Remove ads
கேரள மலைவாசத்தலம் From Wikipedia, the free encyclopedia
பொன்முடி (Ponmudi[1]) என்பது இந்தியாவின், கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தின் பெரிங்கமால பஞ்சாயத்தில் உள்ள ஒரு மலை வாழிடமாகும் . இது திருவனந்தபுரம் நகரத்திலிருந்து வடகிழக்கில் 53 கி.மீ. தொலைவிலும், வற்கலை கடற்கரைக்கு தென்கிழக்கில் 78 கி.மீ. தொலைவிலும், கோவளம் கடற்கரையிலிருந்து வடகிழக்கில் 69 கி.மீ. தொலைவில் 1,100 மீ (3,600 அடி) உயரத்திலும் அமைந்துள்ளது. பொன்முடி சிகரமானது அரபிக்கடலுக்கு இணையாக செல்லும் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். பொன்முடி கேரளத்தின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது, இது தென்னிந்தியாவில் பிரபலமான தேனிலவு இடமாகும். பொன்முடியின் சாதாரண வெப்பநிலை 18 முதல் 25 ° C (64 மற்றும் 77 ° F) வரை இருக்கும். [2]
பொன்முடி | |
---|---|
பொன்முடியில் காலைக் காட்சி | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,100 m (3,600 அடி) |
ஆள்கூறு | 8°45′37″N 77°07′00″E |
பெயரிடுதல் | |
பெயரின் மொழி | மலையாளம் |
புவியியல் | |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
ஏறுதல் | |
எளிய வழி | Hike |
பொன்முடியானது திருவனந்தபுரத்துடன் இரு நெடுஞ்சாலைகள் (SH2 & SH 45) மூலம் இணைக்கப்பட்டுள்ளது. பொன்முடிக்கு போகும் பாதையில் கடைசி 18 கி.மீ தொலைவுக்கு அதாவது அனாபராவிலிருந்து இயற்கை காட்சிகள் நிறைந்து உள்ளன. ஏனெனில் இந்த பாதை மலைகள் மற்றும் தேயிலைத் தோட்டங்கள் வழியாகச் செல்கிறது. வாகனங்கள் 22 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி செல்ல வேண்டியிருப்பதால் இந்த நீளமான பயணம் ஒரு பரபரப்பான அனுபவத்தை அளிக்கிறது. பொன்முடி மலையேற்றத்திற்கான பிரபலமான இடமாகும். இங்கு நிலவும் காலநிலை ஆண்டு முழுவதும் இனிமையானது. [3]
பொன்முடிக்கு அருகிலுள்ள மற்ற இடங்களாக பொன் பள்ளத்தாக்கு (கோல்டன் வேலி) மற்றும் ஏராளமான சிற்றோடைகள் ஓடுவதைக் காண இயலும், சில சாலையின் குறுக்கே கூட செல்லும். இந்த பசுமையான வனப்பகுதியில் வெப்பமண்டல தாவரங்கள் உள்ளன.[4] பல்வேறு வகையான காட்டுயிர்கள் மலைகளில் வாழ்கின்றன. பொன் பள்ளத்தாக்கானது மலைகளின் காட்சிகள் மற்றும் கல்லாறு காட்சிகளை அளிக்கிறது.
பொன்முடியில் அமைந்துள்ள சில குறிப்பிடத்தக்க சுற்றுலா தலங்கள் பெப்பாரா வனவிலங்கு சரணாலயம், எக்கோ பாயிண்ட் என்னும் எதிரோலி முனை மற்றும் பல்வேறு மலையேற்ற இடங்கள் போன்றவை ஆகும். மூடுபனி நிறைந்த பள்ளத்தாக்குகள், குறிப்பாக கல்லாற்றின் அருகிலுள்ள பொன் பள்ளத்தாக்கு, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. அங்கு பயணிகள் மான் பூங்காவையும், மரத்தாலும் கற்கலாலும் கட்டபட்ட குடிசைகளை பளிசிடும் வண்ணங்களில் காணலாம். மலை வாசஸ்தலத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ. தொலைவில் பொன்முடி அருவி உள்ளது. பொன்முடி ரிசார்ட்டிலிருந்து சுமார் 3 கி.மீ., தொலைவில் மான் பூங்கா உள்ளது. இப்பகுதியின் மற்றொரு சுற்றுலா தலமான மீன்முட்டி அருவி கல்லறு பிரதான சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பொன்முடியின் புறநகரில் அமைந்துள்ள பெப்பாரா வனவிலங்கு சரணாலயம் 53 கிமீ 2 (20 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. இந்த சரணாலயத்தில் ஆசிய யானைகள், கடம்பமான், சிறுத்தைகள், சொலைமந்தி, மலபார் சாம்பல் இருவாயச்சி போன்ற பல வகையான காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இடமாக உள்ளது.
இப்பகுதியில் உள்ள மற்றொரு முக்கிய ஈர்ப்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான அகத்தியர்கூடம் ஆகும். இது 1868 மீட்டர் உயர்ந்த சிகரமாகும். இந்த சிகரம் அதன் வனப்பகுதிக்கு பெயர் பெற்றது, மேலும் வனத்துறையின் அனுமதியுடன் மட்டுமே இந்த சிகரத்துக்குச் செல்ல முடியும்.
பொன்முடியின் நிலப்பரப்பானது பள்ளத்தாக்குகள், குன்றுகள், வனப்பகுதிகள், தோட்டங்கள் போன்றவை ஒன்றிணைந்ததாக உள்ளது. பொன்முடி மலை பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமான பகுதியாக உள்ளது. இது இப்பகுதியின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொன்முடியில் 283 வகையான பறவைகளுக்கு அடைக்கலமளிக்கிறது, அவற்றில் பல ஆபத்துக்கு உள்ளானவை மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளானவை. [5] இந்த பிராந்தியத்தில் காணப்படும் பறவைகள் வண்ணந்தீட்டியக் காடை, மலபார் சாம்பல் இருவாச்சி, வயநாட்டுச் சிரிப்பான், அகன்ற வால் புல் பறவை, நீலகிரி நெட்டைக்காலி ஆகியவை அடங்கும். பொன்முடியின் புல்வெளிகள் பரந்த வால் கொண்ட புல் பறவையின் இனப்பெருக்க இடம் ஆகும், இது அச்சுறுத்தலுக்குட்பட்ட இனமாகும். கேரளத்தில் உள்ள 483 பறவை இனங்களில் ஐம்பத்தொன்பது சதவீதம் பொன்முடியில் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 16 வகையான பறவைகளில், 15 பொன்முடியில் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 332 வகையான பட்டாம்பூச்சிகளில், 195 இங்கு காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி பலைகளில் காணக்கூடிய 37 பட்டாம்பூச்சி இனங்களில், 24 பொன்முடியில் காணப்படுகின்றன. இதேபோல், பொன்முடி பல வகையான ஊர்வன மற்றும் நிலநீர் வாழ்வனவற்றிற்கு இடமளிப்பதாக உள்ளது. இதில் மிகவும் ஆபத்துக்கு உள்ளான இதில் திருவிதாங்கூர் ஆமை, மலபார் கிளைடிங் தவளை, மலபார் மரத்தேரை ஆகியவை அடங்கும். பொன்முடி மலை உச்சியில் நீலகிரி வரையாடுகள் காணப்படுகின்றன.
பொன்முடி மலைவாசத்தலத்திற்கு செல்லும் வழியில் கல்லர் அமைந்துள்ளது, கல்லர் என்ற பெயரானது கல்லாறு ஆற்றின் பெயரிலிருந்து உருவானது. இது இப்பகுதி வழியாக பாய்கிறது. இது கல்+ஆறு என்னும் சொற்களின் சேர்க்கையாகும். இந்த ஆறானது கவர்ச்சிகரமான, வட்ட வடிவ கற்பாறைகள் மற்றும் கூழாங்கற்களுக்காக மிகுதியாக அறியப்படுகிறது. இங்கே வருபவர்கள் குளிர்ந்த தெளிவான நீரில் மூழ்கி குளித்துவிட்டு போகலாம், மேலும் இந்த பகுதியில் ஆற்றின் ஒரு நல்ல விரைவோட்டங்களையும், சிறிய குளங்களையும் பார்க்கலாம்.
மீன்முட்டி அருவியானது பொன்முடி மலைகளுக்கு அருகில் அமைந்துள்ள முக்கிய இடங்களில் ஒன்றாகும், இந்த அருவி திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவி கல்லர்-பொன்முடி சாலையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தை அடைவதற்கு, வனத்துறையின் சிறப்பு அனுமதியைப் பெற்று, அடர்ந்த காடுகள் வழியாகச் செல்லும் நீண்ட மலையேற்றத்தை மேற்கொள்ள வேண்டும். அருவிக்கு சுற்றுலா குழுக்களுடன் ஒரு வழிகாட்டி அனுப்பப்படுவார். கல்லாறில் வனப் பாதுகாப்புக் குழுவாக விளங்கும் கல்லறு வன சமரக்ஷனா சமிதியில் மலையேற்றத்திற்கான வசதிகள் அளிக்கபடுகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.