Remove ads
சங்க இலக்கிய நூல்களின் தொகுப்பு From Wikipedia, the free encyclopedia
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவை இரண்டும் பதினெண் மேல்கணக்கு நூல்களாகும். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்து நூல்கள் அடங்கிய தொகுப்பே பத்துப்பாட்டு என வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலரது கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார்.[1][2][3]
இத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை. இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்றுச் சம்பவங்கள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழர் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன. இதனால் இயற்கை ஓவியம் என்று பத்துப்பாட்டு அழைக்கப்படுகிறது.
என வரும் பழம்பாடல், பத்துப் பாட்டு நூல்கள் எவை என்பதை மிகத் தெளிவாகக் காட்டும். இப்பாடலில் அமைந்துள்ள முறைகளின் படியே தமிழ்த்தாத்தா அவர்கள் 1889-ஆம் ஆண்டு பத்துப்பாட்டை அச்சில் ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் பத்துப்பாட்டை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1946-இல் இலங்கையில் வெளியிட்ட ஜே.வி செல்லையாவின் பதிப்பில் இம்முறைமை பின்பற்றப்படவில்லை. அதில் முதலாவதாகப் பட்டினப்பாலையும் இறுதியாக திருமுருகாற்றுப்படையும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவலோசையால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன.
"நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்".-(பன்னிருபாட்டியல் 266-267)
என்பது இதன் இலக்கணமாகும்.
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல்கள் பிற்காலத்தில் அழிந்து போகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1889-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலர் முழு தொகுதியாகவும், இதிலுள்ள நூல்களிற் சிலவற்றைத் தனித் தனியாகவும் புதிய உரைகளுடன் வெளியிட்டுள்ளனர்.
தமிழிலக்கிய வரலாறு. ஜனகா பதிப்பகம்.1996
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.