From Wikipedia, the free encyclopedia
1929 வால் வீதி வீழ்ச்சி (Wall Street Crash of 1929, கருப்பு செவ்வாய்க்கிழமை என்றும் பெரும் வீழ்ச்சி என்றும் 1929 அமெரிக்கப் பங்குச்சந்தை வீழ்ச்சி என்றும் அறியப்படும்) 1929 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தை சந்தித்த மிக அழிவுகரமான வீழ்ச்சிகளின் ஒன்றாகும். இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் முழுமையான மதிப்பீடு மற்றும் கால அளவைக் கொண்டே இது பெரும் வீழ்ச்சி என அறியப்படுகிறது.[1] இந்த வீழ்ச்சி அனைத்து மேற்கத்திய தொழில்மயமான நாடுகளையும் பாதித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியின் துவக்கமாக அமைந்தது.[2] அமெரிக்காவில் இந்த பங்குச்சந்தை வீழ்ச்சியின் தாக்கம் 1941 இறுதியில் இரண்டாம் உலக போருக்கு அமெரிக்க அணிதிரட்டல் தொடங்கிய வரை முடியவில்லை.
நியூயார்க் நகரத்தில் அமெரிக்கப் பங்குச் சந்தையும் பிற நிதி நிறுவனங்களும் சந்தை முகவர்களும் இடம் பெற்றிருந்த சாலை வால் வீதி ஆகும். எனவேதான் இந்த பங்குச் சந்தை வீழ்ச்சி 'வால்வீதி வீழ்ச்சி' எனப்படுகிறது.
1929 வால்வீதி வீழ்ச்சிக்கு முந்தைய பத்தாண்டில் பணப்புழக்கம் மிக கூடுதலாக இருந்தது[3]. அந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் செல்வச் செழிப்பில் திளைத்தனர். வீழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் பங்கு வர்த்தகம் உயர்ந்து கொண்டே இருக்கும் எனக் கருதி வந்தனர். பங்குச் சந்தை கடந்த ஆறு ஆண்டுகளில் ஐந்து மடங்கு உயர்ந்த நிலையை எட்டி செப்டம்பர் 3, 1929 அன்று டௌ ஜோன்ஸ் தொழில்துறை குறியீடு 381.17 மதிப்பை எட்டியது.[4] இவ்வளவு நாட்களாக நடந்த ஏற்றம், அக்டோபர் 24, கருப்பு செவ்வாயன்று மிகுந்த ஆட்டம் கண்டது.
அன்று நியூயார்க் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை துவக்கத்திலேயே வெகுவாக (11%) வீழ்ந்தது. இதனால் கலக்கமடைந்த சில வால்வீதி வங்கிகளைச் சார்ந்த நிர்வாகிகள் இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காகக் கூடினர்.[5] மோர்கன் வங்கியின் தலைவர் தாமஸ் டபிள்யூ லாமோண்ட், சேஸ் தேசிய வங்கி தலைவர் ஆல்பர்ட் விக்கின், மற்றும் நியூயார்க் தேசிய சிட்டி வங்கி தலைவர் சார்லஸ் ஈ மிட்செல் ஆகியோரைக் கொண்ட குழு பங்குச் சந்தையின் துணை தலைவராக ரிச்சர்ட் விட்னியைத் தேர்வு செய்து தங்கள் சார்பில் செயல்படச் செய்தது.
வங்கிகளின் பின்பலத்துடன் விட்னி யூஎஸ் ஸ்டீல் நிறுவனத்தின் பங்கை சந்தை விலையை விட பலமடங்கு கூடுதலாக விலையில் பெரும் எண்ணிக்கையில் வாங்க முன்வந்தார். பங்குச் சந்தை வணிகர்கள் முன்னிலையில் மேலும் இதே போன்ற மதிப்புமிக்க பங்குகளை வாங்க முன் மொழிந்தார். முன்னதாக 1907ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலக்கத்தின்போது எடுத்த தீர்வை ஒத்ததாக இது இருந்தது. இதனால் வீழ்ச்சி சற்றே நின்று பங்குச் சந்தைக் குறியீடு மீண்டு 6.38 புள்ளிகள் வீழ்ச்சியுடன் அன்றைய நாள் முடிந்தது. ஆனால் 1907 போன்று இம்முயற்சி நிலைத்த தீர்வை அளிக்கவில்லை.
இந்த செயல் பல நாளிதழ்களால் சுட்டிக்காட்டபட்டதால் பலரும் பங்குச் சந்தையை விட்டு வெளியேற முற்பட்டனர். அக்டோபர் 28 அன்று[6] டௌ ஜோன்ஸ் 38 புள்ளிகள் (13%) விழுந்தது. அடுத்த நாள். கருப்பு செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 29, 1929 அன்று 16 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு டௌ மேலும் 30 புள்ளிகளை (12%) இழந்தது.[7][8][9] அன்றைய நாளில் பரிமாற்றமடைந்த பங்குகளின் எண்ணிக்கை இன்று வரை எட்டப்படாத சாதனையாக உள்ளது.[8] ராக்பெல்லர் போன்ற சில செல்வந்தர்கள் பெரும் தொகுதிகளில் பங்குகளை வாங்கி பங்குச்சந்தையில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த முயன்றனர். இருப்பினும் பொதுமக்களிடையே இது தொற்றிக்கொள்ளவில்லை. இந்த இரு நாட்களில் மட்டும் சந்தை 30 பில்லியன் டாலர் மதிப்பிழந்தது.[10]
டௌ ஜோன்ஸ் தொழில்துறை சராசரி - கருப்பு திங்களிலும் கருப்பு செவ்வாயிலும்[11]
நாள் | மாற்றம் | % மாற்றம் | முடிவு |
---|---|---|---|
அக்டோபர் 28, 1929 | −38.33 | −12.82 | 260.64 |
அக்டோபர் 29, 1929 | −30.57 | −11.73 | 230.07 |
அக்டோபர் 30 அன்று ஒருநாள் திருத்தமாக டௌ 28.4 புள்ளிகள் ஏறி 258.47இல் நின்றது. ஆனால் சந்தை தொடர்ந்து இறங்குமுகமாகவே இருந்து நவம்பர் 13, 1929 அன்று 198.60 அடைந்தது. பின்னர் மெதுவாக வளர்ந்து ஏப்ரல் 17,1930இல் 294.07 எட்டியது. ஆனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1931 முதல் மீண்டும் சரியத் தொடங்கி சூலை 8, 1932 அன்று இருபதாம் நூற்றாண்டிலேயே மிகவும் குறைந்த நிலையான 41.22 புள்ளிகளை எட்டியது. இங்கிருந்து டௌ 1930களில் மெல்ல மேலே ஏறத் தொடங்கியது; ஆனால் செப்டம்பர் 3,1929இல் நிலவிய டௌ புள்ளிகளை நவம்பர் 23, 1954இல் தான் அடைய முடிந்தது.[12][13]
Seamless Wikipedia browsing. On steroids.