Remove ads
அமெரிக்க கவிஞர் (1830-1886) From Wikipedia, the free encyclopedia
எமிலி டிக்கின்சன் (Emily Dickinson, டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார்.
டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்காலகட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறிப் புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன.
டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
எமிலி டிக்கின்சன் 1830 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 10ஆம் தேதி மாசசூசெட்ஸ், அமெர்ஸ்ட்டிலிருந்த குடும்பத்தின் பண்ணை வீட்டில் பிறந்தார். அவரது குடும்பம் மிக வசதியான குடும்பமாக இல்லாவிட்டாலும் முக்கியமான குடும்பமாகத் திகழ்ந்தது.[2] இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு, எமிலியின் தந்தை வழி முன்னோர்கள் புதிய உலகம் என்றழைக்கப்பட்ட - ப்யுரிட்டான், சமயவாதிகள் பெரிய புலம்பெயர்வின் போது புது உலகத்திற்கு வந்திருந்தார்கள். புலம்பெயர்ந்த இடத்தில் அவர்கள் செழிப்படைந்தார்கள்.[3] எமிலி டிக்கின்சனின் தாய் வழிப் பாட்டனார், சாமுவெல் டிக்கின்சன் தனிமனிதனாக ஆமெர்ஸ்ட் கல்லூரியைத் துவக்கினார்.[4] 1813-ல், நகரத்தின் முக்கிய வீதியில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டினார். அந்த நுாற்றாண்டின் பெரும்பகுதியில் அந்த மாளிகை டிக்கின்சனின் குடும்ப வாழ்க்கையில் பெரும்பங்காற்றியது. சாமுவெல் டிக்கின்சனின் மூத்த மகன், எட்வர்ட், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் ஆமெர்ஸ்ட் கல்லுாரியின் பொருளாளராக இருந்தார். யுனைட்டட் ஸ்டேட்ஸ் காங்கிரசின் ஹாம்ஃப்ஷயர் மாகாணத்திலிருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1828, மே 6-ல் அவர் மான்சன் நகரத்தைச் சேர்ந்த எமிலி நார்க்ராஸ் என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்:
எல்லா வகையிலும், எமிலி நல்ல பழக்கவழக்கமுள்ள சிறுமியாகத் திகழ்ந்தாள். மான்சன்னிற்குச் சென்றிருந்தபோது, எமிலியின் அத்தை லவினியா இரண்டு வயதுச் சிறுமி எமிலியைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "போதுமென்ற குணத்துடன் மிக நல்ல குழந்தை-சேட்டை செய்வதேயில்லை." [6] எமிலியின் அத்தை எமிலியிடமிருந்த இசை ஆர்வத்தையும் குறிப்பாக பியானோ வாசிப்பதில் அவளுக்கிருந்த திறமையையும் கண்டறிந்தார்.[7]
டிக்கின்ஸன் பிளசன்ட் தெருவிலிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு ஆரம்பப்பள்ளியில் கல்வி கற்றார்.[8] அவருடைய கல்வி விக்டோரியா காலத்துப்பெண்ணிற்கு மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தது.[9] அவளுடைய அப்பா தனது குழந்தைகள் நன்கு கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால், வியாபார விசயமாக வெளியூர் சென்றிருந்தாலும் அவர்கள் வளர்ச்சியைக் கவனித்துவந்தார். எமிலி ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபொழுது, அவர் தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், "பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று, படிக்க வேண்டும். நான் வீட்டிற்கு வரும்பொழுது, நீங்கள் என்னவெல்லாம் புதிதாகக் கற்றீர்கள் என்பதை எனக்குச் சொல்லவேண்டும்."- என்று எழுதியிருந்தார்.[10] தன் தந்தையைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் எமிலி அவரை அன்பானவராகச் சித்தரித்துள்ள அதே சமயத்தில் அவரது தாய் கண்டிப்பானவராகவும் தனிமை விரும்பியாகவும் இருந்துள்ளார் என்பது எமிலியின் கடிதங்கள் மூலம் அறிகிறோம். தனது நம்பிக்கைக்குரியவருக்கு எமிலி எழுதிய கடிதத்தில்,"எனக்குத் துன்பம் நேருகிறபொழுதெல்லாம் நான் ஒரு குழந்தையாக என் வீட்டிற்குள் என் சகோதரன் ஆஸ்டினைத் தேடி ஓடி வருவேன். அவன் எனக்கு அச்சந்தருகிற ஒரு தாயாகத் திகழ்ந்தான். ஆனாலும், வேறு யாரையும்விட எனக்கு அவனைப்பிடிக்கும்." என்று எழுதியிருந்தார்.[11]
1840, செப்டம்பர் 7ஆம் தேதி, எமிலியும் அவளது சகோதரி லவினியாவும் ஆமெஸ்ட் அகாடமியில் கல்வி கற்க ஆரம்பித்தனர். அது ஒரு முன்னால் ஆண்கள் பள்ளி. எமிலி சேருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கு மாணவிகளுக்காகவும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.[8] கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான், அவளது தந்தை வடக்கு பிளஸன்ட் தெருவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தார்.[12] எமிலியின் சகோதரன் ஆஸ்டின் பிற்காலத்தில் இந்த மிகப்பெரிய வீட்டை மாளிகை என்று வர்ணித்தான். அவர்களது பெற்றோர் இல்லாத சமயங்களில் எமிலியும் , ஆஸ்டினும் தங்களை அம்மாளிகையின் முதலாளிகளாகப் பாவித்துக்கொண்டனராம்.[13] ஆமெஸட்டின் இடுகாட்டை நோக்கியிருந்த அந்த வீட்டை "மரங்களில்லாத தனித்துவமான வீடு" என்று ஒரு உள்நாட்டு அமைச்சர் வர்ணிக்கிறார்.[12]
They shut me up in Prose – Still! Could themself have peeped – |
Emily Dickinson, c. 1862[14] |
டிக்கின்சன் அகாடமியில் ஏழு வருடங்கள் இருந்தார். அவர், ஆங்கிலம் மற்றும் செம்மொழி இலக்கியம், இலத்தீன், தாவரவியல், மண்ணியல், வரலாறு, "உளவியல் தத்துவம்," மற்றும் எண் கணிதம் ஆகியவற்றில் பாடம் பயின்றார்.[15] அப்பள்ளியின் அப்போதைய முதல்வர், டேனியல் டகார்ட் ஃபிஸ்கே ,"டிக்கின்சன் அறிவுக்கூர்மையானவள்; மிக அருமையான மாணவி; உயர்வான ஒழுக்கமுள்ளவள்; பள்ளியின் எல்லாக் கடமைகளிலும் உண்மையானவள்," என்று எமிலியைப்பற்றிப் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார்.[16] உடல் நலக்குறைபாட்டினால் அவள் சில காலம் பள்ளிக்கு வராமலிருந்தாலும் -(1845-1846-ல் பதினோரு வாரங்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றாள்)[17]—அவள் விடாமுயற்சியுடன் கல்வியை விரும்பிக் கற்றாள். தன் தோழிக்கு எழுதிய கடிதத்தில் " மிக நல்ல பள்ளி" என்று அகாடமியைப்பற்றி எழுதியிருந்தாள்.[18] டிக்கின்சன் இளம் பிராயத்திலிருந்தே சாவின் ஆழமான அச்சுறுத்தலுக்கு ஆளானாள்- அதிலும் குறிப்பாக, அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்தபோது. 1844, ஏப்ரல் மாதத்தில் அவளுக்கு மிக நெருக்கமான தோழியாகத் திகழ்ந்த அத்தை மகள் சோஃபியா ஹாலன்ட் டைஃபஸ்நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, எமிலி மனமுடைந்து போனாள்.[19] இரண்டாண்டுகள் கழித்து இதைப்பற்றி நினைவு கூர்கையில், "அவள் இறந்து போவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருந்ததற்குப் பதிலாக நானும் இறந்திருக்கலாம் என்று தோன்றியது." என்று கூறினாள்.[20] அவள் மிகவும் துக்ககரமாகக் காணப்பட்டதால் அவளுடைய பெற்றோர் அவளை பாஸ்டன்-லிருந்த குடும்பத்துடன் தங்கியிருக்க அனுப்பி வைத்தனர்.[18] அவள் பழைய நிலைமைக்குத் திரும்பியவுடனே ஆமெஸ்ட் அகாடமிக்குத் தன் கல்வியைத் தொடரத் திரும்பி வந்தாள்.[21] இச்சமயத்தில்தான், அவள் தன் வாழ்நாள் முழுவதும் வரப்போகிற நண்பர்களை முதன் முதலாகச் சந்தித்தாள்.அவர்கள் அபியா ரூட் பரணிடப்பட்டது 2014-03-07 at the வந்தவழி இயந்திரம், அபி வுட் பரணிடப்பட்டது 2013-12-28 at the வந்தவழி இயந்திரம், ஜேன் ஹம்ஃப்ரி, மற்றும் சுசன் ஹன்டிங்டன் கில்பர்ட் பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம்(சுசன் ஹன்டிங்டன் பின்னாளில் எமிலியின் அண்ணன் ஆஸ்டினை மணந்தவள்) ஆவார். 1845-ல், ஆமெஸ்டில், ஒரு சமயப் புத்தெழுச்சி நடைபெற்றது. அது டிக்கின்சனின் தோழர்களுக்கிடையே 46 உண்மைக்கான பாவமன்னிப்பு-க்கு வழிவகுத்தது.[22] அடுத்த வருடம் டிக்கின்சன் தன் தோழிக்கு இவ்வாறு எழுதினாள்: " இவ்வளவு குறுகிய காலத்தில் நான் எனது இரட்சகனைக் கண்டுணர்ந்ததால் ஏற்பட்ட அமைதியையும் பேரானந்தத்தையும் இதற்கு முன் நான் அனுபவித்ததில்லை."[23] மேலும் அவள் கூறுகையில்,"கடவுளிடம் தனிமையில் தொடர்பு கொண்டு அவர் எனது பிரார்த்தனைகளைக் கவனிக்கிறார் என்பதை உணர்வது மிகப் பெரிய ஆனந்தமாகும்." [23] இந்த அனுபவம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை: டிக்கின்சன் ஒரு பொழுதும் நேரடியாகப் பாவமன்னிப்புக் கோரியதில்லை. சில வருடங்கள் மட்டும் அவள் இடைவிடாமல் இறைக் கூட்டங்களில் பங்கேற்றாள்.[24] ஏறத்தாழ 1852-ல், சர்ச்சுக்குச் செல்லும் வழக்கம் முடிவுக்கு வந்தபின், அவள் ஒரு பாடலை இவ்வாறு துவக்கினாள்: "சிலர் தங்கள் ஓய்வு நாளில் சர்ச்சுக்குச் செல்கிறார்கள் - / நான் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்."[25]
அகாடமியின் இறுதியாண்டு வாழ்க்கையின்போது, எமிலி அகாடமியின் புதிய இளமையான புகழ்பெற்ற முதல்வர் லியோனார்ட் ஹம்ஃப்ரியின் நட்பிற்குப் பாத்திரமானாள். 1847, ஆகஸ்ட் 10-ல் அகாடமியின் இறுதிப்பருவத்தை முடித்தவுடன் டிக்கின்சன் மேரி லயான்-னின் மவுண்ட் ஹோல்யோக் பெண்கள் இறைநுால் பயிலகத்தில் (பின்னாளில் மவுண்ட் ஹோல்யோக் கல்லுாரியாக உருவெடுத்தது) சேர்ந்து பயின்றாள். அது ஆமெஸ்ட்டிலிருந்து பத்து மைல் (16 கிலோமீட்டர்) துாரத்தில் தெற்கு ஹாட்லி-யில் இருந்தது.[26] அவள் அந்த இறைநுால் பயிலகத்தில் பத்து மாதங்கள் மட்டுமே பயின்றாள். ஹோல்யோக்கிலிருந்த பெண்களை அவளுக்குப்பிடித்திருந்த போதிலும் நீண்ட தொடர்புடைய நட்பு அங்கு அவளுக்குக் கிட்டவில்லை.[27] ஹோல்யோக்கில் எமிலி குறுகிய காலம் மட்டும் தங்கியிருந்ததற்குச் சில காரணங்கள் உள்ளன: அவள் மோசமான உடல்நிலையுடன் இருந்தாள்; அவள் தந்தை அவள் வீட்டிலிருப்பதை விரும்பினார்; பள்ளியிலிருந்த மதப்பிரச்சாரப்போக்கை எதிர்த்தாள்; மிகவும் கட்டுப்பாட்டு மனப்பாங்குடன் இருந்த ஆசிரியர்களை வெறுத்தாள்; அத்துடன் அவளுக்கு வீட்டு நினைப்பு வாட்டியெடுத்தது.[28] என்ன காரணமாக இருந்தபோதிலும் அவளுடைய அண்ணன் ஆஸ்ட்டின் 1848, மார்ச் 25-ஆம் தேதி "எல்லா நிகழ்ச்சியிலும் அவள் வீட்டில் இருக்கவேண்டும்" என்பதற்காக அவளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்தான்.[29] ஆமெஸ்ட்டிற்கு வந்தபின், டிக்கின்சன் வீட்டுவேலைகளில் தன் பொழுதைக் கழித்தாள்.[30] அவள் தன் குடும்பத்தினருக்காகச் சமைத்தாள். முளைவிட்டு வளரத்துவங்கியிருந்த அந்தக் கல்லுாரி நகரத்தின் நிகழ்ச்சிகளிலும் செயல்பாடுகளிலும் பங்கேற்று மகிழ்ந்தாள்.[31]
எமிலிக்கு எட்டு வயதாக இருக்கும்பொழுது, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் நியுட்டன் என்ற வழக்குரைஞர் டிக்கின்சன் குடும்பத்தினருக்கு நண்பரானார். நியுட்டன் இறந்தபிறகு டிக்கின்சன் எழுதிய கடிதத்தின்படி, "வோர்செஸ்டருக்குச் செல்லும் முன் அவர் எனது தந்தையுடன் இரண்டு ஆண்டு காலம் இருந்தார் – எங்கள் குடும்பத்தில் முக்கியமானவராக இருந்து தன் கல்வியைத் தொடர்ந்தார்."[32] அவர்களுக்கிடையே மிகைப்பட்ட உறவு எதுவுமில்லாவிட்டாலும், ஹம்ஃப்ரிக்குப் பிறகு வயதான ஆண்களில் இரண்டாவதாக எமிலியை ஆரம்பகாலத்தில் பாதித்த ஒரு மனிதர் நியுட்டன். அவர் ஒரு ஆசிரியராகவும், நல் ஆசானாகவும் திகழ்ந்தார்.[33]
நியுட்டன் அவளுக்கு வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்-தின் எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார்.அவர் அவளுக்கு பரிசாகத் தந்த ரால்ஃப் வால்டோ எமர்ஸன்-னின் தொகுக்கப்பட்ட பாடல்களின் முதல் பகுதி மிகச்சிறந்த விளைவை ஏற்படுத்தியது. அவள் பின்னாளில் இவ்வாறு எழுதினாள்: " என் தந்தையின் சட்ட மாணவன் எனக்குக் கற்றுத்தந்த அவருடைய பெயர் (எமர்ஸன்) ரகசிய ஊற்றைத் தொட்டுவிட்டது."[34] நியுட்டன் அவளிடம் மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தார். அவள் மேல் நம்பிக்கை கொண்டு அவளுள் இருந்த கவிஞரை அடையாளம் கண்டார். அவர் காச நோயால் செத்துக்கொண்டிருந்தபொழுது, அவர் எதிர்பார்த்த மேன்மையை அவள் அடையும் வரை அவர் வாழ விரும்புவதாக அவளுக்கு அவர் எழுதியிருந்தார்.[34] "நான் சிறுமியாக இருந்தபோது, தானே மரணத்தருவாயிலிருந்தபோதும் - மரணமில்லாமையை எனக்குக் கற்றுத்தந்த ஒரு நண்பர் - அவர் மீளவேயில்லை," -என்று 1862-ல் டிக்கின்சன் கூறியிருப்பது நியுட்டனைத்தான் என்று வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.[35]
1850-ல் டிக்கின்சன்,"இந்தக் குளிர்காலத்தில் ஆமெஸ்ட் கேளிக்கை நிறைந்ததாக புத்துணர்ச்சியுடன் உள்ளது. … ஓ! இது ஒரு மிகச்சிறந்த நகரமாகும்!" என்று ஆமெஸ்ட் பற்றி எழுதினாள்.[30] ஆனால் ஆமெஸ்ட் அகாடமியின் முதல்வர் லியோனார்ட் ஹம்ஃப்ரி "மூளையில் ஏற்பட்ட ரத்தத்தேக்கத்தால்" தனது 25-வது வயதில் இறந்தபோது எமிலியின் கரைபுரண்ட உற்சாகமெல்லாம் வடிந்து மிகுந்த சோகத்திற்குள்ளானாள்.[40] அவர் இறந்து இரண்டாண்டுகள் கழித்து, தன் தோழியான அபியா ரூட்டிடம் தன் துக்கத்தை வெளிப்படுத்தினாள்:
"... என் நண்பர்கள் சிலர் சென்றுவிட்டனர். சிலர் துாங்கிக்கொண்டிருக்கின்றனர்.-மயானத்தில் துாங்கிக்கொண்டிருக்கின்றனர்- மாலைப்பொழுது மிகவும் துக்ககரமாக உள்ளது- அது முன்பெல்லாம் நான் படிக்கும் நேரமாக இருந்தது- என் ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார், திறந்த புத்தகமும் மாணவியும் பள்ளியில் கண்ணீரை வரவழைத்துக்கொண்டு "தனியாக" உள்ளனர்; என்னால் கண்ணீரைத் துடைக்க முடியவில்லை; என்னால் முடிந்தாலும் நான் கண்ணீரைத் துடைக்கமாட்டேன், ஏனென்றால் அது என்னைவிட்டுப்பிரிந்த ஹம்ஃப்ரிக்கு நான் செய்யும் கண்ணீர் அஞ்சலியாகும்."[41]
1850களில், எமிலி, சுசன் கில்பர்ட்டுடன் மிகவும் ஆழமான பாசமான உறவுகொண்டிருந்தார். எமிலி சுசனுக்கு முந்நுாறுக்கும் அதிகமான கடிதங்களை தங்கள் நட்புக்காலத்தில் அனுப்பியிருந்தார்- அவர் வேறு எவருக்கும் இவ்வாறு கடிதம் எழுதியதில்லை என்பது உண்மை. சுசன் இந்தக் கவிதாயினிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தாள். "சுசன் மிகவும் அன்புக்குரிய தோழியாகவும், பாதிப்பவராகவும், ஆலோசகராகவும் இருந்தாள். டிக்கின்சன் பலமுறை அவள் கூறிய மாற்றங்களைத் தன் பாடல்களில் செய்திருக்கிறாள். எமிலியின் ஆக்கப்புர்வமான செய்முறைகளில் சுசன் முக்கியப்பங்காற்றினாள்." [42] நான்கு வருடக் காதலுக்குப்பின் சுசன் ஆஸ்டினை 1856 -ல் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. எட்வர்ட் டிக்கின்சன் தனக்காகவும் சுசனுக்காகவும் தி எவர்கிரீன்ஸ் என்ற வீட்டைக்கட்டினார். அது பண்ணையின் மேற்குப்புறத்தில் அமைந்திருந்தது.[43] சுசனுக்கும் எமிலிக்குமான நட்பைப்பற்றிக் கருத்துவேறுபாடு உள்ளது. ஆஸ்டினின் நீண்டகாலத் துணைவியாக இருந்த மேபல்லுாமிஸ் டோட் முதன்முதலாக கணித்ததுபோல், எமிலியின் மடல்கள் சுசனின் பாசத்தையும் ஈடுஇணையற்ற பாராட்டுதல்களையும் கோருவதாக மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம் சுசனிடம் அவளுக்கிருந்த சீற்றமிகு நட்பே காரணம்; சுசன் தனிமையிலும் கவலையிலும் ஆழ்ந்துகிடந்தபோது எமிலி தொடர்ந்து மனம் வருந்தினாள் என்று டோட் நம்புகிறார்.[44] எப்படியிருந்தாலும், சுசனின் காதல் வாழ்க்கையின் எதிரி கூறுவதுபோல் "கருணையற்ற சுசன்" என்ற கருத்தைப்பற்றி, எமிலி மிகவும் நெருக்கமாக இருந்த சுசன்- ஆஸ்டின் தம்பதியரின் குழந்தைகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.[45]
1855 வரை, டிக்கின்சன் ஆமெஸ்ட்டை விட்டு நீண்ட துாரம் சென்றதில்லை. அந்த வசந்த காலத்தில், தன் தாய் மற்றும் தன் சகோதரியின் துணையுடன் அவள் வீட்டைவிட்டு மிகவும் நீண்ட துாரம் பயணப்பட்டாள்.[46] முதலில், அவர்கள் மூன்று வாரங்கள் வாசிங்டனில் தங்கியிருந்தனர். அங்கு அவளது தந்தை காங்கிரஸில் மாசாசுசட்ஸின் பிரதிநிதியாகத் திகழ்ந்தார். பிறகு அவர்கள் குடும்பத்தினருடன் ஃபிலடெல்ஃபியா-வில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தனர். அங்கு, அவள் ஆர்ச் ஸ்ட்ரீட் பிரிசிபிடேரியன் சர்ச்சின் புகழ்பெற்ற பாதிரியாரான சார்லஸ் வாட்ஸ்வொர்த்தைச் சந்தித்தாள்.1882-ல் அவர் இறக்கும் வரை அவர்களுக்கிடையே ஆழமான நட்பிருந்தது.[47] 1855 க்குப்பிறகு அவரை அவள் இரண்டு முறைமட்டுமே பார்த்திருந்தாலும், (1862-ல் அவர் சான் ஃபிரான்சிஸ்கோ விற்குச் சென்றுவிட்டார்.), அவள் "என்னுடைய ஃபிலடெல்ஃபியா", "எனது பாதிரியார்", "உலகில் உள்ள எனது அன்புக்குரிய நண்பர்" மற்றும் "என்னுடைய சிறுமிப்பிராயத்திலிருந்து என்னை மேய்ப்பவர்" என்றெல்லாம் அவரைப் பற்றி விதவிதமாகக் குறிப்பிடுகிறாள். .[48]
1850 -ன் மத்தியில், எமிலியின் தாயார் பலவிதமான நாட்பட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டு படுத்தபடுக்கையானார். அவர் 1882-ல் காலமானார்.[50] 1858, கோடைகாலத்தின்போது எமிலி தன் தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதத்தில்,"அம்மாவையும் வீட்டையும் விட்டுவிட்டு வரமுடிந்தால் உன்னைச் சந்திக்க வந்திருப்பேன். நான் வெளியிலேயே செல்வதில்லை. அப்பா வந்தால் என்னைத் தேடுவார். ஏதாவது சிறிய வேலையை நான் மறந்துவிட்டால்கூட நான்தான் ஓடி வரவேண்டும். அம்மா எப்பொழுதும்போலவே உள்ளார். அம்மாவைப்பற்றி என்ன நம்பிக்கை வைப்பது என்று தெரியவில்லை", என்று குறிப்பிட்டுள்ளாள்.[51] அவளது அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், டிக்கின்சனின் வீட்டுப்பொறுப்புகள் அவள் தலையிலேயே விழுந்தது. அதனால் பண்ணைவீட்டிலேயே முடங்கிக்கிடக்கும்படி ஆனது. தங்கள் அம்மா படுத்த படுக்கையாக இருந்ததால், இரண்டு மகள்களில் யாராவது ஒருவர் அவரருகில் எப்பொழுதும் இருக்கவேண்டியிருந்ததாக நாற்பது வருடங்களுக்குப்பிறகு, லவினியா தெரிவித்தாள்.[51] எமிலி இந்த வேலையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டாள். "தன் மனதுக்கு ஏதுவாக வாழ்க்கையைத் தன் புத்தகங்களிலும் இயற்கையிலும் தேடி அறிந்து தொடர்ந்து அப்படியே வாழ்ந்தாள்."[51]
வெளி உலகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்ட எமிலி 1858 -ன் கோடைகாலத்தில் எழுத ஆரம்பித்தாள். அது அவளது நீடித்து நின்ற மரபுரிமைச்செல்வமாக அமைந்தது. ஏற்கனவே தான் எழுதிய பாடல்களை சரிபார்த்த அவள், அவற்றை குறையில்லாத பிரதிகளாக மாற்றி மிகவும் கவனமாக தொகுத்து அடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாக மாற்றினாள்.[52] 1858 லிருந்து 1865 வரை அவள் படைத்த நாற்பதுதிரட்டுகளில் கிட்டத்தட்ட எண்ணுாறு பாடல்கள் அடங்கியிருந்தன.[52] அவள் இறந்தபின் கூட இப்படிப்பட்ட புத்தகங்கள் இருந்தன என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது.
1850-ன் இறுதிக்காலத்தில், டிக்கின்சன் குடும்பத்தினர் ஸ்பிரிங்ஃபில்ட் ரிபப்ளிக்கன் என்ற பத்திரிக்கையின் சொந்தக்காரரும் முதன்மைப் பத்திரிக்கை ஆசிரியருமான சாமுவல் பவுல்ஸ் -ஸிடமும் அவரது மனைவி மேரியுடனும் நட்புக்கொண்டனர்.[53] பின் வந்த வருடங்களில் அவர்கள் டிக்கின்சன் குடும்பத்தினரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் எமிலி அவருக்கு மூன்று டஜன் கடிதங்களுக்கு மேலும், கிட்டத்தட்ட ஐம்பது பாடல்களும் அனுப்பியிருந்தாள்.[54] அவர்களின் நட்பு அவளது தீவிரமான எழுத்தை வெளிக்கொண்டுவந்தது. பவுல்ஸ் அவளது சில பாடல்களை தனது பத்திரிக்கையில் பிரசுரித்தார்.[55] 1858 லிருந்து 1861 வரை டிக்கின்சன் "தி மாஸ்டர் லெட்டர்ஸ்" என்றழைக்கப்படும் மூன்று கடிதங்களை எழுதியிருந்தாள். அந்த மூன்று கடிதங்களும் "மாஸ்டர்" என்று பொதுவாக குறிப்பிடப்பட்டு யாரோ ஒருவருக்கு எழுதப்பட்டிருந்தன. அவை இன்று வரை அறிஞர்களின் ஊகத்திற்கும் வாதத்திற்கும் பொருளாக அமைந்துள்ளன.[56]
1860-ன் முதல் பாதியில், அவள் பொது வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டபிறகு,[57] தனது ஆக்கப்புர்வமான எழுத்தை வெளிப்படுத்தினாள்.[58] டிக்கின்சனின் விலகலுக்கும் தனிமைக்குமான காரணத்தை விளக்குவதில் தற்கால பண்டிதர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளன. "நரம்புத் தளர்வு" நோயினால் அவள் பாதிக்கப்பட்டதாக அவள் காலத்தில் ஒரு மருத்துவர் கணித்துள்ள நிலையில்,[59] வெட்டவெளி அச்சத்தினாலும்[60] மற்றும் வலிப்பு நோயினாலும்.[61] ஏற்பட்ட இயலாமையால் அவள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இன்று சிலர் நம்புகின்றனர்.
1862, ஏப்ரல் மாதத்தில், இலக்கிய விமர்சகரும், தீவிர அடிமை ஒழிப்புக் கோட்பாடினரும் ,முன்னாள் அமைச்சருமான தாமஸ் வென்ட்வொர்த் ஹிக்கின்சன், "இளம் பங்களிப்பாளருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் தி அட்லாண்டிக் மன்த்லி -யில் முக்கியப் பத்தி ஒன்று எழுதினார். புதிய எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக ஹிக்கின்சன் தன் கட்டுரையில் "வாழ்க்கையுடன் இணைந்து உங்கள் நடையைச் செறிவுட்ட வேண்டும்" என்று ஆர்வமிக்க இளம் எழுத்தாளர்களைத் துாண்டினார்.[62] 1862ல் வாசிப்பதற்கு வாசகர்களே இல்லாதபோது பாடல்கள் எழுதுவது மிகவும் கடினமானதாக இருக்குமென்று கருதி தன் கவிதைகளை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தபோது ஹிக்கின்சனைத் தொடர்புகொள்ள முடிவெடுத்தாள் எமிலி.[63] தனக்கு நெருக்கமானவர்கள் யாராலும் சரியான இலக்கிய வழிகாட்டுதலைத் தரமுடியாததால் ஹிக்கின்சனிடம் வேண்டி இவ்வாறு கடிதம் எழுதினாள்:[64]
திரு. ஹிக்கின்சன்,
நீங்கள் அதீத வேலையில் ஈடுபட்டுள்ளீர்களா எனது பாடல் உயிருடன் உள்ளதா என்பதைச் சொல்ல?
என் மனம் தடுமாறுகிறது – என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை – கேட்பதற்கும் எனக்கு யாருமில்லை –
அது மூச்சு விட்டதாக நினைக்கிறீர்களா – மேலும் எனக்குச் சொல்ல நேரமிருப்பின், நான் மிகவும் நன்றியுடையவளாக இருப்பேன் –
நான் தவறு இழைத்திருந்தால் – நீங்கள் தைரியமாக என்னிடம் சொல்லலாம் – அது எனக்கு மிகுந்த நேர்மைமிக்க மரியாதையைத் தரும் – தங்கள் கவனத்திற்கு –
எனது பெயரை இணைத்துள்ளேன் – தங்களைக் கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் தயவுசெய்து – ஐயா – உண்மையைக் கூறுவீர்களா?
அதாவது தாங்கள் என்னை ஏமாற்ற மாட்டேனென்று – இதைக் கேட்கத் தேவையில்லை – ஏனென்றால் மரியாதைக்கு மரியாதை [sic] ஒன்றே ஈடாகும் –
இந்த குறிப்புகள் நிறைந்த, பெரும்பாலும் நாடகத்தனமான கடிதம் கையெழுத்தின்றி இருந்தது. ஆனால் தன் பெயரைக் குறிப்பிட்ட ஒரு அட்டையை இக்கடிதத்துடன் இணைத்து, அத்துடன் தனது நான்கு பாடல்களையும் சேர்த்து ஒரு உறையிலிட்டு அனுப்பியிருந்தாள்.[65]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.