Remove ads
இலக்கியம் From Wikipedia, the free encyclopedia
மணிமேகலை ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று. இக்காப்பியத்தை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலை காப்பியத்தில் அடி இணையும், அதன் வழிபாடும், வேறு கடவுள்களின் வழிபாடும் இருக்கும் நிலையில், அஃது ஒரு மகாயான காப்பியமாகவே இருக்கமுடியும். மேலும், மகாயான பௌத்தமானது இல்லறத்தையும், துறவறத்தையும் வலியுறுத்தும் நிலையிலும், சிலப்பதிகாரமானது இல்லறத்தையும், மணிமேகலை காப்பியம் துறவறத்தையும் வலியுறுத்துவதாலும், இவை இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.[1]
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சிலப்பதிகாரத்திற்கு அடுத்ததாக இலக்கிய அழகில் பெருமைவாய்ந்தத மணிமேகலை, ஐம்பெரும் தமிழ் காப்பியங்களுள் ஒன்றாகும். இக்காப்பியத்தின் தலைவி, மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் கோவலன் மற்றும் மாதவி என்பவர்களின் மகளாவாள். கோவலனின் துயர மரணத்திற்குப் பிறகு மாதவி தன் மகளை ஒரு புத்தத் துறவியாக வளர்த்தாள். ஒரு சமயத்தில் மணிமேகலையும் அவளுடைய தோழியும் வனத்திற்குப் பூப்பறிக்கச் சென்றிருந்தபோது, உதயகுமரன் என்ற சோழ மன்னன் மணிமேகலையின் மீது காதல் மயக்கம் கொண்டான். கடலின் கடவுளான மணிமேகலா, மணிமேகலையின் உலக இன்பங்கள் துறந்த வாழ்க்கையைப் பாதுகாக்க, அவளை தான் அறியாமலே மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு விட்டாள். அத்தீவில் மணிமேகலை ஒரு புத்த பீடிகை மூலம் தனது முற்பிறப்பைப் பற்றி அறிந்தாள். அதன் பிறகு, கடலின் கடவுள் மணிமேகலா, மணிமேகலையிடம் அவள் ஏன் மணிபல்லவத்திற்கு அழைத்து வரப்பட்டாள் என்பதைக் கூறி, மூன்று அதிசய மந்திரங்களையும் கற்றுக்கொடுத்தாள். அத்தீவில் மணிமேகலை 'அமுத சுரபி' என்ற உணவுக் கிண்ணத்தைக் கண்டெடுத்து, அதிலிருந்து அளவற்ற உணவைப் புகாரிலுள்ள ஏழைஎளியோருக்கு வழங்கினாள். இதையெல்லாம் கண்ட உதயகுமரன், மணிமேகலை தன்னை மணக்க வேண்டும் என்று அவளை வற்புறுத்தினான். ஆனால் மணிமேகலை தான் கற்ற வித்தையைப் பயன்படுத்திக் காயசண்டிகையாக உருமாற்றிக் கொண்டாள். உண்மையான காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உதயகுமரனைக் கொலை செய்துவிட்டான். இதற்காகக் காயசண்டிகையின் உருவத்தில் இருக்கும் மணிமேகலை கைது செய்யப்படுகிறாள். ஆனால் தனது தாயாரின் உதவியோடு விடுவிக்கப்படுகிறாள். பிறகு அவள் வஞ்சி நகரத்திற்குச் சென்று தந்து ஞான ஆசிரியரான கண்ணகியிடம் உரையாடி அறிவுரை பெற்றாள். அத்துடன் அனைத்து மதங்களின் நிறைகுறைகளை வல்லுநர்களிடமிருந்து அறிந்தாள். அதன்பிறகு காஞ்சி நகரத்திற்குச் சென்று தனது ஆசானான அறவண அடிகளிடம் படிப்பினைப் பெற்று ஒரு முழுமையான புத்தத் துறவியாகி தவத்தில் ஆழ்ந்தாள்.[2]
மணிமேகலை - கோவலன் மாதவி தம்பதியின் மகள். இரத்தத்திலேயே ஊறிய துணிச்சல், பண்புகள் அதிகம் பெற்றவள். துறவியாகவேண்டும் என்று கூறிய புத்த மதப் பிக்குணி, ஒரு புறமும், தன்னை மோகத்தினால் பின்தொடர்ந்த சோழ மன்னன் மறுபுறமும் இருந்தும், மணிமேகலை அனைத்துத் தடைக்கற்களையும் துணிச்சலுடன் உடைத்தெறிந்தாள். பிறகு தன் விருப்பப்படியே புத்தத் துறவியாகி மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்குப் பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். கோவலன் இரத்தத்தில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்த வீரம் மணிமேகலையிடம் இருந்ததால்தான் இது சாத்தியமானது. மாதவியைப் போல் மணிமேகலையிடம் அளவற்ற பண்புகள் இருந்தமையால்தான், தன் தாயார், ஆசான் மற்றும் ஞானபிதாவின் பேச்சை மதித்து நடக்கிறாள். இக்காப்பியமே மணிமேகலை பெரியவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை மூலமாகக் கொண்டு அமைந்துள்ளது.
உதயகுமரன் - சோழ மன்னன், மணிமேகலையின் மீது முட்டாள் தனமான மோகம் கொண்டவன். நினைத்ததை அடையவேண்டும் என்ற குணம் படைத்தவன். ஆசை இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ஆசை இருந்தால் அழிவு நிச்சயம் என்பதை உதயகுமரன் கதாபாத்திரம் காட்டியுள்ளது. மணிமேகலையின் மேல் காதல்கொண்ட உதயகுமரன் அவள் துறவியாக வேண்டும் என்ற ஆசையை அறிந்தும் கூட அவளைப் பின்தொடர்ந்தான். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால், காஞ்சனன் என்பவன் உதயகுமாரனைக் கொலை செய்துவிட்டான்.
சுதமதி - மணிமேகலையின் நம்பகமான தோழி. மணிமேகலையை மணிபல்லவத்தில் விட்டு, அவளை ஆன்மீகப் பாதையில் செலுத்தியதை மேகலையின் தாயாரிடம் கூடக் கூறாமல், சுதமதியின் கனவிலேயே முதலில் தோன்றி நடந்ததைக் கூறினாள், கடலின் கடவுள் மணிமேகலா. இது சுதமதியின் மேல் மணிமேகலா வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது. இக்காப்பியத்திலேயே மணிமேகலையின் ஒரே தோழி சுதமதிதான். அக்காலகட்டங்களில் நண்பர்களுக்கெல்லாம் ஓர் இலக்கணமாக அமைந்தவள் சுதமதி. அவளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை பல உண்டு.
ஆதிரை: மழை வளம் தரும் கற்புடைய மாதர்களுள் மேம்பட்டவள் ஆதிரை.தீய நெறியில் ஒழுகி பொருளை இழந்த சாதுவன் மனைவி இவள்.அமுதசுரபில் முதல் பிச்சை இட்ட கற்புடைய மகள்.
மணிமேகலை காப்பியத்தின் காலம் தொடர்பாக முரண்பட்ட கருத்துகள் இருந்து வருகின்றன. இது நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப் படுகிறது.
மணிமேகலை நியாயப் பிரவேசத்தைப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஊ. 450–550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.[3]
பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார்.[4] இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கும் நியாயப் பிரவேசத்திற்கும் முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.[5]
பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் பௌத்த, சமணச் சமயங்கள் தோன்றின. அதற்குப் பின்னர்க் பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய சமயங்களைப் பற்றிய செய்தி சமயநெறி விளக்கத்துடன் தெளிவாகத் தெரியவருகின்றன.[6] 'சமயம்' என்னும் சொல் சங்கப் பாடல்களில் இல்லை. தெய்வம் என்னும் சொல் உள்ளது. சமயம் என்னும் சொல் சிலப்பதிகாரத்திலும் இல்லை. பண்டைய நூல்களான மணிமேகலை, பழமொழி நானூறு ஆகிய நூல்களில் மட்டும் இடம்பெறுகிறது.புத்த மதம் பொ.ஊ.மு. 527-லும், சமண மதம் பொ.ஊ.மு. 527-லும் தோன்றின. இவை இரண்டும் ஏறத்தாழ சமகாலம் என்றாலும் புத்தர் துறவு 17 ஆண்டுகள் முந்தியது எனத் தெரிகிறது.
சிலப்பதிகார காலத்தை வானியல் நெறியில் கணித்த நெறி துல்லியமாயினும், அவர் கொண்ட பாடத்தில் பிழை நேர வாய்ப்பு உண்டு. மேலும் அக்காலப் பல்லவர்கள் பற்றிய கருத்து இரட்டைக் காப்பியங்களில் இல்லை. எனவே ஒப்புமை வரலாற்றோடு பொருத்திக் கணிக்கப்பட்ட கயவாகு மன்னனின் பொ.ஊ. 117 கண்ணகிக்குக் கல் நட்ட காலம் என்றும், அடுத்த வாழ்நாள் காலம் மணிமேகலை காலம் என்றும், இளங்கோவின் சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் பொ.ஊ. 150-250 கால இடைவெளியில் தோன்றியவை என்றும் தெளிவாக உணரமுடிகிறது.
மணிமேகலை சேரநாட்டு வஞ்சிமாநகரில் ஒன்பது சமயக் கணக்கர்களைக் கண்டு அவர்தம் திறம் (கோட்பாடு) பற்றிக் கேட்டறிந்தாள். அவள் பின்பற்றியது பௌத்த சமயம். ஆக பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் நிலவிய சமயங்கள் பத்து எனத் தெரியவருகிறது. அவற்றைப் பின்பற்றிய சமயத் தலைமக்களை (சமயக் கணக்கர்களை) மணிமேகலை நூலிலுள்ள சொற்களைக் கொண்டு இங்கு காண்கிறோம்.
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.