தென்னிந்தியாவை ஆண்ட இராச்சியங்களில் ஒன்று. From Wikipedia, the free encyclopedia
விசயநகரப் பேரரசு (பொ.ஊ. 1336–1646) தென்னிந்திய பெரும்பாலான பகுதிகளைக் கொண்ட ஒரு பேரரசு ஆகும்.[3][4] தென்னிந்தியாவில் தில்லி சுல்தான்களின் ஆட்சி விரிவாக்கத்தை தடுக்கவே[5][6] (வித்யாரண்யர் வழிகாட்டுதலின் படி(ஆய்வுக்குரியது),) விசயநகரப் பேரரசு 1336 ஆம் ஆண்டில் முதலாம் அரிகரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது. இப்பேரரசின் புகழ் பெற்றவர் கிருட்டிணதேவராயர் ஆவார். இதன் தலைநகரமான விசயநகரத்தின் பெயரினால் இப்பேரரசின் பெயர் உருவானது. இந்நகரின் கட்டுமானங்கள் இன்றைய இந்திய மாநிலமான கருநாடகத்தில் உள்ள அம்பியைச் சுற்றிலும் காணப்படுகின்றன. உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அம்பி விளங்குகிறது.[7]
விசயநகரப் பேரரசு | |
---|---|
1336–1646 | |
நிலை | பேரரசு |
தலைநகரம் | விசயநகரம் (அம்பி) (1336–1565)
பெனுகொண்டா (1565–1592) |
பேசப்படும் மொழிகள் | கன்னடம் தெலுங்கு சமசுகிருதம்[2] |
சமயம் | இந்து சமயம் |
அரசாங்கம் | முடியாட்சி |
முடியரசன் | |
• 1336–1356 | முதலாம் அரிகரர் |
• 1642–1646 | மூன்றாம் சிரீரங்கா |
வரலாறு | |
• தொடக்கம் | 1336 |
• தொடக்க காலப் பதிவுகள் | 1343 |
• முடிவு | 1646 |
நாணயம் | வரகம் |
தற்போதைய பகுதிகள் | இந்தியா |
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
மத்தியகால ஐரோப்பியப் பயணிகளான டொமிங்கோ பயசு (Domingo Paes), பெர்னாவோ நுனிசு (Fernao Nuniz), நிக்கோலோ டா கொன்ட்டி (Niccolò Da Conti) ஆகியோரது ஆக்கங்களிலிருந்தும், உள்ளூர் இலக்கிய மூலங்களில் இருந்தும் இதன் வரலாறு பற்றிய பல முக்கிய தகவல்கள் கிடைக்கின்றன. இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும் விசயநகரப் பேரரசின் வலு மற்றும் வளம் குறித்த பல தகவல்களைத் தருகின்றன.
இப் பேரரசு தொடர்பான நினைவுச் சின்னங்கள் பல தென்னிந்தியா முழுவதும் பரவலாக உள்ளன. இவற்றுள் அம்பியில் உள்ளவை பெரிதும் புகழ் பெற்றவை. விசயநகரக் கட்டிடக்கலைப் பாணி தென்னிந்தியக் கட்டிடக்கலையின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். பல பல நம்பிக்கைகள் மற்றும் நாட்டார் மரபுகளின் தொடர்புகள், இந்துக் கோயில் கட்டுமானங்களில் புதுமைகளைப் புகுத்தியது. இது முதலில் தக்காணத்திலும் பின்னர் திராவிடக் கட்டிடக்கலையிலும் ஏற்பட்டது. சமயச் சார்பற்ற கட்டிடங்களில் வட தக்காணத்துச் சுல்தானகக் கட்டிடக்கலையின் தாக்கங்கள் காணப்படுகின்றன.
இப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் கன்னடம், தெலுங்கு தமிழ் மொழி இலக்கியம், இந்துக் கோயில் கட்டிடக் கலை, இந்து சமயம், நீர் பாசன முறை, தொழில், வணிகம் சிறப்பு விளங்கியது.
இப்பேரரசு பொ.ஊ. 1646 வரையில் நீடித்ததாயினும், பொ.ஊ. 1565 ஆண்டில் தக்காணத்துச் சுல்தான்களுடன் நடைபெற்ற தலைகோட்டை போருக்கு பின்னர் விசயநகரப் பேரரசு பெரிதும் வலுவிழந்து போனது.
விசயநகரப் பேரரசை கருநாடகா இராச்சியம் அல்லது கருநாடகப் பேரரசு என்று சில சரித்திரக் குறிப்புகளிலும்[8][9] மற்றும் கிருஷ்ணதேவராயர் சமசுகிருத மொழியில் இயற்றிய சாம்பவதி கல்யாணம் எனும் நூல் மற்றும் தெலுங்கு மொழியில் இயற்றிய வசு சரித்திரம் எனும் நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.[10]
சங்கம மரபைச்[11][12][13] சேர்ந்த முதலாம் அரிகரர் மற்றும் அவரது சகோதரரான முதலாம் புக்கராயர் இணைந்து, வித்யாரண்ய தீர்த்தர்[14] வழிகாட்டுதலின் படி, விசயநகரம் என்ற அம்பியை தலைமையிடமாகக் கொணடு பொ.ஊ. 1336ல் விசயநகரப் பேரரசு நிறுவப்பட்டது.[11][12][13] பொ.ஊ. 1336 ஆம் ஆண்டின் தாமிர பட்டயம் விசயநகர சாம்ராச்சியம் அமைந்ததில் வித்யாரண்ய தீர்த்தரின் முக்கிய பங்கைக் கூறுகின்றது.[5][14][15]
போசாளப் பேரரசின் வீழ்ச்சியின் போது, இவர்கள் முதலில் காக்கத்தியர்களுடன் இணைந்து, அதன் வடக்குப் பகுதிகளைக் கைப்பற்றினர்.[16]
பொ.ஊ. 1294ல் தென்னிந்தியாவில் தில்லி சுல்தான் படைகள் தோற்ற போது, போசளப் பேரரசின் படைத்தலைவர் மூன்றாம் சிக்கய நாயக்கர் (1280–1300), தன்னை சிற்றரசனாக அறிவித்துக் கொண்டு தேவகிரி யாதவப் பேரரசை கைப்பற்றினார்.[17]
தற்கால குல்பர்காவிற்கு அருகில் துங்கபத்திரை ஆற்றின் அருகில் சிக்கய நாயக்கர் நிறுவிய காம்பிலி இராச்சியம், தில்லி சுல்தான்களின் தொடர் படையெடுப்பால் குறுகிய காலத்தில் முடிவுற்றது.[17][18] காம்பிலி இராச்சியம் அழிந்த 8 ஆண்டுகள் கழித்து 1336ல் அம்பியில் விசயநகர இராச்சியம் நிறுவப்பட்டது.[19]
விசயநகர இராச்சியம் துவக்கப்பட்ட இருபதாண்டுகளுக்குள் முதலாம் அரிகரர் துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள பெரும்பாலன பகுதிகளை கைப்பற்றி தன்னை கிழக்கு - மேற்கு கடல்களின் தலைவர் ("master of the eastern and western seas") என அறிவித்துக் கொண்டார்.
பொ.ஊ. 1374ல் முதலாம் அரிகரருக்குப் பின் பட்டமேறிய முதலாம் புக்கராயர் ஆற்காடு மற்றும் கொண்ட வீடு ரெட்டி இராச்சியத்திரையும், மதுரை சுல்தானகத்தையும் வென்று, மேற்கில் கோவா, கிழக்கில் துங்கபத்திரை ஆறு, வடக்கில் கிருட்டிணா ஆற்றுச் சமவெளி வரை ஆட்சி செலுத்தினார். [20][21]
முதலாம் புக்கராயரின் மகன் இரண்டாம் அரிகர ராயன் விசயநகரப் பேரரசை கிருட்டிணா ஆற்றிக்கு மேல் வரை விரிவு படுத்தி, தென்னிந்தியா முழுவதையும் விசயநகரப் பேரரசின் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். பின் ஆட்சி கட்டிலில் அமர்ந்த முதலாம் தேவ ராயன், ஒடிசாவின் கசபதி பேரரசை கைப்பற்றினார்.
பொ.ஊ. 1407ல் விசயநகரப் பேரரசர் முதலாம் தேவராயர், பாமினி சுல்தானுடன் செய்து கொண்ட போர் அமைதி உடன்படிக்கைப் படி, 1435 முடிய, ஆண்டிற்கு ஒரு இலட்சம் அணாக்களும், 5 மணங்கு முத்துக்களும், 50 யானைகளும் கப்பம் கட்டினார். 1424ல் பட்டமேறிய இரண்டாம் தேவ ராயன் தற்கால கேரளாவின் கோழிக்கோடு, கொல்லம் பகுதிகளைக் கைப்பற்றி இலங்கை மற்றும் பர்மாவை கடல்வழியாகச் சென்று படையெடுத்தார். தொடர்ந்து நடந்து வந்த பாமினி சுல்தானகம் - விசயநகரப் போர்களால், விசயநகரப் பேரரசு தனது இராணுவத்தை விரிவாக்கியது. அதே நேரத்தில் விசயநகரப் பேரரசின் படைத்தலைவர்களுக்கிடையே பிணக்குகளும் தோன்றின.
பொ.ஊ. 1485ல் சங்கம மரபைச் சேர்ந்த இறுதி விசயநகரப் பேரரசர் பிரௌத ராயன் இறப்பிற்குப் பின், சாளுவ மரபின் படைத்தலைவர் சாளுவ நரசிம்ம தேவ ராயன் (பொ.ஊ. 1485–1491) இராணுவப் புரட்சி மூலம் விசயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். இவருக்குப் பின் வந்த திம்ம பூபாலன் மற்றும் நரசிம்ம ராயன் II ஆகியோர் 1491 முதல் 1505 முடிய பேரரசை ஆண்டனர்.
1505 பேரரசின் துளுவ மரபின் பெரும் படைத்தலைவர் துளுவ நரச நாயக்கன் இராணுவப் புரட்சி செய்து சங்கம மரபினரிடமிருந்து விசயநகரப் பேரரசை கைப்பற்றி அரியணை ஏறினார். 1509ல் துளுவ நரச நாயக்கரின் மகன் கிருட்டிணதேவராயரின் (ஆட்சிக் காலம்:1509 - 1529) ஆட்சி துவங்கியது.[22] இவர் இந்து வீரர்களுடன், முசுலீம் படைவீரர்களையும் தனது படைதுறைகளில் சேர்த்து வளுவான படையணிகளை உருவாக்கினார். [23] பத்தாண்டுகளில் தன் போர்த் திறமையால் வடக்கில் இருந்த தக்காணச் சுல்தான்களின் ஆக்கிரமிப்புகளை வென்றார்.[24][25]
கிருட்டிணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விசயநகரப் பேரரசு நாற்புறங்களிலும் விரிவாக்கப்பட்டு, புகழின் உச்சத்தில் இருந்தது. [26][27] தக்காண சுல்தான்களின் வடக்கு, கிழக்குப் பகுதிகளையும் மற்றும் கலிங்க நாட்டையும் கைப்பற்றி விசயநகரப் பேரரசில் இணைத்தார்.[28][29] 1520ல் நடைபெற்ற ராய்ச்சூர் போரில் கிருட்டிணதேவராயர், பீசப்பூர் சுல்தானகத்தை வெற்றி கொண்டார். போரின் முடிவில் பிசப்பூர் சுல்தான் கிருட்டிண நதியின் அப்பாலுக்கு விரட்டியடிக்கப்பட்டார்.[30]
1529ல் கிருட்டிணதேவராயரின் ஒன்று விட்ட தம்பி அச்சுத தேவ ராயன் (ஆட்சிக் காலம்: 1529-1542) விசயநகரப் பேரரசின் அரியணை ஏறினார். 1542ல் அச்சுத தேவராயர் இறக்கவே அவரது இளவயது மருமகனான சதாசிவ ராயன், கிருட்டிணதேவராயரின் மருமகனும், அரவிடு மரபினனுமான அலிய ராமராயனை காப்பாளராகக் கொண்டு ஆட்சி செய்தார். 1543ல் அச்சுத தேவ ராயன் இறந்ததைத் தொடர்ந்து, சிறுவனாக இருந்த சதாசிவ ராயன் (ஆட்சிக் காலம்:1542-1570) முடிசூட்டப்பட்டான். இவனும் அலிய ராமராயனின் வலுவான ஆதரவினாலேயே ஆட்சி செய்ய முடிந்தது. சதாசிவ ராயனது ஆட்சிக் காலம் முழுவதும் அலிய ராம ராயனே அரசன் போல் செயல்பட்டு வந்தான்.
சனவரி, 1565ல் தக்காணச் சுல்தான்கள் ஒன்றிணைந்து, தலிகோட்டா சண்டையில், அலிய ராம ராயனின் விசயநகரப் பேரரசின் படைகளை தோற்கடித்தனர்.[31] இப்போரில் விசயநகரப் பேரரசின் படையில் இருந்த இரு முசுலிம் படைத்தலைவர்கள் தங்கள் படையணிகளுடன் தக்காணச் சுல்தான்களுக்கு ஆதரவாக செயல்பட்டதால், போரில் விசயநகரப் பேரரசு தோற்றது என வரலாற்று அறிஞர்களான எர்மன குல்கே மற்றும் டயட்மர் ரோதர்மண்ட் கூறுகிறார்கள். போரில் கைதியாக பிடிபட்ட இடத்திலேயே, சுல்தான்கள் அலிய ராம ராயனின் தலையை கொய்தனர்.[32][33] மேலும் சுல்தான்கள் அம்பி எனும் விசயநகரத்தின் கோயில்களையும், கோட்டைகளையும் சிதைத்து அழித்தனர். [34]
தலிகோட்டா சண்டையில் இறந்த அலிய ராம ராயனின் தம்பியும், அரவிடு மரபைத் துவக்கியவனுமான திருமலை தேவ ராயன், தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் பெனுகொண்டாவிற்கு விசயநகரப் பேரரசின் தலைநகரை மாற்றினார். தலைக்கோட்டைப் போரின் முடிவில் விசயநகரப் பேரரசு வலுவிழந்தபோது, பேரரசின் கீழிருந்த மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் தனிவழி செல்லத் தொடங்கினர். வேறு சிலர் திருமலை தேவ ராயனுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். [35] 1572இல் திருமலை தேவ ராயனை அரியணை விட்டு விலகிய போது, மீதமிருந்த விசயநகரப் பேரரசை தனது மூன்று மகன்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். 1614இல் அரவிடு மரபினரின் விசயநகரப் பேரரசு, பிசப்பூர் சுல்தானகம் மற்றும் பிற சுல்தான்களின் தொடர் படையெடுப்புகளால் உருக்குலைந்து, இறுதியாக 1646இல் விசயநகரப் பேரரசின் ஆட்சி முடிவிற்கு வந்தது.[36][37][38]
விசயநகர பேரரசின் வீழ்ச்சியின் போது தென்னிந்தியாவில் மைசூர் அரசு, கேளடி நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், தஞ்சை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆட்சி செலுத்த துவங்கினர். [39]
பேரரசருக்கு ஆட்சியில் ஆலோசனைகள் வழங்க காரிய கர்த்தா அல்லது இராயசம் எனப்படும் பிரதம அமைச்சர் தலைமையிலான அமைச்சரவை இருந்தது.[40] அரச அரண்மனைக்கு அருகில் அரசு ஆவணங்கள் அரச முத்திரையுடன் பராமரிக்கும் செயலகம் செயல்பட்டது.[41] அரண்மனை நிர்வாகத்தை மேற்கொள்ள 72 துறைகள் இருந்தன.[42][43][44]
பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடுகள் பல தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. தலம் என்பது பல கிராமங்களைக் கொண்டிருந்த பிரிவாகும். இந்நிர்வாக அலகுகளை பரம்பரையாக ஆண்டதுடன், பேரரசிற்கு ஆண்டு தோறும் திறை செலுத்தினர். மண்டலத்தின் ஆளுநர் மண்டலேசுவரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார். விசய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.
நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தவைர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம் பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், படைத்துறைக்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும். நீதித்துறையைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டன. கோயில் சொத்துக்களைக் கொள்ளையடிப்போருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.[45]
விசய நகர இராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது. அரபு நாடுகளின் வணிககளிடமிருந்து உயர்ரக குதிரைகள் இராணுவத்திற்காக வாங்கப்பட்டன. இராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கபட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது. படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது
மதுரை பிரதேசமும், கேளடி பிரதேசமும் பேரரசின் படைத்தலைவர்களால் நேரடியாக நிர்வகிக்கப்பட்டது.
1.1 மில்லியன் பேரரசின் படைகளில் இசுலாமிய வீரரகளும் சேர்க்கப்பட்டனர். கிருட்டிணதேவராயரின் தனிப்படையில் மட்டும் ஒரு இலட்சம் காலாட்படையினரும், 20,000 குதிரைப்படைவீரர்களும், 900 யானைப்படையினரும் இருந்தது.
பேரரசின் பொருளாதாரம் சோளம், நெல், கரும்பு, பருத்தி, பட்டு, நவதானியங்கள், பருப்பு வகைகள், வெற்றிலை, மஞ்சள், ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களும் மற்றும் தென்னை போன்ற விளைபயிர்களைச் சார்ந்து இருந்தது. நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுத்த விசயநகர ஆட்சியாளர்கள், வேளாண்மை வளர்ச்சிக்கு ஊக்கமளிக்க புதிய ஏரிகள் வெட்டினர். துங்கபத்திரா போன்ற ஆறுகளின் குறுக்கே தடுப்பு அணைகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட்டது.
பேரரசின் தலைநகரமான விசயநகரம் எனும் அம்பி, பல நாட்டவர் கூடும் பெரும் வணிக மையமாக விளங்கியது. இந்நகர வணிக வளாகங்களில் தங்கம், வெள்ளி முத்து, மாணிக்கம், வைடூரியம், இரத்தினம், பவளம் போன்ற நவரத்தினங்கள் விற்கப்பட்டது.[46] நாட்டின் செலாவனிக்கு முக்கியமாக தங்க நாணயம் வராகன் பயன்பட்டது.
பேரரசில் உள்ள கோயில்கள் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், திறன் மிகு கட்டிடக் கலைஞர்களுக்கும், சிற்பிகளுக்கும் மற்றும் உலோகத் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்தது.
அரபுக் கடலை ஒட்டிய மலபாரில் உள்ள கண்ணணூர் துறைமுகம் வழியாக அரேபியா, பாரசீகம், தென் ஆப்ரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது. பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் ஆகும். அரேபியக் குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவழம், குங்குமப்பூ, பாதரசம், சீனத்துப்பட்டு துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சியடைந்தது.
எண். | ஆட்சியாளர் பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
சங்க மரபு ஆட்சியாளர்கள்( 1336 to 1485 CE) | ||
1 | முதலாம் ஹரிஹரர் | 1336–1356 |
2 | முதலாவது புக்கா ராயன் | 1356–1377 |
3 | இரண்டாம் ஹரிஹர ராயன் | 1377–1404 |
4 | விருபாட்ச ராயன் | 1404–1405 |
5 | இரண்டாம் புக்க ராயன் | 1405–1406 |
6 | முதலாம் தேவ ராயன் | 1406–1422 |
7 | ராமச்சந்திர ராயன் | 1422 |
8 | வீரவிஜய புக்கா ராயன் | 1422–1424 |
9 | இரண்டாம் தேவ ராயன் | 1424–1446 |
10 | மல்லிகார்ஜுன ராயன் | 1446–1465 |
11 | இரண்டாம் விருபக்ஷ ராயன் | 1465–1485 |
12 | பிரௌத ராயன் | 1485 |
சாளுவ மரபு ஆட்சியாளர்கள் (1485 to 1505 CE) | ||
13 | சாளுவ நரசிம்ம தேவ ராயன் | 1485–1491 |
14 | திம்ம பூபாலன் | 1491 |
15 | இரண்டாம் நரசிம்ம ராயன் | 1491–1505 |
துளுவ மரபு ஆட்சியாளர்கள்(1491 to 1570 CE) | ||
16 | துளுவ நரச நாயக்கர் | 1491–1503 |
17 | வீரநரசிம்ம ராயன் | 1503–1509 |
18 | கிருஷ்ணதேவராயன் | 1509–1529 |
19 | அச்சுத தேவ ராயன் | 1529–1542 |
20 | சதாசிவ ராயன் | 1542–1570 |
அரவிடு மரபு ஆட்சியாளர்கள் (1542 to 1652 CE) | ||
21 | அலிய ராம ராயன் | 1542–1565 |
22 | திருமலை தேவ ராயன் | 1565–1572 |
23 | ஸ்ரீரங்க தேவ ராயன் | 1572–1586 |
24 | வெங்கடபதி ராயன் | 1586–1614 |
25 | இரண்டாம் ஸ்ரீரங்கா | 1614–1617 |
26 | ராம தேவ ராயன் | 1617–1632 |
27 | பேடா வெங்கட ராயன் | 1632–1642 |
28 | மூன்றாம் ஸ்ரீரங்கா | 1642–1646/1652 |
விசயநகரப் பேரரசில் இந்து சாதிய முறை கடுமையாகப் பின்பற்றப்பட்டது. அரச கட்டளைகளை நிறைவேற்ற, கிராமப்புறங்களில் ஒவ்வொரு சாதிக் குழுவினரும் தங்கள் தலைவரை தேர்ந்தெடுத்தனர். சமயச் சடங்குகளிலும், இலக்கியங்களிலும், அமைச்சரவைகளிலும் அந்தண சமூகம் உயரிடம் வகித்தது.[48] இருப்பினும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தோன்றிய சர்வக்ஞர், வேமனாமொல்லா, மொல்லா போன்ற சமய இலக்கியாவாதிகளும், கவிஞர்களும் சமூகத்தில் உயரிடத்தில் வைத்துப் போற்றப்பட்டனர். படைத்துறைகளில் இசுலாமியர் உள்ளிட்ட திறமை உள்ள அனைத்து சமூக இளைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
விசயநகரப் பேரரசில் உடன்கட்டை ஏறல்வழக்கம் இருந்தமைக்கு சான்றாக 50 நடு கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[49]
12ம் நூற்றாண்டில் பசவர் தோற்றுவித்த வீர சைவம் எனும் லிங்காயத மரபு தற்கால வட கருநாடகப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் பின்பற்றினர்.
சமூக - சமய நெறிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் பங்காற்றினர். திருமாலம்பா தேவி எனும் கன்னட மொழிக் கவிஞர் வரதம்பிகா பரிணயம் எனும் நூலையும், குமார கம்பணன் மனைவிகங்கதேவி எனும் அரசி மதுரா விசயம் எனும் சமசுகிருத வரலாற்று நூலையும் எழுதியுள்ளனர்.[50][51][52] அனைத்து ஊர்களிலும் தேவதாசி முறை நடைமுறையில் இருந்தது.[53] உடலை வளுப்படுத்தும் மல்யுத்தப் பயிற்சி கூடங்கள் சிறப்பாக நடைபெற்றது.
அம்பி (கர்நாடகம்), பெனுகொண்டா மற்றும் திருப்பதிலிருந்து தேவநாகரி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியிட்ட பேரரசின் நாணயங்களில் விசயநகரப் பேரரசர்களின் பெயர்கள் கொண்டிருந்தது.[54][55] தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் வராகன் மற்றும் காசு என அழைக்கப்பட்டது.[56] நாணயங்களில் பாலகிருட்டிணன், திருப்பதி வெங்கடாச்சலபதி, பூமாதேவி, சிறீதேவி, காளைகள், யானைகள், பறவைகள், அனுமன் மற்றும் கருடன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தது.[57][58]
இந்து சமயத்தினரான விசயநகரப் பேரரசு அனைத்து சமயங்களையும், சமயப் பிரிவுகளையும், அயல் நாட்டவர்களையும் வேறுபாடு காட்டாது சமமாக நடத்தியது.[59] ஆனால் அரசவை நடைமுறை மற்றும் ஆடைகளில் சுல்தான்களைக் பின்பற்றினர்.[60]
அரிகரர்-புக்கர் சகோதரர்களுக்கு பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யரையும், அவர் அலங்கரித்த அரிகர- சிருங்கேரி மடத்தை ஆதரித்து வளர்த்ததுடன், சைவத்தைப் பின்பற்றினர். பின் வந்த சாளுவ மரபு மற்றும் துளுவ மரபு பேரரசர்கள் வைணவத்தைப் பின்பற்றினர். பேரரசின் முத்திரையாக விட்டுணுவின் அவதாரமான வராகத்தைக் கொண்டனர்.
தற்கால கருநாடகப் பகுதிகளில் புரந்தரதாசர், கனகதாசர், அரிதாசர் போன்றவர்களால் பக்தி இயக்கம் வளர்ந்தது. பசவர் நிறுவிய லிங்காயதம் செழித்தோங்கியது. சமசுகிருத மொழியில் புதிய இலக்கியங்கள் தோன்றியது.
கருநாடக இசைக் அறிஞர் அன்னமாச்சாரியார் தெலுங்கு மொழியில் பல பக்தி கீர்த்தனைகள் இயற்றினார்.[61]
விசயநகரப் பேரரசின் அவையில் கன்னடம் மற்றும் தெலுங்கு ஆட்சி மொழியாக இருந்தது. பேரரசின் பகுதிகளில் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் பயிலப்பட்டது. கன்னட மொழியில் 7000 கல்வெட்டுகளும், 300 தாமிரப் பட்டயங்களும், மீதமுள்ள கல்வெட்டுகள் தெலுங்கு, தமிழ் மற்றும் சமசுகிருத மொழியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[62][63][64]
விசயநகரப் பேரரசில் தெலுங்கு, கன்னடம், சமசுகிருத மொழி இலக்கியங்கள் செழித்து வளர்ந்தது. கன்னடம் மற்றும் தெலுங்கு மொழியில் வாழ்க்கை வரலாறு, புனைவு, இசை, இலக்கணம், கவிதை, மருத்துவம் மற்றும் கணிதம் தொடர்பான நூல்கள் இயற்றப்பட்டது. அரசவை மொழியாக கன்னடமும், தெலுங்கும் இருந்தது. [65][66][67] கிருட்டிணதேவராயர் ஆட்சியில் அனத்து துறைகளிலும் தெலுங்கு மொழி உச்சத்தை தொட்டது.[66]
சமசுகிருத மொழியில் சாயனர் நான்கு வேதங்களுக்கும் விளக்க உரை எழுதினார்.[68][69] வித்யாரண்யர், அத்வைத சிந்தாந்தத்திற்கு விளக்க உரையாக பஞ்சதசி மற்றும் சர்வதர்சன சங்கிரகம் எனும் நூல்களை எழுதினார்.
பேரரசின் குடும்பத்தவர்களில் கிருட்டிணதேவராயர் ஆண்டாள் குறித்து ஆமுக்தமால்யதா மற்றும் சாம்பவதி கல்யாணம்[10] என இரண்டு தெலுங்கு நூல்களை இயற்றினார். மதுரை சுல்தானகத்தை வென்ற குமார கம்பணனைப் போற்றும் விதமாக, கங்கதேவி எனும் இளவரசி மதுரா விசயம் எனும் வீரகம்பராய சரித்திரம் நூலையும் இயற்றியுள்ளனர்.[70]
கிருட்டிணதேவராயரின் அரசவைக் கவிஞர்களான தெனாலி ராமன், அல்லாசானி பெத்தன்னா, நந்தி திம்மன்னா, அய்யல்லு இராமபத்ருடு, மடையாகரி மல்லன்னா, இராமராசாபூசணம் ஆகியோர் தெலுங்கு மொழியில் கவிதைகள் இயற்றினர். தமிழ் மொழியில் சொரூபானந்தர் மற்றும் தத்துவராயர் அத்வைத வேதாந்ததிற்கு விளக்க உரை நூல்கள் எழுதினார். மலையாள மொழியில் நீலகண்ட சோமயாச்சி வானவியல் குறித்தான நூல் எழுதியுள்ளார்.[71]
போசளர் மற்றும் திராவிடக் கட்டிடக்கலை கலந்து வடிக்கப்பட்ட விசயநகரக் கோயில்கள் பெரும்பாலும் உறுதியான சுற்று மதில்களால் சூழப்பட்டவை. இவை, மரம், செங்கல், சுண்ணாம்புச் சாந்து ஆகியவற்றைக் கொண்டு சோழர் பாணியில் அமைக்கப்பட்டன. கோபுரங்களில் தெய்வகள், முனிவர்கள், தேவதைகள் ஆகியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு அழகூட்டப்பட்டது. பேலூரில் உள்ள சென்னகேசவர் கோயில், திருவரங்கம், சிரீசைலம் ஆகிய இடங்களில் உள்ள இராய கோபுரங்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
மதில்களுக்குள் கருவறையைச் சுற்றிய கூரையிடப்பட்ட திருச்சுற்று, மகாமண்டபம் எனப்படும் தூண்களோடு கூடிய பெரிய மண்டபம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் திருக்குளம் என்பனவும் கோயில்களின் கூறுகள் ஆயின. தூண்களின் ஒரு புறத்தில், அவற்றோடு ஒட்டியபடி நிமிர்ந்த நிலையில் யாளிகள், முதுகில் வீரர்கள் இருக்க, இரண்டு கால்களில் பாய்ந்தபடி நிமிர்ந்து நிற்கும் குதிரைகள் ஆகியவற்றின் சிற்பங்கள் காணப்படுகின்றன. தூணின் மறு பக்கங்களில் இந்துப் பழங்கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.