பண்டைய இந்தியத் தத்துவம் From Wikipedia, the free encyclopedia
வைசேஷிகம் (Vaiśeṣika, சமக்கிருதம்: वैशेषिक) என்பது இந்திய மெய்யியலில் வேதத்தை ஏற்கும் ஆறு முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். கணாதன் எனப்படும் கணபுஜா என்கின்ற குரு உருவாக்கிய சாத்திரம். ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்து அடையாளம் கண்டு கொள்வதற்கு அதன் சிறப்புத் தன்மையே இதன் அடிப்படை.[1] [2] அதன் சிறப்புத் தன்மையை ஆராய்வதால் இதற்கு வைசேடிகம் அல்லது வைசேஷிகம் என்று பெயர் பெற்றது. இந்திய தத்துவவியலில் தர்சனம் எனும் சொல் முதன்முதலில் வைசேடிக தத்துவ நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தத்துவ அறிஞர் தாஸ் குப்தா கூறுகிறார்.[3]
கணபுஜா என்பதற்கு அணுக்களை உண்பவர் என்று பொருள். இப்பெயர் வரக்காரணம், அவரது எளிமையை விளக்குவதாகும். அறுவடை முடிந்த நிலங்களில் சிதறிக்கிடக்கும் நெல், கோதுமை மற்றும் இதர தாணியங்களை பொறுக்கி அதனை சமைத்து உண்பவராம். தற்கால இந்தியத் தத்துவவியல் அறிஞர்களான குப்புசாமி சாத்திரி மற்றும் கார்பே இருவரும், கணாதரர் அல்லது கணபுஜரை நாத்திகவாதி என்று கருதுகின்றனர்.
வைசேடிக தத்துவம் ஆறு ஆத்திகத் தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்களில் ஒன்று, மற்றைய ஆத்திக தர்சனங்கள் அல்லது வைதிக தர்சனங்கள் 1 சாங்கியம், 2 யோகம், 3 நியாயம், 4 பூர்வ மீமாம்சை , 5 வேதாந்தம். வைசேடிக தத்துவத்தில் ஒரு பொருளை நன்கு அறியும் அறிவுக்கு (பிரமா) பிரமாணம் எனப்பட்டது. வைசேடிகம் ஒரு பொருளை நான்கு வழிகளில் அறிய முடியும் எனக்கூறுகிறது. 1 உணர்தல் (பிரத்தியட்சம்) (நேரில் பார்த்து உணர்தல்), 2 ஊகம் (அனுமானம்) 3. உவமை, 4 வாய்ச்சொல் (சப்தம்) ஆகிய நான்கு முறைகளில் ஒரு பொருளைப் பற்றி விளக்கம் முடியும் என்றனர்.அதிர்ஷ்டம் எனும் தத்துவம் வைசேசிகம் கூறுகிறது.[4]
வைசேடிக சூத்திரத்தின் தொகுப்பு இன்று நம்மிடையே இல்லை. இருப்பினும் பௌத்த சமயம் மற்றும் சமண சமய நூல்களிலிருந்து மட்டுமே, வைசேடிக சூத்திரத்தின் சில விளக்கங்கள் அறிய இயலுகிறது. கி. பி., 4 - 5 நூற்றாண்டுகளுக்கு முன்னரே வைசேடிக தத்துவார்த்த சிந்தனைகள் பாரத நாட்டில் விளங்கி வந்தது.
இராவண பாஷ்யம் எனும் உரைநூல் வைசேடிக தத்துவத்திற்கு இருப்பதாக தெரிகிறது. கி. பி. 5ஆம் நூற்றாண்டில், `பிரசஸ்பாதர்` என்பவர் எழுதிய `பதார்த்த-தர்ம-சங்கிரகம்` என்ற நூல் வைசேடிக தத்துவத்தை விளக்குவதாக உள்ளது. இதனை `பிரசஸ்பாத பாஷ்யம்` என்பர். இந்த பிரசஸ்பாத பாஷ்ய நூலைப் பற்றி பின்னர் பலர் எழுதிய நூல்களில் விமர்சிக்கப்பட்டுள்ளது. `வயோமசிவன்` என்பவர் எழுதிய (கி.பி.,8ஆம் நூற்றாண்டு) `வயோம சதி` , சீதரா எழுதிய கந்தலி என்ற நூல் (கி. பி. 10ஆம் நூற்றாண்டு), உதயணர் எழுதிய கிரணாவளி (கி. பி.,10ஆம் நூற்றாண்டு), ஆகிய நூல்களில் வைசேடிக தத்துவ விளக்க நூல்கள் பற்றிய விமர்சன குறிப்புகள் உள்ளது. நியாயம் (இந்து தத்துவம்) சூத்திரத்திற்கு வாத்சாயனர் கி. பி.,4ஆம் நூற்றாண்டில் வாத்ஸ்சாயன பாஷ்யம் எனும் நூலில் விமர்சனம் எழுதியுள்ளார்.
கிபி 200-ஆம் ஆண்டில் கோதமர் இயற்றிய நியாய தத்துவம் மற்றும் கணாதரர் இயற்றிய வைசேடிகமும் இணைந்து `நியாய - வைசேடிக தத்துவம்` உருவானது. நியாய-வைசேசிகம் தத்துவத்தில் கிரேக்க தத்துவ அறிஞர்களின் தாக்கம் உள்ளதாக இந்திய தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.[5]
Seamless Wikipedia browsing. On steroids.