மராட்டியப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
மராட்டியப் பேரரசு அல்லது மராத்தியப் பேரரசு (Maratha Empire) தற்போதைய இந்தியாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்தது. இதன் காலம் 1674 முதல் 1818 வரை. இந்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ் தெற்கு ஆசியாவின் பல பகுதிகள் 2.8 மில்லியன் சதுர கிமீ பரப்பளவிற்கு மேல் இருந்தன. சிவாஜியால் இந்தப் பேரரசு தோற்றுவிக்கப்பட்டது. முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் இறப்பை அடுத்து, பேரரசின் தளபதிகளான பேஷ்வாக்களால் விரிவாக்கப்பட்டது. 1761 இல் பானிப்பட் நகரில் ஆப்கானிய மன்னன் அகமது ஷா அப்தாலியுடன் இடம்பெற்ற மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோல்வியடைந்ததை அடுத்து, மராட்டிய பேரரசின் விரிவாக்கம் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் இப்பேரரசு மராத்திய நாடுகளின் கூட்டமைப்பாகப் பிரிந்தது. பின்னர் 1817 – 1818 ஆண்டில் நடந்த மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய கூட்டமைப்பு அரசுகள், பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியிடம் வீழ்ந்தது.
மராட்டியப் பேரரசு மராத்திய சாம்ராஜ்ஜியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1674–1820 | |||||||||
கொடி | |||||||||
![]() மராட்டிய சாம்ராஜ்ஜியம் 1760 மஞ்சள் நிறத்தில். | |||||||||
நிலை | கூட்டமைப்பு | ||||||||
தலைநகரம் | ராய்கட், பின்னர் புனே | ||||||||
பேசப்படும் மொழிகள் | மராத்தி | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
சத்ரபதி | |||||||||
• 1674-1680 | சிவாஜி | ||||||||
• 1681-1689 | சம்பாஜி | ||||||||
• 1689–1700 | சத்திரபதி இராஜாராம் | ||||||||
• 1700–1707 | தாராபாய் | ||||||||
• 1707–1747 | சாகுஜி | ||||||||
• 1747–1777 | இரண்டாம் இராஜாராம் | ||||||||
பேஷ்வா | |||||||||
வரலாறு | |||||||||
• நிறுவல் | ஏப்ரல் 21 1674 | ||||||||
• முடிவு | செப்டம்பர் 21 1820 | ||||||||
பரப்பு | |||||||||
2,800,000 km2 (1,100,000 sq mi) | |||||||||
மக்கள் தொகை | |||||||||
• 1700 | 150000000 | ||||||||
நாணயம் | ஹான், ரூபாய், பைசா, மோஹர் | ||||||||
|
வரலாறு
பதினேழாம் நூற்றாண்டில் மராத்தியர்கள் சிவாஜியின் தலைமையில் ஒன்று கூடி, தற்கால மகாராட்டிராவில் வலிமையான இந்துப் பேரரசை நிறுவ, தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி முகலாயர்களுடன் போரிட்டனர். ராய்கட் மலைக்கோட்டை மராத்திய அரசின் தலைநகராக விளங்கியது.
சிவாஜியின் மகன் சத்திரபதி சாகுஜி, அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பின்னர், தில்லி சிறைக்காவலிலிருந்து விடுபட்டு ராய்கட் வந்தார். அப்போது மராத்தியப் பேரரசை வழி நடத்தி கொண்டிருந்த அவரது சித்தி தாராபாயை நீக்கி விட்டு, தானே மராத்திய மன்னராக முடிசூட்டி௧் கொண்டு, பாலாஜி விஸ்வநாத்தை தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார்.[1]
பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் மற்றும் அவரது வழித்தோன்றல்கள் மராத்தியப் பேரரசின் வளர்ச்சிக்கு உதவ துணை நின்றனர். மராத்தியப் பேரரசு உச்சகட்டத்தில் இருந்த போது, தெற்கே தமிழ்நாடு முதல் வடக்கே தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் வரையும்,[2] [a]), கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் அந்தமான் வரையிலும், மேற்கே குஜராத் மற்றும் இராஜஸ்தான் வரையிலும் பரவியிருந்தது.[4]
1761இல் நடந்த மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் படைகள் துராணிப் பேரரசின் அகமது ஷா துரானியின் படைகளிடம் தோல்வியுற்றதால், மராத்தியப் பேரரசின் வளர்ச்சி அத்துடன் நிறைவடைந்தது. இப்போர் நடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் பேஷ்வா முதலாம் மாதவராவ், வட இந்தியாவில் மீண்டும் மராத்தியப் பேரரசை நிலைநிறுத்தினார்.
முதலாம் மாதவராவ் காலத்தில் பெரிய மராத்தியப் பேரரசை, சிறிதளவு தன்னாட்சியுடைய பகுதிகளாகப் பிரித்து வலிமைமிக்க படைத்தலைவர்களால் மராத்திய சிற்றரசுகள் எனும் பெயரில் ஆளப்பட்டது. மராத்திய பேரரசின் பரோடா இராச்சியத்தை கெயிக்வாட்களும், மால்வா மற்றும் இந்தூர் இராச்சியத்தை ஓல்கர் வம்சத்தவர்களும், குவாலியர் இராச்சியத்தை சிந்தியாக்களும், |நாக்பூரை போன்சலேக்களும், பவார் குலத்தினர் தார் இராச்சியம் மற்றும் தேவாஸ் இராச்சியங்களை ஆண்டனர்.
1775ல் புனேயில் நடந்த பேஷ்வாக்களின் வாரிசுரிமைப் போராட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினர் தலையிட்டதின் பேரில் நடந்த முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போரின் முடிவில் 17 மே 1782ல் ஆங்கிலேயர்களுக்கும், மராத்தியர்களுக்கும் ஏற்பட்ட சல்பாய் ஒப்பந்தப்படி, சால்செட்டி தீவு மற்றும் பரூச் துறைமுகநகரங்கள் மீண்டும் ஆங்கிலேயேர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டது.[5].[5][6]
இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பரப்பின் பெரும் பகுதிகளைக் கொண்டிருந்த மராத்தியப் பேரரசின் கடற்படைத்தலைவரான கனோஜி ஆங்கரே போர்த்துகேயர் மற்றும் ஆங்கிலேயர் கடற்படைக்கு எதிராக போரிட்டார்.[7] கடற்கரைப் பகுதிகளில் காவல் மேடைகள் அமைக்கப்பட்டு, பெரிய நீளமான பீரங்கித் தளங்கள் நிறுவப்பட்டது.
மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி மற்றும் முதலாம் மாதவராவின் மறைவிற்குப் பின்னர் மராத்தியப் பேரரசு, தேசஸ்த் பிராமண குல பேஷ்வாக்களின் தலைமையில் பல சிற்றரசுகளாக ஆளப்பட்டது.
சிவாஜியும் அவரது வழித்தோன்றல்களும்
சிவாஜி

போன்சலே எனும் சத்திரியக் குலத்தில் பிறந்த பேரரசர் சிவாஜி, தற்கால மகாராட்டிரா மாநிலத்தில் 1674ல் மராத்தியப் பேரரசை நிறுவினார். தக்கான சுல்தான் அடில் ஷாவிடமிருந்து மராத்தியப் பகுதிகளை விடுவித்து சுதந்திர இந்து மராத்திய நாட்டை நிறுவ உறுதி எடுத்துக் கொண்டார்.[8]).
மராத்தியப் பேரரசின் முதல் தலைநகராக ராய்கட் கோட்டை விளங்கியது.[9] சிவாஜி தன் இராச்சியத்தை காத்துக் கொள்ள தொடர்ந்து முகலாயப் பேரரசு மற்றும் தக்கான சுல்தான்களின் படைகளும் மோதிக் கொண்டே இருந்தார். 1674ல் சிவாஜிக்கு, சத்திரபதி பட்டத்துடன் மராத்தியப் பேரரசின் பேரரசராக மணிமுடி சூட்டப்பட்டது.
இந்தியத் துணைக்கண்டத்தின் புவிப்பரப்பில் 4.1% பகுதியை, மராத்தியப் பேரரசில் சிவாஜி கொண்டு வந்தார். சிவாஜியின் மறைவின் போது மராத்தியப் பேரரசில் 300 கோட்டைகளும், 40,000 குதிரைப்படை வீரர்களும், 50,000 தரைப்படை வீரர்களும் மற்றும் அரபுக்கடல் பகுதியில் கப்பற்படையும் இருந்தது.[10] சிவாஜியின் பேரன் சாகுஜியின் காலத்திலும், பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்திலும் மராத்தியப் பேரரசு, அனைத்துத் துறைகளில் முழு வளர்ச்சியடைந்த பேரரசாக விளங்கியது. [11]
சம்பாஜி
சிவாஜியின் இரண்டு மகன்கள் சம்பாஜி மற்றும் இராஜாராம் ஆவர். மூத்தவரான சம்பாஜி 1681ல் தன்னைத் தானே மராத்தியப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். சம்பாஜி கோவாவை ஆண்ட போர்ச்சுகீசீயர்கள் களையும், மைசூர் மன்னர் சிக்க தேவராச உடையாரையும் வென்று பேரரசின் எல்லைகளை விரிவாக்கினார்.
சம்பாஜி, இராசபுத்திரர்களுடன் இணைந்து போரில் பிஜப்பூர் மற்றும் கோல்கொண்டா போன்ற தக்காண சுல்தான்களை வென்றார்.
1689ல் அவுரங்கசீப்பின் படைத்தலைவர் முபாரக் கானால், சங்கமேஸ்வரர் எனுமிடத்தில் சில வீரர்களுடன் தங்கியிருந்த சம்பாஜியை, 1 பிப்ரவரி 1689ல் கைது செய்து, பகதூர்காட் எனுமிடத்தில் வைத்து 11 மார்ச் 1689ல் தூக்கிலிடப்பட்டார்.
இராஜாராம் மற்றும் தாராபாய்
சம்பாஜியின் மறைவிற்குப் பின்னர் அவரின் ஒன்று விட்ட தம்பியும், தாராபாயின் கணவனுமான சத்திரபதி இராஜாராம் மராத்தியப் பேரரசின் பேரரசராக பட்டம் சூட்டப்பட்டார். முகலாயர்கள் ராய்கட் கோட்டையைக் கைப்பற்றியதால், தமிழ்நாட்டின் செஞ்சிக் கோட்டையில் தங்கியவாறு, மராத்தியப் பேரரசை நிர்வகித்தார்.
பின்னர் முகலாயர்கள் கைப்பற்றிய கோட்டைகளை கொரில்லாத் தாக்குதல் மூலம் இராஜாராம் கைப்பற்றினார். 1697ல் இராஜராம் விடுத்த நட்புறவு உடன்படிக்கையை அவுரங்கசீப் ஏற்கவில்லை. 1700ல் இராஜாராம் சிங்காத் எனுமிடத்தில் மறைந்தார். இராஜாராமின் விதவை மனைவி தாராபாய், தன் சிறு மகன் இரண்டாம் சிவாஜியின் பெயரில் மராத்திய பேரரசை நிர்வகித்தார்.
சாகுஜி
1707ல் அவுரங்கசீப்பின் மரணித்திற்குப் பின் சம்பாஜியின் மகனும், சிவாஜியின் பேரனுமான சாகுஜியை, தில்லியின் புதிய முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் ஷா, சில நிபந்தனைகளின் கீழ், தில்லி சிறையிலிருந்து விடுவித்தார்.
தில்லி சிறையிலிருந்து மீண்டு வந்த சாகுஜி, தன் சித்தி தாராபாய் மற்றும் அவரது இரண்டாம் சிவாஜியையும் ஆட்சி அதிகாரத்திலிருந்து நீக்கி விட்டு, தன்னை மராத்தியப் பேரரசின் சத்திரபதியாக முடிசூட்டிக் கொண்டார். [12] மராத்தியப் பேரரசு நன்கு வளர்ச்சி கண்ட நிலையில், சில நிபந்தனைகளின் படி தில்லி சிறையில் இருந்த சாகுஜியின் தாய் 1719ல் விடுவிக்கப்பட்டார்.
பாலாஜி விஸ்வநாத் என்பவரை மராத்தியப் பேரரசர் சாகுஜி தனது முதலமைச்சராக நியமித்துக் கொண்டார்.[13] சாகுஜியின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் வரை விரிவாக்கம் பெற்றது.
மராத்திய பிரதம அமைச்சரும், தலைமைப் படைத்தலைவருமான பேஷ்வா பாஜிராவ், மேற்கு இந்தியப் பகுதிகளை வென்றார். பாஜிராவ் மற்றும் அவரது படைத்தலைவர்களான பேஷ்வா குலத்தின் கிளைக் குலங்களான பவார், ஹோல்கர், கெயிக்வாட் மற்றும் சிந்தியா குலத்தினர் ஆகியோர் இந்தூர், குவாலியர், பரோடா பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர்.
பேஷ்வாக்களின் காலம்
மராத்திய பேரரசின் படைத்துறைகளை நிர்வகித்த சித்பவன் பட் பிராமண குலத்தை சேர்ந்த பேஷ்வாக்கள், பின்னாளில் சாகுஜியின் காலத்திற்குப் பின்னர் மராத்தியப் பேரரசர்ககளை கைப்பாவையாக வைத்துக் கொண்டு ஆட்சி நிர்வாகத்தை நேரடியாக நடத்தினர. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தியப் பேரரசு, இந்தியத் துணைக்கண்டத்தில் பெரும் பகுதிகளை கைப்பற்றி செல்வாக்குடன் விளங்கியது.
பாலாஜி விஸ்வநாத்

1713ல் மராத்திய பேரரசர் சாகுஜி, பாலாஜி விஸ்வநாத்தை பேஷ்வா ஆக நியமித்தார்.[13]
- கனோஜி ஆங்கரேவுடன், பேஷ்வா பாலாஜி விஸ்வநாத் லோணாவ்ளா எனுமிடத்தில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டு, கனோஜி ஆங்கரேவை மராத்தியப் பேரரசின் தலைமைக் கப்பற்படைத் தலைவராக நியமித்தார்.
- பாலாஜி விஸ்வநாத் தலைமையில் 1719ல் மராத்தியப் படைகள், சையத் ஹுசைன் அலியுடன், தில்லி நோக்கிப் படையெடுத்து, முகலாயப் பேரரசை அடியோடு அகற்றினர்.[14]
முதலாம் பாஜிராவ்

1720ல் பாலாஜி விஸ்வநாத் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் பாஜிராவ் மராத்தியப் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சாகுஜி நியமித்தார். பாஜிராவ் 1720-1740 வரை மராத்தியப் பேரரசை புதிய இந்தியப் பகுதிகளில் 3 முதல் 30% வரை விரிவாக்கம் செய்தார். ஏப்ரல் 1740ல் மறைந்த பாஜிராவ், தனது இறப்பிற்கு முன்னர் 41 போர்க்களங்களைக் கண்டவர். எப்போர்களத்திலும் தோல்வியை கண்டிராதவர்.[15]
- நாசிக் நகரத்தின் அருகே பால்க்கேத் எனுமிடத்தில் ஐதராபாத் நிஜாமிற்கும், பாஜிராவுக்கும் இடையே 28 பிப்ரவரி 1728ல் நடைபெற்ற போரில் மராத்தியப் படைகள் நிஜாமின் படைகளை வென்றது. இப்போர் மராத்தியர்களின் போர்த் தந்திரங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.[16]
- முதலாம் பாஜிராவ் தலைமையில் 1737ல் நடைபெற்ற தில்லிப் போரில், மராத்தியப் பேரரசின் படைகள் தில்லியின் நகர்புறங்களில் மின்னலடி தாக்குதல்கள் நடத்தியது.[17][18]
- போபால் போரில் மராத்தியர்களிடம் இழந்த ஐதராபாத் பகுதிகளை, முகலாயர்களின் உதவியுடன் மீண்டும் சுல்தான் நிஜாம் மீட்டார்.[18][19] பின்னர் முகலாயர்களை வென்ற மராத்தியர்கள், ஒரு உடன்படிக்கையின் மூலம் மால்வா பகுதியை பெற்றனர்.[20]
- மராத்தியர்களுக்கும், போர்த்துகேயர்களுக்கும் மும்பைக்கு வடக்கில் 50 கி மீ தொலைவில் உள்ள வசாய் எனுமிடத்தில் நடைபெற்ற போரில் மராத்தியர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.[18]
பாலாஜி பாஜி ராவ்

பாஜிராவின் மறைவிற்குப் பின்னர் அவரது மகன் பாலாஜி பாஜி ராவை மராத்தியப் பேரரசின் பேஷ்வாவாக, மராத்தியப் பேரரசர் சத்திரபதி சாகுஜி நியமித்தார்.
- 1740ல் பாலாஜி பாஜி ராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கானை தமலச்சேரிப் போரில் வென்று, ஆற்காட்டைக் கைப்பற்றிதன் மூலம் மராத்தியர்கள் தமிழ்நாட்டில் காலூன்றினர். 14 மார்ச் 1741ல் மராத்தியர்கள் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி, சந்தா சாகிப் மற்றும் அவரது மகனை கைது செய்து நாக்பூர் சிறையில் அடைத்தனர்.[21]
- கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் மையப்பகுதிகளை கைப்பற்றிய மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவ், 1741 முதல் 1748 முடிய நடத்திய வங்காளப் போரின் இறுதியில் தற்கால மேற்கு வங்காளம், பிகார் மற்றும் ஒடிசா பகுதிகளை, முகலாய ஆளுநரிடமிருந்து கைப்பற்றி மராத்திய பேரரசுடன் இணைத்தார்.[22]
வங்காள நவாப் அலிவர்த்தி கான், 1751ல் மராத்தியப் படைத்தலைவர் பாலாஜி பாஜி ராவுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டு, சுவர்ணரேகா ஆறு வரையிலுள்ள கட்டக் பகுதிகளை விட்டுக் கொடுத்ததுடன், ரூபாய் 1.2 மில்லியன் ஆண்டுதோறும் மராத்தியப் பேரரசுக்கு கப்பம் செலுத்த ஒப்புக் கொண்டார்.[23]
- பாலாஜி பாஜி ராவ் காலத்தில் இராஜபுதனமும் மராத்தியப் பேரரசில் இணைக்கப்பட்டது.[23]
ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்புகள்
- 1756ல் முகலாயப் பேரரசின் தலைநகரம் தில்லியை அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியப் படைகள் கைப்பற்றிய போது, பேஷ்வா இரகுநாதராவ் தலைமையிலான மராத்தியப் படைகள், ஆகஸ்டு 1757ல் ஆப்கானியப் படைகளை வென்று தில்லியைக் கைப்பற்றினர். 1757ல் நடந்த தில்லிப் போரின் விளைவாக, மராத்தியப் பேரரசு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவை கைப்பற்றுவதற்கு அடித்தளமாக அமைந்தது.[24] 8 மே 1758ல் நடைபெற்ற அட்டோக் போருக்குப் பின்னர் மராத்தியப் படைகள், ஆப்கானியர்களிடமிருந்து பெஷாவரைக் கைப்பற்றினர்.[2] As noted by J.C. Grant Duff:
தில்லி மற்றும் ரோகில்கண்ட் மீதான படையெடுப்புகள்
மூன்றாம் பானிபட் போருக்கு முன்னர் மராத்தியப் படைகள், தில்லி செங்கோட்டையில் உள்ள முகாலயப் பேரரசர்களின் அரசவைக்களமான திவானி காஸை சூறையாடினர். 1750ல் தற்கால உத்தரப்பிரதேசத்தின் ரோகில்கண்ட் பகுதிகளை மராத்தியப் படைகள் கைப்பற்றியது.
மூன்றாம் பானிபட் போர்
ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி தலைமையிலான பெரும் படைகளை எதிர்கொள்ள, 14 ஜனவரி 1761ல் மராத்திய தலைமைப்படைத்தலைவர் சதாசிவராவ் பாகு தலைமையிலான, மராத்தியப் படைகள் ஹோல்கர், சிந்தியா, கெயிக்வாட், பவார் போன்ற தளபதிகள் முன்னின்று பானிபட் போரை எதிர்கொண்டனர்.[25] இப்போரில் சீக்கிய, இராஜபுத்திர மற்றும் ஜாட் இனப் படைகள் மராத்தியர்களுக்கு உதவ இல்லை என்பதாலும், ஆப்கானிய ரோகில்லாக்களும், மற்றும் அவத் நவாப்பும் அகமது ஷா துரானிக்குஅ உதவியதாலும், மராத்தியப் படைகள் மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்கள் தோற்க நேரிட்டது. போரில் வெற்றி பெற்ற ஆப்கானியர்களுக்கு, பஞ்சாப், சம்மு காசுமீர் மற்றும் கங்கைச் சமவெளி பகுதிகளை மராத்தியர்கள் விட்டுக் கொடுக்கப்பட்டது.
மராத்தியர்களின் போர் ஆயுதங்கள், தலைக்கவசங்கள், ஈட்டிகள், வாட்கள் மற்றும் கேடயங்கள், ஹெர்மிடேஜ் அருங்காட்சியகம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ருசியா
முதலாம் மாதவராவ்
மாதவராவ் மராத்தியப் பேரரசின் நான்காம் பேஷ்வாவாக பதவி ஏற்றார். இவரது தலைமையில் மராத்தியப் பேரரசின் மீட்டெழுச்சி காலமாக அமைந்தது. இவரது ஆட்சிக்காலத்தில் ஐதராபாத் நிசாம் மற்றும் மைசூர் அரசுகள், மராத்தியர்களுக்கு பணிந்தது. மூன்றாம் பானிபட் போருக்கு முன் வரை வட இந்தியாவின் பெரும் பகுதிகள் மராத்தியப் பேரரசின் கீழ் வந்தன.
மூன்றாம் பானிபட் போரில் மராத்தியர்களுக்கு ஏற்பட்ட பெருந்தோல்வியால், மராத்தியப் பேரரசை மேலும் விரிவாக்கம் செய்ய இயலாததால் பேரரசுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்பட்டது.[26]
மராத்திய கூட்டமைப்பு சகாப்தம்

மராத்தியப் பேரரசின் பேஷ்வா மாதவராவ், மராத்தியப் பேரரசின் சிவாஜியின் போன்சலே குடும்பத்தினர்களுக்கும், பெரும் படைத்தலைவர்களுக்கும், பேரரசின் சில பகுதிகளை சிறிது தன்னாட்சியுடன் ஆள அனுமதித்தார். அவைகள்:
- போன்சுலேக்களின் நாக்பூர் அரசு, சதாரா அரசு, அக்கல்கோட் அரசு, கோல்ஹாப்பூர் அரசு
- கெயிக்வாட்டுக்களின் பரோடா அரசு
- ஹோல்கரின் இந்தூர் அரசு
- சிந்தியாக்களின் குவாலியர் அரசு மற்றும் மால்வா
- பவார்களின் தேவாஸ் மற்றும் தார் இராச்சியம்
முக்கிய நிகழ்வுகள்

- மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர், மல்கர் ராவ் ஓல்கர், 1761ல் இராசபுத்திர்களை ஒடுக்கி இராஜஸ்தானில் மீண்டும் மராத்தியர்களின் ஆளுமையை உயர்த்தினார்.[27]
- குவாலியர் இராச்சியத்தின் மன்னர் மாதவராவ் சிந்தியா, ஜாட் மக்களையும், ஆப்கானிய ரோகில்லாக்களையும் வென்று, தில்லியை முப்பது ஆண்டுகளாக கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.[28] மேலும் தற்கால அரியானாவையும் கைப்பற்றினர்.[29]
- முதலாம் மாதவராவ் கிருஷ்ணா ஆற்றைக் கடந்து சென்று, 1767ல் மைசூரின் ஐதர் அலியை வென்று, அவரின் கட்டுப்பாட்டில் இருந்த கேளடி நாயக்கர்களின் இறுதி பட்டத்து இராணியை மீட்டார்[30]
- 1771ஆம் ஆண்டின் முற்பகுதியில் தில்லியை மீட்டு, இரண்டாம் ஷா ஆலம் என்பவரை, முகலாயர்களின் பொம்மை மன்னராக, மராத்தியர்களால் நியமிக்கப்பட்டார். [31] [32]
- தில்லியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட மராத்தியர்கள், மூன்றாம் பானிபட் போரில் தங்களை எதிர்த்த ஆப்கானிய ரோகில்லாக்கள் வாழ்ந்த ரோகில்கண்ட் பகுதி மீது, 1772ல் பெரும்படை எடுத்து வென்று, அரச குடும்பத்தினர்களை சிறை பிடித்தனர்.[31]
- துக்கோஜிராவ் ஹோல்கர் தலைமையிலான மராத்தியப் படைகள், 1787ல் கர்நாடகா நவாப், திப்பு சுல்தானை வென்றது. இதனால் மராத்தியப் பேரரசு துங்கபத்திரை ஆறு வரை விரிவாக்கப்பட்டது.
- ஜாட் தலைவர் சத்தர் சிங்கிடம் இருந்த குவாலியர் கோட்டையை 1783ல் கைப்பற்றி, மராத்திய தளபதி காந்தாராவ் என்பவரை குவாலியரின் ஆளுநராக நியமித்தார்.
- 1778ல் ஆப்கானிய ரோகில்லா தலைவர் குலாம் காதிர், இஸ்மாயில் பெக் கூட்டாளிகள், பெயரளவில் முகலாயப் பேரரசராக இருந்த இரண்டாம் ஷா ஆலமின் கண்களை பிடுங்கி தில்லியை கைப்பற்றினர். மராத்திய பேஷ்வா மாதவராவ் மீண்டும் தில்லியை தாக்கி ஆப்கானிய தலைவர் குலாம் காதிர் வென்று, மீண்டும் இரண்டாம் ஷா ஆலமை தில்லிப் பேரரசராக நியமித்து, தன்னை தில்லியின் காப்பாளராக அறிவித்துக் கொண்டார்.[35]
- ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூர் இராச்சியங்களை, பதான் போரில் மராத்தியப் பேரரசின் பேஷ்வா மாதவராவின் படைகள் வென்றனர்.[36]
- மராத்தியர்கள் ஐதராபாத் நிசாம் இராஜ்ஜியத்தை கர்தா போரில் வென்றனர்.[37][38]
பிரித்தானியர்களின் படையெடுப்புகள்

- முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர் - 1775-1782 காலகட்டத்தில் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் வாரிசுக்கான பிணக்கில், ஒரு தரப்பு கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியை நாடியதால் இப்போர் மூண்டது. ஏழாண்டுகள் தொடர் சண்டைகளுக்குப்பின் சல்பாய் ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வந்ததது. பின்னர் இரு தரப்புகளும் மைசூர் அரசுக்கு எதிராக ஓர் அணியில் இணைந்தன.
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் - 1803-05 இல் நடைபெற்றது. மராட்டியப் பேரரசின் அரசர்களிடையே எற்பட்ட மோதலில் தலையிட்ட கிழக்கிந்தியக் கம்பனியின் படைகள் மராட்டியப் படைகளை வென்றன. பேரரசின் பல பகுதிகள் கம்பனியில் கட்டுப்பாட்டில் வந்தன.
- மூன்றாம் ஆங்கிலேய-மராட்டியப் போர் - 1817-18 ஆம ஆண்டுகளில் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் பெருவெற்றி பெற்றதால் மராத்திய அரசுகள் கம்பெனி ஆட்சிக்கு அடங்கிய சுதேச சமஸ்தானங்களாக மாறின.
மராத்தியப் பேரரசின் நிர்வாகம்
அஷ்ட பிரதான் எனும் அமைச்சரவை
மத்தியப் பேரரசில் அஷ்ட பிரதான் எனும் எட்டு அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவைக் குழு பேரரசின் நிர்வாகத்தை கண்காணித்தது. அவைகள்:
- பேஷ்வா (பிரதம அமைச்சர்)
- சர்-இ-நபௌத் (Sar-i-nabuat) (இராணுவத் துறை அமைச்சர்)
- நியாயாதீஷ் (Nayayadhish) (நீதித் துறை அமைச்சர்)
- அமாத்தியா அல்லது மசும்தார் (Amatya or Mazumdar) (நிதித் துறை அமைச்சர்)
- வாகியா-நவீஸ் (உள்துறை அமைச்சர்)
- சமந்த் அல்லது தபீர் (Samant or Dabir) (வெளியுறவுத் துறை அமைச்சர்)
- சச்சீவ் (அரசின் சார்பாக கடிதப் போக்குவரத்து அமைச்சர்) (official correspondence)
- பண்டிட் ராவ் (அரசவை புரோகிதர்)
அஷ்ட பிரதான அமைச்சர்களுக்கு உதவியாக கீழ்கண்ட எட்டு அதிகாரிகள் செயல்படுவர். அவர்கள்: ஜம்தார், போட்னீஸ், திவான், மசூம்தார், டபர்தார், பட்னாவீஸ், சிட்னீஸ் மற்றும் கர்கானி ஆவார்.
விதிக்கப்பட்ட வரிகள்
சௌத் வரி
சிவாஜி தனது இராஜ்யத்திற்கு அந்நியமாக இருந்த பகுதிகளுக்கு விதிக்கப்பட்ட வரி. இது மக்களால் தக்கானாம் அல்லது முகலாய பேரரசு வழங்கப்பட்ட வரியின் நான்கில் ஒரு பங்கு ஆகும். மராத்திய அரசுக்கு சௌத் வரி செலுத்துபவர்களின் பகுதிகளை மராட்டிய வீரர்கள் கைப்பற்ற மாட்டார்கள் என்ற உறுதியின் பேரில் வசூலிக்கும் வரியாகும்.
சர்தேஷ்முகி வரி
சர்தேஷ்முகி வரி என்றால் மராட்டிய மன்னரை தங்களது சர்தேஷ்முக் என அங்கீகரித்தற்கு அடையாளமாக கிராமங்கள் அல்லது நகரத்தின் மொத்த மக்கள் தொகைக்கு விதிக்கப்பட்ட நிலையான நில வருவாயில் பத்தில் ஒரு பங்கு ஆகும்.
மராத்திய ஆட்சியாளர்கள் & பேஷ்வாக்கள்
சிவாஜியின் போன்சலே அரச குலத்தினர்
- சத்திரபதி சிவாஜி (1630–1680)
- சம்பாஜி (1657–1689)
- சத்திரபதி இராஜாராம் (1670–1700)
- சாகுஜி - (1708 - 1749) (சாகுஜியின் மகன்)
- இரண்டாம் இராஜாராம் (1749 - 1777)
- இரண்டாம் சாகுஜி (சாகுஜியின் மகன் - (1777 - 1808)
- தாராபாய் (1675–1761) (சத்திரபதி இராஜாராமின் மனைவி) தன் சிறு வயது மகன் இரண்டாம் சிவாஜி பெயரில் ஆட்சி செய்தவர்.
- இரண்டாம் சிவாஜி (1700–1714)
- மூன்றாம் சிவாஜி (1760–1812) (தத்துப் பிள்ளை)
- பிரதாப் சிங் (1808 - 1839) - கிழக்கிந்திய கம்பெனியுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர் [39]
பிரதம அமைச்சர்கள்
- மொரோபந்த் திரியம்பக் பிங்களா (1657–1683)
- பாகிரோஜி பிங்களா (1708–1711)
பேஷ்வாக்கள்
- பாலாஜி விஸ்வநாத் (1713–1720)
- பாஜிராவ் (1720–1740)
- பாலாஜி பாஜி ராவ் (1740-1761)
- மாதவராவ் (1761–1772)
- நாராயணராவ் பாஜிராவ் (1772–1773)
- இரகுநாதராவ் (1773–1774)
- சவாய் மாதவராவ் (1774–1795)
- இரண்டாம் பாஜி ராவ் (1796 – 1818)
பல காலகட்டங்களில் மராத்தியப் பேரரசின் வரைபடங்கள்
- 1758ல் மராத்தியப் பேரரசு (ஆரஞ்ச் நிறம்)
- 1765ல் மராத்தியப் பேரரசு (மஞ்சள் நிறம்)
- 1794ல் மராத்தியப் பேரரசு (மஞ்சள் நிறம்)
தஞ்சாவூர் மராத்தியர்கள்

தஞ்சாவூர் பகுதிகளை மராத்தியர்கள், 1674ல், தஞ்சை நாயக்கர்களிடமிருந்து கைப்பற்றி 1855 முடிய அரசாண்டனர். பின்னர் 1855இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் தஞ்சாவூர் மராத்திய அரசை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைத்துக் கொண்டனர். தஞ்சாவூர் மராத்திய மன்னர்களில் புகழ் பெற்றவர்கள்
தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள்
- வெங்கோஜி - 1674-1684
- முதலாம் சாகுஜி - 1684-1712
- முதலாம் சரபோஜி - 1712-1728
- துக்கோஜி - 1728-1736
- இரண்டாம் சரபோஜி - 1798-1832
- தஞ்சாவூர் சிவாஜி - 1832-1855
இதனையும் காண்க
வெளி இணைப்புகள்
- மராத்தியப் பேரரசு - காணொலி உரை (தமிழில்)
- மராத்திய பேஷ்வாக்கள் - காணொலி உரை (தமிழில்)
- ஆங்கிலேய- மராத்தியப் போர்கள்- காணொலி உரை (தமிழில்)
- தஞ்சாவூர் மராத்திய அரசு - காணொலி உரை (தமிழில்)
அடிக்குறிப்புகள்
- Many historians consider Attock to be the final frontier of the Maratha Empire.[3][page needed]
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.