இந்திய சதுரங்க விளையாட்டாளர் From Wikipedia, the free encyclopedia
விசுவநாதன் ஆனந்த் (ஆங்கில மொழி: Viswanathan Anand, பிறப்பு: திசம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா),ஓர் இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் முன்னாள் உலக சதுரங்க வாகையாளர் ஆவார். இவர் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2800 ஈலோ புள்ளிகளைத் எட்டிய வெகு சிலருள் ஆனந்தும் ஒருவர். இம்மைல்கல்லை இவர் ஏப்ரல் 2006இல் அடைந்தார். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சதுரங்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்[2].
விசுவநாதன் ஆனந்த் | |
---|---|
முழுப் பெயர் | விசுவநாதன் ஆனந்த் |
நாடு | இந்தியா |
பிறப்பு | திசம்பர் 11, 1969 மயிலாடுதுறை, இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (1988) |
உலக வாகையாளர் | 2000–02 (பிடே) 2007–2013 |
பிடே தரவுகோள் | 2753 (நவம்பர் 2021)[1] |
உச்சத் தரவுகோள் | 2817 (மே 2011) |
தரவரிசை | 16 (நவம்பர் 2021) |
உச்சத் தரவரிசை | 1 |
விசுவநாதன் ஆனந்த் 1969 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் தேதி சென்னையில்[3][4] பிறந்தார்.[5] இவரது தந்தை, கிருஷ்ணமூர்த்தி விசுவநாதன், பீகாரில் உள்ள ஜமால்பூரில் கல்வி பெற்று பின்னர் தெற்கு ரயில்வேயின் பொது மேலாளராக பணியாற்றினார். இவரது தாயார் சுசீலா ஒரு இல்லத்தரசி ஆவார்.அவர் ஒரு சதுரங்க ஆர்வலராகவும், செல்வாக்கு மிக்க சமூக ஆர்வலராகவும் இருந்தார்.[6] ஆனந்த் அவரது பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது சகோதரர் சிவக்குமார், இந்தியாவில் உள்ள கிராம்ப்டன் கிரீவ்ஸ் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவரது சகோதரி அனுராதா மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.[7][8] இவர் தனது சகோதரியை விட 11 வயது இளையவராகவும் மற்றும் சகோதரனை விட 13 வயது இளையவராகவும் இருக்கிறார்.
ஆனந்த் தனது ஆறாவது வயதில் இருந்து தனது தாயிடமிருந்து சதுரங்கம் கற்கத் தொடங்கினார். இவரது தந்தை பிலிப்பைன்ஸ் தேசிய இரயில்வேயில் ஆலோசகராக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஆனந்த் தனது பெற்றோருடன் 1978 முதல் 80கள் வரை மணிலாவில் வாழ்ந்தார்.[9] அப்போதே அவர் சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார்.
ஆனந்த், சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் [10] பள்ளிக் கல்வியை முடித்தார். சென்னை, இலயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[11]
ஆனந்த் 1996 இல் அருணாவை மணந்தார். அவரது மகன் அகில் ஆனந்த், 9 ஏப்ரல் 2011 அன்று பிறந்தார்.[12][13] ஆனந்த் இந்து சமயத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர், கோவில்களில் உள்ள அமைதியையும், மகிழ்ச்சியான சூழலையும் ரசிப்பதற்காக கோவில்களுக்கு செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.[14] மேலும், தனது தினசரி பிரார்த்தனைகள், கவனம் சிதறாமல் சதுரங்கம் விளையாட உதவும் "உயர்ந்த மனநிலையை" அடைய உதவியதாகவும் கூறியுள்ளார்.[14] நூல்கள் வாசிப்பது, நீச்சல் மற்றும் இசை கேட்பது அவரது பொழுதுபோக்குகள் ஆகும்.[9]
24 டிசம்பர் 2010 அன்று, குஜராத் பல்கலைக்கழகத்தின் சதுரங்க நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் 20,486 ஆட்டக்காரர்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் சதுரங்கம் விளையாடி, புதிய உலக சாதனையைப் படைத்தனர்.[15]
ஆனந்த், அரசியல் மற்றும் உளவியல் சூழ்ச்சிகளைத் தவிர்த்து, தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார் .[16] ஆனந்தின் வாழ்நாள் போட்டியாளர்காளான காஸ்பரொவ், கிராம்னிக் மற்றும் கார்ல்சன், 2010 உலக சதுரங்க வாகையாளர் போட்டியின் தயாரிப்பில் இவருக்கு உதவினர் என்பது அவரின் நற்பெயருக்கு சான்றாக இருக்கிறது.[16][17] ஆனந்த் 'மதராஸின் புலி' என்றும் அழைக்கப்படுகிறார்.[16]
ஆனந்தின் குடியுரிமை குறித்த குழப்பம் காரணமாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் இருந்து அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கப்பட்டது; இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் பின்னர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, "ஆனந்த் தனக்கு நேரம் கிடைக்கும் போது பட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டதால் இந்த விஷயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.[18] தி இந்துவின் கூற்றுப்படி, ஆனந்த் இறுதியாக டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்துவிட்டார்.[16]
உலக சதுரங்க அரங்கிலும், குறிப்பாக இந்திய சதுரங்க அரங்கிலும் விஸ்வநாதன் ஆனந்த் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் தனது 14 வயதில் இந்திய கீழ் இளையோருக்கான(sub-junior) சதுரங்க சாம்பியன் போட்டியில் 9/9 புள்ளிகள்பெற்று வெற்றி வீரரானார். 15 வயதில் 1984இல் சர்வதேச மாஸ்டர்பட்டத்தினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரரானார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் மைந்தன் (lightning kid) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை சதுரங்க வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.
இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.[19]
பல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்கப் போட்டியின் வெற்றிவீரர்
வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.
ஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.
ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோவை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.
உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை (Boris Gelfand) சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் [20].
இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார்.[21]
அக்டோபர் 2003 இல் பிடே ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.