From Wikipedia, the free encyclopedia
ஏவுகணை என்பது தானாக உந்திச் சென்று தாக்கக்கூடிய ஒரு வான்வழி ஆயுதமாகும். இதன் உந்துசக்தி பொதுவாக ஏவூர்தி மூலமாகவோ, அதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் தாரைப் பொறி மூலமாகவோ பெறப்படுகிறது.[1]
வரலாற்று ரீதியாக, ஏவுகணை என்பது ஒரு இலக்கை நோக்கி எறியப்பட்ட, சுடப்பட்ட அல்லது செலுத்தப்படும் எந்தவொரு பொருளையும் குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. பொதுவாக எந்த ஒரு வழிகாட்டுதல் இல்லாது சென்று தாக்கும் ஆயுதங்கள் ஏவூர்தி என விவரிக்கப்பட்டன. சுய உந்துவிசை இல்லாத வெடிகுண்டுகளை ஏவும் சாதனங்கள் பீரங்கிகள் என்று அழைக்கப்பட்டன.[1]
ஏவுகணைகள் பொதுவாக வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி உந்திச் சென்று தாக்கும் ஆயுதங்களகும். வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் பொதுவாக ஐந்து அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன: இலக்கு குறிபார்த்தல், வழிகாட்டப்படல், பறக்கட்டுப்பாட்டு, இயந்திர பொறி மற்றும் வெடிமுனை. ஏவுகணைகள் ஏவும் தளம் மற்றும் இலக்குகள் அமைப்பை பொறுத்து பல விதங்களாக பிரிக்கப்படுகின்றன.
ஏவூர்திகள் நவீன ஏவுகணைகளுக்கு முன்னோடியாக இருந்தன. முதல் ஏவூர்திகள் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவில் அம்புகளுக்கான உந்துவிசை அமைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டன.[2] பின்னர் ஏவூர்திகள் சீனா, கொரியா, இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டில், இந்தியாவில் மைசூர் அரசு மற்றும் மராட்டியப் பேரரசு பிரித்தானியர்களுக்கு எதிராக இரும்பு உறை ஏவூர்திகளை பயன்படுத்தின. இது பிறகு பிரித்தானியர்களால் நெப்போலியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.[3][4]
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், அமெரிக்கர் ராபர்ட் கோடார்ட் மற்றும் ஜெர்மனியர் எர்மன் ஓபர்த் ஆகியோர் இயந்திர பொறிகளால் செலுத்தப்பட்ட ஆரம்பகால ஏவுகணைகளை உருவாக்கினர்.[5] 1920களில், சோவியத் யூனியன் திட எரிபொருள் ஏவூர்திகளை உருவாக்கியது.[6] பின்னர், செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்ட முதல் ஏவுகணைகள் இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியால் உருவாக்கப்பட்டன.[7][8][9][10] இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பனிப்போர் மற்றும் அணு ஆயுதங்களின் வளர்ச்சியின் காரணமாக பல நீண்ட தூர ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.
வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் பொதுவாக ஐந்து அமைப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன. அவையாவன:
ஒரு ஏவுகணை பெரும்பாலும் வழிகாட்டுதல் அமைப்பால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஒரு ஏவுகணை ஏவப்பட்ட பிறகு சில கட்டங்களில் வழிகாட்டப்படாமலும் இருக்கலாம்.[11] ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பு என்பது ஒரு ஏவுகணையை அதன் இலக்கிற்கு வழிநடத்தும் முறைகளைக் குறிக்கிறது. ஒரு ஏவுகணையின் துல்லியம் அதன் செயல்திறனுக்கான ஒரு முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.[12] ஒரு ஏவுகணை வழிகாட்டுதல் அமைப்பு நான்கு நிலைகளை கொண்டுள்ளது: இலக்கைக் கண்காணிப்பது, கண்காணிப்புத் தகவலைப் பயன்படுத்தி திசையைக் கணக்கிடுவது, கணக்கிடப்பட்ட உள்ளீடுகளை கட்டுப்பாட்டு கணினிக்கு அனுப்புவது மற்றும் இயந்திர பொறிகள் அல்லது கட்டுப்பாட்டு பரப்புகளுக்கு உள்ளீடுகளை செலுத்துவதன் மூலம் ஏவுகணையை சரியான திசையை நோக்கி திருப்புவது.[13] ஒரு ஏவுகணை செயல்பாட்டின் போது வெவ்வேறு வழிகாட்டுதல் அமைப்புகள் பயன்படுத்தப்படலாம்.[13]
வழிகாட்டுதல் அமைப்புகள் பொதுவாக மூன்று வகைகளாக வரையறுக்கப்படுகின்றன.[11] முதல் வகையான அமைப்புகளில், இலக்கை ஒளிரச் செய்வதற்கும், பிரதிபலித்த ஆற்றலைப் பெறுவதற்கும் தேவையான உபகரணங்களை ஏவுகணை சுமந்து செல்கிறது. இலக்கு சரிபார்க்கப்பட்டதும் ஏவுகணை சுயாதீனமாக இலக்கை நோக்கிச் செல்கிறது.[14] இரண்டாவது வகை செயல்திறன் அமைப்புகளில், கதிர்வீச்சின் மூலமானது ஏவுகணைக்கு வெளியேl பொதுவாக ஏவுகணை ஏவப்படும் வாகனத்தில் அமைந்துள்ளது. இந்த வாகனம் ஒரு வானூர்தி அல்லது கப்பலாக இருக்கலாம். இந்த வாகனம் இலக்கை குறிபார்த்தல் மற்றும் பிறகு ஏவுகணை இலக்கை நோக்கிச் செல்லும் வரை ஆதரித்தால் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.[15] மூன்றாவது அமைப்பில், ஏவுகணை இலக்கிலிருந்து பெறப்படும் ஏதோ ஒரு வகையான தகவலை மட்டுமே நம்பி அதை நோக்கி பாய்கின்றது.[15] இலக்கை அடையாளம் காட்டும் அமைப்பு அகச்சிவப்புக் கதிர்கள், சீரொளிகள், வானொலி அலைகள், ஒளிக்கதிர்கள், மின்காந்த அலைகள் ஆகியவற்றை இலக்கை அறிய பயன்படுத்துகின்றது. இலக்கை அடையாளம் கண்டவுடன், வழிகாட்டுதல் அமைப்பு முடுக்கமானி, செயற்கைக்கோள் அல்லது சுழல் காட்டியைப் பயன்படுத்தி ஏவுகணையை வழிநடத்துகிறது.[16] ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்துவதற்கு தேவையான பாதையை கணினிகள் கணக்கிடும்.[15][17] பறக்கட்டுப்பாட்டு அமைப்பு வழிகாட்டுதல் அமைப்பில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தி ஏவுகணையை இயக்கும். இதற்கு ஏவுகணைகளில் உள்ள இயந்திர பொறி மற்றும் இறக்கைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன[18]
ஏவுகணைகள் பொதுவாக எரிபொருளை பற்றவைப்பதன் மூலம் உந்துசக்தியை பெறுகின்றன. இதற்கான மூலமாக தரை பொறிகள் பயன்படுத்தபடுகின்றன.[19] திட எரிபொருட்கள் பராமரிப்பதற்கு எளிதானவை மற்றும் வேகமான ஏவுகணையை ஏவ உகந்ததாக இருக்கின்றன. ஒரு ஏவுகணையின் உந்துவிசை, அதனில் நிரப்பப்படும் எரிபொருள் அளவு, எரியும் அறையின் கொள்ளளவு மற்றும் எரியும் நேரத்தை பொறுத்து அமைகின்றது.[20] பெரிய ஏவுகணைகள் திரவ எரிபொருளை பயன்படுகின்றன. சில நேரங்களில் உந்துவிசை ஒன்றுக்கும் மேற்பட்ட திரவ எரிபொருட்களின் கலவையால் வழங்கப்படுகிறது.[21][22][23] நீண்ட தூர ஏவுகணைகள் பல நிலைகளைக் கொண்டிருக்கலாம், இவைகளில் பலவிதமான எரிபொருட்கள் பயன்படுத்தலாம். சில ஏவுகணைகள் பீரங்கி போன்ற மற்றொரு மூலத்திலிருந்து ஏவப்படும் போது, அந்த உந்து விசையை பயன்படுத்தி இலக்கை தாக்குகின்றன.[24]
ஏவுகணைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெடிமுனைகள் உள்ளன. இருப்பினும் ஏவுகணைகளில் மற்ற ஆயுத வகைகளும் பயன்படுத்தப்படலாம்.[25] ஏவுகணைகள் கடின இலக்குகளை அழிக்க அதிக வெடிக்கும் சக்தியை கொண்ட வெடிமுனைகளை கொண்டிருக்கின்றன. இவற்றை கொண்டு வழக்கமான ஆயுதங்களை தவிர அணு மற்றும் ரசாயன ஆயுதங்களும் ஏவப்படலாம்.[26]
Seamless Wikipedia browsing. On steroids.