ஐதராபாத் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத்து இராச்சியம் இந்தியாவின் தென்மத்திய பகுதியில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். 1798 முதல் 1948 வரை நிசாம் சந்ததியினரால் ஆளப்பட்டு வந்தது. இதன் தலைநகரம் ஐதராபாத்தாக இருந்தது.
ஐதராபாத் இராச்சியம் ریاست حیدرآباد హైదరాబాద్ రాష్ట్రం ಹೈದರಾಬಾದ್ ಪ್ರಾಂತ್ಯದ हैदराबाद राज्य | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1798–1948 | |||||||||||
![]() ஐதராபாத் (அடர் பச்சை) மற்றும் பீரார் மாகாணம் (இளம் பச்சை). | |||||||||||
நிலை | பிரித்தானிய இந்தியாவில் மன்னராட்சி (1803–1947) அங்கீகரிக்கப்படாத நாடு (1947–1948) | ||||||||||
தலைநகரம் | அவுரங்காபாத் 1724 முதல் 1763 வரை, ஐதராபாத் 1763 முதல் 1948 வரை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தக்கினி, மராத்தி, தெலுங்கு, பாரசீகம், கன்னடம் | ||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி (1798 – 1948) இந்திய ஒன்றியத்தின் மாகாணம் (1948–1950) இந்தியாவின் மாநிலம் (1950–1956) | ||||||||||
நிசாம் | |||||||||||
• 1720–48 | கமார்-உத்-தின் கான், (முதல்) | ||||||||||
• 1911–48 | ஓசுமான் அலி கான் (கடைசி) | ||||||||||
பிரதமர் | |||||||||||
• 1724–1730 | இவாசு கான் (முதல்) | ||||||||||
• 1947–1948 | மீர் லயிக் அலி (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1798 | ||||||||||
1946 | |||||||||||
18 செப்டம்பர் 1948 | |||||||||||
• பிரிவினை | 1 நவம்பர் 1956 | ||||||||||
பரப்பு | |||||||||||
215,339 km2 (83,143 sq mi) | |||||||||||
நாணயம் | ஐதராபாதி ரூபாய் | ||||||||||
|
தற்கால உசுபெக்கிசுத்தானின் சமர்கந்து பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் முகலாயப் பேரரசில் பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18-ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை ஐதராபாத் நிசாம் தோல்வியடையச் செய்து 1724-இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
முகலாய பேரரசு நலிவுற்று மராட்டியப் பேரரசு வலுவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.[1][2]
1817-ஆம் ஆண்டு வரை ஐதராபாத் இராச்சியம் தன்னாட்சியுடன் முடியாட்சியாக செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.[3][4][5] 1903-இல் ஐதராபாத் இராச்சியத்தின் பீரார் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் இணைக்கப்பட்டது.
1818-இல் ஐதராபாத்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழான சமஸ்தானமானது அந்நிறுவனத்திடம் துணைப்படைத் திட்டம் மூலமாக தனது வெளியுறவுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தது. 1903-இல் நாட்டின் பீரார் மாகாணப் பகுதியை இழந்தது; அந்த மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1947இல் இந்தியப் பிரிவினையின்போது இந்திய மன்னராட்சிகளிலேயே அப்போது ஐதராபாத் மன்னராட்சிதான் மிகப் பெரியதாக இருந்தது. அதன் பரப்பளவு 82,698 சதுர மைல்கள் (214,190 km2) ஆக இருந்தது. 16.34 மில்லியன் மக்கள் (1941 கணக்கெடுப்பு) வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் (85%) இந்துக்கள். ஐதராபாத்து மன்னராட்சிக்கு தனி படைத்துறை, வான்வழிச்சேவை, தொலைத்தொடர்பு அமைப்பு, தொடருந்து அமைப்பு, அஞ்சல்துறை, நாணயவியல் மற்றும் வானொலி சேவை அமைப்புக்கள் இருந்தன.
இந்தியாவுடன் இணைத்தல்
இந்தியப் பிரிவினையின் போது நாட்டின் பல்வேறு சமஸ்தானங்கள் இந்தியாவுடனோ, பாக்கித்தானுடனோ சேரும் வாய்ப்பை பிரித்தானிய அரசு வழங்கியது. நிசாம் ஐதராபாத்தை தனிநாடாக வைத்திருக்க விரும்பினார். ஆனால் இந்திய ஒன்றியத் தலைவர்கள் தங்கள் நாட்டுப் பகுதியின் மத்தியில் தனி நாடொன்று - அதிலும் தங்களுக்கு எதிரான - இருப்பதை விரும்பவில்லை. மற்ற 565 மன்னராட்சிகளில் பெரும்பாலானவை இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ இணைந்திருக்க விருப்பம் தெரிவித்தன. எனவே இந்திய அரசு ஐதராபாத்து பகுதியை தங்களுடன் இணைத்துக் கொள்ள, தேவையானால் கட்டாயமாக, விரும்பியது.
செப்டம்பர் 1948இல் அப்போதைய துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் போலோ நடவடிக்கை என்ற இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தியப் பாதுகாப்புப் படைகள் இராச்சியத்தினுள் நுழைந்து நிசாம் ஆட்சியை கைப்பற்றின.[6][7]
இந்தியப் படைகளால் கைப்பற்றப்படும்வரை ஏழு நிசாம்கள் ஐதராபாத்தை இரு நூற்றாண்டுகளுக்கு ஆண்டுள்ளனர். அசாஃப் ஜாஹி மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிடக்கலை, பண்பாடு, நகைகள் வடிவமைப்பு , உணவுக்கலை ஆகியவற்றை வளர்த்துள்ளனர். ஐதராபாத்து முசுலீம்களின் அடையாளமாக விளங்கும் பாரசீகக் கலை, பாரசீகக் கட்டிடக்கலை, மற்றும் பாரசீகப் பண்பாட்டை நிசாம்கள் அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்தனர். தங்கள் ஆட்சியில் மின்சாரத்தை அறிமுகப்படுத்தினர்; தொடருந்து சேவைகளை கொணர்ந்தனர்; சாலைகளை மேம்படுத்தினர். தொலைத்தொடர்பு, பாசன வசதிகள், ஏரிகள் ஆகிய கட்டமைப்புக்களை உருவாக்கினர். கடைசி நிசாம் அவரது பெரும் செல்வத்திற்காகவும் நகை சேமிப்புக்காகாவும் அறியப்படுகின்றார்; உலகின் மிகப் பெரும் செல்வந்தராக தனது ஆட்சியின் முடிவின்போது அவர் விளங்கினார்.[8] ஐதராபாத்திலுள்ள முதன்மையான பொதுக் கட்டிடங்களில் பல அவரது ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவையே. கல்வி, அறிவியலை பரப்புமுகமாக உசுமானியா பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.
தற்போது ஐதராபாத் இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகள் தெலங்காணா மற்றும் மகாராட்டிரா, கர்நாடகா மாநிலப் பகுதிகளில் உள்ளது.
இவற்றையும் காண்க
- ஐதராபாத்து (இந்தியா)
- ஐதராபாத் நிசாம்
- தெலுங்கானா மற்றும் ஔரங்காபாத் மண்டலம், முந்தைய ஐதராபாத்து இராச்சியத்திலிருந்த நிலப்பகுதிகள்
- போலோ நடவடிக்கை, ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை
- இந்திய மன்னராட்சி அரசுகளின் பட்டியல்
- சுதேச சமஸ்தானம்
- துணைப்படைத் திட்டம்
- சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தம்
- இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு
- 1956 மாநில மறுசீரமைப்புச் சட்டம்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.