இந்து சமயம் (ஆங்கிலம்: Hinduism) இந்திய துணைக்கண்டத்தில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.[1][2] பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிசி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றை உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.
ஆகக் குறைந்தது, பொ.ஊ.மு. 1700 ஆண்டுக்கு அணித்தான வேத காலப் பண்பாட்டில் தோற்றம் பெற்றது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் இந்து சமயக் கடவுளில் ஒருவரான சிவனின் உருவ அமைப்பு கொண்ட சிலைகள், ஓவியங்களின் ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, நம்பிக்கை, அன்பு, உறுதி என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட எல்லாவிதமான சமயச் செயற்பாடுகளும், இறுதியாக ஒரே தன்னுணர்வு நிலைக்கே இட்டுச் செல்கின்றன. அதனால்தான் இந்து சமயச் சிந்தனைகள் பல்வேறுபட்ட நம்பிக்கைகள் தொடர்பில் சகிப்புத் தன்மையைக் கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கின்றன.
ஓர் இந்துவுக்கு, "நிலையான தர்மம்" என்பதை வரையறுப்பதில், இந்த எண்ணமே உந்து சக்தியாக உள்ளது.
சொல்லிலக்கணம் மற்றும் சொல் வரலாறு
"இந்து" என்ற சொல் "சிந்து" (Sindhu) என்ற சமசுகிருதச் சொல்லிலிருந்து ஈரானிய மொழியான பாரசீக மொழி மூலமாக உருவான ஒரு சொல் ஆகும். இந்து என்ற சொல் முதன்முதலில் பாரசீகத்தினரால் ஒரு புவியியல் சொல்லாக, அதாவது 'சிந்து நதிக்குக் கிழக்குப் பக்கம் வசிக்கும்' அனைவரையும் சேர்த்துக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3] அவ்வாறு பாரசீகர்களால் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இந்த இந்து எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மதத்தைக் குறிக்காமல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை (இடத்தைக்) குறிப்பதாகவே இருந்தது.[குறிப்பு 1] சவகர்லால் நேரு 1946இல் எழுதிய "இந்தியாவை அறிந்துகொள்தல்" (The Discovery of India) எனும் நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.[4][குறிப்பு 2] சிந்து நதிக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைக் குறிக்கப் பயன்பட்ட இந்து என்கிற பாரசீகச் சொல்லிலிருந்து அரேபிய மொழியில் உருவான சொல்லான அல்-இந்த் என்பதிலிருந்து ஐரோப்பிய மொழிகளில் வழக்கத்தில் வந்த சொற்கள் இந்தீ (Indie), இந்துஸ்தான் போன்றவை ஆகும்.[5] 13ஆம் நூற்றாண்டில் தற்கால இந்தியத் துணைகண்டத்தின் நிலப்பகுதியைக் குறிக்க இந்துசுதான் (சிந்து நதியின் சுதானம்) எனும் பாரசீகச் சொல்வழக்கு மிகவும் பிரபலமடைந்தது.[6] பின்னர், இந்துக்கா (Hinduka) என்ற சொல் சில சமசுகிருத நூல்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பிற்காலத்தில் இயற்றப்பட்ட கசுமீரின் இராசதரங்கினிகள் (Rajataranginis of Kashmir, Hinduka, c. 1450). இதில் இந்து என்ற சொல் 'இந்திய நிலத்தில் வாழ்பவர்களை யவனரிடமிருந்தும் மிலேச்சர்களிடமிருந்தும் (Mleccha) வேறுபடுத்திக் காட்டவே' பயன்படுத்தப்பட்டது.[7] 18ஆம் நூற்றாண்டு இறுதியில் ஐரோப்பிய வணிகர்களும் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களும் சிந்து நதிக்கு அப்பால் உள்ள அனைத்து மதத்தினரையும் சேர்த்துக் குறிக்க இந்தூசு (Hindus) என்ற சொல்லைப் பயன்படுத்தினர். 19ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழி அகராதியில் 'இந்து சமயம்' என்ற சொல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அது இந்துக்கள் என்கிற பதத்திற்கு இந்திய நிலபரப்பில் தோன்றிய அனைத்து சமயம், மெய்யியல் மற்றும் கலாச்சார மரபுகளைச் சேர்த்துக் குறிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் இந்து என்ற சொல் இசுலாமியர்கள், சீக்கியர்கள், சைனர்கள் (சமணர்கள்), மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரைத் தவிர 'மற்ற அனைவரையும்' குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[3]
வரலாறு
இயற்கையின் நிகழ்வுகளான இடி, மின்னல், காற்று, நெருப்பு போன்றவற்றினைக் கண்டு பயந்த ஆதி மனிதன், அவற்றைக் கடவுள்களாக வழிபடத்தொடங்கினார்கள். இந்திர தேவன், சூரிய தேவன், சந்திர தேவன், அக்னி தேவன், வருண தேவன் என இயற்கையே முதல் கடவுளாகவும், இவற்றை இயக்குகின்ற சக்தியான பரம்பொருளாகவும் உணரப்பட்டது.
பல்வேறு முனிவர்களாலும், முன்னோர்களாலும் செவி வழியாகக் கடத்தப்பட்ட வேதம் எனும் வாழ்வியல் முறையை விளக்கமானது, நாகரீகம் வளர்ந்த பின் ஓலைச்சுவடியில் பதியப்பட்டது. இந்த வேதங்களில் உள்ள ரிசா, குபா, கரமு போன்ற ஆறுகள் ஆப்கான் தேசத்தினை சேர்ந்தவை என்பதால், சிந்து நதி நாகரீகம் அதுவரை பரவியிருந்ததாகக் கூறப்பெறுகிறது. இவ்வாறான வேதத்தினை முன்நிறுத்துகின்ற மதம் வேதமதமெனவும் அழைக்கப்பெறுகிறது.
வேதத்தின் உட்பொருளைக் கொண்டு எளிமையாக மக்களுக்குக் கூறுவதற்காக உபநிடதங்கள் உருவாயின. அதனினும் எளிமையாகக் கதைவடிவில் வேதம் மற்றும் உபநிடதங்களை விளக்குவதற்காகப் புராணங்கள் தோற்றுவிக்கப்பெற்றன. இவற்றில் பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்றும், சில உபபுராணங்கள் என்றும் அழைக்கப்பெறுகின்றன.
ஆரியர்களின் வருகைக்கு முன்பு, ஏறத்தாழ 450 மதங்கள் இந்தியப்பகுதியில் இருந்துள்ளன. அவற்றோடு வேதமதம் இரண்டறக் கலந்து தற்போதுள்ள இந்து மதமாக அறியப்பெறுகிறது.
ஒரு சுருக்கமான மேலோட்டம்
இந்து சமயம் வேதங்களையும், தொடர்ந்து வந்த உபநிடதங்கள் மற்றும் காலங்காலமாகப் பல்வேறு குருமார்களின் அறிவுரைகளையும் ஆதாரமாகக் கொண்ட ஆன்மீக அடிப்படையில் தங்கியுள்ளது. வேத/தத்துவஞானப் பிரிவுகள், பக்தி யோகம், கர்ம யோகம் ஞான யோகம் மற்றும் யோகா, தந்திர ஆகமப் பிரிவுகள் என்பவற்றிலிருந்து ஊற்றெடுக்கும் சிந்தனையோட்டங்கள் அனைத்தும் இந்து சமயம் என்கின்ற ஒரே சமுத்திரத்திலே சங்கமமாகின்றன.
சனாதன தர்மம்
"சனாதன தர்மம்" அல்லது "நிலையான தத்துவஞானம்/இசைவு/நம்பிக்கை" என்பதே பல ஆயிரம் ஆண்டுகளாக இந்து சமயத்தைக் குறித்துவந்த பெயராகும். இந்துக்களைப் பொறுத்தவரை, இது, மனிதனால் உருவாக்கப்பட்டவற்றைக் கடந்து, தனிமனித விருப்பு வெறுப்புக்களைக் குறியாது, தூய உணர்வுபூர்வமான அறிவியலைக் குறிக்கும் சில ஆன்மீகக் கொள்கைகள் என்றும் நிலையானவையாக இருக்கின்றன என்ற எண்ணத்தைப் பற்றிப் பேசுகின்றது.
யோக தர்மம்
இந்து சமயத்தில் பல வகையான தர்மங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம் ஆகியன முக்கியமானவை. இந்த யோகங்கள் இந்து மதத்தின் இரண்டு முக்கியமான தத்துவ நூல்களான பகவத் கீதை மற்றும் யோக சூத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
தத்துவங்கள்
- மீமாம்சம்
- சாங்கியம்
- வைசேடிகம்
- நியாயம் (இந்து தத்துவம்)
- அளவை
- வேதாந்தம்
- சித்தாந்தம்
- அத்வைதம்
- விசிட்டாத்துவைதம்
- துவைதம்
- சைவ சித்தாந்தம்
வாழ்வின் நான்கு இலக்குகள்
இந்துக்கள் கொள்ள வேண்டிய தலையாய நான்கு இலக்குகளாக அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகியவை கருதப்படுகின்றன. அனைத்து உயிர்களும் இளமையில் பொருள், இன்பம் (உடல், உள்ளம், மற்றும் உணர்வு) ஆகியவற்றைத் தேடுதல் இயல்பு என்றும், மனம் முதிர்வடைந்தவுடன் இவற்றின் நெறிசார்ந்த தேடுதலை உயர்கட்டமைப்பான அறத்தின்கீழ் முறைப்படுத்துவரென்றும் கூறப்படுகிறது. இருந்தும், வாழ்வில் நிலையான யாவுங்கடந்த மகிழ்நிலையைத் தருவது வீடு, முக்தி, உய்வு, கடைத்தேற்றம் என்று பலவாறாக அழைக்கப்படும் பிறப்பு இறப்பற்ற விடுதலை நிலையேயெனக் கூறப்பட்டுள்ளது. இந்த நான்கு இலக்குகளில் அறம், வீடு ஆகியனவற்றை கரைகளாகவும், இன்பம், பொருள் ஆகியவற்றை அவற்றிடையே ஓடும் ஆறு எனவும் சிலர் நோக்குவர்.
இறைத்தொண்டு / சமூக சேவை
இறைத்தொண்டு என்பது கோவில்களைக் காப்பாற்றி அக்கோவில்களில் குடியிருக்கும் கடவுளுக்கான வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வதும், கோவில்கள் இல்லாத ஊர்களில் கோவில்கள் கட்டி வழிபாடுகள் ஏற்பாடு செய்வதும், பல ஊர்களில் சேதப்பட்டிருக்கும் கோவில்களைப் புனரமைத்து வழிபாடு முறைகளைத் தொடரச்செய்வதும் ஆகும். மக்கள் சேவை என்பது, ஏழை மக்களுக்கும், இல்லாத/இயலாத மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், நோய்க்கு மருந்து, கல்விச்செல்வம் ஆகியனவற்றை அளிப்பதும் ஆகும்.
நூல்கள்
புள்ளிவிவரங்கள்
உலக நாடுகளில் இந்துக்களின் வீதம் 2006 ஆம் ஆண்டின் அமெரிக்க அரசுத்துறை சர்வதேச மத சுதந்திர அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.[8] ஒவ்வொரு நாட்டின் மொத்த மக்கள் தொகை அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பில் (2007 மதிப்பீடுகள்) இருந்து எடுக்கப்பட்டது.[9] சதவீத அடிப்படையில், உலகில் இந்து சமய மக்கள் அதிக பெரும்பான்மை உள்ள நாடுகளில் முதலாவதாக நேபாளம் உள்ளது. அதைத் தொடர்ந்து வரிசையில் இந்தியாவும் அடுத்து மொரிசியசும் உள்ளன.
இந்து சமய மக்கள் நிறைந்த நாடுகள் (2008ம் ஆண்டின் கணிப்புப் படி):
- நேபாளம் 86.5%[10]
- இந்தியா 80.5%
- மொரிசியசு 54%[11]
- கயானா 28%[12]
- பிஜி 27.9%[13]
- பூட்டான் 25%[14]
- டிரினிடாட் மற்றும் டொபாகோ 22.5%
- சுரிநாம் 20%[15]
- இலங்கை 15%[16]
- வங்காளதேசம் 9.6%[17]
- கத்தார் 7.2%
- ரீயூனியன் 6.7%
- மலேசியா 6.3%[18]
- பகுரைன் 6.25%
- குவைத் 6%
- ஐக்கிய அரபு அமீரகம் 5%
- சிங்கப்பூர் 4%
- ஓமான் 3%
- பெலீசு 2.3%
- சீசெல்சு 2.1%[19]
மக்கள் தொகையில் இந்து மதம் கிறித்துவம் மற்றும் இசுலாமியத்துக்குப் பின்னர், உலகின் மூன்றாவது பெரிய மதம் இருக்கிறது.
திருவிழாக்கள்
சமூகம்
இந்து மத பிரிவுகள்
இந்து மதத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என ஆறு பிரிவுகள் உள்ளன.
- சைவம் – சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
- வைணவம் – விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
- சாக்தம் – உமையை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
- காணாபத்தியம் – கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
- கௌமாரம் – முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
- சௌரம் – சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்
பொதுவாக, இது சைவம், வைணவம் மற்றும் சாக்தம் ஆகிய 3 பிரிவுகளாகக் கருதப்படுகிறது.காணாபத்தியம் மற்றும் கௌமாரம், சைவ சமயத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. சௌரம் வைணவ சமயத்தின் ஒரு பகுதியாகும்.[20][21]
வர்ணம்
வேதாந்த காலத்தில் வர்ணங்கைளை அடிப்படையாகக் கொண்டு குணங்களும் வகுத்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன்படி சத்துவ குணம் – அமைதி, இராட்சத குணம் – மூர்க்கம் மற்றும் ஆர்வமிக்கவர், கிளர்ச்சி குணம். தாமச குணம் – சிரத்தையற்ற, குறை குணமுள்ளவர்கள், மந்த குணம், சோம்பல் என்ற மூன்று குணங்களாகப் பிரித்துக் கொண்டனர்.
- பிராமணர் – மிகு சாத்வீகம் (சத்துவ குணம்).
- சத்திரியர் – குறை சாத்வீகம் – அதிக ராசசீகம் இராட்சத குணம், குறை தமாசீகம்.
- வைசியர் – சாத்வீகமற்றவர், குறை ராசசீகம், அதிக தாமாசீகம்.
- சூத்திரர் –சாத்வீகமற்றவர், ராசசீகமற்றவர், தாமசீகம் மட்டும் தாமச குணம்.
ஆசிரமம் (நான்கு நிலைகள்)
இந்து மதம் வழமையான வாழ்க்கையை நான்காகப் பிரிக்கின்றது. இவை ஆசிரமம் என்று அழைக்கப்பெறுகின்றன. அவையாவன,.
அகிம்சை - சைவ உணவு பழக்கம்
தாவரங்கள் மற்றும் மனிதர் அல்லாத உயிரினத்திடமும் அன்பு பாராட்டுவதும், உயிர்களுக்குத் துன்பம் தராமல் இருப்பதுவும் அகிம்சைக் கொள்கையாகும். இந்து சமய நெறிகளை விளக்கும் உபநிடதங்களிலும், இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த அகிம்சைப் பற்றிக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அகிம்சைக் கொள்கைப்படி உயிர்களை வதைத்தலை தவிர்க்கும் பொருட்டு சைவ உணவுப் பழக்கத்தினை பல இந்துகள் கடைபிடிக்கின்றனர்.
விளக்கம்
இந்தக் கட்டுரையில் சொந்த ஆய்வுக் கருத்துக்கள் இருக்கலாம். |
இக்கட்டுரையின் அறிமுகப்பகுதி மிகவும் குறைவாக அல்லது இல்லாதுள்ளது. |
இந்து மதம் சிந்துவெளியில் தோன்றிய மதம்.
- தெய்வ உருவங்கள்
- ஆயுதங்கள் (சூலம் போன்றவை)
- விலங்கு-மனிதன் (காமதேனு, விநாயகர் போன்றவை)
- ஆண்-பெண் (அம்மையப்பர்)
- பிரிவினைகள்
- இருபிரிவு
- இதன் வளர்ச்சியில் சிவன், திருமால் வழிபாடுகள் தனித்தனியே பிரிந்தன. சிவனை வழிபடுவோர் சைவர். தென்னாடுடைய சிவன் என இவர்கள் தம் தெய்வத்தைப் போற்றினர். குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாடு கடற்கோளில் அழிந்துபோனதால் பிற்காலத்தில் சிவனை அழிக்கும் தெய்வமாக்கினர். அழிக்கும் தீ நிறத்தானைப் 'பொன்னார் மேனியன்' என்றனர். மை நிறம் கொண்ட மாயோனைக் காக்கும் கடவுள் என்றனர். தொல்காப்பயம் மாயோனை முல்லைநிலத் தெய்வம் என்கிறது.
தெய்வம் | நிறம் | கால நிறம் | தன்மை | நிகழ்வு |
---|---|---|---|---|
சிவன் | தீ நிறம் (செம்பொன்) | பகல் | வெம்மை | நாம் நமக்குள் சிதைதல் |
மாஆல் (படைப்பவனைத் தோற்றுவித்த விட்டுணு) | கடல்நீர் | இரவு | தண்மை | நாம் நமக்குள் வளர்தல் |
- முப்பிரிவு
- படைக்கும் தெய்வம் என ஒன்றை உருவாக்கி அயன் என்றனர். அயன், அரி, அரன் (பிரமா, விட்டுணு, சிவன்) என்றனர்.
அயன் | படைப்பவன் | எண்ணம் |
அரி | காப்பவன் | நினைவு |
அரன் | அழிப்பவன் | மறதி |
- பலவகைப் பிரிவு
உருவ வழிபாட்டில் பல்வகைத் தெய்வங்கள் தோன்றின
- பெண் தெய்வ வழிபாடு சாத்தம் (சாக்தம்)
- இப்படி மனம் போன போக்கில் தெய்வங்களின் எண்ணிக்கை பெருகிற்று.
- தன்னிலை விளக்கம்
தன்னையும் இறைவனையும் ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.
சீவாதமாவைப் பரமாத்மாவோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.
உடலுயிரைத் தனியுயிரோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தன்னிலை விளக்கம்.
- தான் வேறு, இறைவன் வேறு என்னும் அடிப்படையில் பிரிவினைப் பாகுபாடுகள் தோன்றின.
- இறைவனைத் தன்னோடு ஒப்பிட்டுப்பார்த்த மதாச்சாரியர்கள் பிற்காலத்தில் தோன்றினர்
- தன்னிலை விளக்கச் சுருக்கம்
- மத ஆச்சாரியர்கள்
- அத்துவைதம் (அ+த்வா நெறி) – தெய்வத்துக்குள்ளே தான், தனக்குள்ளே தெய்வம் (பரமாத்மாவும் சீவாத்மாவும் ஒன்று) எனக் கண்டவர் எட்டாம் நூற்றாண்டு, கேரள மாநிலம் காலடி என்னும் ஊரில் பிறந்த ஆதி சங்கரர். இவரது கோட்பாட்டைக் காஞ்சிபுரத்தை அடுத்த கலவை என்னும் ஊரில் பிறந்த சங்கரர் பின்பற்றினார். இவரது காலம் பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டு.
- விசிட்டாத்துவைதம் - இறைவன் நமக்குள் ஒன்றியும், நம்மிடமிருந்து பிரிந்தும் நம்மை ஆட்டிப்படைக்கிறான். இராமானுசர். இவரது காலம் 12ஆம் நூற்றாண்டு.
- துவைதம் நெறி – இறைவன் (பிரமம்) தனித்து நின்று இயக்குகிறான்.மத்துவர் கோட்பாடு. இவரது காலம் 14ஆம் நூற்றாண்டு.
கோட்பாடு | விளக்கம் | உவமை விளக்கம் வேதாத்திரி மகரிசி |
---|---|---|
இருநிலை (துவைதம்) | அவனும் நானும் வேறு | உணவு வேறு, நான் வேறு |
ஒருநிலை (அத்துவைதம்) | அவனும் நானும் ஒன்று | உணவு உடலில் சத்து ஆனபின், உணவும் நானும் ஒன்று |
விரிநிலை (விசிட்டாத்துவைதம்) | அவனும் நானும் ஒன்றாகவும், வேறாகவும் இருக்கிறோம் | உணவு வாயில் விழும்போது |
- அறிவுக் கண்ணோட்டம்
தமிழகச் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக்கண் கொண்டு பார்த்தனர்.
- மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
- நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்.
- செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல், ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில் கொண்டனன் [22]
- பல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வம் என்று ஆம் எனல் கேளீரோ [23]
என்றெல்லாம் சித்தர்கள் தெய்வத்தை அறிவுக் கண்ணோட்டத்துடன் பார்த்தனர்.
- அறிவியல் கண்ணோட்டம்
- உயிரினங்களின் தோற்றம், மாற்றம், மறைவு அனைத்தும் பஞ்சபூதச் சேர்க்கைப் பிரிவுகளால் நிகழ்கிறது.
- உயிரும் உடலும் இணைந்தால் உணர்வு தோன்றும்
- உயிரினங்கள் கூடி வாழ்ந்தால் இன்பம். பிரிந்து வாழ்ந்தால் துன்பம். ஒவ்வாமையும் துன்பம்.
- இந்தியாவின் ஆறு சமயங்கள்
- இந்து மதம் போன்ற இந்தியச் சமயநெறிகள் ஆறு
இவற்றையும் பார்க்கவும்
- இந்துசமயம்
- தொடர்புடைய அமைப்புகள் மற்றும் மதங்கள்
குறிப்புகள்
- Gavin Flood adds: "In Arabic texts, Al-Hind is a term used for the people of modern-day India and 'Hindu', or 'Hindoo', was used towards the end of the eighteenth century by the British to refer to the people of 'Hindustan', the people of northwest India. Eventually 'Hindu' became virtually equivalent to an 'Indian' who was not a Muslim, Sikh, Jain or Christian, thereby encompassing a range of religious beliefs and practices. The '-ism' was added to Hindu in around 1830 to denote the culture and religion of the high-caste Brahmans in contrast to other religions, and the term was soon appropriated by Indians themselves in the context of building a national identity opposed to colonialism, though the term 'Hindu' was used in Sanskrit and Bengali hagiographic texts in contrast to 'Yavana' or Muslim as early as the sixteenth century".[3]
- Jawaharlal Nehru adds: "In this quotation Vincent Smith has used the words 'Hinduism' and 'Hinduised'. I do not think it is correct to use them in this way unless they are used in the widest sense of Indian culture. They are apt to mislead to-day when they are associated with a much narrower, and specifically religious, concept. The word 'Hindu' does not occur at all in our ancient literature. The first reference to it in an Indian book is, I am told, in a Tantrik work of the eighth century A.C., where 'Hindu' means a people and not the followers of a particular religion. But it is clear that the word is a very old one, as it occurs in the Avesta and in old Persian. It was used then and for a thousand years or more later by the peoples of western and central Asia for India, or rather for the people living on the other side of the Indus river. The word is clearly derived from Sindhu, the old, as well as the present, Indian name for the Indus. From this Sindhu came the words Hindu and Hindustan, as well as Indus and India. The use of the word 'Hindu' in connection with a particular religion is of very late occurrence".[4]
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.