இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
யது குலம் அல்லது யாதவ குலம் (Yadava), பண்டைய பாரத இதிகாச, புராணங்களின்படி, யயாதி மகனான யதுவின் வழித்தோன்றல்கள் ஆவார்.[1] யயாதி மன்னன் கோபத்தின் காரணமாக, தன் மூத்த மகன் யதுவும், அவனது வழித்தோன்றல்களும், இனி நாட்டை அரசாளும் உரிமையில்லாது போகக்கடவது எனக் கொடுத்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடுகள் மேய்த்து, பால், தயிர், வெண்ணெய் போன்ற பால் பொருட்களை உற்பத்தி செய்யும் யாதவர் குலம் தோன்றியது. யாதவர்கள் அனைவரும் இன்று வரை ஸ்ரீகிருஷ்ணரை தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். பின்னாட்களில் யாதவர்கள் மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் தெற்கு இந்தியாவிலும் சிறிதும் பெரிதுமான பகுதிகளை ஆண்டனர். [2] பண்டைய இந்தியாவிலும், மத்தியகால இந்தியாவிலும், தற்கால இந்தியாவிலும், ஆடு, மாடுகளை வளர்க்கும் பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்களை, கிருஷ்ணரின் யாதவ குலத்தின் வழி வந்தவர்கள் என கருதுகின்றனர்.[3][4]
புராணங்களில் குறித்த பல்வேறு யாதவ குலங்களிடையே ஹைஹேயேர்கள் எனும் குலத்தினர் மட்டும் தங்களை, யதுவின் மூத்த மகன் சகரஸ்ரஜித்தின் வழித்தோன்றல்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர்.[5] மற்ற அனைத்து யாதவ குலங்களான சேதி நாட்டவர்கள், விதர்ப்ப நாட்டவர்கள், அந்தகர்கள், குகுரர்கள், போஜர்கள் மற்றும் விருஷ்ணிகள் யதுவின் இளைய மகன் குரோஸ்துவின் வழித்தோன்றல்கள் என நம்புகின்றனர்.[6]
புராணங்களில் கூறியுள்ள, யாதவ குலங்களின் வரலாற்றின்படி, யாதவ குலங்கள் ஆரவல்லி மலைத்தொடர் பகுதிகள், குஜராத், நர்மதை ஆற்றின் சமவெளிப் பகுதிகள், வடக்கு தக்காணப் பகுதிகள், கிழக்கு கங்கைச் சமவெளி பகுதிகள் பரவி வாழ்ந்தனர். யாதவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு ஏற்ப, காலப்போக்கில் யாதவ குலத்தில் விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள், சேதிகள் என உட்பிரிவுகள் கிளைத்தன. மகத நாட்டின் அரசன் ஜராசந்தனின் அழுத்தத்தினால் யாதவர்கள் மதுராவை நீங்கி சௌராஷ்டிர பகுதியில் உள்ள துவாரகை நகரை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
பண்டைய யாதவ குலங்களில் ஒன்றான சேதிகள் ஆண்ட நாட்டை சேதி நாடு ஆகும். புராணங்களின்படி, குரோஸ்து யாதவ குலத்தின் குரோஷ்து கிளையில் வந்த விதர்பனின் பேரனும், கைஷிகனின் மகனுமான சேதி என்பவனின் மகனின் வழித்தோன்றல்களே சேதி நாட்டு யாதவர்கள்.[7]
புராணங்களின்படி, விதர்ப்பர்கள் குரோஷ்துவின் வழிதோன்றல்கள் ஆவார்.[6] ஸ்ரீகிருஷ்ணரின் மாமனாரும், ருக்மணி மற்றும் உருக்மியின் தந்தையும், தக்காணத்தின் விதர்ப்ப நாட்டு மன்னனும் ஆன பீஷ்மகன், யாதவ குலத்தின் உட்பிரிவை சேர்ந்தவர்.[8] வாயு புராணத்திலும், மச்ச புராணத்திலும், விதர்ப்ப யாதவ குலத்தினர், தென்னிந்தியாவின் தக்காணப் பகுதியினை சேர்ந்தவர்கள் எனக் கூறுகிறது.[9]
பாணினி எழுதிய சமசுகிருத இலக்கணமான அஷ்டாத்தியியில், (IV.1.114) யாதவ குலப் பிரிவான அந்தகர்கள் சத்திரிய கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்றும், அவர்கள் அரசமைத்து ஆண்டனர் எனக்கூறுகிறது.[10] மகாபாரத இதிகாசத்தின் துரோண பர்வத்தில் (141.15) , அந்தகர்களை விராத்தியர்கள் (சமயப்பற்றற்வர்கள்) என வகைப்படுத்துகிறது. புராணக் கதைகளின்படி, அந்தகர்கள், சத்வாதனின் பேரனும், அந்தகனின் மகனுமாகிய பஜாமனாவின் வழித்தோன்றல் எனக்கூறுகிறது.[6]
குருச்சேத்திரப் போரில், யாதவ அந்தக குலத் தலைவனான கிருதவர்மனின் தலைமையில் யாதவ குலத்தினரான அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் மற்றும் விருஷ்ணிகள் கௌரவர்கள் சார்பாக பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.[11] ஆனால் அதே பகுதியில் கிருதவர்மனை, மிருத்திகாவதி நாட்டின் போஜ குலத்தினன் என குறிப்பிட்டுள்ளது.[12]
ஐதரேய பிராம்மணம் பகுதி VIII.14 இன் படி, போஜர்கள் மத்திய இந்தியாவைச் சார்ந்தவர்கள் எனக் கூறுகிறது. விஷ்ணு புராணத்தில் (IV.13.1-61) போஜர்களை சத்வாதர்களின் கிளையினர் எனக் கூறுகிறது.[12] மேலும் தக்காணப் பகுதியில் உள்ள மிருத்திகாவதி நாட்டின் போஜர்களை, சத்வாதரின் மகன் மகாபோஜனின் வழித்தோன்றல்கள் எனக்கூறுகிறது.[13]மகாபாரதத்தின் படி யதுகுலத்தின் ஒரு பிரிவினரான போஜர்கள் ஆண்ட நிலப்பரப்பை குந்தி நாடு என்று குறிப்பிடுகிறது.
பாகவத புராணத்தின்படி யாதவ குலத்தின் ஒரு கிளையான குகுரர்கள் துவாரகை நகரைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் வாழ்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறது. வாயு புராணத்தின்படி, துவாரகையின் யது குல மன்னர் உக்கிரசேனர் குகுர குலத்தைச் சேர்ந்தவர் எனக்கூறுகிறத[14] புராணங்களின்படி, குகுர குல அரசன் அஹுகன் என்பவனுக்கு உக்கிரசேனர் மற்றும் தேவகன் என இரண்டு மகன்கள் இருந்தனர். உக்கிரசேனனுக்கு ஒன்பது மகன்களும், ஐந்து மகள்களும் பிறந்தவர். அவர்களில் கம்சன் மூத்தவன். தேவகனுக்கு நான்கு மகன்களும் ஏழு மகள்களும் பிற்ந்தனர். ஏழு மகள்களில் தேவகியும் ஒருத்தி. கம்சன் தன் தந்தையான உக்கிரசேனனை சிறை எடுத்து, மதுராவின் ஆட்சியை கைப்பற்றினான். பின்னாளில் ஸ்ரீகிருஷ்ணர், கம்சனை கொன்று மீண்டும்- உக்கிரசேன்னை மதுராவின் மன்னாக்கினான்.[15]
கௌதமி புத்திரனின் மகன் சதகர்ணி என்பவன் குகுரர்களை வென்றதாக நாசிக் குகை கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் ருத்திரதாமனின் ஜூனாகத் கல்வெட்டுகளில், தன்னால் வெல்லப்பட்டவர்களில் குகுரர்களையும் குறித்துள்ளான்.[14]
வேதத்தின் தைத்திரீய சம்ஹிதையிலும் (III.2.9.3), தைத்திரீயப் பிரமாணத்திலும் (III.10.9.15), சதபத பிரமாணத்திலும் (III.10.9.15), மற்றும் ஜெய்மினி உபநிடதப் பிரமாணத்திலும் (I.6.1) குறிப்பிடப்படும் குருவாக விளங்கிய கோபாலனை விருஷ்ணி குலத்தினன் எனக் குறிப்பிடுகிறது.[16]
சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் வகுத்த அறிஞர் பாணினி எழுதிய [அஷ்டாத்தாயி எனும் நூலில் (IV.1.114) விருஷ்ணிகளை சத்திரிய குல குறுநில மன்னர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.[10] ஆனால் மகாபாரத துரோண பர்வத்தில் (141.15) இந்திரனை வழிபட மறுத்தவர்கள் என்பதால், அந்தகர்களைப் போல, விருஷ்ணிகளையும் விராத்தியர்கள் எனக் குறிப்பிடுகிறது.
யதுவின் வழித்தோன்றல்களான விருஷ்ணிகளைப் போல குகுரர்கள், போஜர்கள், அந்தகர்களை சங்கம் வளர்த்து வாழ்ந்தவர்கள் என்றும், இச்சங்கத்திற்கு வசுதேவ கிருஷ்ணன் சிறப்புடையவன் என சாந்தி பருவம் 81.25இல் குறிப்பிடுகிறது. புராணங்களின்படி சத்வாதாவின் நான்கு மகன்களில் ஒருவன் விருஷ்ணி ஆவான். விருஷ்ணியின் பேரன் வசுதேவரின் மகன்களே ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் பலராமன் ஆவர்.
அரி வம்சப் புராணத்தின் படி (II.4.37-41) விருஷ்ணி குலத்தினர், நந்தகோபனுக்குப் பிறந்த விஷ்ணு துர்கையை வழிபட்டனர் என்று அதே புராணத்தில் (II.2.12) கூறப்பட்டுள்ளது.[17]மதுராவில் கண்டெடுத்த மோரா வெல் எனும் கல்வெட்டுகளின்படி, விருஷ்ணிகளில் சங்கர்ஷனர், வாசுதேவன், பிரத்தியுமனன், அனிருத்தன் மற்றும் சாம்பன் ஆகிய ஐவர் மாவீர்ர்களாக கருதப்பட்டனர்.[18]
விருஷ்ணிகளின் வெள்ளி நாணயம், தற்கால பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நாணயம் தற்போது இலண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.[19] பின்னாட்களில் விருஷ்ணிகளின் செப்பு நாணயங்கள், களிமண் முத்திரைகள் லூதியானா அருகே கண்டெடுக்கப்பட்டது.[20]
கம்சன் அவையில் அமைச்சராக இருந்த அக்ரூரர் விருஷ்ணி குலத்தினர் ஆவார். விருஷ்ணியின் கொள்ளுப் பேரன் ஆவார். யாதவர்களுக்கு வளம் தரும் சியாமந்தமணியை காப்பவர் ஆவார்.
பாகவத புராணம், உத்தவ கீதை மற்றும் மௌசலப் பருவத்தின் (7.185-253) படியும், குருச்சேத்திரப் போருக்குப் பின்னர் 35 ஆண்டுகள் கழித்து, சாம்பன் காரணமாக யாதவ குலத்திரனர்களுக்குள் கலவரம் மூண்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்துக் கொண்டார்கள். பின்னர் பிரபாச பட்டினத்தில் கிருஷ்ணர், ஒரு வேடுவனின் அம்பால் மாண்டார். பலராமர் தியானத்திலிருந்தவாறே மரணமடைந்தார். துவாரகை கடலில் மூழ்கியது. மீதமிருந்த யாதவர்கள் துவாரகைக்கு வடக்கே பஞ்சாப் நோக்கி பயணித்தனர். கிருதவர்மனின் மகன் மிருத்திகாவதி நாட்டிற்கு மன்னரானான். அருச்சுனனால் வழிநடத்தப்பட்ட யாதவர்கள் இந்திரப்பிரஸ்தம் அடைந்தனர்.[21]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.