இந்திய அரசியல்வாதி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
சீமான் (Seeman, பிறப்பு:8 நவம்பர் 1966) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார்.[1] இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்துகிறார்.[3] இவர் தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருகிறார். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருகிறார்.[4][5][6][7][8][9][10]
சீமான் | |
---|---|
பிறப்பு | செந்தமிழன் சீமான்[1][2] நவம்பர் 8, 1966 அரனையூர், சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இனம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
பணி | இயக்குநர், நடிகர், எழுத்தாளர், பாடகர், அரசியல்வாதி |
அரசியல் கட்சி | நாம் தமிழர் கட்சி |
பெற்றோர் | செந்தமிழன் (இறப்பு:13/5/2021), அன்னம்மாள் |
வாழ்க்கைத் துணை | கயல்விழி (திருமணம் 2013) |
வலைத்தளம் | |
www |
சீமான் 1966 ஆம் ஆண்டு, நவம்பர் 08 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள, இளையான்குடி வட்டத்தில் அரனையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன் மற்றும் அன்னம்மாள் ஆவர்.[1] இவரின் உடன்பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரர் ஒருவரும் ஆவர். இவரின் தந்தை செந்தமிழன் 2021 மே 13 அன்று காலமானார். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.[11][12] சீமானின் தந்தை காங்கிரசின் உறுப்பினர் ஆவார். சீமான் அவரது உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டுகளில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவைத் தொடர அவர் சென்னை சென்றார்.
சீமான் முன்னதாக நடிகை விசயலட்சுமியுடன் உறவில் இருந்தார், அவர் 2007 ஆம் ஆண்டில் தனது வாழ்த்துகள் திரைப்படத்தின் மூலம் சந்தித்தார். 2011இல், சீமான் தன்னை ஏமாற்றியதற்காக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.[13] 2011 ஆம் ஆண்டில், இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதில் சீமான் தனது ஆர்வத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளியின் விதவையான யர்ல்மதியைத் தேர்ந்தெடுத்தார், ஆனால் பின்னர் அவ்வாறு செய்யவில்லை.[14]
கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராசா போன்ற முன்னணி இயக்குந&ர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இவரின் முதல் படமான பிரபு, மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராசை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியடைந்தது. நீண்ட கால இடைவேளைக்குப் பின் மாதவன், பூசா, வடிவேலு போன்றோர்களைக் கொண்டு இயக்கிய தம்பி படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூய தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.[15]
சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனுக்குத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.[16]
சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில், நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே 10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், இராசீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், இராசபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரளா, கருநாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமசுகிருத வருவதை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.[17].[18][19][20]. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரசு கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.[21][22][23][24][25] ஆனால் அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.[26][27][28][29][30]
வேலூர் சிறையில் ஐந்து மாத காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், 2011இல் சீமான் மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கட்சியின் தோல்விக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.[31][32] அந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவை வழங்கினார். அப்போது `இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என்ற வாசகத்தையும் பயன்படுத்தினார்.[33][34] காங்கிரசு கட்சி போட்டியிடும் 63 இடங்களில் 59 இடங்களில் சீமான் பிரச்சாரம் செய்தார், மேலும் ஒரு தொகுதி தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் கட்சி தோற்கடிக்கப்பட்டது.[34][35][36]
2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, காங்கிரசு, பாசக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தோற்கடிப்பதற்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிப்ரவரி 2015இல், வீரத்தமிழர் முன்னணி என்னும் அமைப்பைத் தொடங்கினார்.[37]
2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது, இவர் கடலூர் தொகுதியில் இருந்து முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்த தேர்தல்களிலும் போட்டியிட்டது. இவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேர்தல் சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள். சீமான் தனது வேட்பாளர்களை, கடலூரில் பிப்ரவரி 2016 இல் அறிமுகப்படுத்தினார். இவர் கடலூரில் போட்டியிட்டு 12,497 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[38] நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் 1.1 விழுக்காடு வாக்குகளை அக்கட்சி பெற்றது.[39]
ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம் மற்றும் புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் மார்ச்சு 23, 2019 அன்று மாலை 05 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[40] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். இதில் நீலகிரி மக்களவை தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இத்தேர்தலில் 4% வாக்குகளைப் பெற்றது, இதனால் அனைத்து தொகுதிகளிலும் வைப்புத்தொகையை இழந்தது. மேலும் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்டு மூன்றாம் இடத்தை அடைந்தது.
18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார்.[41][42]
தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.[43] மார்ச்சு 7, 2021 அன்று சென்னை ஒய். எம். சி. ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிட்டார்.[44] திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான் தோல்வியடைந்தாலும் 48,597 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தாலும் அதிக தொகுதிகளில் மூன்றாமிடமும், 6.72 சதவிகித வாக்குகளையும் அக்கட்சி பெற்றது
தேர்தல் | தொகுதி | கட்சி | முடிவு | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு % |
---|---|---|---|---|---|
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016 | கடலூர் | நாம் தமிழர் கட்சி | தோல்வி | 12497[45] | 7.3% |
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021 | திருவொற்றியூர் | நாம் தமிழர் கட்சி | தோல்வி | 48597[46] | 24.3% |
வெற்றி | தோல்வி |
சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.
திரைப்படம் | ஆண்டு | குறிப்பு | சான்று |
---|---|---|---|
பாஞ்சாலங்குறிச்சி | 1996 | ||
இனியவளே | 1998 | [55] | |
வீரநடை | 2000 | [56] | |
தம்பி | 2006 | தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது | [57] |
வாழ்த்துகள் | 2008 | [58] |
திரைப்படம் | ஆண்டு | குறிப்பு | சான்று |
---|---|---|---|
பசும்பொன் | 1996 |
திரைப்படம் | ஆண்டு | கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்பு | சான்று |
---|---|---|---|---|---|
அமைதிப்படை | 1994 | மணிவண்ணன் | |||
ஆடும் கூத்து | 2005 | டி. வி. சந்திரன் | |||
பொறி | 2007 | மகாதேவன் | சுப்பிரமணியம் சிவா | [59] | |
பள்ளிக்கூடம் | 2007 | முத்து | தங்கர் பச்சான் | [60] | |
எவனோ ஒருவன் | 2007 | வெற்றி மாறன் | நிஷிகாந்த் காமத் | [61] | |
மாயாண்டி குடும்பத்தார் | 2009 | விருமாண்டி மாயாண்டி | ராசு மதுரவன் | [62] | |
மாசுகோவின் காவிரி | 2010 | அவரே | ரவி வர்மன் | சிறப்புத் தோற்றம் | [63] |
மகிழ்ச்சி | 2010 | வி. கௌதமன் | [64] | ||
உச்சிதனை முகர்ந்தால் | 2011 | சார்லசு அந்தோனி | புகழேந்தி தங்கராஜ் | [65] | |
நாகராச சோழன் ௭ம் ஏ ௭ம் ௭ல் ஏ | 2013 | மணிவண்ணன் | [66] | ||
கண்டுபிடி கண்டுபிடி | TBA | ராம சுப்புராயன் | [67] | ||
தவம் | TBA | ஆர்.விஜய்ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.சூரியன் | [68] | ||
மிக மிக அவசரம் | TBA | சுரேஷ் காமாட்சி | [69] | ||
அமீரா | TBA | இரா. சுப்ரமணியன் | [70] |
Seamless Wikipedia browsing. On steroids.