தமிழ்நாடு
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
இந்திய மாநிலம் From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு (Tamil Nadu) என்பது இந்தியாவின் தென் முனையில் அமைந்துள்ள மாநிலங்களில் ஒன்றாகும். தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படும் இம்மாநிலமானது, பரப்பளவில் இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாக மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. உலகின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பேசும் தமிழர் வாழும் பகுதியே தமிழ்நாடு என வழங்கப்படுகிறது. இதன் தலைநகரமாக சென்னை உள்ளது.
தமிழ்நாடு
தமிழகம் | |
---|---|
மேல் இடமிருந்து வலம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், மெரீனா கடற்கரை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், ஒகேனக்கல் அருவி, திருவள்ளுவர் சிலை, மற்றும் நீலகிரி மலைகள் | |
சொற்பிறப்பு: தமிழர் நாடு | |
குறிக்கோளுரை: வாய்மையே வெல்லும் | |
பண்: "தமிழ்த்தாய் வாழ்த்து"^# | |
இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 11°N 79°E | |
நாடு | இந்தியா |
பிராந்தியம் | தென்னிந்தியா |
முன்பு இருந்தது | மதராசு மாநிலம்^† |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | சென்னை |
மாவட்டம் | 38 |
அரசு | |
• நிர்வாகம் | தமிழ்நாடு அரசு |
• ஆளுநர் | ஆர். என். ரவி |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின் (திமுக) |
சட்டவாக்க அவை | ஓரவை |
• சட்டப் பேரவை | தமிழ்நாடு சட்டப் பேரவை (234 தொகுதிகள்) |
தேசிய பாராளுமன்றம் | இந்திய நாடாளுமன்றம் |
• மாநிலங்களவை | 18 தொகுதிகள் |
• மக்களவை | 39 தொகுதிகள் |
உயர் நீதிமன்றம் | மதராசு உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,30,058 km2 (50,216 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 10-ஆவது |
Dimensions | |
• நீளம் | 1,076 km (669 mi) |
ஏற்றம் | 189 m (620 ft) |
உயர் புள்ளி | 2,636 m (8,648 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 7,21,47,030 |
• தரவரிசை | 6-ஆவது |
• அடர்த்தி | 554.7/km2 (1,437/sq mi) |
• நகர்ப்புறம் | 48.4% |
• கிராமப்புறம் | 51.6% |
இனம் | தமிழர் |
மொழி | |
• அலுவல்மொழி | தமிழ்[2] |
• கூடுதல் அலுவல்மொழி | ஆங்கிலம்[2] |
• அதிகாரப்பூர்வ எழுத்துமுறை | தமிழ் எழுத்து முறை |
மொத்த உள்நாட்டு உற்பத்தி | |
• மொத்தம் (2022-23) | ₹23.65 டிரில்லியன் (US$300 பில்லியன்) |
• தரவரிசை | 2-ஆவது |
• தனிநபர் | ₹2,75,583 (US$3,500) (9-ஆவது) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-TN |
வாகனப் பதிவு | TN |
மனித வளர்ச்சி சுட்டெண் (2021) | ▼ 0.686 Medium[5] (14-ஆவது) |
கல்வியறிவு (2011) | 80.09%[6] (14-ஆவது) |
பாலின விகிதம் (2011) | 996 ♀/1000 ♂ (3-ஆவது) |
கடற்கரை | 1,076 கி.மீ (669 மைல்) |
இணையதளம் | tn |
சின்னங்கள் | |
பாடல் | "தமிழ்த்தாய் வாழ்த்து"^# |
நடனம் | பரதநாட்டியம் |
விலங்கு | நீலகிரி வரையாடு |
பறவை | மரகதப்புறா |
மலர் | காந்தள் |
பழம் | பலா |
மரம் | ஆசியப் பனை |
பூச்சி | தமிழ் மறவன் பட்டாம்பூச்சி |
விளையாட்டு | கபடி |
மாநில நெடுஞ்சாலைக் குறி | |
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் மா.நெ. 1 - மா.நெ. 223 | |
இந்திய மாநில சின்னங்களின் பட்டியல் | |
^# ஜன கண மன என்னும் பாடலானது தேசிய கீதம், "தமிழ்த்தாய் வாழ்த்து" என்பது மாநில பாடல்/கீதம். ^† 1773-இல் நிறுவப்பட்டது; மதராசு மாநிலம் 1950-இல் உருவானது மற்றும் 14 சனவரி 1969-இல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. |
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது. இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
தொல்லியல் சான்றுகள் தமிழ்நாட்டில் மக்கள் ஏறத்தாழ நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதையும், 5,500 ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான கலாச்சார வரலாற்றைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. வரலாற்று ரீதியாக, பண்டைய தமிழகப் பகுதியில் தமிழ் மொழி பேசிய திராவிட மக்கள் வசித்து வந்தனர். பல நூற்றாண்டுகளாக சங்க காலம் தொட்டு சேரர், சோழர் மற்றும் பாண்டியரால் ஆளப்பட்டது. பிற்காலத்தில் பல்லவர் (பொ.ஊ. 3-9 ஆம் நூற்றாண்டு) மற்றும் விசயநகர பேரரசின் (பொ.ஊ. 14-17 ஆம் நூற்றாண்டு) கீழ் வந்த இப்பகுதியில், 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்கள் வரத் தொடங்கினர். 1947 இல் இந்திய விடுதலைக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு தென்னிந்தியாவின் பெரும்பகுதி பிரித்தானிய கட்டுப்பாட்டில் சென்னை மாகாணமாக ஆட்சி செய்யப்பட்டது. விடுதலைக்கு பிறகு மதராசு மாநிலம் என மாறிய இப்பகுதி, ௧௯௫௬ ஆம் ஆண்டின் மொழிவாரி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போதைய வடிவம் பெற்றது. 1969 இல் "தமிழ் நாடு" என பெயர் மாற்றப்பட்டது.
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாக திகழும் தமிழ்நாடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாக உள்ளது. மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பதினாறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், நாட்டின் மிகவும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; மூன்று உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. மாநிலத்தின் பரப்பளவில் ஏறத்தாழ 17.4% காடுகளைக் கொண்டுள்ள இங்கு மூன்று உயிர்க்கோள காப்பகங்கள், சதுப்புநில காடுகள், ஐந்து தேசிய பூங்காக்கள், 18 வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் 17 பறவை சரணாலயங்கள் உள்ளன. தமிழ்த் திரையுலகம் மாநிலத்தின் பிரபலமான கலாச்சாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு என்ற பெயர் தமிழ் மொழியில் இருந்து பெறப்பட்டது. இது "தமிழர்களின் நிலம்" எனப் பொருள்படும். தமிழ் என்ற சொல்லின் பெயரியல் சரியாக அறியப்படவில்லை.[7]
பண்டைய தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தற்போதைய தமிழ்நாடு, கேரளம் ஆகிவற்றின் முழு பகுதிகளையும், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் தென் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதிகளைக் குறிக்க தமிழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் பின்வருமாறு:[8]
“ | வட வேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் | ” |
— தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3 |
தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்:[9]
“ | வையக வரைப்பில் தமிழகம் கேட்ப | ” |
— புறநானூறு, 168 :18 |
“ | இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க | ” |
— பதிற்றுப்பத்து, இரண்டாம் பத்து, பதிகம் : 5 |
“ | இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய | ” |
— சிலப்பதிகாரம், அரங்கேற்றுகாதை : 38 |
“ | சம்புத் தீவினுள் தமிழக மருங்கில் | ” |
— மணிமேகலை, 17: 62 |
சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில் தமிழ்நாடு என்ற பெயர் காணப்படுகிறது.[10][11]
“ | இமிழ்கடல் வேலியை தமிழ்நாடாக்கிய இது நீ கருதினை யாயின் ஏற்பவர் முது நீ ருலகில் முழுவது மில்லை |
” |
“ | தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து, மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் |
” |
— இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் |
திருக்கோயிலூர் வீரட்டேசுவரர் கோயிலில் உள்ள சோழர் காலக் கல்வெட்டில் உள்ள மெய்க்கீர்த்தியானது இராசராச சோழனை தண்டமிழ் நாடன் என குறிப்பிடுகிறது.[12] 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம்பூரணர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.[13]
“ | நும் நாடு யாது என்றால், தமிழ்நாடு என்றல் | ” |
— இளம்பூரணர் |
கம்பர் தன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தா காண்டம் நாட விட்ட படலம்-30 இல் தமிழ்நாட்டை அடையாளப்படுத்தியுள்ளார். அதில் அனுமனுக்கும் மற்ற வானரப் படையினருக்கும் இலங்கைக்குச் செல்லும் வழிகளைச் சொல்கிறான். அப்போது இலங்கைக்கு தமிழ்நாட்டைக் கடந்து செல்ல வேண்டும் என்று கூறுகிறான்.[14]
“ | துறக்கம் உற்றார் மனம் என்ன,துறைகெழு நீர்ச்சோணாடு கடந்தால்,தொல்லை மறக்கம் உற்றார் அதன் அயலே மறைந்து உறைவர்; அவ் வழி நீர் வல்லை ஏகி, உறக்கம் உற்றார் கனவு உற்றார் எனும் உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல் பிறக்கம் உற்ற மலை நாடு நாடி, அகன் தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ. |
” |
— கம்பர், கம்பராமாயணம் |
தொல்பொருள் சான்றுகள் 400 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் ஓமினிட்கள் வாழ்ந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன.[15][16] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் (ASI) மூலம் ஆதிச்சநல்லூரில் மீட்கப்பட்ட தொல்பொருட்கள் 3,800 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்ச்சியான வரலாற்றைக் குறிப்பிடுகின்றன.[17] பொ.ஊ.மு.1500 மற்றும் 2000 க்கு இடைப்பட்ட சிந்துவெளி நாகரீகத்தைச் சேர்ந்த கற்சுவடுகள் பண்டைய தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டைக் குறிக்கிறது.[18][19] கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தைய ஒரு பெரிய நகர்ப்புற குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.[20]மேலும் ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தமிழ் பிராமி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன, இது பொ.ஊ.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அடிப்படை எழுத்தாகும்.[21] கீழடியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகள் சிந்து சமவெளி எழுத்து மற்றும் தமிழ் பிராமி எழுத்துகளுக்கு இடைப்பட்ட ஒரு எழுத்துமுறையைக் குறிக்கின்றன.[22] தொன்கதை பாரம்பரியத்தின் படி, தமிழ் மொழியானது, சிவபெருமானால் அகத்தியருக்குக் கற்பிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது.[23][24][25][26][27]
தொல்பொருள் சான்றுகளின் படி சங்க காலம் ஏறத்தாழ பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3 ஆம் நூற்றாண்டு வரை எட்டு நூற்றாண்டுகள் நீடித்தது. இக்காலத்தில் இயற்றப்பட்ட சங்க இலக்கியங்கள் இக்கால வரலாற்றின் முக்கிய ஆதாரமாக உள்ளன.[28][29] பண்டைய தமிழகம் முடியாட்சி அரசுகாளாகிய, சேரர், சோழர் மற்றும் பாண்டியர் எனும் மூவேந்தரால் ஆளப்பட்டது.[30] சேரர்கள் தமிழ்கத்தின் மேற்குப் பகுதியையும், பாண்டியர்கள் தெற்கு பகுதியையும், சோழர்கள் காவேரி வடிநிலப் பகுதியையும் ஆண்டனர். இம்மன்னர்கள் வேந்தர் என்று அழைக்கப்பட்டனர். வேள் அல்லது வேளிர் என்று அழைக்கப்பட்ட பழங்குடித் தலைவர்கள் குறுநில மன்னர்களாக ஆண்டுவந்தனர். உள்ளூர் அளவில் கிழார் அல்லது மன்னர் என்று அழைக்கப்படும் குலத்தலைவர்கள் இருந்தனர்.[31][32] சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். இவர்கள், போர் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கியதாக நம்பப்படுகிறது.தமிழகதத்தில் தனியரசுகளாக விளங்கின இந்த இராச்சியங்களைத் தவிர்த்து வெளி சக்திகளால் இந்தக் கால கட்டத்தில் கைப்பற்றப்படவில்லை. வடக்கே உள்ள அரசுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க தொடர்புகள் இருந்தன. இவை அசோகரின் தூண்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.[33]
இந்த இராச்சியங்கள் உரோமானியர் மற்றும் ஆன் சீனர் உட்பட பல இராச்சியங்களுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தன.[34] வணிகத்தின் பெரும்பகுதி முசிறி மற்றும் கொற்கை உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக நடத்தப்பட்டது. அழகன்குளம் தொல்லியல் தளத்தில் அண்மைய அகழ்வாய்வுகள் சங்க காலத்தின் முக்கியமான வர்த்தக மையங்கள் அல்லது துறைமுக நகரங்களில் ஒன்றாக விளங்கியது தெரியவருகிறது.[35] முத்து, பட்டு, வாசனைப் பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஆகியவை பரவலாக வர்த்தகம் செய்யப்பட்டன.[36][37]
இக்காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன, அதில் எஞ்சியிருக்கும் பழமையான நூல், தமிழ் இலக்கண குறிப்பான தொல்காப்பியம் ஆகும்.[38] பெரும்பாலான சங்க இலக்கியங்கள் காதல் மற்றும் போரை கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இச்செய்யுள்களின் வழியாக அன்றைய தமிழ்ச் சமூகத்தை அறிய முடிகிறது. நிலம் வளமானதாக இருந்தது, மேலும் மக்கள் எந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு தொழில்களைத் தொடர்ந்தனர். அவர்களின் கடவுள்களில் சேயோன் மற்றும் கொற்றவை போன்றவர்கள் அடங்குவர். அவர்கள் வெவ்வேறு இடங்களில் வணங்கப்பட்டனர். ஆட்சியாளர்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தையும் ஆதரித்தனர், மேலும் பொது ஊழிக்குப் பிறகான காலத்தில் தொடங்கி வேத வழக்கங்கள் பற்றிய குறிப்புகள் வளரத் தொடங்கின.[39]
மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், களப்பிரர்கள் தமிழகத்தின் பெரும்பகுதியை ஆண்டனர். இவர்கள் வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு காலத்தில் பண்டைய தமிழ் இராச்சியங்களில் நிலப்பிரபுக்களாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.[40] களப்பிரர் ஆட்சி தமிழ் வரலாற்றின் "இருண்ட காலம்" என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இந்த காலத்தை பற்றிய தகவல்கள் கூறும் இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் இல்லாததாலும், இக்காலத்தை பற்றிய குறிப்புகள் பல நூற்றாண்டிற்கு பிறகு வெளிவந்த ஆதாரங்களைப் பின்பற்றியிருப்பதனால், இக்காலத்தை பற்றிய சரியான முடிவுகள் எடுப்பது கடினமாக உள்ளது.[41] இரட்டை தமிழ் காவியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை இக்காலத்தில் எழுதப்பட்டது.[42] திருவள்ளுவரின் உன்னதமான தமிழ்த் தொகுப்பான திருக்குறள் இக்காலத்திற்கு தேதியிடப்பட்டுள்ளது.[43][44]
பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டில், களப்பிரர்கள் பாண்டியர்கள் மற்றும் சோழர்களால் தோற்கடிக்கபப்ட்டனர். முன்னர் பௌத்தம் மற்றும் சமணத்தை ஆதரித்த அவர்கள் பக்தி இயக்கத்தின் போது சைவம் மற்றும் வைணவத்திற்கு மாறினர்.[45] இக்காலம் பல்லவர்களின் எழுச்சியைக் கண்டது. ஆறாம் நூற்றாண்டில் முதலாம் மகேந்திரவர்மன், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சில பகுதிகளை ஆட்சி செய்தார்.[46] பல்லவர்கள் கோயில்களின் நுழைவாயிலில் கட்டப்பட்ட அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான கோபுரங்கள் மற்றும் கற்கோயில்களின் கட்டிடக்கலைக்காக அறியப்படுகின்றனர். மகாபலிபுரத்தில் பல கற்கோயில்கள் மற்றும் சிற்பங்களையும், காஞ்சிபுரத்தில் கோயில்களையும் எழுப்பினார்கள்.[47] பல்லவர்கள் தங்கள் ஆட்சிகாலம் முழுவதிலும் சோழர்கள் மற்றும் பாண்டியர்களுடன் தொடர்ந்து மோதலில் இருந்து வந்தனர். கிபி 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோனால் பாண்டியர்கள் புத்துயிர் பெற்றனர். உறையூரில் சோழர்கள் மறைந்திருந்த நிலையில், தமிழகம் பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையில் பிரிக்கப்பட்டது.[48] பல்லவர்கள் இறுதியாக 9 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டனர்.[49]
சோழர் ஆட்சி மீண்டும் ஒன்பதாம் நூற்றாண்டில் விசயாலய சோழன் கீழ் நிறுவப்பட்டது. தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு பெரும் ஆதிக்கம் செலுத்தும் அரசை நிறுவினார். 11 ஆம் நூற்றாண்டில், முதலாம் இராசராசன் தென்னிந்தியாவையும், இன்றைய இலங்கை, மாலத்தீவுகளின் சில பகுதிகளையும் கைப்பற்றி, இந்தியப் பெருங்கடல் முழுவதும் சோழர்களின் செல்வாக்கை அதிகரித்தார்.[50][51] இந்த காலத்தில் நாட்டை தனி நிர்வாக அலகுகளாக மறுசீரமைப்பது உட்பட பல நிர்வாக சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தனர்.[52] இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திர சோழனின் கீழ், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. வடக்கே வங்காளம் வரையிலும், இந்தியப் பெருங்கடலிலும் பரவி விரிந்தது.[53] சோழர்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் பல கோயில்களைக் கட்டினார்கள், அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது இராசராசனால் கட்டப்பட்ட தஞ்சைப் பெருவுடையார் கோயில் மற்றும் ராசேந்திரனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம்.[54]
13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கீழ் பாண்டியர்கள் மீண்டும் ஆட்சி செய்தனர்.[55] இவர்கள் தங்கள் தலைநகரான மதுரையிலிருந்து பிற கடல்சார் பேரரசுகளுடன் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தினர்.[56] மார்கோ போலோ பாண்டியர்களை உலகின் பணக்கார பேரரசு என்று குறிப்பிட்டார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட பல கோயில்களையும் பாண்டியர்கள் கட்டியுள்ளனர்.[57]
பொ.ஊ. 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. வடக்கில் தில்லி சுல்தானகத்திலிருந்து படையெடுத்து வந்தவர்கள் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்தினர்.[58] இந்தப் படையெடுப்புகள் இசுலாமிய பாமினி ஆட்சிக்கு வித்திட்டது. இதற்கு பதிலடி தருவதற்காக பல சிற்றரசுகள் சேர்ந்து 1336 இல் விசயநகரப் பேரரசைத் தோற்றுவித்தன.[59] இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு, அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அம்பியைத் தலைநகராகக் கொண்டிருந்த விசயநகரப் பேரரசு 1565 இல் தலைக்கோட்டைப் போரில் தோற்கடிக்க படும் வரை கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சி செய்தது. பின்னர், விசயநகரப் பேரரசில் ஆளுநர்களாக இருந்த நாயக்கர்கள் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.[60][61] நாயக்கர் ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன, பாளையங்கள் உருவாக்கப்பட்டு, கிராம சுய ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது.[62][63] தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு, மதுரை மீனாட்சியம்மன் கோயில் உட்பட சில பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். மேற்கில் சில பகுதிகள் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி, வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி, பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது.[64]
18 ஆம் நூற்றாண்டில், முகலாயப் பேரரசு மதுரை நாயக்கர்களை தோற்கடித்த பிறகு, இப்பகுதியை கருநாடக நவாப் மூலம் ஆற்காட்டிலிருந்து ஆண்டது.[65] மராட்டியப் பேரரசு பலமுறை தாக்குதல்கள் நடத்தி, பின்னர் 1752 இல் திருச்சிராப்பள்ளியில் நவாப்பை தோற்கடித்தது.[66][67][68] இதன் விளைவாக குறுகிய காலத்திற்கு தஞ்சாவூர் மராட்டிய ஆட்சிக்கு வழிவகுத்தது.[69]
ஐரோப்பியர்கள் 16 ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் வர்த்தக மையங்களை நிறுவத் தொடங்கினர். போர்த்துகீசியர்கள் 1522 இல் இன்றைய சென்னை மயிலாப்பூருக்கு அருகில் சாவோ தோம் என்ற துறைமுகத்தைக் கட்டினார்கள்.[70]1609 இல், இடச்சுக்காரர்கள் பழவேற்காட்டில் ஒரு குடியேற்றத்தை நிறுவினர். பிறகு தானிசுகள் தரங்கம்பாடியில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினர்.[71][72] 20 ஆகத்து 1639 அன்று, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த பிரான்சிசு டே விசயகர பேரரசர் வெங்கட ராயரை சந்தித்து அவர்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்காக கிழக்கு கடற்கரையில் இந்நாளில் சென்னையாக அறியப்படுகின்ற பகுதியில் ஒரு நிலத்தை மானியத்திற்காகப் பெற்றார்.[73][74][75] ஒரு வருடம் கழித்து, இந்நிறுவனம் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டியது, இது இந்தியாவின் முதல் பெரிய பிரித்தானியக் குடியேற்றமாகும். இதைத் தொடர்ந்து இப்பகுதி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் மையமாக மாறியது.[76][77]
1693 வாக்கில், பிரெஞ்சு பாண்டிச்சேரியில் வர்த்தக நிலையங்களை நிறுவினர். ஏழாண்டுப் போரின் ஒரு பகுதியாக இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் போட்டியிட்டனர்.[78] ஆங்கிலேயர்கள் 1749 இல் ஒரு உடன்படிக்கையின் மூலம் இப்பகுதியின் கட்டுப்பாட்டை மீட்டனர். 1759 இல் ஒரு பிரெஞ்சு முற்றுகை முயற்சியை முறியடித்தனர்.[79][80] கருநாடக நவாப்கள் பெரும்பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இதற்கு பதிலாக பிரித்தானியர்களுக்காக வரி வசூல் செய்யும் உரிமைகளைப் பெற்றனர். இது தமிழகத்தை ஆண்ட பாளையக்காரர்களுடன் தொடர்ச்சியான மோதல்களுக்கு வழிவகுத்தது. பூலித்தேவர் ஆரம்பகால எதிர்ப்பாளர்களில் ஒருவராக இருந்தார், பின்னர் சிவகங்கையைச் சேர்ந்த ராணி வேலு நாச்சியார் மற்றும் பாஞ்சாலக்குறிச்சியின் கட்டபொம்மன் ஆகியோர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்களில் இணைந்தனர்.[81][82] மருது சகோதரர்கள், கட்டபொம்மனின் சகோதரரான ஊமைத்துரை, தீரன் சின்னமலை மற்றும் கேரள வர்மா பழசி ராஜா ஆகியோருடன் சேர்ந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.[83] 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மைசூர் இராச்சியம் இப்பகுதியின் சில பகுதிகளைக் கைப்பற்றியது மற்றும் ஆங்கிலேயர்களுடன் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்டது.[84]
18 ஆம் நூற்றாண்டில், பிரித்தானியர்கள் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றி, சென்னையைத் தலைநகராகக் கொண்டு மதராசு மாகாணத்தை நிறுவினர்.[85] 1799 ஆம் ஆண்டு போரில் மைசூர் இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் 1801 ஆம் ஆண்டில் பாளையக்காரர்களுக்கெதிராக வெற்றி பெற்ற பிறகு, பிரித்தானியர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை மதராசு மாகாணத்துடன் ஒருங்கிணைத்தனர்.[86] 1806 ஆம் ஆண்டு சூலை 10 ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் நடத்திய பெரிய அளவிலான கலகத்தின் முதல் நிகழ்வான வேலூர் கலகம் வேலூர் கோட்டையில் நடந்தது.[87][88] 1857 இன் இந்தியக் கிளர்ச்சிக்குப் பிறகு, பிரித்தானிய அரசு கிழக்கிந்திய நிறுவனத்திடமிருந்து நிர்வாகக் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டது.[89]
பருவமழையின் தோல்வி மற்றும் ரயோத்வாரி அமைப்பின் நிர்வாகக் குறைபாடுகள் சென்னை மாகாணத்தில் கடுமையான பஞ்சங்களை ஏற்படுத்தியது. 1876-78 மற்றும் 1896-97 ஆண்டுகளில் பஞ்சம் இலட்சக்கணக்கானவர்களைக் கொன்றது. இதன் காரணமாக பல தமிழர்கள் கொத்தடிமைகளாக பிரித்தானியர்கள் ஆட்ச்சி செய்த பல நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர்.[90] இந்திய விடுதலை இயக்கம் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கத்துடன் வேகம் பெற்றது. காங்கிரசின் உருவாக்கம் திசம்பர் 1884 இல் சென்னையில் நடைபெற்ற பிரம்மஞான சபையின் மாநாட்டிற்குப் பிறகு அந்த இயக்கத்தின் உறுப்பினர்களிடையே தோன்றிய யோசனையின் அடிப்படையில் அமைந்தது.[91][92] வ. உ. சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா மற்றும் பாரதியார் உட்பட சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்த பலரின் தளமாக தமிழ்நாடு இருந்தது.[93] சுபாஷ் சந்திர போசால் நிறுவப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் (INA) உறுப்பினர்களில் கணிசமானனோர் தமிழர்களாக இருந்தனர்.[94]
இன்றைய தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம், கருநாடகம் மற்றும் கேரளத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மதராசு மாகாணம் 1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு மதராசு மாநிலமாக உருப்பெற்றது. இந்த மாநிலத்திலிருந்து 1953 இல் ஆந்திரா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டது.[95] மேலும் 1956 இல் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட போது மாநிலம் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டது.[96] 14 சனவரி 1969 அன்று, சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று மறுபெயரிடப்பட்டது.[97][98] 1965 ஆம் ஆண்டில், இந்தி திணிப்புக்கு எதிராகவும், ஆங்கிலத்தை அதிகாரபூர்வ மொழியாகத் தொடர்வதற்கு ஆதரவாகவும் கிளர்ச்சிகள் எழுந்தன. இது இறுதியில் இந்தியுடன் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தைத் தக்கவைக்க வழிவகுத்தது.[99]
சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில், தனியார் துறை பங்கேற்பு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றின் மீது கடுமையான அரசாங்கக் கட்டுப்பாடு இருந்தது. இதன் பிறகு சீர்திருத்தம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, 1970 களில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் தேசிய சராசரி வளர்ச்சி விகிதங்களைத் தாண்டி வேகமாக வளர்ந்தது.[100] 2000களில், தமிழகம் நாட்டின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக மாறியது.[101]
ஏறத்தாழ 1.3 இலட்சம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ள தமிழ்நாடு இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகும்.[101] இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கிழக்கு கரையில் அமைந்துள்ள தமிழ்நாடு, மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் தக்காணப் பீடபூமி, வடக்கில் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றை புவியியல் எல்லைகளாகக் கொண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா, தென்கிழக்கில் மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை மற்றும் தென் முனையில் இலட்சத்தீவுக் கடல் ஆகிய நீர்நிலைகளால் சூழப்பட்டுள்ளது.[102] வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கின்ற குமரிமுனை தமிழ்நாட்டில் உள்ளது.[103] இலங்கை நாட்டுடன் கடல்வழி எல்லையைக் கொண்டுள்ளது.[104][105] இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக, மேற்கில் கேரளம், வடமேற்கில் கருநாடகம் மற்றும் வடக்கில் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள் மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன.
மேற்குத் தொடர்ச்சி மலையானது மாநிலத்தின் மேற்கு எல்லையில் வடக்கில் இருந்து தெற்கே செல்கிறது. நீலகிரி மலைகளில் உள்ள தொட்டபெட்டா (2636 மீ) மாநிலத்திலேயே மிக உயரமான சிகரமாகும்.[106][107] கிழக்குத் தொடர்ச்சி மலைகள் கிழக்கு திசையில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி செல்கிறது.[108] இவை காவேரி நதியால் குறுக்கிடப்படுகின்ற ஒரு தொடர்ச்சியற்ற மலைத்தொடராகும்.[109] இந்த இரண்டு மலைத் தொடர்களும் தமிழகத்தின் கேரள மற்றும் கருநாடக எல்லை பகுதியில் உள்ள நீலகிரி மலைகளில் சந்திக்கின்றன.[110]
தக்காண பீடபூமி இந்த மலைத்தொடர்களின் இடையே உள்ள ஒரு உயர்ந்த நிலப்பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகள் உயரமாக இருக்கின்ற காரணத்தினால், இந்த பீடபூமியானது மேற்கிலிருந்து கிழக்காக சரிகின்றது. இதன் விளைவாக பெரும்பாலான ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகி கிழக்கு நோக்கி பாய்ந்து பின்னர் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.[111][112] தமிழகத்தின் இயற்கையமைப்பு, பொதுவாக அகன்ற உயர் நிலப்பரப்பாகக் காணப்படுகிறது. இதில் அதிகமாக அரிக்கப்படாத மலைத்தொடர்களின் எஞ்சிய பகுதிகளும், அகன்ற ஆழம் குறைவான பள்ளத்தாக்குகளும் மற்றும் ஆற்றுச் சமவெளிகளும் காணப்படுகின்றன.[113] தமிழ்நாடு ஏறத்தாழ 1,076 கி.மீ. நீளம் கொண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது.[114] மன்னார் வளைகுடா பகுதியில் பவளப்பாறைகள் உள்ளன.[115] 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் ஆழிப்பேரலையில் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகள் நிரந்தரமாக பாதிக்கப்பட்டன.[116]
மேற்கு எல்லைப் பகுதிகளைத் தவிர்த்து தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மிதமான நிலநடுக்க அபாய மண்டலத்தில் அமைந்துள்ள.[117] தக்காண பீடபூமி ஏறத்தாழ ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெரிய எரிமலை வெடிப்பின் காரணமாக உருவானது.[118][119] தமிழ்நாட்டில் பெரும்பாலும் செம்மண், செந்நிறக் களிமண், கரிசல் மண், வண்டல் மண் மற்றும் உப்பு கலந்த மண் ஆகியவை காணப்படுகின்றது. அதிக இரும்புச்சத்து கொண்ட செம்மண் அனைத்து உள்மாவட்டங்கள் உட்பட மாநிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளது. கரிசல் மண் மேற்கு தமிழ்நாடு மற்றும் தெற்கு கடற்கரை பகுதிகளில் காணப்படுகிறது. வண்டல் மண் வளமான காவேரி ஆற்று பகுதியில் காணப்படுகின்றது. உப்பு கலந்த மண் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் பெரும்பாலாக உள்ளது.[120]
இப்பகுதி பெரும்பாலும் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது, மழைப்பொழிவுக்காக பருவமழையை சார்ந்துள்ளது.[121] தமிழ்நாடு ஏழு வேளாண் காலநிலை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: வடகிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு, அதிக மழைப்பொழிவு, உயரமான மலைப்பகுதி மற்றும் காவேரி வடிநிலம்.[122] தீபகற்பத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடங்களில் வெப்பமண்டல ஈரமான வறண்ட காலநிலை காணப்படுகின்றது. மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு கிழக்கே உள்ள மழை மறைவு பிரதேசம் வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. பின் பனிக்காலம் மற்றும் கோடையின் ஆரம்பம் ஆகியவை நீண்ட வறண்ட காலங்களாகும்.[123] கோடை காலங்களில் வெயில் மிகுதியாக காணப்படும், சில சமயங்களில் 50°C வரை வெப்ப நிலை இருக்கும்.[124]
பெரும்பாலான பகுதிகளில் மழைக்காலம் தென்மேற்கு பருவக்காற்றின் போது சூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கின்றது. தென்மேற்கு பருவமழையின் போது அரபிக் கடலிலிருந்து எழும் காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளால் தடுக்கப்பட்டு, மாநிலத்தின் மேற்குப் பகுதியில் மழையைப் பொழிகின்றன. நகர்கிறது. உயரமான மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்த காற்று தக்காண பீடபூமியை அடைவதைத் தடுக்கின்றன; எனவே இந்த மலைகளின் கிழக்குப் பகுதிகள் மிகக் குறைந்த மழையைப் பெறுகிறது.[125] தென்மேற்கு பருவமழையின் போது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டு எழும் காற்றானது வடகிழக்கு இந்தியாவை நோக்கி செல்கிறது, ஆனால் நிலத்தின் வடிவமைப்பின் காரணமாக தென்மேற்கு பருவமழையிலிருந்து தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் அதிக மழைப்பொழிவைப் பெறுவதில்லை. இந்தப் பகுதிகளில் பெரும்பாலான மழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாத வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்கின்றது. [126][127] வட இந்தியப் பெருங்கடலில் இருந்து வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் காற்று அவ்வப்போது நிகழ்கிறது, இது பேரழிவு தரும் காற்று மற்றும் கனமழையைக் கொண்டுவருகிறது.[128][129] மாநிலத்தின் மழைப்பொழிவில் 48 சதவீதம் வடகிழக்கு பருவமழை மூலமாகவும், 52 சதவீதம் தென்மேற்கு பருவமழை மூலமாகவும் கிடைக்கிறது. தமிழகம் தேசிய அளவில் 3% நீர் ஆதாரங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த நீர் ஆதாரங்கள் பெரும்பாலும் மழையை முழுமையாக நம்பியுள்ள. பருவமழை பொய்த்தால் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் வறட்சி ஏற்படுகின்றது.[130][131]
மாநிலத்தின் புவியியல் பகுதியில் ஏறத்தாழ 22,643 சத்துள்ள கி.மீ. பரப்பளவு கொண்ட காடுகள் உள்ளன. இவை மொத்த நிலப்பரப்பில் 17.4 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ள.[132] தமிழ்நாட்டில் நிலவும் பல்வேறு காலநிலை மற்றும் புவியியல் அமைப்புகளின் விளைவாக பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கிண்ணங்கள் காணப்படுகின்றன. இலையுதிர் காடுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுகின்றன, அதே சமயம் உட்பகுதிகளில் வெப்பமண்டல உலர் காடுகள் மற்றும் முள் புதர்க்காடுகள் ஆகியவை பொதுவாகக் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்வான பகுதிகளில் மழைக்காடுகள் அமைந்துள்ளன.[133] உலகில் உள்ள முக்கியமான உயிர்க்கோள காப்பகங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகள், யுனெஸ்கோ உலக பாரம்பரியத் களமாக அறிவிக்கிப்பட்டுள்ளன.[134] தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2000 வகையான விலங்கினங்கள், 5640 வகையான பூக்கும் தாவரங்கள் (1,559 மருத்துவத் தாவர இனங்கள், 533 உள்ளூர்த் தாவர இனங்கள், 260 வகையான பயிரிடப்பட்ட தாவர இனங்கள், 230 அச்சுறுத்தப்படும் தாவர இனங்கள்), 64 வகை வித்துமூடியிலிகள் (நான்கு உள்நாட்டு இனங்கள் மற்றும் 60 அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள்), 184 வகையான மற்ற செடி வகைகள், பூஞ்சை, பாசி மற்றும் பாக்டீரியா ஆகியன உள்ளன.[135][136]
தமிழ்நாட்டின் முக்கியமான சுற்றுச்சூழல் பகுதிகளில் நீலகிரி மலைகள், அகத்தியமலை மற்றும் மன்னார் வளைகுடா பவளப்பாறைகள் ஆகியவை அடங்கும்.[137] மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா ஏறத்தாழ 10,500 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குள்ள பவளப் பாறைகள், உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் நீர்பகுதிகளில் ஓங்கில்கள், ஆவுளியாக்கள், திமிங்கலங்கள் மற்றும் கடல் வெள்ளரிகள் உட்பட பல அழிந்துவரும் அறிய வகை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.[138][139] வெள்ளோடு, கடலுண்டி, வேடந்தாங்கல், ரங்கன்திட்டு, நெலப்பட்டு, மற்றும் பழவேற்காடு உட்பட 17 பறவைகள் சரணாலயங்கள் ஏராளமான புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பறவைகளின் தாயகமாக உள்ளன.[140][141]
தமிழகத்தில் ஏறத்தாழ 3,300 சதுர கி.மீ. பாதுகாக்கப்பட்ட பபகுதிகாலக அறிவிக்கப்பட்டுள்ளது.[132]1940 இல் நிறுவப்பட்ட முதுமலை தேசிய பூங்கா தென்னிந்தியாவின் முதல் நவீன வனவிலங்கு சரணாலயம் ஆகும். பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு வனத்துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறன. பிச்சாவரம் சதுப்புநிலக் காடுகள் இந்தியாவின் மிகப்பெரிய சதுப்புநிலக் காடுகளில் ஒன்றாகும். இது பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்வாழ் உயிரினங்கள், மீன்கள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் இருப்பை ஆதரிக்கிறது.[142][143] மாநிலத்தில் ஐந்து தேசியப் பூங்காக்கள் மற்றும் 18 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. [144][145]
தமிழகம் அழியும் அபாயத்தில் உள்ள வங்காளப் புலிகள் மற்றும் இந்திய யானைகளின் அதிக எண்ணிக்கையிலான மக்கள்தொகையை கொண்டுள்ளது.[146][147] மாநிலத்தில் தலா ஐந்து யானை சரணாலயங்கள் மற்றும் புலிகள் காப்பகங்கள் உள்ளன.[144][148] தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூரில் ஒரு சிறப்பு பாதுகாப்புக் காப்பகம் உள்ளது. தமிழகத்தில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட விலங்குக் காட்சிச்சாலைகள் உள்ளன: வண்டலூர் விலங்கியல் பூங்கா மற்றும் சென்னை முதலை பண்ணை.[149] கோயம்புத்தூர் வ. உ. சி. பூங்கா, வேலூர் அமிர்தி விலங்கியல் பூங்கா, ஏற்காடு மான் பூங்கா, சேலம் குரும்பம்பட்டி வனவிலங்கு பூங்கா, திருச்சிராப்பள்ளி முக்கொம்பு மான் பூங்கா மற்றும் நீலகிரி மான் பூங்கா போன்ற உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் நடத்தப்படும் பிற சிறிய உயிரியல் பூங்காக்கள் மாநிலத்தில் உள்ளன.[144] மாநிலத்தில் ஐந்து முதலைப் பண்ணைகள் உள்ளன.[144]
பதவி | பெயர் |
---|---|
ஆளுநர் | ஆர். என். ரவி[150] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[151] |
தலைமை நீதிபதி | சஞ்சய் கங்கபூர்வாலா[152] |
மாநிலத்தின் தலைநகரான சென்னை பெரும்பாலான அரசு அலுவலகங்கள், சட்டமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.[153] மாநில அரசின் நிர்வாகம் பல்வேறு செயலகத் துறைகள் மூலம் செயல்படுகின்றது. மாநில அரசில் மொத்தம் 43 துறைகள் உள்ளன. மேலும் இந்தத் துறைகள் பல்வேறு பல்வேறு முயற்சிகள் மற்றும் வாரியங்களை நிர்வகிக்கும் துணைப் பிரிவுகளைக் கொண்டுள்ளன.[154] நிர்வாக ரீதியாக இம்மாநிலம், 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட ஒரு மாவட்ட ஆட்சியர் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. வருவாய் நிர்வாகத்திற்காக, மாவட்டங்கள் மேலும் 87 வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன, அவை வருவாய் கோட்ட அலுவலர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த கோட்டங்கள் ஏறத்தாழ 310 தாலுகாக்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.[155] இந்தத் தாலுகாக்கள் 17,680 வருவாய் கிராமங்களைக் உள்ளடக்கியிருக்கின்ற 1,349 வருவாய் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.[155]
உள்ளூர் நிர்வாகதிற்காக 25 மாநகராட்சிகள், 117 நகராட்சிகள், 487 பேரூராட்சிகள், 528 நகர பஞ்சாயத்துக்கள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,618 ஊராட்சி மன்றங்கள் ஆகியனவாக பிரிக்கப்பட்டுள்ளன.[156][155][157] 1688 இல் நிறுவப்பட்ட சென்னை மாநகராட்சி உலகின் இரண்டாவது பழமையானதாகும். புதிய நிர்வாக அலகாக நகர பஞ்சாயத்துக்களை நிறுவிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.[158][156]
இந்திய அரசியலமைப்பின் படி, ஆளுநர் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவராகவும், முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராகவும், அமைச்சர்கள் குழுவின் தலைவராகவும் உள்ளார்.[159] 1861 ஆம் ஆண்டின் இந்திய பேரவைகள் சட்டம் நான்கு முதல் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாகாண சட்டமன்றக் ஆலோசனைக் குழுவை நிறுவியது. 1892 ஆம் ஆண்டு 20 உறுப்பினர்களைக் கொண்டதாகவும், 1909 ஆம் ஆண்டில் 50 உறுப்பினர்களைக் கொண்டதாகவும் இருந்தது.[160][161] 1921 ஆம் ஆண்டில் இந்தப் பேரவை, ஆளுநரால் நியமிக்கப்படும் 34 உறுப்பினர்களுடன் சேர்த்து 132 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.[162] இந்திய அரசு சட்டம் 1935 இன் படி, சூலை 1937 இல் 54 முதல் 56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்ற மேலவை நிறுவப்பட்டது.[162] இந்திய அரசியலமைப்பின் படி முதலாவது சட்டமன்றம் 1952 தேர்தல்க்குப் பிறகு 1 மார்ச் 1952 இல் அமைக்கப்பட்டது. 1956 இல் மாநிலங்களின் மறுசீரமைப்பிற்குப் பிறகு சட்டமன்றத்தில் இடங்களின் எண்ணிக்கை 206 ஆக இருந்தது, இது 1962 இல் 234 ஆக அதிகரிக்கப்பட்டது.[162] 1986 ஆம் ஆண்டில், தமிழ்நாடு சட்டமன்றக் குழு சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சட்டமன்ற மேலவை கலைக்கப்பட்டது.[163] தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்படுகின்றது.[164] தமிழகம் மக்களவைக்கு 39 மற்றும் மாநிலங்களவைக்கு 18 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது.[165]
சென்னை உயர் நீதிமன்றம் 26 சூன் 1862 இல் நிறுவப்பட்டது. மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.[166] இது ஒரு தலைமை நீதிபதி தலைமையில் இயங்குகின்றது. 2004 முதல் மதுரையில் ஒரு உயர் நீதிமன்ற கிளை செயல்படுகின்றது.[167]1859 இல் சென்னை மாநில காவல்துறையாக நிறுவப்பட்ட தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றது.[168] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 132,000 க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு ஒரு தலைமை இயக்குநரின் கீழ் காவல்துறை இயங்குகின்றது.[169][170] காவல்துறையில் ஏறத்தாழ 17.6% பெண்கள் பணியாற்றுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கையாள 222 சிறப்பு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.[171][172][173] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 47 இரயில்வே மற்றும் 243 போக்குவரத்து காவல் நிலையங்கள் உட்பட 1854 காவல் நிலையங்கள் உள்ளன.[171][174] மாவட்ட நிர்வாகங்களின் கீழ் உள்ள போக்குவரத்து காவல்துறை அந்தந்த பகுதிகளில் போக்குவரத்து மேலாண்மைக்கு பொறுப்பாகும்.[175] 2018 ஆம் ஆண்டில் 100,000 க்கு 22 என்ற குற்ற விகிதத்துடன் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்கின்றது.[176]
தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 ஆகும். சட்டமன்றம் மாற்றும் மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல்கள் 1950 இல் நிறுவப்பட்ட ஒரு சுதந்திர அமைப்பான இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.[177] தமிழ்நாட்டில் அரசியலில் 1960கள் வரை தேசிய காட்சிகள் ஆதிக்கம் செலுத்தின. அதற்கு பிந்தைய காலம் தொட்டு பிராந்திய கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. முன்னாள் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியும் சுயாட்சிக் கட்சியும் இரண்டு பெரிய கட்சிகளாக இருந்தன.[178] 1920கள் மற்றும் 1930களில், தியாகராய செட்டி மற்றும் பெரியார் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கம், சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியை உருவாக்க வழிவகுத்தது.[179] இறுதியில் நீதிக்கட்சி 1937 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வியடைந்தது மற்றும் இராசகோபாலாச்சாரி முதலமைச்சரானார்.[178] 1944 இல், பெரியார் நீதிக்கட்சியை ஒரு சமூக அமைப்பாக மாற்றினார், கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றி, தேர்தல் அரசியலில் இருந்து விலகினார்.[180] சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் தலைமையில் 1950கள் மற்றும் 1960 களில் இந்திய தேசிய காங்கிரசு தமிழ்நாட்டின் அரசியல் காட்சியில் ஆதிக்கம் செலுத்தியது.[181][182] பெரியாரைப் பின்பற்றிய அண்ணாதுரை 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) தொடங்கினார்.[183]
தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது. இது 1967 இல் திமுக அரசமைக்க உதவி செய்தது. [184] 1972 இல், திமுகவில் ஏற்பட்ட பிளவின் விளைவாக ம. கோ. இராமச்சந்திரன் தலைமையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) உருவானது.[185] இன்று வரை தொடர்ந்து திராவிடக் கட்சிகள் தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன, தேசியக் கட்சிகள் பொதுவாக முக்கிய திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவுடன் இளைய பங்காளிகளாக இணைகின்றன.[186]அண்ணாதுரைக்குப் பிறகு மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், ராமச்சந்திரனுக்குப் பிறகு அதிமுகவின் தலைவராக ஜெயலலிதாவும் பணியாற்றினார். [187][181] கருணாநிதியும் ஜெயலலிதாவும் 1980 களில் இருந்து 2010 களின் முற்பகுதி வரை மாநில அரசியலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர், 32 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர்களாக பணியாற்றினர்.[181]
சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் இந்தியத் தலைமை ஆளுநராக இருந்த இராசகோபாலாச்சாரி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்,[188] ஆர். வெங்கட்ராமன்,[189] மற்றும் அப்துல் கலாம் ஆகிய மூன்று இந்தியக் குடியரசுத் தலைவர்களை இந்த மாநிலம் உருவாக்கியுள்ளது.[190]
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1901 | 1,92,52,630 | — |
1911 | 2,09,02,616 | +8.6% |
1921 | 2,16,28,518 | +3.5% |
1931 | 2,34,72,099 | +8.5% |
1941 | 2,62,67,507 | +11.9% |
1951 | 3,01,19,047 | +14.7% |
1961 | 3,36,86,953 | +11.8% |
1971 | 4,11,99,168 | +22.3% |
1981 | 4,84,08,077 | +17.5% |
1991 | 5,58,58,946 | +15.4% |
2001 | 6,24,05,679 | +11.7% |
2011 | 7,21,47,030 | +15.6% |
ஆதாரம்: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு[191] |
தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72,147,030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36,137,975 மற்றும் பெண்கள் 36,009,055 ஆகவும் இருந்தனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக இருந்தது.[192] அதில் சிறுவர்கள் 3,820,276 ஆகவும்: சிறுமிகள் 3,603,556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.6% ஆக இருந்தது.[1] 48.4 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். நாட்டிலேயே மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.[101] பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் இருந்தனர். இது தேசிய சராசரியான 943 ஐ விட அதிகம்.[193] 2015-16 நான்காவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் போது பிறப்பு பாலின விகிதம் 954 ஆக பதிவு செய்யப்பட்டது. இது 2019-21 இல் 878 ஆகக் குறைந்து.[194] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படிப்பறிவு 80.1% ஆக இருந்தது, இது தேசிய சராசரியான 73% ஐ விட அதிகமாகும்.[195] 2017 தேசிய புள்ளியியல் ஆணையத்தின் கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு விகிதம் 82.9% என மதிப்பிடப்பட்டுள்ளது.[196] மொத்தம் 1.44 கோடி (20%) பட்டியல் சாதியினர் (SC) மற்றும் 8 இலட்சம் (1.1%) பழங்குடியினர் (ST) இருந்தனர்.[197]
2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.6 குழந்தைகள் இருந்தது. இது இந்தியாவிலேயே மிகக் குறைந்த கருவுறுதல் விகிதமாகும். [198] 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மனித மேம்பாட்டுச் சுட்டெண் (HDI) 0.686 ஆக இருந்தது, இது இந்திய சராசரியை (0.633) விட அதிகமாக இருந்தது.[5] 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆகா இருந்தது. இது பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட அதிகமாகும்.[199] 2023 இல், 2.2% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்.[200]
சமயம் | சதவீதம் |
---|---|
இந்து | 87.58 |
கிறித்தவம் | 6.12 |
இசுலாம் | 5.86 |
சைனம் | 0.12 |
மற்றவை | 1.53 |
தமிழகமானது பலதரப்பட்ட சமூகங்களின் மக்களைக் கொண்டுள்ளது.[202][203]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்து சமயத்தை 87.6% மக்கள் பின்பற்றுகின்றனர். மாநிலத்தில் 6.1% மக்கள்தொகையுடன் கிறித்தவ சமயத்தினர் மிகப்பெரிய மத சிறுபான்மையினராக உள்ளனர். இசுலாமியர்கள் மக்கள் தொகையில் 5.9% உள்ளனர்.[204]
தமிழர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ளனர். இது தவிர மற்ற மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் குறிப்பிட தக்க அலையில் உள்ளனர். 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் ஏறத்தாழ 34.9 இலட்சம் வெளி மாநிலத்தவர் இருந்தனர்.[205][206]
தமிழ்நாட்டின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாக செயல்படுகிறது.[2] தமிழ் பழமையான மொழிகளில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவில் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் மொழியாகும்.[208] 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தின் மக்கள்தொகையில் 88.4% தமிழை முதல் மொழியாகப் பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து தெலுங்கு (5.87%), கன்னடம் (1.78%), உருது (1.75%), மலையாளம் (1.01%) மற்றும் பிற மொழிகள் (1.24%) பேசுகின்றனர்.[207]
வட தமிழகத்தில் சென்னைத் தமிழ், மேற்குத் தமிழ்நாட்டில் கொங்குத் தமிழ், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதுரைத் தமிழ், தென்கிழக்குத் தமிழ்நாட்டில் நெல்லைத் தமிழ் மற்றும் தெற்கில் குமரித் தமிழ் எனப் பல்வேறு இடங்களில் பல வட்டார வழக்குகள் பேசப்படுகின்றன.[209][210] தற்போது வழக்கில் பேசும் போது, தமிழ் மொழியில் சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலிருந்து கடன் வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.[211][212] மாநிலத்தில் வெளிநாட்டவர்களால் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன.[213]
இம்மாநிலத்தின் தலைநகரமான சென்னை, அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகும். இங்கு 80 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கோயம்புத்தூர் ஆகும். அதைத் தொடர்ந்து முறையே மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்கள் உள்ளன.[214]
தமிழ் பெண்கள் பாரம்பரியமாக புடவை அணிவார்கள். இது பொதுவாக 4.6 முதல் 8.2 மீ நீளம் கொண்ட ஒரு துணியாகும். இடுப்பைச் சுற்றி, ஒரு முனையை தோளில் போர்த்தி இது அணியப்படுகின்றது.[215][216] சிலப்பதிகாரம் போன்ற பழங்கால தமிழ் நூல்கள் பெண்கள் நேர்த்தியான புடவை அணிந்ததை விவரிக்கின்றன. [217] திருமணம் போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் பெண்கள் வண்ணமயமான பட்டுப் புடைவைகளை அணிவார்கள்.[218] ஆண்கள் 4.5 மீ நீளமுள்ள, வெள்ளை நிற வேட்டி அணிகின்றனர். பெரும்பாலும் பிரகாசமான வண்ணக் கோடுகளுடன் இருக்கும் இவை, பொதுவாக கால்களில் சுற்றி இடுப்பில் முடிச்சு போடப்படுகின்றன.[219]வண்ணமயமான வடிவங்களைக் கொண்ட லுங்கி என்பது கிராமப்புறங்களில் ஆண்களின் மிகவும் பொதுவான உடையாகும்.[220] நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பொதுவாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிகிறார்கள். மேற்கத்திய பாணி உடைகள் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அனைத்து பாலினத்தவராலும் அணியப்படுகின்றன.[220] காஞ்சிப் பட்டு என்பது தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் தயாரிக்கப்படும் ஒரு வகை பட்டுப் புடவையாகும், இந்த புடவைகள் தென்னிந்தியாவில் பெரும்பாலான பெண்களால் திருமண மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் அணியப்படுகின்றன.[221] கோவை கோரா பருத்தி என்பது கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் ஒரு வகை பருத்திச் சேலை ஆகும். இவை இரண்டும் இந்திய அரசால் புவியியல் குறியீடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[222][223]
தமிழர் உணவு பெரும்பாலும் அரிசியைச் சார்ந்ததாகும்.[224] இப்பகுதியானது பல பாரம்பரிய சைவ மற்றும் அசைவ உணவு வகைகளைக் கொண்டுள்ளது. தேங்காய் மற்றும் மசாலாப் பொருட்கள் உணவுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. உணவின் தனித்துவமான நறுமணம் மற்றும் சுவை மசாலாப் பொருட்களின் கலவையால் அடையப்படுகிறது.[225][226] பாரம்பரிய முறைப்படி, தரையில் அமர்ந்து, வாழை இலையில் பரிமாறப்பட்ட உணவை வலது கையினால் உண்ணுவதே வழக்கமாக இருந்தது.[227] மத்திய உணவு சாம்பார், ரசம் மற்றும் பொரியல் ஆகியவற்றுடன் பரிமாறப்படுகின்றது. உண்ட பிறகு எளிதில் மக்கக்கூடிய வாழை இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறும்.[228] வாழை இலையில் உண்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான வழக்கமாகும், இது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது, மேலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.[229][230] இட்லி, தோசை, ஊத்தப்பம், பொங்கல், மற்றும் பணியாரம் ஆகியவை தமிழ்நாட்டில் பிரபலமான காலை உணவுகளாகும்.[231]. பழனி பஞ்சாமிர்தம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, சேலம் ஜவ்வரிசி ஆகிவை புவிசார் குறியீடு பெற்ற உணவுகளாகும்.[232]
தமிழகம் சங்க காலத்திலிருந்து 2500 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.[7] ஆரம்பகால தமிழ் இலக்கியம் மூன்று தொடர்ச்சியான தமிழ்ச் சங்கங்களில் இயற்றப்பட்டது. பழங்கால புராணங்களின் படி, இந்தியாவின் தெற்கே தற்போது மறைந்துவிட்ட கண்டத்தில் இவை இயற்றப்பட்டதாக தெரிகிறது.[233] இதில் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியங்களும் அடங்கும்.[234] பாறைகள் மற்றும் கற்களில் காணப்படும் ஆரம்பகால தமிழ் கல்வெட்டுப் பதிவுகள் கிமு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கணிக்கப்பட்டுள்ளன.[235][236] சங்க காலத்திலிருந்து கிடைக்கப்பெற்ற இலக்கியங்கள் காலவரிசையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு பதினெண்மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள தமிழ் இலக்கணம் பெரும்பாலும் தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்ட 13 ஆம் நூற்றாண்டின் நன்னூல் எனும் இலக்கண நூலை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது.[237] திருவள்ளுவரின் நெறிமுறைகள் பற்றிய திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் மிகவும் பிரபலமான படைப்புகளில் ஒன்றாகும்.[238]
ஆறாம் நூற்றாண்டில் ஆழ்வார்கள் மற்றும் நாயனார்களால் இயற்றப்பட்ட பாடல்களுடன் தோற்றுவிக்கப்பட்ட பக்தி இயக்கத்தைத் தொடர்ந்து வைணவ மற்றும் சைவ இலக்கியங்கள் முக்கியத்துவம் பெற்றன..[239][240][241] பல்வேறு படையெடுப்புகள் மற்றும் நிலையற்ற தன்மை காரணமாக இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் இலக்கியங்கள் பெரிதாக தோன்றவில்லை. மீண்டும் 11ஆம் நூற்றாண்டிற்கு பிறகு கம்பரால் எழுதப்பட்ட ராமாவதாரம் உட்பட குறிப்பிடத்தக்க படைப்புகளுடன் செழித்த வளர்ந்தது. [242] 14 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இலக்கியங்களில் அருணகிரிநாதரின் திருப்புகழ் குறிப்பிடத்தக்கது.[243] 1578 இல், போர்த்துகீசியர்கள் தம்பிரான் வணக்கம் என்ற ஒரு தமிழ் புத்தகத்தை வெளியிட்டனர், இதன் மூலம் தமிழ் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட முதல் இந்திய மொழியாக திகழ்ந்தது.[244] மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சுவாமிநாத ஐயர், இராமலிங்க அடிகள் மற்றும் மறைமலை அடிகள் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மற்றும் கவிதைகள் 19 ஆம் நூற்றாண்டு தமிழ் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தது.[245][246] இந்திய விடுதலை இயக்கத்தின் போது, சுப்பிரமணிய பாரதியார், பாரதிதாசன் மற்றும் பல தமிழ் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தேசிய உணர்வு, சமூக சமத்துவம் மற்றும் மதச்சார்பற்ற சிந்தனைகளைத் தூண்ட முயன்றனர்.[247]
திராவிடக் கட்டிடக்கலை என்பது தமிழ்நாட்டின் கட்டிடக்கலையின் தனித்துவமான பாணியாகும்.[248] திராவிடக் கட்டிடக்கலையில், கோவில்களின் கருவறையைச் சுற்றி பல தூண் கொண்ட மண்டபங்கள் உள்ளன. கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்களில் நான்கு திசைகளிலும் பெரிய கோபுரங்களைக் கொண்ட பெரிய வாயில்கள் இருக்கும். இவை தவிர, ஒரு தென்னிந்திய கோவிலில் பொதுவாக கல்யாணி என்று அழைக்கப்படும் ஒரு குளம் இருக்கும்.[249] கோயிலின் நுழைவாயிலில் உள்ள கோபுரம் திராவிட பாணியின் இந்துக் கோயில்களின் முக்கிய அம்சமாகும்.[250][251] மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை கட்டிய பல்லவர்களிடம் இருந்து இந்த கோபுரத்தின் தோற்றம் வந்ததாக அறியப்படுகிறது.[47] பின்னர் சோழர்கள் அதை விரிவுபடுத்தினர் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சியின் போது, இந்த நுழைவாயில்கள் கோயிலின் வெளிப்புற தோற்றத்தின் முக்கிய அம்சமாக மாறியது.[252][253]
தமிழக மாநிலச் சின்னத்தில் அசோகரின் சிங்க தலைப் பின்னணியில் ஒரு கோபுரத்தின் உருவம் உள்ளது.[254] விமானம் என்பது கர்ப்பக்கிரகம் அல்லது கோயிலின் உள் கருவறையின் மீது கட்டப்பட்ட கோபுரத்தை ஒத்த கட்டமைப்புகள் ஆகும். இவை பொதுவாக கோபுரங்களை விட சிறியதாக இருக்கும்.[255][256]
இடைக்காலத்தில் முகலாய கட்டிட பாணி மற்றும் பின்னர் ஐரோப்பிய பாணி ஆகியவற்றுடன் இணைந்து பல கலவைகள் தோன்றின. பிரித்தானிய காலத்தில் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டன.[257][258] சுதந்திரத்திற்குப் பிறகு, கட்டிடக்கலை நவீனத்துவம் பெற்று சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டுமானத்திலிருந்து கான்கிரீட் பயன்பாட்டுக்கு மாறியது.[259]
இசை, கலை, நடனம் ஆகியவற்றுக்கு தமிழ்நாடு முக்கிய மையமாக உள்ளது.[260] சென்னை தென்னிந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.[261] சங்க காலத்தில் கலை வடிவங்கள் இயல், இசை மற்றும் நாடகம் என வகைப்படுத்தப்பட்டன.[262] பரதநாட்டியம் தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு பாரம்பரிய நடன வடிவமாகும், இது இந்தியாவின் பழமையான நடனங்களில் ஒன்றாகும்.[263][264][265] பிற பிராந்திய நாட்டுப்புற நடனங்களில் கரகாட்டம், காவடி, ஒயிலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆகியவை அடங்கும்.[266][267][268][269] தமிழ்நாட்டின் நடனம், உடை மற்றும் சிற்பங்கள் உடல் மற்றும் தாய்மையின் அழகை எடுத்துக்காட்டுகின்றன.[270] கூத்து என்பது தமிழர்களின் பழங்கால நாட்டுப்புறக் கலையாகும். இதில் கலைஞர்கள் நடனம் மற்றும் இசையுடன் கதைகளைச் சொல்கிறார்கள்.[271]
பண்டைய தமிழ் நாடு சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களால் விவரிக்கப்படும் தமிழ் பண்ணிசை எனப்படும் தனக்கே உரிய இசை அமைப்பைக் கொண்டிருந்தது.[272] ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கல்வெட்டு, இந்திய இசைக் குறியீடுகளின் பழம்பெரும் உதாரணங்களில் ஒன்றாகும்.[273] பாறை, தாரை, யாழ் மற்றும் முரசு போன்ற பல பாரம்பரிய வாத்தியங்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன.[274][275] நாதசுவரம் மற்றும் தவில் கோயில்கள் மற்றும் திருமணங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய இசைக்கருவிகளாகும்.[276] தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை கர்நாடக இசை என அழைக்கப்படுகிறது, இதில் முத்துசுவாமி தீட்சிதர் போன்ற இசையமைப்பாளர்களின் தாள மற்றும் கட்டமைக்கப்பட்ட இசை தொகுப்புகள் அடங்கும்.[277] பல்வேறு நாட்டுப்புற இசைகளின் கலவையான கானா வடசென்னையில் பாடப்படுகிறது.[278]
பெரும்பாலான காட்சிக் கலைகள் ஏதோவொரு வடிவத்தில் சமயம் சார்ந்தவையாக இருக்கின்றன. பொதுவாக இந்து சமயத்தை மையமாகக் கொண்டவையாக இருப்பினும், சில நேரங்களில் மனிதநேயம் மற்றும் உலகளாவிய கருப்பொருள்களைக் குறிக்கவும் செய்கின்றன.[280] தமிழர்களின் சிற்பக்களை என்பது கோவில்களில் உள்ள கல் சிற்பங்கள் முதல் விரிவான உலோக மற்றும் வெண்கல சிற்பங்கள் வரை உள்ளடக்கியதாகும்.[281] சோழர்களின் வெண்கலச் சிலைகள் தமிழ்க் கலையின் மிகப் பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[282] பெரும்பாலான மேற்கத்திய கலைகளைப் போலல்லாமல், தமிழர் சிற்பங்களில் கலைஞர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பொருளை வடிமைக்கின்றனர்.[283] சித்தனவாசல் குகைகளில் ஏழாம் நூற்றாண்டின் பாண்டியர் மற்றும் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன. இவை மெல்லிய ஈரமான மேற்பரப்பில் சுண்ணாம்பு பூச்சு மற்றும் கனிம சாயங்கள் கொண்டு வரையப்பட்டுள்ளன.[284][285][286] கோயில் சுவர்களில் இதே போன்ற சுவரோவியங்கள் காணப்படுகின்றன.[287] 16 ஆம் நூற்றாண்டில் உருவான தமிழ் ஓவியத்தின் முக்கிய வடிவங்களில் ஒன்று தஞ்சாவூர் ஓவியம். இது தூதனாகத்தால் பயன்படுத்தி வரையப்பட்டு, பின்னர் வெள்ளி அல்லது தங்க நூல்கள் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்படுகின்றன.[288]
தமிழகத்தில் பல அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் கலை ஆராய்ச்சியில் ஈடுபடும் பிற நிறுவனங்கள் உள்ளன.[289] 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவப்பட்ட அரசு அருங்காட்சியகம் மற்றும் தேசிய கலைக்கூடம் ஆகியவை நாட்டிலேயே மிகப் பழமையானவை.[290][291] புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகம் பிரித்தானிய காலத்தின் பல பொருட்களின் தொகுப்பை பராமரிக்கிறது.[292]
இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்புத் தொழில்களில் ஒன்றான தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகமாக தமிழ்நாடு விளங்குகிறது.[293][294][295] தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் 1916 இல் தமிழில் தயாரிக்கப்பட்டது. 31 அக்டோபர் 1931 இல் முதல் பேசும்படமான காளிதாஸ் வெளியானது.[296][297] கோயம்புத்தூரில் தென்னிந்தியாவின் முதல் சினிமாவைக் கட்டிய சாமிக்கண்ணு வின்சென்ட் "கொட்டகை சினிமா"வை அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு நகரம் அல்லது கிராமத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு படங்கள் திரையிடப்பட்டது.[298][299]
பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய அறுவடை திருவிழா ஆகும்.[300] இது தமிழ் நாட்காட்டியின்படி தை மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.[301] சூரியனை வணங்க கொண்டாடப்படும் இந்த திருவிழாவில், பாலில் வேகவைத்த அரிசியுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் பாரம்பரிய பொங்கல் உணவு தயாரிக்கப்படுகின்றது.[302][303][304] மாட்டுப் பொங்கல் தினத்தன்று கால்நடைகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்குப் பளபளப்பான வண்ணங்கள் பூசப்பட்டு, கழுத்தில் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, ஊர்வலமாக கூட்டிச்செல்லப்படுகின்றன.[305] பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் காளைகளை அடக்கும் பாரம்பரிய ஏறுதழுவல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.[306]
தமிழ்ப் புத்தாண்டு தமிழ் நாட்காட்டியின் படி ஆண்டின் முதல் நாளன்று கொண்டப்படுகின்றது.[308] கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி நாளில் அனுசரிக்கப்படும் தீபங்களின் திருவிழாவாகும்.[309][310] தைப்பூசம் என்பது தமிழ் மாதமான தை மாதத்தின் முதல் பௌர்ணமி நாளில் தமிழ்க்கடவுளான முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டிகையாகும்.[311][312] ஆடிப் பெருக்கு என்பது ஆடி மாதத்தின் 18 வது நாளில் கொண்டாடப்படும் ஒரு தமிழ் கலாச்சார விழாவாகும். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடி மாதத்தின் போது மாரியம்மன் மற்றும் அய்யனார் வழிபாடு மற்றும் பண்டிகைகள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகின்றன.[313] பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தின் பௌர்ணமி அன்று கொண்டாடப்படுகின்றது.[314] மகா சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, நோன்புப் பெருநாள், பக்ரீத், முகரம், வினாயகர் சதுர்த்தி, சரசுவதி பூசை, கிறிஸ்துமஸ், புனித வெள்ளி போன்ற சமயம் சார்ந்த திருநாட்களும் கொண்டாடப்படுகின்றன.
1 நவம்பர் 1956 அன்று மொழிவாரி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நாளை, தமிழ்நாடு நாள் என கொண்டாடப்படும் என்று 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.[315][316]
1970களில் சீர்திருத்தம் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, மாநிலத்தின் பொருளாதாரம் தேசிய சராசரி வளர்ச்சி விகிதங்களைத் விட அதிகமாக இருந்தது.[317] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ₹ 23.65 டிரில்லியன் (US$300 பில்லியன்) ஆக இருந்தது. இது இந்திய மாநிலங்களிலேயே இரண்டாவது மிக அதிகமானதாகும்.[3] இந்தியாவிலேயே தமிழ்நாடு மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகும்.[318] மாநிலம் வறுமைக் கோட்டின் கீழ் குறைந்த சதவிகிதம் மக்களைக் கொண்டிருந்தாலும், கிராமப்புற வேலையின்மை விகிதம் ஆயிரத்திற்கு 47 என்ற அளவில் தேசிய சராசரியான 28 உடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிகமாக உள்ளது.[200][319] 26 இலட்சம் பணியாளர்கள் 38,837 தொழிற்சாலைகளில்வேலை செய்கின்றனர்.[320][321]
வாகன, வன்பொருள் மற்றும் துணி உற்பத்தி, மென்பொருள், சுகாதாரம் மற்றும் நிதி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்துறைகள் தமிழகத்தில் சிறந்து விளங்குகின்றன.[322][323] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, சேவைகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55% பங்களித்தன, அதைத் தொடர்ந்து உற்பத்தி 32% மற்றும் விவசாயம் 13% பங்களித்தன.[324] மாநிலத்தில் 42 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (SEZ) உள்ளன.[325] இந்திய அரசாங்கத்தின் அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் அதிகம் ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.[326]
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, ₹ 576.87 பில்லியன் (US$7.2 பில்லியன்) மதிப்புடன் இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி மாநிலங்களில் தமிழகம் ஒன்றாகும்.[327][328] 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னையில் உள்ள டைடல் பார்க் ஆசியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றாகும்.[329] பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அமைப்பு மற்றும் அரசாங்கக் கொள்கைகள் இத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்துள்ளன, இது வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வேலை தேடுபவர்களை ஈர்த்துள்ளது.[330][331] 2020களில், சென்னை சேவையாக மென்பொருளின் முக்கிய வழங்குநராக மாறியது மற்றும் "இந்தியாவின் சேவையாக மென்பொருள் தலைநகரம்" என்று அழைக்கப்படுகின்றது.[332][333]
மாநிலத்தில் இரண்டு பங்குச் சந்தைகள் உள்ளன, கோயம்புத்தூர் பங்குச் சந்தை 2013 இல் நிறுவப்பட்டது மற்றும் சென்னை பங்குச் சந்தை 2015 இல் நிறுவப்பட்டது.[334][335] இந்தியாவில் முதல் ஐரோப்பிய பாணி வங்கி அமைப்பான மெட்ராசு வங்கி, 21 சூன் 1683 இல் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்துசுதான் வங்கி (1770) மற்றும் இந்தியப் பொது வங்கி (1786) போன்ற வங்கிகள் நிறுவப்பட்டன.[336] பேங்க் ஆப் மெட்ராசு மற்ற இரண்டு மாகாண வங்கிகளுடன் இணைந்து 1921 இல் இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியாவை உருவாக்கியது, இது 1955 இல் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியானது.[337]ஆறு வங்கிகள் உட்பட 400 க்கும் மேற்பட்ட நிதித் தொழில் வணிகங்கள் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகின்றன.[338][339][340][341] இந்திய ரிசர்வ் வங்கியின் தெற்கு மண்டல அலுவலகம், அதன் மண்டல பயிற்சி மையம் மற்றும் பணியாளர் கல்லூரி ஆகியவை சென்னையில் உள்ளது.[342] மாநிலத்தில் சென்னையில் உலக வங்கியின் நிரந்தர அலுவலகம் உள்ளது.[343]
மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைத் தவிர, பல்வேறு மாநில அரசுக்கு சொந்தமான உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் $5.37 பில்லியன் வெளியீட்டைக் கொண்ட வன்பொருள் உற்பத்தித் துறை, இந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரியதாகும்.[344][345] ஏராளமான தானுந்து தயாரிப்பு நிறுவனங்கள் மாநிலத்தில் தங்கள் உற்பத்தித் தளங்களைக் கொண்டுள்ளன. மேலும் இந்தியாவின் ஒட்டுமொத்த வாகன உதிரிபாகங்கள் மற்றும் தானுந்து உற்பத்தியில் 35% க்கும் அதிகமாக பங்களிக்கும் சென்னை "இந்தியாவின் டெட்ராய்ட்" என்ற புனைப்பெயரைப் பெற்றுள்ளது.[346][347][348] சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டித் தொழிற்சாலை இந்திய இரயில்வேக்கான தொடருந்து பெட்டிகள் மற்றும் பாகங்களைத் தயாரிக்கிறது.[349]
மாநிலத்தின் மற்றுமொரு பெரிய தொழில்துறை துணி நெசவு மற்றும் தயாரிப்பாகும். இந்தியாவில் செயல்படும் நூற்பாலைகளில் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் தமிழகத்தில் உள்ளன.[350][351] பருத்தி உற்பத்தி மற்றும் சவுளித் தொழில் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என்று குறிப்பிடப்படுகிறது.[352] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருப்பூர் $480 பில்லியன் மதிப்பிலான பின்னலாடைகளை ஏற்றுமதி செய்தது, இது இந்தியாவிலிருந்து செய்யப்படும் துணி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 54% பங்களிப்பாகும். ஆடை ஏற்றுமதியில் முன்னணி வகிப்பதால், இந்நகரம் பின்னலாடைகளின் தலைநகரமாக அறியப்படுகிறது.[353][354] 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்களிலும் செய்யப்பட்ட மொத்த முதலீட்டில் 17% இந்த துறையில் செய்யப்பட்டது.[355]
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, ₹ 92.52 பில்லியன் (US$1.2 பில்லியன்) மதிப்புள்ள தோல் பொருட்கள் மாநிலத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. இது இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற தோல் பொருட்களில் 40% மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.[356] சிவகாசி இந்தியாவில் பெரும்பாலான பட்டாசுகளை தயாரிக்கிறது. இந்தியாவின் தேவைகளில் மூன்றில் இரண்டு பங்கு மின்சார இயக்கிகள் மற்றும் பெரும்பாலான ஈரமாவு அரவைப்பொறிகள் இங்கு தயாரிக்கப்படுகின்றன. கோயமுத்தூர் ஈரமாவு அரவைப்பொறி ஒரு அங்கீகரிக்கப்பட்ட புவியியல் குறியீடாகும்.[357][358]
அருவங்காடு மற்றும் திருச்சிராப்பள்ளியில் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன.[359][360] சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்திய கவச வாகனங்கள் தயாரிப்பு பிரிவு, இந்தியப் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டிற்காக கவச வாகனங்கள், தானுந்துகள், இயந்திரப் பொறிகள் மற்றும் கவச ஆடைகளை உற்பத்தி செய்கிறது.[361][362] இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மகேந்திரகிரியில் ஒரு ஏவூர்தி உந்துவிசை ஆராய்ச்சி நிலையத்தை இயக்குகிறது.[363]
விவசாயம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% பங்களிக்கிறது மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய வேலைவாய்ப்பை உருவாக்கி தருகிறது..[324] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 63.4 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு பயிரிடப்பட்டுள்ளது.[364][365] அரிசி மாநிலத்தின் பிரதான உணவு தானியமாகும். 2021-22 ஆம் ஆண்டில் 79 இலட்சம் டன்கள் உற்பத்தியுடன் தமிழகம் மிகப்பெரிய நெல் உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருக்கின்றது.[366] காவேரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் "தமிழ்நாட்டின் அரிசிக் கிண்ணம்" என்று அழைக்கப்படுகிறது.[367] உணவு அல்லாத தானியங்களில், கரும்பு முக்கிய பயிராகும். 2021-22 ஆம் ஆண்டில் 1.61 கோடி டன்கள் கரும்பு உற்பத்தி செய்யப்பட்டது.[368] தமிழகத்தில் பல்வேறு மசாலாப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் எண்ணெய் வித்துக்கள், மரவள்ளிக்கிழங்கு, கிராம்பு மற்றும் பூக்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.[369] நாட்டில் உற்பத்தியாகும் பழங்களில் 6.5% மற்றும் காய்கறிகளில் 4.2% தமிழகத்தில் உற்பத்தி செய்ப்படுகின்றன.[370][371] வாழை மற்றும் மா உற்பத்தியில் மாநிலம் முன்னணியில் உள்ளது.[372]
2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இயற்கை மீள்மம் மற்றும் தேங்காய் உற்பத்தியில் மாநிலம் இரண்டாவது பெரிய மாநிலமாக இருந்தது.[373] மலைப்பகுதிகளில் தேயிலை ஒரு பிரபலமான பயிராகும். ஒரு தனித்துவமான சுவை கொண்ட நீலகிரி தேயிலையின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது.[374][375]
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலம் 20.8 பில்லியன் வருடாந்திர உற்பத்தியுடன் கோழி மற்றும் முட்டைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உள்ளது, இது தேசிய உற்பத்தியில் 16% க்கும் அதிகமாக பங்களிக்கிறது.[376] மாநிலத்தில் 10.5 இலட்சம் மீனவர்கள் வசிக்கின்றனர் மற்றும் மூன்று பெரிய மீன்பிடி துறைமுகங்கள், மூன்று நடுத்தர மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் 363 மீன் இறங்குதுறை மையங்கள் உள்ளன.[377] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மீன் உற்பத்தி 8 இலட்சம் டன்களாக இருந்தது, இது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தியில் 5% பங்களிப்பாகும்.[378] மீன் வளர்ப்பில் இறால், ஆளி, கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பி வளர்ப்பு அடங்கும்.[379] "இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை" என்று அழைக்கப்படும் மா.சா.சுவாமிநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.[380]
தமிழகம் இந்தியாவின் மக்கள்தொகையில் 6% கொண்டிருந்தாலும், நாட்டின் நீர் ஆதாரங்களில் 3% மட்டுமே கொண்டிருக்கின்றது. தனிநபர் நீர் இருப்பு தேசிய சராசரியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது.[381] நீர் ஆதாரங்களை நிரப்புவதற்கு பருவமழையை நம்பியே உள்ளது. 17 பெரிய ஆற்றுப் படுகைகள் மற்றும் 61 நீர்த்தேக்கங்களைக் கொண்ட மாநிலத்தில், 90% நீர் விவசாயத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.[381] முக்கிய ஆறுகளில் காவேரி, பவானி, வைகை மற்றும் தாமிரபரணி ஆகியவை அடங்கும். பெரும்பாலான நதிகள் பிற மாநிலங்களில் இருந்து உற்பத்தியாகி வருவதால், தமிழகம் கணிசமான அளவு தண்ணீருக்காக அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கின்றது.[382] மாநிலத்தில் 116 பெரிய அணைகள் உள்ளன.[383] ஆறுகள் தவிர, மாநிலம் முழுவதிலும் உள்ள 41,000க்கும் மேற்பட்ட தொட்டிகள் மற்றும் 17 இலட்சம் கிணறுகளில் சேமிக்கப்படும் மழைநீரில் இருந்து பெரும்பாலான நீர் உபயோகத்திற்காக பெறப்படுகின்றது.[364]
நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆகியவை அந்தந்த உள்ளூர் நிர்வாக அமைப்புகளால் நிர்வகிக்கப்படுகின்றன.[384][385] சென்னையில் உள்ள நாட்டின் மிகப்பெரிய உப்பு நீர் சுத்திகரிப்பு ஆலைகள் குடிநீருக்கான மாற்று வழிகளை வழங்குகின்றன.[386] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 83.4% குடும்பங்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைக்கிறது, இது தேசிய சராசரியான 85.5% ஐ விட குறைவாக உள்ளது.[387] சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் ஆகியவற்றால் நீர் ஆதாரங்கள் அச்சுறுத்தப்படுகின்றன.[388]
தமிழகம் சுகாதார வசதிகளின் அடிப்படையில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும்.[389] உடல்நலம் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து அளவுருக்களிலும் நாட்டில் உயர்ந்த இடத்தில் உள்ளது.[199][390] ஐக்கிய நாடுகள் சபையால் 2015 ஆம் ஆண்டளவில் அடையப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிர்ணயம் செய்யப்பட்ட தாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை இறப்பைக் குறைத்தல் தொடர்பான இலக்குகளை தமிழ்நாடு 2009 ஆம் ஆண்டே அடைந்தது.[391][392]
மாநிலத்தில் உள்ள சுகாதார உள்கட்டமைப்பு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கியது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி மாநிலத்தில் 94,700 க்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட 404 பொது மருத்துவமனைகள், 1,776 பொது மருந்தகங்கள், 11,030 சுகாதார மையங்கள் மற்றும் அரசாங்கத்தால் நடத்தப்படும் 481 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன.[393][394] 16 நவம்பர் 1664 இல் நிறுவப்பட்ட சென்னை அரசுப் பொது மருத்துவமனை, இந்தியாவின் முதல் பொது மருத்துவமனையாகும். [395] மாநில அரசு தகுதியான வயதினருக்கு இலவச போலியோ தடுப்பூசியை வழங்குகிறது.[396] தமிழ்நாடு மருத்துவ சுற்றுலாவின் முக்கிய மையமாக உள்ளது மற்றும் சென்னை "இந்தியாவின் சுகாதார தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவிற்கு வருகை தரும் மொத்த மருத்துவ சுற்றுலா பயணிகளில் 40% க்கும் அதிகமானோர் தமிழ்நாட்டிற்கு வருகை தருவதால் மருத்துவ சுற்றுலா மாநிலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கின்றது.[397][398]
கடலுக்கடியில் ஒளிவட இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டுள்ள நான்கு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.[399][400][401] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நான்கு நிறுவனங்கள் நகர்பேசி சேவைகளை வழங்குகின்றன.[402] தொலைபேசி மற்றும் அகலப்பட்டை சேவைகள் ஐந்து பெரிய நிறுவனங்கள் மற்றும் பிற சிறிய உள்ளூர் நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.[403][402] அதிக இணைய பயன்பாடு மற்றும் பரவல் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. 2018 ஆம் ஆண்டில், அதிவேக இணையத்தை வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் 55,000 கி.மீ. ஒளி வட இணைப்புகள் அமைக்கும் திட்டத்தை மாநில அரசு தொடங்கியது.[404]
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மாநிலத்தில் மின்சார விநியோகம் செய்யப்படுகிறது.[405] 2023 ஆம் ஆண்டு வரை, சராசரி தினசரி நுகர்வு 15,000 மெகாவாட் ஆகா இருந்தது. இதில் 40% மின்சாரம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது, மீதமுள்ள 60% கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.[406] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி மாநிலம் மின்சார பயன்பாட்டில் நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது.[407][408] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 38,248 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டுள்ளது.[409] இதில் அனல் மின்சாரம் பெரும் பங்கு வகிக்கின்றது.[410] நாட்டிலேயே இரண்டு அணுமின் நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த அணுசக்தியில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி தமிழகம் உற்பத்தி செய்கிறது.[411] தமிழ் நாடு 8,000 மெகாவாட்டிற்கும் அதிகமான உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகளைக் கொண்டுள்ளது.[412]
மாநிலத்தில் செய்தித்தாள் வெளியீடு 1785 இல் தி மெட்ராஸ் கூரியர் வார இதழின் தொடக்கத்துடன் ஆரம்பித்தது.[413] அதைத் தொடர்ந்து 1795 ஆம் ஆண்டில் தி மெட்ராஸ் கெஜட் மற்றும் தி கவர்மெண்ட் கெசட் வார இதழ்கள் வெளிவந்தன.[414][415] 1836 இல் நிறுவப்பட்ட தி ஸ்பெக்டேட்டர் இதழ் ஒரு இந்தியாரால் நிறுவப்பட்ட முதல் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஆனது.[416] முதல் தமிழ் செய்தித்தாளான சுதேசமித்திரன் 1899 இல் தொடங்கப்பட்டது.[417][418] மாநிலத்தில் பல செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிடப்படுகின்றன.[419] தி இந்து, தினத்தந்தி, தினகரன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, தினமலர் மற்றும் தி டெக்கான் குரோனிக்கல் ஆகியவை ஒரு நாளைக்கு 100,000 க்கும் அதிகமான புழக்கத்தில் உள்ள முக்கிய நாளிதழ்கள் ஆகும்[420] தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் பரவலாக உள்ள பல பருவ இதழ்கள் மற்றும் உள்ளூர் செய்தித்தாள்களும் பல நகரங்களில் இருந்து பதிப்புகளை வெளியிடுகின்றன.[421]
அரசாங்கத்தால் நடத்தப்படும் தூர்தர்ஷன் 1974 இல் அமைக்கப்பட்ட அதன் சென்னை மையத்திலிருந்து நிலப்பரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்களை ஒளிபரப்புகிறது.[422] பொதிகை எனப்படும் தூர்தர்ஷனின் தமிழ் மொழி அலைவரிசை 14 ஏப்ரல் 1993 அன்று தொடங்கப்பட்டது.[423] இந்தியாவின் மிகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் உட்பட 30 க்கும் மேற்பட்ட தனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் உள்ளன.[424] கேபிள் டிவி சேவை முற்றிலும் மாநில அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் நேரடி வீட்டுத் தொலைக்காட்சி சேவைகள் தனியார் நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது.[425]வானொலி ஒலிபரப்பு 1924 இல் தொடங்கியது.[426] அகில இந்திய வானொலி 1938 இல் நிறுவப்பட்டது.[427] மாநிலத்தில் இயக்கப்படும் பல வானொலி நிலையங்கள் உள்ளன.[428][429] 2006 இல், தமிழ்நாடு அரசு அனைத்து குடும்பங்களுக்கும் இலவச தொலைக்காட்சிகளை விநியோகித்தது, இது தொலைக்காட்சி சேவைகளில் அதிக ஊடுருவலுக்கு வழிவகுத்தது.[430][431] 2010 களின் முற்பகுதியில் இருந்து, கேபிள் தொலைக்காட்சி சேவைகளுக்குப் பதிலாக நேரடி வீட்டுத் தொலைக்காட்சி பெருகிய முறையில் பிரபலமானது. [432] தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் பொழுதுபோக்கிற்கான முக்கிய பிரதான நேர ஆதாரமாக அமைகின்றன.[433]
356 தீயணைப்பு நிலையங்களை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை நிறுவனம் இயக்குகின்றது.[434] மாநிலத்தில் 11,800க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை இயக்கும் இந்திய அஞ்சல் துறை மூலம் அஞ்சல் சேவை கையாளப்படுகிறது. முதல் தபால் அலுவலகம் 1 சூன் 1786 இல் புனித ஜார்ஜ் கோட்டையில் நிறுவப்பட்டது.[435][436]
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாடு ஏறத்தாழ 2.71 இலட்சம் கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய விரிவான சாலை அமைப்பை கொண்டுள்ளது.[437] ஏப்ரல் 1946 இல் நிறுவப்பட்ட மாநிலத்தின் நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய மாவட்ட சாலைகள் மற்றும் மாநிலத்தில் உள்ள பிற சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பாகும்.[438] நெடுஞ்சாலைத் துறை 11 பிரிவுகள் மற்றும் 120 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 73,187 கி.மீ. (45,476 மைல்) தூர நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கிறது.[439][440] இந்திய பெருநகரங்களை இணைக்கும் தங்க நாற்கர திட்டத்திற்கான ஒரு முனையமும் இந்த மாநிலமாகும்.
வகை | நீளம் (கி.மீ.) |
---|---|
தேசிய நெடுஞ்சாலை | 6,805 |
மாநில நெடுஞ்சாலை | 12,291 |
முக்கிய மாவட்ட சாலை | 12,034 |
பிற மாவட்ட சாலை | 42,057 |
பிற சாலை | 197,542 |
மொத்தம் | 271,000 |
மாநிலத்தில் 6,805 கி.மீ. (4,228 மைல்) நீளமுள்ள 48 தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையின் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் வகுக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளைப் பராமரிக்கின்றது.[441][442] 6,805 கி.மீ. (4,228 மைல்) நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன, அவை மாநிலத்தில் உள்ள மாவட்டத் தலைமையகம், முக்கிய நகரங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கின்றன.[443][440]
2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 20,946 அரசுப் போக்குவரத்துப் பேருந்துகள், 7,596 தனியார் பேருந்துகள் மற்றும் 4,056 சிற்றுந்துகள் என 32,598 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[444] 1947 இல் சென்னை மாகாணத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டபோது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறுவப்பட்டது. இது மாநிலத்தில் முதன்மையான பொதுப் போக்குவரத்து பேருந்துகளை இயக்குகின்றது.[444] இது பெரும்பாலும் மாநிலத்திற்குள், மாநிலங்களுக்கு இடையேயான சில வழித்தடங்கள் மற்றும் நகர வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குகிறது. அத்துடன் நீண்ட தூர பேருந்து சேவைகளை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்குகின்றது. இயக்குகிறது. சென்னையில் உள்ள நகரப் பேருந்துகள் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படுகின்றன.[444][445] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டில் 3.21 கோடி பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன.[446] சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வழங்கிய தரவுகளின்படி, 2022 ஆம் கணக்கெடுப்பின் படி, இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் 64,105 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன.[447]
தமிழ்நாட்டில் உள்ள இரயில் வலையமைப்பு இந்திய இரயில்வேயின் தென்னக இரயில்வேயின் ஒரு பகுதியாகும். இது சென்னையில் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் சேலம் ஆகிய நான்கு கோட்டங்களுடன் செயல்படுகின்றது.[448] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 3,858 கி.மீ. (2,397 மைல்) தூரத்துக்கு 5,601 கி.மீ. (3,480 மைல்) இருப்பு பாதைகள் இருந்தன.[449] மாநிலத்தில் 532 ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் சென்னை மத்திய, சென்னை எழும்பூர், கோயம்புத்தூர் சந்திப்பு மற்றும் மதுரை சந்திப்பு ஆகியவை அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களாக உள்ளன. [450][451] இந்திய இரயில்வே சென்னையில் ஒரு இரயில் பேட்டி உற்பத்தி தொழிற்சாலை மற்றும் அரக்கோணம், ஈரோடு மற்றும் ராயபுரத்தில் மின்சார உந்துப் பொறி காப்பகங்கள், ஈரோடு, திருச்சிராப்பள்ளி மற்றும் தண்டையார்பேட்டையில் டீசல் உந்துப் பொறி காப்பகங்கள், குன்னூரில் நீராவி உந்துப் பொறி காப்பகம் மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிமனைகளை நடத்துகின்றது. [452][453]
பாதை நீளம் (கிமீ) | தடம் நீளம் (கிமீ) | ||||||
---|---|---|---|---|---|---|---|
அகலப் பாதை | மீட்டர் பாதை | மொத்தம் | அகலப் பாதை | மீட்டர் பாதை | மொத்தம் | ||
மின்சார | பிற | மொத்தம் | |||||
3,476 | 336 | 3,812 | 46 | 3,858 | 5,555 | 46 | 5,601 |
1928 இல் நிறுவப்பட்ட 212 கி.மீ. (132 மைல்) தூரத்தை உள்ளடக்கிய தெற்கு இரயில்வேயால் இயக்கப்படும் நன்கு நிறுவப்பட்ட புறநகர் இரயில் வலையமைப்பு சென்னையில் உள்ளது.[454][455] 1995 ஆம் ஆண்டு சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை செல்லும் இந்தியாவின் முதல் பறக்கும் தொடருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.[454][456] சென்னை மெட்ரோ என்பது சென்னையில் உள்ள ஒரு விரைவு போக்குவரத்து தொடருந்து அமைப்பாகும். 2015 இல் திறக்கப்பட்ட இது தற்போது 54.1 கி.மீ. (33.6 மைல்) இயங்கும் இரண்டு செயல்பாட்டுப் பாதைகளைக் கொண்டுள்ளது.[457]
1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நீலகிரி மலை தொடர்வண்டி இயக்கத்தில் உள்ள ஒரே குறுகிய தொடருந்து பாதையாகும். இது யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[458][459][460]1913ஆம் ஆண்டு கட்டப்பட்ட இராமேசுவரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் பாம்பன் பாலம் இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்ட மிக நீளமான தொடருந்து பாலமாகும். 2.3 கி.மீ. நீளமுள்ள இக்கடல் பாலத்தில் நடுவே பெரிய கப்பல்கள் போக்குவரத்துக்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கொடுங்கைப் பாலம் தூக்கு பாலமாக வடிவமைக்கபட்டு செயல்பட்டு வருகிறது.[461]
மாநிலத்தின் வானூர்திப் போக்குவரத்து 1910 இல் தொடங்கியது. கியாகோமோ டி ஏஞ்சலிசு ஆசியாவிலேயே முதல் இயங்கும் வானூர்தியை உருவாக்கி அதை சென்னையின் தீவுத்திடலில் சோதனை செய்தார்.[462] 1915 ஆம் ஆண்டில், டாடா வானூர்தி அஞ்சல் சேவை கராச்சி மற்றும் சென்னை இடையே தொடங்கப்பட்டது. இது இந்தியாவில் பொது வானூர்தி சேவையின் தொடக்கத்தைக் குறிக்கிறது.[463] 15 அக்டோபர் 1932 இல், ஜெ. ர. தா. டாட்டா கராச்சியில் இருந்து பம்பாயிற்கு அஞ்சல்களை ஏற்றிச் சென்ற புசு மோத் வானூர்தியை செலுத்தினார். இதே வானூர்தி பின்னர் விமானி நெவில் வின்ட்சென்ட் கட்டுப்பாட்டில் சென்னைக்கு தொடர்ந்தது.[464][465] தமிழ்நாட்டில் மூன்று சர்வதேச, ஒரு வரையறுக்கப்பட்ட சர்வதேச மற்றும் ஆறு உள்நாட்டு அல்லது தனியார் விமான நிலையங்கள் உள்ளன.[466][467]
சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் மாநிலத்தின் முக்கிய நுழைவாயில் மற்றும் இந்தியாவின் முக்கிய சர்வதேச வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.[468] மாநிலத்தில் உள்ள பிற சர்வதேச வானூர்தி நிலையங்களில் கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகியவை அடங்கும். அதே சமயம் மதுரை வரையறுக்கப்பட்ட வானூர்தி நிலையமாக உள்ளது.[468] தூத்துக்குடி மற்றும் சேலம் போன்ற சில வானூர்தி நிலையங்களுக்கு உள்நாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் இந்திய அரசின் உடான் திட்டத்தின் மூலம் மேலும் சில உள்நாட்டு வானூர்தி நிலையங்களுக்கு விமானங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.[469] இப்பகுதி இந்திய வான்படையின் தெற்கு வான்படைப் பிரிவின் கீழ் வருகிறது. மாநிலத்தில் சூலூர், தாம்பரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் வான்படை மூன்று வான்படைத் தளங்களை இயக்குகிறது.[470] இந்தியக் கடற்படை அரக்கோணம், உச்சிப்புளி மற்றும் சென்னையில் வானூர்தித் தளங்களை இயக்குகிறது.[471][472] 2019 இல், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன்பட்டினம் அருகே புதிய ஏவூர்தி ஏவுதளத்தை அமைப்பதாக அறிவித்தது.[473]
இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் சென்னை, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று முக்கிய துறைமுகங்கள் உள்ளன.[474] நாகப்பட்டினத்தில் ஒரு இடைநிலை கடல் துறைமுகம் உள்ளது. இது தவிர தமிழக அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையால் நிர்வகிக்கப்படும் பதினாறு சிறு துறைமுகங்கள் உள்ளன.[437] தமிழ்நாடு இந்திய கடற்படையின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளை பிரிவுகளின் கீழ் வருகின்றது. இந்திய கடற்படை சென்னையில் ஒரு பெரிய கடற்படை தளத்தையும் தூத்துக்குடியில் ஒரு தளவாட ஆதரவு தளத்தையும் கொண்டுள்ளது.[475][476]
2017 ஆம் ஆண்டின் தேசிய புள்ளியியல் குழுவின் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் கல்வியறிவு விகிதம் 82.9% என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 77.7% ஐ விட அதிகமாகும்.[196][477] பள்ளிச் சேர்க்கையை அதிகரிக்க காமராசரால் பெரிய அளவில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவச மதிய உணவுத் திட்டத்தின் காரணமாக 1960களில் இருந்து மாநிலம் உயர்ந்த எழுத்தறிவு வளர்ச்சியைக் கண்டது.[478][479] குழந்தைகளின் ஊட்டச் சத்து குறைபாட்டை போக்குவதற்காக 1982 இல் இத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டது.[480][481] 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, தேசிய சராசரியான 79.6% ஐ விட மிக அதிகமாக, 95.6% குழந்தைகள் உயர்நிலைக் கல்வி பயில்கின்றனர்.[482] ஆனால், ஆரம்பப் பள்ளிக் கல்வி பற்றிய பகுப்பாய்வில், சில மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் கல்வித் தரம் குறைந்ததைக் காட்டியது.[483]
2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 37,211 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 12,631 தனியார் பள்ளிகளில் முறையே 54.7 இலட்சம், 28.4 இலட்சம் மற்றும் 56.9 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.[484][485] 3,12,683 ஆசிரியர்களுடன் சராசரி ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:26.6 ஆக உள்ளது.[486] அரசுப்பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மாநில வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே சமயம் தனியார் பள்ளிகள் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், இந்தியப் பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான குழு ஆகிய பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றை பின்தொடர்கின்றன.[487] பள்ளிக் கல்வியானது மூன்று வயதிலிருந்து இரண்டு ஆண்டு மழலையர் பள்ளியுடன் தொடங்குகிறது, பின்னர் இந்திய 10+2 திட்டத்தின் படி, பத்து ஆண்டுகள் துவக்க மற்றும் இடைநிலைப்பள்ளி மற்றும் இரண்டு ஆண்டுகள் உயர்நிலைக் கல்வி ஆகியவற்றைப் உள்ளடக்கியுள்ளது.[488]
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 24 பொதுப் பல்கலைக்கழகங்கள், நான்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 28 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட 56 பல்கலைக்கழகங்கள் உள்ளன.[489] 1857 இல் நிறுவப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் இந்தியாவின் முதல் நவீன பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.[490] மாநிலத்தில் 34 அரசு கல்லூரிகள் உட்பட 510 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.[491][492] இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை இந்தியாவின் முதன்மையான தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றாகும். 1794 இல் துவக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியாகும்.[493] இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி மையத்தின் தலைமையகம் சென்னையில் உள்ளது.[494] மாநிலத்தில் 302 அரசு கல்லூரிகள் உட்பட 935 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மேலும் 92 அரசு நடத்தும் கல்லூரிகள் உட்பட 496 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளன.[491][495][496] சென்னை கிறிஸ்தவக் கல்லூரி (1837), மாநிலக் கல்லூரி (1840) மற்றும் பச்சையப்பா கல்லூரி (1842) ஆகியவை நாட்டின் மிகப் பழமையான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம்பெறுகின்றன.[497]
மாநிலத்தில் 870 மருத்துவ, செவிலியர் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் நான்கு பாரம்பரிய மருத்துவ கல்லூரிகள் அடங்கும்.[498] 1835 இல் நிறுவப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி, இந்தியாவின் பழமையான மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும்.[499] 2023 ஆம் ஆண்டில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் தரவரிசைப்படி, 26 பல்கலைக்கழகங்கள், 15 பொறியியல், 35 கலை அறிவியல், 8 மேலாண்மை மற்றும் 8 மருத்துவக் கல்லூரிகள் நாட்டின் முதன்மையான 100 கல்லூரிகளில் இடம் பெற்றுள்ளன.[500][501] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, கல்வி நிறுவனங்களில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 69% இடஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது, இது அனைத்து இந்திய மாநிலங்களைக் காட்டிலும் அதிகமானதாகும்.[502] மாநிலத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக அறிவிக்கப்பட்ட பத்து கல்வி நிறுவனங்கள் உள்ளன.[503] தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், பருத்தி ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம், கரும்பு வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம், வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம் மற்றும் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு உள்ளிட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள் விவசாய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.[504][505][506] இது தவிர மாநிலம் முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன.
2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தில் 4622 பொது நூலகங்கள் உள்ளன.[507] 1896 இல் நிறுவப்பட்ட கன்னிமாரா பொது நூலகம் மிகப் பழமையான ஒன்றாகும். மேலும் இது இந்தியாவில் வெளியிடப்பட்ட அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களின் நகலைப் பெறும் நான்கு தேசிய வைப்பு மையங்களில் ஒன்றாகும். சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகும்.[508][509] சென்னை புத்தகக் கண்காட்சி என்பது தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் புத்தகக் கண்காட்சியாகும், இது பொதுவாக திசம்பர்-சனவரி மாதங்களில் நடைபெறும்.[510]
பலதரப்பட்ட பண்பாடு, புவியியல் மற்றும் கலை ஆகியவற்றை கொண்டுள்ள தமிழ்நாடு, பல சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. 1971 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை நிறுவியது. இது மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பொறுப்பாகும்.[511][512] இந்த அமைப்பானது அரசின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருமம் மாநிலமாக தமிழகம் உள்ளது.[513][514] 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, 14 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மாநிலத்திற்கு வருகை தந்துள்ளனர்.[515]
தமிழ்நாடு நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.[516] 13 கி.மீ. (8.1 மைல்) நீளமுள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகும்.[517] மாநிலம் மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டிருப்பதால், இது பல மலை வாழிடங்களின் தாயகமாக உள்ளது. அவற்றில் நீலகிரி மலையில் அமைந்துள்ள உதகமண்டலம் மற்றும் பழனி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் ஆகியவை மிக பிரபலமானவை.[518][519][520] பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்டுள்ள பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோயில்கள் மற்றும் 34,000க்கும் மேற்பட்ட கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றில் சில கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமையானவை..[521][522] பல ஆறுகள் மற்றும் ஓடைகள், குற்றாலம் மற்றும் ஒகேனக்கல் உட்பட பல நீர்வீழ்ச்சிகள் மாநிலத்தில் உள்ளன.[523][524] மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட நான்கு உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன: மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழு,[525] சோழர் பெரிய கோயில்கள்,[54] நீலகிரி மலை தொடருந்து,[526][527] மற்றும் நீலகிரி உயிர்க்கோள காப்பகம்.[528][529]
சடுகுடு என்று அழைக்கப்படும் கபாடி, தமிழ்நாட்டில் மாநில விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[530][531]பல்லாங்குழி, உறியடி, கில்லி, தாயம் போன்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள் பிராந்தியம் முழுவதும் விளையாடப்படுகின்றன.[532][533] [534] ஏறுதழுவுதல் மற்றும் ரேக்ளா ஆகியவை காளைகளை உள்ளடக்கிய பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளாகும்.[535][536] பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் சிலம்பம், கட்டா குஸ்தி, மற்றும் அடிமுறை ஆகியவை அடங்கும்.[537][538][539] சதுரங்கம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் உருவான ஒரு பிரபலமான பலகை விளையாட்டாகும்.[540] சென்னையானது "இந்தியாவின் சதுரங்க தலைநகரம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நகரம் முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பல சதுரங்க கிராண்ட்மாஸ்டர்களின் தாயகமாக உள்ளது. மேலும் 2013 இல் உலக சதுரங்க பட்டப்போட்டிகள் மற்றும் 2022 இல் 44வது சதுரங்க ஒலிம்பியாட் ஆகியவற்றை தமிழகம் நடத்தியது.[541][542][543][544]
மாநிலத்தில் துடுப்பாட்டம் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகும்.[545] 1916 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னையில் உள்ள மு. அ. சிதம்பரம் அரங்கம் இந்தியாவின் பழமையான துடுப்பாட்ட மைதானங்களில் ஒன்றாகும்.[546][547][548] 1987 இல் நிறுவப்பட்ட எம்ஆர்எஃப் அறக்கட்டளை சென்னையில் உள்ள ஒரு பந்துவீச்சு பயிற்சி மையமாகும்.[549] சென்னை மிகவும் வெற்றிகரமான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் தாயகமாகும்.[550][551] கால்பந்து பள்ளிகள் மற்றும் நகரங்களில் பிரபலமாக உள்ளது.[552]
சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் பல பல்நோக்கு விளையாட்டு வளாகங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளுக்காக பயன்டுகின்றன. மேலும் கைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, டென்னிசு மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகள் பிரபலமாக விளையாடப்படுகின்றன.[553][554] 1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடந்தது நடத்தியது.[555] தமிழ்நாடு வளைதடிப் பந்தாட்ட சங்கம் மாநிலத்தில் வளைதடிப் பந்தாட்ட போட்டிகளை நிர்வகிகின்றது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் அரங்கில் 2005 இல் வகையாளர் கோப்பை மற்றும் 2007 இல் ஆசியக் கோப்பை உட்பட பல சர்வதேச ஹாக்கி போட்டிகள் அரங்கேறியுள்ளன.[556] சென்னை படகுக் குழுமம் (1846 இல் நிறுவப்பட்டது) சென்னையில் படகோட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கின்றது.[557]1990 இல் தொடங்கப்பட்ட சென்னை தானுந்து போட்டி மையம் இந்தியாவில் முதல் நிரந்தர தானுந்து பந்தய சுற்று மையமாகும்.[558] கோயம்புத்தூர் பெரும்பாலும் "இந்தியாவின் தானுந்து பந்தய மையம்" என்று குறிப்பிடப்படுகிறது. இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் தானுந்துப் பந்தயங்கள் நடைபெறுகின்றன.[559][560] மாநிலத்தில் இரண்டு குதிரைப் பந்தய வளாகங்கள் மற்றும் மூன்று 18-துளை குழிப்பந்தாட்ட மைதானங்கள் உள்ளன.[561]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.