தானுந்து
From Wikipedia, the free encyclopedia
தானுந்து, சீருந்து அல்லது மகிழுந்து (Car; Automobile) என்பது சக்கரங்களைக் கொண்ட ஒரு இயக்கூர்தி ஆகும். இவை பல்வேறு எரிம மூலங்களால் எரியூட்டப்படுகின்ற உந்துப்பொறியின் விசையைப் பயன்படுத்தி நகர்கின்றன. இவற்றின் பெரும்பாலான வரையறைகள், சாலைகளில் செல்ல நான்கு சக்கரங்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இவை ஒன்று முதல் எட்டு பயணிகளை வரை சுமந்து செல்லவல்லவை.[1]
தானுந்து | |
---|---|
![]() | |
வகைப்படுத்தல் | வண்டி |
தொழில்துறை | பல்வேறு |
பயன்பாடு | போக்குவரத்து |
எரிம மூலம் | பெட்ரோல், மின்சாரம், டீசல், இயற்கை எரிவளி, ஐதரசன், சூரிய ஆற்றல், தாவர எண்ணெய் |
ஆற்றல் பொருத்திய | ஆம் |
தானியக்கம் | ஆம் |
சக்கரங்கள் | 3–8 (பெரும்பாலும் 4) |
அச்சுகள் | 2 |
கண்டு பிடித்தவர் | கார்ல் பென்ஸ் |
கண்டு பிடித்த ஆண்டு | 1886 |
நிக்கொலா-யோசப் கியூனியோ 1769 ஆம் ஆண்டு நீராவியில் இயங்கும் மூன்று சக்கரம் கொண்ட ஒரு ஊர்தியை உருவாக்கினார். 1886 ஆம் ஆண்டில் கார்ல் பென்ஸ் வடிமைத்த வடிவம் தற்போது அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறையில் உள்ள தானுந்துக்களின் முன்னோடியாக கருதப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டில் இதன் பயன்பாடு பரவலாக அதிகரித்தது.
முதலில் இயக்கத்திற்குத் தேவையான பாகங்களை மட்டுமே கொண்டிருந்த தானுந்துக்கள், பிற்காலங்களில் பல மாற்றங்களுக்கு உட்பட்டன. ஓட்டுநர் மற்றும் பயணிகளின் வசதிக்காக பல அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பெரும்பாலும் பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளால் இயக்கப்பட்ட இவை, தற்போது மின்சாரம், இயற்கை எரிவளி, ஐதரசன், சூரிய ஆற்றல் என பல்வேறு பொருட்களை உந்துதலுக்காக பயன்படுத்துகின்றன.
வரலாறு

நீராவியில் இயங்கும் முதல் ஊர்தி 1672 ஆம் ஆண்டில் சீனாவில் பெர்டினாண்ட் வேர்பிஸ்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது 65 செ.மீ. நீளம் கொண்ட சிறிய அளவிலான பொம்மை போன்ற வடிவம் கொண்டிருந்தது.[2][3][4] பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் நிக்கொலா-யோசப் கியூனியோ 1769 ஆம் ஆண்டு நீராவியில் இயங்கும் மூன்று சக்கரம் கொண்ட ஒரு ஊர்தியை உருவாக்கினார்.[5] 1807 ஆம் ஆண்டில், பிரான்சின் நீப்சே மற்றும் அவரது சகோதரர் கிளாட் உலகின் முதல் உள் எரி பொறியை உருவாக்கினர். அதை அவர்கள் ஒரு படகில் பொருத்தினர்.[6] அதற்குப் பின் 1808 இல் சுவிட்சர்லாந்து கண்டுபிடிப்பாளர் ஐசாக் டே இரிவாசு, உள் எரி பொறியால் இயங்கும் ஒரு ஊர்தியை வடிவமைத்தார்.[7]

நவம்பர் 1881 இல், பிரெஞ்சு கண்டுபிடிப்பாளர் குசுதாவ் திரோவே மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர ஊர்தியை ஒரு சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தினார்.[8] 1886 ஆம் ஆண்டில் செர்மனியின் கார்ல் பென்ஸ் ஒரு ஊர்தியை வடிமைத்து, அதற்கு காப்புரிமை பெற்றார். இது தற்போது அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறையில் உள்ள தானூர்திகளின் முன்னோடியாகும்.

1901 இல் ஐக்கிய அமெரிக்காவில் இரான்சம் ஓல்ட்சு மலிவு விலையில் கார்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினார்.[9] 1913 ஆம் ஆண்டில் ஹென்றி போர்டால் இது பெரிதும் விரிவுபடுத்தப்பட்டது. போர்ட் நிறுவனத்தின் "டி" வகை தானுந்து உலகில் முதலில் பெருமளவு உற்பத்தி செய்யப்பட்ட தானுர்தியாக மாறியது.[10] 20 ஆம் நூற்றாண்டில் குதிரை, மாடு போன்ற விலங்கினங்களை வைத்து இழுத்து செல்லப்பட்ட ஊர்திகளுக்கு பதிலாக இவை பயன்பாட்டுக்கு வந்தன.[11] இரண்டாம் உலகப் போருக்கு முன் உலகின் மற்ற பகுதிகளில் உற்பத்தி மிகவும் குறைவாகவே இருந்தது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்தன. இவை பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னர் அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் மலிவு விலை தானுந்துக்கள் விற்பனைக்கு வரவே, இதன் பயன்பாடு பரவலாக அதிகரித்ததது.[12]
வடிவமைப்பு

முதலில் இயக்கத்திற்கு தேவையான பாகங்களை மட்டுமே கொண்டிருந்த தானுந்துக்கள், பிற்காலங்களில் பல மாற்றங்களுக்கு உட்பட்டன. தானுந்துக்களில் ஓட்டுதல், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பல பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொதுவாக இவை ஒரு ஓட்டுனரால் கால்கள் மற்றும் கைகளின் உதவியோடு இயக்கப்படுகின்றன. 21 ஆம் நூற்றாண்டில், குரல் மூலம் இயக்கப்படுகின்ற மற்றும் தானியங்கி ஊர்திகள் வெளிவந்துள்ளன. பொதுவாக ஓட்டுநர் தன் கைகளால் ஒரு திசைமாற்றியை இயக்குவதால் மூலம் ஊர்தியின் செல்லும் திசை கட்டுப்படுத்தப்படுகின்றது. ஓட்டுநர் தன் கால்களால் ஊர்தியின் வேகத்தை கட்டுப்படுத்தும் முடுக்கி, நிறுத்த உதவும் நிறுத்தி ஆகியவற்றை இயக்குகிறார். அதே சமயம் வேக அளவு மட்டும் நகரும் திசையை தீர்மானிக்கும் பற்சில்லுகளை இயக்க ஒரு குச்சி போன்ற அமைப்பு மற்றும் பொத்தான்கள் எனப் பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.[13][14]
ஓட்டுநர் மற்றும் பயணிகளின் சௌகரியத்திற்காக பல அம்சங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன. பலதரப்பட்ட இருக்கைகள், வானொலி, ஒலிபெருக்கிகள், புளூடூத் மற்றும் அகிலத் தொடர் பாட்டை போன்ற தொடர்பு தொழில்நுட்பங்கள், காற்றுக் குளிர்விப்பி மற்றும் குளிர்சாதனப்பெட்டி போன்ற சௌகரியங்கள், புவிநிலை காட்டி மற்றும் வரைபடம் போன்ற வழிகாட்டி சாதனங்கள், காற்றுப் பைகள் மற்றும் ஓட்டக்கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ளன.[15][16]
எரிபொருள்

20 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான தானுந்துக்கள் பெட்ரோல் அல்லது டீசல் எரிபொருளால் இயக்கப்பட்டன. சுற்றுச்சூழலில் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றில் இவை முக்கியப் பங்காற்றுகின்றன.[18] இதன் காரணமாக மின்சாரம், இயற்கை எரிவளி, ஐதரசன், சூரிய ஆற்றல் என பல்வேறு பொருட்களை உந்துதலுக்காக பயன்படுத்தும் தானுந்துக்கள் தயாரிக்கப்பட்டன.[19][20][21] சில நகரங்கள் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் தானுந்துக்களைத் தடை செய்துள்ளன. மேலும் சில நாடுகள் எதிர்காலத்தில் இவற்றின் விற்பனையைத் தடை செய்யத் திட்டமிட்டுள்ளன.[22][23] இருப்பினும் வளர்ந்து வரும் பயன்பாடு காரணமாக பெட்ரோல் தானுந்துக்கள்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இதன் காரணமாக சுற்றுச்சூழல் குழுக்கள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நாடுகள் இவற்றின் தயாரிப்பைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என்று கூறுகின்றன.[24][25]
உற்பத்தி மற்றும் பயன்பாடு

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகில் தானுந்து உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கின்றது. ஏறத்தாழ உலகில் உற்பத்தியாகும் தானுந்துக்களில் பாதி சீனா, ஐக்கிய அமெரிக்கா அல்லது சப்பான் நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 58.5 இலட்சம் தானுந்துகள் தயாரிக்கப்படுகின்றன. [26] தானூர்தி பயன்பாட்டிலும் சீனா முதலிடம் வகிக்கின்றது. பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவிலுள்ள நாடுகளில் உள்ள வளர்ந்த நாடுகளில், ஆயிரம் பேருக்கு சராசரியாக 500 தானுந்துகளுக்கு மேல் உள்ளன. நியூசிலாந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் 900க்கும் மேல் உள்ளன. இந்தியாவில் ஆயிரம் பேருக்கு 58 தானுந்துக்கள் உள்ளன. சோமாலியா போன்ற மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஆயிரம் பேருக்கு ஒரு தானுந்துக்கும் குறைவாக உள்ளது.
மேலும் படிக்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.