From Wikipedia, the free encyclopedia
இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயம் (Hinduism and Sikhism) பஞ்சாப் பகுதியில் தோன்றிவைகள். இந்து சமயம் மூவாயிரத்திற்கும் முற்பட்ட ஆண்டுகளுக்கு முன் தோன்றி, படிப்படியாக வளர்ச்சியடைந்த பண்டைய சமயமாகும். ஆனால் சீக்கிய சமயம், இந்து குடும்பத்தில் பிறந்தவரான குரு நானக் என்பவரால், பதினைந்தாம் நூற்றாண்டில், முகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. [1]
கர்மா, தருமம், மோட்சம், மாயா, சம்சாரா போன்ற தத்துவக் கருத்துகளை இந்து மற்றும் சீக்கிய சமயங்கள் பகிர்ந்து கொள்கின்றன.[2][3] முகலாயர்களின் அடக்குமுறைகளிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காகவும், முகலாயர்களை எதிர்கொள்வதற்கும், பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மையான இந்துக்கள் தங்களை சீக்கிய சமயத்தில் இணைத்துக் கொண்டனர்.[4] முதல் முகலாய ஆட்சியாளரான பாபரை எதிர்த்து, சீக்கிய சமயம் தோற்றுவிக்கப்பட்டது.[4]
இந்து சமயத்தின் உபநிடதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரம் ஆகிய வேதாந்தங்களில் கூறியுள்ள நிர்குண பிரம்ம தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு உருவமற்ற இறைவனை சீக்கிய சமயம் ஏற்றுக் கொள்கிறது. [5] இந்து சமூகத்தில் பிறந்த குரு நானக் பக்தி இயக்கத்தை வளர்த்து, சீக்கிய சமயத்தின் அடிப்படை கருத்துருக்களை நிறுவியவர்.[1]சீக்கிய சமய மரபின் அடிவேர்கள், சாதுக்கள் பரப்பிய பக்தி இயக்கமாகும்.[6]
இந்து சமயச் சின்னமாக ஓங்காரம் எனும் ஓம் இருப்பது போன்று, சீக்கிய சமயத்தினர் தங்களது சமயச் சின்னமாக இக் ஓங்காரம் (Ik Onkar) எனும் ஒலியை ஏற்றுள்ளனர். [7][8] ஓம் என்பது இறைவனின் திருப் பெயராகும்.[9]
முகலாயர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறைகளுக்கு ஆளாகப்பட்ட பஞ்சாப் பகுதி இந்துக்கள், தங்களை சீக்கிய சமயத்தினரும், அவர்களது குருமார்களும் காப்பார்கள் என நம்பிக்கையுடன் வாழ்ந்தனர்.[10] பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் வாழ்ந்த இந்து மற்றும் சீக்கிய மக்களிடையே, முகலாய ஆட்சியினர்களுக்கு எதிராக வீர உணர்வை ஊட்டினார் குரு தேக் பகதூர்.[11][12][13]அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில், இந்து சமயம் மற்றும் சீக்கிய சமயத்தினரின் வழிபாட்டு இடங்களை சிதைத்தும், தீர்த்த யாத்திரை போன்ற சமயக் கடமைகளை நிறைவேற்ற மொகலாய அரசினர் வரி வசூலித்தை குரு தேக் பகதூர் மிகக் கடுமையாக எதிர்த்தார்.[12][14][15]
தேக் பகதூரின் மகனும், சீக்கிய சமயத்தின் இறுதி குருவுமான குரு கோவிந்த சிங்கால் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் படி, குரு தேக் பகதூர், காஷ்மீர் இந்துக்களை பாதுகாப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.[11][13]அவுரங்கசீப், குரு தேக் பகதூரை தில்லிக்கு வரவழைத்து, அவரை இசுலாமிய சமயத்திற்கு கட்டாய மதம் மாற வேண்டும் அல்லது இறக்க நேரிடும் என எச்சரித்தார்.[11][13] அவுரங்கசீப்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத காரணத்தினால், குரு தேக் பகதூர் சிறையில் பல வாரங்கள் அடைக்கப்பட்டார்.[16][17][13] இறுதியாக பொது மக்கள் முன்னிலையில் தேக் பகதூர் தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிர்த் தியாகம் செய்தார்.[18][19][12]
சீக்கிய சமயம் உருவமற்ற ஒரு கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள். இந்து சமயம் உருவமுள்ள, பல கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை கொண்டது. [20]
சீக்கிய சமயத்தினர் சடங்குகளில் நம்பிக்கை அற்றவர்கள். சமயக் குருக்களின் பெயர்களை மட்டும் தியானம் செய்பவர்கள். இந்து சமயத்தில் சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என முக்கியப் பிரிவுகள் இருப்பதால், சமயச் சடங்குகளிலும் வேறுபாடுகள் உள்ளது. [21][22] [23]
சீக்கிய சமயம் சிலை வழிபாட்டை மறுக்கிறது.[24] இந்து சமயத்தினர் தெய்வங்களின் சிலை வழிபாட்டில் நம்பிக்கை உடையவர்கள்.[25] இந்து சமயம் சிலை வழிபாட்டுடன் பஞ்சபூதங்களையும் வழிபடும் முறை கொண்டுள்ளது. லிங்கத்தை நிறுவி அதனை சிவனாக வழிபடும் முறையும் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் உள்ளது. [26][27]
சீக்கிய சமயத்தின் ஆன்மீக விடுதலை என்ற கருத்துரு, இந்து சமயத்தினரின் முக்தி என்ற கருத்துரு போன்றதே. [28] முக்தி பேறு பிறவிச்சுழற்சி தடுத்து, பிறவா நிலை அடைவதாகும். [28]இறை அருளால் மட்டுமே முக்தி கிடைக்கும் என்பது சீக்கிய சமயத்தின் நம்பிக்கையாகும்.[29] சீக்கிய சமய சாத்திரங்களில் முக்தி பேறை விட இறை பக்தி அதிகம் வலியுறுத்தப்படுகிறது. [29]
இந்துக்கள் போன்று சீக்கியர்களும், வீடுபேற்றிக்காக இறைவன் அல்லது குருவின் பெயரை தொடர்ந்து மனதில் உச்சரித்து, (நாம ஜெபம்) தியானிக்கும் பழக்கம் உடையவர்கள். .[28][29]
இந்து - சீக்கிய சமயத்திற்கிடையே உள்ள ஒற்றுமைகள்:
சீக்கிய சமயத்தினர் தங்களது சமயத் தத்துவங்களும்; சமூக கட்டமைப்பும், தங்களது முன்னோர்களின் இந்து சமயத்தைப் போன்றதே எனக் கருதுகிறார்கள். [30] சீக்கியர்-இந்துக்களிடையே, குறிப்பாக கத்ரி சமூகத்திரிடையே, சமயக் கலப்புத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.[30] பஞ்சாப், அரியானா போன்ற பகுதிகளில் உள்ள பல இந்துக் குடும்பத்தினர் தங்களின் முதல் ஆண் குழந்தையை, சீக்கிய மரபுப் படி வளர்க்கின்றனர்.[30]
அதே போன்று ஜம்மு பகுதியில் வாழும் டோக்ரி மொழி பேசும் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்த இந்து - சீக்கியரிடையே கலப்புத் திருமணங்கள் தொடர்கிறது. [31] [32]
இந்து சமய சாதிய கட்டமைப்புகள், சீக்கிய சமயத்திலும் இருப்பதால், ஒரே சாதியைச் சேர்ந்த இந்து - சீக்கியகளிடையே சமயக் கலப்புத் திருமணங்களை பெற்றோர்களே முன்னின்று நடத்துகின்றனர்.[33]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.