Remove ads
From Wikipedia, the free encyclopedia
புத்தாக்கம் (innovation) என்பது புதிதான ஓர் எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம்.[1][2] புத்தாக்கத்தை, புதிதாக எழும் தேவைகளை எதிர்கொள்ளவல்ல புதிய தீர்வைப் பயன்படுத்திக்கொள்வதாகவும் வரையறுக்கலாம். இந்தத் தேவைகள் புதிய சந்தை அல்லது சூழல் மாற்றத் தேவைகளாகவோ அமையலாம்.[3] இத்தகைய புத்தாக்கங்கள் மேலும் விளைவுமிக்க பொருள்களாகவோ வழிமுறைகளாகவோ செயல்முறைகளாகவோ சேவைகளாகவோ தொழில்நுட்பங்களாகவோ வணிக முறைமைகளாகவோ அரசு, சமூக மாற்றமாகவோ அமையலாம். புத்தாக்கம் என்பது முன்னோடியானதும் விளைவுமிக்கதும் எனவே புதியது; சமூகத்திலும் சந்தையிலும் ஊடுருவிப் பரவ வல்லது.[4] புத்தாக்கம் புதுமைபுனைவோடு தொடர்புடையது என்றாலும் அதை ஒத்த தன்று;[5] புத்தாக்கம் ஓர் இயற்றுதலை அல்லது புதுமைபுனைவைச் சமூகத்திலும் சந்தையிலும் தாக்கம் செலுத்தவல்ல நடைமுறைப்படுத்தலாகவும் அமையலாம்),[6] ஆனால் எல்லாப் புத்தாக்கத்துக்கும் புதுமைபுனைவு தேவையில்லை. புத்தாக்கம் காணவேண்டிய தீர்வு அறிவியல் அல்லது தொழில்நுட்பத் தன்மையதாக இருந்தால், பொறியியல் செயல்முறைகள் ஊடாக நிறைவேற்றப்படும். புத்தாக்கத்தின் எதிர்ச்சொல் வழக்கொழிதலாகும் (exnovation).
புத்தாக்கத்தை, கண்டுபிடிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவர். புதுமைபுனைதல் (இயற்றுதல்) என்பது முதன் முதலாக ஒன்றைப் பற்றிய எண்ணக்கரு (idea) அல்லது கோட்பாட்டு உருவாக்கம் ஆகும். புத்தாக்கம் என்பது அமைப்பு அல்லது முறை ஒன்றைப் புதிதாக வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதைக் குறிக்கும். கண்டுபிடிப்பு என்பது இயற்கையில் ஏற்கெனவே உள்ள ஒன்றைக் (எ.கா ஒரு புதிய வகை உயிரினம் அல்லது கோள் அல்லது பால்வெளி போன்றவற்றைக்) கண்டு அறிதலைக் குறிக்கும்.
பொருளியல், மேலாண்மையியலோடு, பிற புலங்களின் நடைமுறையிலும் பகுப்பாய்விலும் புதிய கருவியொன்று புத்தாக்கமாகக் கருதப்பட்டாலும், புத்தாக்கம் என்பது சமூகத்தை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு புதிய எண்ணக்கருக்களை ஒருங்கிணைக்கும் செயல்முறையின் விளைவாகும். தொழிலகப் பொறியியலில், வளரும் நுகர்வாளர் தேவையைச் சந்திக்கவல்ல சேவைகள் ஊடாக, புத்தாக்கம் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படுகிறது. [7][8][9]
புத்தாக்கத்துக்கு முற்றிலும் வேறுபட்ட பழைய பொருளொன்று உண்டு. அமெரிக்கக் குடியேற்றத்துக்கு முன்பு, அதாவது 1400 களில் இருந்து 1600 கள் வரை, இக்கருத்துப்படிமம் இழிவானதாக அமைந்தது. முன்னைப் புத்தியற் காலத்தில் இது கலகம், கிளர்ச்சி, என்ற பொருளில் வழங்கியது.[10][11][12][13]
புத்தாக்க வரலாற்றில் 40 க்கும் மேற்பட்ட வரையறைகள் உள்ளமையை 2014 ஆண்டு ஆய்வறிக்கை கூறுகிறது. மென்பொருள் தொழில்துறையின் கள ஆய்வு அத்துறை எப்படிப் புத்தாக்கத்தை வரையறுக்கிறது என நோட்டம் விட்டதில், பொருளியல் கூட்டுறவு, வளர்ச்சிக்கான நிறுவனக் கையேட்டு வரையறையைப் பின்பற்றி வளர்த்தெடுத்த பின்வரும் குரோசனும் அபாய்தீனும் உருவாக்கிய வரையறையே சாலச் சிறந்ததாக அமைதலைக் கண்டது:[14]
புத்தாக்கம் என்பது சமூகவியல், பொருளியல் களங்களில் மதிப்பு கூட்டிய புதுமையாகும்; இது ஆக்கமாகவோ தகவமைதலாகவோ தன்மயமாக்கலாகவோ சுரண்டலாகவோ அமையலாம்; விளைபொருள்கள், சேவைகள், சந்தைகளின் புதுப்பித்தலும் விரிவாக்கலுமாக அமையலாம்; மேலும், பொருளாக்கத்துக்கான புதிய முறைகளாகவோ அல்லது புதிய மேலாண்மை முறைகளை வகுத்தலாகவோ கூட அமையலாம். புத்தாக்கம் ஒரு செயல்முறையும் விளைவும் ஆகும்.
காண்டரின்படி, புத்தாக்கம் இயற்றலையும் அதன் பயன்பாட்டையும் உள்ளடக்கியதாகும்; இது புத்தாக்கத்தைப் புதிய எண்ணக்கருக்கள், விளைபொருள்கள், சேவைகள், செயல்முறைகளின் உருவாக்கல், ஏற்றல், நடைமுறைப்படுத்தலாகும் வரையறுக்கிறது.[15]
புத்தாக்கத்துக்கு அளவும் வகையும் என இருகூறுகள் உள்ளன. புத்தாக்க அளவு என்பது அது குழுமத்துக்குப் புதியதா, சந்தைக்குப் புதியதா, தொழில்துறைக்குப் புதியதா, உலகத்துக்குப் புதியதா என்ற கூறாகும், புத்தாக்க வகை என்பது செயல்முறை வகையா விளைபொருள் வகையா சேவை வகையா என்பதைக் குறிக்கிறது.[14] அண்மைக் கள ஆய்வு புத்தாக்கத்தையும் ஆக்கத்திறனையும் பிரித்து வரையறுக்கிறது:
பணியிட ஆக்கத்திறன் என்பது புதிய எண்ணங்களை உருவாக்கும்போது நிகழும் அறிதலையும் நடத்தையையும் சார்ந்த அக்கறையாகும். பணியிடப் புத்தாக்கம் புதிய எண்ணங்களை நடைமுறைப்படுத்தும் அக்கறையையும் குறிக்கும். குறிப்பாக, புத்தாக்கத்தில் நிறுவனத் தேவை சார்ந்த சிக்கலும் வாய்ப்பும் இணைந்த கூட்டுச் சேர்மானமாக விளங்கும் புதிய எண்ணங்களை இனங்காணல், அறிமுகப்படுத்தல், தகவமைத்துப் பின்பற்றல், திருத்தல், நடைமுறைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும்.[16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.