பெங்களூர்
கருநாடக மாநில தலைநகர் From Wikipedia, the free encyclopedia
பெங்களூர் (Bangalore), அலுவல்முறையில் பெங்களூரு (Bengaluru, கன்னடம்: ಬೆಂಗಳೂರು, தமிழ்: வெங்களூர்) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும்[5] நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது. இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது. நகரத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூருவின் மக்கட் தொகை 1 கோடியைத் தாண்டியது.
பெங்களூர்
ಬೆಂಗಳೂರು (கன்னடம்) வெங்களூர் | |
---|---|
பெங்களூரு | |
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 12°58′44″N 77°35′30″E | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
கோட்டம் | பெங்களூரு கோட்டம் |
மாவட்டம் | பெங்களூரு நகர மாவட்டம், பெங்களூரு ஊரக மாவட்டம் |
பரப்பளவு | |
• மாநகரம் | 741 km2 (286 sq mi) |
• மாநகரம் | 8,005 km2 (3,091 sq mi) |
ஏற்றம் | 920 m (3,020 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 84,43,675 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 560 xxx |
தொலைபேசி குறியீடு | +91-(0)80 |
வாகனப் பதிவு | பட்டியல்
|
இணையதளம் | www |
நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பை கவுடர் இந்த இடத்தில் ஒரு செங்கல்லில் செய்த கலவைக் கோட்டையைக் கட்டினார். விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நவீன வரலாறு துவங்கியது. பிரித்தானிய ஆட்சியின் போது, இந்நகரம் தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது.
இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு இருக்கிறது. பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி ஆகிய காரணங்களால், பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது.[6] மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015 ஆம் ஆண்டு பெங்களூரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[7]
பெயர் வரலாறு
பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதற்குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாக இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் போர் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-ஊரு, அதாவது ஹளேகன்னட என்றழைக்கப்பட்ட பழைய கன்னட மொழியில் வெங் காவல் ஊர் (காவலர்களின் நகரம்) என்று அழைக்கப்பட்டது.[8] தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:[9]
பொ.ஊ. 890 ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று தெரிவிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பேகூரில் (வேகூர்) நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர். நரசிம்மச்சார் தனது கருநாட்டக கல்லெழுத்தியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை.
சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவுகூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழைக் கிழவியை அவர் சந்தித்தார். அந்தக் கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பெந்த-கால்-ஊரு" (கன்னடம்: ಬೆಂದಕಾಳೂರು) (வார்த்தை அர்த்தத்தில், "வெந்த கடலை ஊர்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது.[10][11]
11 டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ. ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது.[12] 27 செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே]] (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது.[13] கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அலுவல்ரீதியாக 1 நவம்பர் 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது.[14][15] ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது.[16]
வரலாறு

மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, பொ.ஊ. 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார்.[11]
பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு - மேற்காக சென்றது. தொட்டபேட்டெ வீதி வடக்கு - தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார். விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும் "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது.
விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. 1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை சாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு சாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் சாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்றார்.[17][18] 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு இறந்த பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டனர். மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்தக் காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது.[19]
இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது. அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம். மற்றொன்று 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும்.

19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர்.[20] 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகத்து மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரச பிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆனது.[21]
தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தித் தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.[22] 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும். பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டது.
புவியியல்

தட்பவெப்பநிலை வரைபடம் Bangalore | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ச | பெ | மா | ஏ | மே | ஜூ | ஜூ் | ஆ | செ | அ | ந | டி | ||||||||||||||||||||||||||||||||||||
3
27
15
|
7
30
17
|
4
32
19
|
46
34
22
|
120
33
21
|
81
29
20
|
110
28
20
|
137
27
19
|
195
28
19
|
180
28
19
|
64
27
17
|
22
26
16
|
||||||||||||||||||||||||||||||||||||
வெப்பநிலை (°C) மொத்த மழை/பனி பொழிவு (மிமீ) source: World Weather Information Service | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Imperial conversion
|
தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இது 12.97°N 77.56°E 741 கிமீ² (286 மைல்²).[23] பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது.
நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீக்கம் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது.[24]
16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், பொ.ஊ. 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது.[25] பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஓர் இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும்.[26] ஆயினும், பெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது.
நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு திடமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை கண்டிருக்கிறது.[27]
காலநிலை
அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டு முழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது ஏற்படும் வெப்ப அலைகள் கோடையில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன.[28] சனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1 °C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6 °C இருக்கும்.[29] பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8 °C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது.[30][31] குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாக 12 °C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாக 36-37 °C (100 °F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகத்து ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும்.[29] ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது. 24 மணி நேர காலத்தில் 179 மில்லிமீட்டர்கள் (7.0 அங்) பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது.[32]
நகர நிர்வாகம்
புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது.[33]
புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய உன்னதமானவை யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன.[34]
நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை.[34] 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின.[35] நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சிக் கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது.
ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவு மேம்பாட்டு வாரியம் போன்ற கூட்டுரம் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.[36]
போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது.[37] கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது.[38]
பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது.
பொருளாதாரம்
பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது.[39] 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது.[40] தவிரவும், பெங்களூரு இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருட்கள் (FMCG) சந்தையாக இருக்கிறது.[41] மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்]]கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக இருக்கும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது.[42] 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும்.[43]
1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள்.
பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. 1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது.
இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின் ₹1,44,214 கோடி (US$18 பில்லியன்) 2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன.[44]
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன.[45] இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும்.[46][47]
போக்குவரத்து

பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. முன்னதாக நகருக்கு எச்ஏஎல் வானூர்தி நிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாக இருந்தது.[48][49][50] ஏர் டெக்கான் மற்றும் கிங்பிசர் ஏர்லைன்சு நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன.[51]
நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும்.[52] இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. ராஜதானி விரைவுத் தொடருந்து நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது.[53]
ஆட்டோக்கள் என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும்.[54] மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு.[54]
பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது.[55] பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது.[55] பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது.[56]
மக்கள் வாழ்வியல்

பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது.[58] 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் பெங்களூரியன்ஸ் என்றும் கன்னடத்தில் பெங்களூரினவாரு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள்.[59][60]
நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர்.[61] நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள். கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன.[62] 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது.[63] முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில்[64] வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும்.[65] இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.[66]
பண்பாடு

பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்"[67] என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன. பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான மைசூர் தசரா, அரசாங்கப் பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
"கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது.[68] "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. கன்னடத் திரைப்பட துறையின் தாயகமாக பெங்களூரு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னடத் திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.[69]. மறைந்த நடிகரான ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார்.
சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுள்ளன. உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாக உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன.
இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு இருக்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது.[70]
விளையாட்டு
மட்டைப்பந்து பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகும். குறிப்பிடத்தக்களவில் தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000[71] பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் (PHL) கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்களான மகேஷ் பூபதி[72] மற்றும் ரோகன் போபன்னா[73] ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன.[74]
தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர்.
கல்வி

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது.[75] மும்மடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.[76]
சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன.[77] இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன.[78] பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன.[79] தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள்.[80] தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது.[81]
1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும்.[82] இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்தியப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது.[82] முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது.
ஊடகங்கள்
முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது.[83] 1859 ஆம் ஆண்டில் பெங்களூரு ஹெரால்டு பத்திரிகை பெங்களூரில்[84] வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் மைசூர் விருட்டினா போதினி பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது.[83] தற்போது விஜய கர்நாடகா மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக பிரஜாவாணி மற்றும் டெக்கான் ஹெரால்டு ஆகியவை வருகின்றன.[85][86]
இந்திய அரசாங்கத்தின் அலுவல்முறை ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது.[87] ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும்.[88] சமீப ஆண்டுகளில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன.[89]
நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது.[90] தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது.[90] 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது.[90] 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன.[91] பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும்[92], இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது.[93]
பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது.[94] ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. 1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது.[95] இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது.[96]
கூடுதல் பார்வைக்கு
- பெங்களூரு சுற்றுலாத் தளங்கள்
- கர்நாடகா
- நம்ம மெட்ரோ
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.