத்த கேரளமும் பிரித்தானியக் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியான நிர்வாகம் அல்லது மேலாட்சி முறையில் விழுந்தது.[136] தலச்சேரி-வயநாடு மாவட்டப் பகுதியில் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்த கேரள வர்மா பழசி இராசாவின் தலைமைத்துவத்தின் கீழ் தங்களது ஆட்சிக்கு எதிராக பிரித்தானியர் தொடக்கத்தில் உள்ளூர் எதிர்ப்பைச் சந்தித்தனர்.[14][137][138][139][140]
1947இல் இந்தியா மற்றும் பாக்கித்தான் என இந்தியா பிரிக்கப்பட்டதற்குப் பிறகு இந்திய ஒன்றியத்தின் பகுதிகளாக இருந்த திருவாங்கூர் மற்றும் கொச்சி ஆகியவை 1 சூலை 1949 அன்று ஒன்றிணைக்கப்பட்டு திருவாங்கூர் கொச்சியை அமைத்தன.[141] 1 நவம்பர் 1956இல் மதராசின் தெற்கு கன்னட மாவட்டத்தில் இருந்த காசர்கோடு வட்டம், மதராசின் மலபார் மாவட்டம் (இலட்சத்தீவுகள் தவிர்த்து) மற்றும் திருவாங்கூர்-கொச்சி ஆகியவை, நான்கு தெற்கு வட்டங்கள் மற்றும் செங்கோட்டை வட்டம் (இவை தமிழ்நாட்டுடன் இணைந்தன) ஆகியவற்றைத் தவிர்த்து இணைக்கப்பட்டு 1956ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் கேரள மாநிலத்தை உருவாக்கின.[15][142][143] ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடுவின் தலைமையின் கீழான ஒரு பொதுவுடைமை அரசாங்கமானது 1957ஆம் ஆண்டில் புதிய கேரள சட்டசபையின் முதல் தேர்தலிலிருந்து ஆட்சிக்கு வந்தது.[143] எங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்க காலப் பொதுவுடமைவாத அரசாங்கங்களில் இதுவும் ஒன்றாகும்.[144][145][146] இவரது அரசாங்கமானது நிலம் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை ஏற்படுத்தியது. பதிலுக்கு மாநிலத்தில் தனி நபர் வருமானத்தில் சமமற்ற நிலையை இச்சீர்திருத்தங்கள் குறைத்தன.[147]
இம்மாநிலமானது இலட்சத்தீவுக் கடல் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைக்கு இடையில் பொருந்தி அமைந்துள்ளது. வடக்கு அட்சரேகை 8°18' மற்றும் 12°48' மற்றும் கிழக்குத் தீர்க்கரேகை 74°52' மற்றும் 77°22'க்கு இடையில் இம்மாநிலம் அமைந்துள்ளது.[148] கேரளமானது ஈரப்பதம் உள்ள வெப்ப மண்டல மழைக்காட்டுக் கால நிலையைக் கொண்டுள்ளது. சில சூறாவளிகளும் ஏற்படுகின்றன. இம்மாநிலத்தின் மொத்த கடற்கரையின் நீளம் 590 கிலோமீட்டர் ஆகும்.[149] மாநிலத்தின் அகலமானது 11 மற்றும் 121 கிலோ மீட்டருக்கு இடையில் வேறுபட்டு அமைந்துள்ளது.[150] புவியியல் ரீதியாகக் கேரளமானது மூன்று தனித்துவமான சூழ்நிலைப் பகுதிகளாகப் பிரிக்கப்படலாம்: கிழக்கு உயர் நிலங்கள், கரடு முரடான மற்றும் குளிர்ந்த மலைப்பாங்கான நிலப்பரப்பு, மைய நடு-நிலங்கள்; சுருட்டப்பட்ட குன்றுகள், மற்றும் மேற்குத் தாழ்நிலங்கள்; கடற்கரைச் சமவெளிகள்.[67]:110 கேம்பிரிய காலத்திற்கு முந்தைய மற்றும் பிலிசுடோசின் புவியியல் அமைப்புகளானவை கேரளாவின் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றை உருவாக்கியுள்ளன.[151][152] பொ. ஊ. 1341இல் கேரளத்தில் ஏற்பட்ட ஒரு பெரும் அழிவை ஏற்படுத்திய வெள்ளமானது இதன் நிலப்பரப்பைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றியுள்ளது. இதன் வரலாற்றின் மீதும் இறுதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மசாலாப் போக்குவரத்துக்கான ஓர் இயற்கையான துறைமுகத்தையும் கூட இது உருவாக்கியுள்ளது.[153] கேரளத்தின் கிழக்குப் பகுதியானது உயரமான மலைகள், ஒடுக்கமான பள்ளத் தாக்குகள் மற்றும் ஆழமாக-வெட்டப்பட்ட பள்ளத்தாக்குகள் ஆகியவற்றை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மழை மறைவுப் பிரதேசத்தில் உடனடியாக அருகிலே கொண்டுள்ளது.[67]:110 கேரளத்தில் மேற்கு நோக்கி ஓடும் 41 ஆறுகள்[154] மற்றும் கிழக்கு நோக்கி ஓடும் 3 ஆறுகள் இப்பகுதியில் தான் உற்பத்தியாகின்றன.[155][156] மேற்குத் தொடர்ச்சி மலைகள் மலைகளின் ஒரு சுவற்றை உருவாக்கியுள்ளன. இவை பாலக்காட்டுக்கு அருகில் மட்டுமே தடை பட்டுள்ளன. இங்கு தான் பாலக்காட்டுக் கணவாய் பிரிகிறது.[157] மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடல் மட்டத்திற்கு மேல் சராசரியாக 1,500 மீட்டர்கள் (4,900 அடிகள்) உயரத்துக்கு எழுந்துள்ளன.[158] அதே நேரத்தில், மிக உயரமான சிகரங்கள் 2,500 மீட்டர்கள் (8,200 அடிகள்) உயரத்தை எட்டியுள்ளன.[159] இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஆனை முடியானது தென்னிந்தியாவில் உள்ள மிக உயரமான சிகரமாகும். இது 2,695 மீட்டர்கள் (8,842 அடிகள்) உயரத்தில் அமைந்துள்ளது.[160] உயிரினப் பல்வகைமை வகையில் உலகின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலையானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[161] மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளானவை இமய மலைகளைக் காட்டிலும் அதிக வயதுடையவையாகக் கருதப்படுகின்றன.[161] மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பின்புறத்தில் அமைந்துள்ளன அதிரப்பள்ளி அருவியானது இந்தியாவின் நயாகரா என்றும் கூட அறியப்படுகிறது.[162] இது சாலக்குடி ஆற்றில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் மிகப் பெரிய அருவி இதுவாகும்.[162] கேரளத்தில் உள்ள ஒரே ஒரு பீடபூமி வயநாடு ஆகும்.[163] வயநாடு, மலப்புறம் (நிலம்பூரில் உள்ள சாளியாறு பள்ளத்தாக்கு), மற்றும் பாலக்காடு (அட்டப்பாடி பள்ளத்தாக்கு) ஆகிய மாவட்டங்களில் கிழக்குப் பகுதிகளானவை ஒன்றாக இணைந்து நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தை உருவாக்கியுள்ளன. இவை மைசூர் பீடபூமியின் ஒரு தொடர்ச்சியாகும். கருநாடகத்தின் அருகிலுள்ள மாவட்டங்களுடன் சேர்த்து இவை இயற்கையான தங்க வயல்களுக்காக அறியப்படுகின்றன.[164] இல்மனைட்டு, மோனசைட், தோரியம், மற்றும் தைட்டானியம் உள்ளிட்ட கனிமங்கள் கேரளத்தின் கடற்கரைப் பட்டையில் காணப்படுகின்றன.[165] கேரளத்தின் கருநாகப்பள்ளி கடற்கரைப் பட்டையானது தோரியத்தைக் கொண்டுள்ள மோனசைட் மணலில் இருந்து வரும் அதிகப்படியான பின்புலக் கதிர்வீச்சுக்காக அறியப்படுகிறது. சில கடற்கரைப் பஞ்சாயத்துகளில் சராசரி வெளிப்புறக் கதிர்வீச்சானது ஆண்டுக்கு 4 மில்லி கிரேவுக்கும் அதிகமாக உள்ளது. கடற்கரையில் உள்ள சில பகுதிகளில் இவை 70 மில்லி கிரேவுக்கும் என்ற அளவில் உயர்ந்து காணப்படுகின்றன.[166]
கேரளத்தின் மேற்குக் கடற்கரைப் பட்டையானது கிழக்குப் பகுதியுடன் ஒப்பிடும் போது பெரிதும் தட்டையாக உள்ளது.[67]:33 ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட உவர் நீர்க் கால்வாய்கள், ஏரிகள், கயவாய்[167] மற்றும் கேரள உப்பங்கழிகள் என்று அறியப்படுகிற ஆறுகள் ஆகியவற்றின் ஓர் இணையத்தை குறுக்கு வெட்டுக் கோடுகளாகக் கொண்டு இது அமைந்துள்ளது.[168] கேரளத்தின் அரிசிக் கிண்ணம் என்றும் அறியப்படும் குட்டநாடு இந்தியாவிலேயே கடல்மட்டத்திலிருந்து மிகக் குறைந்த உயரத்தைக் கொண்டுள்ளது.[169][170] கடல் மட்டத்துக்குக் கீழ் அறுவடை நடைபெறும் உலகின் மிகச் சில பகுதிகளில் இதுவும் கூட ஒன்றாகும். நாட்டின் மிக நீளமான ஏரியான வேம்பநாட்டு ஏரி உப்பங்கழிகள் மீது ஆதிக்கம் கொண்டுள்ளது. இந்த ஏரியானது ஆலப்புழா மற்றும் கொச்சிக்கு இடையில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் பரப்பளவு சுமார் 200 சதுர கிலோமீட்டர் ஆகும்.[171] இந்தியாவின் நீர் வழிகளில் சுமார் 8% கேரளத்தில் காணப்படுகின்றன.[172] கேரளம் 44 ஆறுகளைக் கொண்டுள்ளது. 244 கிலோ மீட்டர் நீள பெரியாறு, 209 கிலோ மீட்டர் நீள பாரதப்புழா, 176 கிலோமீட்டர் நீள பம்பை ஆறு, 169 கிலோ மீட்டர் நீள சாளியாறு, 130 கிலோ மீட்டர் நீல கடலுண்டிப்புழா, 130 கிலோ மீட்டர் நீள சாலக்குடிப்புழா, 129 கிலோ மீட்டர் நீள வளபட்டணம் ஆறு மற்றும் 128 கிலோ மீட்டர் நீள அச்சன்கோவில் ஆறு ஆகியவை இதில் அடங்கும். கேரளத்தில் உள்ள ஆறுகளின் சராசரி நீளமானது 64 கிலோமீட்டர் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை சிறியவை ஆகும். இவை முழுவதுமாகத் தங்களது நீர் ஆதாரத்திற்குப் பருவ மழையைச் சார்ந்துள்ளன.[173] கேரள ஆறுகள் சிறியதாகவும், ஆற்றுக் கழிமுகம் அற்றும் காணப்படுவதால் சுற்றுப்புறச் சூழல் விளைவுகளால் இவை எளிதில் பாதிக்கப்படுகின்றன. மணல் திருட்டு மற்றும் மாசுபாடு போன்ற பிரச்சனைகளை இந்த ஆறுகள் எதிர் கொள்கின்றன.[174] நிலச்சரிவுகள், வெள்ளங்கள் மற்றும் வறட்சி போன்ற பல இயற்கைப் பிரச்சனைகளை இம்மாநிலமானது எதிர் கொண்டு வருகிறது. 2004ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியாலும் கூட இம்மாநிலம் பாதிக்கப்பட்டது.[175] 2018ஆம் ஆண்டு கேரளமானது கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டில் மோசமான வெள்ளத்தைச் சந்தித்தது.[176] 2024இல் கேரளம் வரலாற்றில் மிக மோசமான நிலச்சரிவுகளைச் சந்தித்தது.[177]
ஆண்டுக்கு சுமார் 120-140 மழைப் பொழிவு நாட்களுடன் கேரளமானது ஓர் ஈரப்பத மற்றும் கடல் சார்ந்த வெப்ப மண்டல சூழ்நிலையைக் கொண்டுள்ளது.[178]:80 தென் மேற்கு கோடை காலப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குக் குளிர்காலப் பருவக் காற்று ஆகியவற்றின் கடுமையான பருவமழையால் இது தாக்கம் கொண்டுள்ளது.[179] தென்மேற்குப் பருவக் காற்றானது சூன் முதல் ஆகத்து வரை சுமார் 65% மழைப் பொழிவையும், எஞ்சிய 35%ஆனது வடகிழக்குப் பருவமழையால் செப்தெம்பர் முதல் திசம்பர் வரை பொழிகிறது.[179] தென்மேற்குப் பருவக் காற்றின் ஈரப்பதமுள்ள காற்றானது இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்குக் கோடி முனையை அடையும் போது அதன் இட அமைவு காரணமாக இரு பிரிவுகளாகப் பிரிகிறது. அவை "அரபிக்கடல் பிரிவு" மற்றும் "வங்காள விரிகுடாப் பிரிவு" ஆகியவையாகும்.[180] தென்மேற்குப் பருவக் காற்றின் "அரபிக்கடல் பிரிவானது" முதலில் மேற்குத் தொடர்ச்சி மலைகளை அடைகிறது.[181] தென்மேற்குப் பருவக் காற்றால் மழையைப் பெறும் இந்தியாவின் முதல் மாநிலமாகக் கேரளத்தை ஆக்குகிறது.[182][183] அழுத்தம் நிகழும் முறைகளின் பரவலானது வடகிழக்குப் பருவக் காற்றில் அப்படியே மாறுகிறது. இப்பருவத்தின் போது வட இந்தியாவில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுக்கள் வங்காள விரிகுடாவிலிருந்து ஈரப்பதத்தைப் பெறுகின்றன. தீபகற்ப இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் மழையை விரைவு படுத்துகின்றன.[184][185] கேரளத்தில் வடகிழக்குப் பருவக் காற்றின் தாக்கமானது தெற்கு மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது.[186] கேரளமானது ஆண்டு தோறும் 2,923 மில்லி மீட்டர் சராசரி மழைப்பொழிவைப் பெறுகிறது.[187] கேரளத்தின் வறண்ட தாழ்நிலப் பகுதிகளில் சில 1,250 மில்லி மீட்டார் சராசரி மழைப் பொழிவை மட்டுமே பெறுகின்றன. மலையமைப்பு சார்ந்த மழைப் பொழிவு காரணமாக கிழக்கு இடுக்கி மாவட்டத்தில் மலைகள் 5,000 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவைப் பெறுகின்றன. இதுவே இம்மாநிலத்தில் மிக அதிக மழைப்பொழிவு பெறும் பகுதியாகும். கிழக்குக் கேரளத்தில் ஓர் உலர்ந்த வெப்ப மண்டல ஈர மற்றும் உலர்ந்த காலநிலை காணப்படுகிறது. கோடை காலத்தின் போது இம்மாநிலமானது சூறாவளி விசையுடைய காற்றுகள், புயல் இயக்கம், சூறாவளி-சார்ந்த கடுமையான மழைப் பொழிவு, அவ்வப்போது ஏற்படும் வறட்சி, மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு போன்றவற்றை எதிர் கொள்கிறது.[188]:26, 46, 52 கேரளத்தின் சராசரிப் பகல் வெப்ப நிலையானது 19.8°C முதல் 36.7°C வரை உள்ளது.[189] கடற்கரைத் தாழ் நிலப்பகுதிகளில் சராசரி ஆண்டு வெப்ப நிலையானது 25.0 முதல் 27.5°C வரையும், கிழக்கு உயர் நிலப்பகுதிகளில் 20.0 முதல் 22.5°C ஆக உள்ளது.[188]:65
தட்பவெப்ப நிலைத் தகவல், கேரளம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
31 (88) |
32 (90) |
34 (93) |
34 (93) |
30 (86) |
29 (84) |
29 (84) |
29 (84) |
30 (86) |
30 (86) |
31 (88) |
34 (93) |
தாழ் சராசரி °C (°F) | 22 (72) |
23 (73) |
24 (75) |
25 (77) |
25 (77) |
24 (75) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
22 (72) |
மழைப்பொழிவுmm (inches) | 8.7 (0.343) |
14.7 (0.579) |
30.4 (1.197) |
109.5 (4.311) |
239.8 (9.441) |
649.8 (25.583) |
726.1 (28.587) |
419.5 (16.516) |
244.2 (9.614) |
292.3 (11.508) |
150.9 (5.941) |
37.5 (1.476) |
2,923.4 (115.094) |
ஆதாரம்: [187][189] |
பெரும்பாலான உயிரியற் பல்வகைமையானது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் செறிந்து, பாதுகாக்கப்பட்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டு வரை கேரளத்தின் நிலப்பரப்பில் முக்கால் பங்கானது அடர்த்தியான காடுகளாக இருந்தது.[190] 2004ஆம் ஆண்டில் நிலவரப் படி, இந்தியாவின் 15,000 தாவர வகைகளில் 25%க்கும் மேற்பட்டவை கேரளத்தில் உள்ளன. 4,000 பூக்கும் தாவர வகைகளில் 1,272 கேரளத்தின் அகணியத் தாவரங்களாகவும், 900 மூலிகைகளாகவும், 159 அச்சுறுத்தும் நிலைக்கு உள்ளாகியவை ஆகவும் உள்ளன.[191]:11 கேரளத்தின் 9,400 சதுர கிலோ மீட்டர் காடுகளானவை வெப்ப மண்டல ஈர பசுமை மாறாக் காடுகள் மற்றும் பகுதியளவு பசுமை மாறாக் காடுகளையும் (கடல் மட்டத்திலிருந்து கீழ் மற்றும் நடு உயரங்கள் - 3,470 சதுர கிலோ மீட்டர்), வெப்ப மண்டல ஈர மற்றும் உலர்ந்த இலையுதிர்க் காடுகள் (நடு-உயரங்கள் - முறையே 4,100 சதுர கிலோ மீட்டர் மற்றும் 100 சதுர கிலோ மீட்டர்), மற்றும் மலைப்பாங்கான துணை வெப்ப மண்டல மற்றும் மிதவெப்பமண்டலக் (சோலை) காடுகள் (கடல் மட்டத்திலிருந்து மிக அதிக உயரமானவை - 100 சதுர கிலோமீட்டர்) உள்ளன. மொத்தமாகக் கேரளத்தின் 24% நிலப்பரப்பானது காடுகளாக உள்ளது.[191]:12 உலகின் ராம்சர் சாசனத்தில் பட்டியலிடப்பட்ட நீர்த் தடங்களில் நான்கு கேரளத்தில் உள்ளன. அவை சாஸ்தாம்கோட்டை ஏரி, அஷ்டமுடி ஏரி, திருச்சூர்-பொன்னானி கோல் சதுப்பு நிலங்கள் மற்றும் வேம்பநாடு கோல் சதுப்பு நிலங்கள் ஆகியவை,[192] மேலும் பரந்த நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் 1,455.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மற்றும் அகத்தியமலை உயிரிக்கோளத்தின் 1,828 சதுர கிலோமீட்டர் ஆகியவை கேரளத்தில் அமைந்துள்ளன.[193] 20ஆம் நூற்றாண்டில் விவசாய நிலங்களுக்காக நடந்த விரிவான அப்புறப்படுத்தலுக்கு உள்ளாகிய காடுகளில்[194]:6–7 எஞ்சியவற்றில் பெரும்பாலானவை தற்போது ஒட்டு மொத்தமாக மரங்களை அழிக்கும் முறையிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன.[195] கிழக்குக் கேரளத்தின் காற்றை எதிர் நோக்கிய மலைகளாகியவை வெப்ப மண்டல ஈரப் பதக் காடுகள் மற்றும் வெப்ப மண்டல உலர்ந்த காடுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவை மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பொதுவானவையாகும்.[196][197] உலகின் மிகப் பழமையான தேக்குத் தோப்பான 'கானல்லியின் நிலமானது' நிலம்பூரில் உள்ளது.[198]
கேரளத்தின் உயிரினங்களானவை அவற்றின் பல்வகைமை மற்றும் அதிக அகணிய வீதம் ஆகியவற்றுக்காக அறியப்படுகின்றன. இதில் 118 பாலூட்டிகள் (இதில் 1 அகணிய உயிரி), 500 பறவை வகைகள், 189 நன்னீர் மீன்கள், 173 ஊர்வன (இதில் 10 அகணிய உயிரிகள்), மற்றும் 151 நீர்நில வாழ்வன (இதில் 36 அகணிய உயிரிகள்) ஆகியவை உள்ளடங்கியுள்ளன.[199] மணல் அரிப்பு, நிலச்சரிவுகள், மண் உப்பாதல் மற்றும் வளம் எடுக்கப்படுதல் உள்ளிட்ட விரிவான வாழ்விட அழிவுகளால் இந்த உயிரினங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. காடுகளில் சோனோகெலிங், தல்பேர்கியா லதிபோலியா, அஞ்சிலி, முல்லிமுரிக்கு, எரித்ரினா, மற்றும் காசியா போன்ற 1,000க்கும் மேற்பட்ட மர வகைகள் கேரளத்தில் உள்ளன. மூங்கில், காட்டு கருப்பு மிளகு, காட்டு ஏலம், கலமுசு ராட்டன் பனை மற்றும் வாசமுடைய வெட்டிவேர் புல் உள்ளிட்ட பிற தாவரங்கள் காணப்படுகின்றன.[191]:12 இந்திய யானை, வங்காளப் புலி, இந்தியச் சிறுத்தை, நீலகிரி வரையாடு, ஆசிய மரநாய் மற்றும் பழுப்பு மலை அணில்கள் ஆகியவையும் கூட காடுகளில் காணப்படுகின்றன.[191]:12, 174–75 இராச நாகம், விரியன், மலைப்பாம்பு, மற்றும் சதுப்புநில முதலை உள்ளிட்ட ஊர்வன இங்கு காணப்படுகின்றன. கேரளத்தின் பறவைகளில் தீக்காக்கை, மலை இருவாட்சி, சாம்பல் மார்புச் சிரிப்பான், பாம்புத் தாரா மற்றும் மலை நாகணவாய் ஆகியவை அடங்கியுள்ளன. ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நீர் வழிகளில் கடு கெளுத்தி மீன், சிவப்பு கோடு தர்பாடோ பார்ப், மற்றும் சூட்டச்சி ஆரஞ்சு குரோமைடு மீன் போன்றவை இங்கு காணப்படுகின்றன.[200][191]:163–65 சமீபத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தர்திக்ரேத் (நீர்க் கரடிகள்) கேரளத்தின் வடக்குக் கடற்கரையிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இசுதிகார்க்டசு கேரலென்சிசு என கேரள மாநிலத்தின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.[201]
மாநில நிர்வாகப் பிரிவுகள் | |
---|---|
நிர்வாக அமைப்பு | எண்ணிக்கை |
மாவட்டங்கள் | 14 |
வருவாய் கோட்டங்கள் | 27 |
வட்டங்கள் | 75 |
வருவாய் கிராமங்கள் | 1453 |
உள்ளூர்-சுய அரசாங்கங்கள்[202] | எண்ணிக்கை |
மாவட்ட ஊராட்சிகள் | 14 |
வட்டாரப் பஞ்சாயத்துகள் | 152 |
கிராமப் பஞ்சாயத்துகள் | 941 |
மாநகராட்சிக் கழகங்கள் | 6 |
நகராட்சிகள் | 87 |
இம்மாநிலத்தின் 14 மாவட்டங்களானவை ஆறு பகுதிகளில் பகிரப்பட்டுள்ளன: வடக்கு மலபார் (தூர-வடக்குக் கேரளம்), தெற்கு மலபார் (வடக்கு-நடுக் கேரளம்), கொச்சி (நடுக் கேரளம்), வடக்குத் திருவாங்கூர் (தெற்கு-நடுக் கேரளம்), நடுத் திருவாங்கூர் (தெற்குக் கேரளம்) மற்றும் தெற்குத் திருவாங்கூர் (தூர-தெற்குக் கேரளம்). வரி விதிக்கும் பணிகளுக்காக நிர்வாகப் பகுதிகளாகச் சேவையாற்றும் மாவட்டங்களானவை மேலும் 27 வருவாய்த் துணைப் பிரிவுகள் மற்றும் 77 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தங்களது எல்லைக்கு உட்பட்ட குடியிருப்புகள் மீது நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களை இவை கொண்டுள்ளன. இதில் உள்ளூர் நிலப் பதிவேடுகளை பேணுதலும் அடங்கும். கேரளத்தின் மாவட்டங்களானவை மேலும் 1,674 வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[203][204] இந்திய அரசியல் அமைப்பின் 73ஆவது மற்றும் 74ஆவது இணைப்புகள் சேர்க்கப்பட்டதிலிருந்து உள்ளூர் அரசாங்க அமைப்புகளானவை மூன்றாவது அடுக்கு அரசாங்கமாகச் செயல்படுகின்றன. இதில் 14 மாவட்ட ஊராட்சிகள், 152 ஊராட்சி ஒன்றியங்கள், 941 கிராமப் பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள், ஆறு மாநகராட்சிகள் மற்றும் ஒரு நகரியம் ஆகியவை அடங்கும்.[205] இந்திய ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் ஒரு பகுதியான மாகே புதுச்சேரியில் இருந்து[206] 647 கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும்,[207] ஒரு கடற்கரையில் அமைந்துள்ள புதுச்சேரியுடன் இணையாத பகுதி இதுவாகும். இது கேரளத்தால் சுற்றிலும் வளைக்கப்பட்டுள்ளது. மாகேவுக்குச் செல்லும் அனைத்து நில வழிகளும் கேரளத்தின் வழியாகத் தான் செல்கின்றன. கண்ணூர் மாவட்டமானது மாகேயை மூன்று பக்கங்களில் சூழ்ந்துள்ளது. கோழிக்கோடு மாவட்டமானது நான்காவது பக்கத்தில் உள்ளது.[208]
1664இல் கொச்சிக் கோட்டை நகராட்சியானது டச்சு மலபார் பகுதியால் நிறுவப்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் நகராட்சியாக இது இதை ஆக்குகிறது. 18ஆம் நூற்றாண்டில் டச்சு அதிகாரமானது பலவீனமடைந்த போது இந்நகராட்சி கலைக்கப்பட்டது.[120] கோழிக்கோடு, பாலக்காடு, கொச்சிக் கோட்டை பகுதி, கண்ணூர், மற்றும் தலச்சேரி ஆகிய நகராட்சிகள் 1 நவம்பர் 1866 அன்று பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டன.[137][138][139][140] கேரளம் மாநிலத்தில் முதல் நவீன நகராட்சிகளாக இது இவற்றை ஆக்குகிறது. 1920இல் திருவனந்தபுரம் நகராட்சியானது உருவாக்கப்பட்டது. இரு தசாப்தங்களுக்குப் பிறகு சித்திரைத் திருநாள் பலராம வர்மனின் ஆட்சியின் போது திருவனந்தபுரம் நகராட்சியானது கழகமாக 30 அக்டோபர் 1940 அன்று மாற்றப்பட்டது.[209] கேரளாவிலுள்ள மிகப் பழமையான நகராட்சிக் கழகமாக இது இதை ஆக்குகிறது. இந்திய விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட முதல் நகராட்சிக் கழகம் மற்றும் இம்மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப் பழமையான நகராட்சிக் கழகமானது கோழிக்கோட்டில் 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[210] திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூரை நிர்வகிக்க ஆறு நகராட்சிக் கழகங்கள் உள்ளன.[211] கேரளத்தில் உள்ள மிகப் பெரிய கழகம் திருவனந்தபுரம் மாநகராட்சியாகும். அதே நேரத்தில் கொச்சி நகரக் குழுமம் என்ற பெயருடைய கொச்சி மெட்ரோ பகுதியானது கேரளத்தின் மிகப் பெரிய நகர்ப்புறக் குழுமமாக உள்ளது.[212] 2007ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்திகசு அனாலிடிக்சின் ஓர் ஆய்வின் படி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, கொல்லம், திருச்சூர் ஆகியவை "இந்தியாவிலுள்ள வாழச் சிறந்த நகரங்களில்" ஒன்றாக உள்ளன. இந்த ஆய்வு நகரங்களைத் தரப்படுத்த சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், பாதுகாப்பு, பொது வசதிகள், மற்றும் பொழுது போக்கு போன்ற காரணிகளைப் பயன்படுத்தியது.[213]
இம்மாநிலமானது சார்பாண்மை மக்களாட்சியின் ஒரு நாடாளுமன்ற முறையால் நிர்வகிக்கப்படுகிறது. கேரளமானது ஓர் ஓரவை முறைச் சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது. நியாமசபா என்றும் கூட அறியப்படும் கேரள சட்டமன்றமானது ஐந்தாண்டு காலத்திற்காகக் தேர்ந்தெடுக்கப்படும் 140 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.[214] இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு இம்மாநிலம் 20 உறுப்பினர்களையும், மேலவையான மாநிலங்களவைக்கு 9 உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கிறது.[215]
கேரள அரசானது சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் அமைப்பாக இந்தியாவில் உள்ளது. இதன் அரசியல் அமைப்புத் தலைவராக ஆளுநர் உள்ளார். ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் ஓர் ஐந்தாண்டு காலத்திற்கு நியமிக்கிறார்.[216] சட்ட மன்றத்தில் பெரும்பான்மை உடைய கட்சி அல்லது கூட்டணியின் தலைவரானவர் முதலமைச்சராக ஆளுநரால் நியமிக்கப்படுகிறார். அமைச்சரவையானது முதல் அமைச்சரின் அறிவுறுத்தலின் படி ஆளுநரால் நியமிக்கப்படுகிறது.[216] அரசின் பெயரளவிலான தலைவராக ஆளுநர் தொடர்கிறார். அதே நேரத்தில், முதலமைச்சரும், அவரது அவையும் அன்றாட அரசாங்கச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாக உள்ளனர். அமைச்சரவையானது கேபினட் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களை உள்ளடக்கியுள்ளது. தலைமைச் செயலாளரால் தலைமை தாங்கப்படும் தலைமைச் செயலகமானது அமைச்சரவைக்கு உதவியாக உள்ளது. தலைமைச் செயலரானவர் அரசாங்கத்தின் நிர்வாகத் தலைவராகவும் கூட உள்ளார். ஒவ்வொரு அரசாங்கத் துறையும் ஓர் அமைச்சரால் தலைமை தாங்கப்பட்டுள்ளது. இவருக்கு மேற்கொண்ட தலைமைச் செயலர் அல்லது முதன்மை தலைமைச் செயலர் உதவி புரிகின்றனர். இவர் பொதுவாக இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக உள்ளார். மேற்கொண்ட தலைமைச் செயலர் அல்லது முதன்மைச் செயலர் அவருக்கு ஒதுக்கப்பட்ட துறையின் நிர்வாகத் தலைவராகச் சேவையாற்றுகிறார். செயலர், சிறப்புச் செயலர், இணைச் செயலர் ஆகியோரின் தர நிலையை உடைய அதிகாரிகளையும் கூட ஒவ்வொரு துறையும் கொண்டுள்ளது. இவர்கள் அமைச்சர் மற்றும் மேற்கொண்ட தலைமைச் செயலர்/முதன்மைச் செயலருக்கு உதவியாக உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டமும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஒரு மாவட்ட நிர்வாகியைக் கொண்டுள்ளது. இவர் செயல் முறை நிர்வாகத்திற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயத்துகள் என அறியப்படும் துணை அதிகார மையங்கள் உள்ளூர் விவகாரங்களை நிர்வகிக்கின்றன. பஞ்சாயத்துக்கான உள்ளாட்சித் தேர்தல்களானவை வாடிக்கையாக நடத்தப்படுகின்றன.[217] நீதித் துறையானது கேரள உயர் நீதிமன்றம் மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களின் ஓர் அமைப்பைக் கொண்டுள்ளது.[218] உயர் நீதிமன்றமானது கொச்சியில் அமைந்துள்ளது.[219] 35 நிரந்தர மற்றும் 12 மேற்கொண்ட தற்காலிக நீதிபதிகளுடன் ஒரு தலைமை நீதிபதியையும் இது 2021ஆம் ஆண்டின் நிலவரப் படி கொண்டுள்ளது.[220] இலட்சத்தீவுகள் ஒன்றியப் பகுதியில் இருந்து வரும் வழக்குகளையும் கூட இந்த உயர் நீதிமன்றமானது விசாரிக்கிறது.[221][222]
கேரளத்தில் பஞ்சாயத்துகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற உள்ளூர் அரசாங்க அமைப்புகள் 1959ஆம் ஆண்டிலிருந்து இருந்துள்ளன. 1993இல் ஒரு குறிப்பிடத்தக்க மையப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை மாற்றும் முயற்சியானது தொடங்கியது. மத்திய அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுடன் இது ஒத்துப் போனது.[223] கேரள பஞ்சாயத்து ராஜ் சட்டம் மற்றும் கேரள நகராட்சிச் சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. உள்ளூர் நிர்வாகத்திற்கு ஒரு 3 அடுக்கு அமைப்பை நிறுவின.[224] இந்த அமைப்பானது கிராமப் பஞ்சாயத்து, வட்டாரப் பஞ்சாயத்து மற்றும் மாவட்டப் பஞ்சாயத்தை உள்ளடக்கியுள்ளது.[225] இந்தச் சட்டங்கள் இத்தகைய அமைப்புகளுக்கு தெளிவான அதிகாரங்களை வரையறுக்கின்றன.[223] நகர்ப்புறப் பகுதிகளுக்கு கேரள நகராட்சிச் சட்டமானது ஓர் ஒற்றை அடுக்கு அமைப்பைப் பின்பற்றுகிறது. இது கிராமப் பஞ்சாயத்துக்குச் சமமானதாகும். இந்த அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிர்வாக, சட்ட மற்றும் நிதி அதிகாரங்களை திறமையான மையப்படுத்தப்படாத நிர்வாகத்தை உறுதி செய்வதற்காகக் கொண்டுள்ளன.[226] தற்போது மாநில அரசின் திட்ட வடிவங்களில் சுமார் 40%ஐ உள்ளூர் அரசாங்கங்களுக்கு மாநில அரசானது ஒதுக்குகிறது.[227] 2016ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் டிஜிட்டல் அரசாக கேரளமானது அறிவிக்கப்பட்டது. டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் அமைப்பின் 2019ஆம் ஆண்டு இந்திய லஞ்ச ஊழல் ஆய்வின் படி இந்தியாவிலுள்ள மிகக் குறைவான லஞ்ச ஊழலைக் கொண்ட மாநிலமாகக் கேரளம் கருதப்படுகிறது.[228][229] பொது விவகாரப் பட்டியல்-2020 ஆனது இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் மாநிலமாகக் கேரளத்தைத் தேர்ந்தெடுத்தது.[230]
கேரளம் இரு முக்கியமான அரசியல் கூட்டணிகளைக் கொண்டுள்ளது. அவை இந்திய தேசியக் காங்கிரசால் தலைமை தாங்கப்பட்ட ஐக்கிய சனநாயக முன்னணி மற்றும் இந்தியப் பொதுவுடமைக் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தலைமை தாங்கப்பட்ட இடது சனநாயக முன்னணி ஆகியவையாகும். 2021ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலின் படி இடது சனநாயக முன்னணியானது ஆட்சி செய்யும் கூட்டணியாக உள்ளது. இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பிணறாயி விஜயன் முதலமைச்சராக உள்ளார். அதே நேரத்தில், இந்திய தேசியக் காங்கிரசின் வ. தா. சதீசன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்திய அரசியலமைப்பின் படி கேரளமானது சார்பாண்மை மக்களாட்சியின் ஒரு நாடாளுமன்ற முறையைக் கொண்டுள்ளது. குடியிருப்புவாசிகளுக்கு பொது வாக்குரிமையானது அளிக்கப்பட்டுள்ளது.[231]
சுதந்திரத்திற்குப் பிறகு இம்மாநிலமானது ஒரு சமூக சனநாயக நலத்திட்டப் பொருளாதாரமாக பேணப்பட்டது.[236] மிக அதிக மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் "கேரள நிகழ்வு" அல்லது "கேரள மாதிரி வளர்ச்சி" மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான பொருளாதார வளர்ச்சியானது ஒரு வலிமையான சேவைத் துறையின் விளைவாக ஏற்பட்டுள்ளது.[188]:48[237]:1 2019-20இல் இம்மாநிலத்தின் மொத்தப் பொருட்கள் மற்றும் சேவை உற்பத்தியின் மதிப்புக்கு மூன்றாம் படி நிலைத் துறையானது சுமார் 63%யும், இரண்டாம் நிலைத் துறையானது 28%யும், மற்றும் முதன்மையான துறையான மூலப் பொருட்கள் சார்ந்த துறையானது 8%யும் பங்களித்தன.[23] 1960 மற்றும் 2020க்கு இடையிலான காலகட்டத்தில் கேரளத்தின் பொருளாதாரமானது வேளாண்மைப் பொருளாதாரத்தில் இருந்து ஒரு சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாகப் படிப்படியாக மாறியது.[23]
இம்மாநிலத்தின் சேவைத் துறையானது இதன் வருவாயில் சுமார் 63%க்குப் பங்களிக்கிறது. இது விருந்தோம்பல் துறை, சுற்றுலா, ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ சேவைகள், புனிதப் பயணம், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்துத் துறை, நிதித்துறை மற்றும் கல்வி ஆகியவற்றை முதன்மையாக அடிப்படையாகக் கொண்டுள்ளது.[238] கொச்சி கப்பல் கட்டும் தளம், கப்பல் கட்டுதல், எண்ணெய்ச் சுத்திகரிப்பு, மென்பொருள் தொழில் துறை, கடற்கரைக் கனிமத் தொழில் துறைகள்,[165] உணவுப் பதப்படுத்துதல், கடல் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் தொய்வையை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் ஆகியவை தொழில் துறைக்குக் கீழான முதன்மையான பிரிவுகளாக உள்ளன. இம்மாநிலத்தின் முதன்மைத் துறையானது முக்கியமாகப் பணப் பயிர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.[239] தென்னை, தேநீர், காப்பி, மிளகு, இயற்கை மீள்மம், ஏலம், மற்றும் முந்திரி போன்ற பயிர்களின் தேசிய உற்பத்தியில் ஒரு குறிப்பிடத்தக்க அளவைக் கேரளமானது உற்பத்தி செய்கிறது.[239] 1950களிலிருந்து உணவுப் பயிர்களின் அறுவடையானது கேரளத்தில் குறையத் தொடங்கியது.[239]
கேரளத்தின் பொருளாதாரமானது அயல் நாடுகளில், முதன்மையாக வளைகுடா நாடுகளில், பணியாற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைப் பெருமளவுக்குச் சார்ந்துள்ளது. அவர்கள் ஆண்டு தோறும் அனுப்பும் பணமானது இம்மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்குக்கும் மேல் பங்களிக்கிறது.[240] 1970கள் மற்றும் தொடக்க கால 1980களின் போது வளைகுடா பெருக்க வள காலத்தில் இம்மாநிலமானது குறிப்பிடத்தக்க அளவுக்கான புலம் பெயர்வைக் கண்டது. 2012இல் அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் கேரளமானது தொடர்ந்து மிக அதிக புலம் பெயர் தொழிலாளர்களின் பணங்களைப் பெற்றது. அதன் மதிப்பு ஐஅ$11.3 பில்லியன் (₹80,813.1 கோடி) ஆகும். நாட்டிற்கு அனுப்பப்பட்ட ஐஅ$71 பில்லியன் (₹5,07,763.6 கோடி)யில் கிட்டத்தட்ட 16% இதுவாகும்.[241] 2015இல் கேரளத்தில் உள்ள வெளி நாடு வாழ் இந்தியர்களின் வைப்புத் தொகைகள் ஐஅ$13 பில்லியன் (₹92,970.8 கோடி)க்கும் மேல் உயர்ந்தது. வெளி நாடு வாழ் இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்பட்ட மொத்த பணமான ஐஅ$88 பில்லியன் (₹6,29,340.8 கோடி)யில் ஆறில் ஒரு பங்கு இதுவாகும்.[242] மாநிலத்தில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது அதிக சதவீத அளவில் புலம் பெயர் தொழிலாளர்களின் வீடுகளை மலப்புறம் மாவட்டமானது கொண்டுள்ளது.[23] கேரள அரசு திட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வானது மாநிலமானது அதன் செலவீனங்களுக்கு நிதியளிக்க புலம் பெயர் தொழிலாளர்களின் பணங்களைச் சார்ந்திருப்பதற்கு மாறாக பிற நம்பகமான வருமான ஆதாரங்களைக் காண வேண்டும் என்று பரிந்துரைத்தது.[243]
2002 மார்ச் நிலவரப் படி, கேரளத்தின் வங்கித் துறையானது 3,341 உள்ளூர்க் கிளைகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு கிளையும் 10,000 மக்களுக்குச் சேவையாற்றியது. தேசிய சராசரியான 16,000 பேர் என்பதை விட இது குறைவானதாகும்; இந்திய மாநிலங்களில் மூன்றாவது மிக அதிக வங்கிச் சேவை உட்புகலை இம்மாநிலம் கொண்டுள்ளது.[244] 1 அக்டோபர் 2011 அன்று ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு வங்கி சேவையைக் கொண்டுள்ள முதல் மாநிலமாக நாட்டிலேயே கேரளம் உருவானது.[245] 2007ஆம் ஆண்டில் வேலை வாய்ப்பின்மையானது 9.4%மாக மதிப்பிடப்பட்டது;[246] பணியாளர்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்தாதது, இளைஞர்கள் குறைவான அளவுக்கே பணி புரியத் தகுதியானவர்களாக இருப்பது மற்றும் ஒரு குறைவான பெண் பணியாளர் பங்களிப்பு வீதமான வெறும் 13.5%[247]:5, 13 போன்றவை நீடித்த பிரச்சினைகளாக உள்ளன. இதே போல் நோக்கு கூலிப் பழக்க வழக்கம் போன்றவை நீடித்த பிரச்சினைகளாக உள்ளன.[248] 1999-2000 வாக்கில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழ்மை வீதங்களானவை முறையே 10.0% மற்றும் 9.6%மாகக் குறைந்தன.[249]
2020-2021இல் அரசின் வரவு செலவுத் திட்ட அறிக்கையானது ஐஅ$14 பில்லியன் (₹1,00,122.4 கோடி) ஆகும்.[250] மாநில அரசாங்கத்தின் வரி வருவாயானது (நடுவண் அரசின் வரிப் பகிர்வு நீங்கலாக) ஐஅ$8.4 பில்லியன் (₹60,073.4 கோடி)யாக 2020-21இல் இருந்தது. 2019-20இல் இருந்த ஐஅ$7 பில்லியன் (₹50,061.2 கோடி)யை விட இது அதிகமாகும். கேரள அரசாங்கத்தின் வரி சாராத வருவாய்களானவை (நடுவண் அரசின் வரிப் பகிர்வு நீங்கலாக) 2020-2021இல் ஐஅ$1.8 பில்லியன் (₹12,872.9 கோடி)யை அடைந்தன.[250] எனினும், மொத்த மாநில உற்பத்தியுடன் ஒப்பிடும் போது கேரளத்தின் மிக அதிக வரி வீதமானது நீடித்த வரவு செலவு பற்றாக்குறைகள் மற்றும் அரசாங்கக் கடனின் நீடித்திருக்க இயலாத நிலைகளைக் குறைக்கவில்லை. சமூக சேவைகள் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[251] 2006இல் ஒரு அதிகபட்ச அளவாக மொத்தம் 223 ஹர்த்தால்களை (வேலை நிறுத்தம்/கடையடைப்பு) இம்மாநிலத்தினர் நடத்தினர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஐஅ$250 மில்லியன் (₹1,787.9 கோடி)க்கும் மேலான வருவாய் இழப்புக்கு இது வழி வகுத்தது.[252] தேசிய உள்நாட்டு உற்பத்தி 3% வளர்ச்சியை விடக் கேரளத்தின் உள்நாட்டு உற்பத்தியின் 10% சதவீத வளர்ச்சியானது அதிகமானதாகும். 2013இல் தேசிய சராசரியான 5% வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது கேரளத்தின் மூலதன செலவீனத்தின் 30% வளர்ச்சியானது அதிகமாகும். தேசிய அளவான 15%துடன் ஒப்பிடும் போது இருசக்கர வாகனங்களை வைத்திருப்போரின் எண்ணிக்கையானது கேரளத்தில் 35% அதிகரித்தது. ஆசிரியர்-மாணவர் வீதமானது 50% அதிகரித்து 2:100லிருந்து 4:100ஆக வளர்ச்சி கண்டது.[253]
கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிதி அமைப்பு ஆகும். அரசின் வருவாய் தவிர்த்து உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி திரட்டுவதற்கு இது நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தின் ஒட்டு மொத்த உட்கட்டமைப்பு மேம்பாட்டை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[254][255] பெரும் கேரள விற்பனை விழாவானது 2007இல் தொடங்கப்பட்டது. கேரளத்தில் உள்ள ஒன்பது நகரங்களில் 3,000க்கும் மேற்பட்ட கடைகளை இது கொண்டுள்ளது. பெரும் வரிச் சலுகைகள், மதிப்புக் கூட்டு வரிப் பணம் திருப்பித் தரப்படுதல் மற்றும் பெரும் அளவிலான பரிசுகளுடன் இது நடத்தப்படுகிறது.[256] திருவனந்தபுரத்திலுள்ள லூலு பன்னாட்டு வணிக வளாகமானது இந்தியாவிலுள்ள மிகப் பெரிய வணிக வளாகமாகும்.[257]
பல சாதனைகள் படைக்கப்பட்ட போதிலும் கேரளமானது தகவுப் பொருத்தமின்றி படித்த பெண்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக அளவிலான வேலை வாய்ப்பின்மை, ஓர் அதிக அளவிலான உலகளாவிய அனுபவம் பெறுவதற்கான வாய்ப்பு மற்றும் அதிக அளவில் பாதிக்கப்படும் சுற்றுச்சூழல் போன்ற பல சவால்களை எதிர் கொண்டு வருகிறது.[258]
பாரம்பரியத் தொழில் துறைகளின் உற்பத்திப் பொருட்களான தும்பு, தறிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் சுமார் 10 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கின்றன.[259] உலகளாவிய மொத்த வெள்ளைத் தேங்காய் நார் உற்பத்தியில் 60ஐக் கேரளமானது வழங்குகிறது. இந்தியாவின் முதல் தேங்காய் நார் தொழிற்சாலையானது ஆலப்புழாவில் 1859-60இல் அமைக்கப்பட்டது.[260] 1959இல் இங்கு மத்திய தேங்காய் நார் ஆய்வு மையமானது நிறுவப்பட்டது. இந்தியாவின் சிறு தொழில் துறை மேம்பாட்டுக்கான வங்கியால் நடத்தப்பட்ட 2006-2007 கணக்கெடுப்பின் படி கேரளத்தில் 14,68,104 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் 30,31,272 மக்களை பணியில் அமர்த்தியுள்ளன.[261][262] கேரள மாநிலத் தொழில் துறை மேம்பாட்டு நிறுவனமானது 650க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் பெரிய உற்பத்தி நிறுவனங்களைக் கேரளத்தில் ஊக்குவித்துள்ளது. 72,500 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளது.[263] மாநில மொத்த உற்பத்திக்கு 0.3% பங்களிக்கும் சுரங்கத் துறையானது இல்மனைட்டு, வெண்களிமண், பாக்சைட்டு, சிலிக்கா, குவார்ட்சு, ருடில், சிர்கோன், மற்றும் சில்லிமனைட் ஆகியவற்றை எடுப்பதை உள்ளடக்கியதாக உள்ளது.[264] சுற்றுலாத் துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, வங்கித் துறை, கப்பல் கட்டுமானம், எண்ணெய் சுத்திகரிப்பு, உட்கட்டமைப்பு, உற்பத்தித் துறை, வீட்டுத் தோட்டங்கள், விலங்கு வளர்ப்பு மற்றும் வணிகச் செயலாக்க அயலாக்கம் ஆகியவை பிற முக்கியமான துறைகளாக உள்ளன.
கேரளத்தில் வேளாண்மையில் முக்கியமான மாற்றமானது 1970களில், இந்தியா முழுவதும் அரிசிக்கான தேவை அதிகரிப்பு மற்றும் தேவைப்பட்ட பணியாளர்கள் குறைவாகக் கிடைத்தது ஆகியவற்றின் காரணமாக அரிசி உற்பத்தியானது வீழ்ச்சி அடைந்த போது ஏற்பட்டது.[265] இதன் பின் விளைவாக அரிசி உற்பத்தியில் முதலீடானது குறைந்தது. நிலத்தின் ஒரு பெரும் பகுதிகளானவை நிலையான மரப் பயிர்கள் மற்றும் பருவ காலப் பயிர்களின் அறுவடைக்கு மாற்றப்பட்டது.[266][267] பண்ணைத் தொழிலாளர்கள் பற்றாக்குறை, நிலத்தின் அதிகப்படியான விலை மற்றும் நிலங்களின் குத்தகை விலையானது பொருளாதார ரீதியாக கட்டுபடியாகததாக இருந்தது ஆகியவற்றின் காரணமாக பயிர்கள் மூலம் கிடைக்கும் இலாபமானது வீழ்ச்சி அடைந்தது.[268] கேரளத்தில் உள்ள குடும்பங்களில் வெறும் 27.3% மட்டுமே தங்களது வாழ்வாதாரத்திற்காக வேளாண்மையைச் சார்ந்துள்ளன. இந்தியாவில் உள்ள மிகக் குறைந்த வீதத்தில் இதுவும் ஒன்றாகும்.[269]
மொத்த தேசிய உற்பத்தியில் கருப்பு மிளகின் 97%யும்,[270] இயற்கை மீள்மத்தில் 85%யும் கேரளமானது உற்பத்தி செய்கிறது.[271][272] ஏலக்காய், வெனிலா, இலவங்கப்பட்டை, மற்றும் சாதிக்காய் உள்ளிட்ட மசாலாப் பொருட்கள், தென்னை, தேநீர், காப்பி, மற்றும் முந்திரி ஆகியவை முதன்மையான வேளாண்மைப் பொருட்களாக உள்ளன.[67]:74[273][274][275][276][277] இந்தியாவின் ஏற்றுமதித் தரம் வாய்ந்த சுமார் 80% முந்திரிப் பருப்புகள் கொல்லத்தில் தயார் செய்யப்படுகின்றன.[278] முக்கியமான பணப் பயிராக தென்னை உள்ளது. இந்தியாவில் தேங்காய் அறுவடையின் பரப்பளவில் கேரளமானது முதலிடத்தைப் பெறுகிறது.[279] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த ஏலக்காய்களில் சுமார் 90% கேரளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.[23] உலகின் இரண்டாவது மிகப் பெரிய ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.[23] இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த காப்பியில் சுமார் 20% கேரளத்தில் இருந்து பெறப்படுகின்றன.[239] முக்கியமான வேளாண்மை முதன்மை உணவாக அரிசி உள்ளது. விரிவான விவசாய நிலங்களில் பல்வேறு வகையான அரிசிகள் வளர்க்கப்படுகின்றன.[280] வேளாண்மைத் துறையின் குறிப்பிடத்தக்க பகுதியை வீட்டுத் தோட்டங்கள் கொண்டுள்ளன.[281]
590 கிலோ மீட்டர் நீளக் கடற்கரைப் பட்டை,[282] 4 இலட்சம் எக்டேர் பரப்பளவு உள்ள உள்நாட்டு நீர் வளங்கள்[283] மற்றும் தோராயமாக 2,20,000 செயல்பாட்டில் உள்ள மீனவர்கள்[284] ஆகியோருடன் இந்தியாவில் மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகக் கேரளம் திகழ்கிறது.[285] 2003-04 அறிக்கைகளின் படி சுமார் 11 இலட்சம் மக்கள் மீன் பிடித்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளில் இருந்து தங்களது வாழ்வாதாரத்தைப் பெறுகின்றனர். தொடர்பான நடவடிக்கைகளில் உலர்த்துதல், பதனம் செய்தல், பொருட்களைப் பெட்டிகளுக்குள் வைத்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் மீன்களை இடம் மாற்றுதல் ஆகியவை அடங்கும். 2003-04இல் மீன் பிடித் துறையின் வருடாந்திரப் பலனானது 6,08,000 டன்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.[286] மாநிலத்தின் மொத்தப் பொருளாதாரத்துக்கு சுமார் 3% பங்கை இது அளிக்கிறது. 2006இல் மொத்த இந்தியக் கடல் மீன் பிடிப்பில் சுமார் 22%மானது கேரளத்திலிருந்து பெறப்பட்டது.[287] தென் மேற்குப் பருவக் காற்றின் போது கடற்கரையை ஒட்டி ஒரு கை விடப்பட்ட மணல் திட்டானது உருவாகிறது. இது அமைதியான பெருங்கடல் நீருக்குக் காரணமாகிறது. மீன் பிடித் துறையின் உற்பத்தியை அதிகமாக்குகிறது. இந்நிகழ்வானது உள்ளூர் அளவில் சக்கரா என்று அழைக்கப்படுகிறது.[288][289] இந்நீர்களானவை ஒரு பெரும் வேறுபட்ட வகையிலான மீன்களைக் கொடுக்கின்றன: வெட்ட வெளிக் கடல் மீன்கள் 59%, கடற்கரையோர மீன்கள் 23%, மற்றும் ஓடுடைய கணுக்காலிகள், மெல்லுடலிகள் மற்றும் பிற 18%மாக உள்ளன.[287] 1999-2000ஆம் ஆண்டின் ஒரு மதிப்பீட்டின் படி சுமார் 10 இலட்சம் மீனவர்கள் ஆண்டு தோறும் 6,68,000 டன்களைப் பிடிக்கின்றனர். 590 கிலோ மீட்டர் நீளக் கடற்கரையை ஒட்டி 222 மீனவக் கிராமங்கள் உள்ளன. மேலும், 113 மீனவக் கிராமங்கள் கடற்கரையில் இருந்து உள் நிலத்தில் அமைந்துள்ளன.
கேரளமானது 3,31,904 கிலோ மீட்டர்கள் நீளச் சாலைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த சாலைகளில் இது 5.6%ஆக உள்ளது.[23][290] 1,000 மக்களுக்கு சுமார் 9.94 கிலோ மீட்டர் நீளச் சாலை என இது உள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது நாட்டின் சராசரியானது 4.87 கிலோ மீட்டர்கள் ஆகும்.[23][290] கேரளத்தின் சாலைகளில் 1,812 கிலோ மீட்டர் நீளத் தேசிய நெடுஞ்சாலை; நாட்டின் மொத்த தேசிய நெடுஞ்சாலைகளில் இது 1.6%, 4,342 கிலோமீட்டர் நீள மாநில நெடுஞ்சாலை; நாட்டின் மொத்த மாநில நெடுஞ்சாலைகளில் இது 2.5%, 27,470 கிலோ மீட்டர் நீள மாவட்டச் சாலைகள்; நாட்டின் மொத்த மாவட்டச் சாலைகளில் இது 4.7%, 33,201 கிலோ மீட்டர் நீள நகர்ப் புறச் சாலைகள்; நாட்டின் மொத்த நகர்ப் புறச் சாலைகளில் இது 6.3%, மற்றும் 1,58,775 கிலோ மீட்டர் நீள கிராமப் புறச் சாலைகள்; நாட்டின் மொத்த கிராமப் புறச் சாலைகளில் இது 3.8% ஆகும்.[291] கேரளத்தின் மாவட்டங்களில் மொத்தத்தில் அதிக நீளமுடைய சாலைகளைக் கோட்டயமானது கொண்டுள்ளது. அதே நேரத்தில், வயநாடானது மொத்தத்தில் மிகக் குறைவான நீளமுடைய சாலைகளைக் கொண்டுள்ளது.[292] கேரளத்தின் பெரும்பாலான மேற்குக் கடற்கரையானது தேசிய நெடுஞ்சாலை 66 (இது முன்னர் தேசிய நெடுஞ்சாலை 17 மற்றும் 47 என்றிருந்தது) மூலமாக அடையக் கூடியதாக உள்ளது.[293] கேரளத்தின் கிழக்குப் பகுதியானது மாநில நெடுஞ்சாலைகள் மூலம் அடையக் கூடியதாக உள்ளது. கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதிக் குழுவின் கீழ் மலை மற்றும் கடற்கரை நெடுஞ்சாலைகளுக்கான புதிய திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.[294] தேசிய நெடுஞ்சாலை 66 ஆனது 1,622 கிலோமீட்டர்களுடன் மிக நீளமான சாலையாக உள்ளது. இது கன்னியாகுமரியை மும்பையுடன் இணைக்கிறது. காசர்கோட்டில் தலப்பாடி வழியாக கேரளத்துக்குள் நுழைகிறது. கண்ணூர், கோழிக்கோடு, மலப்புறம், குருவாயூர், கொச்சி, ஆலப்புழா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகியவற்றின் வழியாகச் சென்று, பிறகு தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது.[293] பாலக்காடு மாவட்டமானது பொதுவாகக் கேரளத்தின் நுழைவாயில் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பாலக்காட்டுக் கணவாயின் அமைவிடம் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் வழியாகவே கேரளத்தின் வடக்கு (மலபார்) மற்றும் தெற்கு (திருவாங்கூர்) பகுதிகளானவை எஞ்சிய இந்தியாவுடன் சாலை மற்றும் இருப்புப் பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இம்மாநிலத்தின் மிகப் பெரிய சோதனைச் சாவடியானது தேசிய நெடுஞ்சாலை 544இல் கேரளம் மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையில் எல்லைப் பட்டணமான வாளையாரில் அமைந்துள்ளது. கேரளத்தின் வடக்கு மற்றும் நடு மாவட்டங்களைப் பெருமளவிலான பொது மற்றும் வணிகப் போக்குவரத்தானது இதன் வழியாக அடைகிறது.[295]
பொதுப் பணித் துறையானது மாநில நெடுஞ்சாலைகளின் அமைப்பு மற்றும் முக்கியமான மாவட்டச் சாலைகளை பேணுவதற்கும், விரிவாக்குவதற்கும் பொறுப்பாக உள்ளது.[296] கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டமானது கேரளத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளைப் பேணுவதற்கும், விரிவாக்குவதற்கும் பொறுப்பாக உள்ளது. இதில் புவியியல் தகவல் முறைமையை அடிப்படையாகக் கொண்ட சாலைத் தகவல் மற்றும் மேலாண்மைத் திட்டமும் அடங்கும். இது ஒரு சில முக்கியமான மாவட்டச் சாலைகளையும் கூட மேற்பார்வையிடுகிறது.[297][298] கேரளத்தில் போக்குவரத்து நெரிசலானது ஒவ்வொரு ஆண்டும் 10 - 11% என்ற வீதத்தில் அதிகரித்து வருகிறது. அதிகப் படியான நெரிசல் மற்றும் சாலைகள் மீதான அழுத்ததிற்கு இது காரணமாகியுள்ளது. போக்குவரத்து நெரிசல் அடர்த்தியானது தேசியச் சராசரியைப் போல் கிட்டத்தட்ட நான்கு மடங்காக உள்ளது. மாநிலத்தின் அதிகப் படியான மக்கள் தொகையை இது பிரதிபலிக்கிறது. கேரளத்தின் வருடாந்திர மொத்த சாலை விபத்துகளானவை நாட்டிலேயே மிக அதிகமானவற்றில் ஒன்றாக உள்ளது. குறுகலான சாலைகள் மற்றும் பொறுப்பற்ற முறையில் வண்டிகளை இயக்குதல் ஆகியவை விபத்துகளுக்கான முதன்மையான காரணங்களாக உள்ளன.[299] கேரளத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டிலேயே மிகக் குறுகலானவற்றில் ஒன்றாகும். எதிர் காலத்திற்கும் இது தொடரும் என்று எண்ணப்படுகிறது. ஏனெனில், குறுகலான தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அனுமதி அளிக்கும் ஒரு விலக்கை மாநில அரசாங்கமானது பெற்றுள்ளது. கேரளத்தில் நெடுஞ்சாலைகள் 45 மீட்டர் அகலத்துடன் உள்ளன. மற்ற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் 60 மீட்டர் அகலத்துடன், குறைந்தது நான்கு வழிச் சாலைகளாக, ஆறு அல்லது எட்டு வழிச் சாலைகளாக உள்ளன.[300][301] இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை அமைப்பானது கேரளத்தில் மேம்பட்ட நெடுஞ்சாலைகளுக்கான அரசியல் பொறுப்பேற்பு என்பது இல்லாத காரணத்தால் நெடுஞ்சாலை மேம்பாட்டில் பிற மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசாங்கத்தை அச்சுறுத்தியுள்ளது.[302] 2013ஆம் ஆண்டின் நிலவரப் படி, கேரளமானது நாட்டிலேயே மிக அதிக சாலை விபத்து வீதங்களைக் கொண்டுள்ளது. மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விபத்துகள் பெரும்பாலும் ஏற்படுகின்றன.[303]
கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமானது அரசால் நடத்தப்படும் சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகும். நாட்டின் மிகப் பழமையான மாநில அரசால் இயக்கப்படும் பொதுப் பேருந்து போக்குவரத்துச் சேவைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் தொடக்கமானது திருவாங்கூர் மாநில சாலைப் போக்குவரத்துத் துறைக்கு தடயமிடப்படுகிறது. சித்திர திருநாளால் தலைமை தாங்கப்பட்ட திருவாங்கூர் அரசாங்கமானது 1937இல் ஒரு பொது சாலைப் போக்குவரத்து அமைப்பை நிறுவ முடிவு செய்த போது இது உருவாக்கப்பட்டது.
கழகமானது திருவனந்தபுரத்தில் (கேரளத்தின் தலைநகரம்) தலைமையகத்துடன் மூன்று பிரிவுகளாகப் (வடக்கு, நடு மற்றும் தெற்கு) பிரிக்கப்பட்டுள்ளது. அட்டவணையிடப்பட்ட தினசரிச் சேவைகளானவை 6,241 பேருந்துகளைக் கொண்டு 6,389 வழித்தடங்களில் 12 இலட்சம் கிலோமீட்டர்களில் இருந்து 14,22,546 கிலோமீட்டர்களுக்கு[304] இயக்கப்படுகின்றன. தற்போது கழகமானது 5,373 பேருந்துகளை 4,795 காலமிடப்பட்ட அட்டவணை வழிகளில் இயக்குகிறது.[305][306]
கேரள நகர்ப்புறச் சாலைப் போக்குவரத்துக் கழகமானது 2015ஆம் ஆண்டு கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் நகர்ப்புறப் போக்குவரத்துடன் தொடர்புடைய விவகாரங்களை மேலாண்மை செய்வதற்காக உருவாக்கப்பட்டது.[292] 12 ஏப்பிரல் 2015 அன்று கொச்சியின் தேவரா என்ற இடத்தில் இது தொடங்கப்பட்டது.[307]
இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வே மண்டலமானது மாநிலத்தின் அனைத்து இருப்புப் பாதை வழித் தடங்களையும் இயக்குகிறது. உயர் நில மாவட்டங்களான இடுக்கி மற்றும் வயநாட்டைத் தவிர்த்து பெரும்பாலான முக்கியமான பட்டணங்கள் மற்றும் நகரங்களை இணைக்கிறது.[308] தென்னக இரயில்வேயின் ஆறு பிரிவுகளில் இரு பிரிவுகளால் இம்மாநிலத்திலுள்ள இருப்புப் பாதை அமைப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது. அவை திருவனந்தபுரத்தைத் தலைமையகமாகக் கொண்ட திருவனந்தபுரம் தொடருந்து கோட்டம் மற்றும் பாலக்காட்டை தலைமையகமாகக் கொண்ட பாலக்காடு தொடருந்து கோட்டம் ஆகியவையாகும்.[309] இம்மாநிலத்தின் மிகப் பரபரப்பான தொடருந்து நிலையமாக திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையம் திகழ்கிறது.[310] கேரளத்தின் முக்கியமான தொடருந்து நிலையங்கள் பின்வருமாறு:
மாநிலத்தில் முதல் இருப்புப் பாதையானது திரூர் முதல் சாலியம் (கோழிக்கோடு) வரை போடப்பட்டது. மாநிலத்தின் மிகப் பழமையான தொடருந்து நிலையமானது திரூரில் உள்ளது. இது தானூர், பரப்பனங்காடி, வள்ளிக்குன்னு ஊராட்சி, மற்றும் கடலுண்டி வழியாகச் செல்கிறது.[311][312] அதே ஆண்டு இருப்புப் பாதையானது திரூரில் இருந்து குட்டிப்புரம் வரை திருநாவாய் வழியாக விரிவாக்கப்பட்டது.[312] 1862இல் பட்டம்பி வழியாக குட்டிப்புரம் முதல் ஷொர்ணூர் வரை மீண்டும் விரிவாக்கப்பட்டது. இது ஷொறணூர் சந்திப்பின் நிறுவுதலுக்குக் காரணமானது. ஷொறணூர் சந்திப்பு மாநிலத்தின் மிகப் பெரிய தொடருந்து சந்திப்பாகவும் உள்ளது.[312] 12 மார்ச்சு 1861 அன்று சாலியம்–திரூர்,[312] 1862இல் திரூர்-ஷொர்ணூர்,[312] 1902இல் ஷொர்ணூர்-கொச்சி துறைமுகப் பிரிவு, 1 சூலை 1904இல் கொல்லம்-செங்கோட்டை, 4 சனவரி 1918 அன்று கொல்லம்-திருவனந்தபுரம், 1927இல் நிலம்பூர்-ஷொர்ணூர், 1956இல் எர்ணாகுளம்-கோட்டயம், 1958இல் கோட்டயம்-கொல்லம், 1979இல் திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, 1994இல் திருச்சூர்-குருவாயூர் பிரிவு ஆகியவற்றுக்கு இடையிலான முக்கியமான இருப்புப் பாதைப் போக்குவரத்தானது நிறுவப்பட்டது.[313] இந்தியாவில் உள்ள மிகக் குறுகலான அகல இருப்புப் பாதைகளில் நிலம்பூர்-ஷொர்ணூர் இருப்புப் பாதையும் ஒன்றாகும்.[314] நிலம்பூர் தேக்குகள் மற்றும் அங்காடிபுரம் லட்டேரைட்டுகளை கோழிக்கோட்டில் உள்ள துறைமுகம் வழியாக ஐக்கிய இராச்சியத்திற்குக் கொண்டு செல்வதற்காகப் பிரித்தானிய சகாப்தத்தின் போது போக்குவரத்துக்காக இது நிறுவப்பட்டது.[314] மேற்குத் தொடர்ச்சி மலையில் பாலக்காட்டுக் கணவாயின் அமைவிடமானது ஷொறணூர் சந்திப்பை முக்கியமான ஒன்றாக ஆக்குகிறது. ஏனெனில், இந்தியாவின் தென் மேற்குக் கடற்கரையை (மங்களூர்) தென் கிழக்குக் கடற்கரையுடன் (சென்னை) இது இணைக்கிறது.[315]
கொச்சி மெட்ரோவானது கேரளத்தில் உள்ள ஒரே மெட்ரோ தொடருந்து அமைப்பாகும். இதன் கட்டுமானம் 2012இல் தொடங்கப்பட்டது. முதல் கட்டத் திட்டத்திற்கு ஐஅ$650 மில்லியன் (₹4,648.5 கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டது.[316][317] கொச்சி மெட்ரோவானது பிரான்சின் அல்ஸ்டோம் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட 65 மீட்டர் நீள தொடருந்தைப் பயன்படுத்துகிறது.[318][319][320] சமிக்ஞை அனுப்புதல் மற்றும் தொலைத் தொடர்புக்கு ஒரு தொடர்பை அடிப்படையாகக் கொண்ட தொடருந்து கட்டுப்பாட்டைப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மெட்ரோ அமைப்பு இதுவாகும்.[321] அக்டோபர் 2017இல் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் இந்தியாவில் "சிறந்த நகர்ப்புறப் போக்குவரத்துத் திட்டம்" என கொச்சி மெட்ரோவானது ஒவ்வொரு ஆண்டும் அமைச்சகத்தால் நடத்தப்படும் நகர்ப்புறப் போக்குவரத்து இந்தியா எனும் பன்னாட்டு மாநாட்டின் ஒரு பகுதியாக இது பெயரிடப்பட்டது.[322]
கேரளமானது நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களைக் கொண்டுள்ளது:
மதராஸ் மாகாணத்தின் கீழ் நிறுவப்பட்ட கொல்லம் வானூர்தி நிலையமானது கேரளத்தின் முதல் வானூர்தி நிலையம் ஆகும்.[323] ஆனால் இது தற்போது மூடப்பட்டு விட்டது. கண்ணூரானது வணிக விமானங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஓடு பாதையை 1935ஆம் ஆண்டிலேயே கொண்டிருந்தது. அப்போது டாடா ஏர்லைன்ஸானது வாராந்திர விமானங்களை மும்பை மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே இயக்கியது. இவ்விமானங்கள் கோவா மற்றும் கண்ணூரில் நின்று வந்தன.[324] இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையத்தால் மேலாண்மை செய்யப்படும் திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையமானது தென்னிந்தியாவிலுள்ள மிகப் பழமையான, தற்போது பயன்பாட்டில் இருக்கும் வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையமானது கேரளத்தில் உள்ள இரண்டாவது மிகப் பழமையான, தற்போது பயன்பாட்டில் உள்ள வானூர்தி நிலையம் ஆகும். மலபார் பகுதியில் இதுவே மிகப் பழமையானதாகும்.[325] மாநிலத்தின் மிகவும் பரபரப்பான வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்தியாவின் ஏழாவது பரபரப்பான வானூர்தி நிலையம் இதுவாகும்.[326] முழுவதும் சூரிய ஆற்றலால் மின் சக்தி பெறும் உலகின் முதல் வானூர்தி நிலையமும் இதுவாகும். சாம்பியன் ஆப் தி எர்த் என்ற மதிப்பு மிக்க விருதை இது வென்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையால் வழங்கப்படும் மிக உயரிய சுற்றுச் சூழல் மரியாதை இதுவாகும். தனது பங்குகளை பொதுச் சந்தையில் விற்பனை செய்யும் நிறுவனமாக அமைக்கப்பட்ட முதல் இந்திய வானூர்தி நிலையம் கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். 30 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 10,000 வெளிநாடு வாழ் இந்தியர்களால் இது நிதி பெற்றுள்ளது.[327] குடிசார் வானூர்தி நிலையங்கள் தவிர கொச்சியானது ஐஎன்எஸ் கருடா எனும் பெயருடைய ஒரு கடற்படை வானூர்தி நிலையத்தையும் கொண்டுள்ளது. இந்திய வான் படையின் தெற்கு வானூர்தித் தலைமையகத்துடன் குடிசார் வசதிகளைத் திருவனந்தபுரம் வானூர்தி நிலையமானது பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த வசதிகள் கேரளத்துக்கு வருகை புரியும் மத்திய அரசாங்க முக்கிய நபர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
கேரளமானது இரண்டு முக்கியத் துறைமுகங்கள், நான்கு இடை நிலைத் துறைமுகங்கள் மற்றும் 13 சிறிய துறைமுகங்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு குடியேற்ற சோதனை வசதிகளைக் கொண்டவை ஆகும்.[328][329] மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் கொச்சி ஆகும். இதன் பரப்பளவு 8.27 சதுர கிலோமீட்டர் ஆகும்.[330] தற்போது முக்கியமான துறைமுகம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள விழிஞ்ஞம் பன்னாட்டுத் துறைமுகத்தின் முதல் கட்டம் மட்டும் முடிக்கப்பட்டுள்ளது. பிற கட்டங்கள் கட்டுமானத்தின் கீழ் உள்ளன.[330] பேப்பூர், கொல்லம், மற்றும் அழீக்கோடு உள்ளிட்டவை பிற இடை நிலைத் துறைமுகங்கள் ஆகும்.[330] மஞ்சேஸ்வரம், காசர்கோடு, நீலேஸ்வரம், கண்ணூர், தலச்சேரி, வடகரை, பொன்னானி, முனம்பம், மனக்கோடம், ஆலப்புழா, காயம்குளம், நீண்டகரை, மற்றும் வலியத்துரா உள்ளிட்டவை சிறிய துறைமுகங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள எஞ்சியவை ஆகும்.[330] கேரள கடல் சார் அமைப்பானது நீண்டகரையில் அமைக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்ட துணை மையத்தைக் கொடுங்கல்லூரிலும் கூட கொண்டுள்ளது.[330] மாநிலமானது ஏராளமான உப்பங்கழிகளைக் கொண்டுள்ளது. வணிக ரீதியான உள்நாட்டுப் பயணத்திற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. போக்குவரத்துச் சேவைகளானவை முதன்மையாக நாட்டுப்புறப் படகுகள் மற்றும் பயணிக் கப்பல்களால் கொடுக்கப்படுகின்றன. மாநிலத்தில் 67 பயணம் மேற்கொள்ள கூடிய ஆறுகள் உள்ளன. உள்நாட்டு நீர்வழிகளின் மொத்த நீளமானது 1,687 கிலோ மீட்டர்கள் ஆகும்.[331] உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை விரிவாக்குவதற்கு முதன்மையான தடங்கல்களாக உள்ளவை சேற்றுப் படிவால் உருவாகும் ஆழமின்மை, பயண அமைப்புகள் முறையாகப் பேணப்படாதது மற்றும் கரைப் பாதுகாப்பு, நீர் பதுமராகச் செடிகளின் அதிகப் படியான வளர்ச்சி, நவீன உள்நாட்டுப் படகு முனையங்கள் இல்லாதது, மற்றும் சரக்குகளைக் கையாளும் அமைப்பு இல்லாதது ஆகியவை ஆகும்.
616 கிலோமீட்டர்கள் நீள மேற்குக் கடற்கரைக் கால்வாயானது மாநிலத்தின் மிக நீளமான நீர்வழியாக உள்ளது. இது காசர்கோட்டை பூவாருடன் இணைக்கிறது.[307] இது ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: 41 கிலோமீட்டர்கள் நீளமுடைய காசர்கோடு-நீலேஸ்வரம் பிரிவு, 188 கிலோமீட்டர்கள் நீளமுடைய நீலேஸ்வரம்-கோழிக்கோடு பிரிவு, 160 கிலோ மீட்டர்கள் நீளமுடைய கோழிக்கோடு-கோட்டபுரம் பிரிவு, 168 கிலோமீட்டர்கள் நீளமுடைய தேசிய நீர்வழி 3 (கோட்டப்புரம்-கொல்லம் பிரிவு) மற்றும் 74 கிலோமீட்டர்கள் நீளமுடைய கொல்லம்-விழிஞ்ஞம் பிரிவு.[23] கானல்லி கால்வாயானது மேற்குக் கடற்கரைக் கால்வாயின் ஒரு பகுதியாகும். இது கோழிக்கோட்டைக் கொச்சியுடன் பொன்னானி வழியாக இணைக்கிறது. வடகரையில் தொடங்கி மலப்புறம் மற்றும் திருச்சூர் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.[332] அப்போது மலபாரின் மாவட்ட ஆட்சித் தலைவரான எச். வி. கானல்லியின் ஆணையின் கீழ் 1848ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கல்லாயி துறைமுகத்திலிருந்து மலபாரின் உள் நிலப்பகுதிகளுக்குக் குற்றியாடி மற்றும் கோரபுழா ஆற்று அமைப்புகள் வழியாகப் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக தொடக்கத்தில் இது தொடங்கப்பட்டது.[332] கோழிக்கோடு மற்றும் கொச்சிக்கு இடையில் பொன்னானி வழியாக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சரக்குப் போக்குவரத்துக்கான முதன்மையான நீர் வழியாக இது திகழ்ந்தது.[332] ஆலப்புழா-சங்கனாச்சேரி கால்வாய், ஆலப்புழா-கோட்டயம்-அதிரம்புழா கால்வாய், மற்றும் கோட்டயம்-வைக்கம் கால்வாய் உள்ளிட்டவை கேரளத்தில் உள்ள பிற முக்கியமான நீர் வழிகள் ஆகும்.[330]
கொச்சி கடல் வழி மெட்ரோவானது ஓர் இணைத்து அமைக்கப்பட்ட நீர்வழிப் போக்குவரத்து அமைப்பாகும். இது இந்தியாவின் கேரளத்தின் பெரிய கொச்சி பகுதிக்குச் சேவையாற்றுகிறது. இந்தியாவில் முதல் நீர்வழி மெட்ரோ அமைப்பு இதுவாகும். ஆசியாவிலேயே இந்த அளவுடைய இணைத்து அமைக்கப்பட்ட முதல் நீர் வழிப் போக்குவரத்து அமைப்பாக இது உள்ளது. கொச்சியின் 10 தீவுச் சமுகங்களை முதன்மை நிலப்பரப்புடன் 78 மின்கலங்களால் இயக்கப்படும் மின் படகுகளின் ஒரு குழு மூலம் இது இணைக்கிறது. 38 முனையங்கள் மற்றும் 16 வழிகளுடன் 76 கிலோமீட்டர் நீளத்திற்கு இவை சேவையாற்றுகின்றன.[333] இது கொச்சி மெட்ரோவுடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து வாய்ப்பானது வரம்புக்குட்பட்டதாக இருக்கும் ஆறுகளில் புறநகர்ப் பகுதிகளுக்கு ஒரு சேவையாக இது உள்ளது.[334]
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1901 | 63,96,262 | — |
1911 | 71,47,673 | +11.7% |
1921 | 78,02,127 | +9.2% |
1931 | 95,07,050 | +21.9% |
1941 | 1,10,31,541 | +16.0% |
1951 | 1,35,49,118 | +22.8% |
1961 | 1,69,03,715 | +24.8% |
1971 | 2,13,47,375 | +26.3% |
1981 | 2,54,53,680 | +19.2% |
1991 | 2,90,98,518 | +14.3% |
2001 | 3,18,41,374 | +9.4% |
2011 | 3,34,06,061 | +4.9% |
ஆதாரம்: இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு[335] |
இந்தியாவின் மக்கள் தொகையில் 2.8% பேருக்குக் கேரளமானது வீடாக உள்ளது. மாநிலத்தின் மக்கள் அடர்த்தியானது ஒரு சதுர கிலோமீட்டருக்கு 859 பேர் என்று உள்ளது. தேசிய மக்கள் அடர்த்தி சராசரியான ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 370 பேர் என்று உள்ளதை விட இம்மாநிலத்தின் நிலமானது கிட்டத்தட்ட மூன்று மடங்கு அடர்த்தியான மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.[336] 2011ஆம் ஆண்டு நிலவரப் படி கேரளத்தில் உள்ள மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாகத் திருவனந்தபுரம் திகழ்கிறது.[337] இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி வீதமானது இந்தியாவிலேயே மிகக் குறைவானதாக உள்ளது. 2011இல் தசாப்த வளர்ச்சி வீதமாக 4.9% இருந்தது. இது ஒட்டு மொத்த இந்திய சராசரியான 17.6%இல் மூன்றில் ஒரு பங்கையும் விட குறைவாகும்.[336] 1951 மற்றும் 1991க்கு இடையில் கேரளத்தின் மக்கள் தொகையானது இரு மடங்குக்கும் அதிகமாக அதிகரித்தது. 1.56 கோடி மக்களைச் சேர்த்தது. 1991இல் 2.91 கோடி மக்கள் தொகையை அடைந்தது. 2011 வாக்கில் மக்கள் தொகையானது 3.33 கோடியாக இருந்தது.[336] கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளானவை மிக அடர்த்தியான மக்கள் தொகையை ஒரு சதுர கிலோமீட்டருக்கு 2022 பேர் என்று கொண்டுள்ளன. மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்கள் அடர்த்தியைப் போல் இது 2.5 மடங்கு ஆகும். கிழக்குக் குன்றுகள் மற்றும் மலைகளை ஒப்பீட்டளவில் அடர்த்தியற்ற மக்கள் தொகை உடையதாக இது உருவாக்குகிறது.[338] இந்தியாவில் இரண்டாவது மிக அதிக நகரமயமாக்கப்பட்ட முக்கிய மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது. 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாநிலத்தில் 47.7% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.[21] சுமார் 3.18 கோடி கேரளத்தவர்கள் முதன்மையாக மலையாளிகளாக உள்ளனர்.[336] இம்மாநிலத்தின் பூர்வகுடி பழங்குடியின ஆதிவாசிகள் 3,21,000 பேராக மாநிலத்தின் மக்கள் தொகையில் 1.1%ஆக உள்ளனர். இவர்கள் கிழக்குப் பகுதியில் செறிந்துள்ளனர்.[339]:10–12
கேரளம்-இன் பெரிய நகரங்கள் 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு[337] இவற்றின் மாநகராட்சிக் கழகம் அல்லது நகராட்சி வரம்புக்கு உட்பட்ட மக்கள் தொகையின் படி | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | மாவட்டம் | மதொ. | |||||||
திருவனந்தபுரம் கோழிக்கோடு |
1 | திருவனந்தபுரம் | திருவனந்தபுரம் மாவட்டம் | 968,990 | கொச்சி கொல்லம் | ||||
2 | கோழிக்கோடு | கோழிக்கோடு மாவட்டம் | 609,224 | ||||||
3 | கொச்சி | எர்ணாகுளம் மாவட்டம் | 602,046 | ||||||
4 | கொல்லம் | கொல்லம் மாவட்டம் | 388,288 | ||||||
5 | திருச்சூர் | திருச்சூர் மாவட்டம் | 315,957 | ||||||
6 | கண்ணூர் | கண்ணூர் மாவட்டம் | 232,486 | ||||||
7 | ஆலப்புழா | ஆலப்புழா மாவட்டம் | 180,856 | ||||||
8 | கோட்டயம் | கோட்டயம் மாவட்டம் | 138,283 | ||||||
9 | பாலக்காடு | பாலக்காடு மாவட்டம் | 131,019 | ||||||
10 | மஞ்சேரி | மலப்புறம் மாவட்டம் | 97,102 |
கேரளத்தில் தாய் வழி மரபுரிமைப் பாரம்பரியம் உள்ளது. இங்கு தாய் தான் குடும்பத்தின் தலைவராக உள்ளார்.[340] இதன் விளைவாகக் கேரளப் பெண்கள் சமூகத்தில் மிக அதிக உயர் நிலையையும், செல்வாக்கையும் கொண்டுள்ளனர். சில செல்வாக்கு மிக்க சாதிகளில் இது பொதுவானதாகும். மகள்கள் மீது வைக்கப்படும் மதிப்புக்கு இதுவும் ஒரு காரணியாகும். கிறித்தவ மதப் பரப்புரைக் குழுக்களும் மலையாளிப் பெண்கள் மீது தாக்கம் கொண்டுள்ளனர். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு அவர்கள் பள்ளிகளைத் தொடங்கியுள்ளனர்.[341] கல்வி மற்றும் வருமானம் உள்ள வேலைவாய்ப்புகள் போன்ற பெண்களுக்கான வாய்ப்புகளானவை பொதுவாகக் குறைவான குழந்தைப் பிறப்பு வீதமாக வடிவம் பெறுகின்றன.[342] பதிலுக்கு இவை கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. பெண்களுக்கு அதிகப் பலனைக் கொடுக்கின்றன. அச்சமூகத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகிய இருவருக்குமே ஒரு மேல் நோக்கிய சுருள் வட்டம் போன்ற ஏற்றத்தை இது கொடுக்கிறது. எதிர் காலத் தலைமுறைகளுக்கும் இது கடத்தப்படுகிறது. 1996ஆம் ஆண்டின் மனித மேம்பாட்டு அறிக்கையின் படி கேரளத்தின் பாலின மேம்பாட்டுச் சுட்டெண்ணானது 597 ஆகும். இந்தியாவிலுள்ள எந்த ஒரு மாநிலத்தையும் விட இது அதிகமானதாகும். பெண்களுக்கான கல்வி அறிவு, கல்வி, பணிப் பங்கெடுப்பு மற்றும் ஆயுள் எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அதிகப் படியான வீதங்கள், பயனுடைய பாலின வீதம் போன்ற காரணிகள் இதற்குப் பங்களித்துள்ளன.[343]
கேரளத்தின் பாலின வீதமானது 1.084 (பெண்கள்/ஆண்கள்) ஆகும். இது எஞ்சிய இந்தியாவை விட மிக அதிகமாகும். ஆண்களை விட பெண்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட ஒரே ஒரு மாநிலம் இது தான்.[237]:2 அரசியல் பங்கெடுப்பு, அன்றாட நிகழ்வுகளை அறிந்திருத்தல், சமய நூல்களை வாசிப்பது போன்ற கல்வி கொடுக்கும் வாய்ப்புகளை இவர்கள் கொண்டிருக்கும் அதே நேரத்தில் இவை இன்னும் பெண்களுக்கான முழுமையான, சம உரிமையாகக் கேரளத்தில் மாற்றம் அடையவில்லை. அவர்களது சொந்த நன்மைக்காக பெண்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்ற பொதுவான மனப்பான்மையானது உள்ளது. சமூகம் முன்னேற்றம் அடைந்திருந்த போதிலும் மாநிலத்தில் பாலினமானது இன்னும் சமூக நிலை மீது தாக்கம் கொண்டுள்ளது.[344][345][346]
கேரளமானது இந்தியாவில் ந. ந. ஈ. தி. விவகாரங்களில் முன்னணியில் உள்ளது.[347] மூன்றாம் பாலினத்தவர் சமூகத்திற்கு ஒரு நலத்திட்டக் கொள்கையை உருவாக்கிய இந்தியாவின் முதல் மாநிலங்களில் கேரளமும் ஒன்றாகும். 2016இல் இலவச பாலின மாற்று அறுவை சிகிச்சையை அரசாங்க மருத்துவமனைகள் மூலம் கேரள அரசாங்கமானது அறிமுகப்படுத்தியது.[348][349][350] கேரளத்தில் உள்ள முதன்மையான ந. ந. ஈ. தி. அமைப்புகளில் குயீரளா ஒன்றாகும். ந. ந. ஈ. தி. மக்கள் குறித்த அதிகரிக்கப்பட்ட விழிப்புணர்வு, மருத்துவத்துறை சேவைகள் குறித்த தகவல்கள், பணியிடக் கொள்கைகள் மற்றும் கல்விப் பாடத்திட்டங்கள் ஆகியவற்றுக்காக இது செயல்படுகிறது.[351] 2010இலிருந்து கேரள குயீர் பேரணியானது கேரளத்தில் பல்வேறு நகரங்களில் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.[352]
சூன் 2019இல் மூன்றாம் பாலினத்தவர் சமூகத்தின் உறுப்பினரானவர்கள் "மூன்றாம் பால்" அல்லது "பிற பாலினத்தவர்" என அரசாங்கத் தகவல் தொடர்புகளில் குறிப்பிடப்படக் கூடாது என ஒரு புதிய ஆணையைக் கேரள அரசாங்கமானது வெளியிட்டது. மாறாக, "டிரான்ஸ்ஜென்டர்" என்ற ஆங்கில வார்த்தையானது குறிப்பிடப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. முன்னர் அரசாங்கப் படிவங்களில் ஆண், பெண் மற்றும் பிற/மூன்றாம் பாலினத்தவர் என்று முன்னர் குறிப்பிடப்பட்டிருந்தது.[353][354]
2021இல் மாத்ருபூமி இளைஞர் கொள்கை விளக்க அறிக்கைக்காக 15 மற்றும் 35 வயதுக்கு இடைப்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெரும்பாலானோர் (74.3%) தன் பாலினத் திருமணங்களைச் சட்டப் படி முறைமையாக்க ஆதரவளித்தனர். அதே நேரத்தில், 25.7% இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.[355]
ஒரு சனநாயக பொதுவுடைமைவாத உள்ளூர் அரசாங்கத்தின் கீழ் கேரளமானது இந்திய சராசரியை விட சமூக மேம்பாட்டில்ல் மிக அதிக முன்னேற்றத்தை ஒரு சாதனை அளவாக எட்டியுள்ளது.[357] 2015ஆம் ஆண்டு நிலவரப் படி கேரளத்தின் மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணானது 0.770 ஆகும். இது இம்மாநிலத்தை "உயர்" நிலையில் வைக்கிறது. நாட்டிலேயே முதலாம் இடத்தைக் கொடுக்கிறது.[7] 2007-08இல் இது 0.790[358] ஆக இருந்தது. நுகர்வை அடிப்படையாகக் கொண்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணில் மாநிலமானது 0.920ஐப் பெற்றுள்ளது. பல முன்னேறிய நாடுகளை விட இது சிறந்த அளவாகும்.[358] 19ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடக்கக் கல்வி, நலம் பேணுதல் மற்றும் வறுமை ஒழிப்புக்காக ஒப்பீட்டளவில் அதிகப்படியான செலவீனங்கள் ஆகியவை இம்மாநிலம் மிகச் சிறந்த மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணைப் பேணுவதற்கு உதவியுள்ளது.[359][360] மத்திய அரசின் பயன் முறை சார்ந்த பணியாள் வளத்தின் ஆராய்ச்சிக்கான அமைப்பால் இந்த அறிக்கையானது தயார் செய்யப்பட்டிருந்தது.[361][362] எனினும், மேம்பாட்டு ஆய்வுக்கான மையத்தால் தயாரிக்கப்பட்ட 2005 மனித மேம்பாட்டு அறிக்கையானது இம்மாநிலத்திற்கு உள்ளடக்கிய மேம்பாட்டின் ஒரு நெறிக்குட்பட்ட கட்டத்தைக் கணித்துள்ளது. ஏனெனில், மனித மேம்பாட்டில் முன்னேற்றமானது ஏற்கனவே மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவத் தொடங்கி விட்டது.[359] இந்தியாவில் மிகவும் சுத்தமான மற்றும் ஆரோக்கியமான மாநிலமாகவும் கேரளமானது பரவலாகக் கருதப்படுகிறது.[363]
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மாநிலங்களிலேயே கேரளமானது மிக அதிக எழுத்தறிவைக் (94%) கொண்டுள்ளது. 2018இல் எழுத்தறிவு வீதமானது 96%ஆகக் கணக்கிடப்பட்டது. கோட்டயம் மாவட்டத்தில் எழுத்தறிவு வீதமான 97% ஆகும்.[364][9][365] கேரளத்தில் ஆயுள் எதிர்பார்ப்பு 74 ஆண்டுகள் ஆகும். 2011ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே மிக அதிகமான வீதங்களில் இதுவும் ஒன்றாகும்.[366] கேரளத்தின் கிராமப்புற ஏழ்மை வீதமானது 59%இலிருந்து (1973-1974) 12% ஆக (1999-2010) விழுந்தது. ஒட்டு மொத்த (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) வீதமானது 1970கள் மற்றும் 2000ங்களுக்கு இடையில் 47% விழுந்தது. இந்தியாவில் ஒட்டு மொத்த வறுமை வீதத்தின் வீழ்ச்சியானது இதே காலகட்டத்தில் 29%ஆக இருந்தது.[367] 1999-2000 வாக்கில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழ்மை வீதங்களானவை முறையே 10.0% மற்றும் 9.6%ஆக வீழ்ச்சி அடைந்தன.[249] 2013இல் தெண்டுல்கர் குழுவின் வறுமை மீதான அறிக்கையானது கேரளத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதங்கள் முறையே 9.1% மற்றும் 5.0% என்று மதிப்பிட்டது.[368] சமூக நலத்தை ஊக்குவிப்பதற்காக கொச்சி மற்றும் திருவாங்கூர் இராச்சியங்களால் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தொடங்கிய முயற்சியின் மூலமே இத்தகைய மாற்றங்கள் பெருமளவுக்குத் தொடங்கின.[369][370] இதே கவனக் குவியமானது கேரளத்தின் சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசாங்கத்தாலும் பேணப்பட்டது.[188][371]:48
கனடா, சப்பான் மற்றும் நோர்வே போன்ற வளர்ந்த நாடுகளில் ஏற்படும் இயற்பண்பான ஒரு "மக்கள் தொகை நிலை மாற்றத்தைக்" கேரளமானது கண்டுள்ளது.[237]:1 2005இல் 11.2% மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தனர்.[371] 2023இல் பிபிசி செய்தி நிறுவனமானது கும்பநாட்டு கிராமத்தைக் கவனக் குவியமாகக் கொண்டு கேரளத்திலிருந்து வெளியேறி பணி தேடியதால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து செய்தி வெளியிட்டது.[372]
2004இல் குழந்தைப் பிறப்பு வீதமானது 1,000 பேருக்கு 18 என்று மிகவும் குறைவாக இருந்தது.[373] 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளமானது ஒட்டு மொத்த குழந்தைப் பிறப்பு வீதமாக 1.6 குழந்தைகளைக் கொண்டுள்ளது. மலப்புறம் மாவட்டம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பெண்ணுக்கு இரண்டுக்கும் குறைவான குழந்தைகளே சராசரியாகப் பிறக்கின்றன. குழந்தைப் பிறப்பு வீதமானது மலப்புறம் மாவட்டத்தில் மிக அதிகமாகவும் (2.2), பத்தினம்திட்டா மாவட்டத்தில் மிகவும் குறைவாகவும் (1.3) உள்ளன.[374] 2001இல் குழந்தைப் பிறப்பு வீதமாக முசுலிம்கள் 2.6யும், இந்துக்கள் 1.5யும் மற்றும் கிறித்தவர்கள் 1.7யும் கொண்டிருந்தனர்.[375] சிஎம்எஸ் இந்திய லஞ்ச ஊழல் ஆய்வு,[376] வெளிப்படைத் தன்மைக்கான பன்னாட்டு அமைப்பு (2005)[377] மற்றும் இந்தியா டுடே (1997)[378] ஆகியோரால் எடுக்கப்பட்ட ஆய்வின் படி இம்மாநிலமானது "இந்தியாவில் மிகக் குறைவான ஊழல் உள்ள மாநிலமாகக்" கருதப்படுகிறது. இந்திய மாநிலங்களிலேயே கேரளமானது மிகக் குறைவான கொலை வீதங்களைக் கொண்டுள்ளது.[379] 2011ஆம் ஆண்டில் 1 இலட்சம் பேருக்கு 1.1 பேர் கொல்லப்பட்டனர். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதைப் பொறுத்த வரையில் அதிகப் படியான தற்கொலை வீதம், பெறப்படும் வருமானத்தில் குறைவான பகிர்ந்தளிப்பு, குழந்தைத் திருமணம்,[380] பாலியல் துன்புறுத்தல் புகார்கள் மற்றும் வரம்புக்குட்பட்ட சுதந்திரம் போன்ற சில எதிர் மறையான காரணிகளும் குறிப்பிடப்படுகின்றன.[343] கேரளத்தில் குழந்தைத் திருமணமானது மிகவும் குறைவாக உள்ளது. மலைப்புறம் மாவட்டமானது மிக அதிக எண்ணிக்கையிலான குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் இடமாக உள்ளது. மலப்புறத்தில் இத்தகைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.[381][382] 2019இல் இந்தியாவிலேயே மிக அதிக குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் புகார்களானவை கேரளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.[383]
2015இல் கேரளமானது எந்த ஒரு மாநிலத்தைக் காட்டிலும் மிக அதிகமான குற்றம் நிரூபிக்கப்படும் 77%க்கும் அதிகமான வீதத்தைக் கொண்டிருந்தது.[384] கிராமப்புற இந்தியாவில் தகவுப் பொறுத்த அமைப்பில் மிகக் குறைவான வீடில்லா மக்களைக் கேரளமானது கொண்டுள்ளது. இங்கு <0.1க்கும் குறைவான மக்களே வீடில்லாமல் உள்ளனர்.[385] "வீடில்லாதவர்கள் இல்லாத முதல் மாநிலமாக" உருவாக்கும் இலக்கை அடைய இம்மாநிலம் முயற்சி மேற்கொண்டுள்ளது. "நிலமற்ற மக்கள் இல்லை" என்ற மதிப்பு மிக்க இதன் திட்டத்தோடு இந்த இலக்கையும் கொண்டுள்ளது. தனியார் அமைப்புகள் மற்றும் வெளி நாடு வாழ் மலையாளி சமூகமானது வீடில்லா மக்களுக்கு வீடுகளைக் கட்டித் தரும் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கின்றன.[386] முதல் இடத்தில் உள்ள பஞ்சாப்புக்கு அடுத்த இடத்தில் இம்மாநிலமானது மிகக் குறைவான வறுமை வீதத்தைக் கொண்டுள்ளது. 2015இல் மின்னணு நிர்வாக நடவடிக்கைகளை அமல்படுத்தியதன் மூலம் முதல் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மாநிலமாகக் கேரளமானது உருவானது.[387]
எல்லோருக்குமான மருத்துவ சேவைத் திட்டத்தை அமல்படுத்தியதில் கேரளமானது ஒரு முன்னோடி மாநிலமாகும்.[388] இறப்பவர்களின் வீதத்தைச் சரி செய்யும் குழந்தை பிறப்பு வீதம் மற்றும் குழந்தை இறப்பு வீதம் ஆகியவை பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இங்கு மிகக் குறைவாகும். 1,000 குழந்தைப் பிறப்புக்கு 12[188][373]:49 முதல் 14[389]:5 பேர் இங்கு இறக்கின்றனர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2015-16ஆம் ஆண்டின் தேசிய குடும்ப நல ஆய்வின் படி இது 6ஆகக் குறைந்துள்ளது.[390] சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட உதவி வழங்கும் அமைப்பான லியேன் அமைப்பால் அமைக்கப்பட்ட குழுவின் ஓர் ஆய்வுப் படி இந்தியாவில் இறப்பதற்கு மிகச் சிறந்த இடமாகக் கேரளமானது கருதப்படுகிறது. கடுமையான உடல்நலக் குறைவைக் கொண்ட நோயாளிகளுக்கு உடல் நலக் குறைவைக் குறைக்கும் இம்மாநிலத்தின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு குறிப்பிடப்பட்டது.[391] எனினும், கேரளத்தில் நோயாளிகளின் வீதமானது மற்ற எந்த ஒரு இந்திய மாநிலத்தையும் விட மிக அதிகமாகும். 1,000 மக்களுக்கு கிராமப்புறத்தில் 118 பேரும், மற்றும் நகர்ப்புறத்தில் 88 பேரும் நோய்வாய்ப்படுகின்றனர். ஒட்டு மொத்த இந்தியாவுக்கான இதையொத்த மதிப்பீடுகளானவை 2005ஆம் ஆண்டு நிலவரப் படி 1,000 பேருக்கு முறையே 55 மற்றும் 54 ஆகும்.[389]:5 பிறப்பின் போது குறைவான எடை கொண்ட வழக்கமானது கேரளத்தில் 13.3% ஆக உள்ளது. பல முதல் உலக நாடுகளை விடவும் இது அதிகமாகும்.[373] வயிற்றுப்போக்கு, இரத்தக்கழிசல், கல்லீரல் அழற்சி, மற்றும் குடற்காய்ச்சல் போன்ற நீரால் பரவும் வியாதிகள் 30 இலட்சம் கிணறுகளைச் சார்ந்துள்ள 50%க்கும் மேற்பட்ட மக்களிடையே சாக்கடை அமைப்புகள் இல்லாததால் கடுமையாகியுள்ளது.[392]:5–7 2017ஆம் ஆண்டு நிலவரப் படி இந்தியாவிலேயே மிக அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்டதாக இம்மாநிலம் திகழ்கிறது. இந்நோய் பரவலாக உள்ள வீதமும் இங்கு மிக அதிகமாக உள்ளது.[393]
ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை பால் துகள்களுக்குப் பதிலாக தாய்ப்பாலைச் செயல் முனைப்புடன் ஊக்குவிக்கும் அதன் முயற்சிக்காகக் கேரளத்தை உலகின் முதல் "குழந்தைகளுக்கு நட்பான மாநிலம்" என்று குறிப்பிட்டுள்ளது.[394][395] 95%க்கும் மேற்பட்ட கேரளக் குழந்தைப் பிறப்புகளானவை மருத்துவமனைகளில் பிரசவிக்கப்படுகின்றன. நாட்டில் மிகக் குறைவான குழந்தை இறப்பு வீதத்தையும் இம்மாநிலம் கொண்டுள்ளது. மூன்றாவது தேசிய குடும்ப நல ஆய்வானது "அமைப்பு ரீதியிலான பிரிவுகளில்" கேரளத்தை முதல் இடத்திற்குத் தரப்படுகிறது. மருத்துவ வசதிகள் உடைய இடங்களில் 100% குழந்தைப் பிறப்புகள் நடைபெறுகின்றன.[396] ஆயுர்வேதம்,[397]:13 சித்தா மற்றும் அழியும் நிலையில் உள்ள மற்றும் இம்மாநிலத்தில் மட்டுமே காணப்படும் பாரம்பரிய மருத்துவ முறைகளில் களரி, மர்ம சிகிச்சை மற்றும் விட வைத்தியம் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. கணியர் போன்ற சில சமூகங்கள் இயற்கை மருத்துவத்திற்காக அறியப்படுகின்றன.[398] ஆரிய வைத்திய சாலையானது 1902ஆம் ஆண்டு மலப்புறத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கோட்டக்கல்லில் வைத்தியரத்னம் பி. எஸ். வாரியரால் நிறுவப்பட்டது. மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய ஆயுர்வேத மருத்துவ இணையம் மற்றும் மருத்துவ மையம் இதுவாகும்.[399][400][401] உலகின் மிகப்பெரிய ஆயுர்வேத மருத்துவப் பெயர்களில் இதுவும் ஒன்றாகும்.[399][400][401]
2014இல் கேரளமானது ஏழை மக்களுக்கு இலவசப் புற்றுநோய் மருத்துவத்தை வழங்கும் முதல் மாநிலமாக உருவானது. சுக்ருதம் என்ற திட்டத்தின் கீழ் இது வழங்கப்பட்டது.[402] புற்றுநோய்கள், நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்கள் அதிகப்படியாகக் கேரள மக்களிடம் காணப்படுகின்றன.[403] ஏப்பிரல் 2016இல் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையானது புற்றுநோய்க்காக 2,50,000 பேர் சிகிச்சை எடுத்துக் கொண்டதைக் குறிப்பிட்டு இருந்தது. இப்பகுதியின் மருத்துவமனைகளில் ஆண்டு தோறும் சுமார் 150 - 200 நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆண்டு தோறும் சுமார் 42,000 புற்றுநோய் பாதிப்புகள் குறிப்பிடப்படுகின்றன. இது குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஏனெனில், தனியார் மருத்துவமனைகள் தங்களது எண்ணிக்கைகளைக் குறிப்பிடுவதில்லை. சிறுநீரகக் கொடைகளுக்கான நீண்ட காத்திருப்புப் பட்டியல்களானவை மனிதச் சிறுநீரகங்களின் சட்டத்திற்குப் புறம்பான வணிகத்தை ஊக்குவித்துள்ளன. இந்தியாவின் சிறுநீரகக் கூட்டமைப்பு நிறுவப்படுவதற்கு இது காரணமாகியுள்ளது. பொருளாதார ரீதியாக அனுகூலமற்ற நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆதரிப்பதை இது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.[404] 2017-18இல் மருத்துவ சேவைகள் துறையின் கீழ் 6,691 நவீன மருத்துவ அமைப்புகள் உள்லன. இதன் மொத்த படுக்கை எண்ணிக்கை 37,843 ஆகும். இதில் 15,780 படுக்கைகள் கிராமப்புறப் பகுதிகளிலும், 22,063 படுக்கைகள் நகர்ப்புறப் பகுதிகளிலும் உள்ளனர்.[405]
கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழி மலையாளமாகும். இந்தியாவின் ஆறு செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும்.[407] கேரளா முழுவதும் குறிப்பிடத்தக்க அளவுக்குத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். முதன்மையாக இவர்கள் இடுக்கி மாவட்டம் மற்றும் பாலக்காடு மாவட்டத்தில் இந்த இரு மாவட்டங்களின் மக்கள் தொகையில் முறையே 17.48% மற்றும் 4.8% ஆக உள்ளனர்.[408] காசர்கோடு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளில் துளு மற்றும் கன்னடம் ஆகியவையும் முதன்மையாகப் பேசப்படுகின்றன. இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் முறையே 8.77% மற்றும் 4.23% சதவீதமாக இவர்கள் உள்ளனர்.[408][409]
மாநிலம் முழுவதும் இந்து, முசுலிம் மற்றும் கிறித்தவர்களின் ஒரு குறிப்பிடத்தக்க மக்கள் தொகையுடன் கேரளமானது பல சமயங்களைக் கொண்டுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவிலும் மிக வேறுபட்ட சமயங்களை உடைய மாநிலங்களில் ஒன்றாகக் கேரளாமானது பொதுவாகக் கருதப்படுகிறது.[411][412] கேரளத்தில் மிகப் பரவலாகப் பின்பற்றப்படும் நம்பிக்கையாக இந்து சமயம் உள்ளது. குறிப்பிடத்தக்க அளவுக்கு முசுலிம் மற்றும் கிறித்தவ சிறுபான்மையினரும் இங்கு உள்ளனர். எஞ்சிய இந்தியாவுடன் ஒப்பிடும் போது கேரளமானது ஒப்பீட்டளவில் மிகக் குறைவான சமயச் சண்டைகளையே கண்டுள்ளது.[413] 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரள மக்களில் 54.7% பேர் இந்துக்கள், 26.6% பேர் முசுலிம்கள், 18.4% கிறித்தவர்கள் மற்றும் எஞ்சிய 0.3% பேர் பிற சமயத்தைப் பின்பற்றுகின்றனர் அல்லது எந்த சமயத்தையும் பின்பற்றாதவர்களாக உள்ளனர்.[414] மலப்புறம் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும் இந்துக்கள் மிகப் பெரிய சமயக் குழுவாக உள்ளனர். மலப்புறத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.[415] இந்தியாவில் மிக அதிக அளவிலான கிறித்தவ மக்கள் தொகையைக் கேரளமானது கொண்டுள்ளது.[416] 2016ஆம் ஆண்டு கணக்கின் படி இந்துக்கள், முசுலிம்கள், கிறித்தவர்கள் மற்றும் பிறர் மாநிலத்தின் மொத்த குழந்தைப் பிறப்புகளில் முறையே 41.9%, 42.6%, 15.4% மற்றும் 0.2% ஆகியவற்றைக் கொண்டுள்ளனர்.[417]
இசுலாமானது கேரளத்திற்கு பெரிய இந்தியப் பெருங்கடல் விளிம்பின் ஒரு பகுதியாக வந்தது. மத்திய கிழக்கைச் சேர்ந்த மசாலா மற்றும் பட்டு வணிகர்களின் மூலம் பரவியது. பொ. ஊ. ஏழாம் நூற்றாண்டிலேயே கூட கேரளாவுக்கு இசுலாமானது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சாத்தியத்தை வரலாற்றாளர்கள் மறுக்கவில்லை.[418][419] சேரமான் பெருமாள் தாஜுதீன் என்ற ஒரு மன்னன் இருந்ததும் குறிப்பிடப்படுகிறது. தொன்மவியல் இந்து மன்னனான இவன் அறபுத் தீபகற்பத்திற்குச் சென்று முகம்மது நபியைச் சந்தித்து இசுலாமுக்கு மதம் மாறினார் என்று குறிப்பிடப்படுகிறது.[420][421][422] கேரள முசுலிம்கள் பொதுவாக மாப்பிளமார்கள் என்று குறிப்பிடப்படுகின்றனர். கேரளத்தின் முசுலிம் மக்கள் தொகையை அமைக்கும் பல சமூகங்களில் மாப்பிளமார்களும் ஒருவராவார்.[423][424] சேரமான் பெருமாள் தொன்மக் கதைகளின் படி முதல் இந்திய மசூதியானது கொடுங்கல்லூரில் சேரர்களின் கடைசி ஆட்சியாளரின் (சேரமான் பெருமாள்) ஆணையுடன் பொ. ஊ. 624இல் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் முகம்மது நபியின் (அண். 570–632) வாழ்நாளிலேயே இசுலாமிற்கு மதம் மாறினார்.[425][426][95][427]
பண்டைய கிறித்தவப் பாரம்பரியமானது இயேசு கிறித்துவின் திருத்தூதர்களில் ஒருவரான தோமாவின் வருகையுடன் பொ. ஊ. 52இல் கேரளத்தின் கடற்கரைகளை கிறித்தவமானது அடைந்தது என்று குறிப்பிடுகிறது.[82][428][429][430] சிரோ-மலபார் கத்தோலிக்கர்,[431] சிரோ-மலங்கரா கத்தோலிக்கர்,[432] சாகோபிய சிரிய கிறித்தவ திருச்சபை,[433] மர் தோமா சிரிய திருச்சபை,[434] மலங்கரா மரபுவழி சிரிய திருச்சபை[435] மற்றும் தென்னிந்தியத் திருச்சபையின் சிரிய ஆங்கிலிகர்கள்,[436] மற்றும் பெந்தக்கோசுதல் புனித தோமா கிறித்தவர்கள்[437] ஆகியோரை உள்ளடக்கியதாக புனித தோமா கிறித்தவர்கள் உள்ளனர். 16ஆம் நூற்றாண்டில் போத்துக்கீசிய பத்ரோதோவின் மத பரப்புரை அருமுயற்சிகளின் விளைவாக கேரளத்தில் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தொடக்கம் ஆரம்பித்தது.[438][439][440] காலனியக் குடியிருப்பாளர்களுடன் நூற்றாண்டுகளாகக் கலந்ததன் விளைவாக கேரளத்தில் ஐரோப்பிய மற்றும் இந்தியப் பெற்றோர் அல்லது மூதாதையர்களைக் கொண்ட ஆங்கிலோ இந்தியர்களின் சமூகமானது உள்ளது. இவர்கள் போத்துக்கீசர், டச்சு, பிரெஞ்சு, பிரித்தானிய மற்றும் பிற ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் மிக அதிக மக்கள் தொகையுடைய கிறித்தவர்களைக் கேரளமானது கொண்டுள்ளது.[441]
மன்னன் சாலமோனின் காலத்தின் போது பொ. ஊ. மு. 10ஆம் நூற்றாண்டில் யூதமானது கேரளத்தை அடைந்தது.[442] இவர்கள் கொச்சி யூதர்கள் அல்லது மலபார் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியாவில் உள்ள யூதர்களின் மிகப் பழமையான குழு இவர்கள் ஆவர்.[78][443] 20ஆம் நூற்றாண்டு வரை கேரளத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு யூத சமூகமானது வாழ்ந்து வந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இசுரேலுக்கு இடம் பெயர்ந்தனர்.[444] கொச்சியிலுள்ள பரதேசி யூத தொழுகைக் கூடமானது பொது நலவாய நாடுகளில் உள்ளதிலேயே மிகப் பழமையான யூத தொழுகைக் கூடம் ஆகும்.[445] சைன சமயமானது வயநாடு மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க நம்பிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.[446][447]
பௌத்தமானது அசோகரின் காலத்தின் போது பிரபலமானதாக இருந்தது.[448] ஆனால், பொ. ஊ. 12ஆம் நூற்றாண்டு வாக்கில் மறைந்து போனது.[449]
கேரள வானியல் மற்றும் கணிதவியல் பள்ளியானது 14ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் செழித்து இருந்தது. வானியல் வினாக்களுக்குத் தீர்வு காணும் முயற்சியில் கேரளமானது தனித்து இயங்கி முக்கோணவியல் செயல்பாடுகளின் தொடர் விரிவு உள்ளிட்ட ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முக்கியமான கணிதவியல் கோட்பாடுகளை உருவாக்கியது.[450][451] 19ஆம் நூற்றாண்டின் தொடக்க கால தசாப்தங்களில் பொது மக்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காக திருச்சபை மதப் பரப்புரை சமூகத்தின் முயற்சிகளால் கேரளத்தின் நவீன கல்வி மாற்றமானது தூண்டப்பட்டது.[452][453][454][455][456] 1854இன் உட்ஸ் அறிக்கையின் பரிந்துரைகளைத் தொடர்ந்து திருவாங்கூர் மற்றும் கொச்சி வேள் பகுதி அரசுகள் முதன்மையாக சாதிகள் மற்றும் சமூகங்களை அடிப்படையாகக் கொண்ட பொதுக் கல்வியைத் தொடங்கின. மேலும், தனியார் நபர்களை ஈர்ப்பதற்காக நிதியுதவி அளிக்கும் ஓர் அமைப்பை அறிமுகப்படுத்தின.[457] மாநிலத்தில் சமூக ரீதியாக பாரபட்சமாய் நடத்தப்படும் சாதிகளுக்கு உதவும் வைகுண்ட சுவாமி, நாராயணகுரு, அய்யன்காளி மற்றும் குரியாக்கோஸ் எலியாஸ் சாவறா போன்ற தலைவர்களின் முயற்சிகளானவை கேரளத்தில் பொதுக் கல்வியின் மேற்கொண்ட மேம்பாட்டுக்கு வழி வகுத்தது. இதற்கு நாயர் சேவை சமூகம், சிறீ நாராயண அமைப்பு, முசுலிம் கல்வி சமூகம், முசுலிம் மகாசன சபா, (நம்பூதிரிகளின்) யோக சேம சபா மற்றும் கிறித்தவ திருச்சபைகளின் கூட்டமைப்பு போன்ற சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளின் உதவியும் பயன்படுத்தப்பட்டது.[457]
அந்நேரத்தில் நடைமுறைப் பயன்பாட்டுக்குத் தகுந்த எழுத்தறி வீதமானது வெறும் 90%ஆகத் தான் இருந்த போதிலும் 1991இல் கேரளமானது முழுவதுமாக எழுத்தறிவு பெற்றதாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மாநிலமாக உருவானது.[458] 2006-2007இல் இந்தியாவின் 21 முக்கியமான மாநிலங்களின் கல்வி மேம்பாட்டுச் சுட்டெண்ணில் இம்மாநிலமானது முதலிடத்தைப் பிடித்தது.[459] 2007ஆம் ஆண்டில் தொடக்கக் கல்வியில் மாணவர்களின் சேர்க்கையானது கிட்டத்தட்ட 100%ஆக இருந்தது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல் இல்லாமல் கல்வி வாய்ப்பானது பாலினங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பகுதிகள் ஆகியவற்றுக்கு இடையே கிட்டத்தட்ட சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.[460] 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி கேரளமானது 93.9% எழுத்தறிவு பெற்றுள்ளது. இதனுடன் ஒப்பிடும் போது தேசிய எழுத்தறிவு வீதமானது 74.0% ஆகும்.[365] சனவரி 2016இல் இதன் அதுல்யம் கல்வித் திட்டத்தின் வழியாக 100% தொடக்கக் கல்வியை சாதித்த முதல் இந்திய மாநிலமாகக் கேரளம் உருவானது.[461]
மாநிலத்தின் பள்ளிகளில் உள்ள கல்வி அமைப்பானது தொடக்கத்தில் உள்ள பத்தாண்டு காலக் கல்வியைக் குறிப்பிட்டுள்ளது. இது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கீழ் தொடக்கம், மேல் தொடக்கம் மற்றும் உயர் நிலைப் பள்ளி. இது 4+3+3 என்று அறியப்படுகிறது. ஒவ்வொரு நிலையின் ஆண்டுகளின் எண்ணிக்கையை இது குறிப்பிடுகிறது.[460] பள்ளியின் முதல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் பொதுவாக மேல்நிலை பள்ளியில் மூன்று முதன்மையான பாடத் திட்டங்களான தாராளக் கலை, வாணிபம் அல்லது அறிவியல் ஆகிய ஒன்றில் சேர்கின்றனர்.[462] பெரும்பான்மையான பொதுப் பள்ளிகள் பொதுத் தேர்வுக்கான கேரள வாரியத்துடன் இணைந்தவையாகும்.[463] மேல் நிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவனம் ஆகியவை பிற கல்வி வாரியங்கள் ஆகும்.[462]
கோட்டயத்தில் உள்ள சிஎம்எஸ் கல்லூரியானது 1817இல் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் மேற்குலக பாணியிலான கல்லூரி மற்றும் மிகப் பழமையான கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். தலசேரியில் உள்ள அரசு பிரென்னன் கல்லூரியானது 1862இல் கொடைப் பண்புள்ள செல்வந்தர் எட்வர்டு பிரென்னனால் நிறுவப்பட்டது. 1866இல் பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் இவை குறிப்பிடத்தக்கவை ஆகும். கேரள அரசின் கல்வித் துறையின் கீழ், அரசால் உடைமையாகக் கொள்ளப்பட்ட சிறப்பு நோக்கமுடைய நிறுவனம் கைட் கேரளா ஆகும்.[464][465] மாநிலத்தில் பள்ளிகளுக்கு தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களையுடைய கல்விக்கு ஆதரவளிப்பதற்காக இது உருவாக்கப்பட்டது. ஆகத்து 2017இல் அதன் செயல்பாடுகளின் அளவை விரிவாக்குவதற்காக அப்போது ஐடி@பள்ளி திட்டமானது கைட் என்று மாற்றப்பட்டது.[466][467] அனைத்து பொதுப் பள்ளிகளிலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களையுடைய கல்வியுடன் கூடிய உயர் தொழில் நுட்ப வகுப்பறைகளைக் கொண்ட முதல் இந்திய மாநிலம் கேரளமாகும்.[468][469] 2019இல் நிதி ஆயோக்கால் பதிப்பிக்கப்பட்ட பள்ளிக் கல்வித் தரச் சுட்டெண்ணில் கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்தது.[470] எழிமலையில் அமைந்துள்ள இந்தியக் கடற்படைக் கல்விக் கழகமானது ஆசியாவிலேயே மிகப் பெரிய மற்றும் உலகின் மூன்றாவது மிகப் பெரிய கடற்படைக் கல்விப் பயிற்சி நிறுவனமாக உள்ளது.[471][472]
கேரளப் பண்பாடானது இயற்கையாக வேறுபட்ட கூறுகளைக் கொண்ட மற்றும் உலக நாடுகளின் பண்பாட்டுத் தாக்கம் கொண்டதாக உள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஓர் இன்றியமையாத பகுதி இதுவாகும்.[31] ஆரிய, திராவிட, அரேபிய மற்றும் ஐரோப்பியப் பண்பாடுகளின் ஒரு கலவை இதுவாகும்.[473] ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் இந்தியாவைத் தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து வந்த தாக்கங்களின் கீழ் இது வளர்ச்சி அடைந்துள்ளது.[474] இதன் பழமை மற்றும் மலையாளிகளால் நீடிக்க வைக்கப்பட்டுள்ள உயிரோட்டமுள்ள தொடர்ச்சி ஆகியவற்றால் இது வரையறுக்கப்படுகிறது.[475] அண்டை மற்றும் அயல்நாட்டுப் பண்பாடுகளுடன் நூற்றாண்டுகளான தொடர்பின் வழியாக இது கவனத்துடன் உருவாக்கப்பட்டதாக மாறியுள்ளது.[476] எனினும், எஞ்சிய நாட்டில் இருந்து புவியியல் ரீதியாகக் கேரளமானது தனித்துள்ளதானது வாழ்க்கை முறை, கலை, கட்டடக்கலை, மொழி, இலக்கியம் மற்றும் சமூக அமைப்புகளின் ஒரு தனித்துவமான முன்னேற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.[31] இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10,000க்கும் மேற்பட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.[477] கொல்ல ஆண்டானது வேளாண்மைத் திட்டமிடல் மற்றும் சமயச் செயல்பாடுகளில் பொதுவான பயன்பாட்டைக் கொண்டுள்ளது.[478] கேரளத்தில் பொ. ஊ. 825இல் தொடங்கப்பட்ட ஒரு சூரிய விண்மீன் நாட்காட்டி இதுவாகும்.[479] இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான மலையாளம் கேரளத்தின் ஆட்சி மொழியாகும்.[480] 12க்கும் மேற்பட்ட பிற அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன.[406] இந்தியாவில் மது நுகர்வு மிக அதிகமாகக் கேரளத்தில் தான் உள்ளது.[481]
ஆண்டில் குறிப்பிட்ட நாட்களில் கேரளத்திலுள்ள கோயில்களில் பெரும்பாலானவை விழாக்களை நடத்துகின்றன.[482] இத்தகைய விழாக்களின் ஒரு பொதுவான பண்பானது கடவுள் சிலையைக் கடலில் முங்கி எடுத்ததற்குப் பிறகு விழாவின் கடைசி நாளில் கீழே இறக்கப்படும் ஒரு புனிதக் கொடியை ஏற்றுவதாகும்.[483] சில விழாக்கள் பூரங்களை உள்ளடக்கியுள்ளன. இதில் மிகவும் நன்றாக அறியப்பட்ட ஒன்றானது திருச்சூர் பூரம் ஆகும்.[484] திருச்சூர் பூரத்தின் முதன்மையான ஈர்ப்புகளாக "யானைகள், வாண வேடிக்கைகள் மற்றும் பெரும் மக்கள் கூட்டங்கள்" உள்ளன.[485] மகரவிளக்கு,[486] சினக்கத்தூர் பூரம், ஆட்டுக்கல் பொங்கலா மற்றும் நென்மாரா வல்லங்கி வேலா[487] ஆகியவை பிற அறியப்பட்ட விழாக்கள் ஆகும். இவை தவிர உத்சவங்கள் என்று உள்ளூர் அளவில் அறியப்படும் விழாக்கள் பெரும்பாலும் ஆண்டு தோறும் பல கோயில்களால் நடத்தப்படுகின்றன. யானைகளைப் பயன்படுத்த இயன்ற கோயில்கள் குறைந்தது ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையை விழாக்களின் ஒரு பகுதியாகப் பொதுவாகப் பயன்படுத்துவர். இந்த யானையின் முதுகில் கோயிலிலுள்ள சிலையானது எடுக்கப்பட்டு ஊர்வலமாக நாட்டுப்புறத்தைச் சுற்றிக் கொண்டு வரப்படும். இந்த ஊர்வலமானது கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு வருகை புரியும் போது மக்கள் பொதுவாக அரிசி, தேங்காய்கள் மற்றும் பிற காணிக்கைகளைப் பொதுவாக அளிப்பார்.[488] பஞ்சரி மேளம் அல்லது பஞ்ச வாத்தியம் போன்ற பாரம்பரிய இசைகளை ஊர்வலங்கள் பொதுவாகக் கொண்டுள்ளன.[489] இம்மாநிலத்தின் முசுலிம் சமூகத்தால் ஈகைத் திருநாள் மற்றும் தியாகத் திருநாள் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. அதே நேரத்தில், நத்தார் மற்றும் உயிர்ப்பு ஞாயிறு போன்ற பண்டிகைகள் கிறித்தவர்களால் கொண்டாடப்படுகின்றன.[14] கேரள மக்களால் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா ஓணம் ஆகும். மாநிலத்தின் வேளாண்மை வரலாற்றை இது நினைவுபடுத்துகிறது.[490][491] இது கேரளத்தின் உள்ளூர் விழாவாகும்.[492] உத்தரதம் எனும் ஓணத் தொடக்கத்திலிருந்து நான்காவது ஓணம் நாள் வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இதற்கு அளிக்கப்படுகிறது.[493] ஓணமானது மலையாள மாதமான சிங்கமில் (ஆகத்து-செப்தெம்பர்) வருகிறது.[494] மன்னன் மகாபலி சக்கரவர்த்தி திரும்பி வருவதை நினைவுபடுத்த இது கொண்டாடப்படுகிறது.[495] ஓணத்தின் மொத்த காலம் 10 நாட்கள் ஆகும். கேரளா முழுவதும் இது கொண்டாடப்படுகிறது. வள்ளங்களி,[496] புலிக்களி,[497] பூக்களம்,[498] தும்பி துள்ளல்[499] மற்றும் ஓணவில்லு போன்ற பண்பாட்டுக் கூறுகளுடன் கொண்டாடப்படும் விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.[500]
கேரளமானது ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பொதுக் காட்சி நிகழ்ச்சிக் கலைகளுக்குத் தாயகமாகும். ஐந்து பாரம்பரிய நடன வடிவங்களான கதகளி, மோகினியாட்டம், கூடியாட்டம், துள்ளல் மற்றும் கிருஷ்ணனாட்டம் ஆகியவை இதில் அடங்கும். அரச குடும்பங்களின் புரவலத் தன்மைக்குக் கீழ் பாரம்பரிய காலத்தின் போது கோயில் அரங்குகளில் இவை தொடங்கி வளர்ச்சி அடைந்துள்ளன.[501] கேரள நடனம், திரையாட்டம்,[502] கலியாட்டம், தெய்யம், கூத்து மற்றும் படயணி ஆகியவை இப்பகுதியின் கோயில் பண்பாட்டுடன் தொடர்புடைய பிற நடன வடிவங்களாகும்.[503] ஒப்பன மற்றும் துபுமுத்து ஆகியவை மாநிலத்தின் முசுலிம்கள் மத்தியில் பிரபலமாக உள்ள சில பாரம்பரிய நடன வடிவங்கள் ஆகும்.[504] சிரிய கிறித்தவர்கள் மத்தியில் மார்க்கங்களி மற்றும் பரிச்சமுட்டுக்கள் ஆகியவை பிரபலமாக உள்ளன. இலத்தீன் கிறித்தவர்கள் மத்தியில் சாவிட்டு நாடகமானது பிரபலமானதாக உள்ளது.[505][506] கேரளத்தின் கோயில் பண்பாட்டுடன் தொடர்புடைய பாரம்பரிய பொதுக் காட்சி நிகழ்ச்சிக் கலைகளிலிருந்து அது பெற்ற பங்களிப்புகளானவை கேரளத்தில் பாரம்பரிய இசையின் வளர்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகின்றன.[507] சோபன சங்கீதம் எனப்படும் உள்ளூர்ப் பாரம்பரிய இசை வடிவத்தின் வளர்ச்சியானது கேரளத்தின் கலைகளுக்குக் கோயில் பண்பாடானது வழங்கிய செழிப்பான பங்களிப்பை விளக்குகிறது.[507] கேரள பாரம்பரிய இசை மீது கருநாடக இசையானது ஆதிக்கம் கொண்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இவ்வகை இசையை சுவாதித் திருநாள் ராம வர்மா பிரபலப்படுத்தியதன் விளைவு இதுவாகும்.[476] சொப்பனம் என்று அறியப்படும் இராகத்தை அடிப்படையாகக் கொண்ட இசையானது கதக்களி நடனத்துடன் இசைக்கப்படுகிறது.[508] பாண்டி மற்றும் பஞ்சரி வகைகளை உள்ளடக்கிய மேளமானது இசையின் ஒரு அதிகப் படியான தாள பாணி வடிவமாகும்.[509] செண்டையைப் பயன்படுத்தி சேத்திரத்தை மையமாகக் கொண்ட விழாக்களில் இது நடத்தப்படுகிறது. பஞ்சவாத்தியம் என்பது ஒரு தாள இசைக் குழுவாகும். இதில் கலைஞர்கள் ஐந்து வகையான தாள இசைக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.[509] கேரளத்தின் காட்சிக் கலைகளானவை பாரம்பரிய சுவரோவியங்கள் முதல் ரவி வர்மாவின் வேலைப்பாடுகள் வரை விரிவடைந்துள்ளன. மாநிலத்தில் மிகப் புகழ் பெற்ற ஓவியர் ரவி வர்மா ஆவார்.[507] பல்வேறு வகைப்பட்ட கருத்துருக்களுடன் தொடர்புடைய நாட்டுப்புறப் பாடல்களின் செழிப்பான தொகுப்புகளைக் கேரளத்தின் பெரும்பாலான சாதிகளும், சமூகங்களும் கொண்டுள்ளன. வடக்கன் பாட்டு, தெக்கன் பாட்டு, வஞ்சிப் பாட்டுக்கள் (படகுப் பாடல்கள்), மாப்பிளா பாடல்கள் (முசுலிம் பாடல்கள்) மற்றும் பள்ளிப் பாட்டுக்கள் (கிறித்தவ தேவாலயப் பாட்டுகள்) ஆகியவை இவற்றில் ஒரு சிலவாகும்.[510]
சமூகக் கருத்துக்களை முன் வைத்ததன் மூலம் இந்திய திரைத்துறையில் மலையாளத் திரைப்படங்களானவை தங்களுக்கென ஒரு தனி இடத்தைச் செதுக்கியுள்ளன.[511][512] அடூர் கோபாலகிருஷ்ணன், மங்கடா இரவி வர்மா, அரவிந்தன், பரதன், பி. பத்மராசன், எம். டி. வாசுதேவன் நாயர், கே. ஜி. ஜார்ஜ், பிரியதர்சன், ஜான் ஆபிரகாம், இராமு கரியத், கே. எஸ். சேதுமாதவன், அ. வின்சென்ட் மற்றும் ஷாஜி என். கருண் போன்ற கேரளத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் இந்திய இணை திரைப்படங்கள் எனும் இந்தி சினிமாவுக்கு மாற்றான திரைப்படங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர். மோகன்லால், மம்மூட்டி, சத்யன், பிரேம் நசீர், மது, ஷீலா, சாரதா, மிஸ் குமாரி, செயன், அடூர் பாசி, சீமா, பரத் கோபி, திலகன், விசயராகவன், கலாபவன் மணி, இந்திரன்ஸ், சோபனா, நிவின் பாலி, சிறீனிவாசன், ஊர்வசி, மஞ்சு வாரியர், சுரேஷ் கோபி, ஜெயராம், முரளி, சங்கராடி, காவ்யா மாதவன், பாவனா, பிரித்விராஜ், பார்வதி, ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஒடுவில் உன்னிக்கிருட்டிணன், ஜெகதே சிறீகுமார், நெடுமுடி வேணு, கே. பி. ஏ. சி. இலலிதா, இன்னொசென்ட் மற்றும் பகத் பாசில் போன்ற பல நடிகர்களைக் கேரளமானது கொடுத்துள்ளது. 720 திரைப்படங்களுக்கும் மேல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்ததற்காகக் காலம் சென்ற மலையாள நடிகர் பிரேம் நசீர் உலக சாதனையை வைத்துள்ளார்.[513] 1980களில் இருந்து மோகன்லால் மற்றும் மம்மூட்டி மலையாளத் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். மோகன்லால் ஐந்து தேசிய விருதுகளையும் (நான்கு நடிப்புக்காக), மம்மூட்டி மூன்று தேசிய விருதுகளையும் நடிப்புக்காக வென்றுள்ளனர்.[514] கே. ஜே. யேசுதாஸ், சித்ரா, எம். ஜி. ஸ்ரீகுமார், வயலார் இராமவர்மா, வி. மதுசூதனன் நாயர், எம். டி. வாசுதேவன் நாயர் மற்றும் ஓ. என். வி. குறுப்பு போன்ற மேலும் சில குறிப்பிடத்தக்க நபர்களை மலையாள திரைத்துறையானது கொடுத்துள்ளது.[515] கடைசியாகக் குறிப்பிடப்பட்ட இருவர் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞானபீட விருதை வென்றவர்கள் ஆவர்.[516] கேரளத்தைச் சேர்ந்தவரான ரெசுல் பூக்குட்டி இசைக் கலவைக்கான அகாதமி விருதை வென்ற இரண்டாவது இந்தியரானார். சிலம்டாக் மில்லியனயர் படத்துக்காக இவர் இதை வென்றார். 2018ஆம் ஆண்டின் நிலவரப் படி, மலையாளத் திரைத்துறையானது சிறந்த நடிகருக்காக 14 விருதுகள், சிறந்த நடிகைக்காக 6 விருதுகள், சிறந்த திரைப்படங்களுக்காக 11 விருதுகள் மற்றும் சிறந்த இயக்குனருக்காக 13 விருதுகளை இந்தியாவின் தேசிய திரைப்பட விழாக்களில் வென்றுள்ளது.[517]
சங்க இலக்கியமானது மலையாளத்தின் பண்டைக்கால மூதாதையராகக் கருதப்படலாம்.[518] மலையாள இலக்கியமானது பழைய மலையாள காலத்திலிருந்து (பொ. ஊ. 9ஆம்-13ஆம் நூற்றாண்டு) தொடங்குகிறது. இக்காலமானது 14ஆம் நூற்றாண்டு நிரனம் கவிஞர்கள் (மாதவப் பனிக்கர், சங்கரப் பனிக்கர் மற்றும் இராம பனிக்கர்)[519][520] மற்றும் 16ஆம் நூற்றாண்டுக் கவிஞரான துஞ்சத்து எழுத்தச்சன் போன்ற குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களை உள்ளடக்கியதாகும். இவரின் வேலைப்பாடுகளானவை நவீன மலையாள மொழி மற்றும் அதன் கவிதை ஆகிய இரண்டின் தொடக்கத்தையும் குறிக்கின்றன.[521] மலையாள நாட்காட்டியின் முதல் 600 ஆண்டுகளுக்கு இலக்கியமானது முதன்மையாக வாய் வழிப் பாட்டுக்களான வடக்கு மலபாரின் வடக்கன் பாட்டு மற்றும் தெற்கு திருவாங்கூரின் தெக்கன் பாட்டு போன்றவற்றையே முதன்மையாகக் கொண்டிருந்தது.[522] 2013இல் "இந்தியாவின் செம்மொழிகளில்" ஒன்றாக அறிவிக்கப்பட்ட மலையாளமானது[523] அதன் தற்போதைய வடிவத்தை பொ. ஊ. 15ஆம் மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் செருசேரி நம்பூதிரி,[524][525] துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன்,[525] மற்றும் பூந்தானம் நம்பூதிரி,[525][526] போன்ற கவிஞர்களின் தாக்கத்தாலேயே முதன்மையாக வளர்ச்சி அடைந்தது.[525][527] பொ. ஊ. 17ஆம்/18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் உன்னயி வாரியர்[528] எனும் கவிஞர் மற்றும் பொ. ஊ. 18ஆஅம் நூற்றாண்டுக் கவிஞரான குஞ்சன் நம்பியார் ஆகியோரும் அதன் முதிர்ச்சி அடைந்ததற்கு முந்தைய வடிவமுடைய நவீன மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.[525] பொன்னானி ஆறு என்றும் அறியப்படும் பாரதப்புழா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளானவை நவீன மலையாள இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை ஆற்றியுள்ளன.[529]
பரேமக்கல் தோம கதனார் மற்றும் கேரள வர்மா வல்லிய கோயி தம்புரான் ஆகியோர் மலையாள வசனத்திற்கு அவர்களின் பங்களிப்புக்காகக் குறிப்பிடப்படுகின்றனர்.[530][531][532] "முக்கவிஞர்களான" (கவித்ரயம்) குமரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன் மற்றும் உள்ளூர் எஸ். பரமேசுவர அய்யர் ஆகியோர் தொல்வழக்கான பொய்த் தருக்கம் மற்றும் மீஇயற்பியல் ஆகியவற்றிலிருந்து கேரளக் கவிதையை ஒரு அதிகப்படியான தன்னுணர்ச்சிப் பாடல் வரிக்கு நகர்த்தியதற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.[533][534][535] மொயின்குட்டி வைத்தியர் மற்றும் புலிக்கோட்டில் ஐதர் போன்ற கவிஞர்கள் மாப்பிளா பாடல்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அளித்துள்ளனர். அரபி மலையாள இலக்கியத்தின் ஒரு வகைப் பாடல்கள் இதுவாகும்.[536][537] எந்த ஓர் இந்திய மொழியிலும் எழுதப்பட்ட முதல் பயண நூல் மலையாள நூலானது வர்த்தமானபுஸ்தகம் ஆகும். இதை 1785இல் பரேமக்கல் கதனார் எழுதினார்.[538][539] வசன இலக்கியம், மலையாள பத்திரிகைத் துறை மற்றும் விமர்சனம் ஆகியவை 18ஆம் நூற்றாண்டின் பிந்தைய பாதிக்குப் பிறகு தொடங்கின.[538] சம கால மலையாள இலக்கியமானது சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வாழ்க்கைச் சூழலை அணுகுகிறது. நவீன இலக்கியத்தின் நடத்தைப் பாங்கானது பெரும்பாலும் அரசியல் புரட்சிக் கருத்துகளை நோக்கியதாக உள்ளது.[540] மலையாள இலக்கியமானது 6 ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளது. எந்த ஒரு திராவிட மொழியிலும் இரண்டாவது மிக அதிக, எந்த ஓர் இந்திய மொழியிலும் மூன்றாவது மிக அதிகம் இதுவாகும்.[541][542] 20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஞானபீட விருது வென்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களான ஜி. சங்கரா குறுப்பு, எஸ். கே. பொற்றேக்காட்டு, தகழி சிவசங்கரப் பிள்ளை, எம். டி. வாசுதேவன் நாயர், ஓ. என். வி. குறுப்பு, மற்றும் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி ஆகியோர் நவீன மலையாள இலக்கியத்திற்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளனர்.[543][544][545][546][547] பிந்தைய காலத்தில் ஒ. வே. விஜயன், கமலா தாஸ், எம். முகுந்தன், அருந்ததி ராய், முகம்மது பஷீர் போன்ற எழுத்தாளர்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர்.[548][549][550][551]
கேரள சமையல் பாணியானது ஒரு பரவலான வேறுபட்ட சைவ மற்றும் அசைவ உணவுகளை உள்ளடக்கியுள்ளது. இவை மீன், கோழி மற்றும் மாமிசங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகின்றன. சமையல் தொடர்பான மசாலாப் பொருட்கள் கேரளத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அறுவடை செய்யப்படுகின்றன. கேரளத்தின் சமையல் பாணியின் இயற் பண்பாக இவை உள்ளன.[552] ஓர் ஆதிக்கம் மிக்க அடிப்படை உணவாக சோறு உள்ளது. நாளின் அனைத்து நேரங்களிலும் இது உண்ணப்படுகிறது.[553] கேரளத்தில் பெரும்பான்மையான காலை உணவுகளானவை அரிசியால் செய்யப்பட்டு ஒரு வடிவம் அல்லது மற்றொரு வடிவத்திலும் (இட்லி, தோசை, பிட்டு, பத்திரி, அப்பம் அல்லது இடியப்பம்), மரவள்ளிக் கிழங்கு உணவுகள் அல்லது பருப்புகளை அடிப்படையாகக் கொண்ட வடையாகத் தயாரிக்கப்படுகின்றன.[554] இவற்றுடன் சட்னி, கடலை, பாயாசம், பாசிப் பயறு அப்பளம், அப்பம், கோழிக் குழம்பு, மாட்டுக்கறி வறுவல், முட்டை மசாலா மற்றும் மீன் குழம்பு ஆகியவை சேர்த்து உண்ணப்படலாம்.[273] கேரளத்தில் உணவகங்களில் பரோட்டா மற்றும் பிரியாணியும் பொதுவாகக் காணப்படுகின்றன. ஓர் இன அடையாளமாகத் தலசேரி பிரியாணி பிரபலமானதாக உள்ளது. மதிய உணவுகளில் சோறும், குழம்பும், இரசம், புலிசேரி மற்றும் சாம்பாருடன் இணைத்து உண்ணப்படுகிறது.[555] சத்யா என்பது ஒரு சைவ உணவாகும். இது ஒரு வாழை இலையில் பரிமாறப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஒரு கோப்பைப் பாயாசம் உண்ணப்படுகிறது.[556] வாழைச் சீவல்கள், கருணைக் கிழங்கு சீவல்கள், மரவள்ளிக் கிழங்கு சீவல்கள், அச்சு முறுக்கு, உண்ணியப்பம் மற்றும் குழலப்பம் உள்ளிட்டவை பிரபலமான சிற்றுண்டிகளாக உள்ளன.[557][558][559] முத்துப்புள்ளி மீன், இறால்கள், கூனிறால் மற்றும் பிற ஓடுடைய உயிரினங்களின் உணவுகள் உள்ளிட்டவை கடல் உணவுகளில் சிறப்பானவையாக உள்ளன.[560] தலசேரி சமையல் பாணியானது வேறுபட்டதாக, பல தாக்கங்களின் ஒரு கூட்டிணைவாக உள்ளது.
யானைகள் மாநிலத்தின் பண்பாட்டில் ஓர் இன்றியமையாத பகுதியாக இருந்து வந்துள்ளன. கேரளத்தில் கிட்டத்தட்ட அனைத்து உள்ளூர் விழாக்களும் குறைந்தது ஒரு நன்றாக அலங்கரிக்கப்பட்ட யானையை உள்ளடக்கியிருக்கும். இந்தியாவில் மிக அதிக கொல்லைப்படுத்தப்பட்ட யானைகளின் எண்ணிக்கைக்கு (சுமார் 700 இந்திய யானைகள்) தாயகமாகக் கேரளம் உள்ளது. இவை கோயில்கள் மற்றும் தனிநபர்களாலும் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ளன.[561] இந்த யானைகள் முதன்மையாக ஊர்வலங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் விழாக்களுடன் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டு தோறும் மாநிலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இவ்விழாக்களின் போது கொல்லைப்படுத்தப்பட்ட யானைகளின் வேலைப்பழு குறித்து சில விலங்கு நல ஆர்வலர்கள் சில நேரங்களில் கவலை தெரிவித்துள்ளனர்.[477] மலையாள இலக்கியத்தில் "சகியாவின் (மேற்கு தொடர்ச்சி மலை) மகன்கள்" என்று யானைகள் குறிப்பிடப்படுகின்றன.[562] கேரளத்தின் மாநில விலங்கு யானையாகும். கேரள அரசின் சின்னத்தில் இது சிறப்பம்சமாக உள்ளது.[563]
ஊடகம், தொலைத்தொடர்புகள், ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளானவை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (டிராய்) ஒழுங்குபடுத்தப்படுகின்றன.[564] 2015-16இல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப நல ஆய்வு - 4 ஆனது கேரளமானது ஒரு மாநிலமாக இந்தியாவில் மிக அதிக ஊடக வெளிப்பாட்டை உடையதாகத் தரப்படுத்தியுள்ளது.[565] கேரளத்தில் டசன் கணக்கான செய்தித்தாள்கள் ஒன்பது முக்கியமான மொழிகளில் வெளி வருகின்றன.[566] ஆனால், இவை முதன்மையாக மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளி வருகின்றன.[567][568][569] மிகப் பரவலாக வாசிக்கப்படும் மலையாள மொழி செய்தித் தாள்கள் மலையாள மனோரமா, மாத்ருபூமி, தேசாபிமானி, மாத்யமம், கேரளகௌமுதி, மங்களம், சந்திரிகா, தீபிகா, ஜனயுகம், ஜன்மபூமி, சிறாஜ் மற்றும் சுப்ரபாதம் ஆகியவையாகும். முக்கியமான மலையாளப் பருவ இதழ்களில் மாத்ருபூமி அழ்ச்சப்பதிப்பு, வனிதா, இந்தியா டுடே மலையாளம், மாத்யமம் வீக்லி, கிரிகலக்சுமி, தனம், சித்ரபூமி மற்றும் பாசபோசினி ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மாநிலத்தில் மிக அதிகமாக வாசிக்கப்படும் ஆங்கில மொழிச் செய்தித்தாளாக தி இந்து உள்ளது. இதைத் தொடர்ந்து தி நியூ இந்தியன் எக்சுபிரசு அதிகமாக வாசிக்கப்படுகிறது.[570] தி டெக்கன் குரோனிக்கள், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிஎன்ஏ, தி எகனாமிக் டைம்ஸ் மற்றும் தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஆகியவை பிற அன்றாட செய்தித்தாள்கள் ஆகும்.
தூர்தர்ஷன் மலையாளமானது அரசால் நடத்தப்படும் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். பல அமைப்பு சேவை வழங்குநர்கள் மலையாளம், ஆங்கிலம், பிற இந்திய மொழி மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி அலைவரிசைகளை ஒரு கலவையாகக் கொடுக்கின்றனர். ஏசியாநெட், ஏசியாநெட் நியூஸ், ஏசியாநெட் பிளஸ், ஏசியாநெட் மூவீஸ், சூர்யா தொலைக்காட்சி, சூர்யா மூவீஸ், மழவில் மனோரமா, மனோரமா நியூஸ், கைரளி தொலைக்காட்சி, கைரளி நியூஸ், பிளவர்ஸ், மீடியா ஒன் டிவி, மாத்ருபூமி நியூஸ், கப்பா டிவி, அம்ருதா தொலைக்காட்சி, ரிப்போர்ட்டர் டிவி, ஜெய் ஹிந்த், சனம் டிவி, ஜீவன் டிவி, கேரளகௌமுதி மற்றும் சலோம் டிவி ஆகியவை சில பிரபலமான மலையாளத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகும். இந்தியாவில் கேரளமானது இரண்டாவது மிக அதிக இணைய ஊடுருவல் வீதத்தைக் கொண்டுள்ளது.[571] சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி சேவைகள் உள்ளிட்ட எண்ணிம ஊடகங்கள் மாநிலத்தில் தகவல் மற்றும் பொழுது போக்கின் ஒரு முதன்மையான ஆதாரமாக உள்ளன. செப்தெம்பர் 2008இல் கூகிள் செய்திகளின் மலையாளப் மதிப்பானது தொடங்கப்பட்டது.[572] மக்களின் அறிவியல் இயக்கமானது ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு மாநிலத்தில் வேரூன்றியுள்ளது. எழுத்தாளர்களின் ஒத்துழைப்புகள் போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையாகப் பொதுவானவையாக மாறியுள்ளன.[237][573] பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் ஐடியா லிமிடெட், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை முக்கியமான கைபேசி சேவை வழங்குநர்களாக உள்ளன.[574] மாநிலம் முழுவதும் அகண்ட அலைவரிசை இணையச் சேவைகள் பரவலாகக் கிடைக்கப் பெறுகின்றன. பிஎஸ்என்எல், ஏசியாநெட் சேட்டிலைட் கம்யூனிகேசன்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேசன், ஏர்டெல், வோடபோன் ஐடியா லிமிடெட், எம்டிஎஸ், ரெயில்வயர் மற்றும் விஎஸ்என்எல் ஆகியவை சில முக்கியமான இணையச் சேவை வழங்குநர்கள் ஆகும். டிராய் அறிக்கையின் படி சூன் 2018இல் கேரளத்தில் கம்பியில்லா தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கையானது சுமார் 4.31 கோடியாகும். கம்பியுடைய தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது 19 இலட்சம் ஆகும். இது 124.15 அளவுடைய தொலைபேசி அடர்த்திக்குக் காரணமாகிறது.[575] பல பிற மாநிலங்களைப் போல் தொலைபேசி ஊடுருவலைப் பொறுத்த வரையில் கேரளத்தில் நகர்ப்புற-கிராமப்புற வேறுபாடானது காணப்படுவதில்லை.[576]
21ஆம் நூற்றாண்டு வாக்கில் கேரளத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட அனைத்து உள்ளூர் விளையாட்டுகளும் அழிந்துவிட்டன அல்லது உள்ளூர் விழாக்களின் போது நடத்தப்படும் வெறும் ஒரு கலை வடிவமாக மாறிவிட்டன. இதில் பூரக்களி, படயணி, தளப்பந்துகலி, ஓணத்தல்லு, பரிச்சமுட்டுக்கலி, வெலக்கலி மற்றும் கிளித்தட்டுக்கலி ஆகியவை அடங்கும்.[577] எனினும், "உலகின் அனைத்து சண்டைக் கலைகளின் தாயாகக்" கருதப்படும் களரிப்பயிற்றானது இதில் விதி விலக்காகும். ஒரு பூர்வீகச் சண்டை விளையாட்டாக இன்றும் இது நடத்தப்படுகிறது.[578] கேரளத்தின் மற்றுமொரு பாரம்பரிய விளையாட்டு படகுப் போட்டியாகும். பாம்புப் படகுகளின் போட்டியை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.[577]
துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டம் மாநிலத்தில் பிரபலமானவையாக உருவாகியுள்ளன. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவக் காலத்தின் போது இரு விளையாட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. தீனு யோஃகானன், அபை குருவில்லா, சௌன்டகபோயில் ரிசுவான், சிறிசாந்த், சஞ்சு சாம்சன் மற்றும் பசில் தம்பி போன்ற துடுப்பாட்டக்காரர்கள் தேசியத் துடுப்பாட்ட அணியில் இடம் பெற்று இருந்துள்ளனர். கொச்சி இட்டசுக்கேர்சு எனும் கேரளத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட அணியானது இந்தியன் பிரீமியர் லீக்கின் நான்காவது பருவத்தில் விளையாண்டது. அதன் அணிகளுக்கு மத்தியில் ஒவ்வாத தன்மை காரணமாக அப்பருவத்திற்குப் பிறகு இந்த அணியானது கலைக்கப்பட்டது.[579][580] 207-18இல் ரஞ்சிக் கோப்பைத் துடுப்பாட்ட போட்டியில் சமீபத்தில் கேரளமானது நன்றாக விளையாடி இருந்தது. வரலாற்றில் முதல் முறையாக காலிறுதியை அடைந்தது.[577][581] மிகப் பரவலாக விளையாடப்படும் மற்றும் பார்க்கப்படும் விளையாட்டுக்களில் ஒன்றாக கால்பந்து உள்ளது. கிளப் மற்றும் மாவட்ட நிலைப் போட்டிகளுக்கு மாநிலத்தில் பெரும் ஆதரவு காணப்படுகிறது. இந்தியன் சூப்பர் லீக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்து அணியைக் கொச்சி நகரமானது கொண்டுள்ளது. நாட்டில் மிகப் பரவலாக ஆதரவு அளிக்கப்படும் அணிகளில் ஒன்றாக பிளாஸ்டர்ஸ் அணி உள்ளது. சமூக வலை தளங்களில் ஆசியாவைச் சேர்ந்த ஐந்தாவது மிக அதிகமாகப் பின்பற்றப்படும் கால்பந்து அணியாக உள்ளது.[582][583][584] ஐ-லீக் மற்றும் சைத் நக்சி கால்பந்துப் போட்டி ஆகியவற்றில் கோகுலம் கேரளா கால்பந்து அணியைக் கோழிக்கோடு நகரமானது கொண்டுள்ளது. மேற்கு வங்காளம் மற்றும் கோவாவுடன் சேர்த்து இந்தியாவில் கால்பந்துக்கு ஆதரவு காணப்படும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கேரளம் திகழ்கிறது. ஐ. எம். விசயன், சி. வி. பச்சப்பன், வி. பி. சத்யன், உ. சரப் அலி, ஜோ பால் அஞ்சேரி, ஆசிக் குருனியன், முகம்மது ரபி, ஜிஜு ஜேக்கப், மசூர் செரீப், பப்பச்சென் பிரதீப், சி. கே. வினீத், அனாசு எடத்தோடிகா, சகல் அப்துல் சமத், மற்றும் ரினோ அன்டோ போன்ற தேசியக் கால்பந்து வீரர்களைக் கேரளமானது கொடுத்துள்ளது.[585][586][587][588][589] கேரள மாநிலக் கால்பந்து அணியானது சந்தோஷ் கோப்பையை ஏழு முறை 1973, 1992, 1993, 2001, 2004, 2018, மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளது. மேலும், எட்டு முறை இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.[590]
மாநிலத்திலிருந்து உருவாகிய முக்கியமான தடகள வீரர்களில் பி. டி. உசா, ஷைனி வில்சன் மற்றும் மனதூர் தேவசியா வால்சம்மா ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூன்று பேருமே பத்மசிறீ மற்றும் அருச்சுனா விருது ஆகியவற்றைப் பெற்றவர்கள் ஆவர். க. மா. பீனாமோல் மற்றும் அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் கேல் ரத்னா விருது மற்றும் அருச்சுனா விருதை வென்றவர்கள் ஆவர். டி. சி. யோகனன், சுரேஷ் பாபு, சினிமோ; பாலோஸ், ஏஞ்சல் மேரி ஜோசப், மெர்சி குட்டன், கே. சாரம்மா, கே. சி. ரோசாகுட்டி, பத்மினி செல்வன் மற்றும் டின்டு லுகா ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்த அருச்சுனா விருதை வென்றவ பிறர் ஆவர்.[577][591] கைப்பந்து மற்றொரு பிரபலமான விளையாட்டு ஆகும். கடற்கரையின் ஓரத்தில் மணல் பரப்பில் உருவாக்கப்பட்ட தற்காலிகமான இடங்களில் இவை பொதுவாக விளையாடப்படுகின்றன.[592] ஜிம்மி ஜார்ஜ் ஒரு குறிப்பிடத்தக்க இந்தியக் கைப்பந்து விளையாட்டு வீரர் ஆவார். தன்னுடைய சிறந்த நிலையில் தர வரிசையில் உலகின் 10 சிறந்த வீரர்களில் ஒருவராகத் தரப்படுத்தப்பட்டிருந்தார்.[593] இறகுப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம் மற்றும் சடுகுடு[594] உள்ளிட்டவை பிரபலமான பிற விளையாட்டுக்கள் ஆகும். இந்திய ஆக்கி அணியின் தலைவரும், சிறந்த இலக்குக் காவலருமான ப. அர. சிறிஜேசு கேரளத்தைச் சேர்ந்தவர் ஆவார். இர்பான் கொலோதம் தோடி இம்மாநிலத்தைச் சேர்ந்த சர்வதேச நடை போட்டியாளர்களில் ஒருவர் ஆவார்.[595]
இந்தியாவில் 2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைக்காக கொச்சியின் சவகலால் நேரு மைதானமானது இந்தியாவில் விளையாட்டு நடத்தப்படும் ஆறு இடங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[596] திருவனந்தபுரம் நகரத்தில் கரியவட்டோமில் அமைந்துள்ள கிரீன்பீல்டு சர்வதேச மைதானமானது இந்தியாவின் முதல் டிபிஓடி (வடிவம், கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றப்படக்கூடிய) மாதிரி வெளிப்புற மைதானமாகும். இது சர்வதேசத் துடுப்பாட்டப் போட்டிகளையும், 2015 தெற்காசியக் கால்பந்துக் கோப்பை உள்ளிட்ட சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளும் இங்கு விளையாடப்பட்டுள்ளன.[597]
கேரளத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரியங்கள் இதன் பல்வேறுபட்ட மக்களுடன் இணைந்து இம்மாநிலத்தை இந்தியாவில் மிகப் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக உருவாக்கியுள்லன. 2012இல் தேசியப் புவியியலின் டிராவலர் பருவ இதழானது கேரளத்தை "உலகின் 10 சொர்க்கங்களில் ஒன்று"[598][599] எனப் பெயரிட்டது மற்றும் ஒருவர் "வாழ்நாளில் கட்டாயம் பார்க்க வேண்டிய 50 இடங்களில் ஒன்று"[600] என்று குறிப்பிட்டது. டிராவல் மற்றும் லெசர் இதழும் கேரளத்தை "21ஆம் நூற்றாண்டுக்கான 100 மிகச் சிறந்த பயணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளது.[598][601] 2012இல் இந்தியாவின் கூகுள் தேடு பொறி மனப்பாங்குகளில் தாஜ் மகாலைப் பின்னுக்குத் தள்ளி பயணச் சுற்றுலா இடத்துக்கான முதல் இடத்தைக் கேரளமானது பிடித்தது.[602] சிஎன்என் டிராவலானது கேரளத்தை '2019இல் செல்ல வேண்டிய மிகச் சிறந்த 19 இடங்களில் ஒன்றாகக்" குறிப்பிட்டது.[603] 2022இல் டைம் பருவ இதழால் கேரளமானது உலகின் மிகச் சிறந்த இடங்களின் பட்டியலில் 50 அசாதாரணமான காண வேண்டிய இடங்களில் ஒன்றாகப் பெயரிட்டது.[604]
கேரளத்தின் கடற்கரைகள், உப்பங்கழிகள், ஏரிகள், மலைத் தொடர்கள், அருவிகள், பண்டைக் காலத் துறைமுகங்கள், அரண்மனைகள், சமய அமைப்புகள்[605] மற்றும் காட்டுயிர்ச் சரணாலயங்கள் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆகிய இருவருக்குமே முக்கியமான ஈர்ப்புகளாக உள்ளன.[606] கேரளத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கையில் கொச்சி நகரமானது முதலிடத்தைப் பெறுகிறது.[607][608] 1980களின் தொடக்கம் வரை நாட்டின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது கேரளமானது ஒப்பீட்டளவில் அறியப்படாத இடமாக இருந்தது.[609] 1986இல் கேரள அரசாங்கமானது சுற்றுலாவை ஒரு முக்கியமான தொழில் துறையாக அறிவித்தது. இந்தியாவில் இவ்வாறு அறிவித்த முதல் மாநிலம் இதுவாகும்.[610] கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் தொடங்கப்பட்ட சந்தப்படுத்தல் விளம்பரங்கள் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு வழி வகுத்தன. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகமானது மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை மேற்பார்வையிடும் ஓர் அரசாங்க முகமை ஆகும்.[611] பல விளம்பரங்கள் கேரளத்தை "கேரளம், கடவுளின் சொந்த நாடு" என்ற பெயருடன் விளம்பரப்படுத்தின.[611] கேரள சுற்றுலாவானது உலகளாவிய பெயரைப் பெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அதிகமாகத் திரும்பி வரும் இடங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[611] 2006இல் கேரளமானது 85 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 23.7% வளர்ச்சியாகும். உலகின் மிக வேகமாக வளரும் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக இம்மாநிலத்தை இது உருவாக்கியது.[612] 2011இல் கேரளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது 1 கோடி என்ற அளவைத் தாண்டியது.[613]
1990களில் இருந்து ஆயுர்வேதச் சுற்றுலாவானது மிகவும் பிரபலமானதாக உருவாகியுள்ளது. தனியார் முகமைகள் சுற்றுலாத் துறையினரின் செயல்பாடுகளுடன் இணைந்து ஒரு குறிப்பிடத்தக்க பங்கை இதில் ஆற்றியுள்ளன.[609] கேரளமானது அதன் சூழலியல் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அறியப்படுகிறது. மலையேற்றம், மலை நடைப்பயணம் மற்றும் பறவைக் கவனிப்புத் திட்டங்கள் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் நடைபெறும் முக்கியமான செயல்பாடுகளை இது உள்ளடக்கியுள்ளது.[614] மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான பங்களிப்பாளராக மாநிலத்தின் சுற்றுலாத்துறை உள்ளது. ஆண்டுக்கு 13.3% என்ற வீதத்தில் இது வளர்ந்து வருகிறது.[615] சுற்றுலாவிலிருந்து கிடைக்கும் வருவாயானது 2001 மற்றும் 2011க்கு இடையில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2018இல் 19,000 கோடி ரூபாய் என்ற அளவைக் கடந்தது. எக்கானாமிக் டைம்ஸ் செய்தித்தாளின் படி[616] 2018இல் சுற்றுலாத் துறை மூலம் கேரளமானது ஒரு சாதனை அளவான நிகர வருவாயாக 36,528 கோடியைப் பெற்றது. முந்தைய ஆண்டை விட இது 2,874 கோடி அதிகமாகும். 2018இல் கேரளத்துக்கு 1.67 கோடிக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தனர். முந்தைய ஆண்டின் 1.576 கோடியை விட இது அதிகமாகும். 5.9% அதிகரிப்பு இதுவாகும். சுற்றுலாத் துறையானது தோராயமாக 12 இலட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கிறது.[613]
மாநிலத்தின் ஒரு வாகனம் இயக்கப்படக் கூடிய கடற்கரையாக கண்ணூரில் உள்ள முழப்பிலங்காடு விளங்குகிறது. பிபிசி செய்தி நிறுவனம் 2016இல் உலகின் முதல் ஆறு வாகனம் இயக்கப்படக் கூடிய கடற்கரைகளில் ஒன்றாக இதைத் தேர்ந்தெடுத்தது.[617] இது ஐந்து கிலோமீட்டர் நீளத்திற்கு மணல் பரப்பாக விரிவடைந்துள்ளது. உலகின் இரண்டாவது வளைவு அணை மற்றும் ஆசியாவின் முதல் வளைவு அணையான இடுக்கி அணையானது இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோவளம், வர்க்கலை, கோழிக்கோடு, கொச்சி, சேரை, ஆலப்புழா, பொன்னானி, கடலுண்டி, தானூர், சாலியம், கண்ணூர் கடற்கரை, காப்பத், முழப்பிலங்காடு மற்றும் பேக்கல் ஆகியவை முக்கியமான கடற்கரைகள் ஆகும். பொன்முடி, வயநாடு, வாகமண், மூணார், பீர்மேடு, ராமக்கல் மேடு, அரிம்ப்ரா, கண்ணூர் மாவட்டத்தின் பைதல்மலா, கொடிகுத்தி மலை, மற்றும் நெல்லியம்பதி ஆகியவை பிரபலமான மலை வாழிடங்கள் ஆகும்.[618] முண்ணாரானது கடல் மட்டத்துக்கு மேலே 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்காக அறியப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட தாவரங்களையும், விலங்குகளையும் கொண்டுள்ளது.[619] கேரளத்தின் சூழலியல் சுற்றுலா இடங்களானது 12 காட்டுயிர்ச் சரணாலயங்கள் மற்றும் இரண்டு தேசியப் பூங்காக்களை உள்ளடக்கியுள்ளது. பெரியாற்றுத் தேசியப் பூங்கா, பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம், சின்னார் கானுயிர்க் காப்பகம், தட்டெக்காடு பறவைகள் சரணாலயம், வயநாடு வனவிலங்கு காப்பகம், கடலுண்டி பறவைகள் சரணாலயம், கரிம்புழா வனவிலங்கு சரணாலயம், வயநாடு வனவிலங்கு காப்பகம், ஆரளம் வனவிலங்கு சரணாலயம், எரவிகுளம் தேசிய பூங்கா, மற்றும் அமைதிப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காஆகியவை இவற்றில் மிகப் பிரபலமானவையாகும்.[620] இணைக்கப்பட்ட ஆறுகள் (41 மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்), ஏரிகள் மற்றும் ஆலப்புழாவை மையமாகச் சுற்றியுள்ள கால்வாய்கள், குமரகம், பொன்னானி, நீலேஸ்வரம், மற்றும் வேம்பநாட்டு ஏரி (இங்கு தான் ஆகத்து மாதத்தில் வருடாந்திர நேரு கோப்பைப் படகுப் போட்டியானது நடத்தப்படுகிறது), முஹம்மாவில் உள்ள ஒரு சிறு தீவான பதிராமணல் ஆகியவற்றின் ஒரு விரிவான இணையம் கேரளாவின் உப்பங்கழிகளாகும். பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கொச்சியின் மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம் ஆகியவை இரண்டு அருகில் உள்ள பாரம்பரியத் தளங்கள் ஆகும்.[621][622]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.