தமிழீழ விடுதலைப் புலிகளின் நிறுவனர் (1954-2009) From Wikipedia, the free encyclopedia
வேலுப்பிள்ளை பிரபாகரன் (Velupillai Prabhakaran, 26 நவம்பர் 1954 – 17 மே[7] அல்லது 18 மே[1] 2009) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் ஆவார். 1972 இல் புதிய தமிழ்ப் புலிகள் என்ற அமைப்பை தனது 18-ஆவது அகவையில் பிரபாகரன் தொடங்கினார். 1975 இல் தமிழர் ஆர்ப்பாட்ட இயக்கங்களில் இவர் அதிகமாக இயங்கி வந்த காலகட்டத்தில், யாழ்ப்பாண மாநகர மேயர் அல்பிரட் துரையப்பா படுகொலைக்கு காரணமாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். மே 5, 1976 இல் புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரன் | |
---|---|
பிறப்பு | வல்வெட்டித்துறை, இலங்கைத் தீவு[1][2][3] | 26 நவம்பர் 1954
இறப்பு | 18 மே 2009 54) முல்லைத்தீவு, இலங்கை | (அகவை
தேசியம் | ஈழத்தமிழர் |
மற்ற பெயர்கள் | கரிகாலன் |
பணி | தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் |
குற்றச்செயல் | 1996 ஆம் ஆண்டு கொழும்பு மத்திய வங்கி குண்டுவெடிப்பு |
பெற்றோர் | திருவேங்கிடம் வேலுப்பிள்ளை, பார்வதியம்மாள் |
வாழ்க்கைத் துணை | மதிவதனி (1984–2009) † |
பிள்ளைகள் | சார்லசு அன்ரனி (1989–2009) †[4] துவாரகா (1986–2009) †[5] பாலச்சந்திரன் (1997–2009) †[6] |
உலகத் தமிழர்கள் இவரைத் தமிழ்த்தேசியத் தலைவராக மதிக்கிறார்கள், என்றாலும் இலங்கை, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் பல நாட்டு அரசுகளால் இவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். இந்தியப் பிரதமர் இராசிவ் காந்தி படுகொலையில், இவருக்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு கருதியதால் இவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்திய அரசு முனைப்பு காட்டியது. இறுதியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.[8] எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார்.[7] அத்துடன் இவரது மூத்த மகன் சார்ல்ஸ் அன்டனி, மகள் துவாரகா ஆகியோரும் இராணுவத்தினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்கள்.[7] பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் படைத்துறையால் கொல்லப்பட்டதாகப் பின்னாளில் செய்திகளும், அவரது உடலின் ஒளிப்படமும் கிடைக்கப் பெற்றது.[9] மதிவதனியின் நிலையும், துவாரகாவின் நிலையும் புரியப்படவில்லை.
பிரபாகரன் சிறுவனாக இருந்தபோது 1958 ஆம் ஆண்டில் நடந்த தமிழர் இன அழிப்பில் நிகழ்ந்த பயங்கர சம்பவங்கள் இவர் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இனவெறியரால் ஈழத்தமிழர்கள், கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை இவர் கேள்விப்பட்டார். இவருடைய பெற்றோருக்கு நன்கு தெரிந்த ஒரு விதவைத்தாய் தனக்கு நேர்ந்த துயரச் சம்பவத்தைச் சிறுவனாக இருந்த பிரபாகரனுக்குக் கூறினார். பாணந்துறையில் இந்து குரு ஒருவர் உயிரோடு தீ மூட்டி எரிக்கப்பட்ட சம்பவம் போன்ற கொடூரமான வன்முறைகளை இவர் அறிந்தபோது, சிங்கள அரசின் பிடிக்குள்ளிருக்கும் தமிழ் மக்களை மீட்டெடுக்க வேண்டுமென்ற உள்ளுணர்வும் முனைப்பும் இவர் மனதில் உருவாகியது. நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று இவர் முடிவு செய்தார்.
பிரபாகரன் வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரா கல்லூரியில் 10ஆம் வகுப்பு வரையிலும் கல்வி கற்றார். தமிழ் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை முடித்தபிறகு மேற்படிப்புக்குச் செல்ல இலங்கை அரசின் மேற்கல்வி தரப்படுத்தல் கொள்கை ஒரு தடையாக இருந்தது. 10ஆம் வகுப்புவரையிலும் படித்த பிரபாகரன் விடுதலைப் போராளியாகச் செயற்படத் தொடங்கி விட்டதனால் படிப்பைத் தொடரவில்லை. பிரபாகரனின் போக்கு இவரது பெற்றோருக்குப் புரியவில்லை. ஒருநாள் காவல்துறை பிரபாகரனை தேடி முதன்முதலில் அதிகாலை 3 மணிக்கு வீடுவந்த போதே அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது. காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்ற பிரபாகரன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் வீட்டிற்குத் நிரந்தரமாக திரும்பவே இல்லை.
நாகப்பட்டினம் மாவட்டத்தில், தெற்குப்பொய்கைநல்லூர் எனும் ஊரில் உள்ள அய்யனார் கோயிலில் பிரபாகரனுக்கு சுதை சிற்பம் அமைக்கப்பட்டது.[15] இரண்டு குதிரை சிலைகளும், ஒரு யானை சிலையும் அமைக்கப்பட்டு அதில் ஒரு குதிரை வீரன் சிலையும், மற்றொரு குதிரை அருகே பிரபாகரன் சிலையும் அமைக்கப்பட்டது. பிரபாகரன் கையில் துப்பாக்கியுடனும், விடுதலைப் புலிகள் சீருடையுடனும் இருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது.[16][17]
2015 சூலை மாதம் இந்த சிலை இரவில் அகற்றப்பட்டு சிமெண்ட் தளம் போடப்பட்டது. ஊர்மக்கள் இவ்வாறு காவல் துறையினரே செய்தனர் என தெரிவித்தனர்.[18]
விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிகுப்பம் எனும் ஊரில் உள்ள ஐயனார் கோயிலில் வீரப்பன் மற்றும் பிரபாகரனின் சுதை சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. 2010 இல் கட்டப்பட்ட ஐயனார் கோயிலில் இவ்வாறு சிலைகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் மக்களிடம் அவற்றை அகற்ற கூறியுள்ளனர்.[19]
தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது குறித்து சூன் 2015 இல் சீமான் கண்டன அறிக்கை வெளியிட்டார்.[15] அதில் பிரபாகரன் சிலையை மீண்டும் நிறுவ நாம் தமிழர் கட்சி முயலும் என்றார்.[15] வைகோவும் இந்த சிலை உடைப்பிற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தெரிவித்தார்.[20]
பிரபாகரன் 1 அக்டோபர் 1984 இல் மதிவதனியை திருமணம் செய்து கொண்டார். இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிரபாகரன் குடும்பத்தின் எஞ்சிய உறுப்பினர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என்று மே 2009 இல் கூறினார். "நாங்கள் அவர்களின் உடல்களைக் கண்டுபிடிக்கவில்லை, அவற்றைப் பற்றி எந்த தகவலும் இல்லை" என்று அவர் கூறினார். முழுக் குடும்பமும் அழிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. மதிவதனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரின் சடலங்கள் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் ஒரு புதர் திட்டில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது இவரது 12 வயது மகன் தூக்கிலிடப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபாகரனின் பெற்றோர், திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி ஆவர். 70 வயதில், வவுனியா நகருக்கு அருகில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மெனிக் பண்ணை முகாமில் காணப்பட்டனர். தங்களை விசாரிக்கவோ, தீங்கு செய்யவோ அல்லது மோசமாக நடத்தப்படவோ மாட்டோம் என்று இலங்கை இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களுக்கு உறுதியளித்தன. சனவரி 2010 இல் வேலுப்பிள்ளை இறக்கும் வரை அவர்கள் இலங்கை இராணுவக் காவலில் வைக்கப்பட்டனர். பிரபாகரனுக்கு வினோதினி இராஜேந்திரன் என்ற சகோதரி உள்ளார்.
பிரான்சில் உள்ள செயற்பாட்டாளர்கள் இவரது உருவப்படத்தைக் கொண்ட தபால்தலையை வெளியிட்டுள்ளனர். இதற்கு பிரான்சின் அஞ்சல் துறை அங்கீகாரம் அளிக்கவில்லை. இத்துடன் தமிழீழ வரைபடம், விடுதலைப் புலிகளின் மலர், புலிக்கொடி ஆகியவற்றைக் கொண்ட தபால்தலை முத்திரைகளும் வெளியிட்டுள்ளனர்.[21] இதற்கு பிரான்சிலுள்ள இலங்கைத் தூதரகம் கண்டனம் வெளியிட்டது.[22]
வேலுபிள்ளை பிராபாகரன் தீவிரவாதம் , கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்காக 1991 முதல் பன்னாட்டுக் காவலகம் அமைப்பால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்.[23] மேலும் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது.[24] மேலும் 1991இல் ராஜீவ் காந்தியை படுகொலை செய்ய திட்டமிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.[25]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.