Remove ads
தமிழ் இனம் From Wikipedia, the free encyclopedia
தமிழர் (ஆங்கில மொழி: Tamil, Tamils, Tamilians) என்பவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.[13] மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங்கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் தமிழ்நாடும், தமிழீழமுமே ஆகும். 1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள், மேலும் மொரிசியசு, மடகாசுகர், தென்னாபிரிக்கா போன்ற ஆப்பிரிக்கா நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர்த் தமிழர் தொழில் வல்லுநர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983-ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் ஆத்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து, தென்மார்க்கு, நோர்வே ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும், மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாகக் கொண்டுள்ளனர்.
மொத்த மக்கள்தொகை | |
---|---|
(77,000,000 [1]) | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | 72,138,958 (2011)[2] |
இலங்கை | 3,113,247 (2012)[3] |
மலேசியா | 1,892,000 (2000)[4] |
தென்னாப்பிரிக்கா | 250,000 (2008)[5] |
சிங்கப்பூர் | 200,000 (2008)[5] |
மியான்மர் | 200,000 (2008)[5] |
கனடா | 138,675 (2012) [6] |
ஐக்கிய இராச்சியம் | 218,000 (2011)[7] |
ஐக்கிய அமெரிக்கா | 132,573 (2005-2009)[8] |
மொரிசியசு | 115,000 (2008)[5] |
பிஜி | 110,000 (2008)[9] |
பிரான்சு | 100,000 (2008)[9] |
செருமனி | 50,000 (2008)[9] |
இந்தோனேசியா | 40,000 (2011)[10] |
சுவிட்சர்லாந்து | 40,000 (2008)[5] |
ஆத்திரேலியா | 30,000 (2008)[5] |
இத்தாலி | 25,000 (2008)[5] |
நெதர்லாந்து | 20,000 (2008)[5] |
நோர்வே | 10,000 (2008)[5] |
தாய்லாந்து | 10,000 (2008)[5] |
ஐக்கிய அரபு அமீரகம் | 10,000 (2008)[5] |
டென்மார்க் | 7,000 (2008)[5] |
பகுரைன் | 7,000 (2008)[5] |
மொழி(கள்) | |
தமிழ் | |
சமயங்கள் | |
பெரும்பான்மை: இந்து சமயம் சிறுபான்மை: | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
திராவிடர் · கிராவர்[11] · சிங்களவர்[12] |
தமிழர் தோற்றம் பற்றி 4 கருதுகோள்கள் உள்ளன. தமிழர் குமரிக்கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்பது ஒரு கருதுகோள். பழந்தமிழர் தென் இந்தியாவின் பழங்குடிகள் என்பது இன்னொரு கருதுகோள். மூன்றாவது கருதுகோள் தமிழர்கள் ஆதியில் ஆப்பிரிக்காவில் இருந்து அரேபிய கடல் ஊடாகத் தென்னிந்தியா வந்தோரின் வழித்தோன்றல்களே என்கிறது.[14] தமிழர் நடு ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படியாயினும் தமிழினம் தொன்மை வாய்ந்த மக்கள் இனங்களில் ஒன்றாகும்.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக ஆதிச்ச நல்லூரில், நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தவைகளாகும். இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இஃது உறுதி செய்கிறது. சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துகள் குறைந்தது பொ.ஊ.மு. 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.[15] இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு குமரிக்கண்டத்தில் இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.
புரோட்டோ-தமிழர்கள் மற்றும் திராவிடர்கள் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பண்டைய தெற்கு ஈரானில் உள்ள கற்கால சாக்குரோசு விவசாயிகளுடன் ஒரு பொதுவான தோற்றத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் முடிவு செய்கின்றன. இந்தக் கற்கால மேற்கு ஆசிய தொடர்பான குடிகள் அனைத்துத் தெற்காசியர்களின் முக்கிய மூதாதையரின் அங்கமாக அமைகிறது. அசுகோ பருபோலாவின் கூற்றுப்படி, புரோட்டோ-தமிழர்கள், மற்றத் திராவிடர்களைப் போலவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்களாக உள்ளனர், இஃது எலாமியர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[16][17]
தமிழர் உலகம் முழுவதும் பரவி வாழ்ந்தாலும் ஒரு சில இடங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். அத்தகைய இடங்களாகப் பின்வருவன உள்ளன.
பெரும்பாலான தமிழர்கள் தமிழ்நாட்டிலேயே வாழ்கின்றனர். மேலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். அவற்றிலான குடியேற்றங்கள் தற்காலத்தில் ஏற்பட்டவையாகும். எனினும் கருநாடக மாநிலத்தின் மாண்டியா, எப்பார் பகுதிகளிலும், கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலும் மற்றும் மகாராட்டிரா மாநிலம் புனே, மும்பையின் தாராவி பகுதிகளிலும் இடைக்காலத்திலிருந்தே வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ்பேசும் மக்கள் ஆவர். இவர்கள் இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ் முசுலீம்கள் மற்றும் மலையகத் தமிழர் என மூன்று வகையினராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையைத் தமது தாயகமாகக் கொண்டோர் இலங்கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இலங்கையில் வசித்து, தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு, இசுலாம் மதத்தைப் பின்வற்றுவோர் இலங்கைத் தமிழ் முசுலீம்கள் (சோனகர்) ஆவர். 1800-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கெனத் தமிழகத்திலிருந்து குடியேற்றப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் மலையகத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களது மனித உரிமைகளையும் சிங்களப் பேரினவாத அரசு மறுத்து, அவர்களை வன்முறைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.
தென்கிழக்கு ஆசியாவுடன் தமிழர் அரசியல், வணிக, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணியும், அங்குப் பரவலாக வசித்தும் வருகின்றார்கள். குறிப்பாகச், சோழப் பேரரசு சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது அதிகாரம் கொண்டிருந்ததால், பல தமிழர் இங்கு குடியமர்ந்து பின்னர் இனக்கலப்புக்கு உள்ளாகி இன்று அந்நாட்டு மக்களாகவே வாழ்கின்றார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தமிழர் இந்நாடுகள் சிலவற்றில் கூலிகளாகக் குடியமர்த்தப்பட்டனர். குறிப்பாக மலேசியா, (கடாரம்), சிங்கப்பூர், மியன்மார் (அருமணதேயம்), தாய்லாந்து, இந்தோனேசியா (சாவா (சாவகம்), சுமத்திரா), கம்போடியா ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் இன்றும் தங்கள் மொழி, பண்பாட்டைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான குழந்தைகள் தமிழ்ப் பள்ளிகளில் பயிலுவதே இதற்குச் சான்றாகும். அனைத்திற்கும் மேலாகத் தனது மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் குறைவான தமிழர்களைக் கொண்ட சிங்கப்பூர், தமிழைத் தனது ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்காவில் தமிழர்கள் 19-ஆம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே வசித்து வருக்கின்றார்கள். குறிப்பாக 1850-ஆம் ஆண்டில் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் தமிழர்கள் தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, மடகாசுகர், இரீயூனியன் ஆகிய நாடுகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்குத் தமிழர்களிடேயே தமிழ்மொழி பரவலாகப் பேசப்படாவிட்டாலும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளும் உணர்வுகளும் உயிர்ப்புடன் இருக்கின்றன. மொரீசியசு நாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துகளும், எண்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 20-ஆம் நூற்றாண்டில் ஆப்பிரிக்காவின் நைசீரியா, கென்யா, சிம்பாப்புவே நாடுகளுக்குத் தமிழர்கள் ஆசிரியர்களாகவும், பிற தொழில் வல்லுநர்களாகவும் சென்றனர். பலர் தமது பணிக்காலம் முடிந்தவுடன் மீண்டும் தாயகத்துக்கோ வேறு நாடுகளுக்கோ சென்று விடுவர்.
இந்தியா மற்றும் இலங்கை தமிழர்கள், 1950-ஆம் ஆண்டின் பின்னரே தொழில் துறை வல்லுநர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.1983-இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான இனக்கலவரங்களுக்குப் பின்னர்த் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் என்றழைக்கப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்சு, செருமனி, இத்தாலி, சுவிட்சலாந்து, நோடிக்கு நாடுகள், ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். ஏறக்குறைய 4 முதல் 5 நூறாயிரம் தமிழர்கள் ஐரோப்பாவில் வசிக்கின்றனர்.
ஆத்திரேலியா, நியூசிலாந்து, பிசி ஆகிய ஓசானிய நாடுகளிலும் கணிசமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். பிசித் தீவுகளில் தமிழர்கள் குடியேற்றவாத பிரித்தானிய அரசால் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களே ஆவர். இவர்களில் பலர் தமது அடையாளங்களை அங்கு அதிகமாக வாழும் இந்தி பேசும் மக்களுடன் கலந்துவிட்டார்கள். ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் பொருளாதார வாய்ப்புகள் தேடி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் சென்றார்கள்.
வட அமெரிக்காவில் கணிசமான அளவில் தமிழர்கள் வாழ்கின்றனர்.1950-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் தேடித் தமிழர் வட அமெரிக்காவுக்குச் சென்றனர் பின்னர் 1983-இல் இலங்கையில் வெடித்த கறுப்பு யூலை இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றனர். இன்று கனடாவில் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், ஐக்கிய அமெரிக்காவில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.
தமிழர் சமூக அமைப்பு சாதிய படிநிலை அடுக்கமைவையும், ஆண் ஆதிக்க மரபையும் கொண்டது. தமிழர் சமூக அமைப்பில் சமயத்தின் பங்கும் முக்கியம். தற்காலத்தில் சமூக எதிர்ப்புப்போராட்டங்கள், சாதீயத்துக்கு எதிரான அரசியல் சட்ட நிலைப்பாடுகள், நகரமயமாதல், பொருளாதார முன்னேற்றம், நவீனமயமாதல் போன்ற பல காரணிகள் சாதிய கட்டமைப்பைத் தளர்த்தி உள்ளன. பெண்களுக்கான கல்வி, வேலை வாய்ப்புகள் பல மடங்கு பெருகி உள்ளன. அரசியல் சட்ட உரிமைகளும் கோட்பாட்டு நோக்கில் சமமாக உள்ளன. திராவிட இயக்கத்தின் இறைமறுப்பு கொள்கை, அறிவியல் வளர்ச்சி ஆகியவை சமயம் மீதான தீவிர நம்பிக்கையைக் குறைத்துள்ளன.
தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான இலக்கண இலக்கிய வளம் மிக்க திராவிட மொழியான தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் மொழி சமசுகிருதத்திற்கு இணையாக இந்திய நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக 2004-ஆம் ஆண்டு தமிழ் மொழியே முதலாவது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மொழி அந்நாடுகளின் அரசால் அலுவல் மொழியாக உள்ளது.
தமிழில் கிடைக்கப்பெற்ற தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம். இது தமிழ் மொழியின் இலக்கணத்தை வரையறுப்பதோடு, அக்கால தமிழ்ச் சூழலையும் உரைக்கின்றது. பொ.ஊ.மு. 300 தொடக்கம் பொ.ஊ. 300 வரை எழுதப்பட்ட இலக்கியம் சங்க இலக்கியம் எனப்படுகிறது. பழந்தமிழரின் அகப்பொருள் மற்றும் புறப்பொருள் பாடும் கவிதைகளும், அறிவியல் நிலைப்பாடுகளை நிறுவும் கவிதைகளையும் சங்க இலக்கியத்தில் காணலாம். சங்க இலக்கியத்தில் செடிகள், பறவைகள், விலங்குகள் பற்றிய குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகை நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இக்காலத்தில் எழுந்த அற நூல் திருக்குறள், இந்நூல் உலகில் அதிகம் போற்றப்படும் ஒரு நூலாக விளங்குகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறை இவரின் பெயர் தாங்கிய தமிழர் ஆண்டு முறையாகும்.
பொ.ஊ. 300-இலிருந்து பொ.ஊ. 700-வரை தமிழ் இலக்கிய வழக்கத்தில் சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. இக்காலத்திலேயே சிலப்பதிகாரமும், பெளத்த தமிழ்க் காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி ஆகியவையும், சைன தமிழ் காப்பியங்களான சீவக சிந்தாமணி, வளையாபதி, மற்றும் ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றின. ஐஞ்சிறுகாப்பியங்களில் ஒன்றான நீலகேசி தமிழில் எழுந்த முதல் தர்க்க நூலாகக் கருதப்படுகிறது.
பொ.ஊ. 700-இலிருந்து பொ.ஊ. 1200-வரையுள்ள காலம் பக்தி இலக்கிய காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் தமிழ்ப் பக்தி இயக்கம் வலுப்பெற்றதது.சைவமும், வைணவமும் ஆதரவு பெற்றன. சைவ நாயன்மார்கள் பல ஆயிரம் தேவாரங்களைப் பாடினர். வைணவ ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பாடப்பெற்றன. இக்காலத்தில் திருமந்திரம் சிவஞானபோதம் உட்பட பதினான்கு சைவ சிந்தாந்த நூல்களும் இயற்றப்பட்டன. கலிங்கத்துப்பரணி, கம்ப இராமாயணம் ஆகியவையும் இக்காலத்தில் இயற்றப்பட்டன. பொ. ஊ. 850-ஆம் ஆண்டில் இருந்து பொ.ஊ. 1250-ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசு சிறப்புற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பொ.ஊ. 1200-இலிருந்து பொ.ஊ. 1800-வரையுள்ள காலப்பகுதி இடைக் காலம் எனப்படுகிறது. இக்காலத்தில் முகலாயர், நாயக்கர், மராத்தியர், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகியோர் தமிழகப் பகுதிகளை ஆண்டனர். இக்காலத்திலேயே தமிழ் இசுலாமிய இலக்கியம் மற்றும் தமிழ் கிறித்தவ இலக்கியம் ஆகியவை தோன்றின. முதல் தமிழ் அகரமுதலி, சதுரகராதி என்ற பெயரில், இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான வீரமாமுனிவர் என்று அறியப்படும் கிறித்தவ மத ஆசிரியரால் பொ.ஊ. 1732-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பெரும்பாலான நிகண்டுகள் இயற்றப்பட்டதும் இக்காலத்திலேயே.
18-ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ.வே.சாமிநாதையர், சி.வை.தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களைத் தேடிப் புதுப்பித்துப் பாதுகாத்தனர். 1916-ஆம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமற்கிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.
தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிக் கவிஞராகச் சுப்பிரமணிய பாரதியார் கருதப்படுகிறார். இக்காலத்தில் புதுக்கவிதை பிறந்தது. உரைநடை வீச்சு பெற்றது. புதினம், சிறுகதை, கட்டுரை ஆகிய எழுத்து வடிவங்கள் தமிழில் வளர்ச்சி பெற்றன. 1954–1968 காலப்பகுதிகளில் தமிழ்க் கலைக்களஞ்சியம் பல அறிஞர்களின் கூட்டுழைப்பாக உருவாக்கப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் மரபு, மார்க்சிய, முற்போக்கு, நற்போக்குப் போக்குகள் இனங்காணப்பட்டன. திராவிட இயக்கத்தினர் தமிழைக் கருவியாகப் பயன்படுத்தித் தமது கருத்துகளை மக்களுக்கு எடுத்துச்செல்வதில் பெரும் வெற்றி கண்டனர். தற்காலத்தில் பெண்ணிய கருத்துகளையும் எடுத்துரைத்த அம்பை, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி, உமாமகேசுவரி, இளம்பிறை, சல்மா, வெண்ணிலா, முனிவர், மாலதி, வைகைச்செல்வி, தாமரை உட்பட தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் எழுத்துகளும் வலுப்பெற்று இருக்கின்றன. உலகத்தமிழர்களின் எழுத்துகளும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்றுள்ளன. நாளிதழ், இதழ், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் எனப் பல்வேறு ஊடகங்களிலும் தமிழ் வேரூன்றிப் பரவி நிற்கின்றது. அறிவியல் தமிழின் அவசியம் அறிந்து தமிழ்நாடு அரசும் பிற அமைப்புகளும் அதை வளர்ப்பதைக் குறியாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார்கள். அதே வேளை தமிழ்நாட்டில் பரவலாகப் புழங்கும் தமிங்கிலம் தமிழ் மொழிப் பேணலைச் சரவலுக்கு உட்படுத்தியிருக்கிறது.
தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும்.
தமிழர்கள் மிக நீண்ட காலமாகவே ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிலையாக வாழ்ந்து வருபவர்கள். தனித்துவம் வாய்ந்த ஒரு பண்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். மொழி, இலக்கியம், கலை போன்ற துறைகளில் கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளிலேயே உயர்நிலை எட்டியிருந்தவர்கள். இத்தகைய பின்னணியிலே, மக்கள் வாழ்வதற்கான இல்லங்களும், அரசர்களுக்கான மாளிகைகளும், வணக்கத்தலங்களும், பொதுக் கட்டடங்கள் பலவும் உருவாக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவையெல்லாம் அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கட்டப்பட்டதால் எதுவும் எஞ்சவில்லை.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழ் நாட்டில் கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டன. இக் கட்டடங்களில் மிகப் பெரும்பாலானவை கோயில்களே. இவை கட்டிடக்கலையின் உயர் மரபைச் சார்ந்தவை. ஆனாலும் இவற்றோடு இணையாகச் சாதாரண மக்களுக்கான வீடுகளையும் கட்டடங்களையும் உள்ளடக்கிய இன்னொரு கட்டிடக்கலை மரபும் இருந்தது. ஆறாம் நூற்றாண்டளவில் தொடங்கிய கற்கட்டட மரபு நாயக்கர் காலம் வரை வளர்ந்து வந்தது. இதுவே திராவிடக் கட்டடக்கலை எனப்படுகின்ற கட்டடக்கலை மரபாகும். இதன் பின்னரும் தற்காலம் வரையில் ஆங்காங்கே தனித்துவமான வகைகளைச் சேர்ந்த கட்டடங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் "மண்ணீட்டாளர்கள்" எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்குக் கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
ஓவியம் ஒரு கவின் கலை. தமிழ்ச் சூழலில், தமிழர் மரபில், தமிழர்களால் ஆக்கப்படும் ஓவியங்களைத் தமிழர் ஓவியம் எனலாம். ஓவியத்தைச் சித்திரம் என்றும் குறிப்பிடுவர்.
சங்க காலத்தில் இருந்தே தமிழரிடையே ஓவியக்கலை வளர்ச்சி இருந்தது.[18] இருப்பினும் தமிழ் ஓவியங்களுக்கு ஒரு தொடர்ச்சியான மரபு இல்லை. "சற்று முந்தியது என்று நாயக்கர் கால சுவரோவியங்கள், அதற்கு முன், மறைந்திருந்து வெளித்தெரிந்த தஞ்சை கோயில் ஓவியங்கள் அதற்கு முன் சித்தன்ன வாசல் என்று பல நூற்றாண்டுகள் இடைவெளி கொண்ட ஒன்றைப் பார்க்கலாம்".[19] தற்காலத்தில் ஓவியக்கலையில் ஒரு புதிய ஈடுபாடு இருக்கிறது. வரைகதை, வரைகலை, இயங்குபடங்கள் என்று பல்வேறு வடிவங்களில் இந்த ஆக்க ஊற்றுகளைக் காணமுடியும்.
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ்களில் ஒன்றாக நாடகத்தை முன்னிறுத்தித் தொன்று தொட்டு தமிழர், நாடகக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் நாடகம் பற்றிப் பல குறிப்புகள் உள்ளன. தமிழர் நாடகங்கள் தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.
தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய "தொல்காப்பியம்" என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.[20] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப – பாவம், ர – ராகம், த – தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.
நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன, மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபைக் கொண்டிருக்கின்றது. தென்னிந்தியாவில் இருந்த நாடுகள் தம்மோடும் பிறரோடும் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டதால் போரியலின் ஒரு கூறாகத் தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழர் தற்காப்புக் கலைகள் பல்லவ, சேர, சோழ, பாண்டிய நாட்டுப் போர் சாதிகளின் மரபில் தோன்றிய சண்டை, தற்காப்பு வழிமுறைகள், மரபுகள், நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றது. சிலம்பம், வர்மக்கலை, குத்துவரிசை, அடிதடி, மல்லாடல் ஆகியவை இன்றும் பயிலப்படும் தமிழர் தற்காப்புக் கலைகள் ஆகும்.
இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும். இந்தக் கலையை நீண்ட காலமாகத் தமிழர்கள் பயின்றும், அதற்குப் பங்களித்தும் வந்துள்ளார்கள். யோகக்கலை பற்றியும் அதன் இதர பாகங்களைபற்றியும் தமிழ் நூலான திருமந்திரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் யோகக்கலையை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்துள்ளது[21]. சுவாமி சிவானந்தா, யாழ்ப்பாணம் யோகர் சுவாமியின் சீடரான சத்யகுரு சிவாய சுப்ரமணியசுவாமி, சுவாமி சச்சிதானந்தா, வேதாத்திரி மகரிசி போன்றோர் யோகக்கலையை மேற்கு நாடுகளில் பயிற்றுவிக்கப் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்கள்.
தமிழ்த் திரைக்கலை அல்லது தமிழ்ச் சினிமா தற்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு செலுத்தும் ஒரு கலைத்துறை ஆகும். தமிழ்ச் சினிமாவே இந்தி, ஆங்கிலம் போன்ற பிற மொழித் திரைப்பட செல்வாக்கை தமிழர் மத்தியில் தவிர்த்தது. நாடகம், இசை, ஆடல், சிலம்பம் எனப் பல்வேறு மரபுக் கலைகளையும் தமிழ்த் திரைக்கலை பயன்படுத்திக்கொண்டது. சிவாஜி, எம். ஜி. ஆர், ரஜினிகாந்த், கமல்காசன், கே. பி. சுந்தராம்பாள், மனோரமா ஆகிய நடிகர்களும் கே. பாலச்சந்தர், மணிரத்னம், பாரதிராஜா ஆகிய இயக்குநர்களும் தமிழ்த் திரைப்படத்துறையில் புகழ் மிக்க சிலர். தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில் இளையராசா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் புகழ்பெற்ற சிலர். தமிழ்த் திரைப்படங்கள் "வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதி பலிக்கின்றது. பொய்மைகளைத் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன"[22] போன்ற பல விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது.
நகைச்சுவை தமிழர் வாழ்வில் இழையோடிய ஓர் அம்சம். வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், இலக்கியம், இதழ்கள், திரைப்படம், தொலைக்காட்சி என பல வழிகள் மூலம் நகைச்சுவை பகிரப்படுகிறது. என். எஸ். கிருஷ்ணன், சந்திரபாபு, கே. ஏ. தங்கவேலு, நாகேஷ் ஆகியோர் கடந்த காலத்தில் குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்கள் ஆவர். வடிவழகன், திண்டுக்கல் ஐ. லியோனி, விவேக், வடிவேலு, சந்தானம் ஆகியோர் புகழ் பெற்ற இன்றைய நகைச்சுவை விண்ணர்களில் சிலர். கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் வழங்கப்பட்ட மேடைச் சிரிப்புரை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஈரோடு மகேஸ், மதுரை முத்து ஆகியோர் நல்ல மேடைச் சிரிப்புரையாளர்கள்.
அரசியல் மேடையில், கோயிலில், பட்டிமன்றத்தில், நீதிமன்றத்தில், நாடகத்தில், திரைப்படத்தில், ஒலிபரப்பில், எனப் பல துறைகளில் தமிழில் பேசுதல் ஒரு பயன்மிகு கலையாகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அண்ணாதுரை, பெரியார், ம. பொ. சிவஞானம், கிருபானந்த வாரியார் போன்றோர் சிறந்த பேச்சாளர்கள். திரைப்படத்தில் வசனம் பேசுவதில் சிவாஜி கணேசன் புகழ் பெற்றவர். இன்று கருணாநிதி, வைகோ, சீமான், சுகிசிவம் ஆகியோர் சிறந்த பேச்சாளர்களில் சிலர். தமிழகத்தில் சிறந்த பேச்சாளரைத் தேர்தெடுப்பதெற்கன நடாத்தப்பட்ட தமிழ்ப் பேச்சு எங்கள் உயிர் மூச்சு நிகழ்ச்சியில் விசயன் வெற்றி பெற்றார். ஈழத்து பேச்சுப்பாரம்பரியம் ஆறுமுகநாவலர் போன்ற சமயப்பிரசங்கிகள் முதல் அரசியல் பேச்சாளர்கள் ஈறாகப் பலவகையில் வளர்ச்சிபெற்று உள்ளது. போராட்ட காலங்களில் பல போராளிகளின் பேச்சுக்கள் மக்களுக்கு விடுதலை வேட்கை தூண்டுவதில் முன்னின்றன. இலக்கிய சொற்பொழிவுகளில் கம்பன் கழகத்து ஜெயராஜ் போன்றவர்கள் பரவலாக அறியப்பெற்றாவர்கள்.
ஒப்பாரி – மகனைப் பலிகொடுத்த தாய் [23] நீ போருக்கு போனடத்தை |
தமிழர் பண்பாடு இலக்கியம், நுண்கலைகள், நுட்பம் ஆகிய பெரும் மரபுகளையும், பொது மக்கள் பங்களித்து எளிமையாக ஆக்கிப் பகிர்ந்த நாட்டாரியலையும் கொண்டிருக்கிறது. இரண்டும் ஒரு சமூகத்தின் வெவ்வேறு வேட்கைகளை நிவர்த்தி செய்கிறது. மக்களின் பழக்க வழக்கங்கள், மொழி, வாய்மொழி இலக்கியங்கள், பாட்டு, இசை, ஆடல்கள், உணவு, உடை, உறையுள், நம்பிக்கைகள் முதலானவற்றை நாட்டாரியல் குறிக்கிறது.[24] பெரும்பாலான தமிழர்கள் கிராமத்தில் (எ. கா: 2008 – தமிழ்நாடு 53%) வாழ்வதால் நாட்டாரியல் கிராமத்துக் கூறுகளைச் சிறப்பாகச் சுட்டி நிற்கிறது. எனினும் இது நகரச்சூழலிலும் வெளிப்படுகின்றது. சென்னை நகரப்புற சேரிகளில் இருந்து தோன்றிய கானா பாடல்கள், ஈழத்தில் போராளி மகளை/மகனை இழந்த தாயின் ஒப்பாரிப் பாடல்களையும் இவ்வாறு சுட்டலாம். சினிமா போன்ற பெரும் ஊடகங்கள் நாட்டார்கலைகளை நலிவடையச் செய்திருந்தாலும், இணையம் போன்ற சில நவீன தொழில்நுட்பங்கள் அனைவரும் பங்களித்து பயன் பெறும் ஆக்க முறைகளை ஊக்குவிக்கின்றன.
தமிழ்ச் சூழலில் தமிழ்ப் பண்பாட்டுடன் ஒரு முரண்பாடான, ஆக்கபூர்வமான உறவைச் சித்தர்கள் வைத்திருந்தார்கள். இவர்கள் பெரும் சமய மரபுகளின் குறைகளை எடுத்துகூறினார்கள். மரபுவழிப் புலவர்கள் பலர் இன்ப அல்லது போற்றி இலக்கியங்களில் மட்டும் ஈட்பட்டிருக்க சித்தர்கள் மருத்துவம், கணிதம், வேதியியல், தத்துவம், ஆத்மீகம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டு தமிழர் சிந்தனைச் சூழலைப் பலப்படுத்தினார்கள்.
தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கின்றார்கள். சங்கத் தமிழர்கள் உலகாயுத போக்கு அல்லது இயற்கை வழிபாட்டையே கொண்டிருந்தனர் என அறிஞர் சிலர் வாதிட்டாலும், தமிழர்கள் முற்காலம் தொட்டே பல்வேறு சமய மரபுகளை அறிந்தும் பின்பற்றியும் வந்துள்ளார்கள். தமிழர்கள் ஐந்து நிலங்களுக்கும் உரிய தெய்வங்களாக மாயோன், சேயோன், வேந்தன், வருணன், கொற்றவை ஆகியோரை வணங்கி வந்துள்ளனர்.[25] பௌத்தம், சமணம், இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய பெரும் சமய மரபுகளைத் தமிழர்கள் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு போக்குகளுடன் பின்பற்றி வந்துள்ளார்கள். சங்க காலத்தில் ஆசீவகம் சமணம், பௌத்தம் ஆகிய மதங்கள் இருந்தன.[26]
பெரும்பாலான தமிழர் தமது கடவுளாக முருகனை வணங்குகின்றனர். முருகனை விட ஐயனார், மதுரை வீரன், கண்ணகி, இசக்கி அம்மன், கறுப்புசாமி, சுடலை மாடன், பெரியண்ணன், முனீசுவரர், காத்தவராயன் ஆகிய காவல் தமிழ்க் கடவுள்கள் வழிபாடும் பரவலாக இருக்கின்றது.
நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பக்தி இயக்கம், வள்ளலார் இராமலிங்க அடிகளைப் பின்பற்றிய மனிதநேய இயக்கம், அய்யாவழி ஆகியவை தமிழ்ச் சூழலில் தோன்றி சிறப்புற்றவைதான்.
இன்று திருக்குறளைப் பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, இறைமறுப்பு (நாத்திகம்), அறியாமைக் கொள்கை, உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
இந்து மதம் என்று ஆங்கிலேய அரசால் 19 ஆம் நூற்றான்டில் கொன்டு வரப்படாத வரை தமிழ்நாடு (மதராசு மாகாணம்) மற்றும் ஈழத்திலும் இருந்த தமிழ் மக்கள் தங்கள் மதத்தை தமிழ் என்றே குறித்து வந்தனர்[27]. 19ஆம் நூற்றான்டில் இசுலாமியர், கிருத்தவர், சீக்கியர் அல்லாதவர்களை இந்துக்கள் என்று கொன்டுவந்ததால் தமிழ் மதத்தை பின்பற்றிய தமிழர்கள் இந்துக்கள் என அடையாளபட்டனர். பல புலம்பெயர்ந்த மற்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் மதமாக தமிழ் மதத்தை கடைபிடிக்கின்றனர்.[28][29][30][31][27]
தமிழர் எத்தகைய உலகப் பார்வையுடன் அல்லது அணுகுமுறையுடன் உலகை எதிர்நோக்குகின்றார்கள் என்பதைத் தமிழர் "மெய்யியல் எனலாம்". தமிழர் மெய்யியலை அறநூல்களில் இலக்கியங்களில் மட்டுமல்லாமல் வாழ்வியலையும் வரலாற்றையும் நோக்கியே புரிந்து கொள்ளமுடியும். யாரும் எக்காலத்துக்கும் ஒரே மெய்யியலை எடுத்தாள்வதில்லை. சூழல் மாறும்பொழுதும், அறிவியல் வளர்ச்சிக்கேற்ற மாதிரியும் மெய்யியல் மாறும். அப்படியே தமிழர் மெய்யியல் மருவி வந்திருக்கிறது. எடுத்துக்காட்டக அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எனத் தமிழ் மகளிர் கட்டுப்படுத்தப்பட்டனர். இன்று துணிவு, அறிவு, திறமை என்று நவீனப் பெண்களாகத் தம்மை வளர்த்துக்கொண்டனர்.
தமிழர் மெய்யியல் உலகின் தன்மை (அகம், புறம்), வாழ்வின் நோக்கம் (அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு), வாழ்தலில் ஒழுக்கம் (அறக் கோட்பாடு) ஆகியவற்றை விளக்குகின்றது. தமிழரின் பண்டைய வாழ்வியலைத் திணைக் கோட்பாடு விளக்குகிறது. இன்றைய உந்துதலைத் திராவிடம் எடுத்துரைக்கிறது.[32]
தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாகத் தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு நாட்டுப்புறச் சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளைச் சுவையுடன் சமைக்க, விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது.
பல்வகை மரக்கறிகள், சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் குழம்பும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். குழம்புகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரைவகை, மசியல், ஆட்டுக்கறி, முயல்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, மீன்கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் குழம்புகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம்.
தமிழர் உடைகள் காலம், இடம், தேவை, சூழ்நிலை, பொருளாதாரம், சாதி, சமயம் ஆகிய காரணிகளால் வேறுபடுகின்றது. அனைத்துத் தமிழர்களுக்கும் இதுதான் உடை என்று ஏதும் இல்லை. எனினும், வேட்டி, சேலை, தாவணி, பாவாடை போன்றவை தமிழரின் மரபார்ந்த உடைகளாகக் கருதப்படுகின்றன. நகர்ப்புறங்களில் சல்வார் கமீசு, சுரிதார், முழுக்காற்சட்டை, நீலக்கால் சட்டை போன்ற உடைகள் அணியும் போக்கு கூடி வருகிறது.
பொங்கல், தமிழ் புத்தாண்டுப் பிறப்பு ஆகியன சமய சார்பற்று அனைத்து தமிழர்களும் கொண்டாடும் விழாக்கள் ஆகும். தைப்பூசமும் தீபாவளியும் இந்து சமயத் தமிழர்கள் கொண்டாடும் முக்கியப் பண்டிகைகள் ஆகும்.
தொன்மைக்காலம் தொட்டு தமிழர் கப்பற்கலையிலும் கடற் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர் ஈடுபட்டனர். இத்துறை வல்லுநர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பயன்பட்டிருப்பதில் இருந்து, தமிழர் கடலைத் தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்.
தமிழர்களின் முடிவெடுக்கும், நிர்வாகம் செய்யும், வெளி உறவுகளைப் பேணும் முறைகளையும் நடத்தைகளையும் தமிழர் அரசியல் குறிக்கின்றது. தமது சுதந்திரத்தை நிலைநாட்டி, உரிமைகளைப் பேணி, சமத்துவத்துடன், பொருளாதார வசதியுடன், பண்பாட்டுச் சிறப்புடன் அனைத்து தமிழர்களும் மனிதர்களும் வாழ வழிசெய்வதே தமிழர் அரசியலின் கருத்தியல் இலக்கு. தமிழர் அரசியல் பன்முகம் கொண்டது; வெவ்வேறு செல்வாக்கு அதிகார வட்டங்களுக்கு உட்பட்டது.
அன்றும் இன்றும் தமிழர் அனைவரும் ஒரே அரசியல் அலகின் கீழ் இயங்கியது இல்லை. இன்று தமிழர்களுக்கு அவரவர் வாழும் நாடுகளின் அரசியலே முதன்மை பெறுகின்றது. எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டு அரசியல், இந்திய அரசியல், இலங்கை அரசியல், மலேசிய அரசியல், சிங்கப்பூர் அரசியல், மொரிசியசு அரசியல் என்று அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த நாட்டு அரசியல்களே முக்கியம் பெறுகின்றன. உலகத் தமிழர்களுக்கென ஒரு வலுவான அமைப்போ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைமைத்துவமோ இல்லை. இருப்பினும் உலகத்தமிழர் தமிழர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுத்தும், தமிழர் நலன்களின் மீது அக்கறை காட்டியும் செயற்படுகின்றார்கள். எடுத்துக்காட்டாக மலேசியத் தமிழர் உரிமைகள் பாதிக்கப்பட்ட போது தமிழக முதல்வர் மு. கருணாநிதி கண்டனம் தெரிவித்து நியாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வேண்டினார்.[33] ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும், இந்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய இராணுவ உதவியைக் கண்டித்தும் தென்னாபிரிக்கத் தமிழர் நடாத்திய எதிர்ப்புப் போராட்டங்களும் உலகத்தமிழர் ஒரு நாட்டின் தமிழர் அரசியலில் அக்கறையுடன் செயற்படுவதை எடுத்துகாட்டுகின்றன.[34]
தமிழர்கள் பல்வேறு குறிக்கோள்களுக்காக அமைப்பு முறையில் ஒருங்கிணைந்து செயற்படுகிறார்கள். மொழி, அரசியல், வணிகம், தொழில், சமயம், ஈடுபாடுகள் எனப் பல நோக்கங்களை மையமாக வைத்துத் தமிழர் அமைப்புகள் இயங்குகின்றன. சங்கம், கோயில், இயக்கம் (தமிழீழ விடுதலைப் புலிகள், திராவிடர் கழகம், தலித் இயக்கங்கள்), மன்றம் (சாதி மன்றங்கள்), ஒன்றியம் (புகலிட ஊர் ஒன்றியங்கள்), இணைய அமைப்புகள், கட்சி, அறக்கட்டளை, அவை, பேரவை, கூட்டுறவுகள், சமூகக் கூடங்கள், நூலகங்கள், ஊராட்சி, ஊரவை ஆகியவை தமிழ்ச் சூழலில் காணப்படும் அமைப்புகள் ஆகும்.
பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட திராவிட இயக்கம், தமிழ் நாட்டு அரசியலில் முக்கியப் பங்காற்றுகிறது. இவ்வியக்கம் தன்மானத்தையும் பகுத்தறிவையும் ஊக்குவிக்கவும் சாதிகளுக்கு எதிராகப் போராடவும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான ஒடுக்கு முறையை எதிர்க்கவும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளின் கொள்கைகள் யாவும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பின்பற்றியே உள்ளன. தமிழ் நாட்டு அரசியலில் தேசியக் கட்சிகளின் தாக்கம் குறைவாகவே உள்ளது.
உலகமயமாதல் பல்வேறு பண்பாடுகளை உள்வாங்கி ஒரு உலகப் பண்பாட்டை உருவாக்குவதாகக் கூறப்படுகிறது. இந்த உலகப் பண்பாடு இன்றைய ஆங்கில, மேற்கத்தைய ஆதிக்க ஈடுபாடுகளையே பெரிதும் எதிரொளிக்கும். இத்தகைய நிலையில் தமிழ் மொழி, பண்பாடு, சூழல், அறிவு சிதைந்து போக வாய்ப்புள்ளது. அதே வேளை தமது அடிப்படைக் கூறுகளை இழக்காமல் உலகமயமாதல் உந்தும் அல்லது தருவிக்கும் அம்சங்களையும் ஏற்று மேம்பட முடியும். அதாவது இருப்பதை அழிக்காமல் மேலதிகமான அம்சங்களை அறிமுகப்படுத்தும் ஒரு உந்துதலாகவும் உலகமயமாதலைப் பார்க்கலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.