From Wikipedia, the free encyclopedia
புவெப்லோ மக்கள் (Puebloan peoples), தென்மேற்கு ஐக்கிய அமெரிக்காவில் வாழும் தொல்குடி அமெரிக்கர்ஆவர். இவர்கள் எல்லோரும் மண், கல், பிற உள்ளூர்ப் பொருட்களைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட நகரங்களில் வாழ்கின்றனர். இவர்களுடைய கட்டிடங்கள் பல அறைகளுடன் கூடிய தொகுதிகளாக, பாதுகாப்புக்கு வசதியான இடங்களில் அமைக்கப்படுகின்றன. பல்வேறு மொழிக் குழுக்களைச் சேர்ந்த மொழிகளைப் பேசும் புவெப்லோ மக்கள், அவர்களின் உறவு முறைகளையும் வேளாண்மைச் செயல்முறைகளையும் அடிப்படையாக வைத்து வகைப்படுத்தப்படுகின்றனர். இவர்கள் எல்லோரும் வெவ்வேறு மக்காச் சோள வகைகளைப் பயிர் செய்கின்றனர்.
உறவு முறை வேறுபாடுகளையும் தாண்டி இவர்களிடையே புறமணம் (குழுவுக்கு வெளியே மணம் செய்தல்), அகமணம் (குழுவுக்கு உள்ளே மணம் செய்தல்) ஆகிய வெவ்வேறு திருமண முறைகளும் காணப்படுகின்றன. ஓப்பி, கெரெசு, தோவா, சுனி ஆகிய இனக்குழுவினர் தாய்வழி முறையைக் கைக்கொள்ளுகின்றனர். இதன்படி, பிள்ளைகளைத் தமது தாயின் குலத்தில் பிறந்தவர்களாகக் கொள்வதுடன், வாரிசுரிமை, கால்வழி போன்றவற்றுக்கும் தாயின் வழியையே அவர்கள் பயன்படுத்துகின்றனர். தோவா அல்லாத தனோவன் மக்கள் தந்தைவழி முறையைக் கொண்டவர்கள். குல உறுப்புரிமை, வாரிசுரிமை, கால்வழி போன்றவை தந்தை வழியூடாகவே அவர்களுக்குக் கிடைக்கின்றன. எல்லாப் புவெப்லோ மக்களும் வேளாண்மை, வணிகம் என்பவை சார்ந்த மரபுவழியான பொருளாதாரத்தைக் கொண்டவர்கள்.
16 ஆம் நூற்றாண்டில் எசுப்பானியர்கள் இவர்கள் பகுதிகளுக்குள் நுழைந்தபோது, இம்மக்கள் பல்தளங்களைக் கொண்டனவும், பெரும்பாலும் முற்றமொன்றைச் சுற்றி அமைந்தனவுமான சிக்கலான ஊர்களில் வாழ்ந்து வந்தனர். எசுப்பானியர்கள் இந்த ஊர்களை "நகரம்" எனப் பொருள்படும் "புவெப்லோ" என்னும் சொல்லால் குறிப்பிட்டனர். அங்கே வாழும் மக்களையும் அவர்கள் இதே சொல்லால் அழைத்தனர். 21 ஆம் நூற்றாண்டில் தென்மேற்கு அமெரிக்காவில் 21 புவெப்லோக் குழுவினர் எஞ்சியுள்ளனர். தாவோசு, அக்கோமா, சுனி, ஓப்பி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மானிடவியலாளர்கள் இம்மக்களை விரிவாக ஆய்வு செய்துள்ளதுடன், பல்வேறு வகைப்பாடுகளையும் வெளிப்படுத்தி உள்ளனர். 1950 இல் பிரெட் ரசெல் எக்கான் என்பவர், பெரும்பாலும் அவர்களுடைய வாழ்வாதார வேளாண்மைத் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு புவெப்லோக்கள், மேற்கு புவெப்லோக்கள் என வகைப்படுத்தியுள்ளார்.[1] மேற்கு அல்லது பாலைவனப் புவெப்லோக்களான சுனி, ஓப்பி ஆகியோர் உலர் வேளாண்மையைக் கைக்கொள்பவர்கள். அதேவேளை கிழக்கு அல்லது ஆற்றுப் புவெப்லோக்கள் பாசன வேளாண் மக்கள். இரு குழுக்களுமே மக்காச் சோளத்தையே பயிர் செய்கின்றனர்.
1954 இல் பால் கெர்ச்சோஃப் என்னும் ஆய்வாளர், பண்பாட்டு அடிப்படையில் இரண்டு குழுக்களாக அமைந்த ஒரு வகைப்பாட்டை வெளியிட்டார்.[2] ஒரு வகையில் ஓப்பி, சுனி, கெரெசு, செமெசு ஆகிய குழுக்கள் அடங்கியிருந்தன. இவர்கள் தாய்வழி முறையைப் பின்பற்றினர். இவர்களின் பிள்ளைகளைத் தாயின் குலத்தில் பிறந்தவர்களாகக் கருதுவதுடன், அப்பிள்ளைகளுக்குத் தாயின் குலத்துக்கு வெளியிலேயே மணம் செய்து வைக்கின்றனர். இது ஒரு புறமண முறை ஆகும். இவர்களுடைய படைப்புத் தொன்மம் மனிதர்கள் பூமிக்கு அடியில் இருந்து உருவானதாகக் கூறுகிறது. இவர்களது சமயம் சார்ந்த அண்டவியலில் வடக்கில் தொடங்கி நான்கு அல்லது ஆறு முக்கிய திசைகள் சிறப்புப் பெறுகின்றன. அவர்களது சடங்குகளிலும், குறியீடுகளிலும் நான்கு, ஏழு ஆகிய எண்கள் சிறப்புக்கு உரியவையாக உள்ளன.[2]
இதற்கு மாறாக, செமெசு குழுவினர் தவிர்ந்த தனோவன் மொழி பேசுவோர் தந்தைவழி உறவு முறையைக் கொண்டவர்களாக உள்ளனர். பிள்ளைகளை அவர்களது தந்தையின் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதுகின்றனர். இவர்கள் தமது குலத்துக்கு உள்ளேயே மணம் புரியும் அகமண முறையைக் கைக்கொள்ளுகின்றனர். இவர்களது நம்பிக்கை முறை இருமையியத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர்களது படைப்புக் கதை மனிதர்கள் நீருக்கு அடியில் இருந்து உருவானார்கள் என்கிறது. இவர்கள் மேற்கில் இருந்து தொடங்கி ஐந்து திசைகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்வகையினர் சடங்குகளுக்கு மூன்றின் மடங்குகளாக அமையும் எண்களைப் பயன்படுத்துகின்றனர்.[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.