From Wikipedia, the free encyclopedia
தி இந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும்.[2] 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.
வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | அகன்ற தாள் |
உரிமையாளர்(கள்) | கஸ்தூரி அன்ட் சன்ஸ் |
வெளியீட்டாளர் | பாலாஜி |
தலைமை ஆசிரியர் | சித்தார்த் வரதராஜன் |
நிறுவியது | 1878 |
மொழி | ஆங்கிலம், தமிழ்[1] |
தலைமையகம் | அண்ணா சாலை, சென்னை |
விற்பனை | 14,50,000 நாள்தோறும் |
இணையத்தளம் | http://thehindu.com/ |
இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரித்தானிய ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society - TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு தி இந்து என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.[3]
1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரித்தானிய அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.[4]
இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது.[5][6]
இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர்.[7]
இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும்[8] மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும்,[9] வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-இலங்கை நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான நரசிம்மன் ராம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.[10]
தி இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள்
த இந்து ந. ராம் தனது சகோதரரான ந. ரவியை முதன்மை ஆசிரியராக வருவதைத் தடுத்தார். ரவி கம்பனி ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து நோக்கி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில் இந்து பத்திரிகை, விளம்பரதாரர்களின் 'காசுச் செய்துப்' பத்திரிகையாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு செய்திகளும், ஊழல்களும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.[11]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.