From Wikipedia, the free encyclopedia
தகவல் தொழினுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும்.[1] இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும்.[2] தகவல் தொழினுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன."[3]
இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும்.[4]
கி.மு. 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே தகவல் தேக்குதலும் மீட்டலும் கையாளலும் பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.[5] என்றாலும், தகவல் தொழினுட்பம் எனும் சொல் புத்தியல் காலப் பொருளில் 1958 இல் ஆர்வார்டு வணிக மீள்பார்வை எனும் கட்டுரையில் முதலில் தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின் ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல். விசிலர் எனும் இருவரும் "இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஒரே பெயர் இன்னும் உருவாகவில்லை. நாம் இதைத் தகவல் தொழினுட்பம் என அழைப்போம். " என்று கருத்துரைத்துள்ளனர். இவர்களின் வரையறையில் மூன்று பகுதிகள் அமைகின்றன. அவை செயலாக்க நுட்பங்கள், முடிவு எடுப்பதில் கணித, புள்ளியியல் முறைகளின் பயன்பாடு, கணினி நிரல் வழியாகௌயர்சிந்தனையை ஒப்புருவாக்கம் செய்தல் என்பனவாகும்.[6]
நாம் தகவல் தேக்குதல் சார்ந்தும் தகவல் செயலாக்க நுட்பங்கள் சார்ந்தும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றினைப் பின்வருமாறு பிரிக்கலாம்:[5]
இக்கட்டுரை 1940 இல் தோன்றிய மின்னணுவியல் கட்டத்தை மட்டுமே கருதுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன.[7] கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும்.[8] இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை[9] மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை[10]
உணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது நாசி செருமானியத் தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட கொலோசசு கணினி (en:Colossus computer) முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் நிரலாக்கம் செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது.[11] முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது.[12]
பிந்தைய 1940 களில் பெல் ஆய்வகங்கள் திரிதடையங்களை உருவாக்கியதும் மின்திறன் நுகர்வு குறைந்த புதிய தலைமுறைக் கணினிகள் வடிவமைக்கப்பட்டன. முதல் வணிகவியலான நிரல்தேக்கக் கணினியாகிய பெராண்டி மார்க் 4050 கவாடங்களை 25 கி.வா மின் நுகர்வுடன் பயன்படுத்தியது. தன் இறுதி வடிவமைப்பில் திரிதடையங்களைப் பயன்படுத்தி மான்செசுட்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி 1953 நவம்பரில் இயங்கத் தொடங்கிய கணினியில் 150 வா மின் நுகர்வே தேவைப்பட்டது.[13]
கொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது.[14] மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது.[15] முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும்.[16] தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது[17] இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது.[18]
ஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது.[19] பெரும்பாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது.[20] 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன:[21] இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையிலும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது.[22] அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது.[23]
பேரளவு தரவுகளை விரைந்து துல்லியமாகத் தேக்கவும் மீட்கவும் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் 1960 களில் தோன்றின[24] இத்தகைய மிகத் தொடக்க கால அமைப்பு ஐ பி எம் உருவாக்கிய தகவல் மேலாண்மை அமைப்பு ஆகும்[24]. 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் இது பரவலாகப் பயனில் இருந்தது.[25] இது தரவுகளைப் படிநிலை அமைப்பில் தேக்குகிறது.[24] ஆனால் 1970 களில் டெடு கோடு என்பார் மாற்று முறையான உறவுசார் தேக்கப் படிமத்தைக் கணக்கோட்பாடு, பயனிலை அளவைமுறை (தருக்க முறை) ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிந்தார். இதில் பழக்கமான அட்டவணைகளும் நிரல்களும் நிரைகளும் பயன்கொள்ளப்பட்டன. ஒராக்கிள் குழுமம் முதல் வணிகவியலான உறவுசார் தரவுத்தள மேலாண்மை அமைப்பை 1980 இல் உருவாக்கியது.[24]
அனைத்து தரவுத்தள மேலாண்மை அமைப்புகளிலும் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தேக்கிய தரவுகளைப் பல பயனர்களால் அணுகிப் பெறும்வகையிலும் அதேவேளையில் அதன் ஒருமைக் குலையாதபடியும் தரவுகளைஅனைவருக்கும் தருகின்றன. அனைத்துத் தரவுத்தளங்களின் பான்மை, அவற்றில் உள்ளத் தரவுகளின் கட்டமைப்பைத் தனியாக வரையறுத்து, தரவுகள் தேக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பிரித்து, வேறு பகுதியில் தேக்கி வைத்தலாகும் இவை தரவுத்தள வரிசைகள் எனப்படுகின்றன.[24]
உறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது.[24] தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும்.[26] உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன. ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.தனித்தனியாக உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க 1980 களில் தகவல் கிடங்குகள் தோன்றின. இவற்றில் பல வாயில்களில் இருந்து திரட்டிய தரவுகள் தேக்கப்பட்டுள்ளன. இவ்வாயிகளில் வெளி வாயில்களும் இணையமும் கூட உள்ளன. இவற்ரில் உள்ள தகவல்கள் முடிவு எடுக்கும் அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளன.[27]
தகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும்.[28] இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன.[22]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.