பெனுகொண்டா
ஆந்திராவிலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
பெனுகொண்டா (Penukonda) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள ஓர் நகரம். இது அனந்தபூர் (அதிகாரப்பூர்வமாக: அனந்தபுரமு) நகரத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ளது.[1]
பெனுகொண்டா | |
---|---|
ஆள்கூறுகள்: 14.085°N 77.596°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | அனந்தபூர் |
அரசு | |
• வகை | ஊரக உள்ளாட்சி |
• நிர்வாகம் | கிராம ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.5 km2 (2.5 sq mi) |
ஏற்றம் | 769 m (2,523 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,382 |
• அடர்த்தி | 4,200/km2 (11,000/sq mi) |
இனம் | பெனுகொண்டவை |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | ஏபி 02 |
அருகிலுள்ள நகரம் | இந்துப்பூர் |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | பெனுகொண்டா |
மக்கள்தொகை
இந்தியாவின் தி இம்பீரியல் கெசட்டியரின்படி,[2] பெனுகொண்டா என்பது சென்னை மாகாணத்திலிருந்த அனந்தபூர் மாவட்டத்தின் ஒரு துணைப்பிரிவும், வட்டமுமாகும். இது 677 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட 96 கிராமங்களைக் கொண்டுள்ளது. 1901இல் இதன் மக்கள் தொகை 92,482 ஆக இருந்தது. 1891இல் 81,104 ஆக இருந்தது. பெனுகொண்டா 6,806 மக்கள்தொகை கொண்ட தலைமையகமாக இருந்தது. பெண்ணாறு இதன் மேற்குப் பகுதியிலும், சித்ராவதி ஆறு கிழக்கு எல்லையிலும் பாய்கிறது.
வரலாறு
இப்பகுதி வரலாற்றின் பல்வேறு புள்ளிகளில் போசளர்கள், சாளுக்கியர்கள், விஜயநகரப் பேரரசு, நவாப்கள், மராத்தியத் தலைவர் முராரி ராவ், திப்பு சுல்தான், ஆகியோரால் கட்டுப்படுத்தப்பட்டு, இறுதியில் ஐதராபாத் நிசாம் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்த பின்னர் பிரித்தானியர்கள் ஆட்சியின் கீழ் வந்தது [3] இது பல்வேறு மதங்களின் கலவையாகும். ஆனால் நகரமும் கோட்டையும் சைன மதத்தை கடைப்பிடித்த ஆரம்பகால போசள மன்னர்களால் நிறுவப்பட்டது.

கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு, விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி ராயலு ஆட்சியைப் பிடித்தார். அவர் ராய தளவாய் கோனேட்டி நாயுடுவை (கஸ்தூரி நாயுடுவின் மகன், அக்கப்ப நாயுடுவின் பேரன், சந்திரகிரியின் கனக நாயுடுவின் கொள்ளுப் பேரன்) பெனுகொண்டாவின் ஆளுநராக ஆக்கினார். மேலும் அவருக்கு மகா-ராஜா-ராஜா-ஸ்ரீ என்ற பட்டத்தை அளித்து, கோனேடி நாயுடுவின் திருமணத்தை கொண்டாடினார். கொனேட்டி நாயுடு பெனுகொண்டா, ராயதுர்கா , குண்டுர்பி கோட்டைகளை சுமார் 17 ஆண்டுகள் (கி.பி. 1635-1652) ஆண்டார். கோனேடி நாயுடுவின் ஆட்சிக்குப் பிறகு அவரது வழித்தோன்றல்களான ராய தளவாய் ஸ்ரீ வெங்கடபதி நாயுடு, பெத்த திம்மப்ப நாயுடு, வெங்கடபதி நாயுடு, கோனேட்டி நாயுடு, ராஜகோபால நாயுடு, திம்மப்ப நாயுடு ஆகியோர் இந்த பெனுகொண்டாவை ஆட்சி செய்தனர்.
சமணம்
பழங்கால சமண வரலாற்றைச் சேர்ந்த கோவில்களும் சமகால கோவில்களும் நிறைந்து காணப்படுவதால், இது சமணர்களுக்கு மிகவும் மரியாதைக்குரிய இடங்களில் ஒன்றாகும். தமிழ் சமண பாரம்பரியத்தில், இது தில்லி, கோலாப்பூர், ஜினா காஞ்சி , பெனுகொண்டா ஆகிய நான்கு சமணக் கற்றல் மையங்களில் (விதிஸ்தஹானா) ஒன்றாகக் கணக்கிடப்படுகிறது. [4] இங்கு ஒரே கல்லாலான பச்சை நிற பார்சுவநாதரின் சிலையுடன் புகழ்பெற்ற பச்சே பார்சுவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. [5] இங்குள்ள கல்வெட்டின் படி, இது கி.பி. 1359இல், மூல சங்க நந்திசங்கத்தின் பாலட்கார கானா, சரசுவதி கச்சா, கொண்டகுண்டன்வாயாவின் பிரிய ராஜகுரு மண்டலாச்சாரியார் மகாநந்தி சித்தாந்த தேவாவின் சீடரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது கி.பி 1359இல் நிறுவப்பட்ட ஒரு சமண பத்திரகாவின் இடமாக இருந்தது. பின்னர், இந்த இருக்கை அழிந்த காரணத்தால் உள்ளூர் சமணர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இருப்பினும் கோவில் நன்கு பாதுகாக்கப்படுகிறது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அஜித்நாத் கோயிலும் இங்கு அமைந்துள்ளது. அமரபுரத்தின் கவுடானகுண்டே குடும்பத்தினரால் புதுப்பிக்கப்பட்ட பிறகு, முனி 108 ஸ்ரீ அஜிதகீர்த்தி மஹராஜ் அவர்களால் பாதுகாக்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு அவர் சமாதி அடைந்த பிறகு, கோயில் மோசமான நிலையில் இருந்ததால், சமீபத்தில் தர்மஸ்தலா நிறுவனத்தால் புதுப்பிக்கப்பட்டது. [6]
கும்பகர்ணன் தோட்டம்
இங்கு 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கும்பகர்ணன் தோட்டத்தில் 142 அடி நீளமும் 32 அடி உயரமும் கொண்ட உறங்கும் கும்பகருணனின் பிரம்மாண்டமான சிலை உள்ளது. இராமாயணத்தில் இராவணனின் தோற்கடிக்க முடியாத சகோதரனின் கதையை சித்தரித்து, தூங்கிக்கொண்டிருக்கும் ராட்சதனை எழுப்ப முயற்சிக்கும் பல அசுரர்கள் காணப்படுகின்றனர். [7]
சட்டமன்றத் தொகுதி
பெனுகொண்டா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
- 1952 – எல்.என். ரெட்டி ( சுயேச்சை )
- 1955 – சிதம்பர ரெட்டி ( இந்திய தேசிய காங்கிரசு )
- 1962 – நரசிரெட்டி ( சுயேச்சை )
- 1967 – நாராயண ரெட்டி ( இந்திய தேசிய காங்கிரசு )
- 1972 – எஸ்.டி.நாராயண ரெட்டி ( இந்திய தேசிய காங்கிரசு )
- 1978 – ஜி. நாராயண ரெட்டி ( இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா))
- 1983 – எஸ். ராமச்சந்திர ரெட்டி ( தெலுங்கு தேசம் கட்சி )
- 1985 – எஸ். ராமச்சந்திர ரெட்டி ( தெலுங்கு தேசம் கட்சி )
- 1989 – எஸ். சென்னாரெட்டி ( இந்திய தேசிய காங்கிரஸ் )
- 1991 – எஸ்.வி. ரமண ரெட்டி ( இந்திய தேசிய காங்கிரஸ் )
- 1994 – பரிதலா ரவீந்திரன் ( தெலுங்கு தேசம் கட்சி )
- 1999 – பரிதலா ரவீந்திரன் ( தெலுங்கு தேசம் கட்சி )
- 2004 – பரிதலா ரவீந்திரன் ( தெலுங்கு தேசம் கட்சி )
- 2005 – பரிதலா சுனிதா ( தெலுங்கு தேசம் கட்சி )
- 2009 – பி.கே.பார்த்தசாரதி ( தெலுங்கு தேசம் கட்சி )
- 2014 – பி.கே.பார்த்தசாரதி ( தெலுங்கு தேசம் கட்சி )
- 2019 - மலகுண்ட்லா சங்கரநாராயணா ( ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி )
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.