பாரசீக வரலாற்றாசிரியர் From Wikipedia, the free encyclopedia
அப்துல்-இரசாக் சமர்கந்த் (Abd al-Razzaq Samarqandi) (1413-1482) ஒரு பாரசீக வரலாற்றாசிரியர் ஆவார்.[1]. இவரது முழுப்பெயர் அப்துல் ரசாக் கமால் அல்தீன் இபின் ஜலால் அல்தீன் இஷாக் அல் சமர்கந்தி என்பதாகும். பெர்சியாவின் தைமூர் வம்சத்தின் ஆட்சியாளரான பாரசீகப் பேரரசர் சாருக்கின் தூதராக 1443-இல் கோழிக்கோடு அரண்மனைக்கு வந்தார். இவரது விளக்கங்களில் இருந்து 15 ஆம் நூற்றாண்டின் கேரளா, குறிப்பாக கோழிக்கோடு பற்றிய சமூகம் மற்றும் கலாச்சாரம் பற்றிய பல தகவல்களை பெறலாம்.[2]
அப்துல் ரசாக் 1413-ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி ஆப்கானித்தானின் ஹெறாத் நகரில் சுல்தான் சாருக்கின் கீழ் காசியாக (நீதிபதி) இருந்த ஜலால் அல்தீன் இஷாக் என்பவருக்கு பிறந்தார். தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த அப்துல் ரசாக், அக்காலத்தின் சிறந்த அறிஞர்கள் சிலரிடம் கல்வி கற்றார். தனது தந்தை 1437-இல் இறந்தபோது, போதுமான சட்ட அறிவைப் பெற்றிருந்ததால், இவரது தந்தையின் வேலை இவருக்கு வழங்கப்பட்டது. அப்துல் ரசாக்கின் திறமைகளால் சுல்தான் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அதனால்தான் இவர் இந்தியாவின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்துல் ரசாக் ஜனவரி 1441 இல் ஹெறாத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி 1445-இல் இந்தியாவின் கோழிக்கோடு வந்தடைந்தார். கோழிக்கோடு சாமோரினை சந்தித்து, தனது பரிசுகளை வழங்கினார். அதன் பிறகு கோழிக்கோட்டில் ஐந்து மாதங்கள் தங்கினார். இதற்கிடையில் இவர் பலமுறை சாமோரினிடம் தனது பயணத்தின் நோக்கத்தைத் (மன்னனை மதம் மாற்றுவது தெளிவுபடுத்தினார். மதம் மாற்றம் கூடாது என்பதில் சாமோரின் உறுதியாக இருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் விஜயநகர மன்னரிடமிருந்து அப்துல் ரசாக்கிற்கு அழைப்பு வந்தது. உடனே அழைப்பை ஏற்று கோழிக்கோட்டில் இருந்து கடல் மார்க்கமாக மங்களூருக்குச் சென்றார். அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரச விருந்தினராக சில நாட்கள் அங்கேயே தங்கிவிட்டு திரும்பினார். இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அப்துல் ரசாக் பல வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டார். சாருக்கின் மரணத்திற்குப் பிறகு, அவரது வாரிசுகளின் கீழ் பல பதவிகளை வகித்தார். ஜனவரி 1463-இல் இவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவியில் இருக்கும்போதே 1482 ஆகஸ்டில் இறந்தார்.[3]
இந்தியாவுக்கான இந்தப் பணியின்போது சுமார் 450 பக்கங்களைக் கொண்ட மட்லா-உஸ்-சாதின் வா மஜ்மா-அல்-பக்ரைன் (இரண்டு மங்களகரமான விண்மீன்களின் எழுச்சி மற்றும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம்), என்ற ஒரு புத்தகத்தை எழுதினார். இது இவரது பயண அனுபவங்களையும் வரலாற்றையும் விவரிக்கிறது. இந்தப் புத்தகத்தில் கேரளாவுக்கு உரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோட்டில்தான் இவர் முதலில் கறுப்பின மனிதர்களைச் சந்தித்ததாக அதில் விவரிக்கிறார்.[4]
அப்துல் ரசாக்கின் இந்தியப் பயணத்தின் விவரிப்பு, சாமோரின் ஆட்சியின் கீழ் கோழிக்கோட்டின் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகளை விவரிப்பதும், அம்பியில் உள்ள பண்டைய நகரமான விஜயநகரத்தின் செல்வம் மற்றும் அதன் மகத்துவத்தையும் விவரிக்கிறது.[5][6] 15 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலில் நடந்த கப்பல் வர்த்தகத்தின் கணக்குகளையும் இவர் எழுதிச் சென்றார்.
அப்துல் ரசாக்கின் புத்தகம் சாருக்கின் அரசுக்கும் சீனாவின் மிங் அரசமரபுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் விரிவான விவரத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக, 1420-1422 இல் பெய்ஜிங்கிற்கு சாருக் அனுப்பிய பணியில் பங்கேற்ற கியாத் அல்-தின் நக்காஷ் எழுதிய கணக்கை அது இணைத்தது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.