From Wikipedia, the free encyclopedia
கோவா என்பது இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறிய மாநிலமாகும். இந்த மாநிலம் சிறியதாக இருந்தாலும் இந்திய வரலாற்றில் செல்வாக்கு வகித்துள்ளது. கோவா இந்தியாவின் முதன்மையான வணிக மையமாக இருந்துள்ளது, இதனால் இது முற்காலத்தில் அரச மரபினர், மாலுமிகள், வியாபாரிகள், வர்த்தகர்கள், துறவிகள், மிஷனரிகள் போன்றோரை ஈர்த்து வந்துள்ளது. கோவா அதன் வரலாறு முழுவதும் அதன் கலாச்சார மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து மாற்றம் பெற்று வந்துள்ளது.
கோவா குறித்த முதல் இலக்கியக் குறிப்பாக மகாபாரதத்தில் பீஷ்ம பருவத்தில் கோமண்ட என குறிப்பிடப்படுகிறது இதன் பொருள் பசுக்களின் மண்டலம் என்பதாகும்.[1] தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரம் இல்லாத போதிலும், இப்பிரதேசத்தை உருவாக்கியவர் என இந்து நூல்கள் பரசுராமரைக் குறிப்பிடுகின்றன (காண்க:கந்த புராணம்:சகயதிரிகந்தா). இவர் இந்த தேசத்தில் பத்து முனிவர்களுடன் குடியேறி தீ வளர்த்ததாக கூறப்படுகிறது. மற்றொரு புராணக்கதையில் தவம் செய்த, சப்தரிஷிகள் என்னும் ஏழு முனிவர்களுக்கு சிவன் ஆசிவழங்கினார்; இந்த முனிவர்கள் ஆசிபெற்ற இடம்தான் கோவாவில் உள்ள சப்தகோட்டீஸ்வர் என அழைக்கப்படுத் இடம் எனப்படுகிறது. மேலும் சிவன் பார்வதியுடன் ஏற்பட்ட ஒரு மனத்தாங்களுக்குப் பிறகு இங்கு தற்காலிகமாக குடி இருந்ததாக நம்பப்படுகிறது. மற்றொரு புராணத்தின்படி கிருஷ்ணர் மகத மன்னனான ஜரசந்தனை, கோவாவின் கோம்மன்சல் மலை மீது தோற்கடித்தார் என்று கூறப்படுகிறது. (பார்க்க: ஹரி வம்ஷ புராணம்) [2]
கோவா குறித்த முதல் எழுதப்பட்ட குறிப்பு சுமேரிய ஆப்பெழுத்துக்களில் எழுதப்பட்டதாகும் இதில் கோவா குபியோ (Gubio) எனக் குறிப்பிடப்படுகிறது. இது கி.மு. 2200 ஐ ஒட்டிய காலகட்டமாகும் இக்காலகட்டத்தில் சுமேரியர்கள் கோவாவுடன் வர்த்தக தொடர்புகளைக் கொண்டிருந்தனர். பல சுமேரியர்கள் கோவா மற்றும் கொங்கன் கடற்கரைப் பகுதிகளில் குடியேறினர். பின்னர் கி.மு.1775 காலகட்டத்தில் போனீசியர்கள் கோவாவில் பெருமளவில் குடியேறினார்கள். பல ஆப்பெழுத்துப் பலகைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன சுமேரியர்களால் உள்ளூர் சுங்க முறை மாற்றியமைக்கப்பட்டதாகவும், அவர்களின் பாணியில் கோவில் கட்டிடக்கலை, தேவதாசி முறை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது; மேலும் சுமேரியர்களின் மொழி, சாதி அமைப்பு போன்றவற்றின் தாக்கம் ஓரளவிற்கு நடைமுறையில் உள்ளன. கோவாவில், சுமேரியர்களின் செல்வாக்கை பொழுதுபோக்கு மற்றும் பிராந்திய விளையாட்டுகளில் காணலாம்.[3]
கோவாவின் கிராம நிர்வாக அமைப்பில் காவகரி என்று அழைக்கப்பட்ட உள்ளூர் சிலவர் ஆட்சி சனநாயகமானது சுமேரிய மதவாத சனநாயகத்தின் தாக்கத்தால், உருவானது. இதன்படி விவசாய நிலங்கள் கூட்டாக கிராமவாசிகளின் குழுவுக்குச் சொந்தமானதாக இருந்தது, அவர்களுக்கு நிலத்தை குத்தகைக்கு ஏலத்தில் விட உரிமை பெற்றிருந்தனர், இதனால் கிடைக்கும் வாடகை வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது, எஞ்சியவை காவகரி குழுவினரால் பகிர்ந்துக் கொள்ளப்பட்டது. சுமேரியர்கள் பார்வையில், கிராமத்தில் உள்ள நிலமானது கிராமத்தின் தெய்வத்துக்குச் சொந்தமானது, இதுவே காவகரி அமைப்பின் முதன்மை அம்சமாக இருந்தது. கிராமத்தின முதன்மை குலதெய்வ கோவிலே அனைத்து செயல்பாடுகளின் மையமாக இருந்தது. கிராமங்களில் அதன் நில விவரம், அதன் மேலாண்மை, சமூக, சமய, கலாச்சார தொடர்பு ஆகியவற்றோடு கிராமம் கிராமமாக நிலங்கள் திட்டவட்டமான எல்லைகள் கொண்டிருந்தன. இதனால் காவகரி அமைப்பானது கோவாவில் கோவாவா மாநிலம் தனக்கான அரசியல் சட்டத்தை அமைத்துக்கொண்ட காலம்வரை நீடித்து இருந்தது.[4] கோவா பிராந்தியத்தில் எந்த மன்னர் ஆட்சி இருந்தாலும் பிராந்தியத்தில் அதற்குமுன் இருந்த காவகரி சனனாயகமுறை மாறாமல் நிலைத்து இருந்தது.
இரண்டாம் குடியேற்ற அலை கி.மு. 1700 மற்றும் 1400 க்கு இடையே இடையே சிறிது ஏற்பட்டது. இந்த இரண்டாவது குடியேறிகள் தென் இந்தியாவின் தக்காண பீடபூமியைச் சேர்ந்தவர்களாவர். இவ்வாறு பல கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், மதங்கள், நம்பிக்கைகள் போன்றவற்றின் கலப்புகள், துவக்கக்கால கோவாவின் சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தின.[5]
வாஸ்கோ ட காமா ஒரு இளைஞராக போர்த்துகீசியக் கடற்படையில் சேர்ந்தார், அங்கு அவர் கடற்படை அறிவு, போர்த்திறம் ஆகியவற்றைக் கற்றார்.[6] ஒரு வருடம் கழித்து, 1497 ஆம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு கடல்வழி கண்டுபிடித்து கேரளத்தின் கோழிக்கோட்டில், வந்து இறங்கினார், அதன்பிறகு அரபு வணிகர்களின் ஏகபோகத்தை உடைத்தார்.
1510 இல், போர்த்துகீசிய கடற்படை தளபதி அபோன்சோ டி அல்புகெர்க்கே உள்ளூர் தலைவர் திம்மையாவின் உத்தரவின் பேரில் கோவாவைத் தாக்கினர். நகரத்தை இழந்த அதன் முன்னாள் ஆட்சியாளரான பிஜாப்பூர் முஸ்லீம் மன்னரான இஸ்மாயில் அடில் ஷா, சிலகாலத்துக்குப்பின் நவம்பர் 25 அன்று புதுப்பிக்கப்பட்ட படைபலத்துடன் திரும்பினார்.[7] ஒரு நாளுக்கு உள்ளாகவே, கோவாவை மீண்டும் போர்த்துகீசியக் கப்பற்படை இஸ்மாயில் அடில் ஷா மற்றும் அவரது ஒட்டோமான் கூட்டாளிகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றியது, போரின்போது, தப்பிக்க முயன்ற போது, என நகரில் 9,000 முஸ்லீம் பாதுகாவலர்கள் 6,000 பேர் இறந்தனர் என்று மதிப்பிடப்பட்டது, மீதமுள்ள படைகள் திசம்பர் 10 ம் திகதி சரணடைந்தன.[8] துவக்கக்கால எதிர்ப்புகளால் அல்புகுவர்க் திகைப்பிற்கு ஆட்பட்டார் என்றாலும் பின்னர், இந்து சமய மக்களின் ஆதரவைப் பெற்றார். அண்டை சக்திகளால் கோவா அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளானபோதும், கோவா, போர்த்துகீசிய இந்தியாவின் மையமாக ஆனது. நாளடைவில் அண்டை அரசாட்சிகளுடன் இணக்கம் காண்பதில் வெற்றி கண்டது; குசராத் சுல்தான் மற்றும் கோழிக்கோடு நாடு ஆகியோருக்கு கூட்டணியாக இருக்கலாம் என்றும் உள்ளூரில் சலுகைகள் அளிப்பதாகவும் தூதர்கள் அனுப்பப்பட்டனர். இவ்வாறு தங்கள் ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டனர்.
1947 இல் இந்தியா விடுதலைப் பெற்றது, ஆனால் தொடர்ந்த கோவா போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டின் கீழே இருந்துவந்தது. கோவாவை அதன் உடமைகளுடன் சேர்த்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஜவகர்லால் நேருவின் அரசு வலியுறுத்தியது. எனினும், போர்ச்சுகல் இதற்கு மறுத்துவிட்டது. மாறாக, பிரஞ்சு இந்தியாவை ( புதுச்சேரி) பிரஞ்சு நாடு அதன் உடமைகளுடன் ஒப்பீட்டளவில் இந்தியாவிடம் விரைவில் ஒப்படைத்தது.[9][10]
1954 இல் நிராயுதபாணியான இந்தியர்களால்[11] சிறிய நிலப்பகுதிகளான தாத்ரா மற்றும் நகர் அவேலி எடுத்துக்கொள்ளப்பட்டது.
1955 ஆம் ஆண்டு இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளும் சோஷலிஸ்ட்டுகளும் போர்ச்சுக்கல்லுக்கு எதிராக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சத்யாகிரகிகள் கோவாவுக்குள் நுழைந்தபோது, அவர்களில் குறைந்தது 20 பேர் போர்த்துகீசிய ராணுவத்தின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டனர்.[12]
பின்னர் அதே ஆண்டில், சத்தியாக்கிரகிகள், டிரக்கால் கோட்டையைக் கைப்பற்றி இந்தியக் கொடியை ஏற்றினர். இதிலும் பல இறப்புகள் ஏற்பட்டன. 1 செப்டம்பர் 1955 அன்று, கோவாவில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது; தனது அரசாங்கத்தால் கோவாவை போர்த்துகீசியர்கள் வைத்திருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று நேரு அறிவித்தார். பின்னர் போர்த்துகீசியர்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியாக, கோவா, தாமன், டையூ ஆகியவற்றை இந்தியா முற்றுகை இட்டது, இந்த முற்றுகையைக கடந்து பயணங்களை மேற்கோள்ள கோவாவுக்கு போர்ச்சுக்கல் தனது சொந்த வானூர்தி நிறவனத்தின் வானூர்திகளை வழங்கியது
1961 திசம்பர் 18 அன்று அன்று, இந்தியத் துருப்புகள் கோவாவின் எல்லையைக் கடந்து உள்ளே நுழைந்து, விஜய் நடவடிக்கையை மேற்கொண்டன. இந்த படை நடவடிக்கையில் முப்பத்தாறு மணி நேரத்துக்குமேல் நிலம், கடல், வான் தாக்குதல்களில் ஈடுபட்டனர்; இதனால் போர்த்துகீசியப் படைகள் நிபந்தனையின்றி திசம்பர் 19 அன்று சரணடைந்தன. இதனைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா இந்தியாவின் இந்தப் போர் நடவடிக்கையைக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் கண்டனத் தீர்மானத்தை முன்மொழிந்தது, ஆனால் சோவியத் ஒன்றியம் தனது வீட்டோ அதிகாரத்தால் இம்முயற்சியைத் தடுத்தது. இந்தியா கோவாவைக் கைப்பற்றிய பிறகு கோவா பிரதேசம் ஐந்து மாதங்கள் இராணுவ ஆட்சியின் கீழ் இருந்தது. அதன்பிறகு நடந்த வாக்கெடுப்பில் கோவா வாக்காளர்கள் தன்னாட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர், இதைத் தொடர்ந்து கோவா இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியாக ஆனது. 1987 இல் மாநிலத் தகுதியை அடைந்தது.
கோவா தன் விடுதலை நாளாக ஒவ்வோராண்டும் திசம்பர் 19 ஐ மாநில அரசு விடுமுறையுடன் கொண்டாடிவருகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.