உலோகம் From Wikipedia, the free encyclopedia
செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இத்தனிமம் செம்பு எனவும் தாமிரம் எனவும் வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு Cu ஆகும். இதன் அணு எண் 29 ஆகும். மிகவும் மென்மையானதாக, தகடாக அடிக்கக்கூடியதாகவும், கம்பியாக நீட்டக்கூடியதாகவும், மிகவும் உயர் வெப்பம் மற்றும் மின் கடத்துத்திறன் கொண்டதாகவும் தாமிரம் விளங்குகிறது. இந்த மாழையின் புத்தம்புதிய மேற்பரப்பு சிவந்த நிறத்தில் இருப்பதால் இதைச் செம்பொன் என்றும் அழைக்கிறார்கள். வெப்பம் மற்றும் மின்சாரத்தைக் கடத்தும் ஒரு கடத்தியாக மக்கள் தாமிரத்தைப் பயன்படுத்துகின்றனர். கட்டுமானப் பொருளாகவும் பல்வேறு கலப்புலோகங்களின் பகுதிப் பொருளாகவும், நாணயங்கள் தயாரிப்பிலும் வெப்ப மின்னிரட்டை போன்ற வெப்ப அளவீட்டுக் கருவிகள் தயாரிப்பிலும் தாமிரம் பயன்படுகிறது.
செப்பு | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
29Cu | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தோற்றம் | ||||||||||||||||||||||||||||||||||
சிவப்பு-ஆரஞ்சு உலோக மிளிர்வு செப்பு (~4 செமீ அளவு) | ||||||||||||||||||||||||||||||||||
பொதுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
பெயர், குறியீடு, எண் | செப்பு, Cu, 29 | |||||||||||||||||||||||||||||||||
உச்சரிப்பு | /ˈkɒpər/ | |||||||||||||||||||||||||||||||||
தனிம வகை | தாண்டல் உலோகம் | |||||||||||||||||||||||||||||||||
நெடுங்குழு, கிடை வரிசை, குழு | 11, 4, d | |||||||||||||||||||||||||||||||||
நியம அணு நிறை (அணுத்திணிவு) |
63.546(3) | |||||||||||||||||||||||||||||||||
இலத்திரன் அமைப்பு | [Ar] 3d10 4s1 2, 8, 18, 1 | |||||||||||||||||||||||||||||||||
வரலாறு | ||||||||||||||||||||||||||||||||||
கண்டுபிடிப்பு | மத்திய கிழக்கு நாடுகள் (கிமு 9ஆம் ஆயிரமாண்டு) | |||||||||||||||||||||||||||||||||
இயற்பியற் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
நிலை | திண்மம் | |||||||||||||||||||||||||||||||||
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) | 8.96 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் | 8.02 g·cm−3 | |||||||||||||||||||||||||||||||||
உருகுநிலை | 1357.77 K, 1084.62 °C, 1984.32 °F | |||||||||||||||||||||||||||||||||
கொதிநிலை | 2835 K, 2562 °C, 4643 °F | |||||||||||||||||||||||||||||||||
உருகலின் வெப்ப ஆற்றல் | 13.26 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் | 300.4 கி.யூல்·மோல்−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்பக் கொண்மை | 24.440 யூல்.மோல்−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஆவி அழுத்தம் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
அணுப் பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
ஒக்சியேற்ற நிலைகள் | −2, +1, +2, +3, +4 ((ஓரளவு கார ஆக்சைடு)) | |||||||||||||||||||||||||||||||||
மின்னெதிர்த்தன்மை | 1.90 (பாலிங் அளவையில்) | |||||||||||||||||||||||||||||||||
மின்மமாக்கும் ஆற்றல் (மேலும்) |
1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1 | |||||||||||||||||||||||||||||||||
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1 | ||||||||||||||||||||||||||||||||||
அணு ஆரம் | 128 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
பங்கீட்டு ஆரை | 132±4 pm | |||||||||||||||||||||||||||||||||
வான்டர் வாலின் ஆரை | 140 பிமீ | |||||||||||||||||||||||||||||||||
பிற பண்புகள் | ||||||||||||||||||||||||||||||||||
படிக அமைப்பு | face-centered cubic | |||||||||||||||||||||||||||||||||
காந்த சீரமைவு | காந்தவிலக்கம் | |||||||||||||||||||||||||||||||||
மின்கடத்துதிறன் | (20 °C) 16.78Ω·m | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப கடத்துத் திறன் | 401 W·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
வெப்ப விரிவு | (25 °C) 16.5 µm·m−1·K−1 | |||||||||||||||||||||||||||||||||
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) | (அ.வெ.) (annealed) 3810 மீ.செ−1 | |||||||||||||||||||||||||||||||||
யங் தகைமை | 110–128 GPa | |||||||||||||||||||||||||||||||||
நழுவு தகைமை | 48 GPa | |||||||||||||||||||||||||||||||||
பரும தகைமை | 140 GPa | |||||||||||||||||||||||||||||||||
பாய்சான் விகிதம் | 0.34 | |||||||||||||||||||||||||||||||||
மோவின் கெட்டிமை (Mohs hardness) |
3.0 | |||||||||||||||||||||||||||||||||
விக்கெர் கெட்டிமை | 343–369 MPa | |||||||||||||||||||||||||||||||||
பிரிநெல் கெட்டிமை | 235–878 MPa | |||||||||||||||||||||||||||||||||
CAS எண் | 7440-50-8 | |||||||||||||||||||||||||||||||||
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்) | ||||||||||||||||||||||||||||||||||
முதன்மைக் கட்டுரை: செப்பு இன் ஓரிடத்தான் | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
தாமிரம் இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது. தாதுவிலிருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியமேதுமில்லாமல் நேரடியாகவே இது கிடைக்கிறது. அதன் கனிமங்களிலிருந்தும் மிக எளிதாக இதைப் பிரித்தெடுக்க முடியும். இதனால் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். 3500 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரத்தைப் பயன்படுத்தி வெண்கலம் என்ற கலப்புலோகம் செய்யவும் மக்கள் அறிந்திருந்தனர்.[1]
உரோமானிய காலத்தில் தாமிரம் சைப்பிரசு எனப்படும் தீவுநாட்டில் வெட்டி எடுக்கப்பட்டது. சைப்பிரசின் உலோகம் என்ற பொருள் கொண்ட ஏயிசு சைப்பிரியம் என்ற சொல் பின்னாளில் குப்ரம் என்றானது. இதிலிருந்து காப்பர் என்ற ஆங்கில சொல்லும், கியுவர் என்ற பிரஞ்சு மொழி சொல்லும், கோபெர் என்ற டச்சு மொழி சொல்லும், குப்பெர் என்ற செருமானிய மொழி சொல்லும் உருவாகின.[2] பொதுவாக தாமிரம்(II) உப்புகள் பரவலாகக் கிடைக்கின்றன. அசுரைட்டு, மாலகைட்டு, டர்கியோயிசு போன்ற கனிமங்களில் நீலம் அல்லது பச்சை வண்ணங்களில் இவை காணப்படுகின்றன. வரலாற்றில் இவை நிறமிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளுக்கு கூரை வேயவும், இதன் ஆக்சைடுகள் பசுங்களிம்பாகவும் பயன்படுகின்றன. தனிமநிலை தாமிரம் சில வேளைகளில் அலங்கரிக்கும் கலைப் பொருளாகவும், இதன் சேர்மங்கள் நிறமிகளாகவும் , பாக்டீரியா தடுப்பிகளாகவும், பூஞ்சைக் கொல்லிகளாகவும், மரப்பாதுகாப்புப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. தாமிரம் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒரு தனிமம் ஆகும். ஏனெனில் உணவுப் பட்டியலில் உள்ள கனிமங்களில் தாமிரத்தின் சுவடுகள் இருப்பதால் இது அவசியமான கனிமமாகிறது. சுவாச நொதித் தொகுப்பான சைட்டோகுரோம் சி ஆக்சிடேச்சின் முக்கியமான பகுதிப்பொருள் தாமிரமாகும். மெல்லுடலிகளிலும், கணுக்காலிகளிலும் தாமிரம் ஏமோசயனின் என்ற இரத்த நிறமியின் பகுதிப்பொருளாக உள்ளது. மீன் மற்றும் முதுகெலும்பிகளில் உள்ள ஈமோகுளோபின் என்ற இரத்தநொதியிலுள்ள இரும்பு இங்கு தாமிரத்தால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களில் கல்லீரல், தசைகள், எலும்புகள் போன்றவற்றில் தாமிரம் காணப்படுகிறது [3]. நன்கு வளர்ச்சியடைந்த மனித உடலில் ஓர் கிலோகிராம் உடல் எடைக்கு 1.4 முதல் 2.1 மில்லி கிராம் வரை தாமிரம் காணப்படுகிறது [4]. அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும், உருசியாவில் சில இடங்களிலும், ஆத்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் செம்பு தனித்த வடிவில் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. குப்ரைட், மாலகைட்டு, அசுரைட், சால்கோ பைரைட்டு, டெனொரைட்டு, போர்னைட்டு போன்றவை சில முக்கியமான கனிமங்களாகும்.
தனிமவரிசை அட்டவனையின் 11 ஆவது தொகுதியில் தாமிரம், வெள்ளி, தங்கம் போன்ற தனிமங்கள் இடம்பெற்றுள்ளன. இம்மூன்று தனிமங்களும் ஒரு எசு ஆர்பிட்டால் எலக்ட்ரானுடன் டி எலக்ட்ரான் கூடு நிரப்பப்பட்ட மேல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. இவை கடினமானவை, தகடாக்கத்தக்கவை, கம்பியாக நீட்டப்படும் தன்மை உடையவை ஆகும். இந்த உலோகங்கள் மின்சாரம் மற்றும் வெப்பத்தை நன்கு கடத்தும். டி-கூடுகள் நிரம்பியுள்ள இத்தனிமங்கள் அணுக்களிடையிலான செயல்பாட்டிற்கு சிறிதளவே பங்களிக்கின்றன. இவற்றில் எசு- எலக்ட்ரான்கள் உலோகப்பிணைப்பு வழியாக ஆதிக்கம் செலுத்துகின்றன. டி-கூடுகள் நிரப்பப்படாத தனிமங்கள் போலன்றி, தாமிரத்தில் உள்ள உலோகப் பிணைப்புகளில் சகப்பிணைப்புத் தன்மை குறைவாகவும் ஒப்பீட்டளவில் வலிமை குறைந்தும் காணப்படுகின்றன. தாமிரத்தின் உயர் கம்பியாக நீளும் தன்மைக்கும் குறைவான கடினத்தன்மைக்கும் இதுவே காரணம் ஆகும்.[5] படிக அணிக்கோவையின் பரல் எல்லைகள், அழுத்தத்தின் கீழ் பொருட்களின் ஓட்டம் போன்ற பேரளவு அளவீடுகளில், நீட்டிக்கப்பட்ட குறைபாடுகளை அறிமுகப்படுத்தும் போது அதன் கடினத்தன்மை அதிகரிக்கும். இந்த காரணத்திற்காக, செப்பு வழக்கமாக நுண்பல்படிக வடிவத்தூளாக வினியோகிக்கப்படுகிறது. ஒற்றைப்படிகங்களை விட பல்படிக வடிவம் அதிக வலிமை கொண்டதாக உள்ளது.[6]
தாமிரத்தின் உயர் மின்கடத்துத் திறனையும் (59.6×106 வி/மீ), உயர் வெப்பக் கடத்துத் திறனையும் அதன் மென் தன்மை சிறிதளவு விளக்குகிறது. அறை வெப்பநிலையில், தூய உலோகங்கள் வெளிப்படுத்தும் இப்பண்பில் வெள்ளி உலோகம் முதலிடத்தையும் தாமிரம் இரண்டாம் இடத்தையும் பிடிக்கின்றன.[7] ஏனென்றால், அறை வெப்பநிலையில் எலக்ட்ரான் போக்குவரத்துக்கான எதிர்ப்பானது, அணிக்கோவையின் வெப்ப அதிர்வுகளால் எலக்ட்ரான்கள் சிதறல் அடைவதிலிருந்து உருவாகிறது. மென் உலோகங்களில் இவ்வெதிர்ப்பு பலவீனமாக இருக்கிறது.[5] திறந்த வெளியில் தாமிரத்தின் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட மின்னோட்ட அடர்த்தி குறுக்குவெட்டு பகுதியின் அளவில் தோராயமாக 3.1×106 A/m2 ஆகும். அதற்கு மேல் அது அதிகமாக வெப்பமடையத் துவங்குகிறது.[8] தாமிரத்தில் அதிகபட்சமாக அணுமதிக்கத்தகு மின்சார அடர்த்தி தோராயமாக அதன் குறுக்கு வெட்டுப் பரப்புக்கு 3.1×106 ஆ/மீ2 ஆகும். இதற்கும் அதிகமான அளவெனில் தாமிரம் சூடேற்றம் அடைகிறது.[9] சாம்பல் அல்லது வெள்ளி நிறம் தவிர வேறு சில இயற்கை நிறத்தில் காணப்படும் தனிமங்களில் ஒன்று தாமிரமாகும்.[9] தூயநிலையிலுள்ள தாமிரம் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் இருக்கும். காற்றில் படும்போது செந்நிறமாக மங்குகிறது. நிரம்பியுள்ள 3டி மற்றும் பாதியாக நிரம்பியுள்ள 4எசு அணுக்கூடுகள் இடையே நடைபெறும் எலக்ட்ரான் பரிமாற்றமே தாமிரத்தின் இத்தனித்துவ நிறத்திற்கான காரணமாகும். இவ்விரு கூடுகளுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடு ஆரஞ்சு நிற ஒளிக்கு காரணமாகிறது. தாமிரம் மற்ற உலோகங்களுடன் இணைக்கப்படும்போது கால்வானிக் அரித்தல் உண்டாகிறது.[10]
தாமிரம் தண்ணிருடன் வினைபுரிவதில்லை. ஆனால் வளிமண்டல ஆக்சிசனுடன் வினைபுரிந்து கரும்பழுப்பு நிறத்திலான தாமிர ஆக்சைடு அடுக்காக உருவாகிறது. ஈரக்காற்றில் இரும்பு துருப்பிடித்தலைப் போல அல்லாமல் இவ்வடுக்கு தாமிரம் மேலும் அரித்தலுக்கு உட்படாமல் பாதுகாக்கிறது. சுதந்திரச் சிலை[11] போன்ற பெரும்பாலும் பழமையான கட்டிடங்களின்[12] கூரைப் பகுதிகளில் தாமிரக் கார்பனேட்டின் பசுமை நிற அடுக்கு தாமிரப்பைந்துருவாக காணப்படுகிறது. மங்கிய தாமிரம் சில கந்தக சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அவற்றுடன் வினைபுரிந்து தாமிர சல்பைடுகளை உருவாக்குகிறது.[13]
தாமிரம் உலோகத்திற்கு 29 ஐசோடோப்புகள் உள்ளன. 63Cu மற்றும் 65Cu ஐசோடோப்புகள் நிலைப்புத்தன்மை கொண்டவையாகும். 63Cu ஐசோடோப்பில் தோராயமாக இயற்கையாகத் தோன்றும் தாமிரம் 69% அளவில் உள்ளது. இரண்டுமே 3⁄2. சுழற்சிகளைக் கொண்டவையாக உள்ளன.[14] மற்ற ஐசோடோப்புகள் யாவும் கதிரியக்கத்தன்மை கொண்டவை. இவற்றில் 67Cu ஐசோடோப்பு 61.83 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்டு அதிக நிலைப்புத்தன்மை கொண்ட ஐசோடோப்பாக உள்ளது. சிற்றுறுதி ஐசோடோப்புகளாக ஏழு ஐசோடோப்புகள் இனங்காணப்பட்டுள்ளன.[14] இவற்றில் 68mCu ஐசோடோப்பு 3.8 நிமிடங்கள் அளவிற்கு நீண்ட நேரம் நிலையாக இருந்துள்ளது. அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு அதிகமான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β− என்ற அலவுக்கு சிதைவடைகின்றன, அணுநிறை எண் 64 என்ற அளவுக்கு குறைவான அணுநிறையைக் கொண்ட ஐசோடோப்புகள் β+.அளவுக்கு சிதைவடைகின்றன. 12.7 மணி நேர அரைவாழ்வுக் காலம் கொண்ட ஐசோடோப்பு இவ்விரு முறைகளிலும் சிதைவடைகிறது.[15]
62Cu மற்றும் 64Cu ஐசோடோப்புகள் இரண்டும் குறிப்பிடத்தக்க பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. 62Cu-PTSM (தாமிர-பைருவால்டிகைடு-பிசு(என்4-மெத்தில்தயோசெமிகார்பசோன்) இல் பாசிட்ரான் உமிழ்வு கணிணிவழி வரைவியலுக்கான ஒரு கதிரியக்க சுவடறிவானாக 62Cu ஐசோடோப்பு பயன்படுத்தப்படுகிறது.[16]
பெரிய நட்சத்திரங்களில் தாமிரம் காணப்படுகிறது.[17] புவியின் மேலோட்டில் மில்லியனுக்கு 50 பகுதிகள் என்ற அளவில் தாமிரம் காணப்படுகிறது.[18] இயற்கையில் இது சால்கோபைரைட்டு, சால்கோசைட்டு என்ற தாமிர சல்பைடாகவும், அசூரைட்டு, மாலகைட்டு என்ற தாமிர கார்பனேட்டுகளாகவும், குப்ரைட்டு என்ற தாமிர(1) ஆக்சைடு சேர்மமாகவும் தாமிரம் காணப்படுகிறது.[7] அமெரிக்காவிலுள்ள மிச்சிகன்[18] மாநிலத்தில் உள்ள கீவீனாவ் தீபகற்பத்தில் 420 டன்கள் எடையுள்ள தனிமநிலை தாமிரம் 1857 இல் கண்டறியப்பட்டது. 4.4×3.2×3.2 செ.மீ அளவுள்ள மிகப்பெரிய ஒற்றைப் படிகத்துடன் பல்படிகமாக இயற்கைத்தாமிரம் விவரிக்கப்படுகிறது.[19]
அதிக அளவிலான தாமிரம் தாமிர சல்பைடுகளாக வெட்டியெடுக்கப்படுகிறது அல்லது பிரித்து எடுக்கப்படுகிறது. 0.4 முதல் 1.0% தாமிரத்தைக் கொண்ட கலவைப் பாறை படிவுகள் திறந்தவெளி பள்ளங்களில் இவை வெட்டப்படுகின்றன. சிலி நாட்டிலுள்ள சுகுயிகாமட்டா, அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள பிங்காம் கேன்யோன் சுரங்கம், புது மெக்சிகோவிலுள்ள எல் சினோ சுரங்கம் போன்ற தளங்களில் இம்முறையில் தாமிரம் கிடைக்கிறது. பிரித்தானிய நிலவியல் அளவைத் துறையின் 2005 ஆம் ஆண்டு கருத்துப்படி, தாமிர உற்பத்தியில் சிலி உலகின் மூன்றாவது பெரிய நாடாக திகழ்கிறது. அமெரிக்கா, இந்தோனேசியா மற்றும் பெரு[7] ஆகிய நாடுகளைத் தொடர்ந்து உலக மொத்த தாமிரத் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கை சிலி நாடு உற்பத்தி செய்கிறது. கள ஊடுறுவல் செயல்முறையிலும் தாமிரம் நிலத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அரிசோனா மாநிலத்தின் பல தளங்களில் இம்முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது.[20] பயன்பாட்டில் தாமிரத்தின் அளவு அதிகரித்து வந்தாலும், அனைத்து நாடுகளும் பயன்படுத்தக் கூடிய வகையில், உலக அளவிலான பயன்பாட்டை அனுமதிக்கும் அளவுக்கு தாமிரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.[21]
குறைந்த பட்சம் 10,000 ஆண்டுகளாக தாமிரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது, ஆனால் பயன்படுத்தப்பட்ட தாமிரத்தின் அளவில் 95% தாமிரம் 1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாதிக்கு மேலான தாமிரம் கடந்த 24 ஆண்டுகளில் வெட்டப்பட்டுள்ளது. பல இயற்கை வளங்களைப் போலவே, பூமியிலுள்ள செப்பின் அளவும் மொத்தத்தில் பரவலாக உள்ளது, பூமியின் மேற்பரப்பில் சில கிலோமீட்டருக்கு அடியில் 1014 டன் அளவுக்கும் அதிகமாக புதைந்துள்ளது. தற்போதைய வெட்டியெடுக்கும் விகிதத்தில் நோக்கினால் ஏராளமான மதிப்புள்ள தாமிரம் இருப்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[22] இருப்பினும், இந்த இருப்புக்களின் ஒரு சிறிய பகுதி மட்டுமே இன்றைய விலை மற்றும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார ரீதியாக வெட்டியெடுப்பது சாத்தியமாக உள்ளது. வளர்ச்சிக்கு ஏற்ப மேலும் 25 முதல் 60 ஆண்டுகளுக்கு வெட்டி எடுக்கும் அளவுக்கு தாமிரத்தின் இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மறுசுழற்சி முறையில் தாமிரம் தயாரிப்பது நவீன உலகில் ஒரு பெரும் மூலமாக கருதப்படுகிறது.[23] இவ்வகையான மற்றும் பிற காரணிகளின் காரணமாக, தாமிர உற்பத்தி மற்றும் விநியோகித்தல் என்பது விவாதத்திற்கு உட்படுகிறது. உச்ச எண்ணெய் தத்துவத்தை ஒத்த உச்ச தாமிரம் உள்ளிட்ட தத்துவமும் இவ்விவாதத்தில் இடம் பெறுகிறது. வரலாற்றில் தாமிரத்தின் விலை நிலையாக இல்லாமல் அவ்வப்போது மாறுபட்டு வருகிறது.[24][25][26]
தாதுக்களில் சராசரியாக தாமிரத்தின் அடர்த்தி 0.6% மட்டுமே ஆகும். பெரும்பாலான வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த தாமிரத் தாதுக்கள் சல்பைடுகளாகும். குறிப்பாக சால்கோபைரைட்டு (Cu2S) என்னும் தாது சல்பைடு தாதுவேயாகும்.[27] நன்றாகத் தூளாக்கப்பட்ட தாதுவிலிருந்து நுரைமிதப்பு முறை அல்லொஅது உயிரினப் பிரிப்பு முறைகளால் 10-15% தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது.[28] இம்முறையில் பிரிக்கப்பட்ட தாமிரத்துடன் சிலிக்காவைச் சேர்த்து சூடுபடுத்துகிறார்கள். சல்பைடுகளை ஆக்சைடுகளாக மாற்றுவதன் மூலம் இரும்பு மாசுக்கள் அகற்றப்படுகின்றன. மேற்புறத்தில் மிதக்கும் சிலிக்கா கசடும் நீக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் கலவையை வறுத்தல் மூலமாக அனைத்து சல்பைடுகளும் ஆக்சைடுகளாக மாற்றப்படுகின்றன:[27]
குப்ரசு ஆக்சைடு சூடுபடுத்தப்படுவதால் கொப்பள தாமிரமாக மாற்றப்படுகிறது.
இச்செயல்முறையில் ஆக்சைடாக மாற்றப்படாத சல்பைடு, இதில் உருவான ஆக்சைடைப் பயன்படுத்தி கந்தகம் முழுவதையும் ஆக்சைடாக மாற்றுகிறது. பின்னர் மின்னாற் பகுப்பு முறையில் தாமிரமாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாய்வை கொப்பள தாமிரத்தின் வழியாகச் செலுத்தும் போது ஆக்சிசன் முழுவதுமாக நீக்கப்பட்டு தூய்மையான தாமிரம் பெறப்படுகிறது:
Cu2+ + 2 e− → Cu.
தாமிரம் பிரித்தெடுத்தல் பாய்ம வரைபடம்
|
அலுமினியம் உலோகத்தைப் போலவே தாமிரத்தையும் மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்தலாம். இதுவரை தயாரிக்கப்பட்ட தாமிரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் தாமிரம் இன்றும் பயன்பாட்டில் உள்ளது.[29] சர்வதேச உலோக இருப்பு ஆதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, சமுதாயத்தில் பயன்படுத்தும் செப்பு அளவின் உலக தனிநபர் மதிப்பு 35-55 கிலோ ஆகும். இது மிகவும் வளர்ந்த நாடுகளில் குறைந்தது 140-300 கிலோவாகவும், அவ்வளவாக வளர்ச்சியடையாத நாடுகளில் ஒரு நபருக்கு 30-40 கிலோவாகவும் உள்ளது.
தாமிரத்தை பிரித்தெடுப்பதற்கு பயன்படுத்தப்படும் அதே முறைகளே மறுசுழற்சி செய்யவும் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்பட்ட உயர்-தூய்மையான தாமிர துண்டுகளை உலைகளில் இட்டு உருக்கி, பின்னர் கட்டிகளாகவும் பாளங்களாகவும் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட குறைந்த-தூய்மை தாமிரத்துகள்களை கந்தக அமிலக் குளியல் மூலம் மின்னாற்பகுப்பு செய்து சுத்திகரிக்கப்படுகிறது.[30]
முக்கிய பயன்பாடுகளுடன் கூடிய பல செப்பு உலோகக் கலவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. செம்பு மற்றும் துத்தநாகம் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவது பித்தளை என்ற உலோகக் கலவை ஆகும். வெண்கலம் பொதுவாக செப்பு-வெள்ளீயம் கலந்து உருவாக்கப்படும் உலோகக் கலவைகளை குறிக்கிறது, ஆனால், அலுமினிய வெண்கலம் போன்ற தாமிர உலோகக் கலவைகள் எதையும் வெண்கலம் என்றே கருதுகிறார்கள். வெள்ளி மற்றும் தங்க அணிகலன்கள் தயாரிப்பில் கடினத்தன்மையையும் உருகுநிலையையும் மாற்ற தாமிரம் ஒரு முக்கியமான பகுதிப் பொருளாக உள்ளது.[31] ஈயம் இல்லாத பற்றவைப்புகளில் வெள்ளீயத்துடன் தாமிரமும் வேறு சில உலோகங்களும் சேர்க்கப்பட்டு பயன்படுத்தப் படுவதுண்டு.[32] தாமிரமும் நிக்கலும் கலந்து தயாரிக்கப்படும் குப்ரோநிக்கல் உலோகக் கலவை நாணயங்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க நாணயங்கள் 75% தாமிரமும் 25% நிக்கலும் கலந்து தயாரிக்கப்படுகின்றன. 90% தாமிரமும் 10% நிக்கலும் கலந்த உலோகக் கலவை கடல்நீரால் உண்டாகும் அரித்தலை எதிர்க்கும் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.[33] 7% அலுமினியத்துடன் தாமிரம் சேர்த்து தயாரிக்கும் கலவை பொன் நிறத்துடன் அலங்காரங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[18] 4-10% தங்கம் கலக்கப்பட்டு உருவாக்கப்படும் உலோகக் கலவையை அடர் நீல அல்லது கருப்பு நிற பசுங்களிம்பாக சப்பானில் பயன்படுத்துகிறார்கள்.[34]
தாமிரம் பல்வேறு வகையான ஏராளமான சேர்மங்களை உருவாக்குகிறது, பொதுவாக ஆக்சிசனேற்ற நிலை எண் +1 மற்றும் +2 மதிப்புள்ள சேர்மங்களாக இவை உருவாகின்றன. இவற்றை முறையே குப்ரசு சேர்மங்கள் என்றும் குப்ரிக் சேர்மங்கள் என்றும் அழைக்கிறார்கள்.[35]
மற்ற தனிமங்களுடன் சேர்ந்து தாமிரம் இரண்டு தனிமங்கள் கொண்ட எளிய இரட்டை சேர்மங்களாக உருவாகிறது, ஆக்சைடுகள், சல்பைடுகள், ஆலைடுகள் என்பவை முதன்மையான உதாரணங்களாகும். ஆக்சைடுகளில் குப்ரசு ஆக்சைடுகள் மற்றும் குப்ரிக் ஆக்சைடுகள் இரண்டும் அறியப்படுகின்றன. பல்வேறு தாமிர சல்பைடுகளில் தாமிர(1) சல்பைடும் தாமிர(II) சல்பைடும் முக்கியமானவையாகும்.
குளோரின், புரோமின், அயோடின் தனிமங்களுடன் தாமிரம் சேர்ந்து உருவாகும் குப்ரசு ஆலைடுகள் அறியப்படுகின்றன. தாமிர(II) அயோடைடு தயாரிக்கும் முயற்சியில் தாமிர(I) அயோடைடும் அயோடைடும் மட்டுமே உருவாகின்றன.[35]
ஈனிகளுடன் சேர்ந்து தாமிரம் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. நீரிய கரைசல்களில் தாமிரம்(II) ஆனது, [Cu(H2O)6]2+ ஆகக் காணப்படுகிறது. விரைவான நீர் மாற்று விகிதத்தை (வேகமாக நீர் ஈனிகளை இணைத்தல் மற்றும் நீக்குதல்) இந்த அணைவுச் சேர்மம் வெளிப்படுத்துகிறது :
நீரிய அம்மோனியா அதே வீழ்படிவில் விளைகிறது. மேலும் அதிகமான அமோனியாவை சேர்த்ததன் பின்னர், டெட்ராமீன்தாமிரம்(II) உருவாகிறது Cu(H2O)4(OH)2 + 4 NH3 → [Cu(H2O)2(NH3)4]2+ + 2 H2O + 2 OH−, தாமிர(II) அசிட்டேட்டு, தாமிர(II) நைட்ரேட்டு, தாமிர(II) கார்பனேட்டு உள்ளிட்ட ஆக்சோ எதிர்மின் அயனி அணைவுச் சேர்மங்களும் உருவாகின்றன. தாமிர(II) சல்பேட்டு நீலநிற படிகங்களாக ஒரு ஐந்து நீரேற்றாக உருவாகிறது. ஆய்வகங்களில் அதிகமான அளவில் பயன்படுத்தப்படும் மயில்துத்தம் என்ற சேர்மம் இதுவாகும். இதைப் பயன்படுத்தி போர்டோக் கலவை எனப்படும் பூஞ்சைக் கொல்லி தயாரிக்கப்படுகிறது.[36]
.
ஒன்றுக்கு மேற்பட்ட ஆல்ககால் தொகுதிகளைக் கொண்டு ஆல்ககால்கள் (பல்லால்ககால்கள்) பொதுவாக குப்ரிக் உப்புகளுடன் வினைபுரிகின்றன. உதாரணமாக தாமிர உப்புகள் ஒடுக்கும் சர்க்கரைகளின் சோதனையில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பென்டிக்டு வினைபொருள் மற்றும் பெய்லிங்கு கரைசல் போன்றவை இச்சொதனையில் பயன்படுத்தப்படும் போது சர்க்கரையின் இருப்பு நிறமாற்றத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. நீலநிறமான Cu(II) சிவப்பு நிற தாமிர(I) ஆக்சைடாக மாறுகிறது.[37] எத்திலீன்டையமீனும் பிற அமீன்களும் சேர்ந்த இசுகீவர் வினைப்பொருளும் அதனுடன் தொடர்புடைய பிற அணைவுச் சேர்மங்களும் செல்லுலோசைக் கரைக்கின்றன.[38] அமினோ அமிலங்கள் தாமிர(II) உப்புகளுடன் சேர்ந்து மிகவும் நிலையான இடுக்கி இணைப்பு அணைவுச் சேர்மங்களைத் தருகின்றன. தாமிர அயனியின் இருப்பைக் காண பல ஈர வேதியியல் சோதனைகள் உள்ளன. உதாரணமாக பொட்டாசியம் பெர்ரோசயனைடுடன் தாமிர(II) உப்புகளுடன் சேர்கையில் பழுப்பு நிறமான வீழ்படிவு உருவாகிறது.
கார்பன்-தாமிரம் பிணைப்பு கொண்டுள்ள சேர்மங்கள் யாவும் கரிமத்தாமிர சேர்மங்கள் எனப்படும். இவை ஆக்சிசனுடன் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு தாமிர(I) ஆக்சைடை உருவாக்குகிறது. வேதியியலில் இச்சேர்மம் பல பயன்களைத் தருகிறது. தாமிர(I) சேர்மங்களை கிரிக்னார்டு வினைப்பொருள், விளிம்புநிலை ஆல்க்கைன்கள் அல்லது கரிம இலித்தியம் வினைப்பொருள்கள் சேர்த்து சூடுபடுத்துகையில் கரிமத்தாமிர சேர்மங்கள் உண்டாகின்றன;[39] அதிலும் குறிப்பாக இவ்வகை வினையில் கில்மான் வினைப்பொருள் உற்பத்தியாகிறது. இவை ஆல்க்கைல் ஆலைடுகளுடன் பதிலீட்டு வினைகளில் பங்கேற்கின்றன. இதனால் கரிமத் தொகுப்பு வினைகளில் கரிமத்தாமிரப் பொருள்கள் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன. தாமிர(I) அசிடிலைடு ஓர் உயர் அதிர்வு உணரியாகும். ஆனால் கேடியோட்டு-சோட்கிவிக்சு பிணைப்பு வினை,[40] சோனோகாசுகிரா பிணைப்பு வினைகளில்[41] இடைநிலையாக உள்ளது. மேலும் கரிமத்தாமிர சேர்மங்களைக் கொண்டு ஈனோன் கூட்டு வினைகள்,[42] கார்போதாமிர ஏற்றவினை[43] போன்றவற்றையும் அடைய முடிகிறது. ஆல்க்கீன்கள் மற்றும் கார்பன் ஓராக்சைடுகளுடன் அமீன் ஈனி முன்னிலையில் தாமிர(I) உப்புகள் வினைப்பட்டு பலவீனமான அணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன.[44]
தாமிரம்(III) பெரும்பாலும் ஆக்சைடுகளில் காணப்படுகிறது. நீலகருப்பு நிறத்தினாலான பொட்டாசியம் குப்ரேட்டு, KCuO2 திண்மம் ஒர் எளிய உதாரணமாகும்.[45] குப்ரேட்டு மீக்கடத்திகள், இட்ரியம்பேரியம்தாமிர ஆக்சைடு (YBa2Cu3O7) போன்றவை விரிவாக ஆராயப்பட்ட தாமிரம்(III) சேர்மங்களாகும். ஆக்சைடு போலவே புளோரைடும் உயர்கார எதிர்மின் அயனியாகும். இவை உலோகங்களை உயர் ஆக்சிசனேற்ற நிலைக்கு நிலைப்படுத்துகின்றன.[46] K3CuF6 மற்றும் Cs2CuF6, போன்ற தாமிர(III) மற்றும் தாமிர(IV) புளோரைடுகள் அறியப்படுகின்றன.[35]
சிலவகையான தாமிர புரோட்டீன்கள் ஆக்சோ அணைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. இவையும் தாமிர(III) சேர்மங்களாகும்.[47] டெட்ராபெப்டைடுகளுடன் தாமிர(III) உப்புகளின் செவ்வுதா நிற அணைவுச் சேர்மங்களை புரோட்டாஅன் நீக்க ஈனிகள் நிலைப்படுத்துகின்றன.[48] கரிமத்தாமிர வினைகளில் இடைநிலை விளைபொருளாகவும் தாமிர(III) உப்புகள் காணப்படுகின்றன.[49]
செப்புக் காலம் என்பது, மனித பண்பாட்டு வளர்ச்சியில், தொடக்ககால உலோகக் கருவிகள் தோன்றிய ஒரு கால கட்டம் ஆகும். செப்பு இயல்பாகவே இயற்கையில் தோன்றுகிறது, மிகப்பழமையான நாகரிகங்கள் சில செப்பை அறிந்திருந்ததாக பதிவுகள் வழியாக அறியப்படுகின்றன. வரலாற்றில், மத்திய கிழக்கில் பொ.ஊ.மு. 9000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே செம்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது [50]. வட ஈராக்கில் பொ.ஊ.மு. 8700 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு செப்புப் பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது [51]. தங்கம் மற்றும் இரும்பு மட்டுமே தாமிரம் உலோகத்திற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட உலோகங்கள் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன [52]. தாமிரத்தின் உலோகவியல் இங்கு தரப்பட்டுள்ள தொடர்ச்சி முறையைப் பின்பற்றுவதாகக் கருதப்படுகிறது: 1) இயற்கையான செப்பு, 2) பதனாற்றல் 3) உருக்கிப் பிரித்தல் 4) இழந்த-மெழுகு வார்ப்பு. தென்கிழக்கு அனடோலியாவில், இந்த நுட்பங்கள் அனைத்தும் புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் பொ.ஊ.மு. 7500 இல் இருந்ததாக அறியப்படுகின்றது [53]. ஆங்காங்கே விவசாயம் கண்டறியப்பட்டது போல தாமிரத்தை உருக்கிப் பிரித்தலும் ஆங்காங்கே தனிநபர்களால் கண்டறியப்பட்டது. அநேகமாக இக்கண்டுபிடிப்பு பொ.ஊ.மு. 2800 இல் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மத்திய அமெரிக்காவில் சுமார் பொ.ஊ.மு. 600 மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் பொ.ஊ.மு. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்திருக்கலாம். இழப்பு மெழுகு வார்ப்பு செயல்முறை பொ.ஊ.மு. 4500–4000 காலப்பகுதியில் தென்கிழக்கு ஆசியாவில் கண்டறியப்பட்டுள்ளது [50]. இங்கிலாந்தில் பொ.ஊ.மு. 2280- 1890 காலகட்டத்தில் தாமிரம் வெட்டி எடுக்கப்பட்டதாக கதிரியக்கக்கரிம காலக்கணிப்பு தெரிவிக்கிறது.[54] பொ.ஊ.மு. 3300–3200 கால இறந்த ஆண் உடலின் கையிலிருந்த கோடாலியின் முனையில் இருந்த வெட்டி 99.7% தூய்மையான தாமிரத்தால் செய்யப்பட்டிருந்தது. அவ்வுடலின் தலையிலிருந்து முடியில் அதிக அளவு ஆர்சனிக் கலந்திருப்பது அவன் செப்பை உருக்கிப் பிரித்தலில் ஈடுபட்டுள்ளான் என்பதையும் கூற முடிகிறது[55]. செப்பு உருக்குப் பிரித்தல் தொழில் நுட்ப அனுபவம் இதர தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் வழிவகுத்தது. இதனால் இரும்பு பிரித்தெடுத்தல் தொழில் நுட்பமும் கண்டறியப்பட்டது[55]. செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் பொ.ஊ.மு. 6000–3000 காலத்திலேயே கண்டறியப்பட்டிருக்கலாம்[56][57].
பொ.ஊ.மு. 5700-4500 காலகட்டம் விங்கா கலாச்சாரக் காலத்தை வெண்கலக் காலம் என்பர் [58][59].[60] சுமேரியர்களும் எகிப்தியர்களும் செப்பு, வெண்கலம் போன்றவற்றை பொ.ஊ.மு. 3000 ஆண்டிலேயே பயன்படுத்தியுள்ளனர் [61]. வெண்கலக் காலம், வரலாற்றுக்கு முந்திய சமூகங்களுக்கான முக்கால முறையில் இரண்டாவது காலகட்டமாக இருந்திருக்கலாம். இம் முக்காலங்களில் முதலாவது கற்காலத்திற்கும், மூன்றாவது இரும்புக் காலத்திற்கும் இடையில் இந்த வெண்கலக் காலம், புதிய கற்காலமாக வருகிறது. ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் இந்தியாவிலும் வேறு சில பகுதிகளிலும், வெண்கலக் காலம் இல்லாமலேயே புதிய கற்காலத்தை அடுத்து இரும்புக் காலம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. வெண்கலக் காலத்தில் உலோகவேலைத் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்ததாக அறியப்படுகிறது. செப்பு, தகரம் போன்றவற்றை, நிலத்துக்கு மேல் இயற்கையாகக் கிடைக்கும் அவற்றின் தாதுப் பொருட்களில் இருந்து பிரித்து எடுத்தனர். உரோமானியர்கள் காலத்தில் உருக்குதல், உலோகங்களைக் கலத்தல் முறையில் வெண்கலம் என்ற உலோகக் கலவை தயாரிக்கப்பட்டது [61].
கிரேக்கத்தில் செப்பு சால்கோசு (χαλκός) என்ற பெயரால் அறியப்பட்டது. உரோமர்கள், கிரேக்கர்கள் மற்றும் பிற பண்டைய மக்களுக்கு செப்பு ஒரு முக்கிய ஆதாரப் பொருளாக இருந்தது. உரோமானியக் காலங்களில், ஏயிசு சைப்ரியம் என்ற பெயரில் அவர்களால் அறியப்பட்டது, ஏயிசு என்ற சொல் செப்பு உலோகக்கலவைகளுக்கான பொதுவான இலத்தீன் வார்த்தையாகும், மற்றும் சிரியாவின் சைப்ரசில் இருந்து செப்பு வெட்டியெடுக்கப்பட்டது என்பதைக் குறிக்க சைப்ரியம் என்ற சொல்லும் சேர்ந்துள்ளது. நாளடைவில் இந்த சொற்றொடர் கப்ரம் என்று சுருங்கி எளிமையானது, எனவே ஆங்கிலத்தில் அஃப்ரோடைட் (உரோமில் வீனசு) என்ற சொல்லிலும், இதன் பளபளப்பான அழகு மற்றும் கண்ணாடியை உற்பத்தி செய்வதில் இதன் பழமையான பயன்பாடு காரணமாக இரசவாதத்திலும் செம்பு என்ற சொல் பயன்பாடு இருந்தது. பண்டைய காலங்களில் அறியப்பட்ட ஏழு பரலோக உடல்கள், பழங்காலத்தில் அறியப்பட்ட ஏழு உலோகங்களோடு தொடர்புபடுத்தப்பட்டன, வீனசு செம்புடன் தொடர்பு படுத்தப்பட்டது [62].
தாமிரம் முதன்முதலாக பண்டைய பிரிட்டனில் பொ.ஊ.மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. வட அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்கர்களால் தாமிர சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட ஆரம்பித்தன. 800 மற்றும் 1600 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழமையான கல் கருவிகளைக் கொண்டு இசுல் ராயல் என்ற தளத்திலிருந்து தாமிரம் பிரித்தெடுக்கப்பட்டுள்ளது [63]. தென் அமெரிக்காவில், குறிப்பாக பெருவில் தாமிரத் தொழில்நுட்பம் தழைத்திருந்தது. எனினும் 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் வரை இவ்வுலோகத்தின் வர்த்தக உற்பத்தி தொடங்கவில்லை.
செப்புகளின் கலாச்சார பங்களிப்பு குறிப்பாக நாணயப் பயன்பாட்டில் மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக இருந்தது. உரோமானியர்கள் பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டில் செப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தியுள்ளனர். முதலில் செப்பு மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அதன் வடிவம் மற்றும் தோற்றம் முக்கியத்துவம் பெற்றது. யூலியசு சீசர் வெண்கலத்தால் ஆன நாணயங்களை சொந்தமாக வைத்திருந்தார். அதே வேளையில் அகசுடசு சீசர் செப்பு. ஈயம், தகரம் ஆகியவற்றின் உலோகக்கலவையால் ஆன நாணயங்களைப் பயன்படுத்தினார். தொழிற்புரட்சிக்கு முன்னரே உரோமானியர்கள் ஆண்டுக்கு 15000 டன்கள் செப்பை உற்பத்தி செய்கின்ற அளவுக்கான நடவடிக்கைகளில் இசுபானியா, சைப்ரசு, மத்திய ஐரோப்பா பொன்ற நாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் [64][65]. பண்டைய இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவத்தில் அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிப்பில் தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பண்டைய எகிப்தியர்களும் காயங்களை ஆற்றவும், குடிநீர் அருந்தவும், தலைவலி, தீக்காயங்கள், சிகிச்சைக்காக தாமிரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
10 ஆம் நூற்றாண்டு முதல் 1992 வரை சுவீடனில் இருந்த ஒரு சுரங்கத்திலிருந்து தாமிரம் வெட்டியெடுக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் செப்பு நுகர்வுகளில் மூன்றில் இரண்டு பங்கை இச்சுரங்கம் அளித்தது. அந்த நேரத்தில் நடைபெற்ற பல போர்கள் பலவற்றிற்கும் இது நிதி உதவியை அளித்தது[66]. சுவீடன் நாட்டின் தேசியக் கருவூலமாக இச்சுரங்கம் கருதப்பட்டது. செப்பு பூசப்பட்ட நாணயங்கள் சுவீடனில் வழக்கில் இருந்தன[67].
கூரை வேய்வதற்கும்[12], நாணயமாகவும் டேகியுரியோவகை புகைப்பட நுட்பத்திலும் தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்கும், அமெரிக்காவின் சுதந்திர சிலை உருவாக்கத்திற்கும் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. கட்டிடக் கலையின் பல்வேறு அம்சங்களில் தாமிரம் பயன்படுத்தப்பட்டது. நீருக்கடியில் கப்பலைப் பாதுகாக்க தாமிர முலாம் பூசுதல் மற்றும் சூழுறையிடல் போன்ற முன்னோடித் திட்டங்களை பிரித்தானிய ஆட்சிக்குழு 18 ஆம் நூற்றாண்டில் செயல்படுத்தியது[68] 1876 இல் முதலாம் மின்முலாம் பூசும் தொழிற்சாலை செருமனியில் தோற்றுவிக்கப்பட்டது[69].. 1830 இல் செருமனி விஞ்ஞானியால் தூள் உலோகவியலும், 1949 இல் பின்லாந்தில் விரைவு உருக்கிப் பிரித்தல் செயல்முறையும் கண்டுபிடிக்கப்பட்டதால் தாமிர உற்பத்தியின் வேகம் மேலும் அதிகரித்தது[70]. நாடுகளிடை தாமிர ஏற்றுமதி நாடுகளின் கழகம் 1967 இல் உருவாக்கப்பட்டது. சிலி, பெரு, சாம்பியா, சாயிர் போன்ற நாடுகள் இதை தொடங்கின. தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடான அமெரிக்கா இக்கழகத்தில் உறுப்பினராக சேராத காரணத்தால் 1988 இல் கலைக்கப்பட்டது [71].
மின்சார கம்பியாக (60%), கூரை மற்றும் குழாயமைத்தல் (20%), மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் (15%). பித்தளை மற்றும் வெண்கல உலோகக் கலவையாக பயன்படுவது தாமிரத்தின் முக்கியப் பயன்பாடுகள் ஆகும். சமையல் பாத்திரங்கள், கொதிகலன்கள், நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவைகள் செய்யவும் செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது பெரும்பாலும் தாமிரம் தூயநிலை உலோகமாகவே பயன்படுத்தப்படுகிறது. கடினத்தன்மை மாற்றம் தேவைப்படும் நேரங்களில் மட்டும் கலப்புலோகமாக பயன்படுத்தப்படுகிறது. படகுகளின் அடிப்பகுதியைப் பாதுகாக்க தாமிரச் சாயம் பூசி பாதுகாக்கிறார்கள். உணவு கூட்டுப்பொருளாகவும் பூஞ்சைக் கொல்லியாகவும் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது [36][72].
செம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது. இதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. பிற தனிமங்களைக் காட்டிலும் தாமிரம் சிறந்த மின்கடத்தியாக தேர்வு செய்யப்பட்டு அனைத்து வகையான மின் விநியோகத்திற்குமான மின் கம்பிகளிலும் பயன்படுத்தப்படுகிறது [73]. தலைக்குமேல் வான்வழியாக செல்லும் மின்கம்பி, மின்சுற்றுகளுக்கு மட்டும்அலுமினியம் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன [74][75]. மாங்கனின், கான்சுடன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. மின்கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை [76]. 1960 களின் பிற்பகுதியிலிருந்து 1970 களின் பிற்பகுதி வரையிலான குறுகிய காலத்தில்,அமெரிக்க வீடுகளில் மின் விநியோகத்திற்கான செப்பு பயன்பாடு அலுமினியத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் அலுமினியப் பயன்பாட்டால் பல வீடுகளில் தீவிபத்துகள் ஏற்பட்டதால் மீண்டும் அவர்களும் செப்புக்கு திரும்பினர் [77][78].
செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' போன்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு ஆகும். செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும்.
ஒருங்கிணைந்த மின்சுற்றுகள், அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் போன்றவற்றில் அலுமினியத்திற்குப் பதிலாக தாமிரம் இதனுடைய மீக்கடத்துத்திறனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. வெப்ப ஈர்ப்பிகள் மற்றும் வெப்ப பரிமாற்றிகளும் தாமிரத்தின் மீக்குறை ஆற்றலிழப்பு பண்பினால் இதைப் பயன்படுத்துகின்றன. மின்காந்தங்கள், வெற்றிடக் குழாய்கள், நேர்மின் கதிர்க் குழாய்கள், நுண்ணலை அடுப்புகள் போன்ற கருவிகள் நுண்ணலைக் கதிவீச்சு தன்மைக்காக தாமிரத்தைப் பயன்படுத்துகின்றன[79].
தாமிரத்தின் உயர்ந்த கடத்துத்திறன் மின்சார மோட்டார்களின் செயல்திறனை அதிகரிக்கிறது [80]. அனைத்து உலகளாவிய மின்சார நுகர்வு மற்றும் 69% மின்சாரத்தில் பயன்படுத்தப்படும் மின்சக்தி அமைப்புகளும் மோட்டார்கள் மற்றும் மோட்டார் உந்துதல் அமைப்புகள் 43% -46% அளவிற்குப் பயன்படுத்துகின்றன [81]. மோட்டார் செயல்திறனை அதிகரிக்க ஆற்றல் சேமிப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு மின்மோட்டார்கள் வடிவமைக்கப்படுகின்றன [82][83]. தேசிய மின்சார உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்திறன் தரங்களைக் கண்காணிக்கிறது [84].
செம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) தகரமும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள், ஒருவழிச்செலுத்திகள் இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாசுபரசு வெண்கலம், துப்பாக்கி உலோகம் செருமானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயன்களுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது.
ஒரு நீடித்த, அரிப்பு எதிர்ப்பியாகவும், தட்பவெப்ப மேற்கூரைப் பூச்சாகவும் தாமிரம் ஒரு கட்டிடக்கலைப் பொருளாக பண்டைய காலங்களில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது [85][86][87][88]. தாழ்வாரம், கூரை, மழைப்பாதுகாப்பு, கோபுரங்கள், மற்றும் கதவுகள் போன்ற கட்டிடக்கலைப் பொருட்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செய்யப்பட்டு வந்துள்ளன.
உட்புற மற்றும் வெளிப்புற சுவர் உறைப்பூச்சு, கட்டிட விரிவாக்கம், இணைப்புகள், ரேடியோ அதிர்வெண் பாதுகாப்பு, மற்றும் கவர்ச்சிகரமான கைவேலைப்பாடுகள், குளியலறை சாதனங்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அலங்கார உட்புற பொருட்கள் ஆகியனவற்றை உள்ளடக்கி செப்புக் கட்டடக்கலை நவீன காலபகுதியில் விரிவடைந்தவண்ணம் உள்ளது. கட்டிடக் கலைப்பொருள், குறைந்த வெப்ப இயக்கம், இலேசான எடை, மின்னல் பாதுகாப்பு மற்றும் மறுசுழற்சி முதலானவை தாமிரத்தின் மற்ற முக்கிய நன்மைகள் ஆகும்.
இவ்வுலோகத்தின் தனித்துவமான பச்சைக்களிம்பு நிறம் நீண்ட காலமாக வடிவமைப்பாளர்களாலும்,கட்டிடக் கலை வல்லுநர்களாலும் விரும்பப்படுகின்றது. பசுக்களிம்பின் நீடித்துழைக்கும் அடுக்கு வளிமண்டல அரிப்பை மிகவும் எதிர்க்கும் தன்மையுடையது ஆகும். இதன் மூலம் இவ்வடுக்கு தொடர்ந்து உலோகத்தைப் பாதுகாக்கிறது[89][90][91]. கந்தகம் அடங்கிய அமில மழை போன்ற சுற்றுச்சூழல் நிலைமைகளைப் பொறுத்து தாமிரம் பல்வேறு அளவுகளில் கார்பனேட் மற்றும் சல்பேட் சேர்மங்களின் கலவையாகக் காணப்படுகிறது[92][93][94][95]. கட்டடக்கலைக்குரிய செப்பும் அதன் உலோகக் கலவைகளும் குறிப்பிட்ட ஒரு தோற்றம், நிறம், உணர்தல் ஆகியவற்றை எதிர்நோக்கியே தொடங்கப்பட்டு முடிவை எட்டுகின்றன. இம்முடிவுகள் பெரும்பாலும் இயந்திர மேற்பரப்பு சிகிச்சைகள், இரசாயன வண்ணம் மற்றும் இரசாயண பூச்சுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன[96]. தாமிரம் மிகச்சிறந்த பற்றவைத்தல் பண்புகளைப் பெற்றுள்ளது. வாயு உலோக வில்சுடர் பற்றவைப்பு சிறந்த முடிவுகளைத் தருவதாக தெரிவிக்கப்படுகிறது .[97]
பாக்டீரியா மற்றும் பல வகையான உயிரினங்கள் எதுவும் தாமிரத்தின் மீது வளர்வதில்லை. இந்த காரணத்திற்காகவே நீண்ட காலமாக கப்பல்களின் அடிப்புறத்தைப் பாதுகாப்பதற்காக தாமிரம் பயன்படுத்தப்படுகிறது. மீன்பிடி தொழிலில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் மீன்வலைகள் செய்யப் பயன்படுகின்றன [98].
தாமிரத்தின் கரைசல்கள் மரப்பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நுண்ணுயிர் பாதுகாப்புப் பொருள்களை உருவாக்குவதற்காக சில நூலிழை இழைகளுடன் தாமிரம் கலக்கப்படுகின்றது. சில இசைக்கருவிகளில் தாமிரத்தின் உலோகக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் முலாம் பூசுகையில் தாமிரம் ஒரு காரமாகப் பயன்படுத்தப்படுகிறது.
அருங்காட்சியகங்களில் ஈயம், வெள்ளி உலோகங்களுடன் சேர்த்து பரிசோதனையின் மூலம் குளோரைடு, சல்பைடு, ஆக்சைடு போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.
கோளவடிவ பாக்டீரியாவும், சூடோமோனாசு புளூரசன்சு என்ற குச்சிவடிவ பாக்டீரியாவும் திண்ம நிலையிலுள்ள தாமிரத்தை சயனைடு தாமிரமாக தரம் குறைக்கின்றன [99]. தாமிரம் கலந்துள்ள மண்ணில் சில வகை பூஞ்சைககள் வளர்கின்றன. இளம் பைன் மரங்களை தாமிர நச்சிலிருந்து சில வகைப் பூஞ்சைகள் காக்கின்றன [99]. தங்கம் தோண்டியெடுக்கப்படும் சுரங்கங்களில் உள்ள கரைசல்களில் ஆசுபெர்கில்லசு போன்ற பூஞ்சைகள் காணப்படுகின்றன. மேலும் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, துத்தநாகம் போன்ற தனிமங்களின் சயனோ அணைவுச் சேர்மங்களைக் இக்கரைசல் கொண்டுள்ளது. கன உலோகங்களை இப்பூஞ்சைகள் கரைத்துவிடுகின்றன [100].
உயிரியல் எலக்ட்ரான் போக்குவரத்திலும், ஆக்சிசன் போக்குவரத்திலும் தாமிரப் புரோட்டீன்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. தாமிரம் (I) வகை சேர்மங்களை தாமிரம்(II) வகை சேர்மங்களாக இவை இடைமாற்றுகின்றன [101][102][103] [104]. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிசனைத் தோற்றுவிப்பதன் மூலம் செப்புக்கான உயிரியல் பங்களிப்பு தொடங்குகிறது [105].
மைட்டோகாண்டிரியாவிலுள்ள சகல யூகாரியோட்டுகளின் காற்றுச் சுவாசத்திற்கு தாமிரம் அவசியமாகும். ஆக்சிசனேற்ற பாசுப்போரைலேற்ற வினையில் கடைசி புரதமான சைட்டோகுரோம் சி ஆக்சிடேசில் இது காணப்படுகிறது. இப்புரதம் ஆக்சிசனை தாமிரம் இரும்பு போன்ற தனிமங்களுடன் இணைக்க உதவுகிறது. மேலும் இப்புரதம் எட்டு எலக்ட்ரான்களை ஆக்சிசன் மூலக்கூற்றுக்கு இடம் மாற்றுகிறது. பல மிகை ஆக்சைடுகளில் காணப்படும் தாமிரம் அவை சிதைவடைவதற்கான வினையூக்கியாகச் செயல்படுகிறது. இச்சிதைவு வினையில் ஆக்சிசனும் ஐதரசன் பெராக்சைடும் உருவாகின்றன.
விலங்கினங்களுள் ஆக்டோபசு, கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஈமோசையனின் எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஈமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிசனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது . பொதுவாக நகைகள் செய்வதற்கு தாமிரம் பயன்படுத்தப்படுகிறது, செம்பு வளையல்கள் கீல்வாதம் அறிகுறிகளைத் தடுக்கின்றன என்று சில நாட்டுப்புற மருத்துவக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் இச்சிகிச்சையால் கீல்வாதம் குணமடைந்ததாக நிருபணம் ஏதும் ஆகவில்லை. மருத்துவக் குணம் எதுவும் தாமிரத்திற்கு இருப்பதாக மருத்துவத்துறையின் பரிந்துரைகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். தோலின் வழியாக தாமிரம் ஈர்க்கப்படுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஒருவேளை அவ்வாறு ஈர்க்கப்பட்டால் அது ஒரு நச்சு ஆக செயல்படும் [106].
தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்துக்கும் தாமிரம் இன்றியமையாத ஒரு கனிமமாக உள்ளது ஆனால் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் இதன் அவசியம் இருப்பதில்லை. மனித உடலில் அவன் உடல் எடைக்கு ஏற்ப கிலோவுக்கு 1.4 முதல் 2.1 மில்லி அளவு தாமிரம் காணப்படுகிறது [107]. மனிதக்குடலால் ஈர்க்கப்படும் தாமிரம் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது [108], கல்லீரல் செயல்முறைகளைத் தொடர்ந்து தாமிரம் பல்வேறு திசுக்களும் அனுப்பப்படுகிறது. தேவைக்கு அதிகமான தாமிரம் உடலில் இருந்தால் அது கல்லீரலை விட்டு வெளியேற்றப்படுகிறது [109][110].
செப்பு குறைபாடு காரணமாக இரத்த சோகை, எலும்பு அசாதாரண மாறுபாடுகள், மயக்கம், வளர்ச்சிக் குறைபாடு , தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள் மற்றும் குளுக்கோசு மற்றும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் அசாதாரணங்கள் ஆகியவவை உருவாகின்றன. வில்சன் நோய் காரணமாக உடல் திசுக்களில் தாமிரம் கூடுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.