Remove ads
From Wikipedia, the free encyclopedia
வேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது செவ்வக வடிவில் இருக்கும், பொதுவாகத் தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள் வந்த பிறகே இது வண்ண வேட்டியாக மாறியது.[1] இதை கைலி, லுங்கி அல்லது சாரம் என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
தவுத்தா எனச் சம்ஸ்க்ருத மொழியிலும் தோத்தி என ஒரியாவிலும், ધૉતિયુ தோத்தியு எனக் குஜராத்தியிலும், চওৰকীয়কা சூரியா என அசாமிய மொழியிலும், ধুতি தூட்டி என வங்காள மொழியிலும், ಢೊತಿ/ಕಛ್ಛೆ ಪನ್ಛೆ தோத்தி அல்லது கச்சே பான்ச்சே எனக் கன்னட மொழியிலும், தோத்தர், அங்கோஸ்தர், ஆத்-செஸ்ச்சே அல்லது புத்வே எனக் கொங்கணி மொழியிலும், മുണ്ട് முந்த்து என மலையாளத்திலும், ధోతీ/పంచె தோத்தி அல்லது பன்ச்சா எனத் தெலுங்கிலும், धोतर தோத்தர் என மராத்தியிலும், ਲ਼ਾਛ லாச்சா எனப் பஞ்சாபி மொழியிலும் மற்றும் மர்தானி என உத்திரப் பிரதேசம், பீகார், டெராய், பகுதிகளிலும், வேட்டி எனத் தமிழிலும் அழைக்கப்படுகிறது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத் தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள், முக்கியப் புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாகத் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு முழங்கால் தெரியுமாறு நடப்பது தவறாகக் கருதப்படுகிறது. இவ்வாறு வேட்டியினை மடித்துக் கட்டிக் கொண்டு பெண்களின் முன்னிலையில் பேசுவது இழிவாக கருதப்படுகிறது. பெரும்பாலும், வேட்டியைப் பொது நிகழ்வுகளின் போது வெளி இடங்களில் மடித்துக் கட்டும் வழக்கம் இல்லை. இவை அனைத்தும் வேட்டி குறித்து எழுதப்படாத சட்டங்களாகவே கடைப் பிடிக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் தூய வெண்ணிறத்தில் வேட்டி இருக்கும்; வெளுப்பான் கொண்டு வெளிறச் செய்யாது வெளிர் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் வேட்டிகள் கோடி வேட்டி அல்லது புதிய வேட்டி எனப்படும். இவை திருமணங்கள் முதலிய விசேடங்களில் பயன்படுத்தப்படும். சில குறிப்பிட்ட நோன்புச் சமயங்களில் நீலம், கருப்பு, சிவப்பு அல்லது காவி நிறங்களில் வேட்டி உடுத்துவர். திருமணத்தின் போது பெரும்பாலும் பட்டு வேட்டி பயன்படுத்தப்படும்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த அரசர்களும் புலவர்களும் தங்களுடைய வேட்டிகளில் தங்கத்திலான சரிகைகள் வைத்திருந்தனர். பருத்தி வேட்டிகள் அன்றாடம் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். பட்டு வேட்டிகள் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும், அதன் விலையும் அதிகமாகவே இருக்கும்.
வேட்டிகளின் அளவை வைத்தும் அதனுடைய வகையை நிர்ணயம் செய்வது உண்டு. நான்கு முழ வேட்டி, எட்டு முழ வேட்டி அல்லது இரட்டை வேட்டி, கரை வேட்டி ஆகியவை அதனுடைய வகைகளாகும். எட்டு முழ வேட்டியை அந்தணர்கள் போன்ற சிலர் ஐந்து கச்சம் வைத்துக் கட்டுவர். இது பஞ்சக்கச்சம் எனப்படுகிறது. அரசயல்வாதிகள் தங்கள் வேட்டிக் கரைகள் தங்கள் கட்சியின் வண்ணத்தை ஒட்டி இருக்குமாறு அணிவது அண்மைய வழக்கமாக மலர்ந்துள்ளது.
வேட்டி அணியும் போது, அதனுடன் துண்டு அணியும் வழக்கம் உண்டு. தமிழ்த் திருமணங்களில் மணமகன் தன்னுடைய தோளில் இத்துண்டினை அணிந்திருப்பார். கோவில் பணிகளில் ஈடுபடுவோர் வேட்டி அணிந்திருப்பர். வேளாண் மக்களும் வேட்டியுடன் துண்டினைப் பயன்படுத்துவர். துண்டினை வேலை செய்யும் போது தலையிலும், உட்காரும்போதும் நடக்கும்போதும் தோளிலும், கோவில்களில் வழிபாடு செய்யும் போது இடுப்பிலும் கட்டியிருப்பர்.
ஆப்ரிக்காவிலும் வேட்டி அணியப்படுகிறது, பெரும்பாலும் சொமாலியர்கள் மற்றும் அபார் இனத்தவரால் அணியப்படும் இவ்வாடைக்கு, மகாவிசு என்று பெயரிட்டுள்ளனர்.
தமிழகத்தில், 'வேட்டி நாள்' என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி (நாளை)யைக் கொண்டாடத் துவங்கியுள்ளனர் இதைத் துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை.[2][3] கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி 'வேட்டி தினம்' கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.[4][5] பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி ஆறாம் நாள் 'வேட்டி தினம்' என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.[6][7]
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய சில கிளப்புகளில் அனுமதி மறுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு வேட்டிகட்டி வரக்கூடாது என்று தடைவிதிக்கும் கிளப்புகளின் உரிமம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றியது.[8] [9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.