காவிரி ஆறு
தென்னிந்தியாவில் உள்ள ஆறு From Wikipedia, the free encyclopedia
காவிரி ஆறு (Cauvery river) அல்லது காவேரி ஆறு இந்தியத் தீபகற்பத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது.
காவிரி ஆறு காவிரி ஆறு | |
---|---|
சிரீரங்கப்பட்டணத்தில் காவிரி ஆறு ஓடுகிறது | |
காவிரி ஆற்றின் வரைபடம் | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம், தமிழ் நாடு, கேரளம், புதுச்சேரி |
பகுதி | தென்னிந்தியா |
தோற்றம் | குடகு, கருநாடகம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | தலைக்காவிரி, குடகு, மேற்குத் தொடர்ச்சி மலை, கருநாடகம் |
⁃ அமைவு | கருநாடகம், இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 12°23′N 75°29′E |
⁃ ஏற்றம் | 1,341 m (4,400 அடி) |
முகத்துவாரம் | வங்காள விரிகுடா |
⁃ அமைவு | காவிரிப்பூம்பட்டினம், தமிழ் நாடு, இந்தியா |
⁃ ஆள்கூறுகள் | 11°21′40″N 79°49′46″E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 805 km (500 mi)[1] |
வடிநில அளவு | 81,155 km2 (31,334 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 677 m3/s (23,900 cu ft/s) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | கல்லணை (தெற்கு)[2] |
⁃ சராசரி | 400.716 m3/s (14,151.2 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | ஏரங்கி, ஏமாவதி, சிமுசா, ஆர்க்காவதி |
⁃ வலது | இலட்சுமண தீர்த்த, கபினி, பவானி, நொய்யல், அமராவதி, மாயாறு |
அது கருநாடக மாநிலத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலைக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்தில் தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கருநாடகத்தில் குடகு, ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் ஊரகம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாவும் தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.[3]
பெயரியல்
காவிரி ஆறு தான் செல்லுமிடமெல்லாம் சோலைகளை விரித்துச் செல்லுவதால் காவிரி எனப்பெயர் பெற்றது.
(கா- காடு, சோலை. பூ+ கா= பூங்கா- பூக்கள் நிறைந்த சோலை) [4]. தமிழ் இலக்கியங்களில் பொன்னி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பிற பகுதிகள் போலவே தமிழகத்திலும் ஆறுகளின் பெயர்கள் பெண்பால் பெயர்களாக இருக்கின்றன. அவை காரணமாகவே 'பொன்னி' என்ற பெயர் காவிரிக்கு வந்திருக்கக்கூடும் எனலாம். அந்த ஆறு சோழ நாட்டை செழிக்கச் செய்கிறது.. பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றிப் பாய்வதாலும் பொன்னி என்னும் பெயர் வந்தது.
துணை ஆறுகள்
கபினி, ஏமாவதி, ஆரங்கி , லட்மண தீர்த்தம் , ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகியவை கருநாடகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள். பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன தமிழகப் பகுதியில் பாயும் துணை ஆறுகள் ஆகும்.
இவற்றில் சொர்ணவதி என்னும் ஆற்றைச் சிலப்பதிகாரம் பொன்னி என்னும் தூய தமிழ்ப்பெயரால் குறிப்பிடுகிறது. 'பொன்படு நெடுவரை'ப் பகுதியில் இது தோன்றுவதால் இதற்குப் பொன்னி என்று பெயர். சங்ககாலப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடல் (புறநானூறு 166) இதனைத் தெளிவுபடுத்துகிறது.
அணைகள்
மேட்டூர் அணை, கிருட்டிணராச சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
அருவிகள்
கர்நாடக மாநிலத்தில் சிவசமுத்திர அருவியும் தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியில் உள்ள இரு அருவிகளாகும்.
தீவுகள்
கருநாடக மாநிலத்தில் சிரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய இரு தீவுகளையும் தமிழகத்தில் சிரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு கொண்டுள்ளது. இந்த மூன்றில் சிரீரங்கப்பட்டணம் தீவானது மிகப்பெரியது, இது திப்பு சுல்தானின் தலைநகராக விளங்கியது. இம்மூன்று தீவுகளிலும் அரங்கநாத சுவாமிக்குக் கோயில் உள்ளது மற்றொரு சிறப்பு. சிரீரங்கப்பட்டணத்தில் உள்ள அரங்கனை ஆதிரங்கன் என்றும் சிவசமுத்திரத்தில் உள்ள அரங்கனை மத்தியரங்கன் என்றும் திருவரங்கத்தில் (சிரீரங்கம்) உள்ள அரங்கனை அந்தரங்கன் என்றும் அழைப்பர்.
கருநாடகத்தில் காவிரியின் போக்கு
குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி உற்பத்தியாகிறது. ஆரங்கி ஆறானது குடகு மாவட்டத்தில் காவிரியுடன் இணைந்து மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருட்டிணராசசாகர் அணையை அடைகிறது. கிருட்டிணராச சாகர் அணை மைசூருக்கு அருகில் உள்ளது. ஏமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 ஆறுகளும் கிருட்டிணராச சாகர் அணையால் ஏற்பட்ட நீர்த்தேக்கத்தில் காவிரியுடன் இணைகின்றன. கிருட்டிணராச சாகர் அணையிலிருந்து வெளிவரும் காவிரி சிரீரங்கப்பட்டணம் தீவை உண்டாக்குகிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன. பின் காவிரி சிவசமுத்திரம் தீவை உண்டாக்குகிறது. இங்கு இரு பிரிவுகளாகப் பிரியும் காவிரி ஒரு புறம் ககனசுக்கி (Gaganachukki) அருவியாகவும் மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. வலப்புறம் அமைந்த ககனசுக்கி அருவியில் 1902 இல் ஆசியாவின் முதல்[சான்று தேவை] நீர் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. பின் காவிரியுடன் சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைகின்றன. அர்க்கவதி ஆறு இணைந்தவுடன் காவிரியானது ஆழமான குறுகிய பாறைகளின் வழியாகப் பாய்ந்து தமிழகத்தை அடைகிறது. பழங்கதையில் ஒரு ஆடு இவ்விடத்தில் காவிரியைத் தாண்டிக் குதித்து ஓடியதால், இதை ஆடு தாண்டும் காவிரி என்று அழைப்பர். (கன்னட மொழியில் மேகேதாட்டு (Mekedatu) என்று பெயர்). ஆனால் இன்றுள்ள நிலையில் அஃது இயலாததாகும்.
தமிழகத்தில் காவிரியின் போக்கு
மிகக் குறுகிய அகலமுடைய, ஆனால் மிக ஆழமான ஆடு தாண்டும் காவிரியிலிருந்து தமிழகம் வரும் காவிரியானது பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் அருவியை அடைகிறது. பின் காவிரியானது மேட்டூர் அணையை அடைந்து சிடான்லி நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. இங்கிருந்தே தமிழகக் காவிரிப் பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து வெளிவரும் காவிரியுடன் பவானி என்னுமிடத்தில் பவானி ஆறு கலக்கிறது. ஈரோடு நகரைக் கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யல் என்னுமிடத்தில் நொய்யல் ஆறு கலக்கிறது. அமராவதி ஆறானது கரூர் அருகேயுள்ள திருமுக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சி மாவட்டங்களில் பாயும் காவிரி அகண்டு காணப்படுவதால் அங்குப் பாயும் காவிரியை அகண்ட காவிரி என்பர். முசிறி, குளித்தலை நகரங்களைத் தாண்டிச்செல்லும் காவிரி முக்கொம்பு என்னும் இடத்தில் மேலணையை அடைகிறது. இங்குக் காவிரி இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொள்ளிடம் என்றும் தென்கிளை தொடர்ந்து காவிரி என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளக் காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம், காவிரிக்கு நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே சிரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாகப் பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது. காவிரி டெல்டாவில் அரசலாறு, வெண்ணாறு, வெட்டாறு, புதுஆறு, மன்னியாறு ஆகிய பெயர்களால் காவிரியின் சில கிளைகள் அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை நாகப்பட்டிணம் மாவட்டங்கள், புதுச்சேரியின் காரைக்கால் பகுதி ஆகியவை காவிரி டெல்டாவை [5] சேர்ந்தவை.
ஆடிப்பெருக்கு விழா
ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காகக் காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்துப் பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்.
பயன்பாடு
காவிரி நீரானது பாசனத்திற்காகவும் மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்படுகிறது.
காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.
நீர் பங்கீடு
காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கருநாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாகப் பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே.
- கருநாடகாவில் காவிரியின் நீளம் = 320 கிமீ
- தமிழ்நாட்டில் காவிரியின் நீளம் = 416 கிமீ
- கருநாடக தமிழக எல்லையில் காவிரியின் நீளம் = 64 கிமீ
காவிரி மேலாண்மை ஆணையம்
காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டிஎம்சியைக் குறைத்து வழங்க உச்ச நீதிமன்றம் 2018-02-16 அன்று உத்தரவிட்டுள்ளது. நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், தற்போது 177.25 டிஎம்சியை வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிசுரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.[6]
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டிஎம்சி தண்ணீரோடு, இந்த 14.75 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர். தீர்ப்பில் புதுவை, கேரளாவுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இறுதியாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாகக் காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மாற்றியுள்ளது.[7]
தமிழ் இலக்கியங்களில்
"வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்குஏகினும்
தற்பாடிய தளியுணவின் புள்தேம்பப் புயல்மாறி வான்பொய்ப்பினும்
தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி"
— (பட்டினப்பாலை:1-6)
"அலங்கு கதிர்க் கனலி நால்வையின் தோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அநதண் காவிரி வந்து கவர்ப்பு ஊட்ட்த்
ஆடுகண் கரும்பின் வெண்பு நுடங்கும்..."
— புறநானூறு (பாடல் 35)
"விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பெரு நிவப்பில் கடுங்குரல் ஏற்றொடும்
சூன்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப
குடமலை பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை"
— சிலப்பதிகாரம் (காதை 10:103-108)
"கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை"
— மணிமேகலை (பதிகம்:24-25)
"வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி"
— சிலப்பதிகாரம் கானல்வரி 152-55
"மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயல்கண் விழித்து நடந்தாய் வாழி காவேரி
கருங்கயல்கன் விழித்து ஒல்கி நடந்தவையெல்லாம் நின்கணவன்
திருத்த செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி"
— கானவரி,கட்டுரை 25
"உழவர்ஓதை மதகுஓதை உடைநீர்ஓதை தண்பதம்கொள்
விழவர்ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி
வாய்காவா மழவர்ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி"
— கானல்வரி,கட்டுரை 4
"இன்குரல்இசை கெழும் யாழ் முரலத்
தன் கரம் மருவிய சதுரன் நகர் ---
பொன்கரை பொரு பழங்காவிரியின்"
— திருஞானசம்பந்தர் தேவாரம்.
காட்சி மேடை
- பகமண்டலம் அருகில் காவிரி ( குடகுவில்)
- குழ்சால்நகர் அருகில் காவிரி ( குடகுவில்)
- மைசூர் மாவட்டம் அருகில் காவிரி, கருநாடகம்
- சிறி ரங்கப்பட்டினம் அருகில் காவிரி, கருநாடகம்
- சிவசமுத்திரம் அருகில் காவிரி, கருநாடகம்
- கோசால் மலைத்தொடர் அருகில் காவிரி, மைசூர்
- மேகேதாட்டு (ஆடு தாண்டும் காவிரி) அருகில் காவிரி, கருநாடகம்
- ஒகனேக்கல் அருவி, தருமபுரி மாவட்டம், தமிழ் நாடு
- மாநில நெடுஞ்சாலை 20 இலிருந்தான காவிரியின் காட்சி, மேட்டூர் அணை அருகில், தமிழ் நாடு
- ஈரோடு அருகில் காவிரி, தமிழ் நாடு
- பள்ளிபாளையம் அருகில் காவிரி, தமிழ் நாடு
- திருச்சிராப்பள்ளி அருகில் காவிரி, தமிழ் நாடு
- காவிரியும் திருவரங்கம் திட்டும், தமிழ் நாடு
- திருவையாறு , தஞ்சாவூர் மாவட்டம் அருகில் காவிரி, தமிழ் நாடு
- காவிரிக் கழிமுகம், பூம்புகார், தமிழ் நாடு
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.