From Wikipedia, the free encyclopedia
தென்னிந்திய வரலாறு (History of South India) இரும்புக் காலத்திலிருந்து (பொ.ஊ.மு. 1200 - பொ.ஊ.மு. 24), பொ.ஊ. 14ம் நூற்றாண்டு வரையிலான பாண்டியர், சோழர், சேரர், சாதவாகனர், சாளுக்கியர், இராஷ்டிரகூடர், பல்லவர், காக்கத்தியர், போசளர் காலத்திய பண்டைய தென்னிந்திய வரலாறு அறியப்படுகிறது.
The lead section of this article may need to be rewritten. (சூன் 2020) |
களப்பிரர்கள் (பொ.ஊ. 250–600) சேர, சோழ, பாண்டியர்களை வென்று தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
தென்னிந்திய அரச குலங்கள், தங்கள் பேரரசின் நிலவிரிவாக்கத்திற்கு ஒன்றுடன் ஒன்று எப்போதும் போரிட்டுக் கொண்டிருந்தாலும், வெளிநாட்டு, குறிப்பாக வடநாட்டு இசுலாமிய படைகளுடனும் எதிர்த்து நின்றது.
தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது.
பொ.ஊ. 16ம் நூற்றாண்டில், வணிக நோக்கில் தென்னிந்தியாவில் காலூன்றிய ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பெனிகள், தென்னிந்திய மன்னர்களின் ஒற்றுமையின்மைக் கண்டு, தென்னிந்தியாவைக் கைப்பற்ற தங்களுக்குள் போட்டியிட்டனர். இப்போட்டியில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி சென்னை மாகாணத்தை நிறுவினர். பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக் கொண்ட, தென்னிந்திய சுதேச சமஸ்தான மன்னர்கள், ஆங்கிலேயர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் செலுத்திக் கொண்டு தங்கள் பகுதிகளை ஆண்டனர். தென்னிந்தியாவின் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகள் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினர் ஆண்டனர்.
1947ல் இந்தியப் பிரிவினைக்கு பின்னர், தென்னிந்தியாவில் இருந்த ஐதராபாத் இராச்சியம், மைசூர் அரசு, திருவிதாங்கூர், கொச்சி இராச்சியம், புதுக்கோட்டை சமஸ்தானம் போன்ற சுதேச சமஸ்தானங்கள் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1956ல் மாநில மறுசீரமைப்புச் சட்டப்படி, தென்னிந்தியாவை, ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. 2014ல் தெலுங்கு மொழி பேசும் ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு, 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது.
பொ.ஊ.மு. 1200ல், துவக்க இரும்புக் காலத்திய தென்னிந்தியாவின் முக்கியத் தொல்லியல் களங்களாக தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூர் மற்றும் கர்நாடகாவின் ஹல்லூர் [1] விளங்கியது.[2]
பொ.ஊ.மு. 5ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கிடைத்த தமிழ்ப் பிராமி கல்வெட்டுகள் மூலம், பௌத்த சமயம் பரவியதை அறியமுடிகிறது.
பேரரசர் அசோகர் (பொ.ஊ.மு. 304 –232 ) ஆட்சியின் போது, தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய, வேளிர் குலங்கள் ஆண்டது.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டியர்கள் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 15ம் நூற்றாண்டு வரை ஆண்டனர். பாண்டியர்களின் துறைமுகமாக விளங்கிய கொற்கை, முன்னர் பாண்டியர்களின் பூர்விகமாக இருந்தது. பின்னர் மதுரைக்கு தலைநகரை மாற்றினர். சங்க இலக்கியங்கள் (பொ.ஊ.மு. 400 – பொ.ஊ. 300), கிரேக்கப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசுக் கால குறிப்புகளில் பாண்டியர்களைக் குறித்துள்ளது.
களப்பிரர்கள், பாண்டியர்களை வென்று பொ.ஊ. 250 முதல் 600 வரை ஆட்சி செய்தனர். பொ.ஊ. 9ம் நூற்றாண்டில், எழுச்சி கொண்ட சோழர்கள், பாண்டியர்களை வென்றனர். பொ.ஊ. 13ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல்லவர், சேரர் மற்றும் சிங்களவர்களுடன் கூட்டுச் சேர்ந்த பாண்டியர்கள், சோழர்களை வென்று, மீண்டும் மதுரையில் அரியணை ஏறினர். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (பொ.ஊ. 1251), தெலுங்கு பேசும் ஆந்திரப் பிரதேசம் மற்றும் இலங்கையின் வடபகுதிகளைக் கைப்பற்றினார். பாண்டியர்கள் தென்கிழக்கு ஆசியாவின் தற்கால சுமத்திரா தீவு எனப்படும் சிறீவிஜயம் பகுதிகளுடன் கடல் வணிகம் மேற்கொண்டனர். தில்லி சுல்தான்களுடன் பாண்டியர்கள் தொடர்ந்து பிணக்கு கொண்டிருந்தனர்.
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268–1308) மரணத்திற்கு பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும், வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட தில்லி சுல்தானியப் படைத்தலைவர் மாலிக் கபூர் பொ.ஊ. 1310ல் மதுரையை சூறையாடினார். பொ.ஊ. 1335ல் ஜலாலுதீன் ஆசன் கான் என்பவர் மதுரை சுல்தானகத்தை நிறுவினர். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் தில்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது.[3][3][4] பொ.ஊ. 1378ல் பின்னர் விஜயநகரப் பேரரசர் முதலாவது புக்கா ராயனின் மகன் இளவரசர் குமார கம்பணன், மதுரை சுல்தான்களை வென்று, மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.
பாண்டியர்கள் இலக்கியத்திலும், வணிகத்தில் தேர்ச்சி பெற்றவர்கள். முத்தெடுக்கும் தொழிலில் வல்லவர்கள். பாண்டிய நாட்டு முத்துக்கள், பண்டைய உலகின் பெருமை மிக்கதாகும்.
பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் முதல் அவனின் அடுத்த வந்த பாண்டியர் அனைவரும் தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர்.[5] பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும்.[6][7] வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு ஆகிய ஊர்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன. தென்காசிப் பாண்டியர்களில் கொல்லங்கொண்டான் என்பவனே பாண்டியர் வரலாற்றில் அறியப்படும் கடைசி பாண்டிய மன்னனாவான்.
சோழர்களில் கரிகால் சோழன் (பொ.ஊ. முதல் நூற்றாண்டு) சேர, பாண்டியர்களை வென்று பெரும் புகழ் பெற்றவன். சோழ நாடும், பொ.ஊ. 300 – 600 வரை களப்பிரர்கள் ஆட்சியில் சென்றது. பொ.ஊ. 850ல் விசயாலய சோழன் தஞ்சாவூரை வென்று, மீண்டும் சோழ வம்சத்தை நிலைநிறுத்தினான். இவரது மகன் ஆதித்த சோழன் (ஆட்சிக் காலம் பொ.ஊ. 871 – 907), பல்லவ மன்னன் அபாரசிதனை வென்று, தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி, சோழப் பேரரசை விரிவாக்கினார். முதலாம் இராஜராஜ சோழனின் (ஆட்சிக் காலம்: பொ.ஊ. 985 – 1014) கடற்படைகள், இலங்கையின் அனுராதபுரம், திருவனந்தபுரம், ஆந்திரத்தின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கலிங்க நாடு மற்றும் வங்காளப் பகுதிகளை வென்றதுடன், தென்கிழக்காசியாவின் மலேசியா, பர்மா, சுமத்திரா பகுதிகளைக் கைப்பற்றினார். இராசேந்திர சோழன் (ஆட்சிக் காலம்: பொ.ஊ. 1012–1044) தற்கால அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டினார். பாண்டியர்களின் தொடர் படையெடுப்பால் சோழப் பேரரசு பொ.ஊ. 1279ல் வீழ்ச்சி கண்டது.
தமிழர்களான சேரர்கள் தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளையும், தற்கால கொங்கு மண்டலத்தையும் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டு முதல், பொ.ஊ. 11ம் நூற்றாண்டு முடிய ஆண்டவர்கள். துவக்க கால சேர மன்னர்கள் தற்கால கேரளாவின் மலபார் கடற்கரை, தமிழ்நாட்டின் கொங்கு மண்டலப் பகுதிகளை ஆண்டனர்.
சேரர்கள் நறுமணப் பொருட்கள், யானைத் தந்தங்கள், மரங்கள், முத்துக்கள், நவரத்தினக்கற்களை, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், உரோம் மற்றும் கிரேக்கம் போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு முசிறித் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்தனர்.சங்க காலச் சேரர்களில் புகழ்பெற்றவர்கள், சேரன் செங்குட்டுவன் மற்றும் சிலப்பதிகாரம் இயற்றிய அவரது தம்பி இளங்கோவடிகள் ஆவர்.பிற்காலத்தில் சேர நாட்டில் தமிழ் மொழியுடன், சமசுகிருதம் அதிக அளவில் கலந்து பேசியதால், மலையாள மொழி உருவானது.
சாதவாகன வம்சத்தினர்,[8] தென்னிந்தியாவின் தற்கால கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கிந்தியாவின் மகாராட்டிரா மற்றும் குஜராத்தின் பகுதிகளை பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 200 முடிய ஆட்சி செய்தனர்.
மௌரியப் பேரரசில் சிற்றரசர்களாக இருந்த சாதவாகனர்கள், மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பின் தன்னாட்சியுடன் ஆண்டனர். இந்து சமயத்தை ஆதரித்தவர்கள். இந்தியப் பேரரசர்களின் முதன் முதலாக தங்கள் உருவங்கள் கொண்ட நாணயங்களை வெளியிட்டவர்கள் சாதவாகனர்கள் ஆவர். சாதவாகனர்கள் மேற்காசியா மற்றும் நடு ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்கள், யவனர்கள், பகலவர்கள் மற்றும் மேற்கு சத்ரபதிகளை வென்றனர். பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் சாதவாகனப் பேரரசு வீழ்ச்சியடைந்து பல சிற்றரசுகளாக மாறியது.
பொ.ஊ. மூன்றாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் அரசு அமைத்த பல்லவர்கள், பொ.ஊ. 9ம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம். பல்லவர்களின் தோற்றம் குறித்த ஆய்வு இன்னும் முடிவுறவில்லை.முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் மாமல்லபுரத்தில் புகழ்பெற்ற குடைவரைக் கோயில்களை வடித்தான். அவரது மகன் முதலாம் நரசிம்ம பல்லவன் (பொ.ஊ. 630 – 668), சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசியை வீழ்த்தி அவனது தலைநகரை வாதாபியை எரித்தார். தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளை, பொ.ஊ. 6 முதல் 9ம் நூற்றாண்டு முடிய, பல்லவர்களும்; பாண்டியர்களும் ஆண்டனர்.
கதம்பர் வம்சத்தை 345ஆம் ஆண்டில் தோற்றுவித்தவர் மயூரசர்மா ஆவார். கதம்பர்கள் பொ.ஊ. 345 முதல் 525 முடிய தற்கால வட கன்னட மாவட்டத்தின் வனவாசியை தலைநகராகக கொண்டவர்கள். முன்னர் இவர்கள் சாளுக்கியர், இராஷ்டிரகூடர் பேரரசின் கோவா, கங்கல் போன்ற பகுதிகளின் சிற்றரசர்களாக இருந்தனர். கதம்ப அரசனான காகுசுடவர்மன் காலத்தில் கர்நாடகத்தின் பெரும் நிலப்பரப்பை ஆண்டார். கதம்பர்கள் கன்னட மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள். தமிழ் மொழியிலிருந்து கன்னடம் ஒரு தனி மொழியாக வளர்ந்ததற்கு கதம்பர்கள் முக்கிய காரணமானவர்கள். கதம்பர்கள் சமணத்தையும் ஆதரித்து, பல சமணக்கோவில்களை நிறுவினர்கள்.
மேலைக் கங்கர்கள் முதலில் சாளுக்கியர் மற்றும் இராஷ்டிரகூடர் ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர். தற்கால கர்நாடகாவில் மேலைக்கங்கர்களின் ஆட்சி பொ.ஊ. 350 – 1000 வரை நீடித்தது. முதலில் கோலாரிலும் பின்னர் தலக்காட்டிலும் தங்கள் தலைநகரை அமைத்தார்கள். வாதாபி மேலைக்ச்சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்குப் பின் மேலைக் கங்கர்கள் தலையெடுத்தனர். மேலைக் கங்கர்களின் ஆட்சியில் தற்கால மைசூர், கோலார், மாண்டியா, பெங்களூர், தும்கூர், சாமராஜநகர் மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சரவணபெலகுளாவில் உள்ள சமண நினைவுச் சின்னங்கள்ம், மேலைக் கங்கர்கள் எழுப்பியதாகும்.
கீழைக் கங்கர் என்பவர்கள் கலிங்கத்தை ஆண்ட சோழ அரச மரபினர் ஆவர். மேலைக் கங்க அரசமரபிலிருந்து பிரிந்து சென்ற அனந்தவர்மன் சோட(ழ)கங்கன் [9] நிறுவிய மரபே கீழைக் கங்கர் அரச மரபு ஆகும். கீழைக் கங்கர்கள் தற்கால ஒடிசா முழுவதும் மற்றும் மேற்கு வங்காளம், சத்தீசுகர், ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள்) 11 நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆண்டவர்கள்.[10] இவர்களின் தலைநகர் கலிங்கநகராகும். கீழைக் கங்கர்கள் கொனார்க் சூரியன் கோயில் மற்றும் ஜெகன்நாதர் கோயிலைக் கட்டியவர்கள்.[11][12] பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நான்காம் பானுதேவா ஆட்சியின் (1414–34) போது இம்மரபு முடிவுக்கு வந்தது.[13]
சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் புலிகேசியின் (பொ.ஊ. 609 – 642) ஆட்சிக் காலத்தில், சாளுக்கியப் பேரரசு, தெற்கே பல்லவ நாட்டின் வடக்கு எல்லை வரை வரை நீண்டிருந்தது. புலிகேசி ஹர்சவர்தனரை நர்மதை நதிக்கரையில் தோற்கடித்தார். தென்கிழக்குத் தக்காணத்தில் விஷ்ணுகுண்டினர்களையும் தோற்கடித்தான். ஆனால் பல்லவன் நரசிம்மவர்மன், புலிகேசியை வீழ்த்தினார். புலிகேசியின் தலைநகரான வாதாபியை தீக்கிரைக் ஆக்கினார். சாளுக்கியரின் தலைநகரம் வாதாபி என்பதால் வாதாபி சாளுக்கியர் என்றும் அவர்கள் அழைக்கப்படுகின்றனர்.
சாளுக்கியப் பேரரசர் இரண்டாம் விக்கிரமாதித்தன், இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத் தோற்கடித்து அவன் தலைநகரமான காஞ்சியையும் கைப்பற்றினான். இராஷ்டிரகூடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து வாதாபிச் சாளுக்கியர் தாழ்ச்சியுற்றனர்.
பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் தைலப்பன் (பொ.ஊ. 973 – 997) காலத்தில் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர். இவர்கள் மேலைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். மேலைச் சாளுக்கியர், இன்று பசவகல்யாண் என அழைக்கப்படும் கல்யாணி என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இன்னொரு பிரிவினர், வேங்கி என்னுமிடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் கீழைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். கீழைச் சாளுக்கிய நாட்டின் கட்டுப்பாட்டுக்காக, மேலைச் சாளுக்கியருக்குச் சோழருடன் ஓயாத போட்டி இருந்துவந்தது. சுமார் 300 ஆண்டுகள் புகழுடன் விளங்கிய சாளுக்கியர், போசளர் மற்றும் யாதவர்களினால் ஒடுக்கப்பட்டனர்.
சாதவாகனர்களுக்குப் பின்னர் தோன்றியதும், குப்தப் பேரரசின் சமகாலத்திய வாகாடகப் பேரரசு, தென்னிந்தியாவின் தக்கானப் பகுதியில் கிபி 250 – 500 முடிய ஆட்சி செலுத்திய பிராமண அரச குலமாகும். விந்தியசக்தி என்பவர் பொ.ஊ. 250 – 270இல் இப்பேரரசை தோற்றுவித்தார். இப்பேரரசின் தலைநகரம் தற்கால மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள வாசிம் நகரம் ஆகும். இவர்களது ஆட்சியில் கலை, இலக்கியம் செழித்தது.[14][15] குப்த பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் வாகாடகர்களின் ஆதரவுடன் 4ஆம் நூற்றாண்டில் மேற்கு சத்திரபதிகளை வென்றார்.
விஷ்ணுகுந்தினப் பேரரசு தென்னிந்தியாவின் தக்காணப் பகுதிகளை, பொ.ஊ. 420 முதல் 624 முடிய ஆண்டது. இதனை பொ.ஊ. 420ல் நிறுவியவர் இந்திரவர்மன் ஆவார். இப்பேரரசு காலத்தில் தெலுங்கு, சமசுகிருதம் மொழி இலக்கியங்கள் வளர்ந்தன. பெஜவடா, உண்டவல்லி, பைரவகொண்டா குகைக் கோயில்கள் இப்பேரரசு காலத்தில் நிறுவப்பட்டது.
பொ.ஊ. 514இல் இப்பேரரசு சுருங்கி தெலுங்கானப் பகுதியை மட்டும் ஆண்டது. இப்பேரரசின் வீழ்ச்சியின் போது, கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கே இருந்த பகுதிகள் பல்லவர்களால் கைப்பற்றப்பட்டன.
சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசியால் விஷ்ணுகுந்தினப் பேரரசின் பிற பகுதிகள் கைப்பற்றப்பட்டு, பொ.ஊ. 624இல் விஷ்ணுகுந்தினப் பேரரசு வீழ்ச்சியுற்றது.
சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்குப் பின் வந்த இராஷ்டிரகூடர்கள், தற்கால கர்நாடகத்தின் குல்பர்காவின் மான்யகேதம் எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு, தற்கால கர்நாடகா, தெலங்கானா, மகாராட்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதிகளை பொ.ஊ. 735 முதல் 982 முடிய ஆண்டனர். இராஷ்டிரகூட மன்னர்களில் முதலாம் அமோகவர்சன் புகழுடன் விளங்கியவன். எல்லோரா, அஜந்தா குடைவரைக் கோயில்களை நிறுவியர்கள் இராஷ்டிரகூடர்கள் ஆவார். இவர்களது காலத்தில் கன்னட மொழி இலக்கியம் வளர்ச்சியடைந்தது. .
இராஷ்டிரகூடர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் பாதமி சாளுக்கியர்களின் வழித்தோன்றல்கள் மேலைச்சாளுக்கிய மன்னர் இரண்டாம் தைலப்பன் அரசை நிறுவி, பொ.ஊ. 973 முதல் 1195 முடிய ஆண்டனர். இவர்களது தலைநகரம் தற்கால வடக்கு கர்நாடகா மாநிலத்தின் பீதர் மாவட்டத்தின் பசவகல்யாணி நகரம் ஆகும். மேலைச்சாளுக்கியர்கள் வடக்கே குஜராத்திலிருந்து தெற்கே காவேரி ஆறு|காவேரி ஆறு]] உற்பத்தியாகும் இடம் வரை ஆண்டனர். மேலைச்சாளுக்கிய மன்னர்களில் புகழ்பெற்றவர் ஆறாம் விக்கிரமாதித்தன் (கிபி 1076–1126) ஆவார்.
மேலைச்சாளுக்கியர்களில் பங்காளிகளான கீழைச் சாளுக்கியர்கள், தற்கால ஆந்திரப் பிரதேசத்தை சோழர்களின் கீழ் பொ.ஊ. 624 – 118 வரை ஆண்டனர்.
சாளுக்கியப் பேரரசில் குறுநில மன்னர்களாக ஆண்ட போசாளர்கள், பின்னர் பேளூரைத் தலைநகராகக் கொண்டு பொ.ஊ. 1026 முதல் 1343 வரை, மூன்று நூற்றாண்டுகளா, தற்கால கர்நாடகா மாநிலாத்தின் பெரும் பகுதிகள் மற்றும் தற்கால ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளையும், தமிழ்நாட்டின் காவேரி ஆறு பாயும் பகுதிகளையும் ஆண்டனர்.
ஹோய்சாள பேரரசில் கோயில் கட்டிடக் கலையும், கன்னட இலக்கியமும், சமசுகிருத மொழி இலக்கியமும் செழித்து வளர்ந்தது. போசாள மன்னர்களில் புகழ்பெற்றவர்கள் விட்டுணுவர்தனன், இரண்டாம் வீர வல்லாளன் மற்றும் மூன்றாம் வீர வல்லாளன் ஆவார்.போசாள மன்னர்கள் ஹளேபீடு, பேளூர் மற்றும் சோமநாதபுரம், பெலவாடி, [[அமிர்தேஸ்வரர் கோயில், அமிர்தபுரம்|அமிர்தபுரம்] ஆகிய இடங்களில் விஷ்ணு மற்று சிவன் கோயில்களைக் கட்டினர்கள்.
தெலுங்கு மொழி பேசிய காக்கத்தியர்கள் பொ.ஊ. 1083ஆம் ஆண்டு முதல் 1323ஆம் ஆண்டு வரை தற்கால ஆந்திரப் பிரதேச பகுதிகளை ஆண்டவர்கள்.[16] இவர்களின் தலைநகரம் வாரங்கல் எனும் ஒருகல்லு ஆகும். துவக்கத்தில் காகத்தியர்கள் சமண மதத்தைப் பின்பற்றி, பின்னர் இந்து மதத்தின் பிரிவான சைவ சமயத்திற்கு மாறியவர்கள்.
காக்காத்தியாத்தியர்களில் பெரும் அரசரான கணபதிதேவர், தற்கால ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா மற்றும் தமிழ்நாட்டின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தார். கணபதிதேவாவுக்குப் பின்வந்த ருத்திரமாதேவி பொ.ஊ. 1259 முதல் 1295 வரை வாரங்கல்லை ஆண்ட காகதீய அரசியார் ஆவார். யாதவத் தலைவர் மகாதேவர், ருத்திரமாதேவியை எதிர்த்து தோல்வி அடைந்தார். 1295 - இல் ருத்திரமாதேவி காலமானபோது , அவரது பேரன் பிரதாபருத்திரன் முடிசூட்டிக் கொண்டார். பொ.ஊ. 1323ல் தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக்கின் படைகள், காக்காத்திய அரசை கைப்பற்றி, கப்பம் வசூலித்தான்[17][18][17][19][20]
பொ.ஊ. 1326 முதல் ஐம்பது ஆண்டுகள் ஆண்ட தெலுங்கானாவின் முசுனூரி நாயக்கர்கள், காகதீயர்களை வெற்றி கொண்டு, தில்லி சுல்தானகத்தின் பிடியிலிருந்து வாரங்கல்லை மீட்டனர்.[21]]] முசினூரி நாயக்க வம்சத்தின் காப்பையா நாயக்கர் (ஆட்சிக் காலம் 1333–1368) இசுலாமியர்களை வாரங்கல்லை விட்டு 1336 இல் வெளியேற்றினர். காப்பபைய நாயக்கர் தெலங்கானாவை 1368 வரை ஆட்சி செய்தார்.
ரெட்டிப் பேரரசு, பொ.ஊ. 1325 முதல் 1448 வரை தற்கால ஆந்திரப் பிரதேசத்தை ஆண்டனர்.[22][23][24]காக்கத்தியர் பேரரசில், ரெட்டி இன மக்கள் படைத் தலைவரகளாகவும், குறுநில மன்னர்களாகவும் இருந்தவர்கள். 1323இல் காக்காத்தியர்களின் வீழ்ச்சிக்குப் பின் புரோலய வேமா ரெட்டி என்பவர் ரெட்டிப் பேரரசை பொ.ஊ. 1325இல் நிறுவினார். தற்கால பிரகாசம் மாவட்டம், அத்தங்கி எனும் ஊரில் தற்காலிகமாக தலைநகரத்தை நிறுவினார். பின்னர் ராஜமுந்திரிக்கு மாற்றினார்.[25][26] ரெட்டிப் பேரரசு உச்சத்தில் இருந்தபோது, வடக்கில் ஒடிசாவின் கட்டக் முதல் தெற்கில் காஞ்சிபுரம் மற்றும் மேற்கில் ஸ்ரீசைலம் வரை விரிவு படுத்தப்பட்டது. ரெட்டிப் பேரரசர்கள் சைவம் மற்றும் வைணவ சமயங்களை ஆதரித்தனர்.
கிருஷ்ணதேவராயரால், கஜபதி பேரரசு வெற்றி கொள்ளப்பட்ட போது, ரெட்டிப் பேரரசும் வெற்றிக் கொள்ளப்பட்டது.[27][28]
காக்காத்தியர்களையும், போசாளர்களை வென்ற தில்லி சுல்தான் முகமது பின் துக்ளக் பொ.ஊ. 1347ல் தக்காணத்தில், பாமினி சுல்தானகத்தை நிறுவினார். பின்னர் பாமினி சுல்தானகம் பொ.ஊ. 1527ல் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமத்நகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பெரார் என ஐந்து சுல்தானங்களாகப் பிரிந்தது.
தக்காணத்து சுல்தானகங்களின் ஆட்சிப்பரப்பு, தக்காணத்து மேட்டுநிலப் பகுதியில் கிருஷ்ணா ஆறு மற்றும் விந்திய மலைத்தொடருக்கு இடையில் அமைந்திருந்தன.
தில்லி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின் பீஜாப்பூர், அகமத்நகர், பெரார் ஆகியன 1490 இலும் பிடார், 1492 இலும், கோல்கொண்டா 1512 இலும் விடுதலை பெற்ற தனி அரசுகளாயின. தக்காண சுல்தான்கள், பொ.ஊ. 1565 இல் விஜயநகரப் பேரரசை தலைக்கோட்டை சமரில் வீழ்த்தினர்.
1619 இல் பிடார் சுல்தானகம் பீஜாப்பூருடன் இணைக்கப்பட்டது. இந்த சுல்தானகங்களை பின்னர் முகலாயப் பேரரசு கைப்பற்றியது. 1596 இல் பெரார் அகமத்நகரில் இருந்து விடுவிக்கப்பட்டது. அகமத்நகர் 1616–1636 இடைப்பட்ட முற்றாகக் கைப்பற்றப்பட்டது. கொல்கொண்டா மற்றும் பிஜாப்பூர் ஆகியன அவுரங்கசீப்பினால் 1686-7 இல் கைப்பற்றப்பட்டன.
தென்னிந்தியாவை ஆண்ட விஜயநகரப் பேரரசு, பொ.ஊ. 1336ல் இந்து சமய குரு வித்யாரண்யர் வழிகாட்டுதலின் பேரில், பேசாளப பேரரசை வீழ்த்தி, முதலாம் ஹரிஹரர் மற்றும் முதலாம் புக்கராயர் ஆகியோரால் நிறுவப்பட்டது.[29][30][31][32]இதன் தலைநகரம் ஹம்பி ஆகும். ஹம்பியில் உள்ள விஜயநகரப் பேரரசின் கோயில்கள், கட்டிடக் கலைக்கு பெயர் பெற்றது.
விஜயநகரப் பேரரசை சங்கம மரபினர் (1336–1485), சாளுவ மரபினர் (1485–1505) மற்றும் துளுவ மரபினர் (1491–1570), அரவிடு மரபினர் (1542–1646) ஆட்சி செய்தனர்.
தென்னிந்திய பேரரசுகளில், விஜயநகரப் பேரரசு, வட இந்தியா இசுலாமிய முகலாயர்களின் தாக்குதல்களை முடியறிடித்து, தென்னிந்தியாவிற்கு அரண் ஆக விளங்கியது. முதலாம் புக்கராயரின் மகன் குமார கம்பணன், பொ.ஊ. 1362ல் வட தமிழகத்தை ஆண்ட சம்புவரையர்களை வென்றார். பின்னர் தஞ்சாவூர் பகுதிகளை வென்று, பொ.ஊ. 1378ல் மதுரை சுல்தானியர்களை வென்று, பாண்டிய அரச குலங்களை ஆட்சியில் அமர்த்தினார். இரண்டாம் தேவராயர் (பொ.ஊ. 1426-1446). கேரளத்தையும் இலங்கையையும் விஜயநகரப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். இப்பேரரசு பொ.ஊ. 1336 முதல் 1646 முடிய நீடித்ததாயினும், 1565ல் தக்காணத்துச் சுல்தான்களால் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இப் பேரரசு பெரிதும் வலுவிழந்தது.
விஜயநகரப் பேரரசின் மாகாணங்களை நிர்வகிக்க, தலைமைப் படைத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை நாயக்கர்கள் எனும் ஆளுநர்களை நியமித்தனர். 1646ல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், மதுரை, செஞ்சி, தஞ்சாவூர், மாகாண ஆளுநர்கள் தன்னாட்சியுடன் ஆளத்துவங்கினர். மேலும் மைசூர் இராச்சியம் தன்னாட்சியுடன் ஆளத்துவங்கியது. தஞ்சாவூரை ஆண்ட இரகுநாத நாயக்கர் (1600–1645), பொ.ஊ. 1620ல் டச்சு கிழக்கிந்திய கம்பெனியினருக்கு, தரங்கம்பாடியில் கோட்டை கட்டி வணிகம் செய்ய அனுமதி வழங்கினார். தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் புகழ்பெற்ற கோயில்களை சீரமைத்தனர்.
தில்லி முகலாயர் பேரரசை முடிவுகட்டிய மராத்தியப் பேரரசு அல்லது மராத்திய கூட்டமைப்பு தென்னிந்தியப் பகுதிகளை பொ.ஊ. 1674 முதல் 1818 முடிய ஆண்டது.[33] தஞ்சாவூர் மராத்திய அரசு, பொ.ஊ. 1674 முதல் 1855 முடிய தஞ்சாவூர், திருச்சி பகுதிகளை ஆட்சி செய்தது. 1799ல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக விளங்கியது. அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855ல் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
17ம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆங்கிலேய-மராட்டியப் போர்களில், பிரித்தானியர்கள், தென்னிந்தியாவில் பேஷ்வாக்கள் ஆண்ட தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றினர்.
18ம் நூற்றாண்டின் நடுவில், தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சிப்பரப்பை மேலும் விரிவாக்க, பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியினரும், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினரும், உள்நாட்டு மன்னர்களான மராத்திய பேஷ்வாக்கள், ஐதராபாத் நிசாம், மைசூரின் ஐதர் அலி, ஆற்காடு நவாப் ஆகியோருடன் கூட்டணி வைத்துக் கொண்டு, கர்நாடகப் போர்களிலும், ஆங்கிலேய-மைசூர்ப் போர்களிலும் ஒருவர் மீது ஒருவர் படைபலத்தை காட்டினர்.
போரின் முடிவில் தென்னிந்தியாவை ஆண்ட உள்ளூர் இராச்சியங்களான ஐதராபாத் இராச்சியம், மைசூர் இராச்சியம், திருவிதாங்கூர், கொச்சி இராச்சியம் மற்றும் புதுக்கோட்டை சமஸ்தானம், பங்கனப்பள்ளி இராச்சியம் மற்றும் குடகு இராச்சியம், பிரித்தானியர்களுக்கு கட்டுப்பட்ட, சுதேச சமஸ்தானங்களாக மாறியது.
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில், தென்னிந்தியாவின் சென்னை மாகாணத்தை, பிரித்தானியர்கள் நேரடியாக ஆண்டனர். பிரித்தானியர்கள் கொண்டு வந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஐதராபாத் இராச்சியம், மைசூர் அரசு, குடகு இராச்சியம், திருவிதாங்கூர்]], கொச்சி இராச்சியம், புதுக்கோட்டை சமஸ்தானம் போன்ற சுதேச சமஸ்தான அரசுகள், தங்களுக்கென தனி இராணுவம் வைத்துக் கொள்ளாது, ஆங்கிலேயர்களுக்கு அடங்கி, ஆண்டுதோறும் கப்பம் செலுத்தி தன்னாட்சியுடன் ஆண்டனர்.
ஊட்டி நகரம், சென்னை மாகாணத்தின் கோடைக்கால தலைநகரமாக விளங்கியது.[34] ஊட்டி அருகே உள்ள வெல்லிங்டன் இராணுவப் பயிற்சி நிலையத்தை அமைத்தனர். பிரித்தானிய இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமெண்டின் தலைமையகமாக வெல்லிங்டன் தற்போதும் உள்ளது.[35][36] சென்னை மாகாணத்தின் நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில், பிரித்தானியர்கள் முதன்முதலாக தேயிலை மற்றும் காபித் தோட்டங்களை பயிரிட்டனர். மேலும் நறுமணச் செடிகளான ஏலக்காய் தோட்டங்களை போடி மலைப் பகுதிகளில் பயிரிட்டனர். கரும்பு சாகுபடியின் பரப்பளவை விரிவாக்கினர்.
15 ஆகஸ்டு 1947ல் பிரித்தானிய இந்தியாவிலிருந்து விடுதலைப் பெற்று இந்தியா நாடு உருவானது. தென்னிந்தியாவின் ஐதராபாத் இராச்சியம், மைசூர் இராச்சியம், திருவிதாங்கூர், கொச்சி இராச்சியம், புதுக்கோட்டை சமஸ்தானம் போன்ற சுதேச சமஸ்தான மன்னராட்சிப் பகுதிகள் 1947 முதல் 1950 வரை படிப்படியாக இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. புதுக்கோட்டை சமஸ்தானம் மற்றும் பங்கனபள்ளி சமஸ்தானங்கள் சென்னை மாகாணத்துடனும், குடகு இராச்சியம் மற்றும் மைசூர் அரசுகள் இணைக்கப்பட்டு மைசூர் மாகாணமாகவும்; திருவிதாங்கூர் மற்றும் கொச்சி இராச்சியங்கள் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர் - கொச்சி மாகாணமாகவும்; ஐதராபாத் இராச்சியம், ஐதராபாத் மாகாணம் எனவும் எனப் பெயரிடப்பட்டது.
1956ல் இந்திய அரசு இயற்றிய மொழிவாரி மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, தென்னிந்தியாவில் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளை ஆந்திரப் பிரதேசம் எனும் புது மாநிலத்துடன் இணைத்தனர். கன்னட மொழி பேசும் பகுதிகள் மைசூர் மாநிலத்துடன் இணைத்தனர். மலையாளம் பேசும் பகுதிகள் கேரளா எனும் புதிய மாநிலத்துடன் இணைத்தனர்.
1968ல் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது. 1972ல் மைசூர் மாநிலத்தின் பெயரை கர்நாடகா எனப் பெயரிடப்பட்டது.
1961ல் போர்த்துகேய இந்தியாவின் பகுதியான கோவா இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது. பின்னர் 1987ல் கோவா தனி மாநிலமாக உயர்ந்தது. 1950ல் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியான புதுச்சேரி, இந்தியாவின் ஒன்றியப் பகுதியானது.
ஆந்திரப் பிரதேசத்தின் பழைய ஐதராபாத் இராச்சியத்தின் பகுதிகளைக் கொண்டு 2014ல் தெலங்கானா மாநிலம் உருவானது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.