கம்பர் படைத்த ராமாயணம் From Wikipedia, the free encyclopedia
கம்பராமாயணம் (Kamba Ramayanam) எனும் நூல் கம்பரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். இந்நூல் இந்து சமய இதிகாசங்கள் இரண்டினுள் ஒன்றான இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்டதாகும். இராமாவதாரம் என்ற பெயரில் கம்பரால் இயற்றப்பட்ட கம்பராமாயணம் ஒரு வழி நூலாகும் (வெவ்வேறு நூல்களிலும் பல வேறுபாடுகள் உண்டு). இது வடமொழியில் வால்மீகி என்பவர் இயற்றிய இராமாயணத்தினைத் தழுவி எழுதப்பட்ட நூல் ஆகும். இது ஒரு வழி நூலாகவே இருந்தாலும் கம்பர் தனக்கே உரித்தான பாணியில் தன் புலமையை வெளிக்காட்ட தமிழ் மொழியில் இயற்றியுள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ் சொற்களைத் தனது நூலில் கையாண்டதால் கம்பர், தொல்காப்பிய நெறி நின்றவர் என்று புகழப்படுகிறார். {("வடசொல் கிளவி வடஎழுத் தொரீ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே ") (தொல்காப்பியம், எச்சவியல், 5)}
மூல இலக்கியமான வடமொழி இராமாயணத்திலிருந்து சில மாறுபாடுகளோடு கம்பர் இந்நூலை இயற்றியிருந்தார். கம்பர் இயற்றிய இராமாயணம் என்பதால், இது கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும் உடையது. இதில் 10589 பாடல்கள் உள்ளன. காண்டம் என்பது பெரும்பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினையும் குறிக்கும். ஏழாம் காண்டமாகிய "உத்திர காண்டம்" என்னும் பகுதியை கம்பரின் சம காலத்தவராகிய "ஒட்டக்கூத்தர்" இயற்றினார் என்பர். தமிழிலக்கியத்தில் காப்பிய வளர்ச்சி கம்பரின் காலத்தில் (பொ.ஊ. பன்னிரண்டாம் நூற்றாண்டு) உச்சநிலையினை அடைந்தது என்பர். இந்நூலின் சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் "தமிழுக்குக் கதி" (கம்பராமாயணம் திருக்குறள்) என்பர்.
கம்பரின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் அழைப்பதுண்டு. கம்பரின் யாப்பு வண்ணங்கள் நூல் நெடுகிலும் மின்னி மிளிர்கின்றன. "வரமிகு கம்பன் சொன்ன வண்ணமுந் தொண்ணூற்றாறே (யாப்பு வண்ணங்களின் எண்ணிக்கை 96)" என்றொரு கணக்கீடும் உண்டு.
கம்பராமாயணம் பெருங்காப்பியத்திற்குரிய இலக்கணங்களை முழுமையாகப் பெற்றது. அணி, பொருள், நடை ஆகியவற்றால் சிறந்து விளங்குவது. சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டு தமிழ்ப் பண்பாட்டோடு இயைந்து விளங்குவது.
தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் இராமவதாரம் என்றே பெயரிட்டிருந்தார். ஆனால் இராமாயணம் பலரால் இயற்றப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது.[1]
கம்பராமாயணத்தில் உள்ள பாடல்களையும், கம்பரின் வாழ்வினையும் கொண்டு கம்ப இராமாயணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.[2] சிலர் கம்பராமாயணம் ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்தது, பத்தாம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார்கள். வையாபுரிப்பிள்ளை என்பவர் கம்பர் தனியன்கள் என்பதினை 16ம் நூற்றாண்டில் சிலர் புகுத்தியிருக்கக் கூடும் என்று கூறியுள்ளார்.[2] இந்த கம்பர் தனியன்களில் பதினேழு பாடல்கள் உள்ளன. அவற்றில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழில் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது. இதனைக் கொண்டு பொ.ஊ. 885ல் இராமாயணம் இயற்றப்பட்டிருக்கக் கூடும் என்கின்றனர்.[2]
மா. இராசமாணிக்கனார் பொ.ஊ. 1325க்கும் முன்பே கம்பராமாயணம் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கன்னட நாட்டில் உள்ள கல்வெட்டினைக் கொண்டு குறிப்பிடுகிறார்.[2] எனினும் இறுதியாக கம்பர் மூன்றாம் குலோத்துங்க சோழனோடு மாறுபட்டு தற்போதைய ஆந்திராவில் இருக்கும் ஓரங்கல் எனும் பகுதியில் தங்கியிருக்கிறார்.[2] அப்போது அவ்விடத்தில் இருந்த அரசன் பிரதாபருத்திரன் என்பவராவார். அவருடைய காலம் பொ.ஊ. 1162–1197 ஆகும். இதனால் கம்பர் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்து கம்பராமாயணத்தினை இயற்றியுள்ளார்.[2]
கம்பர் இக்காப்பியத்தை அதன் மூலமான வடமொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார். அந்த முயற்சியை ஓர் அரிய உவமையின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். பசியுடைய பூனை ஒன்று பாற்கடலைக் கண்டு அதை நக்கிக் குடித்துவிட ஆசைகொண்டதுபோல தன் முயற்சியை ஒப்பிடுகிறார். இது அவையடக்கமாகக் கொள்ளப்படுகிறது. கம்பர் இராமகாதையை எழுதுவதற்கு உறுதுணையாக இருந்தவர் சடையப்ப வள்ளல் ஆவார். இதற்கு நன்றிபாராட்டும் விதமாக தனது காப்பியத்தில் ஆயிரம் பாடல்களுக்கு ஒருபாடல் எனும் வீதத்தில் சடையப்ப வள்ளலைப் போற்றிப் பாடியுள்ளார்.
கம்பர் இராமாயணத்தினை எழுதியபின்பு, அதனை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். திருவரங்கத்தில் உள்ளோர்கள், தில்லை தீட்சதர்கள் ஒப்புக் கொண்டால் இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்யலாம், இல்லையென்றால் வேண்டாம் என்று கூறிவிடுகின்றனர். அதனால் கம்பர் தில்லை சென்றார். அங்கே தீட்சிதர்களாக இருக்கும் மூவாயிரம் நபர்களும் ஒன்று சேர்க்க இயலாமல் இருந்த போது, ஒரு குழந்தை இறந்தது. அந்தக் குழந்தைக்காக அனைத்து தீட்சிதர்களும் கூடி நின்றார்கள். அப்போது கம்பர் தன்னுடைய இராமாயணத்திலிருந்து நாகபாசப் படலம் என்ற பகுதியைப் பாடி குழந்தையை உயிர்ப்பித்தார். தீட்சிதர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தான் இயற்றிய இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அனுமதியும் பெற்றார்.
திருவரங்கத்தில் உள்ளவர்கள் அரங்கேற்றத்திற்கு முன்பு சடகோபரைப் பாடும் படி கூறியமையால், கம்பர் சடகோபர் அந்தாதியைப் பாடினார். அதன் பின்பு இராமாயணத்தினை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார்.[2]
கம்பராமாயணம் ஆறு காண்டங்களையும், 118 படலங்களையும், 10,589 பாடல்களையும் கொண்டவை.[1]
வ.எண் | காண்டங்களின் பெயர் | படல எண்ணிக்கை |
---|---|---|
1 | பாலகாண்டம் | 23 |
2 | அயோத்தியா காண்டம் | 13 |
3 | ஆரண்ய காண்டம் | 13 |
4 | கிட்கிந்தா காண்டம் | 16 |
5 | சுந்தர காண்டம் | 14 |
6 | யுத்த காண்டம் | 39 |
இராவணனை அழிக்க திருமால் மனித அவதாரம் எடுக்கிறார். தசரதன் - கோசலை தம்பதியினருக்கு இராமனாக திருமால் பிறக்கிறார். தசரதனுக்கும் கைகேயி மற்றும் சுமித்திரை ஆகியோருக்கும் இலக்குவன், பரதன், சத்ருகன் ஆகியோர் பிறக்கின்றனர். நால்வரும் தசரதனுடைய அரண்மனையில் வளர்ந்து வருகின்றனர்.[3]
இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர், தன்னுடைய யாகத்திற்குக் காவலாக அழைத்துச் செல்கின்றார். விசுவாமித்திரரின் யாகத்தினை அழிக்க வந்த தாடகை எனும் அரக்கியை இராமன் கொல்கிறார். தாடகையைப் போல யாகத்தினை அழிக்க வந்த அரக்கர்களையும் இராமனும், இலக்குவனும் அழிக்கின்றனர்.[3]
மிதிலைக்கு இராமனையும், இலக்குவனையும் விசுவாமித்திரர் அழைத்துச் செல்கிறார். வழியில், கல்லாக இருந்த அகலிகை இராமனின் கால்தூசு பட்டு உயிர்பெறுகிறாள். அவளை கௌதம முனிவருடன் சேர்த்துவிட்டு மிதிலைக்குச் செல்கின்றனர். அங்கு சீதைக்கு சுயம்வரம் நடக்கிறது. அதில் இராமன் கலந்து கொண்டு சிவதனுசை உடைத்து, சீதையை மணக்கிறார்.[3]
இராமன் சீதையைத் திருமணம் செய்து கொண்டு அயோத்தியாவிற்குச் செல்கிறார். உடன் இலக்குவனும், விசுவாமித்திரரும் செல்கின்றனர். அயோத்தியின் மன்னரான தசரதன் இராமனுக்கு பட்டாபிசேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்கிறார். அதனை அறிந்த மக்களும், மந்திரிகளும் மகிழ்கின்றனர். மந்தரை எனும் கூனி பரதனின் தாயான கைகேயிடம் சென்று அவளுடைய மனதினை மாற்றுகிறாள். கைகேயி தசரதன் முன்பு தந்த இரண்டு வரங்களை இப்போதைய சூழ்நிலைக்குத் தக்கவாறு, இராமன் காடாளவும், பரதன் நாடாளவும் கேட்டுப் பெறுகிறாள்.[3]
இராமனும், சீதையும் காட்டிற்கு செல்லுகையில், இலக்குவனும் உடன் செல்கிறான். மூவரும் காட்டிற்கு சென்று முனிவர்களையும், குகனையும் சந்திக்கின்றார்கள். குகனை தன்னுடைய மற்றொரு சகோதரன் என்று இராமன் பெருமையாக கூறுகிறார். தசரதன் இறந்து போனதால், இறுதிக் காரியங்களைச் செய்துவிட்டு பரதன் இராமனைக் காட்டில் வந்து சந்திக்கிறார். அயோத்திய அரசை ஏற்க இராமனிடம் வற்புறுத்துகிறார். ஆனால் இராமன் அதனை ஏற்க மறுக்கின்றார். பரதன் இராமன் மீண்டும் வந்து பொறுப்பு ஏற்கும் வரை இராமனின் பாதுகைகளை வைத்து அரசு செய்கிறான்.[3]
இராமன் காட்டில் விராதன், சரபங்கன், அகத்தியர், சடாயு ஆகியோர்களைச் சந்திக்கிறார். அவர்களின் மூலமாக அரக்கர்களைப் பற்றியும், ஆயுதங்களைப் பற்றியும் அறிந்து கொள்கிறார்.[3]
இராவணனுடைய தங்கை சூர்ப்பணகை இராமனைக் கண்டு காதல் கொள்கிறாள். ஆனால் இராமன் ஏகப்பத்தினி விரதன் என்று பிற பெண்களை ஏற்காமல் இருக்கிறான். இலக்குவன் சூர்ப்பணகையின் மூக்கினை அரிந்து அனுப்புகிறான். அதனால் இராவணனிடம் சென்று இராமனின் மனைவி சீதையைப் பற்றியும் அவளுடைய அழகினையும் கூறி, சீதையின் மீது மோகம் கொள்ள வைக்கிறாள்.[3]
இராவணன் மாயமானை அனுப்பி இராமனையும், இலக்குவனையும் சீதையிடமிருந்து பிரித்து, சீதையைக் கவர்ந்து செல்கிறார். வழியில் சடாயு சீதையை மீட்கப் போராடி வீழ்கிறார். சீதையை இல்லத்தில் காணாது தேடி வரும் சகோதரர்களுக்கு இராவணனைப் பற்றிக் கூறிவிட்டு உயிர்விடுகிறார் சடாயு.[3]
சீதையைத் தேடிச் செல்கின்ற இராமனும், இலக்குவனும் கிட்கிந்தைக்கு வருகிறார்கள். அங்கு அனுமனைச் சந்திக்கிறார் இராமர். அனுமன் சுக்கிரீவன் என்பவரை இராமருக்கு அறிமுகம் செய்கிறார். சுக்கிரீவனின் மனைவியை சுக்கிரீவனுடைய அண்ணன் வாலியே கவர்ந்து சென்று விடுகிறார். அதனால் இராமன் வாலியைக் கொன்று சுக்கிரீவனின் மனைவியை மீட்கிறார்.[3]
இராமனும் தன்னைப் போல மனைவியை இழந்து தவிக்கிறான் என்பதை அறிந்த சுக்கிரீவனும், அவனுடைய குடிமக்களான வானரங்களும் இராமனுக்கு உதவ முன்வருகிறார்கள்.[3]
அங்கதன் என்பவர் தலைமையில் அனைவரும் செல்கின்றனர். வழியில் சம்பாதி எனும் சடாயுவின் அண்ணனைச் சந்திக்கின்றனர். சம்பாதி இலங்கையில் சீதை சிறைப்பட்டு இருப்பதைத் தெரிவிக்கின்றார். இலங்கைக்குச் செல்ல ஏற்றவர் அனுமன் என்று தீர்மானித்து அனுமனிடம் தெரிவிக்கின்றனர். அனுமனுக்கு அவருடைய பெருமையை உணர்த்தி அவர் இலங்கை செல்ல விஸ்வரூபம் எடுக்கிறார்.[3]
அனுமன் இலங்கைக்குச் செல்ல வான்வெளியில் பறந்து செல்கிறார். வழியில் எதிர்படும் தடைகளை இராம நாமம் கொண்டு வெற்றிபெற்று இலங்கையை அடைகிறார். அங்கே அசோகவனத்தில் உள்ள சீதையைக் கண்டு, தான் இராமனின் தூதுவன் என்று கூறி, இராமனின் அடையாளமான மோதிரத்தினைத் தந்து தெரிவிக்கிறார். சீதையும் அந்த மோதிரத்தினைப் பெற்றுக் கொண்டு சூளாமணி எனும் அணியைத் தருகிறாள்.[3]
இராவணனைச் சந்தித்து அனுமன் இராமனின் பெருமைகளைக் கூறி, சீதையை இராமனிடம் சேர்த்துவிடும்படி கூறுகிறார். ஆனால் இராவணன் அனுமன் வாலில் தீயிடுகிறான். அனுமன் இலங்கையையே எரித்துவிட்டு இராமனிடம் சென்று சீதையைக் கண்டதைக் கூறுகிறார்.[3]
இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்து வானரப் படையுடன் சென்று, இராவணனுடன் போர் செய்கிறான். அப்போது இராவணனின் சகோதரன் வீடணன் இராமனுடன் இணைந்து கொள்கிறான். இராமன் இராவணனுடைய தம்பியான கும்பகருணன், மகன் இந்திரசித்து என அனைவரையும் போரிட்டுக் கொல்கிறார். இறுதியாக இராவணனைக் கொன்று வீடணனுக்கு இலங்கையைத் தந்துவிட்டு, சீதையை மீட்டு அயோத்திக்குச் செல்கிறார். அயோத்தியில் இராமருக்குப் பட்டாபிசேகம் நடைபெற்றது.[3]
கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற இராமாயண நூல்கள் படைக்கப்பட்டன. இவ்வாறு இராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அவையாவன, தக்க ராமாயணம்,குயில் ராமாயணம், இராமாயண அகவல்,கோகில இராமாயணம்,அமர்த இராமாயணம், இராமாயணக் கீர்த்தைகள் மற்றும் பால இராமாயணம்.[4]
வால்மீகி இராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும், கம்பர் அவற்றை வரிவரி மொழிபெயர்ப்பு செய்யாமலும், அந்நூலில் இடம்பெற்றுள்ள அனைத்தையுமே அப்படியே தந்தும் கம்பராமாயணத்தினை இயற்றவில்லை. எனவே இராமன் அசைவ உணவினை ஏற்றமை, இராவணனின் வன்மையும், சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். இவ்வாறான வேறுபாடுகளையும், ஒப்புமைகளையும் ஆய்வு செய்து அறிஞர்கள் கூறுகின்றனர்.
கம்பராமாயணத்தையும், கந்த புராணத்தையும் ஒப்பாய்வு செய்கின்றனர். இந்த இரு புராணங்களிலும் உள்ள கதைமாந்தர்கள், கதைக்களம், செயல்பாடுகள் போன்றவற்றை ஆய்வு செய்து ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுகின்றனர்.
கதாப்பாத்திரம் | கம்பராமாயணம் | கந்தபுராணம் |
---|---|---|
நாயகன் | இராமன் | முருகன் |
தூதன் | வீரஅனுமன் | வீரபாகு |
அரக்கன் | இராவணன் | சூரபத்மன் |
பாதிக்கப்பட்டவர்கள் | சூர்ப்பனகை ( இலக்குவனால் மூக்கறுபட்டவள் ) | அசமுகி ( மாகாளனால் கையறுபட்டவள் ) |
காவலாள் | இலக்குவன் | மாகாளன் |
சிறையெடுக்கப்பட்டவர்கள் | சீதை | சயந்தன் |
அரக்க மனைவியர் | மண்டோதரி | பதுமகோமளை |
அரக்க மகன் | இந்திரசித் | பானுகோபன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.