Remove ads
நேச நாடுகளுக்கும், அச்சு நாடுகளுக்கும் இடையில் 1939–45 காலகட்டத்தில் நடைபெற்ற உலகப் போர் From Wikipedia, the free encyclopedia
உலகப் போர் 2 அல்லது இரண்டாம் உலகப்போர் (1 செப்தெம்பர் 1939 - 2 செப்தெம்பர் 1945) என்பது 1939 முதல் 1945 வரை நடைபெற்ற ஓர் உலகப் போர் ஆகும். அனைத்து உலக வல்லமைகள் உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும்பாலானவை இதில் பங்கெடுத்தன. இவை அச்சு நாடுகள் மற்றும் நேச நாடுகள் என இரண்டு எதிரெதிர் இராணுவக் கூட்டணிகளை உருவாக்கின. இரண்டாவது உலகப் போரானது ஓர் ஒட்டுமொத்தப் போர் ஆகும். இதில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10 கோடிக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நேரடியாகப் பங்கெடுத்தனர். இப்போரில் பங்கெடுத்த முக்கிய நாடுகள் தங்களது ஒட்டு மொத்த பொருளாதார, தொழில் துறை மற்றும் அறிவியல் செயலாற்றலைப் போர் வெற்றிக்குப் பயன்படுத்தின. இதனால் இராணுவம் மற்றும் குடிசார் வளங்களுக்கு இடையேயான வேறுபாடானது மறைந்து போனது. இப்போரில் விமானங்கள் ஒரு முக்கியப் பங்காற்றின. மக்கள் தொகை மிகுந்த மையங்கள் மீது குண்டு வீசவும், எக்காலத்திலும் போரில் பயன்படுத்தப்பட்ட 2 அணு ஆயுதங்களை வீசவும் பயன்படுத்தப்பட்டன. மனித வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய சண்டையாக இரண்டாம் உலகப் போர் திகழ்கிறது. 7 முதல் 8.5 கோடிப் பேர் இதில் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குடிமக்களாக இருந்தனர். இனப்படுகொலை (பெரும் இன அழிப்பு உட்பட), பட்டினி, படுகொலைகள் மற்றும் நோய் காரணமாக கோடிக்கணக்கானோர் இறந்தனர். அச்சு நாடுகளின் தோல்விக்குப் பிறகு செருமனி மற்றும் சப்பான் ஆக்கிரமிக்கப்பட்டன. செருமானிய மற்றும் சப்பானியத் தலைவர்களுக்கு எதிராகப் போர்க் குற்றத் தீர்ப்பாயங்கள் நடத்தப்பட்டன.
|
||||||||||||||||||||||||
இரண்டாம் உலகப் போருக்கான காரணங்கள் விவாதத்திற்குரியதாக உள்ளன. ஆனால், இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர், எசுப்பானிய உள்நாட்டுப் போர், இரண்டாம் சீன-சப்பானியப் போர், சோவியத்-சப்பானிய எல்லைச் சண்டைகள், ஐரோப்பாவில் பாசிசத்தின் வளர்ச்சி மற்றும் முதலாம் உலகப் போர் முதல் ஐரோப்பாவில் அதிகரித்து வந்த பதட்டங்கள் ஆகியவை முக்கிய காரணங்களாக விளங்கின. இரண்டாம் உலகப் போரானது பொதுவாக 1 செப்டம்பர் 1939 அன்று தொடங்கியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது. அன்று தான் இட்லர் தலைமையிலான நாசி செருமனியானது போலந்து மீது படையெடுத்தது. இதைத் தொடர்ந்து, 3 செப்டம்பர் அன்று செருமனி மீது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு போர்ப் பிரகடனம் செய்தன. ஆகத்து 1939இன் மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தின் கீழ் செருமனி மற்றும் சோவியத் ஒன்றியம் போலந்தைப் பிரித்துக் கொண்டன. பின்லாந்து, எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா மற்றும் உருமேனியா ஆகிய பகுதிகள் முழுவதும் தங்களது தாக்கம் கொண்ட பகுதிகளைக் குறிப்பிட்டன. 1939இன் பிற்பகுதி முதல் 1941ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை ஒரு தொடர்ச்சியான படையெடுப்புகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் செருமனி பெரும்பாலான ஐரோப்பியக் கண்டப் பகுதியை வென்றோ அல்லது கட்டுப்பாட்டின் கீழோ கொண்டு வந்தது. இத்தாலி மற்றும் சப்பானுடன் (பிற நாடுகளுடன் பின்னர்) அச்சு நாடுகளின் கூட்டணியை உருவாக்கியது. வட மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கப் படையெடுப்புகள், மற்றும் 1940இன் நடுப்பகுதியில் பிரான்சின் வீழ்ச்சிக்குப் பின் போரானது முதன்மையாக ஐரோப்பிய அச்சு நாடுகளுக்கும், பிரித்தானியப் பேரரசுக்கும் இடையில் பால்கன்களில் போர், பிரிட்டன் வான் சண்டை, ஐக்கிய இராச்சியம் மீதான த பிளிட்ஸ் மற்றும் அத்திலாந்திக் யுத்தம் ஆகியவையாகத் தொடர்ந்தது. 22 சூன் 1941இல், ஐரோப்பிய அச்சு நாடுகள் சோவியத் ஒன்றியம் மீது படையெடுப்பதற்குச் செருமனி தலைமை தாங்கியது. இதன் மூலமாகக் கிழக்குப் போர்முனையைத் திறந்தது. இதுவே வரலாற்றின் மிகப் பெரிய நிலப் போர் முனையாகும்.
ஆசியா மற்றும் பசிபிக் பகுதியை ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்த சப்பான் 1937இல் சீனக் குடியரசுடன் போரைத் தொடங்கியது. திசம்பர் 1941இல் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நிலப்பரப்புகளைத் தாக்கியது. அதே நேரத்தில், தென்கிழக்காசியா மற்றும் நடு பசிபிக் பகுதிகளுக்கு எதிராகத் தாக்குதல்களைத் தொடங்கியது. முத்துத் துறைமுகத்திலிருந்த ஐக்கிய அமெரிக்கக் கப்பல் குழு மீதான தாக்குதலும் இதில் அடங்கும். இது சப்பான் மீது ஐக்கிய அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்வதற்கு இட்டுச் சென்றது. தங்களது ஆதரவைத் தெரிவிப்பதற்காக ஐரோப்பிய அச்சு நாடுகள் ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன. சீக்கிரமே, சப்பான் மேற்கு பசிபிக் பகுதிகளைக் கைப்பற்றியது. 1942ஆம் ஆண்டின் மிக முக்கியமான மிட்வே யுத்தத்தில் தோற்றதற்குப் பிறகு, சப்பானின் முன்னேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. பிறகு, செருமனி மற்றும் இத்தாலி வட ஆப்பிரிக்காவிலும், சோவியத் ஒன்றியத்தின் சுடாலின்கிராட் யுத்தத்திலும் தோற்கடிக்கப்பட்டன. 1943இல் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்தன. இதில் செருமனி கிழக்குப் போர் முனையில் அடைந்த ஒரு தொடர்ச்சியான தோல்விகள், சிசிலி மற்றும் இத்தாலியக் கண்டப் பகுதி மீது நேச நாடுகளின் படையெடுப்பு, பசிபிக் பகுதியில் நேச நாடுகளின் தாக்குதல்கள் ஆகியவையும் அடங்கும். இது அச்சு நாடுகள் தங்களது தன் முனைப்பை இழப்பதற்கு இட்டுச் சென்றது. அனைத்து போர் முனைகளிலும் பின் வாங்கும் கட்டாய நிலைக்கு அவற்றைத் தள்ளியது. 1944இல் செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீது மேற்கு நேச நாடுகள் படையெடுத்தன. அதே நேரத்தில், தான் இழந்த நிலப்பரப்புகளைச் சோவியத் ஒன்றியம் மீண்டும் பெற்றது. தனது கவனத்தைச் செருமனி மற்றும் அதன் கூட்டு நாடுகளின் மீது திருப்பியது. 1944-45இல் ஆசியக் கண்டப்பகுதியில் சப்பான் புதிதாக வென்ற பகுதிகளை இழக்க ஆரம்பித்தது. அதே நேரத்தில், நேச நாடுகள் சப்பானியக் கடற்படைக்குச் சேதம் விளைவித்தன. மேற்கு அமைதிப் பெருங்கடலின் முக்கியமான தீவுகளை நேச நாடுகள் கைப்பற்றின.
செருமனி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்புகள் விடுதலை செய்யப்பட்டது மற்றும், மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் செருமனி மீது படையெடுத்தது ஆகியவற்றுடன் ஐரோப்பாவில் போரானது முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. சோவியத் துருப்புகளிடம் பெர்லின் வீழ்ந்தது. இட்லர் தற்கொலை செய்து கொண்டார். 8 மே 1945 அன்று செருமனி நிபந்தனையற்ற சரணடைவை ஏற்றது. 26 சூலை 1945இன் போதுசுதாம் அறிவிப்பின் நிபந்தனைகளுக்கு சப்பான் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது முறையே 6 மற்றும் 9 ஆகத்து மாதத்தில் முதல் அணு குண்டுகளை வீசியது. சப்பானியத் தீவுக்கூட்டம் மீது ஏற்படப்போகும் படையெடுப்பை எதிர்கொள்ளும் நிலை, மேற்கொண்ட அணுகுண்டு வீச்சுகளுக்கு ஆளாகும் நிலை மற்றும் மஞ்சூரியா மீது படையெடுப்பதற்கு முன்னர் சோவியத் ஒன்றியம் சப்பானுக்கு எதிராகப் போருக்குள் நுழைவதாக அறிவித்தது ஆகியவை காரணமாகச் சரணடையும் தனது எண்ணத்தை 10 ஆகத்து அன்று சப்பான் அறிவித்தது. 2 செப்டம்பர் 1945 அன்று ஒரு சரணடையும் ஆவணத்தில் கையொப்பமிட்டது.
இரண்டாம் உலகப்போரானது உலகின் அரசியல் சார்பு மற்றும் சமூக அமைப்பை மாற்றியது. பன்னாட்டு ஒத்துழைப்பை உருவாக்கவும், எதிர்காலச் சண்டைகளைத் தடுக்கவும் ஐக்கிய நாடுகள் அவையானது நிறுவப்பட்டது.[1] வெற்றி பெற்ற உலக வல்லமைகளான சீனா, பிரான்சு, சோவியத் ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாக உருவாயின. சோவியத் ஒன்றியமும், ஐக்கிய அமெரிக்காவும் எதிரெதிர் வல்லரசுகளாகத் தோன்றின. இது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலப் பனிப்போருக்கான தளத்தை அமைத்தது. ஐரோப்பிய அழிவை ஒட்டி ஐரோப்பாவின் பெரிய சக்திகளின் தாக்கமானது குறைந்தது. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் குடியேற்ற விலக்கத்தைத் தொடங்கி வைத்தது. தொழில்துறை சேதமடைந்த பெரும்பாலான நாடுகள் பொருளாதார மீட்சி மற்றும் விரிவை நோக்கி நகர்ந்தன. குறிப்பாக ஐரோப்பாவில், எதிர்காலச் சண்டைகளை முன்னரே தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும், போருக்கு முந்தைய எதிர்ப்பை நிறுத்தவும், ஒரு பொதுவான அடையாள உணர்வை உருவாக்கவும் அரசியல் மற்றும் பொருளாதார இணைப்பானது தொடங்கப்பட்டது.
ஐரோப்பிய இரண்டாம் உலகப் போரானது 1 செப்டம்பர் 1939 அன்று தொடங்கியதாகப் பொதுவாகக் கருதப்படுகிறது.[2][3] இது போலந்து மீதான செருமானியப் படையெடுப்பில் தொடங்கியது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு செருமனி மீது போரை அறிவித்தன. பசிபிக்கில் போர் தொடங்கிய தேதிகளாக, இரண்டாம் சீன-சப்பானியப் போர் தொடங்கிய 7 சூலை 1937ஆம் தேதி[4][5] அல்லது முந்தைய தேதியான 19 செப்டம்பர் 1931 அன்று மஞ்சூரியா மீது சப்பான் படையெடுத்தது[6][7] ஆகிய தேதிகள் குறிப்பிடப்படுகின்றன. மற்றவர்கள் பிரித்தானிய வரலாற்றாளர் ஏ. ஜே. பி. டெய்லரைப் பின்பற்றுகின்றனர். அவர் சீன-சப்பானிய போர் மற்றும், ஐரோப்பா மற்றும் அதன் காலனிகளில் போரானது ஒரே நேரத்தில் நடந்தது என்று குறிப்பிடுகிறார். இந்த இரண்டு போர்களும் 1941 இரண்டாம் உலகப் போராக உருவாயின என்கிறார்.[8] இரண்டாம் உலகப் போருக்குக் குறிப்பிடப்படும் பிற தேதிகளாக, சில நேரங்களில் 3 அக்டோபர் 1935 அன்று அபிசீனியா மீதான இத்தாலியப் படையெடுப்பு குறிப்பிடப்படுகிறது.[9] பிரித்தானிய வரலாற்றாளர் அந்தோணி பீவோரின் பார்வைப்படி, இரண்டாம் உலகப் போரின் தொடக்கமானது சப்பானுக்கும், மங்கோலியா மற்றும் சோவியத் ஒன்றியப் படைகளுக்கும் இடையே 1939இல் மே முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற கல்கின் கோல் யுத்த ஆரம்பத் தேதி என்று குறிப்பிடுகிறார்.[10] மற்றவர்களின் பார்வைப்படி, எசுப்பானிய உள்நாட்டுப் போரானது இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு முன் நிகழ்வாக அமைந்தது.[11][12]
இரண்டாம் உலகப்போர் முடிந்த சரியான தேதி குறித்தும் பொதுவான கருத்து எட்டப்படவில்லை. 14 ஆகத்து 1945இன் போர் நிறுத்தத்துடன் போரானாது நிறுத்தப்பட்டது என பொதுவாக அந்நேரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2 செப்டெம்பர் 1945 சப்பான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்ததைத் தவிர்த்து இத்தகைய தேதியானது ஒப்புக்கொள்ளப்பட்டது. சப்பானின் சரணடைவு அதிகாரப்பூர்வமாக ஆசியாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. 1951இல் சப்பான் மற்றும் நேச நாடுகளுக்கு இடையில் ஓர் அமைதி ஒப்பந்தமானது கையொப்பமிடப்பட்டது.[13] செருமனியின் எதிர்காலம் குறித்த 1990ஆம் ஆண்டு ஒப்பந்தமானது செருமானிய மீளிணைவை அனுமதித்தது. பெரும்பாலான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய விவகாரங்களைத் தீர்த்தது.[14] சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையில் எந்த ஓர் அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தமும் எப்போதுமே கையப்பமிடப்படவில்லை.[15] எனினும், இரு நாடுகளுக்கு இடைப்பட்ட போரின் நிலையானது 1950ஆம் ஆண்டின் சோவியத் சப்பானியக் கூட்டு அறிவிப்பின் மூலம் முடித்து வைக்கப்பட்டது. இதன்மூலம், இருநாடுகளுக்கும் இடையிலான முழு அளவிலான தூதரக உறவுகளும் மீண்டும் கொண்டு வரப்பட்டன.[16]
ஆத்திரியா-அங்கேரி, செருமனி, பல்கேரியா மற்றும் உதுமானியப் பேரரசு உள்ளிட்ட மைய சக்திகளின் தோல்வி, சோவியத் ஒன்றியத்தின் தோற்றுவிப்புக்கு இட்டுச் சென்ற உருசியாவில் 1917ஆம் ஆண்டு போல்செவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆகிய முதல் உலகப் போர் விளைவுகள் ஐரோப்பிய அரசியல் வரைபடத்தைத் தீவிரமாக மாற்றின. அதே நேரத்தில், முதல் உலகப் போரில் வென்ற நேச நாடுகளான பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, உருமேனியா மற்றும் கிரேக்கம் ஆகியவை நிலப்பரப்புகளைப் பெற்றன. ஆத்திரியா-அங்கேரி, உதுமானிய மற்றும் உருசியப் பேரரசுகளின் வீழ்ச்சியில் இருந்து புது நாடுகள் உருவாக்கப்பட்டன.
ஓர் எதிர்கால உலகப் போரைத் தடுப்பதற்காக 1919ஆம் ஆண்டு பாரிஸ் அமைதி மாநாட்டின்போது உலக நாடுகள் சங்கமானது உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் முதன்மையான குறிக்கோள்களானவை ஒட்டுமொத்த பாதுகாப்பு, இராணுவ மற்றும் கடற்படை ஆயுதக் குறைப்பு மூலம் ஆயுதச் சண்டைகளைத் தடுப்பதும், அமைதியான பேச்சு வார்த்தைகள் மற்றும் சமரசங்கள் மூலம் பன்னாட்டுப் பிரச்சனைகளைத் தீர்ப்பதும் ஆகும்.[17]
முதல் உலகப் போருக்குப் பிறகு, வலிமையான அமைதிவாத உணர்வுகள் இருந்தபோதும்,[18] தாங்கள் முன்னர் இழந்த பகுதிகளை மீட்பதையும், முன்னர் இழந்த பகுதிகளுக்காகப் பழி வாங்குவதையும் அடிப்படையாக கொண்ட தேசியவாதமானது பல ஐரோப்பிய நாடுகளில் இதே காலகட்டத்தில் தோன்றியது. இந்த உணர்வுகள் குறிப்பாகச் செருமனியில் காணப்பட்டன. ஏனெனில், வெர்சாய் ஒப்பந்தத்தால் கட்டாயப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நிலப்பரப்பு, காலனி மற்றும் நிதி இழப்புகளின் காரணமாக இந்த உணர்வு காணப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் தனது சொந்த நிலப்பரப்பில் சுமார் 13% செருமனி இழந்தது. தன் வெளிநாட்டுக் கையிருப்பு நிலங்கள் அனைத்தையும் இழந்தது. மற்ற நாடுகளைச் செருமனி இணைத்துக் கொண்டது அதிகாரப்பூர்வமாகத் தடை செய்யப்பட்டது. இழப்பீடுகள் வழங்கக் கட்டாயப்படுத்தப்பட்டது. செருமனியின் இராணுவப் படைகளின் அளவு மற்றும் திறன் மீது வரம்புகள் விதிக்கப்பட்டன.[19]
1918-1919இல் செருமானியப் புரட்சியின் போது செருமனியப் பேரரசானது கலைக்கப்பட்டது. பிற்காலத்தில் வெய்மர் குடியரசு என்று அறியப்பட்ட ஒரு சனநாயக அரசாங்கமானது உருவாக்கப்பட்டது. போர்களுக்கு இடைப்பட்ட காலத்தின் போது, புதிய குடியரசின் ஆதரவாளர்களுக்கும், வலது மற்றும் இடது ஆகிய இரு பிரிவுகளின் சமரசம் செய்து கொள்ள மறுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே பூசல்கள் காணப்பட்டன. அதிகாரப்பூர்வமற்ற கூட்டாளியான இத்தாலி போருக்குப் பிறகு சில நிலப்பரப்புகளைக் கைப்பற்றியது. எனினும், இத்தாலியைப் போருக்கு வரவழைப்பதற்காக ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சால் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் அமைதி ஒப்பந்தத்தில் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் இத்தாலியத் தேசியவாதிகள் கோபம் கொண்டனர். 1922 முதல் 1925 வரை ஒரு தேசியவாத, சர்வாதிகார மற்றும் உயர் வகுப்பினருடன் இணைந்து செயல்படும் கொள்கை கொண்ட பெனிட்டோ முசோலினியால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பாசிச இயக்கமானது இத்தாலியில் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது சனநாயகப் பிரதிநிதித்துவம், சமதர்மம், இடது சாரி மற்றும் மிதவாதப் படைகளை ஒடுக்கியது. இத்தாலியை ஓர் உலக வல்லமையாக்கும் குறிக்கோளைக் கொண்ட ஆக்ரோஷமான நிலப் பகுதிகளை விரிவாக்கம் செய்யும் அயல்நாட்டுக் கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தது. ஓர் "இத்தாலியப் பேரரசை" உருவாக்குவோம் என உறுதி கொடுத்தது.[20]
1923ஆம் ஆண்டு செருமனி அரசாங்கத்தைப் பதவியில் இருந்து தூக்கி எறியும் வெற்றிகரமாக அமையாத ஒரு முயற்சிக்குப் பிறகு இட்லர் இறுதியாக 1933ஆம் ஆண்டு செருமனியின் ஆட்சித்தலைவரானார். பால் வான் இன்டன்பர்க் மற்றும் ரெயிக்ஸ்டக் இவரை நியமித்தனர். இட்லர் சனநாயகத்தை ஒழித்தார். ஒரு தீவிர, இனத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு திருத்தப்பட்ட உலக நிலையை அடிப்படையாகக் கொண்ட கொள்கையைப் பின்பற்ற ஆரம்பித்தார். சீக்கிரமே ஒரு பெரிய ஆயுத உற்பத்தி நடவடிக்கையைத் தொடங்கினார்.[21] அதே நேரத்தில், பிரான்சு தனது கூட்டணியைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எத்தியோப்பியாவில் இத்தாலிக்கு அதன் எண்ணம் போல் செயல்பட அனுமதி அளித்தது. எத்தியோப்பியவை ஒரு காலனியாக இத்தாலி கருதியது. 1935ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த நிலைமையானது இன்னும் மோசமானது. அப்போது செருமனியுடன் சட்டபூர்வமாக சார் பாசின் நிலப்பரப்பானது மீண்டும் இணைந்தது. இட்லர் வெர்சாய் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தனது ஆயுத உற்பத்தி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். கட்டாயப்படுத்திக் குடிமக்களை இராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தினார்.[22]
ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் இத்தாலி ஏப்ரல் 1935இல் செருமனியைக் கட்டுப்படுத்துவதற்காக இசுதிரேசா முன்னணியை உருவாக்கின. உலகளாவிய இராணுவக் கூட்டணியை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இது இருந்தது. எனினும், அந்த ஆண்டு சூனில், ஐக்கிய இராச்சியமானது ஒரு தனித்தியங்கும் கடற்படை ஒப்பந்தத்தைச் செருமனியுடன் செய்து கொண்டது. முந்தைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் செருமனியின் இலக்குகளால் கவலை கொண்ட சோவியத் ஒன்றியம் பிரான்சுடன் பரஸ்பர ஆதரவுக்காக ஒரு உடன்படிக்கையைத் தயார் செய்தது. ஆனால், இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் பிராங்கோ-சோவியத் உடன்படிக்கையானது உலக நாடுகள் சங்கத்தின் சிக்கல் நிறைந்த பணித்துறை விதிகளின் முறையொழுங்கு வழியாக அனுப்பப்பட வேண்டியிருந்தது. இது அந்த உடன்படிக்கையைச் செயல்திறன் அற்றதாக்கியது.[23] ஐரோப்பா மற்றும் ஆசியாவின் நிகழ்வுகளால் கவலை கொண்ட ஐக்கிய அமெரிக்கா அதே ஆண்டு ஆகத்து மாதம் நடு நிலைச் சட்டத்தை இயற்றியது.[24]
வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கைகளை மீறிய இட்லர் மார்ச் 1936இல் ரைன்லாந்தில் இராணுவத்தைக் குவித்தார். இட்லரின் கோபத்தைத் தணிப்பதற்காக அவருக்கு நிலப்பரப்பை இசைந்தளிக்கும் கொள்கை காரணமாக இட்லர் சிறிதளவே எதிர்ப்பைச் சந்தித்தார்.[25] அக்டோபர் 1936இல் செருமனி மற்றும் இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியை உருவாக்கின. ஒரு மாதத்திற்குப் பிறகு செருமனி மற்றும் சப்பான் பன்னாட்டுப் பொதுவுடைமை எதிர்ப்பு உடன்படிக்கையில் கையொப்பம் இட்டன. இந்த ஒப்பந்தத்தில் அடுத்த ஆண்டு இத்தாலி இணைந்தது.[26]
சீனாவில் குவோமின்டாங் கட்சியானது வட்டாரப் போர்ப் பிரபுக்களுக்கு எதிராக சீனாவை ஒருங்கிணைக்கும் ஓர் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. 1920களின் மத்தியில் பெயரளவுக்குச் சீனாவை ஒன்றிணைத்தது. எனினும், சீக்கிரமே தன் முந்தைய சீனப் பொதுவுடமைக் கட்சிக் கூட்டாளிகள்[27] மற்றும் புதிய வட்டாரப் போர்ப் பிரபுக்களுடன் ஓர் உள்நாட்டுப் போரில் பங்கெடுக்க வேண்டிய நிலை அதற்கு வந்தது. 1931இல் அதிகரித்து வந்த இராணுவ கொள்கையைக் கொண்ட சப்பானியப் பேரரசு நீண்ட காலமாகச் சீனாவில் தாக்கத்தை வேண்டி வந்தது.[28] ஆசியாவை ஆட்சி செய்ய சப்பானுக்கு இருக்கும் உரிமையின் முதல் படியாக இதை சப்பான் அரசாங்கம் கருதியது. மஞ்சூரியா மீது படையெடுப்பதற்குச் சாக்குப்போக்காக முக்தேன் நிகழ்வை நடத்தியது. பிறகு, அங்கு கைப்பாவை அரசான மஞ்சுகோவை நிறுவியது.[29]
மஞ்சூரியா மீதான சப்பானின் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் சங்கத்திடம் சீனா முறையிட்டது. மஞ்சூரியாவுக்குள்ளான அதன் ஊடுருவலுக்காகக் கண்டிக்கப்பட்ட பிறகு உலக நாடுகள் சங்கத்தில் இருந்து சப்பான் விலகியது. இந்த இரு நாடுகளும் பிறகு, 1933ஆம் ஆண்டு தாங்கு அமைதி ஒப்பந்தம் கையொப்பமிடப்படும் வரை சாங்காய், ரெகே மற்றும் கீபே ஆகிய இடங்களில் பல யுத்தங்களைப் புரிந்தன. இதற்குப் பிறகு, மஞ்சூரியா மற்றும் சாகர் மற்றும் சுயியுவானில் சப்பானிய ஆக்ரோஷத்திற்கு எதிராகச் சீனத் தன்னார்வப் படைகள் எதிர்ப்பைத் தொடர்ந்தன[30]. 1936ஆம் ஆண்டின் சியான் நிகழ்வுக்குப் பிறகு, குவோமின்டாங் மற்றும் பொதுவுடமைவாதப் படைகள் சப்பானுக்கு எதிராக ஓர் ஒருங்கிணைந்த எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகச் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.[31]
இரண்டாவது இத்தாலிய-எத்தியோப்பியப் போர் என்பது அக்டோபர் 1935இல் தொடங்கி மே 1936இல் முடிந்த ஒரு குறுகிய காலனிப் போராகும். எத்தியோப்பியப் பேரரசு (அபிசீனியா என்றும் அறியப்படுகிறது) மீது இத்தாலிய இராச்சியத்தின் (ரெக்னோ டி இத்தாலியா) இராணுவப் படைகள் படையெடுத்ததன் மூலம் இப்போர் தொடங்கியது. இத்தாலிய இராச்சியமானது இத்தாலிய சோமாலிலாந்து மற்றும் எரித்ரியாவிலிருந்து இப்போரில் இறங்கியது.[32] எத்தியோப்பியா மீதான இராணுவ ஆக்கிரமிப்புக்கு இப்போர் இட்டுச் சென்றது. புதிதாக உருவாக்கப்பட்ட காலனியான இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் (ஆப்பிரிக்கா ஓரியன்டல் இத்தாலியானா) எத்தியோப்பியா இணைக்கப்பட்டது. மேலும், அமைதியை நீடிக்கச் செய்யும் ஒரு சக்தியாக இருந்த உலக நாடுகள் சங்கத்தின் பலவீனத்தையும் இது வெளிக்காட்டியது. இத்தாலி மற்றும் எத்தியோப்பியா ஆகிய இரண்டுமே உலக நாடுகள் சங்கத்தின் உறுப்பினர் நாடுகளாக இருந்தன. ஆனால், சங்கத்தின் கூட்டு ஒப்பந்தமான 10வது பிரிவை இத்தாலி வெளிப்படையாக மீறிய போது, அதைத் தடுக்க சங்கமானது மிகக் குறைவான செயல்களையே செய்தது.[33] படையெடுப்பு காரணமாக இத்தாலி மீது தடைகளை விதிக்க ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு ஆதரவளித்தன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்தாலியப் படையெடுப்பை நிறுத்துவதில் தோல்வி அடைந்தன. [34]ஆத்திரியாவை தன் வசப்படுத்தும் செருமனியின் இலக்குக்கு எதிரான கண்டனங்களை இறுதியாக இத்தாலி கைவிட்டது.[35]
எசுப்பானியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த போது இட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் அரசுக்கு எதிராக படைப் பெருந் தலைவர் பிரான்சிஸ்கோ பிராங்கோவால் தலைமை தாங்கப்பட்ட தேசியவாதிகளுக்கு இராணுவ ஆதரவு அளித்தனர். நாசிக்களை விட தேசியவாதிகளுக்கு மிகுந்த அளவு ஆதரவை இத்தாலி அளித்தது. மொத்தமாக முசோலினி எசுப்பானியாவுக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைத் துருப்புகளையும், 6,000 வான் படை வீரர்களையும், மேலும் சுமார் 720 விமானங்களையும் அனுப்பினார்.[36] எசுப்பானியக் குடியரசின் ஆட்சியிலிருந்த அரசாங்கத்திற்குச் சோவியத் ஒன்றியம் ஆதரவளித்தது. பன்னாட்டுப் படையணிகள் என்று அறியப்பட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுத் தன்னார்வப் படை வீரர்களும் தேசியவாதிகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர். செருமனியும், சோவியத் ஒன்றியமும் இந்தச் சார்பாண்மைப் போரைத் தங்களது மிகுந்த முன்னேறிய ஆயுதங்கள் மற்றும் உத்திகளை, போரில் சோதனை செய்யும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தின. ஏப்ரல் 1939இல் தேசியவாதிகள் உள்நாட்டுப் போரை வென்றனர். தற்போது சர்வாதிகாரியான பிராங்கோ இரண்டாம் உலகப் போரின் போது அதிகாரப்பூர்வமாக நடுநிலை வகித்தார். ஆனால், பொதுவாக அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்தார்.[37] செருமனியுடனான இவரது மிக முக்கியமான இணைவானது கிழக்குப் போர்முனையில் போரிடுவதற்காகத் தன்னார்வலர்களை அனுப்பியது ஆகும்.[38]
சூலை 1937இல் முன்னாள் சீன ஏகாதிபத்தியத் தலைநகரான பீகிங்கை, மார்க்கோ போலோ பாலச் சம்பவத்தைத் தூண்டியதற்குப் பிறகு, சப்பான் கைப்பற்றியது. இச்செயலானது இறுதியாக சீனாவின் அனைத்துப் பகுதிகள் மீதும் சப்பான் படையெடுப்பதில் முடிவடைந்தது.[39] சோவியத்துகள் சீக்கிரமே சீனாவுடன் ஒரு போர் எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு உபகரண உதவியை வழங்கியது. செருமனியுடனான சீனாவின் முந்தைய ஒத்துழைப்பை முடித்து வைத்தது. செப்டம்பர் முதல் நவம்பர் வரை சப்பானியர்கள் தையுவானைத் தாக்கினர். சிங்கோவுக்கு அருகில் குவோமின்டாங் இராணுவத்துடன் சண்டையில் ஈடுபட்டனர்.[40][நம்பகத்தகுந்த மேற்கோள்?] பிங்சிங்குவானில் பொதுவுடமைவாதப் படைகளுடன் போரிட்டனர்.[41][42] சாங்காயின் தற்காப்பிற்காகத் தன்னுடைய சிறந்த இராணுவத்தைப் படைப் பெருந்தலைவர் சங் கை செக் தயார் நிலையில் வைத்தார். ஆனால், மூன்று மாதச் சண்டைக்குப் பிறகு சாங்காய் வீழ்ந்தது. சீனப் படைகளைத் தொடர்ந்து சப்பானியர்கள் தள்ளிக்கொண்டு முன்னேறினர். திசம்பர் 1937இல் தலைநகரம் நாங்கிங்கைக் கைப்பற்றினர். நாங்கிங் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான அல்லது இலட்சக்கணக்கான சீனக் குடிமக்களும், ஆயுதத்தைக் கைவிட்ட போர் வீரர்களும் சப்பானியர்களால் கொல்லப்பட்டனர்.[43][44]
மார்ச் 1938இல் தேசியவாத சீனப்படைகள் தையேர்சுவாங்கில் தங்களது முதல் முக்கிய வெற்றியைப் பெற்றன. ஆனால், பிறகு மே மாதத்தில் சுசோவு நகரமானது சப்பானியர்களால் கைப்பற்றப்பட்டது.[45][நம்பகத்தகுந்த மேற்கோள்?] சூன் 1938இல் மஞ்சளாற்றில் வெள்ளத்தை ஏற்படுத்தியதன் மூலம் சப்பானியப் படைகளின் முன்னேற்றத்தைச் சீனப் படைகள் தடுத்தன. இந்தச் செயலானது, ஊகானில் தங்களது தற்காப்பைத் தயார் செய்ய சீனர்களுக்கு நேரத்தைப் பெற்றுத் தந்தது. ஆனால், நகரமானது அக்டோபரில் கைப்பற்றப்பட்டது.[46] சப்பான் நம்பியது போல் சப்பானின் இராணுவ வெற்றிகள் சீனாவின் எதிர்ப்பின் வீழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. பதிலாக, சீன அரசாங்கமானது நிலப்பகுதிக்கு உட்புறமாகச் சோங்கிங்கிற்குத் தனது இடத்தை மாற்றியது. அங்கிருந்து போரைத் தொடர்ந்தது.[47][48]
1930களின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை மஞ்சுகோவில் இருந்த சப்பானியப் படைகள் சோவியத் ஒன்றியம் மற்றும் மங்கோலியாவுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த எல்லைச் சண்டைகளில் ஈடுபட்டன. கோகுசின்-ரான் என்ற சப்பானியக் கொள்கையானது சப்பானின் வடக்கு நோக்கிய விரிவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. அந்நேரத்தில் ஏகாதிபத்திய இராணுவத்தால் இது விரும்பப்பட்டது. 1939இல் கல்கின் கோல் யுத்தத்தில் சப்பான் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அப்போது நடந்து கொண்டிருந்த இரண்டாவது சீன-சப்பானியப் போர்,[49] சோவியத்துடன் சப்பானின் கூட்டாளியான நாசி செருமனி நடுநிலையைப் பின்பற்றியது ஆகியவை இந்தக் கொள்கையைப் பின்பற்றுவதைக் கடினமாக்கின. இறுதியாக, ஏப்ரல் 1941இல் சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியம் ஒரு நடுநிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. நான்சின்-ரான் என்ற கொள்கையை சப்பான் பின்பற்றியது. இதற்கு சப்பானியக் கடற்படை ஆதரவளித்தது. சப்பான் கவனத்தைத் தெற்கு நோக்கித் திருப்பியது. இது இறுதியாக, ஐக்கிய அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நாடுகளுடன் போருக்கு இட்டுச் சென்றது.[50][51]
ஐரோப்பாவில் செருமனியும், இத்தாலியும் மிகுந்த ஆக்ரோஷ மிக்கவையாக உருவாயின. மார்ச் 1938இல் செருமனி ஆத்திரியாவை இணைத்துக் கொண்டது. மற்ற ஐரோப்பிய சக்திகளிடமிருந்து சிறிதளவே எதிர்வினையைப் பெற்றது.[52] இதனால் ஊக்கம் பெற்ற இட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் செருமானிய இனத்தவரை முக்கிய மக்கள் தொகையாகக் கொண்ட சுதேதென்லாந்து மீது செருமானிய உரிமை கோரலை அழுத்தமாகத் தெரிவிக்க ஆரம்பித்தார். சீக்கிரமே, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு, கோபத்தைத் தணிப்பதற்காக நிலப்பரப்புகளை இசைந்தளிக்கும் பிரித்தானியப் பிரதமர் நெவில் சேம்பர்லேனின் கொள்கையைப் பின்பற்றின. மியூனிச் ஒப்பந்தத்தில் செருமனிக்கு இந்த நிலப்பரப்பை விட்டுக் கொடுத்தன. இது செக்கோஸ்லோவாக்கிய அரசாங்கத்தின் விருப்பங்களுக்கு எதிராக நடைபெற்றதது. மேற்கொண்டு எந்தவொரு நிலப்பரப்பு உரிமைகளும் கோரப்படமாட்டாது என்ற உறுதிக்குப் பதிலாக இது நடத்தப்பட்டது.[53] சீக்கிரமே, அங்கேரிக்கு மேற்கொண்ட நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க செக்கோஸ்லோவேகியாவை செருமனி மற்றும் இத்தாலி கட்டாயப்படுத்தின. போலந்து செக்கோஸ்லோவாக்கியாவின் சாவோல்சி பகுதியை இணைத்துக் கொண்டது.[54]
செருமனியால் கூறப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் இந்த ஒப்பந்தமானது பூர்த்தி செய்த போதும், அனைத்து செக்கோஸ்லாவாக்கியாவையும் ஒரு போர் நடவடிக்கையின் மூலம் அபகரிப்பதைச் சேம்பர்லேனின் தலையீடானது தடுத்துவிட்டதாகத் தனிமையில் இட்லர் கோபம் கொண்டார். இதற்குப் பிறகான பேச்சுக்களில் இட்லர் பிரித்தானிய மற்றும் யூதப் "போர் விரும்பிகளைத்" தாக்கினார். பிரித்தானியக் கடற்படையின் தனி முதன்மை நிலைக்குச் சவால் விடுக்க சனவரி 1939இல் செருமானியக் கடற்படை வலிமையை ஒரு முக்கிய அளவுக்குப் பெருக்க இட்லர் இரகசியமாக ஆணையிட்டார். மார்ச் 1939இல் செருமனி செக்கோஸ்லாவாக்கியா மீது படையெடுத்தது. இறுதியாக அதை செருமானியப் பாதுகாப்பு பகுதிகளான பொகேமியா மற்றும் மோராவியாவாகவும், ஒரு செருமானிய ஆதரவு அரசான சுலோவாக் குடியரசாகவும் பிரித்தது.[55] 20 மார்ச் 1939 அன்று லித்துவேனியாவுக்கும் இட்லர் இறுதி எச்சரிக்கை விடுத்தார். முன்னர் செருமானிய மீம்லாந்து என்று அழைக்கப்பட்ட கிலைபேதா பகுதியை விட்டுக் கொடுக்கும் நிலைக்கு லித்துவேனியா தள்ளப்பட்டது.[56]
தான்சிக் சுதந்திர நகரம் மீது மேற்கொண்ட உரிமைக் கோரல்களை இட்லர் கூறிய போது மிகுந்த மனக் கலவரமடைந்த ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் போலந்து விடுதலைக்குத் தங்களது ஆதரவை உறுதி செய்தன. ஏப்ரல் 1939இல் அல்பேனியாவை இத்தாலி வென்ற போது இந்த உறுதியானது உருமேனியா மற்றும் கிரேக்க இராச்சியங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.[57] பிராங்கோ-பிரித்தானிய உறுதியானது போலந்துக்குக் கொடுக்கப்பட்ட சிறிது காலத்தில், செருமனி மற்றும் இத்தாலி தங்களது சொந்தக் கூட்டணியான இரும்பு ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக்கின.[58] செருமனியைச் சுற்றி வளைக்கும் முயற்சியை மேற்கொள்வதாக இட்லர் ஐக்கிய இராச்சியம் மற்றும் போலந்து மீது குற்றம் சாட்டினார். ஆங்கிலோ-செருமானியக் கடற்படை ஒப்பந்தத்தையும், செருமானிய-போலந்து போர் எதிர்ப்பு ஒப்பந்தத்தையும் இட்லர் கைவிட்டார்.[59]
போலந்து எல்லையில் செருமனி தொடர்ந்து துருப்புகளைக் குவித்த போது இறுதியில் இந்த நிலைமையானது ஒரு பொதுவான பிரச்சனையாக உருவெடுத்தது. 23 ஆகத்து அன்று பிரான்சு, ஐக்கிய இராச்சியம் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான ஓர் இராணுவ கூட்டணியை உருவாக்கும் மும்முனைப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்ட போது,[60] சோவியத் ஒன்றியம் செருமனியுடன் சண்டைத் தூண்டுதலுக்கு எதிரான ஓர் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.[61] இந்த ஒப்பந்தத்தில் ஓர் இரகசிய விதிமுறை இருந்தது. அது செருமனி மற்றும் சோவியத் தாக்கப் பகுதிகளை (மேற்குப் போலந்து மற்றும் லித்துவேனியா செருமனிக்கும்; கிழக்குப் போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெச்சராபியா சோவியத் ஒன்றியத்துக்கும்) வரையறுத்திருந்தது. போலந்தின் தொடர்ந்த சுதந்திர நிலையைக் கேள்விக்குள்ளாக்கியது.[62] போலந்துக்கு எதிரான போர் நடவடிக்கைக்குச் சோவியத் எதிர்ப்புத் தெரிவிக்கும் வாய்ப்பை இந்த ஒப்பந்தமானது மட்டுப்படுத்தியது. முதல் உலகப் போரின் போது செருமனியானது இரு முனைப் போரைச் சந்திக்கும் நிலையை எதிர் கொள்வதைப் போல் இம்முறை இல்லாமல் இருப்பதை இது உறுதி செய்தது. இதற்குப் பிறகு சீக்கிரமே 26 ஆகத்து அன்று தாக்குதலைத் தொடங்க இட்லர் ஆணையிட்டார். ஆனால், போலந்துடன் ஓர் அதிகாரப்பூர்வப் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஐக்கிய இராச்சியம் ஏற்படுத்தியதையும், இத்தாலி நடு நிலை வகிக்கும் என்பதையும் கேட்டதற்குப் பிறகு இட்லர் இந்தத் தாக்குதலைத் தாமதப்படுத்த முடிவு செய்தார்.[63]
போரைத் தவிர்ப்பதற்காக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரிட்டன் விடுத்த கோரிக்கைகளுக்குப் பதிலாக போலந்து மீது கோரிக்கைகளைச் செருமனி வைத்தது. இது உறவு முறைகளை மோசமாக்குவதற்கான ஒரு சாக்குப்போக்காகவே இருந்தது.[64] 29 ஆகத்து அன்று சுதந்திரமாக முடிவெடுக்கும் முழு அதிகாரமுடைய ஒரு போலந்துத் தூதரை பெர்லினுக்குப் பயணிக்க வைத்து தான்சிக்கை விட்டுக் கொடுக்கவும், போலந்து இடைவழியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி அதில் செருமானியச் சிறுபான்மையினர் பிரிவினைக்கு வாக்களிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை நடத்த இட்லர் கோரினார்.[64] செருமனியின் கோரிக்கைகளுக்கு உடன்படப் போலந்துக்காரர்கள் மறுத்தனர். 30-31 ஆகத்து இரவில் பிரித்தானியத் தூதுவர் நெவில் என்டர்சனுடன் ஒரு ஆக்ரோஷமான சந்திப்பில் ரிப்பன்டிராப் தன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாகச் செருமனி கருதுவதாக அறிவித்தார்.[65]
1 செப்டம்பர் 1939 அன்று படையெடுப்பைத் தொடங்குவதற்குப் பல போலி எல்லை நிகழ்வுகளை ஏற்படுத்தியதற்குப் பிறகு, அதைச் சாக்குப் போக்காக வைத்து போலந்து மீது செருமனி படையெடுத்தது.[66] வெசுதர்பிலேத்தில் இருந்த போலந்துத் தற்காப்புக்கு எதிராகப் போரின் முதல் செருமானியத் தாக்குதலானது நடத்தப்பட்டது.[67] இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு செருமனிக்கு ஓர் இறுதி எச்சரிக்கையை ஐக்கிய இராச்சியம் பதிலாகக் கொடுத்தது. செப்டம்பர் 3 அன்று எச்சரிக்கையைப் பொருட்படுத்தாதற்குப் பிறகு பிரிட்டன் மற்றும் பிரான்சு செருமனி மீது போரை அறிவித்தன.[68] இதற்குப் பிறகு ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடாவும் போரை அறிவித்தன. போனிப் போர் காலத்தின்போது, சார்லாந்துக்குள்ளான ஒரு கவனமான பிரெஞ்சுப் படையெடுப்பைத் தவிர்த்து கூட்டணியானது போலந்துக்கு எந்த ஒரு நேரடி இராணுவ உதவியையும் அளிக்கவில்லை.[69] மேற்கு நேச நாடுகள் செருமனி மீது ஒரு கடற்படை முற்றுகையையும் தொடங்கின. அதன் பொருளாதார மற்றும் போர் முயற்சியைச் சேதப்படுத்துவதை இலக்காக கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.[70] இதற்குப் பதிலாக நேச நாடுகளின் வணிக மற்றும் போர்க்கப்பல்களுக்கு எதிராக நீர் மூழ்கி யூ படகு போர் முறைக்குச் செருமனி ஆணையிட்டது. இது பிறகு அத்திலாந்திக் யுத்தமாகப் பெரிதானது.[71]
8 செப்டம்பர் அன்று வார்சாவின் புறநகர்ப் பகுதிகளை செருமானியத் துருப்புகள் அடைந்தன. மேற்குப் பகுதியில் போலந்தின் பதில் தாக்குதலானது செருமானிய முன்னேற்றத்தைப் பல நாட்களுக்குத் தடுத்தது. ஆனால், அது வேர்மாக்ட்டால் பக்கவாட்டில் பயணித்துச் சுற்றி வளைக்கப்பட்டது. முற்றுகையிடப்பட்ட வார்சாவிலிருந்து எஞ்சிய போலந்து இராணுவத்தினர் முற்றுகையை உடைத்துத் தப்பித்தனர். 17 செப்டெம்பர் 1939 அன்று சப்பானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் போலந்து மீது படையெடுத்தது.[72] போலந்து அரசானது பெரும்பாலும் நடைமுறையிலிருந்து அழிந்து விட்டது என்பதைக் காரணமாகக் கூறிப் படையெடுத்தது.[73] 27 செப்டம்பர் அன்று வார்சா நகர்ப் படையினர் செருமனியிடம் சரணடைந்தனர். போலந்து இராணுவத்தின் கடைசி பெரிய திட்டப் பிரிவானது 6 அக்டோபர் அன்று சரணடைந்தது. இராணுவத் தோல்வி அடைந்த போதும் போலந்து என்றுமே சரணடையவில்லை. மாறாக, நாடு கடந்த போலந்து அரசாங்கத்தை அது உருவாக்கியது. ஓர் இரகசிய அரசுச் சாதனமானது ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் தொடர்ந்தது.[74] போலந்து இராணுவ வீரர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினர் உருமேனியா மற்றும் லாத்வியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவர்களில் பலர் பிறகு போரின் மற்ற முனைகளில் அச்சு நாடுகளுக்கு எதிராகச் சண்டையிட்டனர்.[75]
செருமனி மேற்குப் போலந்தை இணைத்துக் கொண்டது. போலந்தின் நடுப் பகுதியை ஆக்கிரமித்தது. சோவியத் ஒன்றியம் கிழக்குப் பகுதியை இணைத்துக் கொண்டது. போலந்து நிலப்பரப்பின் சிறிய பகுதிகள் லித்துவேனியா மற்றும் சுலோவாக்கியாவுக்குக் கொடுக்கப்பட்டன. 6 அக்டோபர் அன்று ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சுக்கு ஒரு பொது அமைதி முயற்சியை இட்லர் மேற்கொண்டார். ஆனால், போலந்தின் எதிர் காலமானது செருமனி மற்றும் சோவியத் ஒன்றியத்தால் மட்டுமே முடிவெடுக்கப்படும் என்றார். இந்த முன்மொழிவானது நிராகரிக்கப்பட்டது.[65] பிரான்சுக்கு எதிராக உடனடித் தாக்குதலுக்கு இட்லர் ஆணையிட்டார்.[76] ஆனால், மோசமான காலநிலை காரணமாக 1940ஆம் ஆண்டின் இளவேனிற் காலம் வரை இந்தத் தாக்குதல் தாமதப்படுத்தப்பட்டது.[77][78][79]
போலந்தில் போர் வெடித்ததற்குப் பிறகு எசுத்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியா இராணுவப் படையெடுப்புக்கு உள்ளாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையைச் சுடாலின் விடுத்தார். இந்த நாடுகளில் சோவியத் இராணுவத் தளங்களை உருவாக்கக் காரணமான ஒப்பந்தங்களில் கையொப்பமிட மூன்று பால்டிக் நாடுகளும் கட்டாயப்படுத்தப்பட்டன. அக்டோபர் 1939இல் குறிப்பிடத்தக்க அளவிலான சோவியத் இராணுவப் படைப் பிரிவுகள் அங்கு இடம் பெயர்ந்தன.[80][81][82] இதே போன்றதொரு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் பின்லாந்து மறுத்தது. சோவியத் ஒன்றியத்துக்குத் தன் நிலப்பரப்பில் ஒரு பகுதியை விட்டுக் கொடுக்கும் கோரிக்கையை நிராகரித்தது. நவம்பர் 1939 அன்று சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது படையெடுத்தது.[83] உலக நாடுகள் சங்கத்தில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.[84] பெரும் எண்ணிக்கையில் வீரர்களைக் கொண்டிருந்த போதிலும் பனிக்காலப் போரின் போது சோவியத் இராணுவ வெற்றியானது குறைவாகவே இருந்தது.[85] பின்லாந்து-சோவியத் போரானது மார்ச் 1940இல் முடிவுக்கு வந்தது. தன் நிலப் பரப்பில் சிலவற்றைப் பின்லாந்து விட்டுக் கொடுத்தது.[86]
சூன் 1940இல் எசுத்தோனியா, லாத்வியா மற்றும் லித்துவேனியாவின் மொத்த நிலப்பரப்புகளையும்,[81] உருமேனியப் பகுதிகளான பெச்சராபியா, வடக்கு புகோவினா மற்றும் கெர்தசா பகுதிகளையும் சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்தது. ஆகத்து 1940இல் உருமேனியா மீது இரண்டாவது வியன்னா விருதை இட்லர் கட்டாயப்படுத்தி அளித்தார். இதன் காரணமாக வடக்கு திரான்சில்வேனியவை அங்கேரிக்குக் கொடுக்க வேண்டிய நிலை உருமேனியாவுக்கு ஏற்பட்டது.[87] செப்டம்பர் 1940இல் செருமானிய மற்றும் இத்தாலிய ஆதரவுடன் உருமேனியாவிடம் இருந்து தெற்கு தோப்ருசா பகுதியைப் பல்கேரியா கேட்டது. இது கிரையோவா ஒப்பந்தத்திற்கு இட்டுச் சென்றது.[88] உருமேனியா 1939ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தன் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பை இழந்தது என்பது உருமேனிய மன்னர் இரண்டாம் கரோலுக்கு எதிரான ஒரு புரட்சிக்குக் காரணமானது. மார்சல் இயோன் அந்தோனெசுகுவின் தலைமையிலான ஒரு பாசிச சர்வாதிகார அரசாக உருமேனியா மாறியது. ஒரு செருமானிய உத்தரவாதத்தைப் பெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அச்சு நாடுகளை நோக்கி உருமேனியாவின் போக்கு இருந்தது.[89] அதே நேரத்தில், நாசி-சோவியத் அரசியல் மீள் இணக்கமும், பொருளாதார ஒத்துழைப்பும்[90][91] படிப்படியாக நின்று போனது.[92][93] நாசி செருமனியும், சோவியத் ஒன்றியமும் போருக்கு ஆயத்தமாகத் தொடங்கின.[94]
ஏப்ரல் 1940இல் சுவீடனிலிருந்து வரும் இரும்புத் தாதுச் சரக்குகளைப் பாதுகாப்பதற்காக டென்மார்க் மற்றும் நார்வே மீது செருமனி படையெடுத்தது. இந்தச் சரக்குப் போக்குவரத்தை வெட்டி விட நேச நாடுகள் முயன்றன.[95] நேச நாடுகள் உதவி அளித்த போதும் சில மணி நேரத்திலேயே டென்மார்க் தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. இரண்டு மாதத்துக்குள்ளாகவே நார்வே வெல்லப்பட்டது.[96] நார்வே படையெடுப்பு குறித்த பிரித்தானியப் பொது மக்களின் அதிருப்தியானது பிரதமர் நெவில் சேம்பர்லேனின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றது. 10 மே 1941இல் வின்ஸ்டன் சர்ச்சில் பிரதமராகப் பதவிக்கு வந்தார்.[97]
அதே நாளில் பிரான்சுக்கு எதிராக ஒரு தாக்குதலில் செருமனி இறங்கியது. பிராங்கோ-செருமானிய எல்லையில் இருந்த வலிமையான மசினோ கோட்டுப் பாதுகாப்புகளைச் சுற்றிச் செல்ல நடு நிலை வகித்த நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் லக்சம்பர்க் மீது தனது தாக்குதலைச் செருமனி திருப்பியது.[98] ஆர்டென் காடு பகுதி வழியாகச் சுற்றி வளைக்கும் நகர்வைச் செருமானியர்கள் மேற்கொண்டனர்.[99] ஆர்டென் காட்டைக் கவச வாகனங்களால் ஊடுருவ இயலாத இயற்கைத் தடை என நேச நாடுகள் தவறாகக் கருதின.[100][101] வெற்றிகரமாக புதிய மின்னலடித் தாக்குதல் உத்திகளைச் செயல்படுத்திய பிறகு வேர்மாக்டானது கால்வாயை நோக்கி வேகமாக முன்னேறியது. பெல்ஜியத்தில் இருந்த நேச நாட்டுப் படைகளைப் பிரித்தது. லில்லேவுக்கு அருகில் இருந்த பிராங்கோ-பெல்ஜிய எல்லையில் பெரும்பாலான நேச நாட்டு இராணுவங்களைக் கொப்பரையில் பிடித்தது போல் ஆக்கியது. சூன் ஆரம்பம் வாக்கில் கண்டப் பகுதியில் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான நேச நாட்டுத் துருப்புகளை ஐக்கிய இராச்சியத்தால் வெளியேற்ற முடிந்தது. எனினும், கிட்டத் தட்ட அனைத்து உபகரணங்களையும் அவர்கள் விட்டுச் சென்றனர்.[102]
10 சூன் அன்று பிரான்சு மீது இத்தாலி படையெடுத்தது. பிரான்சு மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளின் மீதும் போரை அறிவித்தது.[103] பலவீனமடைந்த பிரெஞ்சு இராணுவத்திற்கு எதிராகத் தெற்கு நோக்கிச் செருமானியர்கள் திரும்பினர். அவர்களிடம் 14 சூன் அன்று பாரிசு வீழ்ந்தது. எட்டு நாட்களுக்குப் பிறகு செருமனியிடம் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் பிரான்சு கையொப்பமிட்டது. பிரான்சானது செருமானிய மற்றும் இத்தாலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளாகவும்,[104] தேர்ந்தெடுக்கப்படாத விச்சி அரசின் கீழ் ஆக்கிரமிக்கப்படாத ஒரு பின் பகுதி அரசாகவும் பிரிக்கப்பட்டது. விச்சி அரசானது அதிகாரப் பூர்வமாக நடு நிலை வகித்த போதும், பொதுவாகச் செருமனியுடன் இணைந்து செயல்பட்டது. பிரான்சு தனது கடற்படையை வைத்துக் கொண்டது. பிரெஞ்சு கடற்படையைச் செருமனி அபகரிப்பதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக 3 சூலை அன்று ஐக்கிய இராச்சியமானது பிரெஞ்சுக் கடற்படையைத் தாக்கியது.[105]
பிரிட்டன் வான் சண்டையானது[106] சூலையின் ஆரம்பத்தில் தொடங்கியது. லூப்டுவாபே கப்பல் வழிகள் மற்றும் துறைமுகங்களைத் தாக்கியது.[107] இட்லரின் அமைதி வாய்ப்பளிப்பை ஐக்கிய இராச்சியம் நிராகரித்தது.[108] செருமானிய வான் தனி முதன்மைப் படையெடுப்பானது ஆகத்து மாதத்தில் தொடங்கியது. ஆனால், பிரித்தானிய தேசிய மதிப்பு வாய்ந்த விமானப் படையின் தாக்குதலைத் தோற்கடிப்பதில் தோல்வி அடைந்தது. இதனால் முன் மொழியப்பட்டிருந்த பிரிட்டன் மீதான செருமானியப் படையெடுப்பானது கால வரையின்றி தள்ளி வைக்கப்படும் நிலைக்கு ஆளானது. பிளிட்ஸ் முறையில் இலண்டன் மற்றும் பிற நகரங்கள் மீதான இரவுத் தாக்குதல்கள் மூலம் செருமானிய முக்கியக் குண்டு வீச்சுத் தாக்குதலானது தீவிரமடைந்தது. ஆனால், பிரித்தானியப் போர் முயற்சிக்கு முக்கியச் சேதம் ஏற்படுத்துவதில் தோல்வி அடைந்தது.[107]:{{{3}}} இத்தாக்குதல்கள் பெரும்பாலும் மே 1941இல் முடிந்து போனது.[109]
புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரெஞ்சுக் கோட்டைகளைப் பயன்படுத்திச் செருமானியக் கடற்படையானது விரிவாகப் பரவி இருந்த அரச கடற்படைக்கு எதிராக, அத்திலாந்திக்கில் பிரித்தானியக் கப்பல்களுக்கு எதிராக நீர்மூழ்கி யூ படகுகளைப் பயன்படுத்தி வெற்றிகளைப் பெற்றது.[110] 27 மே 1941 அன்று செருமானியப் போர்க் கப்பலான பிஸ்மார்க்கை மூழ்கடித்ததன் மூலம் பிரித்தானிய மையக் கப்பல் குழுவானது ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றது.[111]
நவம்பர் 1939இல் சீனா மற்றும் மேற்கு நேச நாடுகளுக்கு உதவி செய்ய நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்கா மேற்கொண்டது. நேச நாடுகளால் "பணம் மூலம் உபகரணங்களை வாங்குவதற்கு" அனுமதி அளிக்க நடு நிலைச் சட்டத்தைக் கொண்டு வந்தது.[112] 1940இல் பாரிசை செருமனி கைப்பற்றியதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் அளவானது பெருமளவு அதிகரித்தது. மேலும், செப்டம்பரில் பிரித்தானியத் தளங்களைப் பயன்படுத்தும் அனுமதிக்குப் பதிலாக அமெரிக்கத் தாக்குதல் போர்க் கப்பல்களைக் கொடுக்க ஐக்கிய அமெரிக்கா ஒப்புக் கொண்டது.[113] எனினும், 1941 வரை ஒரு பெருமளவிலான அமெரிக்கப் பொது மக்கள் இந்தச் சண்டையில் அமெரிக்கா எந்த ஒரு நேரடி இராணுவத் தலையீட்டையும் செய்வதைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர்.[114] திசம்பர் 1941இல் உலகை வெல்வதற்குத் திட்டமிடுவதாக இட்லர் மீது ரூசவெல்ட் குற்றம் சாட்டினார். எந்த ஒரு பேச்சுவார்த்தையும் பயனற்றது என தவிர்த்தார். ஐக்கிய அமெரிக்கா ஒரு "சனநாயகப் படைக் கலமாக" உருவாக வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பிரித்தானியப் போர் முயற்சிக்கு ஆதரவளிக்க, உதவி தொடர்பான கடன்-குத்தகை ஒப்பந்தக் கொள்கைகளை ஊக்குவித்தார்.[108]:{{{3}}} செருமனிக்கு எதிராக ஒரு முழு அளவிலான தாக்குதலுக்குத் தயாராவதற்காக ஐக்கிய அமெரிக்கா உத்தித் திட்டங்களை வகுக்க ஆரம்பித்தது.[115]
செப்டம்பர் 1940இன் இறுதியில் மும்முனை ஒப்பந்தமானது சப்பான், இத்தாலி மற்றும் செருமனியை அதிகாரப் பூர்வமாக அச்சு நாடுகளாக ஒன்றிணைத்தது. மும்முனை ஒப்பந்தமானது தெளிவாக, சோவியத் ஒன்றியத்தை தவிர்த்து எந்தவொரு நாடும் எந்தவொரு அச்சு சக்தியையும் தாக்கினால் மூன்று நாடுகளுக்கு எதிராகவும் போருக்குக் கட்டாயப்படுத்தப்படும் என்று கூறியது.[116] நவம்பர் 1940இல் அங்கேரி, சுலோவாக்கியா மற்றும் உருமேனியா இணைந்த பிறகு அச்சு நாடுகள் விரிவடைந்தன.[117] உருமேனியா மற்றும் அங்கேரி சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான அச்சு நாடுகளின் போரின் போது முக்கிய ஆதரவை அளித்தன. சோவியத் ஒன்றியத்துக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட நிலப் பரப்பை மீண்டும் பெற வேண்டும் என்ற உருமேனியாவின் எண்ணமும் இதற்கு ஒரு பகுதிக் காரணமாகும்.[118]
1940 சூனின் ஆரம்பத்தில் இத்தாலிய ரெகியா ஏரோநாட்டிகாவானது ஒரு பிரித்தானியக் கையிருப்பு நிலமான மால்டாவைத் தாக்கி முற்றுகையிட்டது. கோடைக் காலத்தின் பிற்பகுதி முதல் இலையுதிர் காலத்தின் ஆரம்பம் வரை இத்தாலியானது பிரித்தானிய சோமாலிலாந்தை வென்றதோடு, பிரித்தானியார் வசம் இருந்த எகிப்துக்குள் ஓர் ஊடுருவலையும் நடத்தியது. அக்டோபரில் இத்தாலி கிரேக்கத்தைத் தாக்கியது. ஆனால், இத்தாலியர்களுக்கு பெருமளவு உயிரிழப்பை ஏற்படுத்திய இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. இந்த படையெடுப்பானது மாதங்களுக்குள்ளாகவே முடிந்தது. இப்படையெடுப்பால் நிலப்பரப்பில் சிறிதளவு மாற்றங்களே ஏற்பட்டன.[119] இத்தாலிக்கு உதவுவதற்காகவும், பால்கன் பகுதியில் பிரிட்டன் காலூன்றுவதைத் தடுப்பதற்காகவும் பால்கன் பகுதி மீது ஒரு படையெடுப்புக்கான ஆயத்தப் பணிகளைச் செருமனி தொடங்கியது. ஏனெனில், பிரிட்டன் அங்கு காலூன்றினாள் அது உரோமானிய எண்ணெய் வயல்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கும். மேலும், நடு நிலக் கடலின் பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராகத் தாக்கவும் செருமனி இதனைத் தொடங்கியது.[120]
திசம்பர் 1940இல் எகிப்து மற்றும் இத்தாலியக் கிழக்கு ஆப்பிரிக்காவில் இத்தாலியப் படைகளுக்கு எதிராகப் பிரித்தானியப் பேரரசின் படைகள் பதில் தாக்குதல்களைத் தொடங்கின.[121] இந்தத் தாக்குதல்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்தன. 1941 பெப்ரவரியின் ஆரம்பத்தில் கிழக்கு லிபியாவின் கட்டுப்பாட்டை இத்தாலி இழந்தது. பெரும் எண்ணிக்கையிலான இத்தாலியத் துருப்புகள் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இத்தாலியக் கடற்படையும் முக்கியமான தோல்விகளை அடைந்தது. தரந்தோவில் நடத்தப்பட்ட ஒரு விமானம் தாங்கி கப்பல் தாக்குதலின் மூலம் தேசிய மதிப்பு வாய்ந்த கடற்படையானது மூன்று இத்தாலியப் போர்க் கப்பல்களைப் பயன்படுத்த இயலாதவையாக ஆக்கியது. மதபன் முனை யுத்தத்தில் மேலும் பல போர்க் கப்பல்களைப் பயனற்றதாக்கியது.[122]
இத்தாலியத் தோல்விகள் வடக்கு ஆப்பிரிக்காவுக்குத் தளங்களிலிருந்து தொலை தூரப் பகுதிகளுக்குச் சென்று போர் புரியும் படையைச் செருமனி இறக்குவதற்குத் தூண்டியது. 1941 மார்ச் இறுதியில் பாலைவன நரி ரோமெலின் ஆப்பிரிக்கத் துணைப் பிரிவானது தாக்குதலில் இறங்கியது. பொது நலவாயப் படைகளைப் பின் வாங்க வைத்தது.[123] ஒரு மாதத்திற்குள்ளாகவே அச்சு நாட்டுப் படைகள் மேற்கு எகிப்துக்கு முன்னேறின. துப்ருக் துறைமுகத்தை முற்றுகையிட்டன.[124]
1941 மார்ச்சின் இறுதியில் பல்கேரியா மற்றும் யுகோஸ்லாவியா மும்முனை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. எனினும், பிரித்தானிய ஆதரவுத் தேசியவாதிகளால் இரண்டு நாட்களுக்குப் பிறகு யுகோஸ்லாவிய அரசாங்கமானது தூக்கி எறியப்பட்டது. இதற்குப் பதிலாக, ஒரே நேரத்தில் யுகோஸ்லாவியா மற்றும் கிரேக்கம் ஆகிய இரு நாடுகளின் மீதும் செருமனி 6 ஏப்ரல் 1941 அன்று படையெடுத்தது. ஒரு மாதத்திற்குள்ளாகவே இரு நாடுகளும் சரணடையும் நிலைக்குத் தள்ளப்பட்டன. [125]மே இறுதியில், கிரேக்கத் தீவான கிரீட் மீதான வான் வழிப் படையெடுப்புடன் செருமனி பால்கன் பகுதியை முழுவதுமாக வென்றது.[126] அச்சு நாடுகளின் வெற்றியானது விரைவாக இருந்த போதும், அவர்களுக்கு எதிரான கசப்பான உணர்வுடைய பெரிய அளவிலான ஒரு சார்புப் போர் முறையானது யுகோஸ்லாவியாவை ஆக்கிரமித்திருந்த அச்சு நாட்டுப் படைகளுக்கு எதிராக இறுதியாக வெடித்தது. இப்போர் முறை போரின் இறுதி வரை நீடித்தது.[127]
மே மாதத்தில் மத்திய கிழக்கில் ஈராக்கில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியைப் பொது நலவாயப் படைகள் ஒடுக்கின. இந்தக் கிளர்ச்சிக்கு விச்சியின் கட்டுப்பாட்டிலிருந்த சிரியாவுக்குள் இருந்த தளங்களில் இருந்து வந்த செருமானிய விமானங்கள் உதவி புரிந்தன.[128] சூன் மற்றும் சூலைக்கு இடையில் சிரியா மற்றும் லெபனானில் இருந்த பிரெஞ்சுக் கையிருப்பு நிலங்களைச் சுதந்திர பிரெஞ்சு உதவியுடன் பொது நலவாயப் படைகள் படையெடுத்து ஆக்கிரமித்தனர்.[129]
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஒப்பீட்டளவில் நிலைமை நிலையாக இருந்த போது, செருமனி, சப்பான் மற்றும் சோவியத் ஒன்றியம் போருக்கு ஆயத்தமாயின. செருமனியுடனான பதட்டம் அதிகரித்துக் கொண்டு வந்ததையும், தென்கிழக்கு ஆசியாவின் வளமிக்க ஐரோப்பியக் கையிருப்பு நிலங்களைக் கைப்பற்றுவதன் மூலம் ஐரோப்பியப் போரைத் தனக்குச் சாதகமாக்க சப்பான் திட்டமிடுவதையும் அறிந்த சோவியத்துகள் சப்பானுடன் ஏப்ரல் 1941இல் சோவியத்-சப்பானிய நடு நிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.[130] இதற்கு மாறாக, சோவியத் ஒன்றியம் மீது ஒரு தாக்குதலுக்குப் படிப்படியாகச் செருமானியர்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். சோவியத் எல்லையில் படைகளைக் குவித்தனர்.[131]
ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் செருமனிக்கு எதிராகப் போரில் சீக்கிரமாகவோ அல்லது தாமதமாகவோ இறங்குவார்கள் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டே, போரை ஐக்கிய இராச்சியமானது முடிவுக்குக் கொண்டு வர மறுக்கிறது என இட்லர் நம்பினார்.[132] 31 சூலை 1941 அன்று சோவியத் ஒன்றியம் நீக்கப்பட வேண்டும் எனவும், உக்ரைன், பால்டிக் நாடுகள் மற்றும் பைலோ உருசியாவை வெல்லும் இலக்கிற்கும் இட்லர் முடிவெடுத்தார்.[133] எனினும், ரிப்பன்டிராப் போன்ற மற்ற மூத்த செருமானிய அதிகாரிகள் சோவியத் ஒன்றியத்தை மும்முனை ஒப்பந்தத்திற்கு அழைப்பதன் மூலம் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக ஒரு ஐரோவாசியக் கூட்டமைப்பை உருவாக்க ஒரு வாய்ப்பாகக் கண்டனர்.[134] நவம்பர் 1940இல் ஒப்பந்தத்தில் சோவியத் ஒன்றியம் இணையுமா என்பதை முடிவு செய்யப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. சோவியத்துகள் ஓரளவுக்கு ஆர்வத்தை வெளிப்படுத்தினர். ஆனால், பின்லாந்து, பல்கேரியா, துருக்கி மற்றும் சப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து நிலப்பரப்புகள் வேண்டும் என்று கேட்டனர். இதை ஏற்க இயலாததாகச் செருமனி கருதியது. 18 திசம்பர் 1940 அன்று சோவியத் ஒன்றியம் மீதான ஒரு படையெடுப்புக்குத் தயாராகுமாறு பணி முறைச் செயல் கட்டளையை இட்லர் வெளியிட்டார்.[135]
22 சூன் 1941 அன்று இத்தாலி மற்றும் உருமேனியாவின் ஆதரவுடன் செருமனி பார்பரோசா நடவடிக்கை மூலம் சோவியத் ஒன்றியம் மீது படையெடுத்தது. தங்களுக்கு எதிராகச் சதி திட்டம் தீட்டியதாகச் சோவியத்துகள் மீது செருமனி குற்றம் சாட்டியது. செருமனியுடன் சீக்கிரமே பின்லாந்து மற்றும் அங்கேரி இணைந்தன[136]. இந்த எதிர்பார்க்கப்படாத தாக்குதலின் முதன்மை இலக்குகள்[137] பால்டிக் பகுதி, மாஸ்கோ மற்றும் உக்ரைன் ஆகும். 1941ஆம் ஆண்டுப் படையெடுப்பை ஆர்க்கேஞ்சல்ஸ்க்-அசுதிரகான் கோட்டுக்கு அருகில் காசுப்பியன் முதல் வெள்ளைக் கடல்கள் வரை நிறுத்த வேண்டும் என்பது இறுதி இலக்காக இருந்தது. ஓர் இராணுவ சக்தியாக சோவியத் ஒன்றியத்தை அகற்றுவது, பொதுவுடமைவாதத்தை பூண்டோடழிப்பது, உள்ளூர் மக்களின் நிலத்தைப் பறிப்பதன் மூலம்[138] லெபென்சரவுமை ("செருமானியர்களுக்கான வாழுமிடம்")[139] உருவாக்குவது மற்றும் செருமனியின் எஞ்சிய எதிரிகளைத் தோற்கடிக்கத் தேவையான முக்கிய வளங்களுக்கான வழியை உறுதி செய்வது ஆகியவையே இட்லரின் குறிக்கோள்கள் ஆகும்.[140]
செஞ்சேனையானது போருக்கு முன்னர் ஒரு முக்கியப் பதில் தாக்குதலுக்குத் தயாராகி வந்த போதிலும்,[141] பார்பரோசா நடவடிக்கையானது சோவியத் முதன்மை தலைமையை ஓர் உத்தி ரீதியிலான தற்காப்பைப் பின்பற்றும் நிலைக்குத் தள்ளியது. கோடை காலத்தின் போது, சோவியத் நிலப்பரப்புக்குள் அச்சு நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றன. வீரர்கள் மற்றும் உபகரணங்கள் மீது கடுமையான சேதத்தை விளைவித்தன. எனினும், ஆகத்து நடுப் பகுதியில், குறிப்பிடத்தக்க அளவு இழப்பைச் சந்தித்த இராணுவக் குழு மையத்தின் தாக்குதலை நிறுத்த செருமானிய இராணுவ உயர் தலைமையானது முடிவு செய்தது. நடு உக்ரைன் மற்றும் லெனின்கிராட் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த துருப்புகளுக்கு வலுவூட்டுவதற்காக இரண்டாவது பான்செர் குழுவை வழி மாற்றி விட்டது.[142] கீவ் தாக்குதலானது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இதன் விளைவாக, நான்கு சோவியத் இராணுவங்கள் சுற்றி வளைக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கிரிமியாவுக்குள்ளும், தொழில் துறை ரீதியாக வளர்ச்சி பெற்ற கிழக்கு உக்ரைனுக்குள்ளும் (முதலாம் கார்க்கோவ் சண்டை) முன்னேறும் வாய்ப்பையும் உருவாக்கியது.[143]
அச்சு நாட்டுத் துருப்புகளில் முக்கால் பங்கினரையும், பிரான்சு மற்றும் நடு நிலக் கடல் பகுதியில் இருந்த அவர்களது பெரும்பாலான விமானப் படைகளைக் கிழக்குப் போர் முனைக்கு[144] வழிமாற்றி விட்டதும், ஐக்கிய இராச்சியத்தை ஒரு பெரும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தலாமா எனக் கருதுவதற்குத் தூண்டியது.[145] சூலையில் ஐக்கிய இராச்சியமும், சோவியத் ஒன்றியமும் செருமனிக்கு எதிராக ஓர் இராணுவக் கூட்டணியை ஏற்படுத்தின.[146] ஆகத்து மாதத்தில் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் இணைந்து அத்திலாந்திக் சாசனத்தை வெளியிட்டன. போருக்குப் பிந்தைய உலகில் பிரித்தானிய மற்றும் அமெரிக்கக் குறிக்கோள்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.[147] ஆகத்தின் பிற்பகுதியில், பிரிட்டனும், சோவியத்துகளும் நடு நிலை வகித்த ஈரான் மீது படையெடுத்தனர். ஈரானியக் குறுகிய வழி, ஈரானின் எண்ணெய் வயல்கள் மற்றும், பக்கு எண்ணெய் வயல்களையோ அல்லது இந்தியாவை நோக்கியோ ஈரான் வழியாக அச்சு நாடுகள் எந்த வித முன்னேற்றத்தையும் நடத்தக் கூடாது என்பதற்கு முன்னெச்சரிக்கைத் தாக்குதலாக இப்படையெடுப்பை நடத்தினர்.[148]
அக்டோபர் இறுதியில் உக்ரைன் மற்றும் பால்டிக் பகுதியில் அச்சு நாடுகளின் திட்டக் குறிக்கோள்கள் அடையப்பட்டன. லெனின்கிராட்[149] மற்றும் செவசுதபோல் முற்றுகைகள் மட்டுமே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன.[150] மாஸ்கோவுக்கு எதிரான ஒரு பெரும் தாக்குதலானது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதிகரித்து வந்த கடுமையான காலச் சூழ்நிலையில் இரண்டு மாத ஆக்ரோசமான யுத்தங்களுக்குப் பிறகு மாஸ்கோவின் வெளி புறநகர்ப் பகுதிகளைச் செருமானிய இராணுவமானது கிட்டத் தட்ட அடைந்து விட்டது. ஆனால், அங்கு சோர்வடைந்த துருப்புகள்[151] தங்களது தாக்குதலை இடை நிறுத்தம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டன. [152]அச்சு நாடுகளின் படைகள் பெரும் நிலப் பரப்புகளைக் கைப்பற்றின. ஆனால், அவர்களது போர்ப் பயணமானது அதன் முதன்மை இலக்குகளை அடைவதில் தோல்வி அடைந்தது: இரண்டு முக்கிய நகரங்கள் சோவியத் கைகளில் தொடர்ந்து இருந்தன, எதிர்ப்புக் காட்டும் சோவியத் செயலாற்றல் உடைக்கப்படவில்லை மற்றும் சோவியத் ஒன்றியம் தனது இராணுவ ஆற்றலின் பெரும் பகுதியைத் தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பாவில் போரின் பிளிட்ஸ்கிரைக் பகுதியானது முடிவடைந்தது.[153]
திசம்பர் ஆரம்பத்தில் புதிதாகத் திரட்டப்பட்ட சேமைப் படையினரைச் சேர்த்து[154] சோவியத்துகள் அச்சு நாட்டுத் துருப்புகளுக்கு இணையான எண்ணிக்கையைப் பெற்றனர்.[155] இது மற்றும் சப்பானியக் குவாந்துங் இராணுவத்தால் நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் முறியடிக்கக் கிழக்கில் எண்ணிக்கையில் மிகக் குறைவான சோவியத் துருப்புகளே போதும் என்ற உளவியல் தகவல்[156] ஆகியவற்றைக் கொண்டு 5 திசம்பர் அன்று தொடங்கிய ஒரு பெரிய பதில் தாக்குதலைச் சோவியத்துகள் போர் முனை முழுவதும் நடத்தினர். செருமானியத் துருப்புகளை 100 முதல் 250 கிலோ மீட்டர்கள் மேற்கு நோக்கித் தள்ளினர்.[157]
1931இல் சப்பானியப் போலி முக்தேன் நிகழ்வு, 1937இல் அமெரிக்கத் துப்பாக்கிப் படகான யு. எஸ். எஸ். பனாய் மீது சப்பானியர்கள் வெடிக்கும் உலோகக் கலங்களால் சுட்டது மற்றும் 1937-38இன் நாங்கிங் படுகொலைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து சப்பான்-அமெரிக்க உறவானது மோசமடைந்தது. 1939இல் தனது வணிக ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என ஐக்கிய அமெரிக்கா அதிகாரப் பூர்வமாக சப்பானிடம் தெரியப்படுத்தியது. சப்பானிய விரிவாக்கத்திற்கு எதிராக அமெரிக்கப் பொது மக்களிடையே நிலவிய எண்ணமானது ஒரு தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படுவதற்கு வழி வகுத்தது. ஐக்கிய அமெரிக்க வேதிப் பொருட்கள், கனிமங்கள் மற்றும் இராணுவப் பாகங்களை சப்பானுக்கு ஏற்றுமதி செய்வதை ஏற்றுமதி கட்டுப்பாடுச் சட்டங்களானவை தடை செய்தன. முறைப்படி தேர்ந்தெடுக்கப்படாத சப்பானிய அரசின் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகப்படுத்தின.[108]:{{{3}}}[158][159] 1939ஆம் ஆண்டின் போது ஒரு முக்கியமான சீன நகரமான சாங்சாவிற்கு எதிராக சப்பான் தனது முதல் தாக்குதலைத் தொடங்கியது. ஆனால், செப்டம்பர் இறுதியில் இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது.[160] இரு பக்கமும் இருந்து பல தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதும் 1940இன் இறுதியில் சீனா மற்றும் சப்பானுக்கு இடையிலான போரானது யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தது. வணிக வழிகளை அடைப்பதன் மூலம் சீனா மீதான அழுத்தத்தை அதிகப்படுத்தவும், மேற்குலக நாடுகளுடன் ஒரு வேளை போர் ஏற்பட்டால் சப்பானியப் படைகள் வலுவான நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் செப்டம்பர் 1940இல் சப்பான் வடக்கு இந்தோசீனா மீது படையெடுத்து அதை ஆக்கிரமித்தது.[161]
1940இன் ஆரம்பத்தில் சீன தேசியவாதப் படைகள் ஒரு பெரிய அளவிலான பதில் தாக்குதலைத் தொடங்கின. ஆகத்து மாதத்தில் சீனப் பொதுவுடமைவாதிகள் நடு சீனாவில் ஒரு தாக்குதலைத் தொடங்கினர். பதிலடியாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பொதுவுடமைவாதிகளுக்கான மனித வளம் மற்றும் பொருள் வளங்களைக் குறைப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகளை சப்பான் தொடங்கியது.[162] சீனப் பொதுவுடமைவாத மற்றும் தேசியவாதப் படைகளுக்கு இடையிலான தொடர்ந்து வந்த பகைமையானது சனவரி 1941இன் ஆயுதச் சண்டையில் உச்ச நிலையை அடைந்தது. அவர்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வந்தது.[163] மார்ச்சில் சப்பானிய 11வது இராணுவம் சீன 19வது இராணுவத்தின் தலைமையகத்தைத் தாக்கியது. ஆனால் சாங்காவோ யுத்தத்தில் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.[164] [நம்பகத்தகுந்த மேற்கோள்?]செப்டம்பரில் சாங்சா நகரத்தைக் கைப்பற்ற சப்பான் மீண்டும் முயன்றது. சீனத் தேசியவாதப் படைகளுடன் சண்டையில் ஈடுபட்டது.[165][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
ஐரோப்பாவில் செருமானிய வெற்றிகள் தென்கிழக்காசியாவில் இருந்த ஐரோப்பிய அரசாங்கங்கள் மீது அழுத்தத்தை அதிகப்படுத்த சப்பானை ஊக்குவித்தன. டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் இருந்து சில எண்ணெய் வழங்கல்களை சப்பானுக்குக் கொடுக்க டச்சு அரசாங்கம் ஒப்புக் கொண்டது. ஆனால், அவர்களது வளங்களுக்கான மேற்கொண்ட வழிக்கான பேச்சுவார்த்தைகள் சூன் 1941இல் தோல்வியில் முடிந்தன.[166] சூலை 1941இல் தெற்கு இந்தோசீனாவிற்கு சப்பான் துருப்புகளை அனுப்பியது. தூரக் கிழக்கிலிருந்து பிரித்தானிய மற்றும் டச்சுக் கையிருப்பு நிலங்களுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற மேற்கு அரசாங்கங்கள் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக சப்பானியச் சொத்துக்களை முடக்கியும், சப்பானுக்கு எண்ணெய் கிடைப்பதன் மீது முழுமையான தடையையும் விதித்தன.[167][168] அதே நேரத்தில், சோவியத் தூரக்கிழக்கு மீது படையெடுப்பை நடத்த சப்பான் திட்டமிட்டது. மேற்கில் செருமானியப் படையெடுப்பின் விளைவுகளைச் சாதகமாக்கிக் கொள்ள நினைத்தது. ஆனால், பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கையைக் கைவிட்டது.[169]
1941ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தங்களது மோசமான உறவுகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாகவும், சீனாவில் போரை முடிவுக்கு கொண்டு வரவும் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சப்பான் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது சப்பான் சில குறிப்பிட்ட முன்மொழிவுகளை முன்னெடுத்தது. இவை போதியதாக இல்லை என அமெரிக்கர்களால் நிராகரிக்கப்பட்டன.[170] அதே நேரத்தில், ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகியவை தங்களில் ஏதாவது ஒரு நாட்டின் மீது சப்பானியத் தாக்குதல் ஏற்பட்டால் தங்களது நிலப்பரப்புகளை ஒன்றிணைந்து தற்காப்பதற்காக இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.[171] ஓர் அமெரிக்கப் பாதுகாப்புப் பகுதியும், 1946இல் விடுதலைக்குத் தயாராக இருந்ததுமான பிலிப்பீன்சுக்கு ரூசவெல்ட் படைகளை அனுப்பினார். எந்த ஓர் "அண்டை நாடுகளுக்கு" எதிராகவும் சப்பானியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டால் ஐக்கிய அமெரிக்கா எதிர் வினையாற்றும் என்று சப்பானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.[171]:{{{3}}}
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் பொறுமை இழப்பு மற்றும் அமெரிக்க-பிரித்தானிய-டச்சு தடைகளால் உணரப்பட்ட அழுத்தம் ஆகியவை காரணமாக சப்பான் போருக்குத் தயாரானது. பேரரசர் இறோகித்தோ வெற்றி பெறுவதற்கு சப்பானின் வாய்ப்புகள் குறித்து ஆரம்பத்தில் தயங்கியதற்குப் பிறகு,[172] போரில் சப்பான் நுழைவதற்கு விருப்பம் தெரிவிக்க ஆரம்பித்தார்.[173] இதன் விளைவாகப் பிரதமர் புமிமரோ கொனோயே பதவி விலகினார்.[174][175] அவர் இடத்தில் இளவரசர் நருகிகோ கிகாசிகுனியைப் பரிந்துரைக்க மறுத்து அதற்குப் பதிலாக போர்த் துறை அமைச்சர் இடாக்கி தோஜோவை இறோகித்தோ தேர்ந்தெடுத்தார்.[176] 3 நவம்பர் அன்று பேரரசருக்கு முத்துத் துறைமுகத் தாக்குதல் திட்டத்தை விரிவாக நகனோ விளக்கினார்.[177] 5 நவம்பர் அன்று ஏகாதிபத்தியக் கலந்தாய்வுக் கூட்டத்தில் போருக்கு ஆயத்தத் திட்டங்களுக்கு இறோகித்தோ அனுமதி வழங்கினார்.[178] 20 நவம்பர் அன்று புதிய அரசாங்கமானது ஒரு இடைக்கால முன்மொழிவைத் தனது இறுதிப் பரிந்துரையாக வழங்கியது. சீனாவுக்கான அமெரிக்க உதவியை நிறுத்துவதற்கும், சப்பானுக்கு எண்ணெய் மற்றும் பிற வளங்கள் கிடைப்பதன் மீதிருந்த தடையை நீக்குவதற்கும் இது அழைப்பு விடுத்தது. இதற்குப் பதிலாக, தென் கிழக்கு ஆசியாவில் எந்த ஒரு தாக்குதலையும் சப்பான் நடத்தாது என்றும், தெற்கு இந்தோசீனாவிலிருந்து தன் படைகளைப் பின் வாங்க வைக்கவும் உறுதியளித்தது.[170]:{{{3}}} 26 நவம்பர் அன்று இதற்குப் பதிலான ஓர் அமெரிக்க முன்மொழிவானது, அனைத்து சீனப் பகுதிகளிலிருந்தும் நிபந்தனையின்றி சப்பான் வெளியேற வேண்டும் எனவும், அனைத்து அமைதிப் பெருங்கடல் சக்திகளுடன் போர் எதிர்ப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறியது.[179] சீனாவில் தனது குறிக்கோள்களைக் கை விட்டு விடுதல் அல்லது டச்சு கிழக்கிந்தியத் தீவுகளில் தனக்குத் தேவையான இயற்கை வளங்களைப் படை மூலம் கைப்பற்றுவது ஆகியற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாய நிலை சப்பானுக்கு ஏற்பட்டது என்பதே இதன் பொருள்.[180][181] இதில் முதல் வழியை சப்பானிய இராணுவம் தேர்ந்தெடுக்க கருதவில்லை. எண்ணெய் இறக்குமதித் தடையானது கூறப்படாத போர் அறிவிப்பு எனப் பல அதிகாரிகள் கருதினர்.[182]
ஆசியாவிலிருந்து ஐரோப்பியக் காலனிகளைக் கைப்பற்றுவதன் மூலம் நடு பசிபிக் வரை நீண்ட ஒரு பெரிய தற்காப்புச் சுற்று வட்டத்தை உருவாக்க சப்பான் திட்டமிட்டது. தென்கிழக்காசியாவில் இருந்த வளங்களை சப்பானியர்கள் இதற்குப் பிறகு சுதந்திரமாகச் சுரண்டலாம். அதே நேரத்தில், பல இடங்களில் அளவுக்கு மீறிப் பரவி இருந்த நேச நாடுகளை ஒரு தற்காப்புப் போரில் எதிர் கொண்டு சோர்வடையச் செய்யலாம்.[183][184] இந்தச் சுற்றுவட்டத்தைப் பாதுகாப்பாக வைக்கும் அதே நேரத்தில் அமெரிக்கத் தலையீட்டைத் தடுப்பதற்காக ஐக்கிய அமெரிக்க பசிபிக் கப்பல் குழுவைச் செயல் திறன் அற்றதாக ஆக்குவதற்கு மேலும் சப்பான் திட்டமிட்டது. எடுத்த எடுப்பில் பிலிப்பீன்சில் இருந்த அமெரிக்க இராணுவ இருப்பைச் செயலற்றதாக்கத் திட்டமிட்டது.[185] 7 திசம்பர் 1941 (ஆசிய நேர வளையங்களில் 8 திசம்பர்) அன்று தென் கிழக்காசியா மற்றும் நடு பசிபிக்கில் இருந்த பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவ இடங்கள் மீது கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சப்பான் தாக்குதலைத் தொடங்கியது. முத்துத் துறைமுகத்திலிருந்த அமெரிக்க கப்பல் குழுக்கள் மீதான தாக்குதல் மற்றும் பிலிப்பீன்சு, குவாம், வேக் தீவு, மலாயா படையிறக்கம்,[186] தாய்லாந்து மற்றும் ஆங்காங் யுத்தம் ஆகியவை இந்தத் தாக்குதல்களில் அடங்கியவை ஆகும்.[187]
தாய்லாந்து மீதான சப்பானியப் படையெடுப்பானது சப்பானுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் முடிவைத் தாய்லாந்து எடுப்பதற்கு இட்டுச் சென்றது. மற்ற சப்பானியத் தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சீனா, ஆத்திரேலியா மற்றும் பல பிற அரசுகள் சப்பான் மீது அதிகாரப் பூர்வமாகப் போரை அறிவிப்பதற்கு வழி வகுத்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய அச்சு நாடுகளுடன் பெருமளவிலான சண்டையில் கடுமையாக ஈடுபட்டிருந்த சோவியத் ஒன்றியமானது சப்பானுடனான தனது நடு நிலை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடைபிடித்தது.[188] மற்ற அச்சு நாடுகளைத் தொடர்ந்து, சப்பானுக்கு ஆதரவாகச் செருமனி ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.[189] செருமானிய போர்க் கலங்கள் மீது ரூசவெல்ட்டால் ஆணையிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதல்களை இதற்குக் காரணமாகக் கூறியது.[136]:{{{3}}}[190]
1 சனவரி 1942 அன்று நான்கு பெரிய நேச நாடுகளான[191] சோவியத் ஒன்றியம், சீனா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா மற்றும் 22 சிறிய அல்லது நாடு கடந்த அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக அறிவிப்பை வெளியிட்டன. இவ்வாறாக அவை அத்திலாந்திக் சாசனத்தை மீண்டும் உறுதிப்படுத்தின.[192] அச்சு நாட்டுச் சக்திகளுடன் ஒரு தனிப்பட்ட அமைதி உடன்படிக்கையில் கையொப்பம் இடுவது இல்லை என்பதை ஒப்புக் கொண்டன.[193]
1942ஆம் ஆண்டின் போது நேச நாட்டு அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய பொருத்தமான பெரிய உத்தி குறித்து விவாதித்தனர். செருமனியைத் தோற்கடிப்பதே முதன்மையான இலக்கு என அனைவரும் ஒப்புக் கொண்டனர். பிரான்சு வழியாகச் செருமனி மீது ஒரு பெரிய அளவிலான நேரடித் தாக்குதலை நடத்த அமெரிக்கர்கள் விரும்பினர். சோவியத்துகளும் ஓர் இரண்டாவது போர் முனையைத் தொடங்க வேண்டும் எனக் கோரினர். மற்றொரு புறம், பிரிட்டன் இராணுவ நடவடிக்கைகளானவை வெளிப்புறப் பகுதிகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டு, செருமானிய வலிமையைச் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று வாதிட்டது. இது நெறி பிறழ்வை அதிகரித்தலுக்கும், எதிர்ப்புப் படைகளை வலிமையாக்குதலுக்கும் இட்டுச் செல்லும் என வாதிட்டது. இதன் படி, செருமனியே ஒரு கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும். பிறகு, செருமனிக்கு எதிராக ஒரு தாக்குதலானது முதன்மையாக நேச நாட்டுக் கவச வாகனங்களைக் கொண்டு, பெரிய அளவிலான இராணுவங்களைப் பயன்படுத்தாது நடத்தப்படும்.[194] இறுதியாக, 1942இல் பிரான்சில் படைகளை இறக்குவது என்பது செய்யத்தக்கது அல்ல என அமெரிக்கர்களைப் பிரிட்டன் இணங்க வைத்தது. மாறாக, நேச நாடுகள் வட ஆப்பிரிக்காவிலிருந்து அச்சு நாடுகளை வெளியேற்றுவதைக் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என இணங்க வைத்தது.[195]
1943இன் ஆரம்பத்தில் நடந்த கசப்லங்கா கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு அறிவிப்பில் வெளியிடப்பட்ட விவரங்களைக் நேச நாடுகள் மீண்டும் உறுதிப்படுத்தின. தங்களது எதிரிகளின் நிபந்தனையற்ற சரணடைவைக் கோரின. நடு நிலக்கடல் பொருள் வழங்கும் வழிகளை முழுவதுமாக பாதுகாப்பானதாக ஆக்க, சிசிலி மீது படையெடுத்து நடுநிலக்கடலில் தங்களது முன்னெடுப்பை அழுத்தமாகத் தொடர வேண்டும் எனப் பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் ஒப்புக் கொண்டனர்.[196] பால்கன் பகுதியில் மேற்கொண்டு நடத்தப்படும் போர் நடவடிக்கைகள் மூலம் துருக்கியைப் போருக்குள் இழுக்க வேண்டி பிரித்தானியர்கள் வாதிட்ட போதும், மே 1943இல் இத்தாலிய முதன்மை நிலப்பகுதி மீது படையெடுப்பதற்காக நடு நிலக் கடல் பகுதியில் நேச நாட்டு நடவடிக்கைகளைக் குறைப்பதற்கும், 1944இல் பிரான்சு மீது படையெடுப்பதற்குமான ஒரு பிரித்தானிய ஒப்புதலை அமெரிக்கர்கள் வலிந்து வெளிக் கொணர்ந்தனர்.[197]
ஏப்ரல் 1942இன் இறுதியில் சப்பானும், அதன் கூட்டாளி தாய்லாந்தும் பர்மா, மலாயா, டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகள், சிங்கப்பூர் மற்றும் ரபௌலை கிட்டத்தட்ட முழுவதுமாக வென்றன. இது நேச நாட்டுத் துருப்புகளுக்குக் கடுமையான இழப்புகளையும் ஏற்படுத்தியது. ஒரு பெரும் எண்ணிக்கையிலான கைதிகளை இவை பிடித்தன.[198] பிலிப்பீன் மற்றும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிடிவாதமான எதிர்ப்பைக் காட்டிய போதும், மே 1942இல் பிலிப்பீன் பொதுநலவாயமானது இறுதியாகக் கைப்பற்றப்பட்டது. அதன் அரசாங்கம் நாடு கடந்து செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டது.[199] 16 ஏப்ரலில் பர்மாவில் சப்பானிய 33வது பிரிவால் எனங்யாவுங் யுத்தத்தின் போது, 7,000 பிரித்தானிய இராணுவ வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். பிறகு சீன 38வது பிரிவால் மீட்கப்பட்டனர்.[200] சப்பானியப் படைகள் தென் சீனக்கடல், சாவகக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில்[201] கடற்படை வெற்றிகளையும் அடைந்தன. ஆத்திரேலியாவின் டார்வினில் இருந்த நேச நாட்டுக் கடற்படைத் தளம் மீது குண்டுகளை வீசின. சனவரி 1942இல் சப்பானுக்கு எதிரான ஒரே ஒரு நேச நாட்டு வெற்றியானது சாங்சாவில் சீனா பெற்ற வெற்றியே ஆகும்.[202] ஆயத்தமாகாத ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய எதிரிகளுக்கு எதிராகப் பெற்ற இந்த எளிதான வெற்றிகள் சப்பானை அளவுக்கு அதிகமான நம்பிக்கை கொள்ளச் செய்தன. மேலும், சப்பானியர்கள் அளவுக்கு மீறிப் பரவி இருந்தனர்.[203]
மே 1942இன் ஆரம்பத்தில் நீர்நிலத் தாக்குதல் மூலம் மார்சுபி துறைமுகத்தைக் கைப்பற்ற சப்பான் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இவ்வாறாக, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவுக்கு இடையிலான பொருட்கள் வழங்கும் வழிகள் மற்றும் தொலைத் தொடர்பைத் துண்டிக்க முயன்றது. பவளப்பாறை கடல் யுத்தத்தில் இரண்டு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை அடிப்படையாகக் கொண்ட நேச நாட்டு இடுபணிப் படையானது சப்பானியக் கடற்படைகளுடன், யாருக்கும் வெற்றி தோல்வியின்றிப் போரிட்ட போது இந்தத் திட்டமிடப்பட்ட படையெடுப்பானது முறியடிக்கப்பட்டது.[204] சப்பானின் அடுத்த திட்டம் முந்தைய டூலிட்டில் ஊடுருவலால் ஊக்குவிக்கப்பட்டது. அது மிட்வே தீவுகளைக் கைப்பற்றுவது, அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களை யுத்தத்திற்கு இழுத்து அவற்றை அழிப்பது, மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அலாஸ்காவிலுள்ள அலேயூதியன் தீவுகளையும் ஆக்கிரமிக்க சப்பான் படைகளை அனுப்புவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.[205] மே மாதத்தின் நடுப் பகுதியில் சீனாவில் செசியாங்-சியாங்சி படையெடுப்பை சப்பான் தொடங்கியது. டூலிட்டில் ஊடுருவலில் எஞ்சிய அமெரிக்க விமானப் படையினருக்கு உதவி செய்த சீனர்களுக்குத் தண்டனை கொடுப்பதை இலக்காகக் கொண்டு இதை சப்பான் நடத்தியது. சீன விமானத் தளங்களை அழித்தலையும், சீன 23வது மற்றும் 32வது இராணுவக் குழுக்களுக்கு எதிராகச் சண்டையிடுவதையும் இது இலக்காகக் கொண்டிருந்தது.[206][207] சூன் ஆரம்பத்தில் தன்னுடைய திட்டங்களுக்கு சப்பான் செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கியது. ஆனால், மே மாதத்தின் இறுதியில் சப்பானியக் கடற்படை சமிக்ஞைகளைக் கண்டறிந்த அமெரிக்கர்கள் இந்தத் திட்டங்கள் மற்றும் யுத்த வரிசை குறித்து முழுவதுமாக அறிந்திருந்தனர். இந்தத் தகவல்களைப் பயன்படுத்தி ஏகாதிபத்திய சப்பானியக் கடற்படைக்கு எதிராக மிட்வேயில் ஒரு தீர்க்கமான வெற்றியை அடைந்தனர்.[208]
மிட்வே யுத்தத்தின் விளைவாகத் தன் ஆக்ரோசச் செயலாற்றல் பெருமளவு குறைந்ததால் பப்புவா நிலப்பகுதியில் நில வழிப் படையெடுப்பு மூலம் மார்சுபி துறைமுகத்தைக் கைப்பற்ற ஒரு கால தாமதமான முயற்சி மீது கவனம் செலுத்த சப்பான் முடிவு செய்தது.[209] தெற்கு சொலமன் தீவுகளில், முதன்மையாக கௌதல்கானலில் இருந்த சப்பானிய இலக்குகளுக்கு எதிராக ஒரு பதில் தாக்குதலை நடத்த அமெரிக்கர்கள் திட்டமிட்டனர். தென் கிழக்காசியாவில் இருந்த முதன்மையான சப்பானியத் தளமான ரபௌலைக் கைப்பற்றுவதை நோக்கிய முதல் படியாக இது இருந்தது.[210]
இரு திட்டங்களும் சூலையில் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், செப்டம்பரின் நடுப் பகுதியில் சப்பானியர்கள் முதன்மையானதாகக் கௌதல்கானல் யுத்தத்தைக் கருதினர். மார்சுபி துறைமுகத்திலிருந்து பின் வாங்கி தீவின் வடக்குப் பகுதிக்கு வருமாறு நியூ கினியாவில் இருந்த துருப்புகளுக்கு ஆணையிடப்பட்டது. அங்கு அவர்கள் புனா-கோனா யுத்தத்தில் ஆத்திரேலிய மற்றும் ஐக்கிய அமெரிக்கத் துருப்புகளை எதிர்கொண்டனர்.[211] இரு தரப்பினருக்கும் கௌதல்கானலானது சீக்கிரமே ஒரு முக்கியக் கவனம் செலுத்த வேண்டிய இடமாக உருவானது. கௌதல்கானல் யுத்தத்திற்காகப் பெருமளவில் துருப்புகள் மற்றும் கப்பல்களை இரு தரப்பினரும் ஈடுபடுத்தினர். 1943இன் ஆரம்பத்தில் தீவில் சப்பானியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். தங்களது துருப்புகளைப் பின் வாங்கச் செய்தனர்.[212] பர்மாவில் பொதுநலவாயப் படைகள் இரண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டன. முதல் நடவடிக்கையானது, 1942இன் பிற்பகுதியில் அரகான் பகுதிக்குள் நுழைந்த ஒரு தாக்குதலாகும். அது சேதம் ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. மே 1943இல், இந்தியாவுக்கு மீண்டும் பின் வாங்கும் ஒரு நிலைக்குப் படையினர் தள்ளப்பட்டனர்.[213] இரண்டாவது திட்டமானது, சப்பானியப் போர் முனை வரிசைப் படைகளுக்குப் பின்புறமாக ஒழுங்கமைக்கப்படாத படைகளை புகுத்துவதாகும். இது பெப்ரவரியில் தொடங்கப்பட்டது. ஏப்ரல் முடிவில் இது கலவையான முடிவுகளையே பெற்றுத் தந்தது.[214]
பெருமளவில் இழப்புகளைச் சந்தித்த போதும், 1942இன் ஆரம்பத்தில் செருமனியும் அதன் கூட்டாளிகளும் நடு மற்றும் தெற்கு உருசியாவில் ஒரு பெரிய சோவியத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தின. முந்தைய ஆண்டின் போது தாங்கள் கைப்பற்றிய பெரும்பாலான நிலப்பரப்புகளைத் தக்க வைத்துக் கொண்டன.[215] மே மாதத்தில், கெர்ச் தீபகற்பம் மற்றும் கார்கோவில் சோவியத் தாக்குதல்களைச் செருமானியர்கள் தோற்கடித்தனர்.[216] பிறகு, சூன் 1942இல் தெற்கு உருசியாவுக்கு எதிரான தங்களது முதன்மையான கோடைக் காலத் தாக்குதலில் இறங்கினர். காக்கேசியாவிலிருந்த எண்ணெய் வயல்களைக் கைப்பற்றவும், குபன் புல்வெளிகளை ஆக்கிரமிக்கவும், அதே நேரத்தில் போர் முனையின் வடக்கு மற்றும் நடுப் பகுதிகளில் உள்ள தங்களது இடங்களைப் பராமரிப்பதற்காகவும் இந்தத் தாக்குதலில் இறங்கினர். செருமானியர்கள் தெற்கு இராணுவக் குழுவை இரண்டு குழுக்களாகப் பிரித்தனர். முதல் இராணுவக் குழுவானது தொன் ஆற்றின் கீழ் பகுதியை நோக்கி முன்னேறியது. தென் கிழக்கே காக்கேசியாவைத் தாக்கியது. அதே நேரத்தில், இரண்டாவது இராணுவக் குழுவானது வோல்கா ஆற்றை நோக்கிப் பயணித்தது. வோல்காவின் கரையிலிருந்த சுடாலின்கிராட்டில் தங்களது நிலைப்பாட்டை ஏற்படுத்த சோவியத்துகள் முடிவு செய்தனர்.[217]
நவம்பரின் நடுப் பகுதியில் கடுமையான வீதி யுத்தத்தில் செருமானியர்கள் சுடாலின்கிராடைக் கிட்டத் தட்டக் கைப்பற்றினர். சோவியத்துகள் தங்களது இரண்டாவது குளிர் காலப் பதில் தாக்குதலைத் தொடங்கினர். சுடாலின்கிராடில் இருந்த செருமானியப் படைகளைச் சுற்றி வளைத்ததன் மூலமும்,[218] மாஸ்கோவுக்கு அருகில் இருந்த முதன்மையான ரிசேவ் என்ற இடத்தின் மீதான தாக்குதலின் மூலமும் தொடங்கினர். எனினும், இரண்டாவது தாக்குதலானது கடுமையான தோல்வியை அடைந்தது.[219] 1943இன் பெப்ரவரி ஆரம்பத்தில் செருமானிய இராணுவத்திற்குக் கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. சுடாலின்கிராடில் இருந்த செருமானியத் துருப்புகள் தோற்கடிக்கப்பட்டன.[220] கோடைக் காலத் தாக்குதலுக்கு முன்னதாக அது இருந்த இடத்தில் இருந்து போர் முனை வரிசையானது பின்னோக்கித் தள்ளப்பட்டது. இதற்குப் பிறகு, சோவியத் உந்துதலானது வலுவிழந்து போனது. கார்கோவ் மீது மற்றொரு தாக்குதலில் செருமானியர்கள் இறங்கினர். சோவியத் நகரமான குர்சுக்கைச் சுற்றி தங்களது முனை வரிசையில் ஒரு கிள்ளல் போன்ற அமைப்பை உருவாக்கினர்.[221]
குறைபாடுடைய அமெரிக்கக் கடற்படைத் தலைமையின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் செருமானியக் கடற்படையானது, அமெரிக்க அத்திலாந்திக் கடற்கரையை ஒட்டிய நேச நாட்டுக் கப்பல் போக்குவரத்துக்கு மோசமான சேதத்தை உண்டாக்கியது.[222] நவம்பர் 1941இன் இறுதியில் பொதுநலவாயப் படைகள் வடக்கு ஆப்பிரிக்காவில் குரூசேடர் நடவடிக்கை என்று அழைக்கப்பட்ட ஒரு பதில் தாக்குதலில் இறங்கின. செருமானியர்கள் மற்றும் இத்தாலியர்களால் கைப்பற்றப்பட்ட அனைத்து நிலப்பரப்புகளையும் மீண்டும் கைப்பற்றின.[223] வட ஆப்பிரிக்காவில் சனவரியில் செருமானியர்கள் ஒரு தாக்குதலில் இறங்கினர். பெப்ரவரியின் ஆரம்பத்தில் கசாலா கோட்டில் இருந்த இடங்களுக்குப் பிரித்தானியர்களைத் தள்ளினர்.[224] இதற்குப் பிறகு, ஒரு தற்காலிக மந்தமான போர் நிலைமை இருந்தது. இதைத் தங்களது எதிர் வரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகச் செருமனி பயன்படுத்தியது.[225] விச்சி கட்டுப்பாட்டில் இருந்த மடகாசுகரின் தளங்களை சப்பானியர்கள் பயன்படுத்துவார்கள் என்ற எண்ணம், 1942 மே ஆரம்பத்தில் மடகாசுகர் தீவின் மீது பிரித்தானியர்கள் படையெடுப்பதற்குக் காரணமானது.[226] லிபியாவில் நடந்த ஒரு அச்சு நாட்டுத் தாக்குதலானது நேச நாடுகளை எகிப்துக்குள் தொலைவுப் பகுதிக்குப் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளியது. இறுதியாக, அல் அலமைனில் அச்சு நாட்டுப் படைகள் தடுக்கப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது.[227] கண்டப் பகுதியில் முக்கிய இலக்குகள் மீது நேச நாட்டு அதிரடிப் படை வீரர்களின் ஊடுருவலானது மோசமான தியப் திடீர்த் தாக்குதலில் முடிந்தது.[228] மிகச் சிறந்த ஆயத்தம், உபகரணங்கள் மற்றும் நடவடிக்கைப் பாதுகாப்பின்றி ஐரோப்பியக் கண்டப் பகுதி மீது ஒரு தாக்குதலைத் தொடங்குவதற்கு நேச நாடுகளின் இயலாமையை இது காட்டியது.[229][page needed]
ஆகத்து 1942இன் அல் அலமைன் மீதான ஓர் இரண்டாவது தாக்குதலை முறியடிப்பதில் நேச நாடுகள் வெற்றி பெற்றன.[230] மிகுந்த இழப்புக்குப் பிறகு, முற்றுகையிடப்பட்ட மால்டாவுக்கு மிகவும் தேவைப்பட்ட பொருட்களை வழங்குவதில் வெற்றி கண்டன.[231] சில மாதங்களுக்குப் பிறகு, எகிப்தில் தங்களது ஒரு சொந்தத் தாக்குதலை நேச நாடுகள் தொடங்கின. அச்சு நாட்டுப் படைகளை அவர்களின் இடத்தில் இருந்து தள்ளின. லிபியா வழியாக மேற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கின.[232] இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, சீக்கிரமே பிரெஞ்சு வட ஆப்பிரிக்காவில் ஆங்கிலோ-அமெரிக்கப் படையிறக்கம் நடைபெற்றது. இப்பகுதி நேச நாடுகளுடன் இணைவதற்கு இது இட்டுச் சென்றது.[233] பிரெஞ்சு காலனி கட்சி தாவியதற்கு எதிர் வினையாக விச்சி பிரான்சை ஆக்கிரமிக்க இட்லர் ஆணையிட்டார்.[233] போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இந்தச் செயலை விச்சி படைகள் எதிர்க்காத போதும், தங்களது கப்பல் குழுவை செருமானியப் படைகள் கைப்பற்றுவதைத் தடுத்துக் காப்பாற்றியதில் வெற்றி பெற்றன.[233][234] ஆப்பிரிக்காவில் இருந்த அச்சு நாட்டுப் படைகள் தூனிசியாவுக்குப் பின் வாங்கின. 1943 மே மாதத்தில் நேச நாடுகளால் தூனிசியா வெல்லப்பட்டது.[233][235]
சூன் 1943இல் பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் செருமனிக்கு எதிராக அதன் போர்ப் பொருளாதாரத்தை முடக்கவும், போர் மனப்பான்மையைக் குறைக்கவும், குடிமக்களின் வீடுகளை அழிப்பதையும் இலக்காகக் கொண்ட ஒரு முக்கியக் குண்டு வீச்சுப் படையெடுப்பைத் தொடங்கினர்.[236] இந்தப் படையெடுப்பின் முதல் தாக்குதல்களில் ஒன்றாக அம்பர்க்கு மீதான குண்டு வீச்சும் இருந்தது. இந்த முக்கியத் தொழில்துறை மையத்தின் உட்கட்டமைப்பு மீது குறிப்பிடத்தக்க அளவுக்கு சேதத்தையும், உயிரிழப்புகளையும் இது ஏற்படுத்தியது.[237]
கௌதல்கானல் படையெடுப்புக்குப் பிறகு அமைதிப் பெருங்கடல் பகுதியில் சப்பானுக்கு எதிராக நேச நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்கின. மே 1943இல் கனடா மற்றும் ஐக்கிய அமெரிக்கப் படைகள் அலேயூதியன்களில் இருந்து சப்பானியப் படைகளை நீக்க அனுப்பப்பட்டன.[238] இதற்குப் பிறகு சீக்கிரமே, ஆத்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் தீவுப் படைகளின் உதவியுடன் சுற்றியிருந்த தீவுகளைக் கைப்பற்றுவதன் மூலம் ரபௌலைத் தனிமைப்படுத்தவும், கில்பர்ட் மற்றும் மார்ஷல் தீவுகளில் சப்பானிய நடு பசிபிக் சுற்று வட்டத்தை உடைக்கவும் பெரிய நில, நீர் மற்றும் வான் நடவடிக்கைகளை ஐக்கிய அமெரிக்கா தொடங்கியது.[239] மார்ச் 1944இன் முடிவில் இந்த இரண்டு இலக்குகளையுமே நேச நாடுகள் முடித்தன. மேலும், கரோலின் தீவுகளில் துருக்கில் இருந்த பெரிய சப்பானியத் தளத்தை செயலற்றதாக ஆக்கின. ஏப்ரலில் மேற்கு நியூ கினியாவை மீண்டும் கைப்பற்ற ஒரு நடவடிக்கையில் நேச நாடுகள் இறங்கின.[240]
சோவியத் ஒன்றியத்தில் 1943ஆம் ஆண்டில் இளவேனிற்காலம் மற்றும் கோடை கால ஆரம்பத்தைச் செருமானியர்கள் மற்றும் சோவியத்துகள் ஆகிய இருவருமே நடு உருசியாவில் பெரிய தாக்குதலுக்காக ஆயத்தமாகச் செலவழித்தனர். 5 சூலை 1943இல் குருசுக் புல்கேவைச் சுற்றி இருந்த சோவியத் படைகளை செருமனி தாக்கியது. ஒரு வாரத்திற்குள்ளாகவே ஆழமாக படியணி அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த மற்றும் நன்றாக கட்டமைக்கப்பட்டிருந்த சோவியத்துகளின் தற்காப்புக்கு எதிராகச் சண்டையிட்டு செருமானியப் படைகள் தாமாகவே சோர்வடைந்தன.[241] போரில் முதல் முறையாக ஒரு நடவடிக்கை உத்தி ரீதியிலோ அல்லது திட்ட வெற்றியைப் பெறுவதற்கு முன்னதாகவோ இட்லர் அதை இரத்து செய்த நிகழ்வு நிகழ்ந்து.[242] 9 சூலை அன்று சிசிலி மீது மேற்கு நேச நாடுகளின் படையெடுப்பும் இந்த முடிவு மீது ஒரளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிசிலி படையெடுப்பும், முந்தைய இத்தாலியத் தோல்விகளும், அந்த மாதத்தின் பிந்தைய நாட்களில் முசோலினி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டு, கைது செய்யப்படுவதற்கு இட்டுச் சென்றது.[243]
12 சூலை 1943 அன்று சோவியத்துகள் தங்களது சொந்த பதில் தாக்குதல்களில் இறங்கினர். செருமானிய வெற்றி அல்லது சம நிலைக்குக் கூட கிழக்கில் எந்த ஒரு வாய்ப்பையும் இல்லாமல் செய்தனர். குருசுக்கில் சோவியத்துகள் பெற்ற வெற்றியானது செருமானிய முதன்மை நிலையின் முடிவாக அமைந்தது.[244] கிழக்குப் போர் முனையில் சோவியத் ஒன்றியத்திற்குத் தொடக்கத்தைக் கொடுத்தது.[245][246] அவசர அவசரமாக அரண்களால் கட்டமைக்கப்பட்ட பான்தர்-வோடான் கோட்டுக்குப் பக்கவாட்டில் தங்களது கிழக்கு முனையை நிலைப்படுத்த செருமானியர்கள் முயன்றனர். ஆனால், கீழ் தினேப்பர் தாக்குதல் மூலம் ஸ்மோலென்ஸ்க்கில் கோட்டை உடைத்துச் சோவியத்துகள் முன்னேறினர்.[247]
23 செப்டம்பர் 1943 அன்று இத்தாலிய முதன்மை நிலப் பகுதி மீது மேற்கு நேச நாடுகள் படையெடுத்தன. இதைத் தொடர்ந்து இத்தாலி நேச நாடுகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்தது.[248] இறுதியாக இத்தாலியைச் செருமனி ஆக்கிரமித்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர் வினையாக, பாசிசவாதிகளின் உதவியுடன் செருமனியானது உயரதிகாரிகளின் ஆணைகள் இன்றி பல இடங்களில் இருந்த இத்தாலியப் படைகளை ஆயுதமற்றவர்கள் ஆக்கினர். இத்தாலியப் பகுதிகளின் இராணுவக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர்.[249] ஒரு தொடர்ச்சியான தற்காப்புக் கோடுகளை உருவாக்கினர்.[250] பிறகு, செருமானிய சிறப்புப் படையினர் முசோலினியை மீட்டனர். முசோலினி இத்தாலிய சமூகக் குடியரசு[251] என்று பெயரிடப்பட்ட ஒரு புது செருமானிய ஆதரவு அரசை செருமனியால் ஆக்கிரமிக்கப்பட்ட இத்தாலியில் நிறுவினார். இது ஓர் இத்தாலிய உள் நாட்டுப் போருக்குக் காரணமாகியது. பல கோடுகள் வழியாக மேற்கு நேச நாடுகள் சண்டையிட்டு முன்னேறின. இறுதியாக நவம்பர் நடுப் பகுதியில் முதன்மையான செருமானியத் தற்காப்புக் கோட்டை அடைந்தன.[252]
அத்திலாந்திக்கில் இருந்து நடத்தப்பட்ட செருமானிய நடவடிக்கைகளும் பாதிப்படைந்தன. 1943 மே இறுதியில் நேச நாடுகளின் பதில் நடவடிக்கைகள் தொடர்ந்து பலனை அதிகரித்து வந்த போது, குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் இழப்புகள் செருமானிய அத்திலாந்திக் கடல் படையெடுப்பை ஒரு தற்காலிக நிறுத்தத்துக்குக் கொண்டு வந்தன.[253] நவம்பர் 1943இல் பிராங்க்ளின் ரூசவெல்ட் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் கெய்ரோவில் சங் கை செக்குடனும், பிறகு தெகுரானில் யோசப்பு சுடாலினுடனும் சந்தித்தனர்.[254] முந்தைய சந்திப்பில், போருக்குப் பின் சப்பானிய நிலப்பரப்பைத் திரும்பிக் கொடுத்தலையும்,[255] பர்மா படையெடுப்புக்கான இராணுவத் திட்டங்களையும் நடத்த உறுதி பூணப்பட்டது.[256] அதே நேரத்தில் பிந்தைய சந்திப்பில் 1944இல் ஐரோப்பா மீது மேற்கு நேச நாடுகள் படையெடுக்கும் எனவும், செருமனி தோற்கடிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் சப்பான் மீது சோவியத் ஒன்றியம் போரை அறிவிக்கும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.[257]
நவம்பர் 1943 முதல் ஏழு வார சங்டே யுத்தத்தின் போது சப்பானியர்களை ஓர் இழப்பை ஏற்படுத்திய தேய்மானச் சண்டையில் ஈடுபடுமாறு சீனர்கள் கட்டாயப்படுத்தினர். அதே நேரத்தில் சீனர்கள் நேச நாடுகளின் உதவிக்காகக் காத்திருந்தனர்.[258][259][260][நம்பகத்தகுந்த மேற்கோள்?] சனவரி 1944இல் நேச நாடுகள் இத்தாலியில் மோண்ட்டி கசீனோ கோட்டுக்கு எதிராக ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கின. அன்சியோவில் படைகளை இறக்கியதன் மூலம் எதிரியின் பக்கவாட்டில் பயணித்து அவர்களுக்கு முன் தோன்ற முயற்சித்தனர்.[261]
27 சனவரி 1944 அன்று லெனின்கிராட் பகுதியில் இருந்து செருமானியப் படைகளை வெளியேற்றிய ஒரு பெரிய தாக்குதலில் சோவியத் துருப்புகள் இறங்கின. இவ்வாறாக வரலாற்றின் மிகுந்த அழிவார்ந்த முற்றுகையை முடித்து வைத்தன.[262] மீண்டும் தேசிய விடுதலையை நிறுவலாம் என்ற நம்பிக்கையில் இருந்து எசுதோனியர்களால் ஆதரவளிக்கப்பட்ட செருமானிய வடக்கு இராணுவக் குழுவால், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோவியத் தாக்குதலானது போருக்கு முந்தைய எசுதோனிய எல்லையில் நிறுத்தப்பட்டது. இந்தத் தாமதமானது இதற்குப் பின்னர் பால்டிக் கடல் பகுதியில் நடக்கவிருந்த சோவியத் நடவடிக்கைகளையும் தாமதமாக்கியது.[263] 1944 மே பிற்பகுதியில் கிரிமியாவை விடுதலை செய்தும், உக்ரைனிலிருந்து அச்சு நாட்டுத் துருப்புகளை பெரும்பாலும் வெளியேற்றியும் சோவியத்துகள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர். உருமேனியாவுக்குள் ஊடுருவல்களையும் மேற்கொண்டனர். ஆனால், அச்சு நாட்டுத் துருப்புகளால் முறியடிக்கப்பட்டனர்.[264] இத்தாலியில் நேச நாடுகளின் தாக்குதல்கள் வெற்றியடைந்தன. ஓர் இழப்பாகப் பல செருமானியப் பிரிவுகளைப் பின் வாங்க அனுமதி அளித்த பிறகு, 4 சூன் அன்று உரோம் கைப்பற்றப்பட்டது.[265]
ஆசிய முதன்மை நிலப்பகுதியில் நேச நாடுகள் கலவையான வெற்றியைப் பெற்றன. மார்ச் 1944இல் சப்பானியர்கள் தங்களது இரண்டு படையெடுப்புகளில் முதல் படையெடுப்பில் இறங்கினர். இது அசாமில் இருந்த நேச நாட்டு இடங்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை ஆகும்.[266] இம்பால் மற்றும் கோகிமாவில் இருந்த பொதுநலவாய இடங்கள் மீது சீக்கிரமே முற்றுகையிட்டனர்.[267] மே 1944இல் பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள் ஒரு பதில் தாக்குதலைத் தொடுத்தன. சூலையின் இறுதியில் சப்பானியத் துருப்புகளை பர்மாவுக்குத் துரத்தின.[267] 1943இன் இறுதியில் வடக்கு பர்மா மீது படையெடுத்த சீனப் படைகள் மியீச்சினாவில் இருந்த சப்பானியத் துருப்புகளை முற்றுகையிட்டன.[268] சீனாவின் முதன்மை யுத்தப் படைகளை அழிப்பதையும், சப்பானியக் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட நேச நாட்டு வானூர்தித் தளங்களுக்கு இடையில் இருப்புப் பாதையை பாதுகாப்பாக வைப்பதையும் இலக்காகக் கொண்டு சீனா மீதான இரண்டாவது சப்பானியப் படையெடுப்பானது நடத்தப்பட்டது.[269] சூனின் இறுதியில் சப்பானியர்கள் ஹெனன் மாகாணத்தைக் கைப்பற்றினர். சாங்சா மீது ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கினர்.[270]
6 சூன் 1944 அன்று மூன்றாண்டு சோவியத் அழுத்தத்திற்குப் பிறகு[271] மேற்கு நேச நாடுகள் வடக்கு பிரான்சு மீது படையெடுத்தன. இத்தாலியில் இருந்த பல நேச நாட்டுப் பிரிவுகளை இடம் மாற்றியதற்குப் பிறகு, நேச நாடுகள் தெற்கு பிரான்சையும் தாக்கின.[272] இந்தப் படையிறக்கங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இவை பிரான்சில் இருந்த செருமானிய இராணுவப் பிரிவுகளின் தோல்விக்கு இட்டுச் சென்றன. தளபதி சார்லஸ் டி கோலால் தலைமை தாங்கப்பட்ட சுதந்திர பிரெஞ்சுப் படைகளால் ஆதரவளிக்கப்பட்ட உள்ளூர் எதிர்ப்பால் 25 ஆகத்து அன்று பாரிசு விடுதலை செய்யப்பட்டது.[273] ஆண்டின் பிற்பகுதியின் போது மேற்கு ஐரோப்பாவில் நேச நாடுகள் தொடர்ந்து செருமானியப் படைகளைப் பின்னுக்குத் தள்ளின. நெதர்லாந்தில் ஒரு முக்கிய வான் வழி நடவடிக்கையை முதன்மையாகக் கொண்டு வடக்கு செருமனிக்குள் முன்னேறும் ஒரு முயற்சியானது தோல்வியில் முடிந்தது[274]. இதற்குப் பிறகு மேற்கு நேச நாடுகள் மெதுவாக செருமனிக்குள் முன்னேறின. ஆனால், ஒரு பெரிய தாக்குதல் மூலம் உருர் ஆற்றைக் கடப்பதில் தோல்வியடைந்தன. இத்தாலியில் நேச நாடுகளின் முன்னேற்றமானது கடைசி முக்கிய செருமானியத் தற்காப்புக் கோட்டின் காரணமாகத் தாமதமானது.[275]
22 சூன் அன்று பெலாரசில் சோவியத்துகள் ஒரு முக்கிய தாக்குதலைத் ("பாக்ரேசன் நடவடிக்கை") தொடங்கினர். இது செருமானிய இராணுவக் குழு மையத்தைக் கிட்டத்தட்ட முழுவதுமாக அழித்தது.[276] இதற்குப் பிறகு சீக்கிரமே, மற்றொரு சோவியத் முக்கிய தாக்குதலானது மேற்கு உக்ரைன் மற்றும் கிழக்குப் போலந்தில் இருந்த செருமானியத் துருப்புகளை வெளியேறும் நிலைக்குத் தள்ளியது. போலந்தில் நிலப்பகுதியைக் கட்டுப்படுத்தவும், போலந்து ஆர்மியா கிரசோவாவுடன் சண்டையிடுவதற்கும் சோவியத்துகள் போலந்தின் தேசிய விடுதலைக்கான குழுவை உருவாக்கினர். விச்துலா ஆற்றின் மறு பக்கத்தில் பிரகா மாவட்டத்தில் சோவியத் செஞ்சேனையானது தங்கியிருந்தது. ஆர்மியா கிரசோவாவால் தொடங்கப்பட்ட வார்சா எழுச்சியைச் செருமானியர்கள் ஒழித்துக் கட்டியதை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.[277] சுலோவாக்கியாவில் ஏற்பட்ட தேசிய எழுச்சியையும் செருமானியர்கள் ஒழித்துக் கட்டினர்.[278] கிழக்கு உருமேனியாவில் சோவியத் செஞ்சேனையின் முக்கியத் தாக்குதலானது அங்கிருந்த செருமானியத் துருப்புகளைத் துண்டித்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்களை அழித்தது. இதன் காரணமாக உருமேனியா மற்றும் பல்கேரியாவில் வெற்றிகரமான புரட்சிகள் ஏற்பட்டன. இதற்குப் பிறகு இந்த நாடுகள் நேச நாடுகளின் பக்கம் அணி மாறுவதற்கும் இது காரணமாக அமைந்தது.[279]
செப்டம்பர் 1944இல் சோவியத் துருப்புகள் யுகோஸ்லாவியாக்குள் முன்னேறின. கிரேக்கம், அல்பேனியா மற்றும் யுகோஸ்லாவியாவில் இருந்த செருமானிய இராணுவக் குழுக்களான ஈ மற்றும் எஃப் ஆகியவை தாம் துண்டிக்கப்படாமல் மீட்கப்படுவதற்காக வேகமாகப் பின் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன.[280] இந்த நேரத்தில், மார்ஷல் யோசப்பு பிரோசு டிட்டோ தலைமையிலான பொதுவுடைமைவாதிகளால் தலைமை தாங்கப்பட்ட ஆதரவாளர்கள் யுகோஸ்லாவியாவின் நிலப்பரப்பில் பெரும்பாலானவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும் தெற்கே, செருமானியப் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். யோசப்பு பிரோசு டிட்டோ 1941 முதலே ஆக்கிரமிப்புக்கு எதிராக அதிகமாக வெற்றி பெற்று வந்த கரந்தடிப் படையெடுப்புக்குத் தலைமை தாங்கினார். வடக்கு செர்பியாவில் சோவியத் செஞ்சேனை பல்கேரியப் படைகளிடம் இருந்து வந்த ஓர் அளவான ஆதரவுடன் 20 அக்டோபர் அன்று தலை நகரமான பெல்கிரேடை விடுவிக்கும் ஒரு கூட்டு முயற்சியை ஆதரவாளர்களின் உதவியுடன் நடத்தியது. சில நாட்களுக்குப் பிறகு, செருமனியின் ஆக்கிரமிப்பிலிருந்த அங்கேரி மீது ஒரு பெரிய தாக்குதலை சோவியத்துகள் தொடங்கினர். 1945இல் புடாபெஸ்டு வீழ்ந்தது வரை இந்தத் தாக்குதல் தொடர்ந்தது.[281] பால்கன் பகுதியில் போற்றத்தக்க சோவியத் வெற்றிகளைப் போல் இல்லாமல் கரேலியன் இசுத்துமசில் சோவியத் தாக்குதலுக்கு எதிராகக் கடுமையான பின்லாந்து எதிர்ப்பானது, பின்லாந்தைச் சோவியத்துகள் ஆக்கிரமிப்பதைத் தடுத்தது. கூட்டாளியான செருமனியை எதிர்த்துப் போர் புரியும் நிலைக்கு பின்லாந்து கட்டாயப்படுத்தப்பட்ட போதும்,[282] இது ஒப்பீட்டளவில் மிதமான நிபந்தனைகளை உடைய[283] ஒரு சோவியத்-பின்லாந்து போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இட்டுச் சென்றது.
சூலை 1944இன் ஆரம்பத்தில் தென் கிழக்காசியாவில் இருந்த பொதுநலவாயப் படைகள் அசாமில் சப்பானிய முற்றுகைகளை முறியடித்தன. சப்பானியர்களை மீண்டும் சிந்த்வின் ஆற்றுக்குத் தள்ளின.[284] அதே நேரத்தில், சீனர்கள் மியித்கியினாவைக் கைப்பற்றினர். செப்டம்பர் 1944இல் சீனப் படைகள் சாங் மலையைக் கைப்பற்றின. பர்மா சாலையை மீண்டும் திறந்தன. சீனாவில் சப்பானியர்கள் அதிக வெற்றிகளைப் பெற்றனர். சூனின் நடுப்பகுதியில் சங்சாவை இறுதியாகக் [285] கைப்பற்றினர். ஆகத்து மாத ஆரம்பத்தில் கெங்யாங் நகரத்தைக் கைப்பற்றினர்.[286] இதற்குப் பிறகு சீக்கிரமே குவாங்ஷி மாகாணத்தின் மீது அவர்கள் படையெடுத்தனர். நவம்பர் இறுதியில் குயிலின் மற்றும் லியுசோவு ஆகிய இடங்களில் சீனப் படைகளுக்கு எதிராக முக்கியமான சண்டைகளை வென்றனர்.[287] திசம்பர் நடுப் பகுதியில் சீனா மற்றும் இந்தோசீனாவில் இருந்த தங்களது படைகளை வெற்றிகரமாக இணைத்தனர்.[288]
பசிபிக்கில் சப்பானியச் சுற்று வட்டத்தை ஐக்கிய அமெரிக்கப் படைகள் தொடர்ந்து அழுத்திப் பின்னோக்கித் தள்ளின. 1944 சூன் நடுப் பகுதியில் மரியானா மற்றும் பலாவு தீவுகளுக்கு எதிராக அவர்கள் தங்களது தாக்குதலைத் தொடங்கினர். பிலிப்பீன் கடல் யுத்தத்தில் சப்பானியப் படைகளைத் தீர்க்கமாகத் தோற்கடித்தனர். இந்தத் தோல்விகள் சப்பானியப் பிரதமர் இடாக்கி தோஜோவின் பதவி விலகலுக்கு இட்டுச் சென்றன. சப்பானியத் தாயகத் தீவுகள் மீது அதிகப்படியான கடும் குண்டு வீச்சு விமானத் தாக்குதல்களை நடத்த ஐக்கிய அமெரிக்காவிற்கு வானூர்தித் தளங்களை இந்தத் தோல்விகள் கொடுத்தன. அக்டோபரின் இறுதியில் அமெரிக்கப் படைகள் பிலிப்பினோ தீவான லெய்டே மீது படையெடுத்தன. பிறகு சீக்கிரமே, லெய்டே வளைகுடா யுத்தத்தில் நேச நாட்டுக் கடற்படைகள் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றன. இது வரலாற்றின் பெரிய கடற்படை யுத்தங்களில் ஒன்றாகும்.[289]
16 திசம்பர் 1944 அன்று மேற்கு முனையில் ஒரு கடைசி முயற்சியாக செருமனி எஞ்சியிருந்த தனது அனைத்து சேமப் படை வீரர்களையும் பயன்படுத்தி அர்தென்னேசிலும், பிரெஞ்சு-செருமானிய எல்லையின் நெடுகேயும் மேற்கு நேச நாடுகளைப் பிரிப்பதற்காகவும், மேற்கு நேச நாட்டுத் துருப்புகளில் பெரும்பாலான பங்கினரைச் சுற்றி வளைப்பதற்காகவும் மற்றும் நேச நாடுகளின் முதன்மையான இராணுவப் பொருட்கள் வழங்கும் துறைமுகமான ஆண்ட்வெர்ப்பைப் பிடித்து ஓர் அரசியல் உடன்படிக்கைக்குக் கொண்டு வருவதற்காகவும் ஒரு பெரிய பதில் தாக்குதலைத் தொடங்கியது.[290] 16 சனவரி 1945இல் இந்தத் தாக்குதலானது எந்த ஒரு முக்கியக் குறிக்கோள்களையும் நிறைவேற்றாமல் முறியடிக்கப்பட்டது.[290] இத்தாலியில் மேற்கு நேச நாடுகள் செருமானியத் தற்காப்புக் கோட்டில் இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி இருந்தன. 1945ஆம் ஆண்டின் சனவரி மாதத்தின் நடுப் பகுதியில் சிவப்பு இராணுவமானது போலந்தில் தாக்குதலை நடத்தியது. விசுதுலா ஆற்றிலிருந்து செருமனியின் ஓதெர் ஆறு வரை முன்னேறியது. கிழக்கு புருசியா மீது தாக்குதல் ஓட்டம் நடத்தியது.[291] 4 பெப்ரவரியில் சோவியத்து, பிரித்தானிய மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தலைவர்கள் யால்ட்டா மாநாட்டிற்காகச் சந்தித்தனர். போருக்குப் பிந்தைய செருமனியை ஆக்கிரமிப்பது மற்றும் சப்பானுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் எப்போது போரில் இறங்கும் ஆகியவை குறித்து ஒப்புக் கொண்டனர்.[292]
பெப்ரவரியில் சோவியத்துகள் சிலேசியா மற்றும் பொமரேனியாவுக்குள் நுழைந்தனர். அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் மேற்கு செருமனிக்குள் நுழைந்தன. ரைன் ஆறு மீதான வழிகளை மூடின. மார்ச் இறுதியில், ரூருக்கு வடக்கு மற்றும் தெற்கே இருந்த ரைன் ஆற்றை மேற்கு நேச நாடுகள் கடந்தன. செருமானிய இராணுவத்தின் பி அணியைச் சுற்றி வளைத்தன.[293] மார்ச்சின் ஆரம்பத்தில் அங்கேரியில் உள்ள தனது கடைசி எண்ணெய்க் கையிருப்பைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியாகவும், புடாபெஸ்டை மீண்டும் கைப்பற்றவும் சோவியத் துருப்புகளுக்கு எதிராகத் தனது கடைசி முக்கியமான தாக்குதலைச் செருமனி பலதோன் ஏரிக்கு அருகில் தொடங்கியது. இரண்டே வாரங்களில் இந்தத் தாக்குதலானது முறியடிக்கப்பட்டது. சோவியத்துகள் வியன்னாவை நோக்கி முன்னேறினர். நகரத்தைக் கைப்பற்றினர். ஏப்ரலின் ஆரம்பத்தில், சோவியத் துருப்புகள் கோனிக்சுபெர்க்கைக் கைப்பற்றின. அதே நேரத்தில், மேற்கு நேச நாடுகள் இறுதியாக இத்தாலியில் முன்னேறின. மேற்கு செருமனி முழுவதும் பரவின. அம்பர்க்கு மற்றும் நியூரம்பர்க் ஆகிய நகரங்களைக் கைப்பற்றின. 25 ஏப்ரல் அன்று அமெரிக்க மற்றும் சோவியத்துப் படைகள் எல்பே ஆற்றில் சந்தித்தன. தெற்கு செருமனி மற்றும் பெர்லினைச் சுற்றிலும் ஏராளமான ஆக்கிரமிக்கப்படாத தனித் தனி இடங்கள் இருந்தன.
சோவியத் துருப்புகள் ஏப்ரலின் இறுதியில் புயலெனப் புகுந்து பெர்லினைக் கைப்பற்றின.[294] இத்தாலியில் 29 ஏப்ரல் அன்று செருமானியப் படைகள் சரணடைந்தன. 30 ஏப்ரல் அன்று ரெய்க்ஸ்டாக் கைப்பற்றப்பட்டது. நாசி செருமனியின் இராணுவத் தோல்விக்கு அறிகுறியாக இது அமைந்தது.[295] 2 மே அன்று பெர்லின் நகரக் காவல் படையினர் சரணடைந்தனர்.
இக்காலத்தில் இரு பக்கங்களிலும் தலைமைத்துவத்தில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. 12 ஏப்ரல் அன்று அமெரிக்க அதிபர் ரூசவெல்ட் இறந்தார். அவருக்குப் பிறகு அவரது துணை அதிபரான ஹாரி எஸ். ட்ரூமன் அதிபராகப் பதவிக்கு வந்தார். 28 ஏப்ரல் அன்று இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தவர்கள் பெனிட்டோ முசோலினியைக் கொன்றனர்.[296] 30 ஏப்ரல் அன்று தனது தலைமையகத்தில் இட்லர் தற்கொலை செய்து கொண்டார். இட்லருக்குப் பிறகு கடற்படைத் தலைவரான கார்ல் தோனித்சு மற்றும் யோசோப்பு கோயபெல்ஸ் ஆகியோர் பதவிக்கு வந்தனர். முழுமையான மற்றும் நிபந்தனையற்ற சரணடைவானது ஐரோப்பாவில் 7 மற்றும் 8 மேயில் கையொப்பமிடப்பட்டது. 8 மேயின் முடிவிலிருந்து இது நடைமுறைக்கு வந்தது.[297] செருமானிய இராணுவ அணி மையமானது பிரேகுவில் 11 மே வரை எதிர்த்துத் தாக்குப் பிடித்தது.[298]
பசிபிக் போர் முனையில் அமெரிக்கப் படைகள், பிலிப்பீன்சு பொதுநலவாயப் படைகளுடன் இணைந்து பிலிப்பீன்சில் முன்னேறின. ஏப்ரல் 1945இன் முடிவில் லெய்தே யுத்தத்தில் வென்றன. சனவரி 1945இல் லூசோனில் இறங்கின. மார்ச்சில் மணிலாவை மீண்டும் கைப்பற்றின. போர் முடியும் வரை பிலிப்பீன்சின் லூசோன், மிந்தனாவோ மற்றும் பிற தீவுகளில் சண்டையானது தொடர்ந்தது.[299] அதே நேரத்தில், சப்பானியப் போர்த் தொழில்துறை மற்றும் குடிமக்களின் போருக்கு ஆதரவான மனப்பான்மையை அழிக்கும் பொருட்டு சப்பானின் முக்கியமான நகரங்கள் மீது ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப் படைகள் ஒரு பெரிய குண்டு வீச்சுப் படையெடுப்பைத் தொடங்கின. டோக்கியோ மீது 9 – 10 மார்ச்சில் நடத்தப்பட்ட மிகுந்த அழிவுகரமான குண்டு வீச்சு ஊடுருவலானது வரலாற்றில் பொதுவான ஆயுதங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதல்களில் மிகவும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியதாகும்.[300]
மே 1945இல் ஆத்திரேலியத் துருப்புகள் போர்னியோவில் இறங்கின. அங்கிருந்த எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் ஓட்டம் நடத்தின. பிரித்தானிய, அமெரிக்க மற்றும் சீனப் படைகள் மார்ச்சில் வடக்கு பர்மாவில் சப்பானியர்களைத் தோற்கடித்தன. மே 3க்குள் இரங்கூனை அடைவதற்காகப் பிரித்தானியப் படைகள் முன்னேறின.[301] 6 ஏப்ரல் மற்றும் 7 சூன் 1945க்கு இடையில் சீனப் படைகள் மேற்கு கூனான் யுத்தத்தில் ஒரு பதில் தாக்குதலை நடத்தின. அமெரிக்கக் கடல் மற்றும் நீர்நிலப் படைகளும் சப்பானை நோக்கி முன்னேறின. மார்ச்சில் இவோ ஜீமாவைக் கைப்பற்றின. சூன் இறுதியில் ஒகினவாவைக் கைப்பற்றின.[302] அதே நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல்களால் நடத்தப்பட்ட கடல் முற்றுகையானது சப்பானின் பொருளாதாரத்தின் கழுத்தை நெருக்கியது. அயல் நாட்டில் இருந்த சப்பானியப் படைகளுக்குப் பொருட்கள் வழங்கும் அதன் திறனைப் பெருமளவு குறைத்தன.[303][304]
11 சூலை அன்று நேச நாடுகளின் தலைவர்கள் செருமனியின் போதுசுதாமில் சந்தித்தனர். செருமனி குறித்த முந்தைய ஒப்பந்தங்களை அவர்கள் உறுதி செய்தனர்.[305] அமெரிக்க, பிரித்தானிய மற்றும் சீன அரசாங்கங்கள் சப்பானின் நிபந்தனையற்ற சரணடைவைக் கோரின. குறிப்பாக, சப்பானுக்கு "மாற்று வழியானது உடனடி மற்றும் முழுமையான அழிவு" என்பதைக் குறிப்பிட்டனர்.[306] இந்த மாநாட்டின் போது ஐக்கிய இராச்சியம் தனது பொதுத் தேர்தலை நடத்தியது. பிரதம மந்திரியாக சர்ச்சிலுக்குப் பதிலாகக் கிளமெண்ட் அட்லீ பதவிக்கு வந்தார்.[307]
நிபந்தனையற்ற சரணடைவுக்கான அழைப்பானது சப்பானிய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது. அது தன்னால் தன் மிகுந்த விருப்பத்திற்குரிய நிபந்தனை விதிமுறைகளுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நம்பியது.[308] ஆகத்து ஆரம்பத்தில் ஐக்கிய அமெரிக்காவானது சப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டுகளை வீசியது. இந்த இரண்டு குண்டு வீச்சுகளுக்கு இடையில் யால்ட்டா ஒப்பந்தத்தின் பங்கெடுப்பாளர்களான சோவியத்துகள் சப்பானியர் ஆக்கிரமிப்பில் இருந்த மஞ்சூரியா மீது படையெடுத்தனர். சப்பானின் மிகப் பெரிய சண்டையிடும் படையாக இருந்த குவாந்துங் இராணுவத்தை உடனடியாகத் தோற்கடித்தனர்.[309] முன்னர் பிடிவாதமாக இருந்த ஏகாதிபத்திய இராணுவத் தலைவர்களைச் சரணடைவு விதிமுறைகளுக்கு ஒப்புக் கொள்ள இந்த இரண்டு நிகழ்வுகளும் இணங்க வைத்தன.[310] சிவப்பு இராணுவமானது சக்காலின் தீவின் தெற்குப் பகுதி மற்றும் குரில் தீவுகளைக் கைப்பற்றியது. 9 – 10 ஆகத்து 1945இன் இரவில் பேரரசர் இறோகித்தோ போதுசுதாம் அறிவிப்பில் நேச நாடுகளால் கோரப்பட்ட விதி முறைகளை ஏற்றுக் கொள்ளும் தனது முடிவை அறிவித்தார்.[311] 15 ஆகத்து 1945இல் பேரரசர் வானொலியில் ஒளிபரப்பப்பட்ட ஓர் உரையில் ("கியோகுவோன்-கோசோ", பொருள்: "ஆபரணக் குரல் ஒளிபரப்பு") தனது முடிவை சப்பானிய மக்களுக்குத் தெரிவித்தார்.[312] 15 ஆகத்து 1945 அன்று சப்பான் சரணடைந்தது. 2 செப்டம்பர் 1945இல் டோக்கியோ வளைகுடாவில் அமெரிக்கப் போர்க் கப்பலான யு. எஸ். எஸ். மிசோரியின் தளத்தில் சரணடைவு ஆவணங்கள் இறுதியாகக் கையொப்பமிடப்பட்டன. போரை முடித்து வைத்தன.[313]
ஆத்திரியா மற்றும் செருமனியில் ஆக்கிரமிப்பு நிர்வாகங்களை நேச நாடுகள் நிறுவின. ஆரம்பத்தில் இவை இரண்டுமே மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. இவற்றை முறையே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. எனினும், இவற்றின் பாதைகள் சீக்கிரமே வெவ்வேறு திசையில் பிரிந்தன. செருமனியில் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மேற்கு மற்றும் கிழக்கு ஆக்கிரமிப்புப் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக 1949இல் முடிவடைந்தன. இப்பகுதிகள் தனித்தனி நாடுகளாக முறையே மேற்கு செருமனி மற்றும் இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு எனப் பிரிந்தன. இருந்தும் ஆத்திரியாவில் ஆக்கிரமிப்பானது 1955இல் மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான ஒரு கூட்டு உடன்படிக்கைப்படி ஆத்திரியாவானது மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு நடு நிலை சனநாயக அரசாக அனுமதி வழங்கப்பட்டது வரை தொடர்ந்தது. இது அலுவல்பூர்வமாக எந்த ஓர் அரசியல் குழுவுடனும் அணி சேராமல் இருந்தது. எனினும், நடைமுறையில் மேற்கு நேச நாடுகளுடன் மேம்பட்ட உறவுகளைக் கொண்டிருந்தது. செருமனியில் ஒரு நாசி ஒழிப்பு முறையானது நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் நாசிப் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும், அதிகாரத்திலிருந்து முன்னாள் நாசிக்களை நீக்குவதற்கும் இட்டுச் சென்றது. எனினும், இந்தக் கொள்கையானது மன்னிப்பு வழங்குவதை நோக்கியும், மேற்கு செருமானியச் சமூகத்தில் முன்னாள் நாசிக்களை மீண்டும் இணைத்துக் கொள்வதையும் நோக்கி நகர்ந்தது.[314]
போருக்கு முந்தைய (1937) தனது நிலப்பரப்பில் கால் பகுதியைச் செருமனி இழந்தது. கிழக்கு நிலப்பரப்புகளில் சைலீசியா, நியூமார்க் மற்றும் பெரும்பாலான பொமரேனியாவானது போலந்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது.[315] கிழக்கு புருசியாவானது போலந்து மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பிரித்துக் கொள்ளப்பட்டது. இந்த மாகாணங்களில் இருந்து 90 இலட்சம் செருமானியர்கள் செருமானிக்குள் தள்ளப்பட்டனர்.[316][317] செக்கோஸ்லோவாக்கியாவின் சுதேதென்லாந்தில் இருந்த 30 இலட்சம் செருமானியர்களும் செருமானிக்குள் தள்ளப்பட்டனர். 1950களின் இறுதியில் மேற்கு செருமானியர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கிழக்கிலிருந்து வந்த அகதிகளாக இருந்தனர். குர்சோன் கோட்டுக்குக் கிழக்கே இருந்த போலந்து மாகாணங்களைச் சோவியத் ஒன்றியம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.[318] அங்கிருந்து 20 இலட்சம் போலந்துக் காரர்களும் வெளியேற்றப்பட்டனர்.[317][319] வட மேற்கு உருமேனியா,[320][321] கிழக்கு பின்லாந்தின் பகுதிகள்[322] மற்றும் மூன்று பால்டிக் நாடுகள் சோவியத் ஒன்றியத்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.[323][324]
உலக அமைதியைப்[325] பேணும் ஒரு முயற்சியாக நேச நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையை உருவாக்கின. ஐக்கிய நாடுகள் அவையானது அதிகாரப்பூர்வமாக 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது.[326] அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் பொதுவான தரமாக 1948இல் உலக மனித உரிமைகள் சாற்றுரையைப் பின்பற்ற ஆரம்பித்தது.[327] போரின் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த உலக வல்லமைகளான பிரான்சு, சீனா, ஐக்கிய இராச்சியம், சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகியவை ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாயின.[328] இந்த ஐந்து நாடுகள் மட்டுமே இன்றும் நிரந்தர உறுப்பு நாடுகளாகத் தொடர்கின்றன. எனினும், இரண்டு முறை நாடுகளின் உறுப்பினர் பதவியானது மாற்றப்பட்டது. 1971இல் சீனக் குடியரசு மற்றும் சீன மக்கள் குடியரசுக்கு இடையிலும், 1991இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் மற்றும் அதற்குப் பின் வந்த உருசியக் கூட்டமைப்புக்கு இடையிலும் இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன. போர் முடிவுக்கு முன்னரே மேற்கு நேச நாடுகள் மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு இடையிலான கூட்டணியானது மோசமடைய ஆரம்பித்தது.[329]
நடைமுறையில் செருமனியானது பிரிக்கப்பட்டு விட்டது. இரண்டு சுதந்திர அரசுகளாக பிரிக்கப்பட்டது. அவை செருமானியக் கூட்டமைப்புக் குடியரசு (மேற்கு செருமனி) மற்றும் செருமானிய சனநாயகக் குடியரசு (கிழக்கு செருமனி).[330] இவை இரண்டுமே நேச நாடுகள் மற்றும் சோவியத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளின் எல்லைகளுக்குள் உருவாக்கப்பட்டன. எஞ்சிய ஐரோப்பாவானது மேற்கு மற்றும் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.[331] பெரும்பாலான கிழக்கு மற்றும் நடு ஐரோப்பிய நாடுகள் சோவியத் தாக்கம் கொண்ட பகுதிகளுக்குள் விழுந்தன. பொதுவுடமைவாத அரசுகளின் நிறுவுதலுக்கு இது இட்டுச் சென்றது. இவை சோவியத் ஆக்கிரமிப்பு அரசுத் துறைக்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியளவாகவோ ஆதரவளித்தன. இதன் விளைவாக இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு,[332] போலந்து, அங்கேரி, உருமேனியா, செக்கோஸ்லாவாக்கியா மற்றும் அல்பேனியா[333] ஆகியவை சோவியத்தின் தொலைதூர அரசுகளாயின. எனினும், பொதுவுடமைவாத யுகோஸ்லாவியாவானது ஒரு முழுவதுமான சுதந்திரமான கொள்கையைக் கடைபிடித்தது. இது சோவியத் ஒன்றியத்துடன் பதற்றமான நிலைக்கு இட்டுச் சென்றது.[334]
போருக்குப் பிந்தைய உலகின் பிரிவானது அதிகாரப்பூர்வமாக இரண்டு பன்னாட்டு இராணுவக் கூட்டணிகளாக உருவானது. அவை ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு மற்றும் சோவியத் தலைமையிலான வார்சா உடன்பாடு ஆகியவையாகும்.[335] பனிப்போர் எனப்படும் நீண்டகால அரசியல் பதற்றங்கள் மற்றும் இராணுவ போட்டி ஆகியவை இவற்றுக்கு இடையே ஏற்பட்டது. இதனுடன் இதற்கு முன்னர் இருந்திராத அளவுக்கான ஆயுதப் போட்டியும், உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சார்பாண்மை போர்களும் நடைபெற்றன.[336]
ஆசியாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கு ஐக்கிய அமெரிக்கா தலைமை தாங்கியது. மேற்கு அமைதிப் பெருங்கடலில் இருந்த சப்பானின் முந்தைய தீவுகளை நிர்வாகம் செய்தது. அதே நேரத்தில், சோவியத்துகள் தெற்கு சாக்கலின் மற்றும் கூரில் தீவுகளை இணைத்துக் கொண்டனர்.[337] முன்னர் சப்பானின் ஆட்சியின் கீழிருந்த கொரியாவானது பிரிக்கப்பட்டது. 1945 மற்றும் 1948க்கு இடையில் கொரியாவின் வடக்குப் பகுதி சோவியத் ஒன்றியத்தாலும், தெற்குப்பகுதி ஐக்கிய அமெரிக்காவாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. 1948இல் 38வது இணைக் கோட்டுக்கு இரு பக்கமும் வெவ்வேறு குடியரசுகள் தோன்றின. ஒட்டு மொத்த கொரியாவுக்கும் நியாயமான அரசாங்கம் என இரு அரசுகளும் உரிமை கோரின. இது இறுதியாகக் கொரியப் போருக்கு இட்டுச் சென்றது.[338]
சீனாவில் தேசியவாத மற்றும் பொதுவுடமைவாதப் படைகள் சூன் 1946இல் உள்நாட்டுப் போரை மீண்டும் தொடங்கின. பொதுவுடமைவாதப் படைகள் வெற்றி பெற்றன. முதன்மை நிலத்தில் சீன மக்கள் குடியரசை நிறுவின. அதே நேரத்தில், தேசியவாதப் படைகள் 1949இல் தைவானுக்குப் பின் வாங்கின.[339] மத்திய கிழக்கில், ஐக்கிய நாடுகள் வழங்கிய பாலத்தீனப் பிரிவுத் திட்டத்தை அரபு நாடுகள் நிராகரித்ததும், இசுரேலின் உருவாக்கமும் அரபு-இசுரேல் முரண்பாடு தீவிரமாகுவதைக் குறித்தது. அதே நேரத்தில், ஐரோப்பிய சக்திகள் தங்களது காலனிப் பேரரசில் சிலவற்றையோ அல்லது அனைத்தையுமோ மீண்டும் வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொண்டன. போரின்போது அவை மதிப்பு மற்றும் வளங்களை இழந்தது இம்முயற்சியை வெற்றிகரமாக அமையவிடாமல் தடுத்தது. இது குடியேற்ற விலக்கத்துக்கு இட்டுச் சென்றது.[340][341]
உலகப் பொருளாதாரமானது போரின் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளானது. எனினும், இதில் பங்கெடுத்த நாடுகள் ஒவ்வொன்றும் வெவ்வேறாகப் பாதிக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்காவானது மற்ற எந்த ஒரு நாட்டையும் விட மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க நாடாக உருவானது. இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஐக்கிய அமெரிக்காவில் ஒரு குழந்தைப் பெருக்கக் காலத்திற்கு இட்டுச் சென்றது. 1950ஆம் ஆண்டின் முடிவில் இதன் தனிநபர் வருமானமானது மற்ற எந்த பெரிய நாடுகளையும் விட மிக அதிகமாக இருந்தது. உலகப் பொருளாதாரத்தில் ஐக்கிய அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது.[342] 1945–1948 ஆகிய ஆண்டுகளில் மேற்கு செருமனியில் தொழில்முறை ஆயுதக்குறைப்பு என்ற ஒரு கொள்கையை ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா பின்பற்றின.[343] பன்னாட்டு வணிகச் சார்பு நிலை காரணமாக ஐரோப்பியப் பொருளாதாரமானது வளர்ச்சியற்ற நிலைக்கு உள்ளானது. பல ஆண்டுகளுக்கு இது ஐரோப்பிய மீட்சியைத் தாமதித்தது.[344][345]
1944இல் பிரெட்டன் உட்சு மாநாட்டில் போருக்குப் பிந்தைய உலகத்திற்காக ஒரு பொருளாதார உருவரைச் சட்டத்தை நேச நாடுகள் உருவாக்கின. இந்த ஒப்பந்தமானது அனைத்துலக நாணய நிதியத்தையும், பன்னாட்டுப் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியையும் உருவாக்கியது. பிரெட்டன் உட்சு முறைமை 1973ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது.[346] 1948இன் நடுப்பகுதியில் மேற்கு செருமனியில் பண மறுசீரமைப்புடன் இந்த மீட்சியானது தொடங்கியது. மார்ஷல் திட்டம் (1948–1951) நேரடியாகவும், மறைமுகமாகவும் விளைவித்த ஐரோப்பியப் பொருளாதாரக் கொள்கையின் தாராளமயமாக்கமானது வேகப்படுத்தப்பட்டது.[347][348] 1948க்குப் பிந்தைய மேற்கு செருமனியின் பொருளாதார மீட்சியானது செருமானியப் பொருளாதார அதிசயம் என்று அழைக்கப்பட்டது.[349] இத்தாலியும் பொருளாதார விரைவு வளர்ச்சியைப் பெற்றது.[350] பிரெஞ்சுப் பொருளாதாரமும் மீண்டது.[351] ஆனால் மாறாக, ஐக்கிய இராச்சியமானது பொருளாதாரச் சீர் குலைவு நிலையில் இருந்தது.[352] மொத்த மார்ஷல் திட்ட உதவியில் கால் பங்கைப் பெற்ற போதும் இவ்வாறான நிலை இருந்தது. இது மற்ற எந்த ஓர் ஐரோப்பிய நாட்டையும் விட அதிக உதவித் தொகையாகும்.[353] தசாப்தங்களுக்கு ஒப்பீட்டளவில் பொருளாதார வீழ்ச்சியை ஐக்கிய இராச்சியமானது தொடர்ந்து சந்தித்தது.[354] சோவியத் ஒன்றியமானது பெருமளவிலான மனித வள மற்றும் பொருள் இழப்பைச் சந்தித்த போதும், போருக்குப் பிந்தைய சகாப்தத்தின் ஆரம்பக் காலத்தில் உற்பத்திகள் திடீர் அதிகரிப்பைச் சந்தித்தது.[355] சப்பான் மிகத் தாமதமாக மீண்டது.[356] போருக்கு முந்தைய தொழில் துறை உற்பத்தி நிலையை 1952ஆம் ஆண்டில் சீனாவானது அடைந்தது.[357]
போரில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையின் மதிப்பீடுகளானவை வேறுபடுகின்றன. ஏனெனில், பல இறப்புகள் பதியப்படவில்லை.[358] போரில் சுமார் 6 கோடி மக்கள் இறந்தனர் எனப் பெரும்பாலானவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் 2 கோடி இராணுவ வீரர்களும், 4 கோடி குடிமக்களும் அடங்குவர்.[359][360][361] பெரும்பாலான குடிமக்கள் வேண்டுமென்றே நடத்தப்பட்ட இனப்படுகொலை, படுகொலைகள், மொத்தமான குண்டுவீச்சுகள், நோய் மற்றும் பட்டினியால் இறந்தனர்.
போரின் போது சோவியத் ஒன்றியம் மட்டும் சுமார் 2.7 கோடி மக்களை இழந்தது.[362] இதில் 87 இலட்சம் இராணுவ வீரர்களும், 1.9 கோடி குடிமக்களும் அடங்குவர்.[363] சோவியத் ஒன்றியத்தில் இருந்த மொத்த மக்கள் தொகையில கால் பங்கினர் காயமடைந்தனர் அல்லது கொல்லப்பட்டனர்.[364] செருமனிக்கு 53 இலட்சம் இராணுவ வீரர்களின் இழப்பு ஏற்பட்டது. கிழக்குப் போர்முனை மற்றும் செருமனியில் கடைசி யுத்தங்களின் போது இந்த இறப்புகள் பெரும்பாலும் ஏற்பட்டன.[365]
இட்லரின் இனவெறிக் கொள்கைகளின் நேரடி அல்லது மறைமுக விளைவாக 1.1[366] முதல் 1.7 கோடி[367] வரையிலான குடிமக்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 இலட்சம் யூதர்களின் மொத்தமான இனப்படுகொலை, இவர்களுடன் உரோமா, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் குறைந்தது 19 இலட்சம் போலந்துக்காரர்கள்,[368][369] இசுலாவியர்களில் (உருசியர்கள், உக்ரைனியர்கள் மற்றும் பெலாருசியர்கள்) பல இலட்சம் பேர் மற்றும் பிற இன மற்றும் சிறுபான்மையினக் குழுக்களின் கொலையும் அடங்கும்.[367][370] 1941 மற்றும் 1945க்கு இடையில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட செர்பியர்கள், நாடோடி இனத்தவர் மற்றும் யூதர்களுடன் சேர்த்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு யுகோஸ்லாவியாவில் அச்சு நாடுகளுடன் இணைந்திருந்த குரோசிய உசுதசேவால் கொலை செய்யப்பட்டனர்.[371] அதே நேரத்தில், செர்பியத் தேசியவாதச் செத்னிக்குகளால்[372] முஸ்லிம்களும், குரோசிய இனத்தவர்களும் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 50 முதல் 68 ஆயிரம் (இதில் 41 ஆயிரம் குடிமக்கள்) வரையிலான பாதிக்கப்பட்டவர்கள் இறந்திருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.[373] மேலும், 1943 மற்றும் 1945க்கு இடையில் வோலினியப் படுகொலைகளில் உக்ரைனியக் கலகக்கார இராணுவத்தால் 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட போலந்துக்காரர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.[374] அதே நேரத்தில், இதற்குப் பதில் தாக்குதலாகப் போலந்து குடிசார் இராணுவம் மற்றும் பிற போலந்துப் பிரிவுகளால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டனர்.[375]
ஆசியா மற்றும் அமைதிப் பெருங்கடல் பகுதியில் சப்பானியத் துருப்புகளால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையானது இன்றும் விவாதத்திற்குரியதாக உள்ளது. ஆர். ஜே. ரம்மல் என்பவர் சப்பானியர்கள் 30 இலட்சம் முதல் 1 கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கைக்கு இடையிலான மக்களைக் கொன்றிருக்கலாம் என்கிறார். மிகுந்த நிகழ்வாய்ப்புள்ள எண்ணிக்கையாகக் கிட்டத்தட்ட 60 இலட்சம் மக்களைக் குறிப்பிடுகிறார்.[376] பிரித்தானிய வரலாற்றாளர் எம். ஆர். டி. பூட்டின் கூற்றுப்படி, 1 முதல் 2 கோடிக்கு இடைப்பட்ட குடிமக்கள் இறந்தனர். அதே நேரத்தில், சீன இராணுவ இறப்புகள் (கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள்) 50 இலட்சத்துக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளன.[377] மற்ற மதிப்பீடுகள், பெரும்பாலும் குடிமக்களாக இருந்த 3 கோடி வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றன.[378][379] இதில் மோசமான சப்பானிய அட்டூழியமானது நாங்கிங் படுகொலைகள் எனக் கருதப்படுகிறது. இதில் 50 ஆயிரம் முதல் 3 இலட்சம் சீனக் குடிமக்கள் இழிவுபடுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்.[380] சான்கோ சகுசேனின் போது 27 இலட்சம் இழப்புகள் ஏற்பட்டதாக மித்சுயோசி கிமேட்டா குறிப்பிட்டுள்ளார். தளபதி யசுசி ஒகமுரா இந்தக் கொள்கையை கீபே மற்றும் சாண்டோங்கில் செயல்படுத்தினார்.[381]
அச்சுப் படைகள் உயிரி மற்றும் வேதி ஆயுதங்களைப் பயன்படுத்தின. சீனா மீதான படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு,[382][383] மற்றும் சோவியத்துகளுக்கு எதிரான ஆரம்பச் சண்டைகளின் போது இத்தகைய பல்வேறுபட்ட ஆயுதங்களை ஏகாதிபத்திய சப்பான் இராணுவமானது பயன்படுத்தியது.[384] குடிமக்களுக்கு எதிராக[385] மற்றும் சில நேரங்களில் போர்க் கைதிகள் மீது இத்தகைய ஆயுதங்களைச் செருமானியர்களும், சப்பானியர்களும் சோதனை செய்தனர்.[386]
22,000 போலந்து அதிகாரிகள் கொல்லப்பட்ட கதின் படுகொலைக்குச் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது.[387] என். கே. வி. டி.யால் கைதுசெய்யப்பட்ட அல்லது மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள், சைபீரியாவுக்கு குடிமக்கள் மொத்தமாக நாடு கடத்தப்பட்டது, சிவப்பு இராணுவத்தால் இணைத்துக் கொள்ளப்பட்ட பால்டிக் அரசுகள் மற்றும் கிழக்குப் போலந்தில் நடைபெற்ற இறப்புகளுக்கும் சோவியத் ஒன்றியம் காரணமாக அமைந்தது.[388]
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்த நகரங்களின் மீதான மொத்தமான குண்டுவீச்சுகளானவை பெரும்பாலும போர்க் குற்றமென அழைக்கப்படுகின்றன. எனினும், இரண்டாம் உலகப் போருக்கு முன்னரோ அல்லது போரின் போதோ வான் போர் தொடர்பான அல்லது குறித்த அனைத்துலக மனிதாபிமானச் சட்டமானது அதற்கு முன்னர் கிடையாது.[389] ஐக்கிய அமெரிக்க இராணுவத்தின் விமானப்படையானது, இரோசிமா நாகசாகி அணுகுண்டு வீச்சு உள்பட மொத்தமாக 67 சப்பானிய நகரங்கள் மீது குண்டுகளை வீசியது. இதில் 3,93,000 குடிமக்கள் கொல்லப்பட்டனர். இதில் 65% சதவீத கட்டடப் பகுதிகள் அழிந்தன.[390]
அடால்ப் இட்லரின் சர்வாதிகாரத்தின் கீழ் நாசி செருமனியானது பெரும் இன அழிப்பு (சுமார் 60 இலட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது), 27 இலட்சம் போலந்து இனத்தவரின் கொலை[391] மற்றும் "வாழத் தகுதியற்றவர்கள்" (மாற்றுத்திறனாளிகள் மற்றும் உளப் பிறழ்ச்சி அடைந்தோர், சோவியத் போர்க் கைதிகள், உரோமானி, நேர்பாலீர்ப்பாளார்கள், விடுதலைக் கட்டுநர்கள், மற்றும் யெகோவாவின் சாட்சிகள்) என நாசி செருமனியால் கருதப்பட்ட 40 இலட்சம் பிறரையும் வேண்டுமென்ற அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக அழித்ததற்குக் காரணமாக அமைந்தது. நாசி செருமனியானது நடைமுறை ரீதியாக ஒரு "இனப்படுகொலை அரசாக" உருவானது.[392] குறிப்பாக சோவியத் போர்க்கைதிகள் வாழத் தகுதியற்ற சூழ்நிலைகளில் வைக்கப்பட்டிருந்தனர். போரின் போது நாசி முகாம்களில் 57 இலட்சம் சோவியத் போர்க்கைதிகளில் 36 இலட்சம் பேர் இறந்தனர்.[393][394] வதை முகாம்களுடன், தொழில் துறை அளவில் மக்களைக் கொல்வதற்காகக் கொலை முகாம்களும் நாசி செருமனியால் உருவாக்கப்பட்டன. நாசி செருமனி விரிவாக அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது. செருமனி ஆக்கிரமித்திருந்த நாடுகளிலிருந்து சுமார் 1.2 கோடி முதல் 2 கோடி வரையிலான ஐரோப்பியர்கள் கடத்தப்பட்டு செருமானியத் தொழில்துறை, விவசாயம் மற்றும் போர்ப் பொருளாதாரத்தில் அடிமைப் பணியாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.[395]
சோவியத் கைதி முகாம்கள் 1942-43இன் போது இறப்பைக் கொடுக்கக்கூடிய முகாம்களின் ஒரு நடைமுறை ரீதியிலான அமைப்பாக மாறியது. போரின்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை மற்றும் பட்டினியானது அங்கிருந்த கைதிகளின் பெரும்பாலானவர்களின் இறப்புக்குக் காரணமாகியது.[396] இதில் சோவியத் ஒன்றியத்தால் 1939-40இல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போலந்து மற்றும் பிற நாடுகளின் அயல் நாட்டுக் குடிமக்கள் மற்றும் மேலும் அச்சு நாடுகளின் போர்க் கைதிகளும் அடங்குவர்.[397] போரின் முடிவின்போது, நாசி முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பெரும்பாலான சோவியத் போர்க் கைதிகளும், சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்ட பல குடிமக்களும் தடுக்கப்பட்டு சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் என். கே. வி. டி.யின் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டனர். உண்மையாகவோ அல்லது நாசிக்களுடன் இணைந்து செயல்பட்டவர்களாகவோ கருதப்பட்ட 2,26,127 பேர் முகாம்களுக்கு மீண்டும் அனுப்பப்பட்டனர்.[398]
சப்பானியப் போர்க் கைதிகளின் முகாம்களில் பெரும்பாலானவை தொழிலாளி முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டன. அங்கும் இறப்பு விகிதமானது அதிகமாக இருந்தது. தூரக் கிழக்கிற்கான பன்னாட்டு இராணுவத் தீர்ப்பாயமானது மேற்கு நாடுகளின் கைதிகளின் இறப்பு விகிதமானது 27%மாக இருந்தது எனக் கண்டறிந்தது. இதுவே அமெரிக்கப் போர்க் கைதிகளுக்கு 37%மாக இருந்தது.[399] செருமானியர்கள் மற்றும் இத்தாலியர்களிடம் போர்க் கைதிகளாக இருந்தவர்களின் இறப்பு விகிதத்தை விட இது 7 மடங்கு அதிகமாகும்.[400] சப்பான் சரணடைந்த பிறகு, ஐக்கிய இராச்சியத்தின் 37,583 கைதிகளும், நெதர்லாந்தின் 28,500 கைதிகளும், ஐக்கிய அமெரிக்காவின் 14,473 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரத்தில், விடுதலை செய்யப்பட்ட சீனர்களின் எண்ணிக்கையானது வெறும் 56 மட்டுமே.[401]
கிழக்காசிய முன்னேற்ற சங்கம் அல்லது கோயினால் சுரங்கங்கள் மற்றும் போர்த் தொழில் முறைகளில் பணியாற்றுவதற்காக 1935 முதல் 1941 வரை வடக்கு சீனா மற்றும் மஞ்சுகோவைச் சேர்ந்த குறைந்தது 50 இலட்சம் சீனக் குடிமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். 1942க்குப் பிறகு இந்த எண்ணிக்கையானது 1 கோடியை அடைந்தது.[402] சாவகத்தில் 4 இலட்சம் முதல் 1 கோடிக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ரோமுசா (சப்பானியப் பொருள்: "கைத்திறன் சார்ந்த தொழிலாளர்கள்") சப்பானிய இராணுவத்தால் கட்டாயப்படுத்தப்பட்டுப் பணி செய்ய வைக்கப்பட்டனர். தென்கிழக்கு ஆசியாவில் இருந்த சப்பானியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிற பகுதிகளுக்கு இந்தச் சாவகத் தொழிலாளர்களில் 2,70,000 பேர் அனுப்பப்பட்டனர். இதில் சாவகத்திற்கு வெறும் 52,000 பேர் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டனர்.[403]
ஐரோப்பாவில் ஆக்கிரமிப்பானது இரண்டு வடிவங்களில் வந்தது. மேற்கு, வடக்கு மற்றும் நடு ஐரோப்பாவில் (பிரான்சு, நார்வே, டென்மார்க் மற்றும் கீழ் நாடுகள், மற்றும் செக்கோஸ்லோவியாவின் இணைத்துக்கொள்ளப்பட்ட பகுதிகள்) செருமனியானது பொருளாதாரக் கொள்கைகளை நிறுவியது. இதன்மூலம், அது சுமார் 6,950 கோடி ரெயிச் மார்க்குகளை (2,780 கோடி ஐக்கிய அமெரிக்க டாலர்கள்) போரின் முடிவில் சேகரித்தது. இந்த அளவானது தொழில் பொருட்கள், இராணுவ உபகரணங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற பொருட்களைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு கொள்ளையடித்ததை உள்ளடக்கியிருக்கவில்லை.[404] இவ்வாறாக, இந்த ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நாடுகளில் இருந்து பெற்ற வருவாயானது செருமனி வரி மூலம் சேகரித்ததின் 40%க்கும் அதிகமாகும். போர் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில், மொத்த செருமானிய வருவாயில் கிட்டத்தட்ட 40%மாக இந்த அளவு அதிகரித்தது.[405]
கிழக்கில் லெபென்சரவுமால் எதிர்பார்க்கப்பட்ட அனுகூலங்களை என்றுமே கிடைக்கவில்லை. ஏனெனில், சோவியத் நில எரிப்புக் கொள்கைகள் செருமானியப் படையெடுப்பாளர்களுக்கு வளங்கள் கிடைப்பதைத் தடுத்தது.[406] மற்றும் போர் முனைப் பகுதிகளில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை ஆகியவை காரணமாக மேற்கில் போல் இல்லாமல் இசுலாவிய வழித்தோன்றல்களைத் "தாழ்த்தப்பட்ட மக்களாகக்" கருதிய நாசி இனவெறிக் கொள்கையானது அவர்களுக்கு எதிராக அளவுக்கதிகமான மிருகத்தனத்தை ஊக்குவித்தது. பெரும்பாலான செருமானிய முன்னேற்றங்களுக்குப் பிறகு மொத்தமான படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன.[407] பெரும்பாலான ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பரப்புகளில் எதிர்ப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்ட போதும், 1943ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை கிழக்கிலோ[408] அல்லது மேற்கிலோ[409] இவை செருமானிய நடவடிக்கைகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாதிக்கவில்லை.
ஆசியாவில் தனது ஆக்கிரமிப்புக்குக் கீழ் இருந்த நாடுகளை பெரிய கிழக்காசியச் செழிப்பு மண்டலத்தின் பகுதி எனக் குறிப்பிட்டது. இவை சப்பானிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தன. காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த மக்களை விடுதலை செய்வது தமது நோக்கமென சப்பான் கூறியது.[410] ஐரோப்பிய ஆதிக்கத்தின் கீழ இருந்து விடுதலை செய்தவர்களாக சப்பானியப் படைகள் சில நேரங்களில் வரவேற்கப்பட்ட போதும், சப்பானியப் போர்க் குற்றங்கள் அடிக்கடி உள்ளூர் மக்களின் எண்ணங்களை சப்பானியர்களுக்கு எதிராகத் திருப்பியது.[411] சப்பானின் ஆரம்பப் படையெடுப்பின்போது, பின்வாங்கிய நேச நாடுகளின் படைகளால் விட்டுச்செல்லப்பட்ட 40 இலட்சம் பீப்பாய் எண்ணெயைக் கைப்பற்றியது. 1943ஆம் ஆண்டின் இறுதியில் டச்சுக் கிழக்கிந்தியத் தீவுகளில் 5 கோடி பீப்பாய் எண்ணெய் உற்பத்தியைப் பெற அதனால் முடிந்தது. இது 1940ஆம் ஆண்டின் உற்பத்தி விகிதத்தில் 76% ஆகும்.[411]
ஐரோப்பாவில் போர் தொடங்குவதற்கு முன்னர் மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் நேச நாடுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குச் சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தன. 1938இல் மேற்கு நேச நாடுகள் (ஐக்கிய இராச்சியம், பிரான்சு, போலந்து மற்றும் பிரித்தானியப் பகுதிகள்) 30% அதிக மக்கள் தொகையையும், 30% அதிக உள்நாட்டு உற்பத்தியையும் ஐரோப்பிய அச்சு சக்திகளைக் (செருமனி மற்றும் இத்தாலி) காட்டிலும் கொண்டிருந்தன. காலனிகளையும் இதனுள் சேர்த்துக்கொண்டால் நேச நாடுகள் 5:1 சாதகத்தை மக்கள் தொகையிலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2:1 சாதகத்தையும் கொண்டிருந்தன.[412] இதே நேரத்தில், ஆசியாவில் சப்பானைப் போல் சீனா ஆறு மடங்கு மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. ஆனால், சப்பானை விட வெறும் 89% அதிகமான உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தது. சப்பானியக் காலனிகளை இதனுடன் இணைக்கும் போது, இது 3:1 மக்கள் தொகையாகவும், வெறும் 38% அதிகமான உள்நாட்டு உற்பத்தியாகவும் குறைந்தது.[412]
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் பயன்படுத்திய அனைத்துப் படைக்கலங்களில் சுமார் 3இல் 2 பங்கை ஐக்கிய அமெரிக்கா உற்பத்தி செய்தது. இதில் போர்க்கப்பல்கள், போக்குவரத்து வாகனங்கள், போர் விமானங்கள், சேணேவிகள், பீரங்கி வண்டிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவையும் அடங்கும்.[413] நேச நாடுகளின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை சாதக அம்சங்களின் பயனானது செருமனி மற்றும் சப்பானின் ஆரம்ப வேகமான தாக்குதலின் போது பெரும்பாலும் குறைவாக இருந்தபோதும், 1942ஆம் ஆண்டு வாக்கில் அவை மிக முக்கியமான காரணிகளாக விளங்கின. ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் 1942இல் நேச நாடுகளுடன் இணைந்தபோது, போரானது பெரும்பாலும் ஒரு உராய்வுப் போராக மாறியது.[414] நேச நாடுகளுக்கு இயற்கை வளங்கள் அதிகமாகக் கிடைத்ததால் அச்சு நாடுகளை விட பெரும்பாலும் நேச நாடுகளால் அதிக உற்பத்தியைச் செய்ய முடிந்தது எனக் கூறப்பட்டாலும்,[யாரால்?] மற்ற காரணிகளான பெண்களைப் பணிக்கு அமர்த்த செருமனி மற்றும் சப்பானின் தயக்கம்,[415] நேச நாடுகள் முக்கிய இடங்களைக் குறிவைத்து வெடிகுண்டு வீசியது,[416] செருமனி தாமதமாகவே ஒரு போர்ப் பொருளாதாரத்துக்கு மாறியது[417] ஆகியவையும் இதில் மிக முக்கியப் பங்காற்றின. மேலும், செருமனியோ அல்லது சப்பானோ தாம் எதிர்பார்த்ததை விட ஒரு நீண்ட காலப் போரைச் செய்வதற்கான திட்டங்களைக் கொண்டிருக்கவில்லை.[418] அவர்களிடம் அதற்கான உபகரணங்களும் குறைவாக இருந்தன. தங்களது உற்பத்தியை அதிகப்படுத்த செருமனி மற்றும் சப்பான் இலட்சக்கணக்கான அடிமைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தின.[419] பெரும்பாலும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து பெறப்பட்ட சுமார் 1.2 கோடி மக்களை செருமனி இதற்காகப் பயன்படுத்தியது.[395] அதே நேரத்தில், தூரக் கிழக்காசியாவில் இருந்து பெறப்பட்ட 1.8 கோடி மக்களை சப்பான் பயன்படுத்தியது.[402][403]
உளவு பார்க்கவும், சண்டையிடுவதற்கும், குண்டு வீச்சிலும், தரைப்பகுதிக்கு ஆதரவளிக்கவும் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, மற்றும் இந்த ஒவ்வொரு பங்கும் குறிப்பிடத்தக்களவுக்கு முன்னேற்றப்பட்டன. வான்வழி எடுத்துச் செல்லலும் (அதிக முக்கியத்தும் வாய்ந்த பொருட்கள், உபகரணங்கள் மற்றும் வீரர்களை ஓர் அளவுக்கு வேகமாக நகர்த்தும் ஆற்றல்)[420] மற்றும் முக்கியக் குண்டுவீச்சு (எதிரி தொழில்துறை மற்றும் மக்கள் தொகை மையங்கள் மீது குண்டு வீசுவதன் மூலம் போரை நடத்தும் எதிரியின் ஆற்றலை அழிப்பது)[421] ஆகியவற்றில் புதுமைகள் புகுத்தப்பட்டன. விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் ஆயுதங்களும் முன்னேற்றப்பட்டன. கதிரலைக் கும்பா மற்றும் தரையில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் சேணேவி உள்ளிட்ட தற்காப்பு ஆயுதங்களும் முன்னேற்றப்பட்டன. தாரை வானூர்தியின் பயனும் முன்னோடியாக இதில் பயன்படுத்தப்பட்டது. எனினும், இவை தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டதால் குறைந்த அளவு தாக்கத்தையே ஏற்படுத்தின. உலகம் முழுவதும் உள்ள விமானப்படைகளில் தாரை வானூர்திகள் பொதுவானவையாக மாறுவதற்கு இது இட்டுச் சென்றது.[422] போரின் போது வழிகாட்டிகளைக் கொண்ட ஏவுகணைகள் முன்னேற்றப்பட்ட போதும் வானூர்திகளைத் துல்லியமாக இலக்காக்கும் அளவுக்கு அவை முன்னேற்றப்படவில்லை. போருக்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகே இவை அத்தகைய திறனை அடைந்தன.
கடற்படைப் போர் முறையின் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டன. முக்கியமாக வானூர்தி தாங்கிக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. வானூர்திப் போர் முறையானது போரின் ஆரம்பத்தின்போது ஒப்பீட்டளவில் சிறிதளவே வெற்றியைக் கொடுத்த போதிலும் தரந்தோ, முத்துத் துறைமுகம் மற்றும் பவளக் கடல் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சண்டைகள் போர்க்கப்பலின் இடத்தில் வானூர்தி தாங்கிக் கப்பல்களை முதன்மையான தலைமைக் கப்பலாக நிறுவின.[423][424][425] அத்திலாந்திக்கில் நேச நாட்டுக் கப்பல் கூட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக காவல் தாங்கிக் கப்பல்கள் தங்களை நிரூபித்தன. ஆற்றல் வாய்ந்த பாதுகாப்பு ஆரத்தின் அளவை அதிகரித்தன. விமானப்படையின் தரைத் தளங்களுக்கும், கப்பல்கள் பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கும் இடைப்பட்ட நடு அத்திலாந்திக்கு இடைவெளியைக் குறைப்பதில் பயன்பட்டன.[426] போர்க்கப்பல்களை விட பொருளாதார ரீதியாகவும் தாங்கிக் கப்பல்கள் பயனுள்ளவையாக இருந்தன. ஏனெனில், ஒப்பீட்டளவில் விமானங்களின் விலையானது குறைவாக இருந்தது,[427] அவை கனரகக் கவசங்களையும் வேண்டிய தேவையைக் கொண்டிருக்கவில்லை.[428] முதல் உலகப் போரின் போது தாக்கத்தை ஏற்படுத்திய ஆயுதமாக நிரூபிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள்[429] இரண்டாம் உலகப் போரிலும் அனைத்துத் தரப்பினராலும் முக்கியமானவையாக எதிர்பார்க்கப்பட்டன. நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகளை முன்னேற்றுவதில் பிரித்தானியர்கள் கவனம் செலுத்தினர். இதில் ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு மற்றும் கப்பல் கூட்டங்களும் அடங்கும். அதே நேரத்தில், தன்னுடைய தாக்குதல் ஆற்றலில் 7ஆம் வகை நீர்மூழ்கி மற்றும் ஓநாய்க் கூட்ட உத்திகள் போன்ற வடிவமைப்புகளை முன்னேற்றுவதன் மூலம் செருமனி கவனம் செலுத்தியது.[430] படிப்படியாக, லெயிக் ஒலி, முள்ளம் பன்றி ஆயுதம், கணவாய் ஆயுதம் மற்றும் நீர்மூழ்கிகளை நோக்கிச் செல்லும் குண்டுகள் ஆகியவை செருமானிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக வெற்றியடைந்தவை என நிரூபிக்கப்பட்ட நேச நாட்டுத் தொழில்நுட்பங்களை படிப்படியாக முன்னேற்றினர்.[431]
முதல் உலகப் போரின் பதுங்கு குழிப் போர் முறையின் நிலையான முன் கோடுகளிலிருந்து நிலப் போர் முறையானது மாற்றமடைந்தது. இது காலாட்படை மற்றும் குதிரைப்படை ஆகிய இரண்டையும் விட வேகத்தில் அதிகமாக இருந்த முன்னேற்றப்பட்ட சேணேவியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மேலும், வேகம் மற்றும் ஒட்டுமொத்த ஆயுதங்களின் பங்கையும் முன்னேற்றி இருந்தது. முதல் உலகப் போரில் காலாட்படையினருக்கு உதவி அளிப்பதற்காக முதன்மையாகப் பயன்படுத்தப்பட்ட பீரங்கி வண்டிகள் இப்போரில் ஒரு முதன்மையான ஆயுதமாகப் பரிணாமம் அடைந்தன.[432] 1930களின் இறுதிப்பகுதியில் முதல் உலகப் போரின் போது இருந்ததை விட பீரங்கி வண்டி வடிவமைப்பானது குறிப்பிடத்தக்க அளவு மிகுந்த முன்னேற்றம் அடைந்திருந்தது.[433] வேகம், கவசம் மற்றும் சுடு திறனில் முன்னேற்றங்கள் மூலம் போர் முழுவதும் இவை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்தன.[434][435] போரின் ஆரம்பத்தில் எதிரிப் பீரங்கி வண்டிகள் தமது அதிக நுணுக்க விவரங்களுடன் கூடிய பீரங்கி வண்டிகளால் சந்திக்கப்பட வேண்டும் எனப் பெரும்பாலான தளபதிகள் எண்ணினர்.[436] ஒப்பீட்டளவில் இலகு ரக ஆரம்பப் பீரங்கித் துப்பாக்கிகள் கவசங்களுக்கு எதிராகக் குறைவாகவே பலனைத் தந்ததும், பீரங்கி வண்டிகளை பீரங்கி வண்டிகளுக்கு எதிராகப் போரில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற செருமானியக் கொள்கை காரணமாகவும் இந்த எண்ணமானது மாற்றப்பட்டது. இதுவும், ஒன்றிணைந்த ஆயுதங்களைச் செருமனி பயன்படுத்தியதும் போலந்து மற்றும் பிரான்சு முழுவதும் செருமானியர்களின் மிகுந்த வெற்றிகரமான பிளிட்ஸ்கிரைக் உத்திகளின் முக்கிய அம்சங்களாகத் திகழ்ந்தன.[432] மறைமுகச் சேணேவி, பீரங்கி வண்டி எதிர்ப்புத் துப்பாக்கிகள் (ஊர்தியில் இணைக்கப்பட்ட மற்றும் தனியான ஆகிய இரண்டுமே), கண்ணி வெடிகள், குறுகிய தொலைவு காலாட்படை பீரங்கி வண்டி எதிர்ப்பு ஆயுதங்கள், மற்றும் பிற பீரங்கி வண்டிகள் பீரங்கி வண்டிகளை அழிக்கும் பலவகை முறைகளாகப் பயன்படுத்தப்பட்டன.[436] பெரிய அளவிலான எந்திரமயமாக்கல் நடைபெற்ற போதும் கூட அனைத்துப் படைகளின் முதுகெலும்பாகக் காலாட்படையே தொடர்ந்தது.[437] போர் முழுவதும் முதல் உலகப் போர் ஆயுதங்கள் காலாட்படைக்குப் பயன்படுத்தப்பட்டன.[438] எளிதில் நகர்த்தக்கூடிய இயந்திரத் துப்பாக்கிகளின் பயன்பாடு பரவியது. இதில் குறிப்பிடத்தக்க உதாரணமானது செருமானிய எம். ஜி. 34 இயந்திரத் துப்பாக்கியாகும். நகர்ப்புற மற்றும் காட்டுப் பகுதிகளில் சண்டையிடும் சூழ்நிலைக்குப் பல்வேறு துணை இயந்திரத் துப்பாக்கிகளும் தகுந்தவையாக அமைந்தன.[438] புரிகுழல் சுழல் துமுக்கி மற்றும் துணை இயந்திரத் துப்பாக்கிகளின் பல அம்சங்களை ஒன்றிணைத்துப் போரின் பிற்பகுதியில் முன்னேற்றப்பட்ட தாக்குதல் மரைகுழல் துப்பாக்கியானது பெரும்பாலான இராணுவப் படைகளின் போருக்குப் பிந்தைய காலாட்படை ஆயுதமாக உருவானது.[439]
போரில் ஈடுபட்ட பெரும்பாலான முக்கிய நாடுகள் சிக்கல் பிரச்சினைகள் மற்றும் குறியாக்கவியலுக்கான பெரிய குறிப் புத்தகங்களைப் பயன்படுத்துவதில் சம்பந்தப்பட்டிருந்த பாதுகாப்பைத் தீர்க்கும் முயற்சிக்காக மறை குறியீடிடும் எந்திரங்களை வடிவமைத்தனர். இதில் மிகுந்த பரவலாக அறியப்பட்டது செருமானியப் புதிர் எந்திரம் ஆகும்.[440] சிகின்ட் (சமிக்ஞைகள் உளவுச் செய்தி) மற்றும் மறை குறியீடு பகுப்பாய்வுவின் முன்னேற்றமானது மறையீடு நீக்கச் செய்முறைக்கு எதிராக உதவியது. குறிப்பிடத்தக்க உதாரணங்களாக சப்பானியக் கடற்படை மறை குறியீடுகளை நேச நாடுகள் மறையீடு நீக்கம் செய்ததையும்,[441] பிரித்தானிய அல்ட்ராவையும் குறிப்பிடலாம். போலந்து பூச்சிய தகவல் செய்தி அமைப்பால் ஐக்கிய இராச்சியத்திற்குக் கொடுக்கப்பட்ட தகவல்களின் மூலம் புதிரை மறையீடு நீக்கம் செய்து அனுகூலங்களைப் பெற்று வந்த ஒரு முன்னோடி முறையாக அல்ட்ரா திகழ்ந்தது. போருக்கு முன்னர் புதிரின் ஆரம்பத் தலுவல்களைப் போலந்து பூச்சிய தகவல் செய்தி அமைப்பானது மறையீடு நீக்கம் செய்து வந்தது.[442] இந்த இராணுவ உளவுச் செய்தியின் மற்றொரு அம்சமானது உண்மையற்ற ஒன்றை உண்மையென நம்பவைப்பதின் பயன்பாடு ஆகும். இதை நேச நாடுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்குப் பயன்படுத்தின. இவை மின்சுமீட் மற்றும் பாடிகார்ட் போன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டன.[441][443]
போரின் போதோ அல்லது போரின் விளைவாகவோ எட்டப்பட்ட மற்ற தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சாதனைகளாக உலகின் முதல் கட்டளை நிரல்களைச் செயல்படுத்தக்கூடிய கணினிகள் (இசட் 3, கொலோசஸ் மற்றும் எனியாக்), வழிகாட்டிகளைக் கொண்ட ஏவுகணைகள் மற்றும் நவீன ஏவூர்திகள், அணுக்கரு ஆயுதங்களை உருவாக்கிய மன்காட்டன் திட்டம், செய்பணி ஆய்வியல் மற்றும் செயற்கைத் துறைமுகங்கள் மற்றும் ஆங்கிலக் கால்வாயின் கீழ் எண்ணெய்க் குழாய்கள் அமைத்தது ஆகியவற்றைக் கூறலாம்.[444] பெனிசிலின் மருந்தானது முதல் முறையாகப் பெருமளவில் மொத்தமாகத் தயாரிக்கப்பட்டு, போரின் போது பயன்படுத்தப்பட்டது.[445]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.