அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மத்திய வட அமெரிக்க நாடு From Wikipedia, the free encyclopedia
மத்திய வட அமெரிக்க நாடு From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America/USA/US) அல்லது அமெரிக்கா (America) என்பது முதன்மையாக வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும் மற்றும் ஒன்பது சிறிய வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது.[j] தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது.[d] இது வடக்கே கனடாவுடனும், தெற்கே மெக்சிகோவுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பகாமாசு, கியூபா, உருசியா, மற்றும் பிற நாடுகளுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது.[k] 33.3 கோடிக்கும் மேற்பட்ட மக்களையுடைய[l] இந்நாடு அமெரிக்காக்களில் அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும், உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும் திகழ்கிறது. அமெரிக்காவின் தலைநகரம் வாசிங்டன், டி. சி. ஆகும். இதன் அதிக மக்கள் தொகையுடைய நகரம் மற்றும் முதன்மையான நிதி மையமாக நியூயார்க்கு நகரம் திகழ்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
---|---|
குறிக்கோள்: "கடவுள் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்"[1] | |
நாட்டுப்பண்: "விண்மீன் மின்னும் பதாகை"[3] | |
தலைநகரம் | வாசிங்டன், டி. சி. 38°53′N 77°1′W |
பெரிய நகர் | நியூயார்க்கு நகரம் 40°43′N 74°0′W |
ஆட்சி மொழி(கள்) | கூட்டாட்சி அளவில் எந்தவொரு மொழியும் இல்லை[a] |
தேசிய மொழி | ஆங்கிலம்[b] |
இனக் குழுகள் | இனப் படி:
பூர்வீகப் படி:
|
சமயம் (2023)[7] |
|
மக்கள் | அமெரிக்கர்[c][8] |
அரசாங்கம் | கூட்டாட்சி அதிபர் குடியரசு |
• அதிபர் | டோனால்ட் டிரம்ப் |
சே. டி. வேன்சு | |
• சபாநாயகர் | மைக் ஜான்சன் |
• தலைமை நீதிபதி | யோவான் இராபர்ட்சு |
சட்டமன்றம் | பேரவை |
• மேலவை | மூப்பவை |
• கீழவை | சார்பாளர்கள் அவை |
சுதந்திரம் | |
சூலை 4, 1776 | |
• கூட்டமைப்பு | மார்ச்சு 1, 1781 |
செப்டம்பர் 3, 1783 | |
சூன் 21, 1788 | |
பரப்பளவு | |
• மொத்தப் பரப்பளவு | 3,796,742 sq mi (9,833,520 km2)[9][d] (3ஆவது) |
• நீர் (%) | 7.0[10] (2010) |
• நிலப் பரப்பளவு | 3,531,905 sq mi (9,147,590 km2) (3ஆவது) |
மக்கள் தொகை | |
• 2024 மதிப்பீடு | 34,01,10,988[11] |
• 2020 கணக்கெடுப்பு | 33,14,49,281[e][12] (3ஆவது) |
• அடர்த்தி | 87/sq mi (33.6/km2) (185ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | ஐஅ$29.168 டிரில்லியன் (₹2,086 டிரில்லியன்)[13] (2ஆவது) |
• தலைவிகிதம் | ஐஅ$86,601 (₹61,93,357.1)[13] (8ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2024 மதிப்பீடு |
• மொத்தம் | ஐஅ$29.168 டிரில்லியன் (₹2,086 டிரில்லியன்)[13] (1ஆவது) |
• தலைவிகிதம் | ஐஅ$86,601 (₹61,93,357.1)[13] (6ஆவது) |
ஜினி (2023) | 41.6[f][14] மத்திமம் |
மமேசு (2022) | 0.927[15] அதியுயர் · 20ஆவது |
நாணயம் | ஐ. அ. டாலர் ($) (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 to −12, +10, +11 |
ஒ.அ.நே−4 to −10[g] | |
திகதி அமைப்பு | mm/dd/yyyy[h] |
வாகனம் செலுத்தல் | வலது[i] |
அழைப்புக்குறி | +1 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | US |
இணையக் குறி | .us[16] |
அமெரிக்க முதற்குடிமக்கள் அமெரிக்காக்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்விடமாகக் கொண்டிருந்துள்ளனர். 1607இல் தொடங்கி பிரித்தானியக் குடியேற்றமானது 13 குடியேற்றங்கள் நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றது. இவை தற்போதைய கிழக்கு அமெரிக்காவில் நிறுவப்பட்டன. பிரித்தானிய அரச குடும்பத்துடன் வரி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் காரணமாக இவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டது. இது அமெரிக்கப் புரட்சிக்கு வழி வகுத்தது. இறுதியாக அமெரிக்கப் புரட்சிப் போரில் முடிவடைந்தது. சூலை 4, 1776 அன்று அமெரிக்கா விடுதலையை அறிவித்தது. இயல்புரிமை, ஆளப்படுபவர்களின் விருப்பம் மற்றும் குடியரசுவாதம் ஆகிய மறுமலர்ச்சி காலக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட முதல் தேசிய அரசாக உருவானது. வட அமெரிக்கா முழுவதும் விரிவடையத் தொடங்கியது. 1848 வாக்கில் கண்டம் முழுவதும் பரவியிருந்தது. அடிமைத்தனம் மீதான வேறுபட்ட கொள்கைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு பிரிந்து செல்வதற்கு வழி வகுத்தன. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பானது எஞ்சியிருந்த ஒன்றிய மாநிலங்களுடன் அமெரிக்கா உள்நாட்டுப் போரில் (1861-1865) சண்டையிட்டது. ஒன்றியத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்த தன்மை ஆகியவற்றின் காரணமாக தேசிய அளவில் அடிமைத் தனமானது ஒழிக்கப்பட்டது. 1900 வாக்கில் அமெரிக்கா தன்னைத் தானே ஓர் உலக வல்லமையாக நிறுவிக் கொண்டது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரமானது. திசம்பர் 1941இல் முத்துத் துறைமுகம் மீதான சப்பானின் தாக்குதலைத் தொடர்ந்து நேச நாடுகளின் பக்கம் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா நுழைந்தது. போருக்குப் பிந்தைய விளைவுகள் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரு நாடுகளை உலகின் இரு வல்லரசுகளாக்கின. இது பனிப் போருக்கு இட்டுச் சென்றது. கொள்கை ஆதிக்கம் மற்றும் சர்வதேச செல்வாக்கிற்காக ஒரு போராட்டத்தில் இரு நாடுகளும் ஈடுபட்டதே பனிப் போர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நேரடி இராணுவச் சண்டையை இவ்விரு நாடுகளும் தவிர்த்தன. விண்வெளிப் போட்டியின் போது நிலவில் முதல் மனிதர்களை இறக்கிய நாடாக அமெரிக்கா உருவானது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் பனிப் போரின் முடிவு ஆகியவற்றைத் தொடர்ந்து அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசானது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கமானது தலைவர் ஆளும் அரசு முறைமையை உடைய ஓர் அரசியலமைப்பைக் கொண்ட ஒரு கூட்டமைப்புக் குடியரசு மற்றும் தாராண்மை மக்களாட்சியாகும். அரசாங்கமானது மூன்று வெவ்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது: அவை செயல் துறை, பேரவை மற்றும் நீதித்துறை ஆகியவையாகும். மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கீழவையான சார்பாளர்கள் அவை மற்றும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமமான பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேலவையான மூப்பவை ஆகியவற்றைக் கொண்ட ஈரவை முறைமையை உடைய தேசிய நாடாளுமன்றத்தை இது கொண்டுள்ளது. பல கொள்கைப் பிரச்சினைகள் மாநில அளவிலோ அல்லது உள்ளூர் அளவிலோ பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளன. சட்ட வரம்பு எல்லைகளின் படி பரவலாக வேறுபட்ட சட்டங்களை இவை கொண்டுள்ளன. வாழ்க்கைத் தரம், வருமானம் மற்றும் செல்வச் செழிப்பு, உற்பத்தித் திறன், பொருளாதார போட்டித் திறன், மனித உரிமைகள், கண்டுபிடிப்புகள் மற்றும் கல்வி ஆகியவற்றின் சர்வதேச அளவீடுகளில் அமெரிக்காவானது உயர்ந்த தர வரிசையைப் பெறுகிறது.
வளர்ந்த நாடான அமெரிக்கா உலகின் எந்த ஒரு நாட்டையும் விட அதிக செல்வத்தைக் கொண்டுள்ளது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்குக்கும் மேலான அளவை அமெரிக்கப் பொருளாதாரமானது கொண்டுள்ளது. உற்பத்தி அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரம் இதுவாகும். உலகின் மிகப் பெரிய இறக்குமதி நாடாகவும், இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடாகவும் அமெரிக்கா திகழ்கிறது. ஐக்கிய நாடுகள் அவை, உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகள் அமைப்பு, வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றை உறுப்பினராகத் தோற்றுவித்த நாடாக இது உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராகவும், ஓர் அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுத நாடாகவும் உள்ளது. உலகின் முதன்மையான அரசியல், பண்பாட்டு, பொருளாதார, இராணுவ மற்றும் அறிவியல் சக்தியாகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உலக செல்வாக்கை இது கொண்டுள்ளது.
"அமெரிக்க ஐக்கிய நாடுகள்" என்ற சொற்றொடரின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட பயன்பாடானது சனவரி 2, 1776ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கடிதத்திலிருந்து வருகிறது. தளபதி சியார்ச் வாசிங்டனுக்கு ஓர் அமெரிக்க விடுதலைப் படை உதவியாளரான இசுடீவன் மோய்லன் என்பவர் வாசிங்டனின் முகாம் உதவியாளரான யோசப்பு ரீடு என்பவருக்கு புரட்சிப் போர் முயற்சியில் ஆதரவை "எசுப்பானியாவுக்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழு மற்றும் தேவையான சக்திகளுடன்" வேண்ட வேண்டும் என்று குறிப்பிட்டார்.[26][27] முதல் அறியப்பட்ட பொதுப் பயன்பாடானது ஏப்பிரல் 6, 1776இல் வில்லியம்சுபர்க்கு என்ற இடத்தைச் சேர்ந்த செய்தித்தாளான த விர்ஜினியா கெசட்டில் பெயர் குறிப்பிடாத ஒருவர் எழுதிய பத்தியில் பதிப்பிக்கப்பட்டது.[26][28][29] சூன் 1776 வாக்கில் கூட்டமைப்பின் கட்டுரைகள்[30][31] மற்றும் சுதந்திர அறிவிப்பில் "அமெரிக்க ஐக்கிய நாடுகள்" என்ற பெயரானது தோன்றியது.[30] சூலை 4, 1776 சுதந்திர அறிவிப்பை இரண்டாவது கண்டப் பகுதி பேரவையானது பின்பற்றத் தொடங்கியது.[32]
"யுனைட்டெட் இசுடேட்சு" என்ற சொற்றொடர் மற்றும் "யூ. எஸ்." என்ற முதல் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெயர்ச் சொற்களாக அல்லது பெயரடைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் பொதுவான சுருக்கமான பெயர்களாக இவை உள்ளன. முதல் எழுத்துக்களான "யூஎஸ்ஏ" என்ற பெயர்ச் சொல்லும் கூடப் பொதுவானதாக உள்ளது.[33] "யுனைட்டெட் இசுடேட்சு" மற்றும் "யூ. எஸ்." ஆகியவை ஐக்கிய அமெரிக்க மைய அரசாங்கம் முழுவதும் குறிப்பிட்ட விதிகளுடன் நிறுவப்பட்ட சொற்றொடர்களாக உள்ளன.[m] இப்பெயரின் பேச்சு வழக்குச் சுருக்கமாக "த இசுடேட்சு" நிறுவப்பட்டுள்ளது. குறிப்பாக, அயல் நாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[35] "இசுடேட்சைடு" என்பது இதையொத்த பெயரடை அல்லது வினையடை ஆகும்.[36]
இத்தாலிய நாடு காண் பயணியான அமெரிகோ வெஸ்புச்சியின் (1454-1512) இலத்தீன் பெயரான அமெரிக்கசு வெசுபுதியசின் முதல் பாதியின் பெண் பால் வடிவம் "அமெரிக்கா" ஆகும். 1492இல் கிறித்தோபர் கொலம்பசுவால் கண்டுபிடிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகளானவை முன்னர் அறியப்படாத ஒரு நிலப்பகுதியின் ஒரு பகுதி என்றும், ஆசியாவின் கிழக்கு எல்லையிலுள்ள கிழக்கிந்தியத் தீவுகள் இல்லை எனவும் இவர் முதலில் பரிந்துரைத்தார்.[37][38][39] வட மற்றும் தெற்கு அமெரிக்காவை மொத்தமாகக் குறிப்பிட "அமெரிக்காக்கள்" என்ற பயன்பாடு உள்ள போதிலும் ஆங்கிலத்தில் ஐக்கிய அமெரிக்காவுடன் தொடர்பற்ற தகவல்களுக்கு "அமெரிக்கா" என்ற சொல் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.[40]
வட அமெரிக்காவின் முதல் குடியிருப்பாளர்கள் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் பெரிங் பாலம் வழியாகச் சைபீரியாவிலிருந்து புலம் பெயர்ந்து வந்தனர்.[42][43] பொ. ஊ. மு. 11,000 வாக்கில் தோன்றும் குளோவிசு பண்பாடானது அமெரிக்காக்களில் முதல் பரவலான பண்பாடாக நம்பப்படுகிறது.[44][45] காலப் போக்கில் பூர்வீக வட அமெரிக்கப் பண்பாடுகள் அதிகப்படியான நுட்பமுடையவையாக வளர்ச்சியடைந்தன. மிசிசிப்பிப் பண்பாடு போன்ற சில பண்பாடுகள் வேளாண்மை, கட்டடக்கலை மற்றும் நுட்பமான சமூகங்களை உருவாக்கின.[46] தொல் காலத்துக்குப் பிந்தைய கட்டத்தில் மிசிசிப்பிப் பண்பாடுகளானவை நடுமேற்கு, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகள், மற்றும் பேரேரிப் பகுதியில் அல்கோங்குயான் மற்றும் கிழக்குக் கடற்கரையின் பக்கவாட்டில் அமைந்திருந்தன.[47] அதே நேரத்தில் கோகோகம் பண்பாடு மற்றும் ஆதி புவெப்லோயர்கள் தென்மேற்கில் குடியமர்ந்திருந்தனர். ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் வருவதற்கு முன்னர் தற்போதைய ஐக்கிய அமெரிக்காவின் பூர்வீக மக்களின் மக்கள் தொகை மதிப்பீடுகளானவை சுமார் 5 இலட்சம்[48][49] முதல் கிட்டத்தட்ட 1 கோடி வரை வேறுபடுகின்றன.[49][50]
1492இல் எசுப்பானியாவுக்காக கரிபியனை கிறித்தோபர் கொலம்பசு ஆய்வு செய்யத் தொடங்கினர். புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் புளோரிடாவிலிருந்து நியூ மெக்சிகோ மற்றும் கலிபோர்னியா வரை எசுப்பானியம் பேசிய குடியேற்றங்கள் மற்றும் தூதுக் குழுக்களுக்கு இது வழி வகுத்தது.[51][52][53] அமெரிக்கப் பேரேரிகள், மிசிசிப்பி ஆறு மற்றும் மெக்சிகோ வளைகுடாவுக்குப் பக்கவாட்டில் பிரான்சு அதன் சொந்தக் குடியேற்றங்களை நிறுவியது.[54] கிழக்குக் கடற்கரையில் பிரித்தானியக் குடியேற்றமானது விர்ஜினியா குடியேற்றம் (1607) மற்றும் பிளைமவுத் குடியேற்றத்துடன் (1620) தொடங்கியது.[55][56] மேபிளவர் காம்பேக்ட் எனும் ஒப்பந்தம் மற்றும் கனெக்டிகட்டின் அடிப்படை ஆணைகள் எனும் அரசியல் சாசனம் ஆகியவை அமெரிக்கக் குடியேற்றங்கள் முழுவதும் வளர்ச்சியடைந்த பிரதிநிதித்துவ சுய-அரசாங்கம் மற்றும் அரசியலமைப்புக்கு முன்னோடிக் காரணிகளை நிறுவின.[57][58] தற்போதைய ஐக்கிய அமெரிக்காவில் இருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் பூர்வீக அமெரிக்கர்களுடன் சண்டைகளில் ஈடுபட்ட அதே நேரத்தில் வணிகத்திலும் கூட ஈடுபட்டனர். உணவு மற்றும் விலங்குத் தோல்களுக்காக ஐரோப்பியக் கருவிகளைப் பண்டம் மாற்றிக் கொண்டனர்.[59][n] உறவு முறைகளானவை நெருங்கிய ஒத்துழைப்பு முதல் போர் முறை மற்றும் படு கொலைகள் வரையிலும் வேறுபட்டிருந்தன. பூர்வீக அமெரிக்கர்களை ஐரோப்பிய வாழ்க்கை முறைகளைப் பின்பற்றக் கட்டாயப்படுத்திய கொள்கைகளை பொதுவாகக் குடியேற்ற அதிகார அமைப்புகள் பின்பற்றின. இதில் கிறித்தவ மதத்திற்கு மாறுவதும் அடங்கும்.[63][64] கிழக்குக் கடற்கரையின் பக்கவாட்டில் அத்திலாந்திக் அடிமை வணிகம் மூலமாக குடியேற்றக்காரர்கள் ஆப்பிரிக்க அடிமைகளைக் கொண்டு வந்தனர்.[65]
ஐக்கிய அமெரிக்காவைப் பிற்காலத்தில் அமைத்த உண்மையான பதின்மூன்று குடியேற்றங்கள்[o] பிரித்தானியாவின் உடைமைகளாக நிர்வகிக்கப்பட்டன.[66] தேர்தல் உடைய உள்ளூர் அரசாங்கங்களானவை பெரும்பாலான வெள்ளை ஆண் உடைமைதாரர்களுக்குத் திறக்கப்பட்டிருந்தன.[67][68] குடியேற்ற மக்கள் தொகையானது துரிதமாக வளர்ச்சியடைந்தது. பூர்வீக அமெரிக்க மக்கள் தொகைகளை முந்தியது.[69] 1770களின் வாக்கில் அமெரிக்கர்களில் ஒரு சிறிய சிறுபான்மையினர் மட்டுமே அயல் நாட்டில் பிறந்தவர்களாக இருக்கும் அளவுக்கு குடியேற்றக்காரர்களின் மக்கள் தொகையின் இயற்கையான அதிகரிப்பானது இருந்தது.[70] பிரித்தானியாவில் இருந்து குடியேற்றங்களின் தொலைவானது சுய-அரசாங்கத்தின் வளர்ச்சி,[71] மற்றும் முதல் பெரும் விழிப்பு, ஒரு தொடர்ச்சியான கிறித்தவ புத்துயிர்ப்புகள், சமயச் சுதந்திரத்தில் குடியேற்றங்களின் ஆர்வம் தூண்டப்பட்டது ஆகியவற்றுக்கு அனுமதியளித்தது.[72]
பிரெஞ்சு மற்றும் இந்தியப் போரில் அவர்களது வெற்றியைத் தொடர்ந்து பிரித்தானியா உள்ளூர்க் குடியேற்றக்காரர்கள் மீது அதிகப் படியான கட்டுப்பாட்டைச் செலுத்தத் தொடங்கியது. குடியேற்றங்களின் அரசியல் எதிர்ப்புக்கு இது வழி வகுத்தது. ஆங்கிலேயர்களாக குடியேற்றக்காரர்களது உரிமை மறுக்கப்பட்டது முதன்மையான மனக் குறைகளில் ஒன்றாக இருந்தது. குறிப்பாக, அவர்களுக்கு வரி விதித்த பிரித்தானிய அரசாங்கத்தில் பிரதிநித்துவ உரிமையானது அவர்களுக்கு மறுக்கப்பட்டது. தங்களது அதிருப்தி மற்றும் மன உறுதியைக் காட்டுவதற்காக 1774இல் முதல் கண்டப் பகுதி பேரவையானது சந்திப்பை நடத்தியது. கண்டப் பகுதி அமைப்பை உருவாக்கியது. பிரித்தானியப் பொருட்களைக் குடியேற்றங்கள் புறக்கணித்த இந்நிகழ்வு பயனுள்ளது என நிரூபணமானது. பிறகு குடியேற்றக்காரர்களை நிராயுதபாணிகளாக்கும் பிரித்தானிய முயற்சியானது 1775இல் லெக்சிங்டன் மற்றும் கான்கார்டு யுத்தங்களில் முடிவடைந்தது. இது அமெரிக்கப் புரட்சிப் போரைத் பற்ற வைத்தது. இரண்டாவது கண்டப் பகுதிப் பேரவையில் குடியேற்றங்கள் அமெரிக்க விடுதலைப் படையின் தலைமைத் தளபதியாக சியார்ச் வாசிங்டனை நியமித்தன. சுதந்திர அறிவிப்பை முன் வரைவு செய்ய தாமசு ஜெஃபர்சனின் பெயரை முன் வைத்த ஒரு குழுவை உருவாக்கின. ஒரு சுதந்திர நாட்டை உருவாக்க லீ தீர்மானத்தை நிறைவேற்றி இரு நாட்களுக்குப் பிறகு சூலை 4, 1776இல் அறிவிப்பானது ஏற்கப்பட்டது.[73] விடுதலை, தவிர்க்க இயலாத தனி நபர் உரிமைகள்; மக்களின் இறையாண்மை;[74] குடியரசுக்கான ஆதரவு மற்றும் முடியாட்சி, உயர் குடியினர், மற்றும் அனைத்து மரபு ரீதியிலான அரசியல் சக்தி ஆகியவற்றின் நிராகரிப்பு; குடிசார் அறநெறி நடத்தை; மற்றும் அரசியல் ஊழல் தீய செயலாக்கப்படுதல்[75] உள்ளிட்டவை அமெரிக்கப் புரட்சியின் அரசியல் விழுமியங்களாக இருந்தன. வாசிங்டன், ஜெஃபர்சன், யோவான் ஆடம்ஸ், பெஞ்சமின் பிராங்கிளின், அலெக்சாண்டர் ஆமில்டன், யோவான் ஜேய், ஜேம்ஸ் மாடிசன், தாமசு பெய்ன், மற்றும் பல பிறரை உள்ளடக்கியிருந்த ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனத் தந்தைகளானவர்கள் கிரேக்க-உரோமானிய, மறுமலர்ச்சி மற்றும் அறிவொளிக் காலத் தத்துவங்கள் மற்றும் யோசனைகளால் அகத்தூண்டுதல் பெற்றிருந்தனர்.[76][77]
கூட்டமைப்பு மற்றும் நீடித்த ஒன்றியத்துக்கான பிரிவுகளானவை 1781ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஏற்புடையதாக்கப்பட்டன. 1789 வரை செயல்பாட்டில் இருந்த ஓர் அதிகாரப் பரவலாக்கத்தையுடைய அரசாங்கத்தை நிறுவின.[73] 1781இல் யார்க் டவுன் முற்றுகையில் பிரித்தானியச் சரணடைவுக்குப் பிறகு பாரிசு ஒப்பந்தத்தால் (1783) அமெரிக்க இறையாண்மையானது பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலமாக ஐக்கிய அமெரிக்கா மேற்கே மிசிசிப்பி ஆறு, வடக்கே தற்கால கனடா மற்றும் தெற்கே எசுப்பானிய புளோரிடா வரை விரிவடைந்திருந்த நிலப்பரப்பைப் பெற்றது.[78] புதிய மாநிலங்களின் இணைப்புடன் விரிவடையும் நாட்டின் நிலப்பரப்புக்கு ஒரு முன்னுதாரணத்தை வடமேற்குச் சட்டமானது (1787) நிறுவியது.[79] அ. ஐ. நா. அரசியலமைப்பானது 1787ஆம் ஆண்டின் அரசியலமைப்புக் கூட்டத்தில் அரசியலைப்புப் பிரிவுகளின் வரம்புகளை வெற்றி கொள்வதற்கான முன் வரைவாக வைக்கப்பட்டது. 1789இல் இது பயன்பாட்டுக்கு வந்தது. அதிகாரப் பிரிவினையின் ஓர் அமைப்பை ஒன்றாக உறுதி செய்த மூன்று வெவ்வேறு பிரிவுகளால் நிர்வகிக்கப்பட்ட ஒரு கூட்டாட்சிக் குடியரசை உருவாக்கியது.[80] அரசியலமைப்பின் கீழ் நாட்டின் முதல் அதிபராகச் சியார்ச் வாசிங்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிகப் படியான மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்தின் சக்தி குறித்த ஐயுறவாளர்களின் கவலைகளைத் தணிக்க 1791இல் உரிமைகளின் சட்டமானது கொண்டு வரப்பட்டது.[81][82] புரட்சிப் போருக்குப் பிறகு தலைமைத் தளபதி பதவியை வாசிங்டன் இராஜினாமா செய்தது மற்றும் நாட்டின் முதல் அதிபராக மூன்றாவது முறையாகப் போட்டியிட அவர் பின்னர் மறுத்தது ஆகியவை ஐக்கிய அமெரிக்காவில் குடிசார் அதிகாரத்தின் மேன்மைக்கு ஒரு முன்னுதாரணத்தையும், அமைதியான முறையில் அதிகாரம் கை மாறுவதையும் நிறுவின.[83][84]
பிரான்சிடமிருந்து 1803ஆம் ஆண்டில் லூசியானா வாங்கப்பட்டதானது ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்பைக் கிட்டத்தட்ட இரு மடங்காக்கியது.[85][86] பிரித்தானியாவுடனான சிறு பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தன. இவை 1812ஆம் ஆண்டுப் போருக்கு வழி வகுத்தன. இது இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது.[87][88] 1819இல் புளோரிடா மற்றும் அதன் வளைகுடா கடற்கரை நிலப்பரப்பை எசுப்பானியா விட்டுக் கொடுத்தது.[89] 18ஆம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியில் அமெரிக்கர்கள் மேற்கு நோக்கி விரிவடையத் தொடங்கினர். கண்டப் பகுதியில் ஐக்கிய அமெரிக்கா விரிவடைவது தவிர்க்க இயலாத ஒன்று என்ற நம்பிக்கையுடன் இவர்கள் குடியேறினர்.[90][91] புதிய நிலப்பரப்புக்குள் அடிமைத் தனத்தை தெற்கு மாநிலங்கள் விரிவாக்குவதைத் தடுக்கும் வடக்கு மாநிலங்களின் எண்ணத்தை சமப்படுத்தும் முயற்சியாக 1820ஆம் ஆண்டின் மிசோரி இணக்கமானது கொண்டு வரப்பட்டது. இது மிசோரியை ஓர் அடிமை முறையை உடைய மாநிலமாகவும், மேய்னை சுதந்திர முறையை உடைய மாநிலமாகவும் இணைத்துக் கொண்டது. 36°30′ அட்ச ரேகைக்கு வடக்கே இருந்த லூசியானா வாங்கலில் பெறப்பட்ட அனைத்து பிற நிலங்களிலும் அடிமை முறை மேலும் தடை செய்யப்படுவதை இந்த இணக்கமானது உறுதி செய்தது.[92] பூர்வீக அமெரிக்கர்களால் குடியமரப்பட்டிருந்த நிலத்திற்குள் அமெரிக்கர்கள் மேற்கொண்டு விரிவடைந்த போது செவ்விந்தியர்களை நீக்குவது அல்லது இணைத்துக் கொள்வது எனும் கொள்கைகளைக் கூட்டாட்சி அரசாங்கமானது பொதுவாகச் செயல்படுத்தியது.[93][94] ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக முக்கியமான செவ்விந்திய நீக்கல் சட்டமானது 1830ஆம் ஆண்டின் செவ்விந்திய நீக்கல் சட்டம் ஆகும். இது கண்ணீர்த் தடங்கள் (1830-1850) எனும் நிகழ்வுக்குக் காரணமானது. இதில் மிசிசிப்பி ஆற்றுக்குக் கிழக்கே வாழ்ந்து வந்த 60,000 பூர்வகுடி அமெரிக்கர்கள் கட்டாயப்படுத்தி நீக்கப்பட்டு தூர மேற்கில் இருந்த நிலங்களுக்கு இடமாற்றப்பட்டனர். கண்ணீர்த் தடங்களானது 13,200 முதல் 16,700 வரையிலான இறப்புகளுக்குக் காரணமானது.[95] இது மற்றும் தொடக்க கால அமைப்பு ரீதியிலான இடமாற்றங்களானவை மிசிசிப்பிக்கு மேற்கே ஒரு நீண்ட தொடர்ச்சியான அமெரிக்க-செவ்விந்தியப் போர்களைத் துண்டியது.[96][97] 1845இல் டெக்சாசு குடியரசு இணைக்கப்பட்டது.[98] 1846ஆம் ஆண்டின் ஓரிகன் ஒப்பந்தமானது தற்போதைய வடமேற்கு ஐக்கிய அமெரிக்கா கட்டுப்படுத்துவதற்கு வழி வகுத்தது.[99] 1848இல் மெக்சிகோ-அமெரிக்கப் போரில் அமெரிக்காவின் வெற்றியானது கலிபோர்னியா, நிவேடா, உடா, மற்றும் தற்கால கொலராடோவின் பெரும் பகுதி மற்றும் அமெரிக்க தென்மேற்குப் பகுதிகளை மெக்சிகோ விட்டுக் கொடுப்பதற்குக் காரணமானது.[90][100] 1848-1849ஆம் ஆண்டில் கலிபோர்னியா தங்க வேட்டையானது அமைதிப் பெருங்கடல் கடற்கரைக்கு ஒரு பெருமளவிலான வெள்ளை இன குடியேற்றக்காரர்கள் இடம் பெயர்வதைத் தூண்டியது. பூர்வீக அமெரிக்க மக்கள் தொகையுடன் இதை விடப் பெரிய சண்டைகளுக்கு இது வழி வகுத்தது. இதில் மிக வன்முறை நிறைந்த நிகழ்வுகளில் ஒன்றான பூர்வீக அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட கலிபோர்னியா இனப் படு கொலையானது 1870களின் தொடக்கம் வரை நீடித்திருந்தது.[101] மேற்கொண்ட மேற்கு நிலப்பரப்புகள் மற்றும் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதன் போது நடந்ததைப் போலவே இந்த வன்முறை நடைபெற்றது.[102]
அமெரிக்கப் புரட்சியின் போது அடிமை முறைப் பழக்கமானது குறிப்பிடத்தக்க அளவுக்கு கேள்விக்கு உள்ளாக்கப்பட தொடங்கிய போதிலும் குடியேற்றக் காலத்தின் போது அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை முறையானது சட்டப்பூர்வமானதாக இருந்தது.[103] தெற்கத்திய மாநிலங்களில் அடிமை முறைக்கான ஆதரவு வலிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் வடக்கத்திய மாநிலங்கள் அடிமை முறையை ஒழிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்தன.[104] பருத்தி அரவை ஆலை போன்ற கண்டுபிடிப்புகள் அடிமை முறை அமைப்பை தெற்கு மேல் தட்டு மக்களுக்கு அதிகரித்து வந்த வருவாய் வழங்கும் அமைப்பாக மாற்றின.[105][106][107] இந்த அடிமை முறை குறித்த வகுப்புச் சண்டையானது அமெரிக்க உள்நாட்டுப் போரில் (1861–1865) முடிவடைந்தது.[108][109] அடிமை முறையைக் கொண்டிருந்த 11 மாநிலங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிந்து அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கின. அதே நேரத்தில், பிற மாநிலங்கள் ஒன்றியத்திலேயே தொடர்ந்து இருந்தன.[110][111] சம்தர் கோட்டை மீது கூட்டமைப்பு மாநிலத்தவர் குண்டுகளை வீசியதற்குப் பிறகு ஏப்பிரல் 1861இல் போர் வெடித்தது.[112][113] சனவரி 1863இல் அடிமைகளுக்கு சம உரிமை அறிவிப்புக்குப் பிறகு பல விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் ஒன்றிய இராணுவத்தில் இணைந்தனர்.[114] 1863இன் விக்சுபர்க்கு முற்றுகை மற்றும் கெட்டிசுபெர்க்கு சண்டையைத் தொடர்ந்து போரானது ஒன்றியத்தின் பக்கம் சாயத் தொடங்கியது. அப்போமதோக்சு நீதிமன்றக் காட்டட யுத்தத்தில் ஒன்றியத்தின் வெற்றிக்குப் பிறகு 1865இல் கூட்டமைப்பு மாநிலங்கள் சரணடைந்தன.[115] போருக்குப் பிறகு மறு கட்டமைப்பு சகாப்தமானது தொடங்கியது. அதிபர் ஆபிரகாம் லிங்கன் அரசியல் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு மறுகட்டமைப்புத் திருத்தங்கள் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்டன. கண்டப் பகுதி தந்தி மற்றும் இருப்புப் பாதைகள் உள்ளிட்ட தேசிய உட்கட்டமைப்பானது அமெரிக்க எல்லைப் புற மாநிலங்களில் வளர்ச்சியைத் தூண்டியது.[116]
1865 முதல் 1917 வரை ஐக்கிய அமெரிக்காவில் அதற்கு முன்னர் இருந்திராத அளவுக்குக் குடியேற்றக்காரர்கள் வருகை புரிந்தனர். ஐரோப்பாவிலிருந்து 2.44 கோடிப் பேர் வந்ததும் இதில் அடங்கும்.[119] இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூயார்க் நகரத் துறைமுகத்தின் வழியாக வருகை புரிந்தனர். நியூயார்க் நகரம் மற்றும் கிழக்குக் கடற்கரையிலிருந்து பிற பெரிய நகரங்கள் ஒரு பெருமளவிலான யூத, ஐரிய மற்றும் இத்தாலிய மக்கள் தொகைக்குத் தாயகமாக உருவாயின. அதே நேரத்தில், பல செருமானியர் மற்றும் நாடு ஐரோப்பியர்கள் நடு மேற்குப் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். இதே நேரத்தில், சுமார் 10 இலட்சம் பிரெஞ்சு கனடாக்காரர்கள் கியூபெக்கிலிருந்து நியூ இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்தனர்.[120] பெரும் புலப்பெயர்வின் போது தசம இலட்சக் கணக்கான ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கிராமப் புறத் தெற்கு அமெரிக்காவிலிருந்து வடக்கின் நகர்ப்புறப் பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர்.[121] 1867ஆம் ஆண்டு உருசியாவிடமிருந்து அலாஸ்கா விலைக்கு வாங்கப்பட்டது.[122]
1877ஆம் ஆண்டின் இணக்கமானது மறு கட்டமைப்பைச் செயல்பாட்டு ரீதியாக முடிவுக்குக் கொண்டு வந்தது.[123][124] தெற்கு அமெரிக்க அரசியலில் உள்ளூர்க் கட்டுப்பாட்டை வெள்ளையின ஆதிக்கவாதிகள் பெற்றனர். மறு கட்டமைப்பைத் தொடர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அதிகரித்து வந்த மற்றும் வெளிப்படையான இன வெறியைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. அமெரிக்க இன உறவு முறைகளின் மிக மோசமான கட்டம் என்று இக்காலமானது பொதுவாக அழைக்கப்படுகிறது.[125][126] பிளெசி எதிர். பெர்குசன் உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளானவை 14ஆவது மற்றும் 15ஆவது திருத்தங்களை செயலாற்றல் அற்றவையாக ஆக்கின. தெற்கின் ஜிம் குரோ சட்டங்கள் கட்டுப்பாட்டில் இல்லாதவையாக மாற, நடு மேற்கில் சன்டவுன் பட்டணங்கள் மற்றும் நாடு முழுவதும் சமூகங்கள் பிரிக்கப்பட்டு வாழ்வதற்கு இத்தீர்ப்புகள் அனுமதியளித்தன. சிவப்புக் கோடு கொள்கையால் வலுவூட்டப்பட்டதற்குப் பின்னர் இந்த சமூகப் பிரிவினையை கூட்டாட்சி வீட்டு உரிமையாளர்களின் கடன் நிறுவனமானது பின்பற்றத் தொடங்கியது.[127]
மலிவான புலம் பெயர் தொழிலாளர்களிடம் மிகு நலம் பெற்றதுடன் இணைந்து தொழில் நுட்ப முன்னேற்றங்களின் ஒரு வெடிப்பானது ஏற்பட்டது.[128] இது பிந்தைய 19ஆம் நூற்றாண்டு மற்றும் தொடக்க 20ஆம் நூற்றாண்டுகளின் போது துரிதமான பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இங்கிலாந்து, பிரான்சு மற்றும் செருமனி ஆகிய மூன்று நாடுகளின் இணைந்த பொருளாதாரத்தை விட ஐக்கிய அமெரிக்காவின் பொருளாதாரம் வேகமாக வளர்வதற்கு வாய்ப்பளித்தது.[129][130] போட்டியைத் தடுக்க அறக் கட்டளைகள் மற்றும் ஏகபோக உரிமைகளை அவர்கள் உருவாக்கியதன் மூலம் பெரும்பாலும் அதிகப்படியான சக்தியானது ஒரு சில முக்கியமான தொழில்துறை முதலாளிகளின் கைகளில் வளர்வதற்கு உக்கம் அளித்தது.[131] இருப்புப் பாதை, பாறை எண்ணெய் மற்றும் எஃகுத் தொழில் துறைகளில் நாட்டின் விரிவாக்கத்திற்கு பெரும் தொழிலதிபர்கள் தலைமை தாங்கினர். வாகனத் தொழில் துறையின் ஒரு முன்னோடியாக ஐக்கிய அமெரிக்கா உருவாகியது.[132] பொருளாதார ஏற்றத் தாழ்வுகளில் முக்கியமான அதிகரிப்புகள், குடிசைப் பகுதிகளில் வாழ்நிலைகள், மற்றும் சமூக அமைதியின்மை ஆகியவற்றுடன் இணைந்து இந்த மாற்றங்கள் நடைபெற்றன. தொழிலாளர் சங்கங்கள் உருவாவதற்கான காலச் சூழ்நிலையானது தொடங்கிச் செழித்தது.[133][134][135] முற்போக்கு மனப்பான்மை சகாப்தத்தின் தொடக்கத்துடன் இந்த கால கட்டமானது இறுதியாக முடிவுக்கு வந்தது. முற்போக்கு மனப்பான்மை சகாப்தமானது குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை அம்சமாகக் கொண்டிருந்தது.[136][137]
ஹவாயில் இருந்த அமெரிக்க ஆதரவு ஆக்கக் கூறுகள் ஹவாய் முடியாட்சியைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்தன. 1898இல் இத்தீவுகள் இணைக்கப்பட்டன. எசுப்பானிய-அமெரிக்கப் போரில் எசுப்பானியா தோற்கடிக்கப்பட்டதற்குப் பிறகு அதே ஆண்டு, புவேர்ட்டோ ரிக்கோ, பிலிப்பீன்சு, மற்றும் குவாம் ஆகிய பகுதிகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டன. (இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து சூலை 4, 1946இல் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து முழுமையான சுதந்திரம் பிலிப்பீன்சுக்கு வழங்கப்பட்டது. புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் குவாம் ஆகியவை ஐக்கிய அமெரிக்காவின் நிலப்பரப்புகளாகத் தொடர்கின்றன.).[138] இரண்டாவது சமோவா உள்நாட்டுப் போருக்குப் பிறகு 1900இல் அமெரிக்க சமோவா ஐக்கிய அமெரிக்காவால் பெறப்பட்டது.[139] 1917இல் டென்மார்க்கிடம் இருந்து அ. ஐ. நா. கன்னித் தீவுகளானவை விலைக்கு வாங்கப்பட்டன.[140]
ஐக்கிய அமெரிக்கா முதலாம் உலகப் போரில் நேச நாடுகளுக்கு ஆதரவாக நுழைந்தது. மைய சக்திகளுக்கு எதிராக போரின் போக்கை மாற்ற உதவியது.[141] 1920இல் ஓர் அரசியலமைப்புத் திருத்தமானது நாடு முழுவதும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியது.[142] 1920கள் மற்றும் 30களின் போது மக்கள் தகவல் தொடர்பியலுக்கான வானொலி மற்றும் தொடக்க காலத் தொலைக்காட்சியின் உருவாக்கம் ஆகியவை நாடு முழுவதும் தொடர்புகளை மாற்றம் அடையச் செய்தன.[143] 1929இல் வால் வீதி வீழ்ச்சியானது பெரும் பொருளியல் தொய்வைத் தொடங்கி வைத்தது. இதற்குப் பதிலாக அதிபர் பிராங்க்ளின் ரூசவெல்ட் புதிய ஒப்பந்தத்தைச் செயல்படுத்தினார். நிதிச் சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுடன் இணைந்த பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய திட்டங்கள் மற்றும் பொதுப் பணித் திட்டங்களின் ஒரு தொடர்ச்சி இந்தப் புது ஒப்பந்தமாகும். எதிர் காலப் பொருளியல் தொய்வுகளுக்கு எதிராக பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இவை அனைத்தும் கொண்டு வரப்பட்டன.[144][145]
இரண்டாம் உலகப் போரின் போது தொடக்கத்தில் நடு நிலை வகித்த ஐக்கிய அமெரிக்கா மார்ச்சு 1941இல் நேச நாடுகளுக்குப் போர் கலன்களை விநியோகிக்கத் தொடங்கியது. முத்துத் துறைமுகம் மீதான சப்பானின் தாக்குதலுக்குப் பிறகு திசம்பரில் போரில் நுழைந்தது.[146][147] ஐக்கிய அமெரிக்கா முதல் அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கியது. ஆகத்து 1945இல் சப்பானிய நகரங்களான இரோசிமா மற்றும் நாகசாகிக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியது. போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.[148][149] போருக்குப் பிந்தைய உலகிற்காகத் திட்டமிட சந்தித்த "நான்கு காவலர்களில்" ஐக்கிய அமெரிக்காவும் ஒன்றாகும். பிற காவலர்கள் ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம், மற்றும் சீனா ஆகியவையாகும்.[150][151] ஒப்பீட்டளவில் போரிலிருந்து எவ்விதப் பாதிப்புமின்றி ஐக்கிய அமெரிக்கா வெளி வந்தது. ஏற்கனவே இருந்ததை விட ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், பன்னாட்டு அரசியல் செல்வாக்கையும் கொண்ட நாடாக உருவானது.[152]
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்கா பனிப் போரில் நுழைந்தது. உலக விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்த இரு நாடுகளுக்கும் வழி வகுத்த ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான புவிசார் அரசியல் பதற்றங்களானவை பனிப் போர் ஆகும்.[153][154][155] சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்குப் பகுதியை வரம்புக்கு உட்படுத்துவதற்காகச் சுற்றி வளைக்கும் கொள்கையை ஐக்கிய அமெரிக்கா பயன்படுத்தியது. விண்வெளிப் போட்டியில் வெற்றியாளராக உருவானது. 1969இல் நிலவில் இறங்கிய முதல் குழுவுடன் இப்போட்டி உச்ச நிலையை எட்டியது.[156][157] உள்நாட்டு அளவில் ஐக்கிய அமெரிக்கா பொருளாதார வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து மக்கள் தொகை வளர்ச்சி ஆகியவற்றைக் கண்டது.[158] குடிசார் உரிமைகள் இயக்கமானது தோன்றியது. 1960களின் தொடக்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க தலைவராக மார்ட்டின் லூதர் கிங் உருவானார்.[159] அதிபர் லின்டன் பி. ஜான்சன் நிர்வாகத்தின் பெரும் சமூகத் திட்டமானது அதற்கு முன்னர் இருந்திராத மற்றும் பரவலான இடங்களை அடைந்த சட்டங்கள், கொள்கைகள் மற்றும் ஓர் அரசியலமைப்புத் திருத்தத்தை நீடித்திருந்த அமைப்பு ரீதியிலான இனவெறியின் மோசமான விளைவுகளில் சிலவற்றுக்கு எதிர் வினையாற்றியது.[160] ஐக்கிய அமெரிக்காவில் பதில் பண்பாட்டு இயக்கமானது முக்கியமான சமூக மாற்றங்களைக் கொண்டு வந்தது.[161][162] இராணுவத்தில் கட்டாயப்படுத்திச் சேர்க்கப்படுவதை வெளிப்படையாக எதிர்ப்பது (1973இல் கட்டாயப்படுத்தி இராணுவத்தில் சேர்க்கப்படுவது முடிவுக்குக் கொண்டு வரப்படுவதற்கு இது வழி வகுத்தது) மற்றும் வியட்னாமில் ஐக்கிய அமெரிக்கா தலையீட்டிற்கான பரவலான எதிர்ப்பு (1975இல் ஐக்கிய அமெரிக்கா வியட்னாமிலிருந்து முழுவதுமாகப் பின் வாங்கி படைகளை விலக்கிக் கொண்டது) ஆகியவற்றையும் கூட இது ஊக்குவித்தது.[163] 1970களின் போது சம்பளம் வழங்கப்பட்ட பெண்களின் வேலையாள் பங்கெடுப்பில் பெரும் அதிகரிப்புக்கு பெண்களின் பங்குகளில் ஏற்பட்ட ஒரு சமூக மாற்றமானது முக்கியமாக காரணமாக அமைந்தது. 1985 வாக்கில் 16 அல்லது அதை விட அதிக வயதுடைய அமெரிக்கப் பெண்களில் பெரும்பாலானவர்கள் பணியில் இருந்தனர்.[164] 1980களின் பிற்பகுதி மற்றும் 1990களின் தொடக்கம் ஆகியவைப் பொதுவுடைமை வாதம் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி ஆகியவற்றைக் கண்டது. பனிப் போரின் முடிவை இது குறித்தது. உலகின் ஒற்றை வல்லரசாக ஐக்கிய அமெரிக்காவை ஆக்கியது.[165][166][167][168]
1990களானது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட பதிவு செய்யப்பட்ட பொருளாதார விரிவாக்கம், அ. ஐ. நா. குற்றச் செயல் வீதங்களில் ஒரு பெரும் வீழ்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் ஆகியவற்றைக் கண்டது. உலகளாவிய வலை, மூரின் விதியை ஒத்த பென்டியம் நுண் செயலகத்தின் பரிணாமம், மின்னூட்டம் சேமித்துக் கொள்ளக் கூடிய இலித்தியம் அயனி மின்கலங்கள், முதல் மரபணுச் சிகிச்சை தேர்வாய்வு, மற்றும் படியெடுப்பு ஆகியவை ஐக்கிய அமெரிக்காவில் தோன்றியது அல்லது ஐக்கிய அமெரிக்காவில் முன்னேற்றப்பட்டது போன்ற தொழில்நுட்பப் புதுமைகளானவை இந்தத் தசாப்தம் முழுவதும் காணப்பட்டன. 1990இல் மனித மரபணுத் தொகைத் திட்டமானது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. அதே நேரத்தில், நாஸ்டாக் ஐக்கிய அமெரிக்காவில் இணைய தளத்தில் வணிகத்தைத் தொடங்கிய முதல் பங்குச் சந்தையாக 1998இல் உருவானது.[169]
1991ஆம் ஆண்டின் வளைகுடாப் போரில் அண்டை நாடான குவைத்தை ஆக்கிரமித்திருந்த ஈராக்கியப் படையெடுப்பு இராணுவத்தை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான நாடுகளின் பன்னாட்டுக் கூட்டமைப்பானது வெளியேற்றியது.[170] இஸ்லாமிய இயக்கமான அல் காயிதாவால் 2001இல் ஐக்கிய அமெரிக்கா மீது நடத்தப்பட்ட செப்தெம்பர் 11, 2001 தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கும், இதைத் தொடர்ந்து ஆப்கானித்தான் மற்றும் ஈராக் மீது நடைபெற்ற இராணுவத் தலையீடுகளுக்கும் காரணமாயின.[171][172]
பெரும் பொருளியல் நிலைத் தேக்கத்துடன் ஐக்கிய அமெரிக்க வீட்டுச் சந்தைப் பிரச்சினைகளானவை 2007இல் உச்ச நிலையை அடைந்தன. பெரும் பொருளியல் தொய்வு காலத்திலிருந்து மிகப் பெரிய பொருளாதார மந்த நிலையாக இது இருந்தது.[173] 2010களில் நாட்டில் அரசியல் பிரிவினையானது தாராளமய மற்றும் பழமைவாதப் பிரிவுகளுக்கு இடையே அதிகரித்த பிரச்சினையாக உருவானது.[174][175][176] சனவரி 2021இல் வெள்ளை மாளிகை மீதான தாக்குதலில் இந்தப் பிரிவினையைத் தம் அனுகூலத்திற்காகக் கலகக்காரர்கள் பயன்படுத்தப்படும் நிலையை அடைந்தது.[177] அ. ஐ. நா. நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் கலகக்காரர்களின் ஒரு குழுவானது நுழைந்தது.[178] சுய-ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியாக[179] அதிகாரம் அமைதியாகக் கை மாற்றப்படுவதைத் தடுக்க முயற்சித்தது.[180]
உருசியா மற்றும் கனடாவுக்கு அடுத்து ஒட்டு மொத்த நிலப்பரப்பில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும்.[d][181][182] 48 தொடர்ச்சியாக அமைந்துள்ள மாநிலங்கள் மற்றும் கொலம்பியா மாவட்டம் ஆகியவை 80,80,470 சதுர கிலோ மீட்டர்களுடன் ஓர் இணைந்த பரப்பளவை ஆக்கிரமித்துள்ளன.[9][183][184] அத்திலாந்திக் கடற்கரையின் கடற்கரைச் சமவெளியானது உள்நிலக் காடுகளுக்கும், பியேட்மன்ட் பீடபூமிப் பகுதியில் உள்ள சுருள் போன்ற குன்றுகளுக்கு வழி விடுகின்றன.[185]
ஆப்பலேச்சிய மலைத்தொடர் மற்றும் அடிரோன்டாக் மலை முகட்டுத் திரள் ஆகியவை அமெரிக்கப் பேரேரிகள் மற்றும் நடு மேற்கின் புல்வெளிகளில் இருந்து கிழக்குக் கடற்கரையைப் பிரிக்கின்றன.[186] உலகின் நான்காவது மிகப் பெரிய ஆற்று அமைப்பான மிசிசிப்பி ஆற்று அமைப்பானது நாட்டின் இதயப் பகுதி வழியாக வடக்கு-தெற்காக முதன்மையாக ஓடுகிறது. பெருஞ் சமவெளியின் தட்டையான மற்றும் செழிப்பான பிரெய்ரி புல்வெளிகள் மேற்கு நோக்கி நீண்டு உள்ளன. தென் கிழக்கே ஓர் உயர் நிலப் பகுதியால் தடைகளுக்கு உள்ளாகின்றன.[186]
பெருஞ் சமவெளிகளுக்கு மேற்கே உள்ள ராக்கி மலைத்தொடரானது வடக்கிலிருந்து தெற்காக நாடு முழுவதும் நீண்டுள்ளது. கொலராடோவில் 4,300 மீட்டருக்கும் அதிகமான உயரத்தை இது அடைகிறது.[187] இன்னும் மேற்கே பாறைகளையுடைய பெரும் வடிநிலம் மற்றும் சிகுவாகுவா, சோனோரன், மற்றும் மொகாவி பாலைவனங்கள் உள்ளன.[188] கொலராடோ ஆறால் தசம இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கப்பட்டுள்ள அரிசோனாவின் வடமேற்கு மூலையில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்கு உள்ளது. ஓர் ஆழமான பக்கவாட்டைக் கொண்ட பள்ளத்தாக்கு இதுவாகும். இதன் மிகப் பெரிய காட்சி அளவு மற்றும் நுணுக்க விவரங்களையுடைய, வண்ண மயமான இயற்கை இடங்களுக்காக அறியப்படும் பிரபலமான சுற்றுலாத் தளமாக இது உள்ளது.
சியேரா நிவாடா மற்றும் கேசுகேட் மலைத் தொடர்கள் அமைதிப் பெருங்கடல் கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளன. தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்காவில் தாழ்வான மற்றும் மிக உயரமான புள்ளிகளானவை கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ளன.[189] இரு புள்ளிகளும் சுமார் 135 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளன[190]. 6,190.5 மீட்டர் உயரத்துடன் அலாசுகாவின் டெனாலியானது இந்நாடு மற்றும் கண்டத்தில் மிக உயரமான சிகரமாக உள்ளது.[191] அலாசுகாவின் அலெக்சாந்தர் மற்றும் அலூசியன் தீவுகளில் செயல்பாட்டிலுள்ள எரிமலைகளானவை பொதுவானவையாக உள்ளன. அவாயானது எரிமலைத் தீவுகளை உள்ளடக்கியுள்ளது. ராக்கி மலைத் தொடரின் யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவுக்குக் கீழ் இராட்சத எரிமலைகள் உள்ளன. கண்டப் பகுதியின் மிகப் பெரிய எரிமலை அமைப்பாக யெல்லோஸ்டோன் கல்தேரா உள்ளது.[192] 2021இல் ஐக்கிய அமெரிக்கா உலகளாவிய நிரந்தரப் புல் வயல்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் 8%யும், பயிர் நிலத்தில் 10%யும் கொண்டிருந்தது.[193]
இதன் பெரிய அளவு மற்றும் புவியியல் வேறுபாடுகளுடன் ஐக்கிய அமெரிக்காவானது பெரும்பாலான காலநிலை வகைப்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. 100ஆவது மேற்கு நெடுவரைக் கோடுக்குக் கிழக்கே காலநிலையானது வடக்கில் ஈரப்பதமுள்ள கண்டப் பகுதி காலநிலை முதல் தெற்கில் ஈரப்பதமுள்ள துணை வெப்ப மண்டலக் காலநிலை வரை வேறுபடுகிறது.[194] மேற்கே பெருஞ் சமவெளிகளானவை பகுதியளவு-வறண்டவையாகும்.[195] அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பல மலைப் பாங்கான பகுதிகளானவை ஓர் அல்பைன் தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளன. தென்மேற்கில் காலநிலை வறண்டும், கலிபோர்னியா கடற்கரையில் நடுநிலக்கடல் சார் காலநிலையும், மற்றும் கடற்கரைப் பகுதி ஓரிகன், வாசிங்டன் மற்றும் தெற்கு அலாஸ்கா ஆகிய இடங்களில் பெருங்கடல் காலநிலையையும் கொண்டு காணப்படுகிறது. பெரும்பாலான அலாஸ்காவானது துணை ஆர்க்டிக் அல்லது துருவக் காலநிலையைக் கொண்டுள்ளது. அவாய், புளோரிடாவின் தெற்கு முனை, கரிபியன் மற்றும் அமைதிப் பெருங்கடல் பகுதியில் உள்ள ஐக்கிய அமெரிக்க நிலப்பரப்புகளானவை வெப்ப மண்டலக் காலநிலையைக் கொண்டுள்ளன.[196]
மெக்சிகோ வளைகுடாவை எல்லையாகக் கொண்டுள்ள மாநிலங்கள் சூறாவளிகளுக்கு உள்ளாகின்றன. உலகின் பெரும்பாலான சூறாவளிகள் இந்நாட்டில் தான் ஏற்படுகின்றன. முதன்மையாக சூறாவளி வழி எனும் பகுதியில் ஏற்படுகின்றன.[197] ஒட்டு மொத்தமாக பிற எந்தவொரு நாட்டையும் விட மிக உயர்ந்த தாக்கத்தையுடைய மட்டு மீறிய வானிலை நிகழ்வுகளை ஐக்கிய அமெரிக்கா பெறுகிறது.[198][199] 21ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் மட்டு மீறிய வானிலையானது மிகவும் அடிக்கடி ஏற்படுகிறது. 1960களில் குறிப்பிடப்பட்ட வெப்ப நிலைகளின் எண்ணிக்கையைப் போல் தற்போது மூன்று மடங்கு ஏற்படுகிறது. அமெரிக்கத் தென் மேற்கில் வறட்சிகளானவை மிகவும் அடிக்கடி நிகழ்வனவாகவும், மிகக் கடுமையானவையாகவும் உருவாகியுள்ளன.[200] மக்களை மிகவும் ஈர்க்கக் கூடிய பகுதிகள் சூறாவளிகளுக்கு அதிகம் உள்ளாவதாகக் கருதப்படுகின்றன.[201]
பெரும் எண்ணிக்கையில் அகணிய உயிரினங்களைக் கொண்டுள்ள 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஐக்கிய அமெரிக்காவும் ஒரு நாடாகும். தொடர்ச்சியான ஐக்கிய அமெரிக்கா மற்றும் அலாஸ்காவில் சுமார் 17,000 கலன்றாவரங்களும், அவாயில் சுமார் 1,800 க்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்களும் காணப்படுகின்றன. பூக்கும் தாவரங்களில் சில கண்டப் பகுதியிலும் காணப்படுகின்றன.[203] ஐக்கிய அமெரிக்காவானது 428 பாலூட்டி இனங்கள், 784 பறவையினங்கள், 311 ஊர்வன, 295 நீர்நில வாழ்வன[204] மற்றும் சுமார் 90,000 பூச்சியினங்களுக்குத் தாயகமாக உள்ளது.[205]
63 தேசியப் பூங்காக்கள், கூட்டரசால் பேணப்படும் பிற நூற்றுக்கணக்கான பூங்காக்கள், காடுகள் மற்றும் காட்டியல்பான பகுதிகள் இந்நாட்டில் உள்ளன. இவை தேசியப் பூங்கா சேவை மற்றும் பிற முகமைகளால் மேலாண்மையிடப்படுகின்றன.[206] இந்நாட்டின் நிலத்தில் சுமார் 28% பொதுவுடைமையாகவும், கூட்டரசால் பேணப்படுவதாகவும் உள்ளது[207]. முதன்மையாக இந்நிலங்கள் மேற்கத்திய மாநிலங்களில் உள்ளன.[208] சில நிலங்கள் வணிகப் பயன்பாட்டுக்காகக் குத்தகைக்கு விடப்பட்டு இருந்தாலும் இந்நிலத்தின் பெரும்பாலான பகுதியானது பாதுகாக்கப்பட்டதாகும். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே இராணுவத் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.[209][210]
புதுப்பிக்கவியலா மூலங்கள் மற்றும் அணு சக்தி ஆற்றல், காற்று மற்றும் நீர் மாசுபாடு, உயிரினப் பல்வகைமை, மரங்கள் வெட்டப்படுதல் மற்றும் காடுகள் அழிக்கப்படுதல்,[211][212] மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் மீதான விவாதங்கள் உள்ளிட்டவை ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளாக உள்ளன.[213][214] பெரும்பாலான சுற்றுச்சூழல் சார் பிரச்சினைகளைக் கையாளும் கூட்டரசு முகமையாக ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை திகழ்கிறது.[215] 1964ஆம் ஆண்டிலிருந்து காட்டியல்பு குறித்த யோசனையானது பொது நிலங்களின் மேலாண்மையை காட்டியல்பு சட்டத்தின் மூலம் வடிவமைத்துள்ளது.[216] அச்சுறு நிலை மற்றும் அருகிய இனங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் ஒரு வழியை 1973ஆம் ஆண்டின் அருகிய இனங்களின் சட்டமானது கொடுக்கிறது. ஐக்கிய அமெரிக்க மீன் மற்றும் காட்டுயிர் சேவையானது இச்சட்டத்தைச் செயல்படுத்தி நடைமுறைப்படுத்துகிறது.[217] 2024இல் சுற்றுச்சூழல் செயல்பாட்டுச் சுட்டெண்ணில் 180 நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா 35ஆவது இடத்தைப் பெற்றது.[218] 2016இல் காலநிலை மாற்றம் குறித்த பாரிசு ஒப்பந்தத்தில் இந்நாடு இணைந்தது.[219]
50 மாநிலங்கள் மற்றும் ஒரு தனி கூட்டாட்சித் தலைநகர மாவட்டமான வாசிங்டன் டி. சி.யின் ஒரு கூட்டாட்சிக் குடியரசு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும். ஐந்து இணைக்கப்படாத நிலப்பரப்புகள் மற்றும் பல மனிதர்களற்ற தீவு உடைமைகள் மீது இறையாண்மையையும் கூட இது கொண்டுள்ளது.[220][221] உலகின் மிகப் பழமையான எஞ்சியிருக்கும் கூட்டாட்சி அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகும்.[222] தங்களது குடியேற்ற விலக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உருவான பல புதிய சுதந்திர நாடுகளால் இதன் தேசிய அரசாங்கத்தின் அதிபர் அமைப்பானது முழுவதுமாகவோ அல்லது பகுதியளவாகவோ பின்பற்றப்பட்டு வருகிறது.[223] "சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட சிறுபான்மையினரின் உரிமைகளால் பெரும்பான்மை ஆட்சியானது பழகப்பட்ட" இது ஒரு தாராளமய சார்பாண்மை மக்களாட்சியாகும். ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பானது நாட்டின் உச்ச சட்ட ஆவணமாகப் பயன்படுகிறது.[224]
வாசிங்டன் டி. சி.யில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மூன்று பிரிவுகளால் உருவாக்கப்பட்ட கூட்டாட்சி அரசாங்கமானது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய அரசாங்கமாகும். இது அதிகாரப் பிரிவினையின் ஒரு வலிமையான அமைப்பால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது.[225]
நாடாளுமன்ற முறைக்கு மாறாகத் தலைவர் ஆளும் அரசு முறைமை என்று அறியப்படும் மூன்று பிரிவு அமைப்பில் செயல் துறையானது சட்டமியற்றும் அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. 1789ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இந்த அம்சத்தை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகள் பார்த்துப் பின்பற்றுகின்றன. குறிப்பாக அமெரிக்க கண்டங்களில் இவ்வாறான பின்பற்றுதல் உள்ளது.[235]
அரசியலமைப்பானது அரசியல் கட்சிகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. எனினும், அரசியல் கட்சிகள் 18ஆம் நூற்றாண்டில் சுதந்திரமாகக் கூட்டாட்சி ஆதரவு மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான கட்சிகளாக வளர்ச்சியடைந்தன.[236] வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வகையாக இந்த அமைப்பில் அரசியல் கட்சிகள் இருந்துள்ள போதும் அன்றிலிருந்து ஐக்கிய அமெரிக்கா நடைமுறை ரீதியில் இரு கட்சி அமைப்பை உடையதாகச் செயல்பட்டு வருகிறது.[237] தற்போது இரண்டு முதன்மையான தேசியக் கட்சிகளாக சனநாயகக் கட்சியும், குடியரசுக் கட்சியும் உள்ளன. முதல் கட்சியானது அதன் அரசியல் வழி முறையில் ஒப்பீட்டளவில் தாராளமயம் உடையதாகக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இரண்டாவது கட்சியானது ஒப்பீட்டளவில் பழமைவாதக் கட்சியாகக் கருதப்படுகிறது.[238]
அமெரிக்கக் கூட்டாட்சி அமைப்பில் இறையாண்மை அதிகாரங்களானவை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் இரு நிலைகளுக்கு இடையில் பகிர்ந்தளிக்கப்படுத்தப்படுகின்றன: தேசியம் மற்றும் மாநிலம். மாநிலங்களின் மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அரசாங்கங்களாலும் கூடப் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றனர். மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகள் இவை ஆகும்.[239] மாநிலங்கள் கவுன்டிகள் அல்லது கவுன்டிக்குச் சமமான உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மேலும் மாநகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கொலம்பியா மாவட்டமானது ஐக்கிய அமெரிக்கத் தலைநகரான வாசிங்டன் டி. சி.யை உள்ளடக்கிய ஒரு கூட்டாட்சி மாவட்டமாகும்.[240] கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒரு நிர்வாகப் பிரிவு கூட்டாட்சி மாவட்டமாகும்.[241] கூட்டாட்சி ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடியினங்கள் செவ்விந்தியர்களுக்கு என ஒதுக்கப்பட்ட 326 இடங்களை ஆள்கின்றன.[242]
ஐக்கிய அமெரிக்கா அயல்நாட்டு உறவுகளுக்கு என ஒரு நிறுவப்பட்ட அமைப்பைக் கொண்டுள்ளது. 2024ஆம் ஆண்டு நிலவரப் படி, இந்நாடு உலகின் இரண்டாவது மிகப் பெரிய தூதரகக் குழுக்களைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினராக இந்நாடு உள்ளது.[243] ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தின் அமைவிடமாக இது உள்ளது.[244] ஜி-7,[245] ஜி-20,[246] மற்றும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு போன்ற அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்புகளின் ஓர் உறுப்பினராக ஐக்கிய அமெரிக்கா உள்ளது.[247] கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் தூதரகங்களையும், பல துணைத் தூதரகங்களையும் (அதிகாரபூர்வ பிரதிநிதிகள்) இந்நாட்டில் கொண்டுள்ளன. இதே போலவே, கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அமெரிக்காவின் தூதரகங்களைக் கொண்டுள்ளன. இதற்கு விதி விலக்கு ஈரான்,[248] வட கொரியா[249] மற்றும் பூடான்[250] ஆகிய நாடுகள் ஆகும். ஐக்கிய அமெரிக்காவுடன் அதிகாரப்பூர்வமான தூதரக உறவு முறைகளைக் கொண்டிருக்காவிட்டாலும் தைவான் இந்நாட்டுடன் நெருக்கமான அலுவல் சாராத உறவு முறைகளைப் பேணி வருகிறது.[251] ஆக்ரோசமான சீன நடவடிக்கைகளைப் பின் வாங்கச் செய்வதற்காக தைவானுக்கு இராணுவத் தளவாடங்களை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.[252] ஆத்திரேலியா, இந்தியா மற்றும் சப்பான் ஆகிய நாடுகளுடன் நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தையில் ஐக்கிய அமெரிக்கா இணைந்த போது இந்நாட்டின் புவிசார் அரசியல் கவனம் இந்தோ பசிபிக் பகுதியை நோக்கித் திருப்பியது.[253]
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியத்துடன் ஒரு "சிறப்பு உறவு முறையைக்" கொண்டுள்ளது.[254] கனடா,[255] ஆத்திரேலியா,[256] நியூசிலாந்து,[257] பிலிப்பீன்சு,[258] சப்பான்,[259] தென் கொரியா,[260] இசுரேல்[261] மற்றும் பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் (பிரான்சு, இத்தாலி, செருமனி, எசுப்பானியா மற்றும் போலந்து) வலிமையான உறவு முறைகளைக் கொண்டுள்ளது.[262] இராணுவம் மற்றும் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் ஆகியவற்றில் தன் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புக் கூட்டாளிகளுடன் ஐக்கிய அமெரிக்கா நெருக்கமாகச் செயல்படுகிறது. அமெரிக்க நாடுகள் அமைப்பு மூலமாக அமெரிக்கக் கண்டத்தின் நாடுகளுடனும், ஐக்கிய அமெரிக்கா-மெக்சிகோ-கனடா சுதந்திர வணிக ஒப்பந்தம் மூலமும் நெருக்கமாகச் செயல்படுகிறது. தென் அமெரிக்காவில் கொலம்பியா பாரம்பரியமாக ஐக்கிய அமெரிக்காவின் மிக நெருக்கமான கூட்டாளியாகக் கருதப்படுகிறது.[263] கச்சிதமான சுதந்திர அமைப்பின் வழியாக மைக்ரோனேசியா, மார்சல் தீவுகள் மற்றும் பலாவு ஆகிய நாடுகளின் முழுமையான பன்னாட்டுத் தற்காப்பு அதிகாரம் மற்றும் பொறுப்பேற்பை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது.[233] இந்தியாவுடன் உத்தி ரீதியிலான ஒத்துழைப்பை அதிகரித்து வந்த நிலையாக இந்நாடு கொண்டுள்ளது.[264] ஆனால், சீனாவுடனான இதன் உறவு முறைகளானவை படிப்படியாக சிதைவடைந்து வருகின்றன.[265][266] 2014இலிருந்து ஐக்கிய அமெரிக்கா உக்ரைனின் ஒரு நெருங்கிய கூட்டாளியாக உருவாகியது.[267] உருசியாவின் 2022ஆம் ஆண்டு படையெடுப்புக்குப் பதில் வினையாக உக்ரைனுக்குக் குறிப்பிடத்தக்க அளவுக்கு இராணுவத் தளவாடங்கள் மற்றும் பிற உதவிகளையும் கூட இந்நாடு கொடுத்து வருகிறது.[268]
ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக அதிபர் உள்ளார். ஆயுதப் படைகளின் தலைவர்கள், பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை அதிபர் நியமிக்கிறார். வாசிங்டன் டி. சி.க்கு அருகில் உள்ள பென்டகன் பாதுகாப்புத் துறையின் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. பென்டகானானது ஆறு சேவைப் பிரிவுகளில் ஐந்தை நிர்வகிக்கிறது. அவை ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை, ஈரூடகப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் விண்வெளிப்படை ஆகியவையாகும்.[269] ஆறாவது பிரிவான கடலோரக் காவலானது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் அமைதிக் காலத்தில் நிர்வகிக்கப்படுகிறது. போர்க் காலத்தில் இதன் நிர்வாகம் கடற்படைக்கு மாற்றப்படலாம்.[270]
2023ஆம் ஆண்டு இராணுவத்திற்காக ஐக்கிய அமெரிக்கா ஐஅ$916 பில்லியன் (₹65,50,865.6 கோடி)யைச் செலவிட்டது. இதுவரையிலும் எந்த ஒரு நாட்டாலும் செலவு செய்யப்பட்ட மிக அதிகமான தொகை இதுவாகும். உலகளாவிய ஒட்டு மொத்த இராணுவச் செலவீனத்தில் இது 37% ஆகும். இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% ஆக இது உள்ளது.[271][272] ஐக்கிய அமெரிக்கா உலகின் ஒட்டு மொத்த அணு ஆயுதங்களில் 42%ஐக் கொண்டுள்ளது. உருசியாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிக அளவு இதுவாகும்.[273]
ஒன்றிணைந்த ஆயுதப் படைகளில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய படையை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. முதல் இரண்டு இடங்களில் சீன இராணுவமும், இந்திய இராணுவமும் உள்ளன.[274] நாட்டுக்கு வெளியே சுமார் 800 இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகளை இந்நாட்டின் இராணுவமானது இயக்கி வருகிறது.[275] 100க்கும் மேற்பட்ட செயல்பாட்டில் உள்ள வீரர்களின் குழுக்களை 25 அயல் நாடுகளில் நிலை நிறுத்திப் பேணி வருகிறது.[276]
ஒரு மாநில அரசாங்கத்தின் ஒற்றை அதிகாரத்தின் கீழ் இயங்கும் இராணுவப் பிரிவுகள் மாநிலப் பாதுகாப்புப் படைகளாகும். இவற்றுக்கான அதிகாரம் மாநில மற்றும் கூட்டாட்சிச் சட்டத்தால் கொடுக்கப்படுகிறது. ஆனால், இவை மாநில ஆளுநரின் தலைமையின் கீழ் உள்ளன.[277][278][279] கூட்டாட்சி அமைப்புகளாக உருவாக முடியாத வகையில் இவை மாநிலத்தின் தேசியப் பாதுகாப்புப் பிரிவுகளில் இருந்து வேறுபட்டவையாகும். எனினும், ஒரு மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு வீரர்கள் 1933ஆம் ஆண்டின் தேசியப் பாதுகாப்புச் சட்டத் திருத்தங்களின் கீழ் கூட்டாட்சிக்குப் பணியாற்றுபவர்களாக மாறலாம். இச்சட்டமே தேசியப் பாதுகாப்புப் படையை உருவாக்கியது. ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை (1947இலிலிருந்து) மற்றும் ஐக்கிய அமெரிக்க விமானப்படையில் இராணுவ தேசியப் பாதுகாப்புக் குழுக்கள் மற்றும் வீரர்கள் இணைவதற்கு இச்சட்டம் அனுமதியளிக்கிறது.[280]
ஐக்கிய அமெரிக்காவில் உள்ளூர் முதல் தேசிய அளவு வரை சுமார் 18,000 ஐக்கிய அமெரிக்கக் காவல் துறை முகமைகள் உள்ளன.[281] அவர்களது மாநகர அல்லது கவுன்டி நீதி வரம்புக்குள் உள்ளூர் காவல் துறை மற்றும் செரீப் துறைகளால் ஐக்கிய அமெரிக்காவில் சட்டமானது முதன்மையாக அமல்படுத்தப்படுகிறது. மாநிலக் காவல் துறையானது தங்களது மாநிலத்தில் அதிகாரத்தை கொண்டுள்ளது. புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (எஃப். பி. ஐ.) மற்றும் ஐக்கிய அமெரிக்க மார்சல் சேவை போன்ற கூட்டாட்சி முகமைகள் தேசிய நீதி வரம்பையும், தனித்துவமான பணிகளையும் கொண்டுள்ளன. இப்பணிகளில் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்தால், தேசியப் பாதுகாப்பு மற்றும் ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மற்றும் கூட்டாட்சிச் சட்டங்களை அமல்படுத்துதல் போன்றவை உள்ளடங்கியுள்ளன.[282] மாநில நீதிமன்றங்கள் பெரும்பாலான குடிசார் மற்றும் குற்ற விசாரணையை நடத்துகின்றன.[283] கூட்டாட்சி நீதிமன்றங்களானவை குறிப்பிடப்பட்ட குற்றங்கள் மற்றும் மாநில நீதிமன்றத் தீர்ப்புகளின் மேல்முறையீடுகளைக் கையாளுகின்றன.[284]
ஐக்கிய அமெரிக்காவில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற நீதி அமைப்பு என்று ஒன்று கிடையாது. அமெரிக்க சிறைச் சாலை அமைப்பானது பெரும்பாலும் சமச் சீரற்றதாக உள்ளது. ஒப்பீட்டளவில் சுதந்திரமான ஆயிரக்கணக்கான அமைப்புகள் கூட்டாட்சி, மாநில, உள்ளூர் மற்றும் பழங்குடியின நிலைகளில் செயல்படுகின்றன. 2023இல் "இந்த அமைப்புகள் கிட்டத்தட்ட 20 இலட்சம் நபர்களை 1,566 மாநில சிறைச்சாலைகள், 98 கூட்டாட்சி சிறைச்சாலைகள், 3,116 உள்ளூர் சிறைச்சாலைகள், 1,323 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், 181 புலம் பெயர்ந்தோர் தடுப்பு முகாம்கள் மற்றும் 80 செவ்விந்திய நாட்டுச் சிறைகள், மேலும் இராணுவச் சிறைச்சாலைகள், குடிசார் பொறுப்பு மையங்கள், மாநில மன நல மருத்துவமனைகள் மற்றும் ஐக்கிய அமெரிக்க நிலப்பரப்புகளில் சிறைச்சாலைகளைக் கொண்டிருந்தன."[285] முற்றிலும் வெவ்வேறான தடுப்பு அமைப்புகள் உள்ள போதிலும் நான்கு முதன்மையான அமைப்புகள் காணப்படுகின்றன. அவை கூட்டாட்சி சிறைச்சாலைகள், மாநிலச் சிறைச்சாலைகள், உள்ளூர் சிறைகள் மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் ஆகியவை ஆகும்.[286] சிறைச்சாலைகளின் கூட்டாட்சிப் பணியகத்தால் கூட்டாட்சி சிறைச்சாலைகள் நடத்தப்படுகின்றன. விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட கூட்டாட்சிக் குற்றங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை இவை கொண்டுள்ளன.[286] ஒவ்வொரு மாநிலத்தின் அதிகாரப்பூர்வ சீர்திருத்தத் துறையால் இயக்கப்படும் மாநில சிறைச்சாலைகளானவை பெருங்குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் நபர்களைக் கொண்டுள்ளன (பொதுவாக இது ஒரு ஆண்டுக்கும் அதிகமான சிறைவாசமாக உள்ளது).[286] விசாரணைக்கு முன்னர் நபர்களை அடைத்து வைக்கும் கவுன்டி அல்லது மாநகரப் பள்ளிகளாக உள்ளூர் சிறைகள் உள்ளன (பொதுவாக இது ஒரு ஆண்டுக்கும் குறைவான சிறைவாசமாக உள்ளது).[286] சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளானவை உள்ளூர் அல்லது மாநில அரசாங்கங்களால் இயக்கப்படுகின்றன. தெளிவான ஆதாரங்களின்றி சட்டத்திற்கு முரணானவர் என ஒரு நீதிபதியால் அடைத்து வைக்கப்படுமாறு ஆணையிடப்படும் எந்த ஒரு சிறாரையும் நீண்ட காலத்திற்கு இப்பள்ளிகள் அடைத்து வைக்கின்றன.[287]
சனவரி 2023 நிலவரப் படி உலகின் ஆறாவது மிக அதிக தனிநபர் சிறை வைப்பு வீதத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. இந்நாட்டில் 1,00,000 பேருக்கு 531 பேர் சிறையில் உள்ளனர். சிறைச்சாலைகள் மற்றும் சிறைகளில் உள்ள நபர்களின் உலகின் மிகப் பெரிய எண்ணிக்கையை இந்நாடு கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 20 இலட்சம் பேர் இந்நாட்டில் சிறையில் உள்ளனர்.[285][288][289] 2010ஆம் ஆண்டைச் சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் இறப்புத் தரவுகளின் ஆய்வானது ஐக்கிய அமெரிக்கக் கொலை வீதங்களானவை "பிற உயர் வருமான நாடுகளை விட 7 மடங்கு அதிகமாக இருந்தன. பிற நாடுகளைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாக உள்ள துப்பாக்கிகளால் நடத்தப்படும் கொலைகளால் இவை அதிகமாக உள்ளன".[290]
தோராயமாக 1890ஆம் ஆண்டிலிருந்து பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கிறது.[292] 2023ஆம் ஆண்டில் இந்நாட்டின் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஐஅ$27 டிரில்லியன் (₹1,930.9 டிரில்லியன்)உக்கும் மேற்பட்ட அளவானது உலகின் மிகப் பெரிய பொருளாதார அளவாக உள்ளது. உலகளாவிய ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் 25%க்கும் மேல் உள்ளதாகவும் அல்லது கொள்வனவு ஆற்றல் சமநிலையில் 15%ஆகவும் இது உள்ளது.[13][293] 1983 முதல் 2008 வரை ஐக்கிய அமெரிக்க உண்மையான கூட்டு வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதமானது 3.3% ஆக இருந்தது. எஞ்சிய ஜி-7 நாடுகளின் சராசரி அளவான 2.3%ஐ விட இது அதிகமானதாகும்.[294] பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகின் முதலானதாகவும்,[295] கொள்வனவு ஆற்றல் சமநிலைக்குச் சரி செய்யப்படும் போது இரண்டாவதானதாகவும்,[13] கொள்வனவு ஆற்றல் சமநிலை தனிநபர் வருமானத்தில் ஒன்பதாவது இடத்தையும் இந்நாடு கொண்டுள்ளது.[13] பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளிலேயே மிகப் பெரிய வீட்டு சராசரி வருமானத்தை இந்நாடு கொண்டுள்ளது.[296] பெப்பிரவரி 2024 நிலவரப் படி ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தின் மொத்த கடனானது ஐஅ$34.4 டிரில்லியன் (₹2,460.2 டிரில்லியன்) ஆகும்.[297]
வருமானத்தின் அடிப்படையில் உலகின் 500 மிகப் பெரிய நிறுவனங்களில் 2023ஆம் ஆண்டு நிலவரப் படி 136 நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளன.[299] எந்த ஒரு நாட்டையும் விட மிகப் பெரிய எண்ணிக்கை இதுவாகும்.[300] பன்னாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு மிக அதிகம் பயன்படுத்தப்படும் பணமாகவும், உலகின் முன்னணி அன்னியச் செலாவணிக் கையிருப்புப் பணமாகவும் ஐக்கிய அமெரிக்காவின் பணமான டாலர் திகழ்கிறது. இந்நாட்டின் ஆதிக்கம் மிகுந்த பொருளாதாரம், இதன் இராணுவம், பாறை எண்ணெய் டாலர் அமைப்பு, யூரோ டாலருடன் இது இணைக்கப்பட்டது மற்றும் பெரிய ஐக்கிய அமெரிக்க நிதிச் சந்தை ஆகியவற்றால் டாலருக்கு ஆதரவளிக்கப்படுகிறது.[291] பல நாடுகள் டாலரை அவற்றின் அதிகாரப்பூர்வப் பணமாகப் பயன்படுத்துகின்றன. பிற நாடுகளில் இது நடைமுறை ரீதியிலான பணமாக உள்ளது.[301][302] இந்நாடு ஐக்கிய அமெரிக்க-மெக்சிகோ-கனடா ஒப்பந்தம் உள்ளிட்ட பல சுதந்திர வணிக ஒப்பந்தங்களைப் பல நாடுகளுடன் கொண்டுள்ளது.[303] 2019ஆம் ஆண்டின் உலகப் போட்டித்திறன் அறிக்கையில் சிங்கப்பூருக்குப் பிறகு இரண்டாவது இடத்தை ஐக்கிய அமெரிக்கா பெற்றது.[304] தொழில்துறை நிலைக்குப் பிந்தைய வளர்ச்சியை ஐக்கிய அமெரிக்கா அடைந்திருந்தாலும்,[305] அடிக்கடி ஒரு சேவைப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டாலும்[305][306] இந்நாடு தொடர்ந்து ஒரு முதன்மையான தொழில்துறை சக்தியாகத் திகழ்கிறது.[307] 2021ஆம் ஆண்டு நிலவரப் படி சீனாவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தி நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கிறது.[308]
உலகின் முதன்மையான நிதி மையமாக நியூயார்க்கு நகரம் திகழ்கிறது.[310][311] உலகின் மிகப் பெரிய மாநகரப் பொருளாதாரத்தின் மையமாகவும் உள்ளது.[312] நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் நாஸ்டாக் ஆகிய இரண்டுமே நியூயார்க்கு நகரத்தில் அமைந்துள்ளன. சந்தை மதிப்பு மற்றும் வணிக அளவீடு ஆகியவற்றின் படி உலகின் இரு மிகப் பெரிய பங்குச் சந்தைகளாக இவை உள்ளன.[313][314] பல பொருளாதாரத் தளங்களில் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் புத்தாக்கத்தில்[315] முன்னணி அல்லது நெருங்கிய முன்னிலையில் ஐக்கிய அமெரிக்கா இருந்து வந்துள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு; மின்னணுவியல் மற்றும் கணினிகள்; மருந்து; மருத்துவம், வான்வெளி, இராணுவத் தளவாடங்களில் இவ்வாறான நிலையைப் பெற்றுள்ளது.[181] இந்நாட்டின் பொருளாதாரமானது மிகுதியான இயற்கை வளங்கள், நன்றாக வளர்ச்சியடைந்த உட்கட்டமைப்பு மற்றும் அதிக உற்பத்தித் திறன் ஆகியவற்றால் உந்தப்படுகிறது.[316] ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பெரிய வணிகக் கூட்டாளி நாடுகளாக ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, கனடா, சீனா, சப்பான், தென் கொரியா, ஐக்கிய இராச்சியம், வியட்நாம், இந்தியா, மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன.[317] உலகின் மிகப் பெரிய இறக்குமதியாளராகவும், இரண்டாவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராகவும் ஐக்கிய அமெரிக்கா உள்ளது.[q] சேவைத் துறையில் உலகின் மிகப் பெரிய ஏற்றுமதியாளராக இது வரையில் ஐக்கிய அமெரிக்கா இருந்து வந்துள்ளது.[320]
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர் நாடுகளிலேயே அமெரிக்கர்கள் மிக அதிக சராசரி வீட்டு வருமானம் மற்றும் பணியாள் வருமானத்தைக் கொண்டுள்ளனர்.[321] 2023ஆம் ஆண்டு நிலவரப் படி நான்காவது மிக அதிக சராசரி வீட்டு வருமானத்தை அமெரிக்கர்கள் கொண்டுள்ளனர்.[322] 2013ஆம் ஆண்டின் ஆறாவது மிக அதிக சராசரி என்ற நிலையிலிருந்து இது ஒரு முன்னேற்றமாகும்.[323] 2023இல் தனி நபர் நுகர்வுச் செலவீனங்களாக ஐஅ$18.5 டிரில்லியன் (₹1,323 டிரில்லியன்)உக்கும் மேல் அவர்கள் செலவழித்தனர்.[324] ஐக்கிய அமெரிக்காவானது ஒரு கடுமையான நுகர்வால் உந்தப்பட்ட பொருளாதாரம் ஆகும். இது வரையிலும் உலகின் மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாகவும் இது உள்ளது.[325] ஐக்கிய அமெரிக்காவில் செல்வமானது அதிகப்படியாக சிலரிடம் செறிந்துள்ளது. வயது வந்தோர் மக்கள் தொகையில் முதல் நிலைச் செல்வந்தராக உள்ள 10% பேர் நாட்டின் வீடு சார் செல்வத்தில் 72%ஐக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், அடிமட்ட நிலையில் உள்ள 50% பேர் வெறும் 2% செல்வத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.[326] ஐக்கிய அமெரிக்காவில் பொருளாதார சமமற்ற நிலையானது மிக அதிகமான சாதனை அளவுகளாகத் தொடர்கிறது.[327] சம்பளம் பெறுவோரில் முதல் 20% பேர் ஒட்டு மொத்த வருமானத்தில் பாதிக்கும் மேற்பட்ட அளவைக் கொண்டு செல்கின்றனர்.[328] பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பினர் நாடுகளில் மிகப் பரவலான வருமானப் பகிர்வுகளில் ஒன்றை இது ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கிறது.[329][330] நூறு கோடி மதிப்புள்ள மற்றும் தசம இலட்சம் மதிப்புள்ள செல்வந்தர்களின் எண்ணிக்கையில் ஐக்கிய அமெரிக்கா முதலிடத்தைப் பெறுகிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப் படி இந்நாட்டில் 735 நூறு கோடிச் செல்வந்தர்களும் மற்றும் கிட்டத்தட்ட 2.20 கோடி தசம இலட்சாதிபதிகளும் உள்ளனர்.[331] 2022 நிலவரப் படியே ஐக்கிய அமெரிக்காவில் தங்குமிடத்தைக் கொண்ட மற்றும் தங்குமிடம் இல்லாத வீடுகளற்ற நபர்களின் எண்ணிக்கையானது சுமார் 5,82,500 ஆக இருந்தது. இதில் 60% பேர் தற்காலிக முகாம் அல்லது மாற்று வீட்டுத் திட்டங்களில் தங்கியுள்ளனர்.[332] 2022இல் 64 இலட்சம் குழந்தைகள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையைக் கொண்டிருந்தன.[333] ஃபீடிங் அமெரிக்கா அமைப்பின் மதிப்பீடுகளானவை சுமார் ஐந்தில் ஒரு பங்குக் குழந்தைகள் அல்லது தோராயமாக 1.30 கோடி அமெரிக்கக் குழந்தைகள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிடுகின்றன. அவை எங்கே அல்லது எப்போது தங்களது அடுத்த உணவைப் பெறுவோம் என்று அறியாமல் உள்ளன.[334] 2022ஆம் ஆண்டு நிலவரப் படி 3.79 கோடி மக்கள் அல்லது ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகையில் 11.50% பேர் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.[335]
ஐக்கிய அமெரிக்காவானது ஒரு சிறிய பொது நல அரசைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பிற அதிக வருமான நாடுகளைக் காட்டிலும் அரசாங்கச் செயல்பாடுகள் மூலம் குறைவான பணத்தையே மறு விநியோகம் செய்கிறது.[336][337] தேசிய அளவில் இதன் பணியாளர்களுக்கு நிதி செலுத்தப்பட்ட விடுமுறையை உறுதிப்படுத்தாத ஒரே ஒரு வளர்ந்த நாடு இதுவாகும்.[338] கூட்டாட்சி ஊதியத்துடன் கூடிய குடும்ப விடுமுறையை சட்ட உரிமையாகக் கொண்டிராத உலகின் வெகு சில நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.[339] கிட்டத்தட்ட பிற எந்த ஒரு வளர்ந்த நாட்டையும் விட குறைவான வருமானமுடைய வேலையாட்களின் ஒரு அதிகப்படியான சதவீதத்தை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. ஒரு பலவீனமான ஒன்றுபடுத்தப்படாத பேரம் பெறும் அமைப்பு மற்றும் பிரச்சினையான பணிகளில் உள்ள வேலையாட்களுக்கு அரசாங்க ஆதரவு இல்லாதது ஆகியவையே இதற்குப் பெரும்பாலான காரணம் ஆகும்.[340]
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒரு தலைமை நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்து வருகிறது.[341] மாற்றக் கூடிய பாகங்களை உற்பத்தி செய்யும் வழிமுறைகள் மற்றும் ஓர் எந்திரக் கருவித் தொழில்துறையின் நிறுவுதல் ஆகியவை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதைச் சாத்தியமாக்கின.[342] 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வாக்கில் தொழிற்சாலை மின்சாரமயமாக்கம், பல பாகங்களை ஒன்று சேர்த்துப் பொறுத்தும் முறையின் அறிமுகம் மற்றும் பிற பணியாட்களை மிச்சப்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவை பெரும் உற்பத்தியின் அமைப்பை உருவாக்கின.[343] செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உருவாக்கத்தில் ஐக்கிய அமெரிக்கா பரவலாக ஒரு முன்னணி நாடாகக் கருதப்படுகிறது.[344][345][346] 2022இல் (சீனாவிற்குப் பிறகு) ஐக்கிய அமெரிக்கா பதிப்பிக்கப்பட்ட அறிவியல் கட்டுரைகளில் இரண்டாவது மிகப் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட நாடாகத் திகழ்ந்தது.[347] 2021இல் (மீண்டும் சீனாவிற்குப் பிறகு) ஐக்கிய அமெரிக்கா கண்டுபிடிப்புகளுக்கான பதிப்புரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தைப் பெற்றது. உலகக் காப்புரிமைப் பட்டயச் சுட்டிக்காட்டிகளின் படி (சீனா மற்றும் செருமனிக்குப் பிறகு) வணிகக் குறியீடு மற்றும் தொழில் துறை வடிவமைப்புப் பயன்பாடுகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.[348] 2023 மற்றும் 2024இல் உலகளாவியப் புத்தாக்கச் சுட்டெண்ணில் (சுவிட்சர்லாந்து மற்றும் சுவீடனுக்குப் பிறகு) மூன்றாவது இடத்தை ஐக்கிய அமெரிக்கா பெற்றது.[349][350] ஐக்கிய அமெரிக்கா எந்த ஒரு நாட்டையும் விட மிக அதிக ஒட்டு மொத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவீனத்தைக் கொண்டுள்ளது.[351] மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் ஒன்பதாவது இடத்தைப் பெறுகிறது.[352] 2023இல் குளோபல் ஃபைனான்சு இதழின் கூற்றுப் படி (தென் கொரியாவுக்கு அடுத்து) உலகின் தொழில்நுட்ப ரீதியாக மிக அதிக முன்னேற்றம் அடைந்த இரண்டாவது நாடு என்ற இடத்தை ஐக்கிய அமெரிக்கா பெற்றது.[353]
1958இல் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் (நாசா) நிறுவுதல் தொடங்கி 1950களின் பிற்பகுதியில் இருந்து ஒரு விண்வெளித் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா பேணி வந்துள்ளது.[354][355] 1969ஆம் ஆண்டின் அப்பல்லோ 11 பயணத்துடன் நிலவில் மனிதக் குழுவை முதன் முதலில் இறக்கியதாக நாசாவின் அப்பல்லோ திட்டம் (1961-1972) சாதனை புரிந்தது. இம்முகமையின் மிக முக்கியமான மைல் கற்களில் ஒன்றாக இத்திட்டம் தொடர்ந்து உள்ளது.[356][357] விண்வெளி ஊர்தித் திட்டம் (1981-2011),[358] வாயேசர் திட்டம் (1972-தற்போது வரை), ஹபிள் மற்றும் சேம்சு வெப் விண்வெளி நோக்காய்வுக்கலங்கள் (முறையே 1990 மற்றும் 2021இல் ஏவப்பட்டன),[359][360] மற்றும் செவ்வாயை ஆய்வு செய்யும் பல திட்டங்கள் (இசுபிரிட் மற்றும் ஆப்பர்சூனிட்டி, கியூரியோசிட்டி, மற்றும் பெர்சீவியரன்சு) உள்ளிட்டவை நாசாவின் பிற முதன்மையான திட்டங்களாக உள்ளன.[361] அனைத்துலக விண்வெளி நிலையத்தில்[362] இணைந்து செயலாற்றும் ஐந்து முகமைகளில் ஒன்றாக நாசா திகழ்கிறது. டெஸ்ட்டினி (2001), ஹார்மோனி (2007) மற்றும் டிராங்குயிலிட்டி (2010), மேலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் போக்குவரத்து மற்றும் செயல்பாட்டு ஆதரவு உள்ளிட்ட பல விண்கலப் பெட்டகங்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு ஐக்கிய அமெரிக்காவின் பங்களிப்புகள் ஆகும்.[363] உலகளாவிய வணிக ரீதியான விண்வெளிப் பயணத் தொழில் துறையில் ஐக்கிய அமெரிக்காவின் தனியார் துறையானது ஆதிக்கம் செலுத்துகிறது.[364] புளூ ஆரிஜின், போயிங், லாக்கீட் மார்ட்டின், நார்த்ரப் க்ரும்மன், மற்றும் எசுபேசுஎக்சு உள்ளிட்டவை முதன்மையான அமெரிக்க விண்வெளிப் பயண ஒப்பந்ததாரர்களாக உள்ளன. வணிக ரீதியான குழுப் பயணத் திட்டம், வணிக ரீதியான பொருட்கள் மறு விநியோகச் சேவைகள், வணிக ரீதியான நிலவுக்கான கலச்சுமை சேவைகள், மற்றும் ஆய்வுக் கூட்டணிகளுக்கான அடுத்த விண்வெளித் தொழில்நுட்பங்கள் (நெக்ஸ்ட் ஸ்டெப்) போன்ற நாசாவின் திட்டங்கள் அமெரிக்க விண்வெளித் திட்டங்களில் அதிகரித்து வரும் தனியார் துறைப் பங்களிப்பை எளிதாக்கியுள்ளன.[365]
2023ஆம் ஆண்டு நிலவரப் படி ஐக்கிய அமெரிக்கா தோராயமாக அதன் ஆற்றலில் 84%ஐ புதை படிவ எரிபொருட்களில் இருந்து பெறுகிறது. இந்நாட்டின் எரி ஆற்றலில் மிகப் பெரிய ஆதாரமானது பாறை எண்ணெய் (38%), அதைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு (36%), புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் (9%), நிலக்கரி (9%) மற்றும் அணு சக்தி (9%) ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.[366][367] ஐக்கிய அமெரிக்கா உலக மக்கள் தொகையில் 4%க்கும் குறைவான அளவைக் கொண்டிருக்கிறது.[368] ஆனால், உலகின் எரி ஆற்றலில் சுமார் 16%ஐப் பயன்படுத்துகிறது. பைங்குடில் வாயுக்களை வெளியிடும் உலகின் இரண்டாவது மிகப் பெரிய வெளியீட்டாளராக ஐக்கிய அமெரிக்கா உள்ளது.[369]
ஐக்கிய அமெரிக்காவின் போக்குவரத்துத் துறை மற்றும் அதன் பிரிவுகள் ஒழுங்குபடுத்துதல், மேற்பார்வையிடல் மற்றும் அனைத்து விதப் போக்குவரத்துக்கும் நிதி ஆகியவற்றை அளிக்கின்றன. இதில் விதிவிலக்கு சுங்க வரித்துறை, குடியேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவையாகும் (பாதுகாப்பானது இன்னும் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் பொறுப்பாக உள்ளது). ஒவ்வொரு ஐக்கிய அமெரிக்க மாநிலமும் அதன் சொந்த போக்குவரத்துத் துறையைக் கொண்டுள்ளன. அவை மாநில நெடுஞ்சாலைகளைக் கட்டமைத்துப் பேணி வருகின்றன. மாநிலத்தைப் பொறுத்து இத்துறையானது நேரடியாக பிற போக்குவரத்து வகைகளைச் செயல்படுத்தவோ அல்லது மேற்பார்வையிடவும் கூடச் செய்யலாம்.
விமானத் துறை சட்டமானது கிட்டத்தட்ட முழுவதுமாக கூட்டாட்சி அரசாங்கத்தின் வரம்பிற்குள் வருகிறது. கூட்டாட்சி விமான நிர்வாகமானது குடிசார் பறப்பியல், போக்குவரத்து நெரிசல் மேலாண்மை, சான்று வழங்குதல் மற்றும் விதிமுறைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதை உறுதி செய்தல் மற்றும் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் ஒழுங்குபடுத்துகிறது. எனினும், வாகனப் போக்குவரத்துச் சட்டங்களானவை மாநிலம் மற்றும் உள்ளூர் அதிகார அமைப்புகளால் இயற்றப்பட்டு அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு விதிவிலக்கு கூட்டாட்சி உடைமைகள் (தேசியப் பூங்காக்கள், இராணுவத் தளங்கள்) அல்லது ஒருங்கிணைக்கப்படாத ஐக்கிய அமெரிக்க நிலப்பரப்புகளில் அமைந்துள்ள சாலைகள் ஆகும். உள்நாட்டு நீர்வழி மற்றும் கடற்கரையோர நீர்வழிகள் ஆகிய இரு ஐக்கிய அமெரிக்க நீர் நிலைகளிலுமே சட்டம் மற்றும் பாதுகாப்பைச் செயல்படுத்தும் முதன்மையான துறையாக ஐக்கிய அமெரிக்கக் கடலோரக் காவல்படை திகழ்கிறது. ஆனால், கடற்கரை அருகில் உள்ள நிலங்கள் மீதான பொருளாதார வரம்பானது மாநில மற்றும் கூட்டாட்சி அரசாங்கங்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இந்நாட்டின் உள்நாட்டு நீர்வழிகள் உலகின் ஐந்தாவது மிக நீளமானவையாகும். இவற்றின் மொத்த நீளம் 41,009 கிலோ மீட்டர் ஆகும்.[371]
பயணி மற்றும் சரக்குத் தொடருந்து அமைப்புகள், பேருந்து அமைப்புகள், நீர் படகுகள் மற்றும் அணைகள் ஆகியவை அரசாங்க அல்லது தனியார் உடைமை மற்றும் செயல்பாட்டின் கீழ் ஏதாவது ஒன்றில் இருக்கலாம். அனைத்து ஐக்கிய அமெரிக்கக் குடிசார் விமான நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களாக உள்ளன. பல ஐக்கிய அமெரிக்க விமான நிலையங்கள் உள் நாட்டு அரசாங்க அதிகார அமைப்புகளால் உடைமையாகக் கொள்ளப்பட்டு நடத்தப்படுகின்றன. சில தனியார் விமான நிலையங்களும் கூட உள்ளன. 2001ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகமானது பெரும்பாலான முதன்மையான விமான நிலையங்களில் பாதுகாப்பைக் கொடுத்து வருகிறது.
20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஐக்கிய அமெரிக்காவில் முதன்மையான போக்குவரத்து முறையாக வணிக ரீதியான இருப்புப் பாதைகளும், தொடருந்துகளும் திகழ்ந்தன. அதே முதன்மையான வழிகளில் சேவையாற்ற தாரை விமானங்கள் மற்றும் விமான நிலையங்களின் அறிமுகமானது 1960கள் வாக்கில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணிகள் தொடருந்து சேவைக்கான தேவையில் ஒரு வீழ்ச்சியை அதிகரித்தன. இடைமாநில நெடுஞ்சாலை முறை அமைக்கப்பட்டதும் கூட இருப்புப் பாதைகள் வழியான பயணிகள் தொடருந்து சேவையில் ஒரு முக்கியமான வீழ்ச்சியை அதிகரித்து வைத்தது. இத்தகைய முதன்மையான மாற்றங்கள் தற்போது ஆம்ட்ராக் என்று அழைக்கப்படும் தேசிய தொடருந்து பயணிகள் நிறுவனத்தை 1971இல் ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கமானது உருவாக்குவதற்கு வழி வகுத்தது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நகரங்களுக்கிடையிலான வரம்புக்குட்பட்ட தொடருந்து பயணிகள் சேவையைப் பேணுவதற்கு ஆம்ட்ராக் உதவுகிறது. இது பெரும்பாலான முக்கியத்துவமிக்க ஐக்கிய அமெரிக்க நகரங்களுக்குச் சேவையளிக்கிறது. ஆனால் வடகிழக்கு, கலிபோர்னியா மற்றும் இலினொய் ஆகிய பகுதிகளுக்கு வெளியில் மட்டுமே செயல்படுகிறது. இது பொதுவாக ஒரு நாளைக்கு வெகு சில தொடருந்துகளை மட்டுமே இயக்குகிறது. மிக அடிக்கடி உள்ள ஆம்ட்ராக் சேவைகளானவை சில முதன்மையான நகரங்களுக்கு இடைப்பட்ட மாகாண வழித் தடங்களில் உள்ளன. குறிப்பாக வாசிங்டன், டி. சி., பிலடெல்பியா, நியூயார்க்கு நகரம் மற்றும் பாஸ்டனுக்கு இடைப்பட்ட வடகிழக்கு வழித்தடம்; நியூயார்க்கு நகரம் மற்றும் ஆல்பெனிக்கு இடையில்; சிகாகோ பெருநகர்ப் பகுதி; கலிபோர்னியா மற்றும் அமைதிப் பெருங்கடல் வடமேற்கின் பகுதிகளில் உள்ளது. லாஸ் வேகஸ் மற்றும் பீனிக்சு உள்ளிட்ட பல முதன்மையான ஐக்கிய அமெரிக்க இடங்களுக்கு ஆம்ட்ராக் சேவைகள் இல்லாமல் உள்ளன.
அமெரிக்க குடிசார் விமானத் தொழில் துறையானது நிறுவனங்களால் முழுவதுமாக உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ளது. 1978இல் இருந்து விமானத் துறை மீதான கூட்டாட்சி அரசாங்கத்தின் ஒழுங்கு முறைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் பெரும்பாலான முதன்மையான விமான நிலையங்களானவை அரசுடைமையாக உள்ளன.[372] பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகின் மூன்று மிகப் பெரிய விமான நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டுள்ளன; யூ. எஸ். ஏர்வேஸ் நிறுவனத்தால் 2013ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு அமெரிக்கன் எயர்லைன்ஸானது முதல் இடத்தில் உள்ளது.[373] உலகின் 50 பரபரப்பான பயணிகள் விமான நிலையங்களில் 16 விமான நிலையங்கள் ஐக்கிய அமெரிக்காவில் உள்ளன. இவற்றில் முதல் ஐந்து விமான நிலையங்கள் மற்றும் பரபரப்பான விமான நிலையமான ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையமும் அடங்கும்.[374][375] 2022ஆம் ஆண்டு நிலவரப் படி ஐக்கிய அமெரிக்காவில் 19,969 விமான நிலையங்கள் உள்ளன. இதில் 5,193 விமான நிலையங்கள் "பொதுப் பயன்பாட்டுக்கு" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பயன்பாட்டில் பொதுவான விமானப் பயணம் மற்றும் பிற செயல்பாடுகளும் அடங்கும்.[376]
ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பான்மையான சாலைகள் மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்களால் உடைமையாகக் கொள்ளப்பட்டு பேணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தால் மட்டுமே பேணப்படும் சாலைகளானவை பொதுவாகக் கூட்டாட்சி நிலங்கள் (தேசியப் பூங்காக்கள் போன்றவை) அல்லது கூட்டாட்சி இடங்களில் (இராணுவத் தளங்கள் போன்றவை) மட்டுமே காணப்படுகின்றன. அதன் பெரிய திறந்த வழிகள் மூலம் மாநிலங்களை இணைக்கும் இடைமாநில நெடுஞ்சாலை முறையானது கூட்டாட்சி அரசாங்கத்தால் பகுதியளவுக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. ஆனால் நெடுஞ்சாலையில் இதன் பிரிவை மாநில அரசாங்கமானது உடைமையாகக் கொண்டு பேணுகிறது. சில மாநிலங்கள் தங்களது சொந்த பெரிய வழிச் சாலைகளை நிதியுதவி அளித்து கட்டமைக்கின்றன. இவை பொதுவாக பூங்கா சாலைகள் அல்லது சுங்கச் சாலைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாகச் சாலைகளைக் கட்டமைப்பது மற்றும் பேணுவதற்கு சுங்கச்சாவடிகளைக் கொண்டு வசூலித்துப் பயன்படுத்துகின்றன. இதே போலவே சில தனியாரால் உடைமையாகக் கொள்ளப்பட்டுள்ள சாலைகளும் இத்தகைய காரணத்திற்காக சுங்கச்சாவடிகளைப் பயன்படுத்தலாம்.
ஐக்கிய அமெரிக்காவில் பொதுப் போக்குவரத்தானது பேருந்து, தினசரிப் பயணித் தொடருந்து, படகு மற்றும் சில நேரங்களில் விமான சேவைகளை உள்ளடக்கியதாக உள்ளது. தேவை மிக அதிகமாக இருக்கும் அதிக மக்கள் அடர்த்தியுள்ள பகுதிகளுக்கு பொதுப் போக்குவரத்து அமைப்புகளானவை சேவையாற்றுகின்றன. பல ஐக்கிய அமெரிக்க நகரங்கள், பட்டணங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் சிற்றுந்தைச் சார்ந்தவையாக உள்ளன. எனினும், புறநகர் பொதுப் போக்குவரத்தானது பயன்பாடு குறைவாகவும், சேவையானது அடிக்கடி இல்லாததாகவும் உள்ளது. பெரும்பாலான ஐக்கிய அமெரிக்கா நகர்ப் பகுதிகள் ஏதாவது ஒரு வகை பொதுப் போக்குவரத்தைக் கொண்டுள்ளன. குறிப்பாக நகரப் பேருந்துகளைக் குறிப்பிடலாம். அதே நேரத்தில் மிகப் பெரிய பகுதிகள் (எடுத்துக்காட்டு நியூயார்க், சிகாகோ, அட்லாண்டா, பாஸ்டன், சான் பிரான்சிஸ்கோ, மற்றும் போர்ட்லாந்து, ஓரிகன்) சுரங்கப் பாதைகள் அல்லது இலகு தொடருந்து ஆகியவற்றையும் உள்ளடக்கிய விரிவான அமைப்புகளைச் செயல்படுத்துகின்றன.[377] ஐக்கிய அமெரிக்காவில் பெரும்பாலான பொதுப் போக்குவரத்துச் சேவைகளானவை உள்ளூர் அரசாங்கங்களால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால் தேசிய மற்றும் மாகாணப் பயண வழிகள் முதன்மையான ஐக்கிய அமெரிக்க நகர வழிகளுக்குச் சேவையாற்றுகின்றன.
ஐக்கிய அமெரிக்காவில் தனிநபர் போக்குவரத்தில் வாகனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.[378][379] இவை 64 இலட்சம் கிலோ மீட்டர்கள் நீளமுடைய ஒரு தொடர்ச்சியான பொதுச் சாலைகளில் இயக்கப்படுகின்றன. உலகின் மிக நீளமான சாலை அமைப்பு இது தான்.[380][381] இந்நாட்டின் தொடருந்துப் போக்குவரத்து அமைப்பும் கூட உலகிலேயே மிக நீளமானதாகும். இது 2,93,564.2 கிலோமீட்டர் நீளமுடையது ஆகும்.[382] இது பெரும்பாலும் சரக்குகளைக் கையாள்கிறது.[383][384] உலகின் 50 பரபரப்பான சரக்குத் துறைமுகங்களில் நான்கு ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளன. ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான துறைமுகமாக லாஸ் ஏஞ்சலஸ் திகழ்கிறது.[385]
ஓல்ட்ஸ்மொபைல் கர்வ்டு டாஷ் மற்றும் ஃபோர்டு மாடல் டி ஆகிய இரு அமெரிக்கச் சிற்றுந்துகளும் முறையே முதல் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட[386] மற்றும் பெருமளவில் வாங்கத் தகுந்த[387] சிற்றுந்துகளாகக் கருதப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு நிலவரப் படி உலகின் எந்திர வாகனங்களின் இரண்டாவது மிகப் பெரிய உற்பத்தியாளராக ஐக்கிய அமெரிக்கா உள்ளது.[388] உலகின் மிக அதிக மதிப்புடைய சிற்றுந்து நிறுவனமான டெஸ்லாவுக்குத் தாயகமாக உள்ளது.[389] அமெரிக்க வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் 1931 முதல் 2008 வரை உலகின் அதிகம் விற்பனையாகும் வாகனங்களைக் கொண்ட நிறுவனம் என்ற பட்டத்தைக் கொண்டிருந்தது.[390] அமெரிக்க வாகனத் தொழில் துறையானது விற்பனையின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய வாகனச் சந்தையாகும். 2010ஆம் ஆண்டு இந்த அளவீட்டில் அமெரிக்காவைச் சீனா முந்தியது.[391] உலகில் அதிக அளவு சராசரி தனிநபர் வாகன உடைமையை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது.[392] இந்நாட்டில் 1000 மக்களுக்கு 910 வாகனங்கள் உள்ளன.[393] 2022இல் வாகனங்களின் மதிப்பின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய சிற்றுந்து இறக்குமதியாளர் மற்றும் மூன்றாவது மிகப் பெரிய ஏற்றுமதியாளராக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்தது.[394]
மாநிலம் | மக்கள் தொகை (கோடிகள்) |
---|---|
கலிபோர்னியா | 3.94 |
டெக்சஸ் | 3.13 |
புளோரிடா | 2.34 |
நியூ யார்க்கு | 1.99 |
பென்சில்வேனியா | 1.31 |
இலினொய் | 1.27 |
ஒகையோ | 1.19 |
ஜார்ஜியா | 1.12 |
வட கரொலைனா | 1.10 |
மிச்சிகன் | 1.01 |
ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையமானது ஏப்பிரல் 1, 2020 நிலவரப் படி 33,14,49,281 பேரை மக்கள் தொகையாகக் குறிப்பிட்டது.[s][396] சீனா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு உலகின் மூன்றாவது மிக அதிக மக்கள் தொகையையுடைய நாடாக ஐக்கிய அமெரிக்காவை இது ஆக்கியது.[181] இந்த ஆணையத்தின் 2024ஆம் ஆண்டு மக்கள் தொகை மதிப்பீடானது 34,01,10,988 பேராக உள்ளது. 2020ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இருந்து இது 2.6% அதிகரிப்பாகும்.[397] ஆணையத்தின் ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகைக் கடிகாரத்தின் படி சூலை 1, 2024 அன்று ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகையானது ஒவ்வொரு 16 நொடிகளுக்கும் ஒரு நபரை அல்லது ஒரு நாளைக்கு சுமார் 5,400 பேரை நிகர அதிகரிப்பதாகப் பெறுகிறது.[398] 2023இல் 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அமெரிக்கர்களில் 51% பேர் திருமணமானவர்களாகவும், 6% பேர் விதவையானவர்களாகவும், 10% பேர் விவாகரத்தானவர்களாகவும், மற்றும் 34% பேர் என்றுமே திருமணம் செய்து கொள்ளாதவர்களாகவும் இருந்தனர்.[399] 2023இல் ஐக்கிய அமெரிக்காவுக்கான கருவள வீதமானது ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் என்று இருந்தது.[400] 2019இல் ஒற்றை-பெற்றோர் வீடுகளில் வாழும் குழந்தைகளின் உலகின் மிக அதிக வீதமாக 23%ஐ இந்நாடு கொண்டிருந்தது.[401]
ஐக்கிய அமெரிக்கா பலவாறான இன மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களையுடைய 37 மூதாதையர் குழுக்கள் இந்நாட்டில் உள்ளன.[402] ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மூதாதையர்களைக் கொண்ட வெள்ளை அமெரிக்கர்கள் இந்நாட்டின் மிகப் பெரிய இனக் குழுவாக உள்ளனர். இவர்கள் ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகையில் 57.8%ஐக் கொண்டுள்ளனர்.[403][404] இசுப்பானிய மற்றும் இலத்தீன் அமெரிக்கர்கள் இரண்டாவது மிகப் பெரிய குழுவை அமைக்கின்றனர். இவர்கள் 18.7% உள்ளனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய மூதாதையர் குழுவைக் கொண்டுள்ளனர். இவர்கள் 12.1% ஆக உள்ளனர்.[402] ஆசிய அமெரிக்கர்கள் நாட்டின் நான்காவது மிகப் பெரிய குழுவாக உள்ளனர். இவர்கள் 5.9%ஐக் கொண்டுள்ளனர். இந்நாட்டின் பூர்வகுடி செவ்விந்திய அமெரிக்கர்கள் 37 இலட்சம் மக்கள் தொகையுடன் சுமார் 1% ஆக உள்ளனர்.[402] கூட்டாட்சி அரசாங்கத்தால் சுமார் 574 பூர்வீகப் பழங்குடியினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[405] 2022இல் ஐக்கிய அமெரிக்க மக்களின் சராசரி வயது 38.9 ஆண்டுகளாக இருந்தது.[406]
ஐக்கிய அமெரிக்காவில் பல மொழிகள் பேசப்படும் அதே நேரத்தில் ஆங்கிலமானது இது வரையிலும் மிகப் பொதுவாக பேசப்படும், எழுதப்படும் மொழியாக உள்ளது.[407] கூட்டாட்சி நிலையில் எந்த ஓர் அலுவல்பூர்வ மொழியும் இல்லாத போதும் ஐக்கிய அமெரிக்கா குடிமகனாவதற்கான தேவைகள் போன்ற சில சட்டங்கள் ஆங்கிலத்தைத் தரப்படுத்துகின்றன. பெரும்பாலான மாநிலங்கள் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தை அலுவல்பூர்வ மொழியாக அறிவித்துள்ளன.[408] மூன்று மாநிலங்கள் மற்றும் நான்கு ஐக்கிய அமெரிக்க நிலப்பரப்புகள் உள்ளூர் அல்லது பூர்வீக மொழிகளை ஆங்கிலத்துடன் சேர்த்து அங்கீகரித்துள்ளன. இதில் அவாய் (அவாய் மொழி),[409] அலாஸ்கா (20 பூர்வீக மொழிகள்),[t][410] தெற்கு டகோட்டா (சியோக்சு),[411] அமெரிக்க சமோவா (சமோவ மொழி), போர்ட்டோ ரிக்கோ (எசுப்பானியம்), குவாம் (சமோரோ), மற்றும் வடக்கு மரியானா தீவுகள் (கரோலினியம் மற்றும் சமோரோ) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. மொத்தத்தில் 169 பூர்வீக அமெரிக்க மொழிகள் ஐக்கிய அமெரிக்காவில் பேசப்படுகின்றன.[412] போர்ட்டோ ரிக்கோவில் ஆங்கிலத்தை விட எசுப்பானிய மொழியானது மிகப் பரவலாகப் பேசப்படுகிறது.[413]
அமெரிக்க சமூகச் சுற்றாய்வின் (2020) படி,[414] ஐந்து அல்லது அதற்கு அதிக வயதுடைய ஐக்கிய அமெரிக்க மக்கள் சுமார் 24.54 கோடிப் பேர் ஆங்கிலத்தை மட்டுமே வீட்டில் பேசுகின்றனர். சுமார் 4.12 கோடிப் பேர் எசுப்பானியத்தை வீட்டில் பேசுகின்றனர். இரண்டாவது மிகப் பொதுவாக பயன்படுத்தப்படும் மொழியாக இது இதை ஆக்குகிறது. 10 இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்களால் வீட்டில் பேசப்படும் பிற மொழிகளில் சீனம் (34 இலட்சம்), தகலோக் (17.1 இலட்சம்), வியட்நாமியம் (15.2 இலட்சம்), அரபி (13.9 இலட்சம்), பிரெஞ்சு (11.8 இலட்சம்), கொரியம் (10.7 இலட்சம்) மற்றும் உருசியம் (10.4 இலட்சம்) ஆகியவை உள்ளடங்கியுள்ளன. 2010இல் வீட்டில் 10 இலட்சம் பேரால் பேசப்பட்ட செருமானியமானது 2020இல் 8.57 இலட்சம் என வீழ்ச்சியடைந்தது.[415]
அமெரிக்கக் குடியேற்ற மக்கள் தொகையானது இதுவரையிலும் உலகின் மிகப் பெரிய நிகர எண்ணிக்கையாக உள்ளது.[416][417] 2022இல் ஐக்கிய அமெரிக்காவில் 8.77 கோடிப் பேர் குடியேறியகளாகவும், குடியேறியகளுக்குப் பிறந்த குழந்தைகளாகவும் இருந்தனர். ஒட்டு மொத்த ஐக்கிய அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 27% இதுவாகும்.[418] 2017இல் ஐக்கிய அமெரிக்காவின் அயல் நாட்டில் பிறந்த மக்கள் தொகையில் சுமார் 45% பேர் (2.07 கோடி) புதிதாகக் குடியுரிமை பெற்ற குடிமக்களாகவும், 27% பேர் (1.23 கோடி) சட்டப்பூர்வமாக நிரந்தர குடிமக்களாகவும், 6% பேர் (22 இலட்சம்) தற்காலிக சட்டப்பூர்வக் குடியிருப்பு வாசிகளாகவும், மற்றும் 23% பேர் (1.05 கோடி) சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களாகவும் இருந்தனர்.[419] 2019இல் குடியேற்றவாசிகளின் பூர்வீக முதல் நிலை நாடுகளாக மெக்சிக்கோ (24% குடியேறிகள்), இந்தியா (6%), சீனா (5%), பிலிப்பீன்சு (4.5%) மற்றும் எல் சால்வடார் (3%) ஆகியவை இருந்தன.[420] 2022ஆம் நிதியாண்டில் 10 இலட்சத்துக்கும் மேலான குடியேறிகள் சட்டப்பூர்வ குடியுரிமைகளைப் பெற்றிருந்தனர் (இவர்களில் பெரும்பாலானவர்கள் குடும்ப இணைவின் வழியாகக் குடியுரிமையைப் பெற்றிருந்தனர்).[421] குடியேற்றக் கொள்கை அமைப்பின் கூற்றுப் படி 2024ஆம் நிதியாண்டில் மட்டும் ஐக்கிய அமெரிக்கா 1,00,034 அகதிகளை மறு குடியமர்த்தியது. "ஐரோப்பாவில் பிற முக்கியமான மறு குடியமர்வு நாடுகள் மற்றும் கனடாவை முந்தியதாக உலகளாவிய முதல் நிலை மறு குடியமர்வு இடமாக ஐக்கிய அமெரிக்காவின் பங்கை இது மீண்டும் உறுதிப்படுத்தியது".[422]
முதல் அரசியலமைப்புச் சீர்திருத்தமானது நாட்டில் எந்தவொரு சமயத்தையும் பின்பற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. எந்த ஒரு சமயத்தையும் அரசாங்கம் நிறுவும் அல்லது அதற்கு ஆதரவளிக்கும் சட்டங்களை இயற்றுவதற்கு பேரவைக்குத் தடை விதிக்கிறது.[423][424] சமயப் பின்பற்றுதலானது பரவலாக உள்ளது. உலகின் மிகப் பல்வேறுபட்ட சமயப் பழக்க வழக்கங்களில் ஒன்று[425] அழுத்தமான உள்ளக் கிளர்ச்சியுடன் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகிறது.[426] உலகின் மிகப் பெரிய கிறித்தவ மக்கள் தொகையை இந்நாடு கொண்டுள்ளது.[427] யூதம், பௌத்தம், இந்து சமயம், இசுலாம் பல புது யுக இயக்கங்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கச் சமயங்கள் உள்ளிட்டவை பிற குறிப்பிடத்தக்க நம்பிக்கைகளாக உள்ளன.[428] சமயப் பழக்க வழக்கங்களானவை பகுதியைப் பொறுத்து பெருமளவுக்கு வேறுபடுகின்றன.[429] "சடங்கு சார் இறை நம்பிக்கையானது" அமெரிக்கப் பண்பாட்டில் பொதுவானதாக உள்ளது.[430]
அமெரிக்கர்களில் பெரும்பான்மையானவர்கள் ஓர் உயர் சக்தி அல்லது ஆன்மீக ஆற்றலில் நம்பிக்கை கொண்டுள்ளனர். வழிபாடு போன்ற ஆன்மீகப் பழக்க வழக்கங்களில் ஈடுபடுகின்றனர். தங்களைத் தாமே சமயம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சார்ந்தவர்களாகக் கருதுகின்றனர்.[431][432] தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவுக்குள் அமைந்துள்ள "விவிலியப் பட்டைப்" பகுதியில் நற்செய்தி இயக்கமானது பண்பாட்டு ரீதியாக ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது. அதே நேரத்தில் நியூ இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐக்கிய அமெரிக்காவானது அதிகப்படியான சமயம் சாராத பகுதியாக உள்ளது.[429] ஒரு மீட்பு இயக்கமான மொர்மனியமானது உடா மாநிலத்தில் இக்காலத்திலும் தொடர்ந்து ஒரு முதன்மையான சமயமாக உள்ளது.[433] இச்சமயத்தின் உறுப்பினர்கள் இரண்டாம் யோசப்பு இசுமித்தின் அரசியல் கொலைக்குப் பிறகு 1847இல் பிரிகம் யங்கின் தலைமைத்துவத்தின் கீழ் மிசோரி மற்றும் இலினொயில் இருந்து மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.[434]
அமெரிக்கர்களில் சுமார் 82% பேர் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளில் வாழ்கின்றனர்.[181] இத்தகையோரில் சுமார் பாதி பேர் 50,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடைய நகரங்களில் வாழ்கின்றனர்.[435] 2022இல் 333 இணைக்கப்பட்ட நகர்ப் பகுதிகளானவை 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும், ஒன்பது நகரங்களானவை 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும், நான்கு நகரங்களான நியூயார்க்கு, லாஸ் ஏஞ்சலஸ், சிகாகோ, மற்றும் ஹியூஸ்டன் ஆகியவை 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகையையும் கொண்டிருந்தன.[436] பல ஐக்கிய அமெரிக்க பெரு நகர் மக்கள் தொகைகளானவை துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. குறிப்பாக இந்நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் இவ்வாறான வளர்ச்சி உள்ளது.[437]
அமெரிக்க ஐக்கிய நாடுகள்-இன் பெரிய பெருநகர்ப் பகுதிகள் ஐ. அ. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்தின் 2023 பெருநகர் புள்ளிவிவரப் பகுதி மதிப்பீடுகள்[438] | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
தரவரிசை | பிராந்தியம் | மதொ. | தரவரிசை | நகரம் | பிராந்தியம் | மதொ. | |||
நியூ யார்க்கு லாஸ் ஏஞ்சலஸ் |
1 | நியூ யார்க்கு | வடகிழக்கு | 1,94,98,249 | 11 | பாஸ்டன் | வடகிழக்கு | 49,19,179 | சிகாகோ டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் |
2 | லாஸ் ஏஞ்சலஸ் | மேற்கு | 1,27,99,100 | 12 | ரிவர்சைடு-சான் பெர்னார்டினோ | மேற்கு | 46,88,053 | ||
3 | சிகாகோ | நடுமேற்கு | 92,62,825 | 13 | சான் பிரான்சிஸ்கோ | மேற்கு | 45,66,961 | ||
4 | டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் | தெற்கு | 81,00,037 | 14 | டெட்ராய்ட் | நடுமேற்கு | 43,42,304 | ||
5 | ஹியூஸ்டன் | தெற்கு | 75,10,253 | 15 | சியாட்டில் | மேற்கு | 40,44,837 | ||
6 | அட்லாண்டா | தெற்கு | 63,07,261 | 16 | மினியாபொலிஸ்-செயின் பால் | நடுமேற்கு | 37,12,020 | ||
7 | வாசிங்டன் | தெற்கு | 63,04,975 | 17 | தாம்பா-செயின் பீட்டர்சுபர்க்கு | தெற்கு | 33,42,963 | ||
8 | பிலடெல்பியா | வடகிழக்கு | 62,46,160 | 18 | சான் டியாகோ | மேற்கு | 32,69,973 | ||
9 | மியாமி | தெற்கு | 61,83,199 | 19 | டென்வெர் | மேற்கு | 30,05,131 | ||
10 | பீனிக்சு | மேற்கு | 50,70,110 | 20 | பால்டிமோர் | தெற்கு | 28,34,316 |
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (சிடிசி) கூற்றுப் படி 2023ஆம் ஆண்டில் பிறப்பின் போது ஓர் அமெரிக்கரின் சராசரி ஆயுட்கால எதிர்பார்ப்பானது 78.4 ஆண்டுகளாக (ஆண்களுக்கு 75.8 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 81.1 ஆண்டுகளாக) இருந்தது. 2022இல் 77.5 ஆண்டுகள் என்ற அளவில் இருந்ததிலிருந்து இது 0.9 ஆண்டு அதிகரிப்பதாகும். "கோவிட்-19 பெருந்தொற்று, இதய நோய், எதிர்பாராத காயங்கள், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவற்றின் காரணமாக இறப்பு வீதத்தில் குறைவு ஏற்பட்டதால்" இந்த புதிய சராசரியானது பெரும்பாலும் மாற்றம் அடைந்து இருந்தது என சிடிசி குறிப்பிட்டிருந்தது.[442] 1998இல் தொடங்கி ஐக்கிய அமெரிக்காவில் ஆயுட்கால எதிர்பார்ப்பானது பிற செல்வந்த தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளைக் காட்டிலும் பின் தங்கிவிட்டது. அமெரிக்கர்களின் "சுகாதாரப் பாதகங்கள்" இடைவெளியானது அன்றிலிருந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.[443] உயர் வருமான நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா மிக அதிக தற்கொலை வீதங்களில் ஒன்றைக் கொண்டுள்ளது.[444] ஐக்கிய அமெரிக்க வயது வந்தோர் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உடல் பருமனுடன் உள்ளனர். மூன்றில் மற்றும் ஒரு பங்கினர் அதிக உடல் எடையுடன் உள்ளனர்.[445] பிற எந்த ஒரு நாட்டைக் காட்டிலும் ஐக்கிய அமெரிக்க சுகாதாரத் துறை அமைப்பானது மருத்துவத்திற்காக அதிகம் செலவழிக்கிறது. சராசரி தனிநபருக்குச் செலவிடப்படும் செலவீனம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதம் ஆகிய இரு அளவீடுகளிலுமே இந்நாடு அதிகமாகச் செலவிடுகிறது. ஆனால் பிற செல்வந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது மோசமான சுகாதாரப் பலன்களைப் பெற்றிருக்கிறது. இதற்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டுக் வருகின்றன.[446] அனைவருக்குமான சுகாதார அமைப்பைக் கொண்டிராத ஒரே ஒரு வளர்ந்த நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும். மக்கள் தொகையில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கினர் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டிருக்கவில்லை.[447] அரசு நிதியுதவி பெறும் மெடிக் எயிட் எனப்படும் ஏழைகளுக்கான மருத்துவ சேவை, மற்றும் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையோருக்கான மெடிகேர் எனப்படும் மருத்துவ சேவை ஆகியவை அத்திட்டங்களின் குறிப்பிடப்பட்ட வருமானம் அல்லது வயதுத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கர்களுக்குக் கிடைக்கப் பெறுகின்றன. 2010இல் முன்னாள் அதிபர் ஒபாமா நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்புச் சட்டத்தை இயற்றினார்.[u][448] ஐக்கிய அமெரிக்காவில் கருக்கலைப்பானது தேசிய அளவில் உரிமையாக வழங்கப்படவில்லை. 17 மாநிலங்களில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகவோ அல்லது வரைமுறைகளுக்கு உட்பட்டதாகவோ உள்ளது.[449]
அமெரிக்க மழலையர் மற்றும் பள்ளிக் கல்வியானது (ஐக்கிய அமெரிக்காவில் இது கே-12 என்று அறியப்படுகிறது, "மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை") மையப்படுத்தப்படாததாகும். பள்ளி அமைப்புகளானவை மாநிலம், பகுதி மற்றும் சில நேரங்களில் நகர அரசாங்கங்களால் செயல்படுத்தப்படுகிறது. ஐக்கிய அமெரிக்கக் கல்வித் துறையால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. பொதுவாகக் குழந்தைகள் பள்ளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட வீட்டுப் பள்ளியை ஐந்து அல்லது ஆறாம் வயது (கின்டர்கார்ட்டின் அல்லது முதல் வகுப்பு) முதல் அவர்களின் 18ஆம் வயது வரை கற்க வேண்டிய தேவையுள்ளது. இது பெரும்பாலும் மாணவர்களை 12ஆம் வகுப்பு வரை கொண்டு வருகிறது. இதுவே ஐக்கிய அமெரிக்கப் பள்ளிக் கல்வியின் கடைசி ஆண்டாகும். ஆனால், சில மாநிலங்களும், பகுதிகளும் மாணவர்களை பள்ளியை விட்டு முன்னரே 16 அல்லது 17 வயதில் செல்ல அனுமதிக்கின்றன.[451] உலகின் பிற எந்தவொரு நாட்டையும் விட ஒரு மாணவனுக்கு கல்விக்காக ஐக்கிய அமெரிக்கா அதிகமாகச் செலவழிக்கிறது.[452] 2020-2021இல் ஒரு பொது மழலையர் மற்றும் பள்ளிக் கல்வி மாணவனுக்கு ஓராண்டுக்குச் சராசரியாக ஐஅ$18,614 (₹13,31,198.8)ஐச் செலவழித்தது.[453] 25 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய அமெரிக்கர்களில் 92.2% பேர் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற்றும், சுமார் 62.7% பேர் ஏதாவது ஒரு கல்லூரிக்குச் சென்றிருந்தும், 37.7% பேர் ஓர் இளநிலைப் பட்டத்தைப் பெற்றிருந்தும், 14.2% பேர் ஒரு முதுகலைப் பட்டத்தைப் பெற்றிருந்தும் இருந்தனர்.[454] ஐக்கிய அமெரிக்காவின் எழுத்தறிவு வீதமானது கிட்டத்தட்ட 100% ஆக உள்ளது.[181][455] இந்நாடு உலகின் பிற எந்தவொரு நாட்டையும் விட அதிக நோபல் பரிசு பெற்றவர்களைக் கொண்டுள்ளது. இந்நாட்டைச் சேர்ந்த 411 பேர் 413 நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.[456][457]
ஐக்கிய அமெரிக்க மூன்றாம் நிலை அல்லது கல்லூரிப் படிப்பானது ஓர் உலகளாவிய பெயரைப் பெற்றுள்ளது. பல்வேறு தர நிலை அமைப்புகளால் பட்டியலிடப்படுவதன் படி உலகின் முதல் நிலைப் பல்கலைக்கழகங்களில் பல ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளன. உலகின் முதல் 25 தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் 19 பல்கலைக்கழகங்கள் அமெரிக்காவில் அமைந்துள்ளன.[458][459] நாட்டின் பல தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அனைத்து அமெரிக்க மாணவர்களில் சுமார் 20% பேரைக் கொண்டிருந்தாலும் அமெரிக்கக் கல்லூரிப் படிப்பில் மாநிலப் பல்கலைக்கழக அமைப்புகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சமூகக் கல்லூரிகள் பொதுவாகக் கல்லூரிப் படிப்பின் முதல் இரு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் படிப்புகளை அளிக்கின்றன. இவை பொதுவாக மிக வெளிப்படையான மாணவர் சேர்ப்புக் கொள்கைகள், குறைவான கல்வித் திட்டங்கள் மற்றும் குறைந்த பயிற்சிக் கட்டணம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.[460]
கல்லூரிப் படிப்பில் அரசாங்கத்தின் செலவீனங்களைப் பொறுத்த வரையில் ஐக்கிய அமெரிக்கா பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு நாடுகளின் சராசரியை விட ஒவ்வொரு மாணவனுக்கும் அதிகமாகச் செலவழிக்கிறது. அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த பொது மற்றும் தனியார் செலவீனத்தை விட அதிகமாக அமெரிக்கர்கள் செலவழிக்கின்றனர்.[461] கூட்டாட்சி அரசாங்கத்தால் நேரடியாக நிதியுதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயிற்சிக் கட்டணங்களை மாணவர்களிடமிருந்து பெறுவதில்லை. இவை இராணுவ வீரர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு உரியவையாக உள்ளன. இதில் ஐக்கிய அமெரிக்க சேவைக் கல்வி நிலையங்கள், கடற்படை முதுகலைப் பள்ளி மற்றும் இராணுவப் பணியாளர் கல்லூரிகள் அடங்கும். சில மாணவர் கல்விக் கடன் தள்ளுபடித் திட்டங்கள் உள்ள போதிலும்[462] 2010 மற்றும் 2020க்கு இடையில் மாணவர்களின் கல்விக் கடனானது 102% அதிகரித்துள்ளது.[463] 2022ஆம் ஆண்டு நிலவரப் படி இது ஐஅ$1.7 டிரில்லியன் (₹121.6 டிரில்லியன்)ஐ விட அதிகமாக உள்ளது.[464]
அமெரிக்கர்கள் பாரம்பரியமாக "அமெரிக்கக் கோட்பாடுகளில்" ஓர் ஒன்றிணைக்கும் அரசியல் நம்பிக்கையால் இயற்பண்புகளாகக் கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கைகள் ஆளப்படுபவர்களின் இணக்கம், விடுதலை, சட்டத்தின் கீழ் அனைவரும் சமம், மக்களாட்சி, சமூகத்தில் சமநிலை, சொத்து உரிமைகள், மற்றும் வரம்புக்குட்பட்ட அரசுக்கான ஒரு தேர்ந்தெடுப்பு ஆகியவற்றைக் கவனக் குவியமாகக் கொண்டுள்ளன.[466][467] பண்பாட்டு ரீதியாக தனிமனிதத்துவம் மற்றும் தனிமனித சுதந்திரம்[468][469] ஆகிய மதிப்புகளைக் கொண்டதாக இந்நாடானது விளக்கப்படுகிறது. மேலும், ஒரு வலிமையான பணிசார் நன்னெறிகள்,[470] போட்டித் திறன்,[471] மற்றும் பிறரை நோக்கிய தன்னார்வ ஒப்புரவாண்மை ஆகிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.[472][473][474] சாரிட்டீஸ் எயிட் அமைப்பால் நடத்தப்பட்ட ஒரு 2016ஆம் ஆண்டு ஆய்வின் படி அமெரிக்கர்கள் நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.44%ஐ அறக்கட்டளைகளுக்குக் கொடுத்தனர். இது உலகிலேயே மிக அதிகமான வீதமாக பெருமளவு இடைவெளியுடன் உள்ளது.[475] ஐக்கிய அமெரிக்காவானது ஒரு பரவலான வேறுபட்ட இனக்குழுக்கள், பாரம்பரியங்கள் மற்றும் மதிப்புகளுக்குத் தாயகமாக உள்ளது.[476][477] இந்நாடு குறிப்பிடத்தக்க பண்பாட்டு மற்றும் பொருளாதார மென் சக்தியைப் பெற்றுள்ளது.[478][479]
கிட்டத்தட்ட அனைத்து தற்போதைய அமெரிக்கர்கள் அல்லது அவர்களது மூதாதையர்கள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா அல்லது ஆசியாவிலிருந்து ("பழைய உலகம்") கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்குள் வந்தவர்கள் ஆவர்.[480] முதன்மைப் போக்கான அமெரிக்கப் பண்பாடானது ஒரு மேற்கத்திய நாகரிகம் ஆகும். இது பெரும்பாலும் ஐரோப்பியக் குடியேறிகளின் பாரம்பரியங்களிலிருந்து தருவிக்கப்பட்டதாகும். இது ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அடிமைகளால் கொண்டு வரப்பட்ட பாரம்பரியங்கள் போன்ற பல பிற ஆதாரங்களிலிருந்தும் தாக்கம் பெற்றுள்ளது.[481] ஆசியாவிலிருந்து மற்றும் குறிப்பாக இலத்தீன் அமெரிக்காவிலிருந்து வந்த மிக சமீபத்திய புலப்பெயர்வானது ஒரு பண்பாட்டுக் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு பண்பாட்டுச் சங்கம இடம் மற்றும் பலவித இனங்களுடைய சாலட் கோப்பை என்று விளக்கப்படுகிறது. இதில் குடியேறிகள் முதன்மைப் போக்கான அமெரிக்கப் பண்பாட்டுக்குப் பங்களித்து மற்றும் பெரும்பாலும் அதனுடன் இணைந்து செயல்படுகின்றனர். அமெரிக்கக் கனவு அல்லது அவர்கள் உயர் சமூகப் படிநிலை நகர்வை அனுபவிக்கின்றனர் என்ற தோற்றமானது குடியேறிகளை ஈர்ப்பதில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது.[482][483] இந்தத் தோற்றமானது உண்மையானதா என்பது விவாதத்திற்குரிய ஒரு பொருளாக உள்ளது.[484][485][486] முதன்மைப் போக்கான பண்பாடானது ஐக்கிய அமெரிக்காவானது ஒரு வகுப்புகளற்ற சமூகம் என்று குறிப்பிடும் அதே நேரத்தில்[487] நாட்டின் சமூகமயமாக்கம், மொழி மற்றும் மதிப்புகள் மீது தாக்கம் ஏற்படுத்துகிற,[488][489] சமூகங்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அமெரிக்கர்கள் சமூகப் பொருளாதாரச் சாதனைக்கு அதிகம் மதிப்பளிக்கின்றனர். ஆனால், சாதாரணமான அல்லது சராசரியாக உள்ள நிலையும் சிலரால் ஓர் உன்னத நிலையாக ஊக்குவிக்கப்படுகிறது.[490]
கலைகள் மற்றும் வாழ்வியல்களுக்கான தேசிய அமைப்பானது "ஐக்கிய அமெரிக்காவில் வாழ்வியல்கள் மற்றும் கலைகளுக்கான, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அமைப்புகளுக்கான ஒரு பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியக் கொள்கை ஆதரவை உருவாக்குவதை மற்றும் ஊக்குவிப்பதைக்" குறிக்கோளாகக் கொண்டு 1965ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கக் கூட்டாட்சி அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு முகமை ஆகும்.[491] இது நான்கு துணை-முகமைகளை கொண்டுள்ளது:
முதல் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவானது எந்தவொரு நாட்டைக் காட்டிலும் பேச்சு சுதந்திரத்திற்கு வலிமையான பாதுகாப்புகளைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.[492] பேச்சு சுதந்திரமானது தேசியக் கொடி அவமதிப்பு, வெறுப்புப் பேச்சு, கடவுள் நிந்தனை மற்றும் ஆட்சியாளர்களை அவமதிப்பது ஆகிய வடிவங்களைப் பாதுகாக்கப்பட்ட வெளிப்பாடுகளாகப் பாதுகாக்கிறது.[493][494][495] ஒரு 2016ஆம் ஆண்டு பியூ ஆராய்ச்சி மையத்தின் வாக்கெடுப்பானது எந்த ஒரு அளவிடப்பட்ட அரசியல் அமைப்பைக் (நாடுகள்) காட்டிலும் பேச்சு சுதந்திரத்திற்கு மிகுந்த ஆதரவளிப்பவர்களாக அமெரிக்கர்கள் திகழ்கின்றனர் என்பதைக் கண்டறிந்தது.[496] "பத்திரிகைச் சுதந்திரம் மற்றும் அரசாங்கத் தணிக்கையின்றி இணையத்தைப் பயன்படுத்தும் உரிமை ஆகியவற்றுக்கு மிகுந்த ஆதரவை" அமெரிக்கர்கள் அளித்தனர்.[497] மாந்த பாலுணர்வியல் தொடர்பான விவகாராங்களை அனுமதிக்கும் மனப்பாங்கையுடைய ஒரு சமூக ரீதியிலான முற்போக்கு நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கிறது.[498][499] உலகளாவிய நிலைகளுடன் ஒப்பிடும் போது ஐக்கிய அமெரிக்காவில் ந. ந. ஈ. தி. உரிமைகளானவை மிகுந்த முன்னேற்றம் அடைந்தவையாக உள்ளன.[499][500][501]
குடியேற்ற கால அமெரிக்க எழுத்தாளர்கள் ஜான் லாக் மற்றும் பல்வேறு பிற அறிவொளிக் காலத் தத்துவவாதிகளாலும் தாக்கம் பெற்றனர்.[503][504] அமெரிக்கப் புரட்சிப் போர் காலமானது (1765–1783) பெஞ்சமின் பிராங்கிளின், அலெக்சாண்டர் ஆமில்டன், தாமஸ் பெய்ன், மற்றும் தாமசு ஜெஃபர்சன் ஆகியோரின் அரசியல் எழுத்துக்களுக்காக குறிப்பிடத்தக்கதாக உள்ளது. புரட்சிப் போருக்கு சற்று முன்னர் மற்றும் பிறகு பத்திரிக்கைகள் முக்கியத்துவத்துக்கு உயர்ந்தன. பிரித்தானிய-எதிர்ப்பு தேசிய இலக்கியத்திற்கான ஒரு தேவையை நிரப்பின.[505][506] இதில் தொடக்க கால புதினமானது 1791ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட வில்லியம் ஹில் பிரௌனின் த பவர் ஆப் சிம்பதி புதினம் ஆகும். தங்களது பிரித்தானிய சகாக்களைப் பின்பற்றியதற்காக வாசிங்டன் இர்விங் போன்ற முந்தைய எழுத்தாளர்களை விமர்சித்ததன் மூலம் ஒரு தனித்துவமான இலக்கியம் மற்றும் பண்பாட்டை நோக்கி அமெரிக்கா முன்னேற எழுத்தாளர் மற்றும் விமர்சகரான யோவான் நீல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப் பகுதி வரை உதவினார். எட்கர் ஆலன் போ போன்ற எழுத்தாளர்கள் மீது தாக்கம் ஏற்படுத்தினார்.[507] எட்கர் ஆலன் போ அமெரிக்கக் கவிதை மற்றும் சிறு புனைவுகளை ஒரு புதிய திசைக்கு எடுத்துச் சென்றார். ரால்ப் வால்டோ எமேர்சன் மற்றும் மார்கரெட் ஃபுல்லர் ஆகியோர் தாக்கமேற்படுத்திய புலன் கடந்த அறிவிய இயக்கத்தின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர்.[508][509] வால்டன் நூலின் எழுத்தாளரான கென்றி டேவிட் தூரோ இந்த இயக்கத்தால் தாக்கம் பெற்றார். அடிமை ஒழிப்புக் கோட்பாட்டைச் சுற்றி நடந்த சண்டைகளானவை ஹேரியட் பீச்சர் ஸ்டோவ் மற்றும் அடிமைகளின் பார்வையை வெளிப்படுத்திய எழுத்தாளர்களான பிரடெரிக் டக்ளஸ் போன்றோருக்கு அகத்தூண்டுதலாக அமைந்தது. நாதனீல் ஹாதோர்னின் த ஸ்கார்லெட் லெட்டர் (1850) நூலானது அமெரிக்க வரலாற்றின் கருப்புப் பக்கத்தை ஆராய்ச்சி செய்தது. இதே போலவே ஏர்மன் மெல்வில்லின் மொபி-டிக்கும் (1851) ஆராய்ச்சி செய்தது. 19ஆம் நூற்றாண்டு அமெரிக்க மறுமலர்ச்சியின் முக்கியமான அமெரிக்கக் கவிஞர்களில் வால்ட் விட்மன், மெல்வில், மற்றும் எமிலி டிக்கின்சன் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.[510][511] அமெரிக்க மேற்கில் பிறந்த முதல் முக்கிய அமெரிக்க எழுத்தாளர் மார்க் டுவெய்ன் ஆவார். த போர்டிரைட் ஆஃப் எ லேடி (1881) போன்ற புதினங்கள் மூலம் கென்றி ஜேம்ஸ் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார். எழுத்தறிவு வீதமானது அதிகரிக்க பருவ இதழ்களானவை தொழில்துறைப் பணியாளர்கள், பெண்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளைச் சுற்றி அமைந்த அதிகமான கதைகளைப் பதிப்பித்தன.[512][513] இயல்பியம், பிராந்தியம் மற்றும் நடப்பியல் ஆகியவை இக்காலத்தின் முக்கியமான இலக்கிய இயக்கங்களாக இருந்தன.[514][515]
நவீனவியமானது பொதுவாக ஒரு பன்னாட்டுத் தோற்றத்தை எடுத்த அதே நேரத்தில் ஐக்கிய அமெரிக்காவுக்குள் பணியாற்றிய நவீனவிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் தங்களது வேலைப்பாடுகளைக் குறிப்பிட்ட பகுதிகள், மக்கள் மற்றும் பண்பாடுகளில் வேறூன்றிக் கொண்டு வந்தனர்.[516] வடக்கத்திய நகரங்களுக்கான பெரும் புலப்பெயர்வைத் தொடர்ந்து சம நிலையற்ற ஒரு வரலாற்றைக் கண்டித்த மற்றும் கருப்பினப் பண்பாட்டைக் கொண்டாடிய இலக்கியத்தின் ஒரு சுதந்திரமான பாரம்பரியத்தை ஆர்லெம் மறுமலர்ச்சியின் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் கருப்பின மேற்கிந்திய எழுத்தாளர்கள் உருவாக்கினர். ஜாஸ் காலத்தின் போது ஒரு முக்கியமான பண்பாட்டு ஏற்றுமதியான இத்தகைய எழுத்துக்களானவை நீக்ரோ மனப்பாங்கு என்ற கோட்பாட்டின் மீது ஒரு முக்கியமான தாக்கமாக இருந்தன. நீக்ரோ மனப்பாங்கு என்பது 1930களில் தோன்றிய ஒரு தத்துவமாகும். இது வெளிநாடு வாழ் ஆப்பிரிக்கர்களின் பிரெஞ்சு மொழியை பேசிய எழுத்தாளர்கள் மத்தியில் தோன்றியது.[517][518] 1950களில் ஒருபடித்தான குறைவற்ற நிலையானது மகா அமெரிக்கப் புதினத்தை எழுத முயற்சிக்கப் பல எழுத்தாளர்களைத் தூண்டியது.[519] அதே நேரத்தில் இந்நிலையை பீட்ஸ் தலைமுறை எழுத்தாளர்கள் நிராகரித்தனர். சமூகத்தின் தோல்விகளை விளக்க எந்திரவியலைத் தவிர்த்து பேசப்பட்ட வார்த்தைகளின் தாக்கத்தை உயர்த்திய பாணிகளை இவர்கள் பயன்படுத்தினர்.[520][521] சமகால இலக்கியமானது முந்தைய சகாப்தங்களை விட பன்முகத் தன்மை உடையதாக உள்ளது. மொழியுடன் கூடிய சுய-உணர் திறன் சோதனைகளை நோக்கிய ஒரு மனப்போக்கானது ஒன்றிணைக்கும் அம்சத்திற்கான நெருக்கமான ஒரு நிலையாக உள்ளது.[522] 2024ஆம் ஆண்டு நிலவரப் படி இலக்கியத்திற்கான நோபல் பரிசை 12 அமெரிக்கர்கள் பெற்றுள்ளனர்.[523]
ஊடகமானது பரவலாகத் தணிக்கை செய்யப்படுவதில்லை. அரசியலமைப்பின் முதல் திருத்தமானது முக்கியமான பாதுகாப்பை இதற்கு அளிக்கிறது. இது நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் எதிர். ஐக்கிய அமெரிக்கா வழக்கில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[492] ஐக்கிய அமெரிக்காவின் நான்கு முக்கியமான ஊடக நிறுவனங்களாக தேசிய ஒளிபரப்பு நிறுவனம் (என்பிசி), சிபிஎஸ், அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவை உள்ளன. நான்கு முதன்மையான முக்கியமான தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் அனைத்துமே வணிகத் தன்மையுடையவையாக உள்ளன. கேபிள் தொலைக்காட்சியானது ஒரு பரவலான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நூற்றுக்கணக்கான அலைவரிசைகளை அளிக்கிறது.[524] 2021ஆம் ஆண்டு நிலவரப் படி 12க்கும் அதிகமான வயதுடைய சுமார் 83% அமெரிக்கர்கள் வானொலி ஒலிபரப்பைக் கேட்கின்றனர். அதே நேரத்தில் சுமார் 40% வலையொலிகளைக் கேட்கின்றனர்.[525] 2020ஆம் ஆண்டு நிலவரப் படி கூட்டாட்சித் தொலைத்தொடர்பு ஆணையத்தின் கூற்றுப் படி ஐக்கிய அமெரிக்காவில் 15,460 உரிமம் வழங்கப்பட்ட முழுமையான-சக்தியுடைய வானொலி நிலையங்கள் உள்ளன.[526] பெரும்பாலான பொது வானொலி ஒளிபரப்பானது என்பிஆர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. 1967ஆம் ஆண்டின் பொது ஒளிபரப்புச் சட்டத்தின் கீழ் 1970 பெப்பிரவரியில் இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.[527]
த வால் ஸ்ட்ரீட் ஜர்னல், த நியூயார்க் டைம்ஸ், தி வாசிங்டன் போஸ்ட், மற்றும் யூஎஸ்ஏ டுடே உள்ளிட்ட ஐக்கிய அமெரிக்கப் பத்திரிக்கைகள் ஓர் உலகளாவிய அடைபு மற்றும் பெயரைக் பெற்றுள்ளன.[528] எசுப்பானிய மொழியில் சுமார் 800 பதிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[529][530] சில விதிவிலக்குகளுடன் பத்திரிகைகளானவை தனியாரால் நடத்தப்படுகின்றன. கன்னெட் அல்லது மெக்லாச்சி போன்ற பெரிய நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மெக்லாச்சியானது டசன் கணக்கிலான அல்லது நூற்றுக் கணக்கிலான பத்திரிகைகளையும் கூட உடைமையாகக் கொண்டுள்ளது; சிறிய அளவு பத்திரிகைகளை உடைமையாகக் கொண்டுள்ள சிறிய நிறுவனங்களும் உள்ளன; அல்லது, அதிகரித்து வந்த அரிதான நிலையாக தனி நபர்கள் அல்லது குடும்பங்களாலும் கூட இவை நடத்தப்படுகின்றன. முதன்மைப் போக்கான நாளிதழ்களுடன் இயைந்து செல்வதற்காக மாற்று நாளிதழ்களையும் முக்கிய நகரங்கள் பெரும்பாலும் கொண்டுள்ளன. நியூயார்க்கு நகரத்தின் த வில்லேஜ் வாய்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலஸின் எல்ஏ வீக்லி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் ஐந்து மிகப் பிரபலமான இணையதளங்களாகக் கூகுள், யூடியூப், அமேசான், யாகூ! மற்றும் முகநூல் ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் அமெரிக்கர்களால் உடைமையாகக் கொள்ளப்பட்டவை ஆகும்.[531]
2022ஆம் ஆண்டு நிலவரப் படி வருவாயின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய காணொளி விளையாட்டுச் சந்தையாக ஐக்கிய அமெரிக்கா திகழ்கிறது.[532] இங்கு கலிபோர்னியா மாநிலத்தில் மட்டும் 444 பதிப்பாளர்கள், உருவாக்குநர்கள் மற்றும் வன்பொருள் நிறுவனங்கள் உள்ளன.[533]
ஐக்கிய அமெரிக்கா அதன் காட்சி அரங்குத் துறைக்காக நன்கு அறியப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் முதன்மைப் போக்கான காட்சி அரங்கானது பழைய ஐரோப்பியக் காட்சி அரங்குப் பாரம்பரியத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாகும். பிரித்தானிய காட்சியரங்குகளால் இது தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.[534] 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வாக்கில் டாம் பொழுது போக்குக் காட்சிகள், சோவ்போட் காட்சி அரங்கு மற்றும் பாணர் பொழுது போக்குக் காட்சி ஆகியவற்றில் புதிய தனித்துவமான நாடக வடிவங்களை அமெரிக்கா உருவாக்கியது.[535] அமெரிக்கக் காட்சியரங்கு அமைவிடத்தின் மையக் குவியமாக மன்காட்டனில் உள்ள காட்சி அரங்கு மாவட்டம் திகழ்கிறது. இது பிராடுவே, ஆஃப்-பிரோடுவே மற்றும் ஆஃப்-ஆஃப்-பிரோடுவே என்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[536]
பல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் தங்களது மிகப் பெரிய பணிசார் திருப்பு முனைகளை நியூ யார்க்கு தயாரிப்புகளில் பெற்றனர். நியூயார்க்கு நகரத்திற்கு வெளியே தங்களது சொந்த நாடகத் தொடர்களை உற்பத்தி செய்யும் பணித்திறன் சார்ந்த பிராந்திய அல்லது அமைவிட காட்சி அரங்கு நிறுவனங்களைப் பல நகரங்கள் கொண்டுள்ளன. மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் காட்சியரங்கு தயாரிப்புகளாக இசைநாடகங்கள் உள்ளன. ஐக்கிய அமெரிக்கக் காட்சி அரங்கானது ஒரு செயல்பாட்டில் உள்ள சமூகக் காட்சி அரங்குப் பண்பாட்டைக் கொண்டுள்ளது.[537]
நேரடி பிராடுவே காட்சி அரங்கில் சிறந்து விளங்குபவர்களுக்கு டோனி விருதுகள் வழங்கி அங்கீகரிக்கப்படுகிறது. மன்காட்டனில் ஒரு வருடாந்திர விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகளானவை பிராடுவே தயாரிப்புகள் மற்றும் நடிப்புக்காகக் கொடுக்கப்படுகிறது. பிராந்தியக் காட்சி அரங்குக்காகவும் கூட ஒரு விருது கொடுக்கப்படுகிறது. பல விருப்புரிமை போட்டி சாராத விருதுகளும் கூடக் கொடுக்கப்படுகின்றன. இதில் சிறப்பு டோனி விருது, காட்சி அரங்கில் சிறந்தவருக்கான டோனி மதிப்பு விருது மற்றும் இசபெல்லா இசுதீவன்சன் விருது ஆகியவை உள்ளடங்கியுள்ளன.[538]
தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளப் பொதுவாகப் பயிற்சி அளிக்கப்பட்ட மக்களுக்கு அனுமதியளித்த சமூகங்களில் கைவினைஞர் மற்றும் கைவினைத் திறத்தில் இருந்து குடியேற்ற கால அமெரிக்காவின் நாட்டுப்புறக் கலையானது வளர்ச்சியடைந்தது. ஐரோப்பாவின் உயர் கலைப் பாரம்பரியத்திலிருந்து இது தனித்துவமானதாக இருந்தது. ஐரோப்பிய உயர் கலையானது அணுகுவதற்கு எளிதானதாக இல்லை. தொடக்க கால அமெரிக்கக் குடியேறிகளுக்குப் பொதுவாகக் குறைந்த முக்கியத்துவம் உடையதாக இது இருந்தது.[540] குடியேற்ற கால அமெரிக்காவில் கலை மற்றும் கைவினைத் திறத்தின் பண்பாட்டு இயக்கங்களானவை மேற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவற்றிலிருந்து பொதுவாகப் பின் தங்கியே இருந்தன. எடுத்துக்காட்டாக, 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இங்கிலாந்தில் மறுமலர்ச்சி பாணிகளின் தோற்றம் இருந்த போதும் நடப்பிலிருந்த மரவேலைப்பாட்டின் நடுக்கால பாணி மற்றும் தொடக்க கால சிற்பக்கலை ஆகியவை தொடக்க கால அமெரிக்க நாட்டுப்புறக் கலையின் பகுதியாக உருவாயின. அமெரிக்க நாட்டுப்புறக் கலை மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் போதுமான தொடக்க காலத்தைச் சேர்ந்தவையாக புதிய ஆங்கிலேயப் பாணிகள் இருந்தன. ஆனால், அமெரிக்கப் பாணிகள் மற்றும் வடிவங்கள் ஏற்கனவே நன்றாகப் பின்பற்றப்பட்டு இருந்தன. தொடக்க கால அமெரிக்காவில் பாணிகள் மட்டும் மெதுவாக மாற்றம் அடையவில்லை. தங்களது நகர்ப்புற சகாக்களைக் காட்டிலும் தங்களது பாரம்பரிய வடிவங்களை நீண்ட காலத்திற்குத் தொடர கிராமப்புறக் கைவினைஞர்களுக்கு ஒரு மனப்பாங்கு இருந்தது. மேற்கு ஐரோப்பாவில் இருந்ததை விடவும் இம்மனப்பாங்கு மிக நீண்ட காலத்திற்கு இருந்தது.[492]
ஐரோப்பிய மெய்மையியத்தின் காட்சிக் கலைப் பாரம்பரியத்தில் அமைந்திருந்த 19ஆம் நூற்றாண்டின் ஒரு நடுப்பகுதி இயக்கமாக கட்சன் ஆற்றுப் பள்ளியானது திகழ்ந்தது. நியூயார்க்கு நகரத்தில் 1913ஆம் ஆண்டின் ஆர்மோரி காட்சியானது பொது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஐக்கிய அமெரிக்கத் தொலைக்காட்சியை மாற்றியமைத்தது. ஆர்மோரி காட்சியானது ஐரோப்பிய நவீனவியக் கலையின் ஒரு கண்காட்சியாகும்.[541]
ஜோர்ஜியா ஓ'கீஃப், மார்ஸ்டென் ஹார்ட்லே மற்றும் பிறர் புதிய மற்றும் தனிநபர் பாணிகளில் சோதனை முயற்சிகளை மேற்கொண்டனர். இதுவே பிற்காலத்தில் அமெரிக்க நவீனவியம் என்று அறியப்பட்டது. ஜாக்சன் பாலக் மற்றும் வில்லெம் டி கூனிங்கின் பண்பியல் வெளிப்பாட்டியம், அன்டி வார்ஹால் மற்றும் ராய் லிக்டென்ஸ்டெயினின் பாப் கலை போன்ற முக்கியமான கலை இயக்கங்கள் ஐக்கிய அமெரிக்காவிலேயே பெரும்பாலும் உருவாக்கப்பட்டவையாகும். ஆல்ஃப்ரெட் இசுதியேக்லிட்சு, எட்வர்டு இசுடெயிச்சென், தோரோத்தியா லாங்கே, எட்வர்டு வெசுதன், ஜேம்சு வான் டெர் சீ, அன்செல் ஆடம்சு, மற்றும் கார்டன் பார்க்ஸ் ஆகியோர் முக்கியமான புகைப்படக் கலைஞர்களாக உள்ளனர்.[542]
பிராங்க் லாய்டு ரைட், பிலிப் ஜான்சன், மற்றும் பிராங்க் கெரி உள்ளிட்ட அமெரிக்கக் கட்டடக் கலை நிபுணர்களுக்கு உலகளாவிய புகழை நவீனவிய அலை மற்றும் பிறகு பின்நவீனத்துவம் ஆகியவை கொண்டு வந்தன.[543] மன்காட்டனில் உள்ள பெருநகரக் கலை அருங்காட்சியகமானது ஐக்கிய அமெரிக்காவிலேயே மிகப் பெரிய ஓவியக் காட்சியகமாகவும்,[544] உலகின் நான்காவது மிகப் பெரிய ஓவியக் காட்சியகமாகவும் உள்ளது.[545]
அமெரிக்க நாட்டுப்புற இசையானது பல்வேறு இசை வகைகளைக் கொண்டுள்ளது. இவை பாரம்பரிய இசை, பாரம்பரிய கிராமிய இசை, சமகால நாட்டுப்புற இசை அல்லது பூர்வீக இசை எனப் பலவாறாக அறியப்படுகின்றன. பல பாரம்பரியப் பாடல்களானவை ஒரே குடும்பம் அல்லது நாட்டுப்புறக் குழுக்களுக்குள் பல தலைமுறைகளுக்குப் பாடப்பட்டன. பிரித்தானியத் தீவுகள், கண்டப் பகுதி ஐரோப்பா அல்லது ஆப்பிரிக்கா போன்ற பூர்வீகங்களுக்கு சில நேரங்களில் இவை தடயமிடப்படுகின்றன.[546] குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்க இசையின் சந்தம் மற்றும் பாடல் வரிப் பாணிகளானவை அமெரிக்க இசை மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.[547] பான்ஜோக்கள் அமெரிக்காவுக்கு அடிமை வணிகம் மூலமாகக் கொண்டு வரப்பட்டனர். பாணர் காட்சிகள் தங்களது நடிப்புகளுக்குள் இசைக்கருவிகளைச் சேர்த்ததானது அதிகரித்த புகழ் மற்றும் பரவலான தயாரிப்பு ஆகியவற்றுக்கு 19ஆம் நூற்றாண்டில் காரணமாகியது.[548][549] 1930களில் முதன் முதலில் தயாரிக்கப்பட்ட மற்றும் 1940களில் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட மின் கிதார் பிரபல இசை மீது ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராக் அண்டு ரோல் இசையின் உருவாக்கத்தின் காரணமாக இவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.[550]
புளூஸ் மற்றும் பழைய-கால இசை போன்ற நாட்டுப்புற மரபுத் தொடர்களின் காரணிகளானவை பின்பற்றப்பட்டு உலகளாவிய இரசிகர்களைக் கொண்ட பிரபலமான வகைகளாக உருமாற்றமடைந்தன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் புளூஸ் மற்றும் ராக்டைம் ஆகியவைகளிலிருந்து ஜாஸ் உருவானது. டபிள்யூ. சி. ஹேண்டி மற்றும் ஜெல்லி ரோல் மார்ட்டன் போன்ற இசையமைப்பாளர்களின் புதுமைகள் மற்றும் பதிவுகளில் இருந்து வளர்ச்சியடைந்தது. லூயிசு ஆம்சுட்ராங் மற்றும் டியூக் எலிங்டன் ஆகியோர் இதன் புகழை 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதிகரித்தனர்.[551] நாட்டுப்புற இசையானது 1920களிலும்,[552] ராக் அண்டு ரோலானது 1930களிலும்,[550] புளூகிராஸ்[553] மற்றும் ரிதம் அண்ட் புளூஸ் ஆகியவை 1940களிலும் உருவாயின.[554] 1960களில் நாட்டுப்புற இசையின் புத்தெழுச்சியில் இருந்து தோன்றிய பாப் டிலான் நாட்டின் மிகவும் கொண்டாடப்பட்ட பாடல் ஆசிரியர்களில் ஒருவராக உருவானார்.[555] பங்க் மற்றும் ஹிப் ஹாப் ஆகிய இரு இசை வடிவங்களுமே ஐக்கிய அமெரிக்காவில் 1970களில் தோன்றின.[556]
உலகின் மிகப் பெரிய இசைச் சந்தை ஐக்கிய அமெரிக்கா தான். 2022இல் ஒட்டு மொத்த சில்லரை மதிப்பாக இது ஐஅ$15.9 பில்லியன் (₹1,13,710.4 கோடி)களைக் கொண்டிருந்தது.[557] உலகின் முக்கியமான இசைப்பதிவு நிறுவனங்களில் பெரும்பாலானவை ஐக்கிய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டுள்ளன. அமெரிக்காவின் இசைப் பதிவுத் தொழில்துறை அமைப்பால் இவை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.[558] பிராங்க் சினாட்ரா[559] மற்றும் எல்விஸ் பிரெஸ்லி,[560] போன்ற 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அமெரிக்க பாப் நட்சத்திரங்கள் உலகளாவியப் புகழ் பெற்றவர்களாகவும், மிக அதிக விற்பனையான இசைக் கலைஞர்களாகவும் உருவாயினர்.[551] மைக்கல் ஜாக்சன்,[561] மடோனா,[562] விட்னி ஊசுட்டன்,[563] மற்றும் மரியா கேரி[564] போன்ற 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி இசைக் கலைஞர்களும், எமினெம்,[565] பிரிட்னி ஸ்பியர்ஸ்,[566] லேடி காகா,[566] கேட்டி பெர்ரி,[566] டேலர் ஸ்விஃப்ட் மற்றும் பியான்சே நோல்ஸ்.[567] போன்ற 21ஆம் நூற்றாண்டின் தொடக்க கால இசைக் கலைஞர்களும் புகழ் பெற்று இருந்தனர்.
வருவாயின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய உடைச் சந்தை ஐக்கிய அமெரிக்கா ஆகும்.[568] பணித்திறன் சார்ந்த வணிக உடைகள் தவிர்த்து அமெரிக்க புது நடைப் பாணியானது பல்திரட்டானதாகவும், முதன்மையாக இயல்பானதாகவும் உள்ளது. அமெரிக்கர்களின் வேறுபட்ட பண்பாட்டு வேர்களானவை அவர்களது உடையில் பிரதிபலிக்கின்றன. எனினும், மூடிய காலணிகள், நீலக்கால் சட்டை, டீ சட்டைகள் மற்றும் அடிப்பந்துத் தொப்பிகள் ஆகியவை அமெரிக்கப் பாணிகளின் இலச்சினைகளாக உள்ளன.[569] அதன் புது நடைப் பாணி வாரத்துடன் நியூயார்க்கானது பாரிசு, மிலன் மற்றும் இலண்டனுடன் சேர்த்து "பெரும் நான்கு" உலகளாவிய புது நடைப் பாணி தலைநகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது தொடங்கப்பட்டதிலிருந்து மன்காட்டனின் புது நடைப் பாணி மாவட்டத்துக்குப் பொதுவான அருகில் உள்ளதென்பது அமெரிக்க புது நடைப் பாணியுடன் தொடர்புடையதாக உள்ளதாக ஓர் ஆய்வு வெளிக் காட்டியது.[570]
பல வடிவமைப்பாளர்களின் நிறுவனங்கள் மன்காட்டனில் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. பதின்ம வயதுக்கு முற்பட்ட சிறார்கள் போன்றோருக்கு என்று இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. உலகின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் புது நடைப் பாணி வாரங்களில் ஒன்றாக நியூயார்க்கு புது நடைப் பாணி வாரம் உள்ளது. இது ஓராண்டில் இரு முறை நடைபெறுகிறது.[571] அதே நேரத்தில், மன்காட்டனில் நடக்கும் வருடாந்திர மெட் கலா விழாவானது புது நடைப் பாணி உலகின் "மிகப் பெரிய இரவு" என்று பொதுவாக அறியப்படுகிறது.[572][573]
ஐக்கிய அமெரிக்கத் திரைத் துறையானது ஓர் உலகளாவிய தாக்கம் மற்றும் புகழைக் கொண்டுள்ளது. நாட்டின் இரண்டாவது மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமான லாஸ் ஏஞ்சலசின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டமான ஹாலிவுட் அமெரிக்கத் திரைத்துறையின் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது.[574][575][576] உலகின் மிக வணிக ரீதியாக வெற்றி பெற்ற மற்றும் மிக அதிக திரைப்படச் சீட்டுக்களை விற்ற திரைப்படங்களின் முதன்மையான ஆதாரமாக ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய திரைப்பட நிறுவனங்கள் திகழ்கின்றன.[577][578] 21ஆம் நூற்றாண்டில் அதிகரித்து வந்த எண்ணிக்கையிலான திரைப்படங்கள் இங்கு தயாரிக்கப்படுவதில்லை என்றாலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கத் திரைத் துறையானது பெரும்பாலும் ஹாலிவுட்டை அடிப்படையாகக் கொண்டும், அதைச் சுற்றியும் அமைந்துள்ளது. உலகமயமாக்கலின் அழுத்தத்திற்குத் திரைத்துறை நிறுவனங்களும் உள்ளாகியுள்ளன.[579] பிரபலமாக ஆஸ்கர் விருதுகள் என்று அழைக்கப்படும் அகாதமி விருது விழாக்களானவை 1929ஆம் ஆண்டிலிருந்து அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன.[580] சனவரி 1944இலிருந்து ஆண்டு தோறும் கோல்டன் குளோப் விருது விழாக்களானவை நடத்தப்படுகின்றன.[581]
"ஹாலிவுட்டின் பொற்காலம்" என்று பொதுவாகக் குறிப்பிடப்படும் காலத்தில் அமெரிக்கத் திரைத் துறையானது உச்சத்தை அடைந்தது. இக்காலமானது தொடக்க கால பேசும் படங்களின் காலம் முதல் 1960களின் தொடக்கம் வரையிலான காலமாகும்.[582] ஜான் வெயின் மற்றும் மர்லின் மன்றோ போன்ற திரைப்பட நடிகர், நடிகையர் முக்கியமான திரைத்துறை நபர்களாக உருவாயினர்.[583][584] 1970களில் "புதிய ஹாலிவுட்" அல்லது "ஹாலிவுட் மறுமலர்ச்சிக்"[585] காலமானது அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலம் குறித்த பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மெய்மையியத் திரைப்படங்களால் தாக்கம் பெற்ற உறுதியான திரைப்படங்களால் வரையறுக்கப்பட்டது.[586] 21ஆம் நூற்றாண்டானது அமெரிக்க இணையவழித் திரைப்படங்களின் வளர்ச்சியைக் குறித்தது. பாரம்பரியத் திரையரங்குத் திரைப்படங்களுக்குப் போட்டியாக இவை உருவாயின.[587][588]
வான்கோழி, வற்றாளைகள், மக்காச்சோளம், சுரை மற்றும் பூசணி வகை, மற்றும் மேப்பிள் சிரப் போன்ற உணவுகளுக்குப் பூர்வீக அமெரிக்கர்களால் தொடக்க கால குடியேறிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில் மிகவும் நீண்ட காலத்திற்கு நீடித்துள்ள மற்றும் வியாபித்துள்ள எடுத்துக்காட்டுகளாக சுக்கோத்தசு என்று அழைக்கப்படும் பூர்வீக உணவின் வேறுபட்ட வகைகள் உள்ளன. தொடக்க கால குடியேறிகள் மற்றும் பிந்தைய புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோர் இத்தகைய உணவுகளைத் தங்களுக்கு மிகவும் தெரிந்த கோதுமை மாவு,[589] மாட்டுக் கறி மற்றும் பாலுடன் சேர்த்து ஒரு தனித்துவமான அமெரிக்க சமையல் பாணியை உருவாக்கினர்.[590][591] பூசணி, மக்காச்சோளம், உருளைக் கிழங்கு போன்ற புதிய உலகப் பயிர்கள் மற்றும் வான்கோழி ஆகியவை முதன்மையான உணவுகளாக பயிர் விளைச்சலுக்காக இறைவனுக்கு நன்றியறிதல் நாளின் போது ஒரு பகிர்ந்து கொள்ளப்பட்ட தேசிய உணவுப் பட்டியலின் ஒரு பங்காக உள்ளன. நன்றியறிதல் நாளின் போது பல அமெரிக்கர்கள் இந்நாளைக் கொண்டாடுவதற்குப் பாரம்பரிய உணவுகளைத் தயாரிக்கவோ அல்லது வாங்கவோ செய்கின்றனர்.[592]
முக்கியமான அமெரிக்க உணவுகளான ஆப்பிள் பை, வறுக்கப்பட்ட கோழிக் கறி, இனியம், பிரெஞ்சுப் பொரியல், மக்கரோனி மற்றும் பாலாடை, குளிர்களி, பர்கர்கள், காரச்சோமாரி, மற்றும் அமெரிக்க பீட்சா போன்றவை பல்வேறு புலம் பெயர்ந்த குழுக்களின் உணவுகளிலிருந்து தருவிக்கப்பட்டவை ஆகும்.[593][594][595][596] புரிட்டோக்கள் மற்றும் தாக்கோ போன்ற மெக்சிகோ உணவுகளானவை மெக்சிகோவிடமிருந்து பின்னர் இணைக்கப்பட்ட பகுதிகளில் இருந்ததன் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் முன்னரே இருந்தவையாகும். சீன உணவுகளைப் பின்பற்றுதல், மேலும் இத்தாலிய ஆதாரங்களிலிருந்து சுதந்திரமாகப் பின்பற்றப்பட்ட பாஸ்தா உணவுகள் ஆகிய அனைத்துமே பரவலாக உண்ணப்படுகின்றன.[597] அமெரிக்க வாலுவர்கள் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் சமூகம் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். 1946இல் கேத்தரின் ஏஞ்சல் மற்றும் பிரான்செசு ரோத் ஆகியோரால் அமெரிக்காவின் சமையல் கல்வி நிலையமானது நிறுவப்பட்டது. இது ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க சமையல் பள்ளியாக உருவானது. தங்களது வெற்றிகரமான சமையல் வாழ்வுக்கு முன்னர் மிகத் திறமையான அமெரிக்க வாலுவர்கள் பலர் இங்கே படித்துள்ளனர்.[598][599]
2020இல் ஐக்கிய அமெரிக்க உணவகத் தொழில் துறையானது விற்பனையில் ஐஅ$899 பில்லியன் (₹64,29,288.4 கோடி)களை அடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[600][601] உணவகத் துறையில் 1.50 கோடிக்கும் மேற்பட்ட பணியாட்கள் பணியாற்றுகின்றனர். நேரடியாக நாட்டின் பணியாளர் எண்ணிக்கையில் 10%ஐ இது பிரதிநிதித்துவப்படுத்துகிறது.[600] நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய தனியார் வேலை வழங்கும் துறையாகவும், ஒட்டு மொத்தமாக மூன்றாவது மிகப் பெரிய வேலை வழங்கும் துறையாகவும் இது உள்ளது.[602][603] மிச்சலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற 220க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு ஐக்கிய அமெரிக்க தாயகமாக உள்ளது. இதில் 70 உணவகங்கள் நியூயார்க்கு நகரத்தில் மட்டுமே உள்ளன.[604] 1500களிலிருந்து தற்போதைய ஐக்கிய அமெரிக்காவில் வைன் மதுவானது தயாரிக்கப்பட்டுள்ளது. 1628இல் தற்போதைய நியூ மெக்சிகோ என்று அறியப்படும் பகுதியில் முதல் பெருமளவிலான வைன் மதுபான உற்பத்தியானது தொடங்கப்பட்டது.[605][606][607] நவீன ஐக்கிய அமெரிக்காவில் உற்பத்தியானது அனைத்து 50 மாநிலங்களிலும் செய்யப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் ஒட்டு மொத்த வைன் உற்பத்தியில் 85%ஐ கலிஃபோர்னியா செய்கிறது. 11,00,000 ஏக்கர்களுக்கும் (4,500 சதுர கிலோ மீட்டர்கள்) மேலான நிலமானது திராட்சைக் கொடிகளால் பயிரிடப்பட்டுள்ளது. இத்தாலி, எசுப்பானியா மற்றும் பிரான்சுக்கு அடுத்து உலகின் நான்காவது மிகப் பெரிய வைன் மதுபான உற்பத்தி செய்யும் நாடு ஐக்கிய அமெரிக்கா ஆகும்.[608][609]
அமெரிக்க துரித உணவுத் தொழில் துறையானது நாட்டின் சிற்றுந்துப் பண்பாட்டின் நெடுகில் வளர்ச்சியடைந்தன.[610] அமெரிக்க உணவகங்களானவை 1920களில் சிற்றுந்தில் இருந்த படியே உணவு உண்ணும் முறையைத் தொடங்கின. 1940 வாக்கில் சிற்றுந்தில் இருந்து கீழிறங்காமலேயே சேவை பெறக் கூடிய முறையால் இது இடம் மாற்றப்படத் தொடங்கியது.[611][612] மெக்டொனால்ட்சு, கே எப் சி, டங்கிங் டோனட்ஸ் மற்றும் பல பிற போன்ற அமெரிக்கத் துரித உணவகக் குழுமங்களானவை உலகம் முழுவதும் ஏராளமான உணவகங்களைக் கொண்டுள்ளன.[613]
ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பிரபலமான பார்வையாளர் விளையாட்டுகளாக அமெரிக்கக் கால்பந்து, கூடைப்பந்து, பேஸ் பால், கால்பந்து மற்றும் பனி ஆக்கி ஆகியவை உள்ளன.[614] பேஸ் பால் மற்றும் அமெரிக்கக் கால்பந்து போன்ற பெரும்பாலான முக்கியமான ஐக்கிய அமெரிக்க விளையாட்டுகளானவை ஐரோப்பியப் பழக்கவழக்கங்களில் இருந்து பரிணாமம் அடைந்துள்ள அதே நேரத்தில் கூடைப்பந்து, கைப்பந்து, பலகைச் சறுக்கு விளையாட்டு மற்றும் பனிச்சறுக்கு ஆகியவை அமெரிக்க உருவாக்கங்கள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளன.[615] லக்ரோஸ்ஸே மற்றும் அலைச்சறுக்கு ஆகியவை பூர்வீக அமெரிக்க மற்றும் பூர்வீக அவாய் பழக்க வழக்கங்களில் இருந்து உருவானவையாகும். இவை ஐரோப்பியத் தொடர்பு ஏற்படுத்தவதற்கு முன்னரே உருவானவையாகும்.[616] ஐக்கிய அமெரிக்காவில் தொழில் முறை விளையாட்டுகளுக்கான சந்தையானது சூலை 2013 நிலவரப் படி தோராயமாக ஐஅ$69 பில்லியன் (₹4,93,460.4 கோடி)கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய அனைத்தையும் சேர்த்த அளவை விட இது தோராயமாக 50% அதிகமாகும்.[617]
பல அளவீடுகளின் படி அமெரிக்கக் கால்பந்தானது ஐக்கிய அமெரிக்காவில் மிகப் பிரபலமான பார்வையாளர் விளையாட்டாக உள்ளது.[618] உலகில் எந்தவொரு விளையாட்டுத் தொடர்களிலும் மிக அதிக சராசரிப் பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கொண்டதாக என்.எஃப்.எல். உள்ளது. சூப்பர் போலானது உலகளவில் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்படுகிறது.[619] எனினும், 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து பேஸ் பால் ஐக்கிய அமெரிக்காவின் "தேசிய விளையாட்டாகக்" கருதப்படுகிறது. அமெரிக்கக் கால்பந்துக்குப் பிறகு அடுத்த நான்கு மிகப் பிரபலமான தொழில் துறைக் குழு விளையாட்டுக்களாக கூடைப்பந்து, பேஸ் பால், கால்பந்து மற்றும் பனி ஆக்கி ஆகியவை உள்ளன. இவற்றின் விளையாட்டுத் தொடர்களாக முறையே என். பி. ஏ., பெரும் கூட்டிணைவு அடிப்பந்தாட்டம், மேஜர் லீக் கால்பந்து, மற்றும் தேசிய ஆக்கி லீக் ஆகியவை உள்ளன. ஐக்கிய அமெரிக்காவில் மிக அதிகமாகப் பார்க்கப்படும் தனி நபர் விளையாட்டுகளாக கோல்ஃப் மற்றும் தானுந்து விளையாட்டுக்கள் உள்ளன. குறிப்பாக, நாஸ்கார் மற்றும் இன்டிகார் ஆகியவை உள்ளன.[620][621]
கல்லூரி அளவில் உறுப்பினர் அமைப்புகளுக்கான ஊதியங்களானவை ஆண்டுக்கு ஐஅ$1 பில்லியன் (₹7,151.6 கோடி)யைத் தாண்டுகின்றன.[622] கல்லூரிக் கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. என்சிஏஏ மார்ச் மேட்னஸ் போட்டி மற்றும் கல்லூரிக் கால்பந்துத் தொடர் ஆகியவை மிக அதிகமாகப் பார்க்கப்படும் தேசிய விளையாட்டு விழாக்களில் சிலவாக உள்ளன.[623] ஐக்கிய அமெரிக்காவில் கல்லூரிகளுக்கு இடையிலான நிலை விளையாட்டுக்களானவை தொழில்முறை விளையாட்டுகளுக்கான வீரர்களைத் தயார் செய்யும் ஓர் அமைப்பாக உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து பிற நாடுகளிலும் உள்ள பழக்க வழக்கங்களில் இருந்து இது பெருமளவுக்கு வேறுபடுகிறது. அங்கே அரசு மற்றும் தனியார் நிதியுதவி பெறும் விளையாட்டு அமைப்புகளானவை இப்பணியைச் செய்கின்றன.[624]
எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்டுள்ளன. செயின்ட் லூயிஸில் நடத்தப்பட்ட 1904 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளானவை ஐரோப்பாவுக்கு வெளியில் நடத்தப்பட்ட முதல் ஒலிம்பிக் விளையாட்டுகளாக இருந்தன.[625] 2028 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை லாஸ் ஏஞ்சலஸ் நடத்தும் போது ஒலிம்பிக் போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது முறையாக நடத்தப்படுவதாக அமையும். ஐக்கிய அமெரிக்கத் தடகள வீரர்கள் ஒட்டு மொத்தமாக 2,968 பதக்கங்களை (1,179 தங்கப் பதக்கங்கள்) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வென்றுள்ளனர். பிற எந்தவொரு நாட்டையும் விட இது மிக அதிகம் ஆகும்.[626][627][628]
சர்வதேச தொழில் முறைப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க ஆண்கள் தேசியக் கால்பந்து அணியானது 11 உலகக் கோப்பைகளுக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில், பெண்கள் தேசிய அணியானது ஃபிஃபா பெண்கள் உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் கால்பந்துத் தொடர் ஆகிய இரு தொடர்களையும் முறையே நான்கு, நான்கு முறை வென்றுள்ளது.[629] 1994 ஃபிஃபா உலகக் கோப்பையை ஐக்கிய அமெரிக்கா நடத்தியது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து நடத்துகிறது.[630] 1999 ஃபிஃபா பெண்கள் உலக கோப்பையும் கூட ஐக்கிய அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அதன் இறுதிப் போட்டியானது 90,185 பேரால் பார்க்கப்பட்டது. அந்நேரத்தில் மிக அதிகப் பார்வையாளர்கள் வருகை புரிந்த பெண்கள் விளையாட்டுப் போட்டிக்கான உலக சாதனையை இது ஏற்படுத்தியது.[631]
Seamless Wikipedia browsing. On steroids.