Remove ads
From Wikipedia, the free encyclopedia
பாலாஜி பாஜி ராவ் (Balaji Baji Rao) (1720 – 1761), நானாசாகிப் என்றும் அழைக்கப்படும் பேஷ்வா பாஜிராவின் மகனும், மராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வாவும் ஆவார். இவரது பணிக்காலத்தில் மராத்தியப் பேரரசு உச்சக் கட்ட நிலப்பரப்பைக் கொண்டிருந்தது.
பாலாஜி பாஜி ராவ் | |
---|---|
பேஷ்வா பாலாஜி பாஜி ராவ் | |
மராத்தியப் பேரரசின் ஐந்தாம் பேஷ்வா | |
பதவியில் 4 சூலை 1740 – 23 சூன் 1761 | |
ஆட்சியாளர்கள் | சத்திரபதி சாகுஜி சத்திரபதி இரண்டாம் இராஜாராம் |
முன்னையவர் | பேஷ்வா பாஜிராவ் |
பின்னவர் | பேஷ்வா மாதவராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 டிசம்பர் 1720 புனே |
இறப்பு | 23 சூன் 1761 பார்வதி மலை, புனே |
துணைவர் | கோபிகாபாய் |
உறவுகள் | இரகுநாதராவ் (சகோதரன்) |
பிள்ளைகள் | விஸ்வாஸ்ராவ் நாராயணராவ் |
பெற்றோர் | பாஜிராவ் காசிபாய் |
பாலாஜி பாஜி ராவின் இறுதிக் காலத்தில், ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானியின் படைகளுக்கு எதிராக நடந்த மூன்றாம் பானிபட் போரில், மராத்தியப் படைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதால், வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் மராத்தியர்களின் செல்வாக்கு சரிந்தது.
மூன்றாம் பானிபட் போருக்குப் பின்னர் மராத்தியப் பேரரசின் பெரும் பகுதிகளை, ஓல்கர், போன்சுலே, சிந்தியா, கெயிக்வாட் போன்ற மராத்திய குலப் படைத்தலைவர்கள் குவாலியர், பரடோ, இந்தூர், நாக்பூர் இராச்சியங்களை தன்னாட்சியுடன் ஆண்டனர். பின்னர் இவர்கள் பேஷ்வா]]வின் ஆலோசனையின் படி, மராத்தியக் கூட்டமைப்பை உருவாக்கினர்.[1]
பாஜிராவின் மறைவிற்குப் பின், அவரது மகனான பாலாஜி பாஜி ராவை, மராத்தியப் பேரரசர் சாகுஜி, பேரரசின் ஐந்தாம் பேஷ்வாவாக 4 சூலை 1740 அன்று நியமித்தார்.[1][2] கோபிகாபாயை திருமணம் செய்து கொண்ட பாலாஜி பாஜிராவின் இரண்டு மகன்களில் மூத்தவர் விஸ்வாசராவ், 1761ல் மூன்றாம் பானிபட் போரில் இறந்தார். இரண்டாம் மகன் நாராயணராவ், பேஷ்வா மாதவ ராவிற்குப் பின்னர் ஏழாவது பேஷ்வா ஆக பொறுப்பேற்றார்.
1749ல் பேரரசர் சாகுஜி வாரிசு இன்றி மறைந்த போது, மராத்தியப் பேரரசின் வாரிசாக நியமிக்கப்பட்ட இராமராஜ் என்பவரை, பேஷ்வா பாலாஜி பாஜிராவ் சாத்தாரா கோட்டையில் சிறை வைத்தார். மராத்தியப் பேரரசு முழுவதும் பேஷ்வா பாலாஜி பாஜிராவின் கட்டுப்பாட்டில் வந்தது.
1752ல் முகலாயர்களுடன், மராத்திய பேஷ்வா பாலாஜி பாஜிராவ் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முகலாயப் பேரரசின் உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு எதிரிகளை, மராத்தியப் படைகளை தடுத்து நிறுத்திப் போரிட வேண்டும் என்றும், அதற்கு ஈடாக பஞ்சாப் உள்ளிட்ட வடமேற்கு மாகாணங்களில் சௌத் மற்றும் சர்தேஷ்முகி வரிகளையும், ஆக்ரா மற்றும் அஜ்மீர் பகுதிகளில் முழு நிலவரிகளையும் மராத்தியர்கள் வசூலித்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டது.
1761ல் ஆப்கானிய மன்னர் அகமது ஷா துரானி தில்லியை தாக்கிச் சென்ற போது, மராத்தியப் படைகள், பானிபட் எனுமிடத்தில், ஆப்கானிய படைகளுடன் போரிட்டனர். போரில் இராசபுத்திரர்களும், சீக்கியர்களும் மராத்தியப் படைகளுக்கு உதவாத காரணத்தினாலும்; அவத் மற்றும் வங்காள நவாப்புகள், ஆப்கானியர்களுக்கு உதவியதாலும், மூன்றாம் பானிபட் போரில் மராத்தியப் படைகள் பெருந் தோல்வி கண்டது.[3] இப்போரில் பாலாஜி பாஜி ராவின் மகன் விஸ்வாஸ்ராவும் இறக்கவே, மனம் நொந்து போன பாலாஜி பாஜிராவும் இறந்தார்.
பாலாஜி பாஜிராவின் துவக்க ஆட்சிக் காலத்தில், மராத்தியப் படைத்தலைவர்களின் போர்த் திறமையால், மராத்தியப் பேரரசு வட இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும் தனது எல்லைகளை விரிவாக்கியது.
பாலாஜி பாஜிராவ் மே, 1740ல் ஆற்காடு நவாப் என்ற கர்நாடகா நவாப் தோஸ்த் அலி கானை[4] கொன்று, அவர் மகன் சப்தர் அலி கானை ஆற்காடு நவாப் பதவியில் அமர்த்தி, தமிழகத்தில் மராத்தியப் பேரரசு காலூன்ற வழிவகுத்தார்.பின்னர் மார்ச் 1741ல் கர்நாடகா நவாப்பாக இருந்த சந்தா சாகிபை வென்று ஆற்காடு மற்றும் தஞ்சாவூர் பகுதிகளை மராத்தியப் பேரரசில் இணைத்தார்.
1749ல் சத்திரபதி சாகுஜி மறைவிற்குப் பின்னர் முன்னாள் இராணி தாராபாயின் பேரன் இரண்டாம் இராஜாராம் மராத்தியப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.[5]
1750ல் பாலாஜி பாஜி ராவ் பெரும் படைகளுடன் ஐதராபாத் நிஜாமுடன் போரிட சென்ற போது, பேரரசர் இரண்டாம் இராஜாராமிடம், தராபாய், பேஷ்வா பாலாஜி ராவை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தினார். அவரது கோரிக்கை ஏற்கப்படாமல், தராபாய் 24 நவம்பர் 1750ல் சதாரா சிறையில் அடைக்கப்பட்டார்.
தாராபாயின் கோரிக்கையின் பேரில், கெயிக்வாட் வம்சத்தின் குஜராத் படைத்தலைவர் தாமாஜி ராய் கெயிக்வாட் 15,000 வீரர்களுடன், தாராபாய்க்கு ஆதரவாக சதாராவை நோக்கி வந்தார். 20,000 வீரர்கள் கொண்ட மராத்தியப் படைத்தலைவர், குஜராத்தின் தாமாஜி ராய் கெயிக்வாட்டை தோற்கடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.