Remove ads
இரண்டாம் உலகப்போரின் போது நிகழ்ந்த சண்டை From Wikipedia, the free encyclopedia
பல்ஜ் சண்டை (Battle of the Bulge) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஆர்டென் தாக்குதல் (Ardennes Offensive) மற்றும் வான் ரன்ட்ஸ்டெட் தாக்குதல் (Von Rundstedt Offensive) என்றும் அறியப்படுகிறது. டிசம்பர் 16, 1944 - ஜனவரி 25, 1945 காலகட்டத்தில் நடந்த இத்தாக்குதல் மேற்குப் போர்முனையில் நாசி ஜெர்மனி மேற்கொண்ட இறுதி முக்கிய தாக்குதல் முயற்சியாகும். இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகள் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றி நேச நாட்டுப்படைகளை இரு பிளவுகளாகப் பிரிக்க முயன்று தோற்றன.
பல்ஜ் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி | |||||||
ஆர்டென் காடுகளில் அமெரிக்க 75வது காலாட்படை டிவிசன் வீரர்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் கனடா பிரான்சு (சுதந்திர பிரெஞ்சுப் படைகள்) (பெல்ஜிய எதிர்ப்புப் படைகள்) (லக்சம்பர்க் எதிர்ப்புப் படைகள்) | ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் ஒமார் என். பிராட்லி (12வது அமெரிக்க ஆர்மி குரூப்) | அடால்ஃப் ஹிட்லர் கெர்ட் வான் ரண்ட்ஸ்டெட் |
||||||
பலம் | |||||||
840,000+ வீரர்கள், 1,300 டாங்குகள்,[1] | 200,000 – 500,000 வீரர்கள்[2][3][4] |
||||||
இழப்புகள் | |||||||
அமெரிக்கர்: 89,500 (19,000 மாண்டவர், 47,500 காயமடைந்தவர், 23,000 போர்க்கைதிகள்) ~800 டாங்குகள்[7] | 67,200[8] – 100,000 ~600 டாங்குகளும் பீரங்கிகளும்[7][9] |
||||||
~ 3,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்[10] |
1944ன் இறுதியில் மேற்கு ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துவிட்டன. அடுத்து ஜெர்மனியின் பிரதேசங்களைத் தாக்கும் முயற்சி தொடங்கியது. கிழக்குப் போர்முனையிலும் சோவியத் யூனியனின் படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஹிட்லர் மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்குப் போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.
ஆர்டென் பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு ஆர்மிகளை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இலக்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய மேல்நிலை உத்தியாளர்களின் கணிப்பு. இதற்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 16ல் தொடங்கிய தாக்குதல் மேற்கத்தியப் படைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேசநாட்டு உளவுத்துறைகள் இப்படி ஒரு தாக்குதல் நிகழும் என்று எச்சரித்திருந்தாலும், தளபதிகள் அதனைப் பொருட்படுத்தாமலிருந்தனர். பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்ததால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் பலத்தை ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான பாஸ்டோன் நகரை அவைகளால் கைப்பற்ற முடியவில்லை. அவசரமாக போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேற்றம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின.
மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின. அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையுமாக அமைந்தது. “பல்ஜ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வீக்கம் என்று பொருள். வரைபடங்களில் நேச நாட்டு படைநிலைகளின் ஊடாக ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் ஒரு வீக்கம் போல காட்சியளித்ததால், மேற்கத்திய ஊடகங்கள் இதனை பல்ஜ் சண்டை என்று அழைக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது.
1944 ஜூன் மாதம் ஓவர்லார்ட் நடவடிக்கையின் மூலம் நேசநாட்டுப் படைகள் நான்கு ஆண்டுகளாக ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மேற்கு ஐரோப்பாவைத் தாக்கின. அடுத்த சில மாதங்களில் பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் பெரும் பகுதிகள் ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன. நேச நாட்டுத் தளபதிகள் எதிர்பார்த்ததை விட வேகமாக அவர்களது படைகள் முன்னேறியதால் அவற்றுக்கு தளவாடங்களை அனுப்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஆங்கிலக் கால்வாயில் பல துறைமுகங்கள் ஜெர்மானியர் வசமிருந்ததால் சரக்குப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. ஆண்ட்வெர்ப் மற்றும் மார்சே துறைமுகங்கள் கைப்பற்றப்பட்ட போதும் கூட தளவாடப் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. இதனால் 1944ன் இறுதியில் மேற்குப் போர்முனையில் கீழ்நிலை உத்தியளவில் இழுபறி நிலை உருவானது. நெச நாட்டுப் படைகள் ஜெர்மனியின் உள்பிரதேசங்களைத் தாக்கத் தொடங்கியிருந்தாலும் அடுத்த பெரும் தாக்குதல் எங்கு நிகழ்ம் என்பது முடிவாகாமல் இருந்தது.
ஜெர்மானியத் தரப்பில் நிலை மோசமாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்குப் போர்முனைகளில் ஏற்பட்ட தொடர் தோல்விகளால், ஜெர்மானிய போர் எந்திரம் வெகுவாகப் பழுதுபட்டிருந்தது. இன்னும் வெகு காலம் இருமுனைப் போரில் தாக்குப்பிடிக்க முடியாது என்பது ஹிட்லருக்கும் அவருடைய தளபதிகளுக்கும் தெளிவானது. இதனால் ஏதேனும் ஒரு முனையில் போரை உடனே முடிவுக்குக் கொண்டு வருவது அவசியமானது. ஹிட்லர் தனது விரோதிகளில் ஜோசப் ஸ்டாலினை முக்கியமானவராகக் கருதியதால், சோவியத் ஒன்றியத்துடன் போரைத் தொடர்வதென்றும், மேற்கத்திய நேச நாடுகளுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவேண்டுமென்றும் முடிவானது. ஆனால் தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் நிலையில் மேற்கத்திய நாட்டுத் தலைவர்கள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்; அவர்களுக்கு ஒரு பெரும் தோல்வியை அளித்த்தால் பேச்சு வார்த்தைக்கு இணங்குவார்கள் என்று ஹிட்லர் கணக்கிட்டார்.
செப்டம்பர் மாதம் இத்தாக்குதலுக்கான திட்டமிடும்பணி தொடங்கியது. அமெரிக்கப் படைகளுக்கு போர்த்திறன் குறைவு என்று ஹிட்லர் கருதியால், ஆர்டென் காட்டுப் பகுதியில் பலவீனமாக இருந்த அமெரிக்கப் படைநிலைகளைத் தாக்கி ஊடுருவது என்று முடிவானது. இதன் மூலம் ஆண்ட்வெர்ப் துறைமுகத்தைக் கைப்பற்றி, நேசநாட்டு படைநிலைகளை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்பது திட்டத்தின் குறிக்கோள். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி இரண்டுள் ஒரு பிரிவை சுற்றி வளைத்து அதனை அழித்து விடலாம் என்று ஜெர்மானியப் போர்த்தலைமையகம் திட்டமிட்டது. வடக்குப் பிரிவிலுள்ள நான்கு நேச நாட்டு ஆர்மிகளை அழித்துவிட்டால், தோல்வியால் துவண்ட மேற்கத்திய நாடுகள் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு இணங்கிவிடுவார்கள் என்பது அவர்களது கணக்கு.
பல்ஜ் தாக்குதலுக்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதலுக்கு 45 டிவிசன்கள் தேவைப்பட்டாலும், ஆள் பற்றாக்குறையால் 30 டிவிசன்களை மட்டுமே ஜெர்மனியால் இதற்கு பயன்படுத்த முடிந்தது. இவை நான்கு ஆர்மிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இத்தாக்குதலின் தலைமை தளபதிகளாக ஃபீல்டு மார்ஷல்கள் வால்டர் மோடல் மற்றும் கெர்ட் வான் ரண்ட்ஸ்டெட் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டன. தாக்குதல் முழுமையாக வெற்றி பெற நான்கு விஷயங்கள் தேவைப்பட்டன: 1) நேச நாட்டுப் படைகளுக்கு தாக்குதல் முழு அதிர்ச்சியாக அமைய வேண்டும் 2) நேசநாட்டு வான்படைகள் எதிர்த்தாக்குதல் நடத்தாமலிருக்க வானிலை மோசமாக இருக்க வேண்டும் 4) வேகமான முன்னேற்றம் வேண்டும்; தாக்குதல் தொடங்கி நாலாம் நாள் மியூசே ஆற்றைக் கடந்து விட வேண்டும் 5)தாக்குதலுக்குத் தேவைப்படும் எரிபொருளை நேசநாட்டுப் படைகளிடமிருந்தே கைப்பற்றிக் கொள்ள வேண்டும்.
மேற்கில் ஒரு தாக்குதல் நிகழப்போகிறதென்று நேசநாட்டு உளவுத்துறை எச்சரித்தாலும், நேசநாட்டு தளபதிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஒரு பெரும் தாக்குதலை நிகழ்த்தும் அளவுக்கு ஜெர்மனியிடம் படைபலம் கிடையாது என்று அவர்கள் மெத்தனமாக இருந்து விட்டனர். தாக்குதலுக்கு சாதகமான வானிலை டிசம்பர் மாத மத்தியில் உருவானதால், டிசம்பர் 19ம் தேதி தாக்குதல் தொடங்கியது. மேலும் கிழக்குப் போர்முனையில் சோவியத் படைகளின் குளிகாலத் தாக்குதல் டிசம்பர் 20ம் தேதி தொடங்கும் என்று ஜெர்மானிய உளவுத்துறை கணித்ததால், அதனைத் தாமதப்படுத்த பல்ஜ் தாக்குதலை அதற்கு ஒரு நாள் முன்னர் ஜெர்மானியத் தளபதிகள் தொடங்கினர்.
பல்ஜ் தாக்குதலுக்கு முன் ஏற்பாடாக ஜெர்மானிய அதிரடிப்படையினர் இரு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஓட்டோ ஸ்கொர்செனியின் தலைமையில் ஒரு குழுவினர் நேச நாட்டுப் படைவீரர்களைப் போல் வேடமிட்டு அமெரிக்கப் படைநிலைகளுக்குப் பின் பெரும் குழப்பத்தை விளைவித்தனர். அமெரிக்க மற்றும் பிரிட்டானிய வீரர்களின் சீருடைகளை அணிந்து கொண்டு அமெரிக்கப் படைநிலைகளை ஊடுருவி சாலை வழிகாட்டிகளை மாற்றிவிடுதல், போக்குவரத்து நெரிசல்களை உண்டாக்குதல், முக்கியமான பாலங்களைக் கைப்பற்றுதல் போன்ற வேலைகளைச் செய்தனர். இன்னொரு நடவடிக்கையில் மால்மெடியிலுள்ள முக்கிய பாலமொன்றை ஜெர்மானிய வான்குடை வீரர்கள் கைப்பற்ற முயன்றனர்.
டிசம்பர் 16, காலை 5.30 மணியளவில் பெரும் பீரங்கித் தாக்குதலுடன் பல்ஜ் சண்டை ஆரம்பமாகியது. களத்தின் வடபகுதியில் ஜெனரல் செப்ப் டைட்ரிக் தலைமையிலான 6வது எஸ். எஸ் பான்சர் (கவச) ஆர்மி லீஜ் நகரை நோக்கி முன்னேறத் தொடங்கியது. மத்தியில் வான் மாண்ட்டூஃபலின் தலைமையிலான 5வது பான்சர் ஆர்மி பாஸ்டோன் நகரை நோக்கியும் தெற்கில் எரிக் பிராண்டன்பெர்கரின் 7வது ஆர்மி லம்சம்பர்கை நோக்கியும் முன்னேறத் தொடங்கின. ஆரம்பத்தில் கடுமையான வானிலையும், அமெரிக்கப்படைகளில் நிலவிய குழப்பமும் ஜெர்மானியருக்குச் சாதகமாக அமைந்தன. இரு நாட்களுக்கு ஜெர்மானிய முன்னேற்றம் திட்டமிட்டபடி நடந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, அமெரிக்க எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியது. சுதாரித்துக்கொண்ட நேசநாட்டுத் தளபதிகள் பல்ஜ் போர்முனைக்குப் புதிய இருப்புப் படைபிரிவுகளை அனுப்பத் தொடங்கினர். வடக்கில் டைட்ரிக்கின் படைகள் விரைவில் முடக்கப்பட்டன. மத்தியப் பகுதியில் மாண்டூஃபலின் படைகள் டிசம்பர் 21ல் சென் வித் நகரைக் கைப்பற்றின. அதே நாள் பாஸ்டோன் நகரை அடைந்து முற்றுகையிட்டன. பெல்ஜியத்தின் மேற்குப்பகுதிக்குச் செல்லும் சாலைகளின் சங்கமத்தில் பாஸ்டோன் இருந்ததால், பல்ஜ் தாக்குதலின் வெற்றிக்கு அதனைக் கைப்பற்றுவது மிக அவசியமாக இருந்தது. ஆனால் பாஸ்டோன் நகரில் இருந்த அமெரிக்க 101வது வான்குடை டிவிசனின் படைவீரர்கள் நகரம் ஜெர்மானியர் வசமாகாமல் காப்பாற்றிவிட்டனர். வடக்கிலும் மத்தியிலும் போலல்லாமல் தெற்குக் களத்தில் ஜெர்மானியப்படைகள் சிறிது தூரம் மட்டுமே முன்னேற முடிந்தது. இக்காலகட்டத்தில் முன்னேறிய ஜெர்மானியப் படைகள் மால்மெடி என்னும் இடத்தில் சரணடைந்த அமெரிக்கப் போர்க்கைதிகளை படுகொலை செய்தன.
டிசம்பர் 23ம் தேதி நேசநாட்டு எதிர்த்தாக்குதல் ஆரம்பமாகியது. வானிலை சீராகத்தொடங்கியதால், தரையில் முடங்கியிருந்த நேசநாட்டு வான்படைகள் ஜெர்மானியப் படைகளைத் தாக்கத் தொடங்கின. டிசம்பர் 24ம் தேதி ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் அறவே தடைபட்டது. திட்டமிட்டபடி மியூசே ஆற்றை அவைகளால் அடையமுடியவில்லை. ஜனவரி 1ம் தேதி இழந்த வேகத்தை மீண்டும் பெற ஜெர்மானியப் படைகள் மீண்டுமொரு ஒரு புதிய தாக்குதலைத் தொடங்கின. ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃவே பெல்ஜியம், லக்சம்பர்க், நெதர்லாந்து நாடுகளிலுள்ள நேசநாட்டு வான்படைத் தளங்களைத் தாக்கியது. தரைப்படைகளும் புதிய தாக்குதலின் மூலம் இழுபறி நிலையை முடிவுக்குக் கொண்டுவர முயன்றன. ஆனால் அடுத்த சில நாட்களில் இத்தாக்குதல்கள் நேசநாட்டுப் படைகளால் முறியடிக்கப்பட்டன. அடுத்த சில வாரங்களில் ஜெர்மானியர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகள் அனைத்தும் நேசநாட்டுப் படைகளால் மீட்கப்பட்டன.
மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. ஜெர்மனியால் இவ்வளவு பெரிய அளவில் ஒரு தாக்குதலை மேற்கொள்ள முடியாது என்று நினைத்திருந்த நேசநாட்டுத் தளபதிகளுக்கு இது அதிர்ச்சியாக அமைந்தது. இத்தாக்குதலில் ஜெர்மானியப் படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சிய படைப்பிரிவுகள் சிக்ஃபிரைட் கோட்டிற்குப் பின் வாங்கின. இத்தாக்குதலால் ஜெர்மானிய இருப்புப்படைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன. லுஃப்ட்வாஃபேவின் இழப்புகளால் பின்வரும் மாதங்களில் நடந்த வான்போர்களில் அதனால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தமுடியவில்லை. ஜெர்மனியின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் மேற்குப் போர்முனையெங்கும் மேற்கத்திய நேசநாடுகள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கின.
அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையுமாக அமைந்தது. இவற்றுள் சுமார் 19,000 பேர் போரில் கொல்லப்பட்டனர். ஜெர்மானியத் தரப்பில் சுமார் 90,000 (அதிகாரப்பூர்வமாக) இழப்புகள் ஏற்பட்டன. 1,500 பிரிட்டானிய வீரர்களும் இதில் கொல்லப்பட்டனர். பல்ஜ் சண்டையில் பிரிட்டானியத் தளபதி ஃபீல்டு மார்ஷல் பெர்னார்ட் மோண்ட்கோமரி நடந்து கொண்ட விதம் பிற நேச நாட்டு தளபதிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவர் பலமுறை அமெரிக்கத் தளபதிகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டிருந்ததால், நேச நாட்டுப் போர்த்தலைமையகத்தில் சிறிது உட்பூசல் ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடியும்வரை இந்த நிலை நீடித்தது. பல்ஜ் சண்டையைப் பற்றி பல புத்தகங்களும், திரைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.