Remove ads
From Wikipedia, the free encyclopedia
குளித்தலை (ஆங்கிலம்:Kulithalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் உள்ள் குளித்தலை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
குளித்தலை | |
ஆள்கூறு | 10°34′N 78°15′E |
நாடு | இந்தியா |
பகுதி | சோழ நாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கரூர் |
வட்டம் | குளித்தலை வட்டம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | எம். தங்கவேல், இ. ஆ. ப [3] |
நகராட்சிதலைவர் | |
சட்டமன்றத் தொகுதி | குளித்தலை |
சட்டமன்ற உறுப்பினர் |
ஆர். மாணிக்கம் (திமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
27,910 (2011[update]) • 2,501/km2 (6,478/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 11.16 சதுர கிலோமீட்டர்கள் (4.31 sq mi) |
காவிரிக் கரையோரம் நன்செய் நிலங்களும், மலர்ச்சோலைகளுமாய் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக கடம்பவனம் எனும் சிற்றூர் அமைந்திருந்தது. அப்பகுதி "குளிர் தண்டலை" என்று அழைக்கப்பட்டது. அதுவே பின்னர் "குளித்தலை" என்றாகியது. குளித்தலை நகரம் முந்தைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
குளித்தலையின் புவியியல் அமைவிடமானது 10.56°N 78.25°E[4] . மேலும் வடக்கில் முசிறி, கிழக்கில் பெட்டவாய்த்தலை , தெற்கில் அய்யர் மலை, மேற்கில் லாலாபேட்டை ஆகியவை குளித்தலையைச் சுற்றியுள்ள ஊர்களாகும். குளித்தலை சுமார் 11.16 கி.மீ சுற்றளவு கொண்ட ஒரு நகராட்சி ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,374 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 27,910 ஆகும். அதில் 13,843 ஆண்களும், 14,067 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89.3% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,016 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2522 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 921 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,680 மற்றும் 112 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.47%, இசுலாமியர்கள் 7.35%, கிறித்தவர்கள் 3.12% மற்றும் பிறர் 0.07% ஆகவுள்ளனர்.[5]
குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றன. குளித்தலை நகராட்சியில் கீழ்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன.
குளித்தலை நகரில் மருத்துவ சேவைகள் உள்ளன். அவசர உதவி, அரசு மருத்துவமனை, பல தரப்பட்ட நோய்களுக்கான சிறப்பு பிரிவு தனியார் மருத்துவமனைகள் மற்ற பல மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கபெறுகின்றன. மேலும் 24 மணிநேர சேவையிலான மருத்துவமனைகள் , மருந்து கடைகள் உள்ளன.
சென்னை, திருச்சி, மணப்பாறை, துறையூர், முசிறி, கரூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர், கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் உள்ளது. குளித்தலையானது NH-81 தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதாலும், திருச்சி மற்றும் கரூர் என்ற இரு மாநகர்களுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் 24 மணி நேர பேருந்து வசதி பெற்ற நகரமாக உள்ளது.
குளித்தலை இரயில் நிலையமானது பேருந்து நிலையத்தின் மிக அருகாமையிலேயே உள்ளது. மேலும் சென்னை, கோவை, காரைக்கால், பெங்களூரு, மைசூர், மங்களூர், கொச்சின் பகுதிகளுக்கும் இரயில் போக்குவரத்து சேவை கிடைக்கின்றது.
காவிரி ஆறு இருப்பதால் விவசாயமே முதன்மைத் தொழிலாகும். நிறைந்த மண்வளமும் நீர்வளமும் இருப்பதால் வாழை, கரும்பு, நெல் மற்றும் வெற்றிலை என நன்செய் பயிர்கள் அலங்கரிக்கும். குறிப்பாக வாழையே இங்கு அதிகம் பயிரிடப்படுகிறது. குளித்தலைக்கு மேற்கே லாலாப்பேட்டை என்ற ஊரிலிருந்து கிழக்கே நங்கவரம் வரையிலான பகுதிகளில் பயிரிடப்படும் பல்வேறு தரப்பட்ட வாழை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களாகிய கேரளா, கர்நாடகாவிற்கும் ஏற்றுமதியாகிறது.
குளித்தலையின் கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பெட்டவாய்த்தலை என்னும் ஊரில் சர்க்கரை ஆலை உள்ளது. எனவே வாழைக்கு அடுத்தபடியாக கரும்புக்குத் தான் இங்கே முக்கியத்துவம். நெல் குறைந்த அளவிலேயே பயிரிடப்படுகிறது. காவிரியின் அக்கரையில் உள்ள மண்ணச்சநல்லூரில் நெல் பிரசித்தம்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக இப்பகுதியில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் பரவலாக உள்ளது. மேற்கே 20 கி.மீ தொலைவில் மாயனூர் என்னும் ஊரில் சில தொழிற்சாலைகள் உள்ளன. மற்றும் கரூர் நகரில் எண்ணற்ற தொழிற்சாலைகள் உள்ளன. இவையே குளித்தலைவாழ் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் தொழில் ஆதாரம்.
கர்நாடகா மாநிலத்தின் குடகுமலை பகுதிகளில் உற்பத்தியாகி ”ஆடுதாண்டும் காவிரி” என குறுகிய வடிவில் தமிழ்நாட்டின் எல்லையில் நுழையும் காவிரி ஆறானது குளித்தலை பகுதியில்தான் ”காகம் கடக்கா காவிரி” என்ற சிறப்புடன் அலை கடலென பரந்து விரிந்து செல்கிறது. இதன் காரணமாகவே பண்டைய இலக்கியங்களில் குளித்தலையானது, குளிர்ந்த காற்றுடன் கூடிய கடல் அலையை போன்ற காவிரி அலை வீசும் ஊர் ”குளிர்த்தண்டலை” என்ற பெயருடன் வருணிக்கப்பட்டது.
குளித்தலை கடம்பந்துறை பகுதியில் உள்ள அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவானது இங்கு மிகவும் பிரசித்தமான ஒன்று. குளித்தலை நகரை சுற்றிலும் உள்ள எட்டு ஊர் சாமிகளும் பங்கேற்கும் இந்த திருவிழாவில் ஊர் மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் இருந்து திரலான பக்தர்கள் பலரும் கலந்துகொள்வர். முதல் நாள் இரவு முழுவதும் தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என பல கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வருகைதரும் வியாபாரிகள் நம் நாட்டின் கைப்பக்குவத்தில் செய்த இனிப்புகள், பலகாரம், கைவினை பொருட்கள் போன்ற வியாபாரங்களை செய்வர். இவை தவிர குழந்தைகளை மகிழ்விக்கும் பல விளையாட்டுகளும் நடைபெறும்.
இந்த விழாவின் அடுத்த நாள் குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில், அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோயில், பேட்டவாய்த்தலை மத்யார்சுனேசுவரர் கோயில், ராஜேந்திரம் மத்யார்சுனேசுவரர் கோயில், கருப்பத்தூர் சிம்மபுரீஸ்வரர், திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில், முசிறி சந்திரமவுலீசுவரர் திருக்கோயில், வௌ்ளூர் திருக்காமேசுவரர் கோயில் ஆகிய 8 ஊர் கோவில்களில் எழுந்தருளியுள்ள சுவாமிகள் மற்றும் அம்பாள் காவிரியின் கரையில் அமைந்துள்ள தை பூச திருவிழா திடலில் திரளான பக்தர்கள் மத்தியில் ”திருமணத்திற்கு பெண் கேட்கும் நிகழ்வு” நடைபெறும்.
சோழ நாட்டின் காவிரி கரையில், 191 சிவ தலங்கள் உள்ளன. அவற்றுள் காவிரியின் வடகரையில் 63-ம் தென் கரையில் 128 சிவ தலங்களும் உள்ளன. இதில் பாடப்பட்ட தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும், காவிரி தென்கரையின் முதல் தலமுமாக விளங்குவது குளித்தலை, அய்யர்மலை சுரும்பார்குழலி சமேத இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் ஆகும்.
காலையில் கடம்பர் (குளித்தலை கடம்பவனேசுவரர் திருக்கோவில்), மதியம் மாணிக்கமலையான்(அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில்), மாலையில் ஈய்கோய்நாதரர் (முசிரி திருஈங்கோய் மலை திருக்கோவில்), அர்த்த சாமம் சிம்மபுரீஸ்வரர் (கருப்பத்தூர்) என ஒருவர் ஒரே நாளில் இக்கோவில்கள் அனைத்திற்கும் சென்று வழிபட மறுபிறவியில்லா முக்தியை அடைவர் என்பது ஐதீகமாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.