From Wikipedia, the free encyclopedia
மக்கள் தொகை என்பது சமூகவியலில், மனிதர்களின் இனத்தொகையைக் குறிக்கும். அதாவது ஒரு நகரம், அல்லது பிராந்தியம், அல்லது நாடு அல்லது உலகில் உள்ள மொத்த மனிதர்களின் எண்ணிக்கையை அல்லது தொகுப்பைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் உலகிலுள்ள மொத்த மக்கள்தொகையானது உலக மக்கள் தொகை எனப்படும்.
பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகுப்பைச் சார்ந்த ஒவ்வொரு தனிநபரும், ஏதேனும் ஒரு பண்பை பொதுவாக கொண்டிருப்பார், இது புள்ளியியல் ரீதியாக சற்று குறையக்கூடும். ஆனாலும் அவ்வகை பொதுமைப்படுத்தல் எதையும் கண்டறிவதற்கு உதவாது. சில்லறை விற்பனையாளர்கள் முதல் சாத்தியமான வாடிக்கையாளர்கள் வரை பல்வேறு பொருளாதார ரீதியான அலகுகளைக் கொண்ட மக்கள் தொகையியலானது அதிக அளவில் சந்தைப்படுத்தல் பிரிவில் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, இளைஞர்களை இலக்காகக் கொண்ட ஒரு காஃபி கடை, எளிதாக இளைஞர்களை ஈர்க்கக்கூடிய மக்கள்தொகை செறிவு மிகுந்த பகுதிகளை மக்கள்தொகையியலின் மூலமாக அடைய முயற்சிக்கும்.
17 திசம்பர் 2024 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகையானது 8.219 பில்லியன் ஆகும்.[1]
உலகத்தின் சனத்தொகை பெரிதும் அதிகரித்துச் செல்லும் போக்கினைக் காட்டுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு வெளியிட்ட அறிக்கைகளின்படி, உலக மக்கள்தொகையானது 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி 6.5 பில்லியன்களை (6,500,000,000) எட்டும். ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் 1999 ஆம் ஆண்டு, அக்டோபர் 12 ஆம் தேதி உலக மக்கள்தொகை 6 பில்லியனை எட்டும் என தோராயமாகக் கூறியது. இது 2020ம் ஆண்டளவில் 7.6 பில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. உலக மக்கள்தொகையானது, 12 ஆண்டுகளுக்கு முன்பு 1987 ஆம் ஆண்டுதான் 5 பில்லியனை எட்டியது, மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு 1993 இல் 5.5 பில்லியனை எட்டியது. ஆனாலும், நைஜீரியா மற்றும் சீனா போன்ற சில நாடுகளின் மக்கள்தொகை கணக்கீடுகளில் மில்லியன் கணக்கில் வேறுபாடுகள் இருந்தன[2], எனவே இந்த கணிப்புகளில் கணிசமான அளவில் பிழை உள்ளது.[3] 1700 ஆம் ஆண்டுக்கு பின் தொழிற்புரட்சியில் ஏற்பட்ட வேகம் மக்கள்தொகை வளர்ச்சியின் வேகத்தை குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமாக்கியது[4]. 1960 முதல் 1995[5] வரை ஏற்பட்ட பசுமை புரட்சியின்[6] விளைவாக வேளாண் உற்பத்தியில் ஏற்பட்ட பெருக்கம் மற்றும் மருத்துவத்துறை வளர்ச்சிகள் போன்ற காரணங்களினால் கடந்த 50 ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி[4] வீதம் மேலும் அதிக வேகமடைந்தது.2055[7] ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டி விடும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மக்கள்தொகை பிரிவு 2007 ஆம் ஆண்டு கணக்கிட்டு கூறியது.
எதிர்காலத்தில், உலக மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது அதன் உச்சத்தை அடையும் என்றும், பின்னர் பொருளாதார காரணங்கள், உடல்நல குறைபாடுகள், நிலப் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் போன்ற காரணங்களால் குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்பாகவே உலக மக்கள்தொகையானது அதிகமாவது நின்றுபோவதற்கு ஏறத்தாழ 85% வாய்ப்புள்ளது. 2100 ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையானது 10 பில்லியனைத் தாண்டாமல் இருப்பதற்கு 60% வாய்ப்புள்ளது, மேலும் இந்நூற்றாண்டின் இறுதியில் இன்றைய மக்கள்தொகையை விட குறைவான மக்கள்தொகை இருப்பதற்கு 15% வாய்ப்புள்ளது. உச்ச மக்கள்தொகையின் அளவு மற்றும் அது நிகழும் தேதி ஆகியவை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறாக இருக்கக்கூடும்.[8]. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ஆம் ஆண்டளவில் உலக சனத்தொகையில் ஏறத்தாழ கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.எனவே இதனைத் தொடர்ந்து. ..............
மக்கள்தொகை கட்டுப்பாடு எனப்படுவது மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாகும், பொதுவாக இது பிறப்பு வீதத்தைக் குறைப்பதால் நிகழ்த்தப்படுகிறது.பண்டைய கிரேக்கத்தில் இருந்து கிடைத்த ஆவணங்களில் முதன்முதல் மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவற்றில் காலானியாக்க நடவடிக்கைகளும் அடங்கும். இதன் அடிப்படையில், தனிப்பட்ட மாகாணங்களின் அதிக மக்கள்தொகைக்கு இடமளிக்க மத்திய தரை மற்றும் கருங்கடல் பகுதிகளில் கிரேக்க வெளிப்புறக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள்தொகையைக் கட்டுப்பாட்டில் வைக்க சில கிரேக்க நகரங்களில் சிசுக்கொலை மற்றும் கருக்கலைப்பு போன்றவையும் கூட ஊக்குவிக்கப்பட்டன.[9]
கட்டாய மக்கள்தொகை கட்டுப்பாட்டுக்கான முக்கியமான எடுத்துக்காட்டு சீன மக்கள் குடியரசின் ஒரு குழந்தை கொள்கை ஆகும். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற்று கொள்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாக மாற்றப்பட்டது. இந்த கொள்கையின் விளைவால் கட்டாயக் கருக்கலைப்பு, கட்டாய கருத்தடை மற்றும் சிசுக்கொலை போன்ற நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அந்நாட்டின் பால் விகிதம் 114 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகள் பிறக்கின்றன என்பதும், பெண் குழந்தை பிறப்பு குறைவது பால்-தேர்ந்தெடுப்பினாலும் என்று தெரிகிறது. ஆனாலும், ஒரு குழந்தை கொள்கையை கொண்டிராத பிற நாடுகளும் இதே போன்ற பால் விகிதங்களைக் கொண்டுள்ளன. ஆனால் அதற்கு உணவூட்டம்[சான்று தேவை] போன்ற பிற காரணங்கள் உள்ளன.
கருத் தடுப்பு என்பது தனிநபர் தீர்மானம் மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது அரசாங்க அல்லது மாநில அளவிலான மக்கள்தொகை வளர்ச்சி ஒழுங்குப்படுத்தல் கொள்கை என்று இரண்டையும் பிரித்து அறிந்து கொள்ளுதல் மிகவும் உதவிகரமாக இருக்கும். தனிநபர்கள் அல்லது தம்பதியினர் அல்லது குடும்பங்கள் குழந்தைப் பிறப்பைக் குறைக்க அல்லது குழந்தை பிறப்புகளுக்கிடையே இடைவெளியை ஒழுங்குப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்போது கருத் தடுப்பு நிகழ்கிறது. அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஆன்ஸ்லே கோலேவின் சூத்திரத்தின்படி, கருவுறுதல் நிலைத்த வேகத்தில் குறைவதற்கான மூன்று முன்நிபந்தனைகளாவன: (1) கருவுறுதலுக்கு கணக்கிடத்தக்க தேர்வு முறை சரியானது (விதி அல்லது தெய்வச்செயல் என்று நம்பாதிருத்தல்) என்று ஏற்றுக்கொள்ளுதல், (2) குறைவான கருவுறுதலின் மூலம் நன்மைகள் பெற்றிருத்தல், மற்றும் (3) கட்டுப்பாட்டுக்கான நுட்பங்களை அறிந்திருத்தல் மற்றும் பயன்படுத்தல்.[10] இயல்பான கருவுறுதலைக் கொண்ட ஒரு சமூகத்தை விட, கருவுறுதலைக் கட்டுப்படுத்த விரும்பும் மற்றும் அதற்கான வழிமுறைகளைக் கொண்ட ஒரு சமூகம். அந்த முறைகளாவன, குழந்தை பிறப்பைத் தள்ளிபோடுதல், குழந்தை பிறப்புக்கு இடையே இடைவெளி விடுதல் அல்லது குழந்தை பிறப்பை நிறுத்துதல் போன்றவை. மாநில கொள்கை அல்லது சமூகம் சார்ந்த நடவடிக்கைகளைச் சாராமல், பாலியல் தொடர்பை (அல்லது திருமணத்தை) தள்ளிபோடுதல், இயற்கை முறை அல்லது தனிநபர் அல்லது குடும்ப முடிவு மூலம் செயற்கை முறை கருத்தடை முறைகளைப் பயன்படுத்தல் போன்றவை. மற்றொரு வழியில், தனது கருவுறும் திறனைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட தனிநபர்கள் இடைவெளியை அதிகபடுத்தல் அல்லது குழந்தை பிறப்பைத் திட்டமிடல் மூலம் வெற்றிபெற செய்தல் போன்றவை.
சமூக நிலையில், உயரும் பெண்கல்வியால் கருவுறுதல் குறைவடைவது தடுக்கமுடியாத ஒரு விளைவாக இருக்கும். ஆனாலும், மிதமானது முதல் அதிகபட்ச அளவிலான கருத்தடுப்பு முறைகளால் குறைவான கருவுறுதல் வீதம் எட்டப்படும் என்பது முழுமையாக சாத்தியமில்லை. கணிசமான அளவு கருத் தடுப்பு முறைகளைப் பின்பற்றும் சமூகங்கள், கருத் தடுப்பு முறைகளைப் பின்பற்ற தகுதி வாய்ந்த சமூகங்கள் (எத்தனை குழந்தைகளை எப்போது பெற்று கொள்ள வேண்டும் போன்றவற்றை தீர்மானிக்கக்கூடியவை) போன்றவையும் கூட பல வேறுபட்ட கருவுறுதல் நிலைகளைக் காண்பிக்கக்கூடும். குழந்தைகளின் எண்ணிக்கை அல்லது குடும்பத்தின் அளவு போன்றவற்றுக்கு இவை தனிநபர் மற்றும் கலாச்சார விருப்பங்களுடன் இணைந்தவையாகும்.[11]
பெரும்பாலும் தனிநபரை மட்டுமே சார்ந்த முடிவான கரு தடுப்பு முறைகளைப் போலன்றி, கருத்தடை முறைகளுக்கான அணுகலை மக்கள்தொகை கொள்கைகள் மற்றும் திட்டங்கள் போன்றவற்றால் அதிகரிக்க செய்யும் நடவடிக்கைகளால் அரசாங்கமும் மக்கள்தொகை கட்டுப்பாட்டை செயற்படுத்தும்.[12] அரசாங்கங்கள் ரீதியான அல்லது சமூக அளவில் மக்கள் தொகை வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தும் "மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கு", மேலே கூறியது போன்ற "கரு தடுப்பு" முறை அவசியமில்லை. ஏனெனில் ஒரு சமூகம் குறைந்த அளவுக்கு கரு தடுப்பு முறைகளைப் பின்பற்றினாலும் ஒரு பெரிய மாகாணம் அதன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த முடியும். மக்கள்தொகை வளர்ச்சியையும் ஆதரிக்கும் கொள்கைகளை ஒரு கூறாக மக்கள்தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சேர்க்க வேண்டியது முக்கியமானது. மேலும் மக்கள்தொகையைக் கட்டுப்பாடு என்பது அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது மட்டுமே என்று புரிந்து கொள்ளப்படக்கூடாது. மக்கள்தொகை வளர்ச்சியைத் தூண்ட, புலம்பெயர்வுகளை ஆதரிப்பதோடு கூடுதல் குழந்தைகள் பெறுவோர்க்கு, வரி நன்மைகள், பண உதவிகள், சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் மற்றும் குழந்தை கவனிப்பு போன்ற சலுகைகளையும் வழங்க வேண்டும்.[13] எடுத்துக்காட்டாக, இது போன்ற கொள்கைகள் சமீப ஆண்டுகளில் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டன. மக்கள்தொகை வளர்ச்சி என்ற இலக்கை அடைய, கருக்கலைப்பு அல்லது பிறப்பு தடுப்புக்கான நவீன வழிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வழிகளையும் அரசுகள் பயன்படுத்தின. கருத்தடை முறைகள் மற்றும் தேவைக்கேற்ப கருக்கலைப்பு போன்றவை மீதான ருமேனியாவின் 1966 தடை இதற்கான எடுத்துக்காட்டாகும்.
சூழியலைப் பொறுத்தவரை, மக்கள்தொகை கட்டுப்பாடானது, வேட்டையாடும் உயிரினங்கள், நோய்கள், சாருண்ணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றால் மட்டுமே நடைபெறுகிறது என்று கருதப்படுகிறது. ஒரு நிலைத்த சுற்றுச்சூழலில், மக்கள்தொகை கட்டுப்பாடு என்பது, உணவு, நீர் மற்றும் பாதுகாப்பு ஆகியவை கிடைக்கும்தன்மையைப் பொறுத்து ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்க வாய்ப்புள்ள சிற்றினங்கள் அல்லது தனி உயிரிகளின் அதிகபட்ச எண்ணிக்கை அதன் தாங்கும் திறன் என்றழைக்கப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில், விலங்கு மற்றும் தாவர தொகையில் மனித பாதிப்புகளும் கணக்கில் கொள்ளப்படுகின்றன.[14] சில பருவகாலங்களில் கிடைக்கும் அதிகப்படியான நில உணவின் காரணமாக ஏற்படும் விலங்குகளின் பலம்பெயர்வு இயற்கையான வழி மக்கள்தொகை கட்டுப்பாடாக கருதப்படலாம். புலம்பெயர்வின்போது விட்டுச்செல்லப்படும் இடம், அடுத்த முறை அதிகப்படியான விலங்குகளுக்கு மீண்டும் உணவளிக்க தேவையானவற்றை உற்பத்தி செய்கிறது. புலம்பெயர்வு என்பதையும் காண்க.
நாட்டின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த ஒரு அரசு நடவடிக்கைகள் எடுத்துள்ளதற்கு இந்தியா மற்றொரு எடுத்துக்காட்டாகும். வேகமாக வளரும் மக்கள்தொகையானது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை அதிக அளவில் பாதித்ததே இந்திய அரசு அதிகாரப்பூர்வ குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை 1950 இன் பிற்பகுதிகளிலும், 1960 இன் முற்பகுதிகளிலும் தீவிரமாக செயல்படுத்த காரணமாயிருந்தது. உலகிலேயே இவ்வாறு முதன்முதலில் செய்த நாடு இதுவே ஆகும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.