பொதுவாக நிலநடுக்கம் அல்லது வேறு நிகழ்வுகளால் ஏற்படக்கூடிய ஒரு நீண்ட, உயர் கடல் அலை. From Wikipedia, the free encyclopedia
சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, செப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும்போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடிய மூல காரணிகளாகும்.
சுனாமி என்பது செப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர் அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கிச் செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும்.
‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட" என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினசு மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர்[1]. “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்சு மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர்[2].
கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்சு, சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பெலோபொன்னேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365-இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் உரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனசு மாசில்லினுசு சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப்பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365-ஆம் ஆண்டு சூலை 21-ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது சப்பான் நாடுதான். 2004-இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம். 2004-ஆம் ஆண்டில், திசம்பர் 26-ஆம் நாளன்று, யுரேசியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆத்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004-ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004-ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது.
சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை.
கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் ஆழிப்பேரலை உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. ஆழிப்பேரலைகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் ஆழிப்பேரலையின் அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. ஆழிப்பேரலையின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாசுகாவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து அவாய் தீவில் உள்ள இலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாசுகா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் சுடாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. சுடாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஐட்ரேட் வெளியானது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாசுகா பூகம்பம் (9.2 ஆறு), 2004-இல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோகூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். செப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது.
1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கசு" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958-இல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாசுகாவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர்.
சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் சப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிமாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது.
சுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டிச் சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது.
பூகம்பங்களைப் போலச் சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஆவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிசிக் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிசு இருவரும் எம் எல் என்ற அளவினில் சுனாமியின் இயக்க ஆற்றலைக் கணக்கிட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோலாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு.
அமெரிக்காவில் உள்ள அவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் அவாய். 1946 ஏப்ரல் 1 அன்று அவாய் தீவைத் தாக்கிய ராட்சத ஆழிப்பேரலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949-ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் ஆழிப்பேரலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960-ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் அவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் ஆழிப்பேரலை ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர்.
அப்போது சப்பான், பிலிப்பைன்சு உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராகச் சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆத்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்சு, கோசுடரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிசி, பிரான்சு, குவாதமாலா, இந்தோனேசியா, சப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்சு, உருசியா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது.
2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை தாக்குதலுக்கு பிறகு இந்திய பெருங்கடல் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சமிக்ஞைகளாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சமிக்ஞையைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.