மணிப்பிரவாள நடை
From Wikipedia, the free encyclopedia
மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை. இது தமிழோடு 13 ஆம் நூற்றாண்டில் இணைந்தது. இரத்தினம்-பவளம் என்ற நேரடிப் பொருளுடைய மணிப்பிரவாளம் என்னும் சொல், தென்னிந்தியாவில் வடமொழி்யும், திராவிட மொழியொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் குறிக்கும். மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். மணிப்பிரவாள நடை என்பது தமிழோடு வடமொழியும் விரவி நடக்கும் தமிழ் உரைநடை.
சங்க காலத் தொகைநூல்களில் ஒன்று அகநானூறு. இது மூன்று பகுதியாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்று ‘மணிமிடைப் பவளம்’. இப்பகுப்பில் உள்ள 180 பாடல்களும் நீலநிற மணியோடு செந்நிறப் பவளம் சேர்த்துத் தொடுத்தாற்போன்ற அமைதியினைக் கொண்டிருப்பதால் இதற்கு மணிமிடைப் பவளம் எனப் பெயர் சூட்டினர். இந்த ‘மணிமிடைப் பவளம்’ என்னும் சொல் நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என மருவி வழங்குகிறது.
பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி நூலிலுள்ள பாடல்களுக்கு ஐந்து பேர் எழுதிய பழமையான ஈடு உரைகள் உள்ளன. திருவாய்மொழி ஈடு உரை மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளது. திருவாய்மொழி வேதத்தின் சாரமாகவும், தத்துவக் களஞ்சியமாகவும் விளங்குகிறது. இவற்றை வெளிப்படுத்தும் வகையில் இதன் உரைகள் உள்ளன.
சோழப் பேரரசுக் காலத்திலும் அதன் பின்னரும், இன்றைய கேரளத்தையும் உள்ளடக்கியிருந்த தமிழ் நாட்டில் ஒருசில வட்டாரங்களில் வடமொழிச் செல்வாக்கு மிகுந்திருந்தது. வடமொழி உயர்வானதாகவும், இறைவனுடைய மொழியாகவும் கற்பிக்கப்பட்ட காலம் அது. தமிழில் வடமொழியைக் கலந்து எழுதுவது உயர் நடையாக அவ்வட்டாரங்களில் எண்ணப்பட்டது. ஆழ்வார்களுக்குப் பின்னர், அவர்களுடைய நூல்களுக்கு உரை எழுதிய இராமானுசருடைய ஆக்கங்கள் [மேற்கோள் தேவை] மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருந்தன. சோழர்காலத்தில் வடமொழியின் வழி புகுந்த சமயக் கருத்துருக்களும், தமிழில் எழுந்த வடமொழித் தழுவல் நூல்களும் இத்தகைய போக்குக்கு வாய்ப்பாக அமைந்தன.
அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.
மணிப்பிரவாள நடையின் பாங்கு
திருவாய்மொழி இரண்டாம்-பத்து எட்டாம்-திருவாய்மொழி பத்தாம் பாடலையும் அதற்கு ஈடு முப்பத்தாறாயிரப் படி தந்துள்ள மணிப்பிரவாள நடை உரையையும் இங்குக் காணலாம்.
பத்தாம் பாட்டு – ‘இவர்களை விடீர், நாம் முந்துமுன்னம் இவர்களைப் போலே யாகாதே அவனை அனுபவிக்கப் பெற்றோமிறே’ என்று ஸ்வலாபாநுஸந் தாகத்தாலே ஹ்ருஷ்டராகிறார்.
சீர்மைகொள் வீடு சுவர்க்கம் நரகீறா
ஈர்மைகொள் தேவர் நடுவாமற் றெப்பொருட்கும்
வேர்முதலாய் வித்தாய்ப் பரந்து தனி நின்ற
கார்முகில்போல் வண்ணன்என் கண்ணனைநான் கண்டேனே.
[சீர்மைகொள் இத்யாதி] ஸர்வப்ரகாரத்தாலும் நன்றான பரமபதம், பரிமிதஸுகமான ஸவர்க்கம், நிஷ்க்ருஷ்டதுர்க்கமேயான நரகம், இவை முடிவாக, ஈரப்பாடுடையரான தேவர்கள் நடுவாக, மற்றுமுண்டான திர்யகாதிகளுக்கும், [வேர்முதலாய் வித்தாய்] த்ரிவிதகாரணமும் தானேயாய், [பரந்து] "தத்ஸ்ருஷ்ட்வா ததேவாநுப்ராவிசத் ததநுப்ரவிச்ய ஸச்சத்யச்சாபவத்" என்கிறபடியே முந்துற இவற்றையுடைய உண்டாக்கி, பின்னை இவற்றையுடைய வஸ்துத்வநாம பாக்த்துவங்களுக்காக அநுப்ரவேசித்து, இப்படி ஜகதாரகராய்நின்று, [தனிநின்ற இத்யாதி] இப்படி ஜகச்சரீரனாய் நின்றவளவேயன்றிக்கே, தன்னுடைய வ்யாவ்ருத்தி தோன்றும்படி ஸ்ரீ வைகுண்டத்திலே வர்ஷுகவலாஹகம் போலே யிருக்கிற அழகிய திருமேனியை யுடையனாயிருந்தவைத்து க்ருஷ்ணனாய் வந்து அவதரித்து எனக்குக் கையாளனானவனை நான் முந்துற முன்னம் கண்டநுமவிக்கப் பெற்றே னென்கிறார்,
- இதில்
- கையாளன் ஆனவன் = கையாள், எடுபிடி-வேலையாள்,
- அன்றிக்கே = அல்லாமலும்
போன்ற தமிழ் வழக்கையும் காணமுடிகிறது.
மணிப்பிரவாள நடை
தமிழில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்திப் பேசுவதோ அல்லது எழுதுவதோ மணிப்பிரவாள நடை எனப்படும். எடுத்துக்காட்டாக தமிழில் உள்ள வார்த்தையான பல்கலைக்கழகம் என்பதை வலிந்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தி சர்வகலாசாலை என மாற்றியமைக்கப்படுகிறது. சர்வகலாசாலை என்ற வார்த்தையில் சர்வம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அனைத்தும் என்றும் கலா என்ற வடமொழிச் சொல்லுக்கு கலை என்றும் பொருள்படுகிறது.
பாடல் சொல்லும் பொருள்
வீடு என்னும் சீர்மை, சுவர்க்கம் (இன்ப உலகம்), நரகம் (துன்ப உலகம்), தேவர் உலகம் (அன்பு கொண்டோர் உலகம்), மற்றுமுள்ள எல்லாப் பொருள்கள் ஆகிய அனைத்துக்கும் வேராகவும், முதலாகவும், வித்தாகவும், பரந்து நிற்பவன் என் கண்ணன். அவனை நான் கண்டேன் – என்கிறார், ஆழ்வார்.
எடுத்துக்காட்டு
அக்காலத்திய மணிப்பிரவாள நடைக்கு எடுத்துக்காட்டாக "உபதேசரத்னமாலை" என்னும் நூலிலிருந்து ஒர் பகுதியைக் கீழே காணலாம்.
- மணவாளமாமுனிகள் தமக்காசார்யரான பிள்ளையுடைய ப்ரசாதத்தாலே, க்ரமாசுதமாய் வந்த அர்த்த விசேஷங்களைப் பின்பற்றாருமறிந்து உஜ்ஜீலிக்கும் படி, ப்ரபந்தரூபேன உபதேசித்து ப்ரகாசிப்பிக்கிறோமென்று ச்ரோத்ரு புத்தி ஸமாதாநார்த்தமாக ப்ரதிஞ்ஞை பண்ணி யருளுகிறார்.
வடமொழி ஒலிகளை குறிக்க கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழ் மணிப்பிரவாள நடையில் தமிழ் எழுத்துக்களும், கிரந்த எழுத்துக்களும் கலந்து எழுத்தப்பட்டன. கீழே மேற்கூறிய பகுதி எவ்வாறு கிரந்தம் கலந்து எழுதப்பட்டது என்பதை காணலாம்.
மணிப்பிரவாளத்தின் தோற்றத்தை குறித்து மு.வரதராசரின் கருத்து
“ | […] நாட்டில் இரு மொழியையும் கற்றுத்தேர்ந்த புலவர் பரம்பரையுடன், வடமொழியை மட்டும் கற்ற புலவர்களும் தமிழ்மட்டுமே கற்ற புலவர்களும் வாழந்து வந்தனர். […] அந்த நிலையில் தமிழறிவு ஒரு புறமும் வடமொழி அறிவு மற்றொரு புறமும் தனித்து இருப்பதை அறிந்த அறிஞர்கள் சிலர் ஒரு புது முயற்சியில் ஈடுபட்டார்கள். சமஸ்கிருத சொற்களையும் தமிழ் சொற்களையும் கலந்த ஒரு மொழிநடையைப் படைத்து மணிப்பிரவாளம் என பெயரிட்டு எழுதத் தொடங்கினார்கள். […] அதன் வாயிலாக, வடமொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய உறவு ஏற்படும் என்றும் வடமொழிப்புலவர்களும் தமிழ்ப் புலவர்களும் ஒன்று பட முடியும் எனவும் நம்பினார்கள். […] மணிப்பிரவாளத்தை வளர்த்தவர்களின் நோக்கம் நல்ல நோக்கமே. தமிழ் நாட்டில் வீணான பிளவு வளர்வதை விரும்பாமல் அறிவுலகத்தில் ஒரு நல்ல ஒற்றுமை ஏற்படுத்துவதற்கு அது உதவியாகும் என நம்பினர். ஆனால், ஒரு நாட்டு மக்களின் வாழ்விலும் சிந்தனையிலும் வழிவழியாக ஊறி, வளர்ந்துவிட்ட மொழியின் தன்மையை படித்தவர்கள் சிலர் சேர்ந்து முயற்சி செய்து மாற்றிவிட முடியாது என்பதை அவர்கள் உணரவில்லை. நல்ல நோக்கம் கொண்டதே ஆயினும், மொழி இயல்புக்கு மாறானது ஆகையால், அவர்களின் நோக்கம் தோல்வியை கண்டது[2] | ” |
மணிப்பிரவாளமும் மலையாளத் தோற்றமும்
கி.பி 9 ஆம் நூற்றாண்டுக்கு முன் தமிழ் மொழியின் ஒரு பகுதியாகவே மலையாளம் இருந்தது. இதன் பின்னர் தென்னாட்டில் மணிப்பிரவாளம் பெருக்கெடுத்தபோது சேர நாட்டுத் தமிழ் மாற்றம் பெறத் தொடங்கியது. பாட்டு என்னும் உள்ளூர் இலக்கிய வழக்கு ஒரு பிரிவினரிடையே பயின்று வந்தபோதிலும், சமூகத்தின் உயர் மட்டத்தினர் நடுவில் மணிப்பிரவாள நடை பரவலாகக் கைக்கொள்ளப்பட்டது. சிறப்பாக நம்பூதிரி சமூகத்தினர் மணிப்பிரவாளத்தை வளர்ப்பதில் முன்னணியில் இருந்தனர். கேரளத்தில், 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் லீலாதிலகம் என்னும் இலக்கண நூல், பாட்டு மரபுக்கும், மணிப்பிரவாளத்துக்கும் இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர், வடமொழிச் சொல் வகைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. மணிப்பிரவாளப் பாடல்களில் வடமொழிஇலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் கூறுகிறது. இது, எவ்வாறு சேரநாட்டுத் தமிழில் மணிப்பிரவாளம் மூலம் வடமொழி படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. கேரளத்தில் இந்த மணிப்பிரவாள நடையில் எழுதி, இன்று கிடைக்கின்ற மிகப் பழைய நூல் வைசிக தந்திரம் என்பதாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.