பாபிலோன்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பாபிலோன் (Babylon) அரமேயம்: בבל, Babel; அரபு மொழி: بَابِل, Bābil; எபிரேயம்: בָּבֶל, Bavel; Classical Syriac: ܒܒܠ, Bāwēl) கீழ் மெசொப்பொத்தேமியாவில் பாயும் இயூபிரட்டீசு ஆற்றின் இடது மற்றும் வலது கரையில், தற்கால ஈராக் நாட்டின் தலைநகரான பகுதாதிற்கு 100 கிலோ மீட்டர் தெற்கே, கிமு 1800 முதல் கிமு 6-ஆம் நூற்றாண்டு முடிய செழித்திருந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரம் ஆகும்.[1] அரபு மொழியில் இந்நகரத்தை பாபில் என்றும், எபிரேய மொழியில் பாவெல் என்றும் அழைக்கப்பட்டது.
பாபிலோன் بابل | |
---|---|
பண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள் | |
மாற்றுப் பெயர் | அரபு: بابل Babil எபிரேயம்: בָּבֶל, Bavel |
இருப்பிடம் | இல்லாகு, பாபிலோன் ஆளுநரகம், ஈராக் |
பகுதி | கீழ் மெசொப்பொத்தேமியா |
ஆயத்தொலைகள் | 32°32′11″N 44°25′15″E |
வகை | குடியிருப்பு |
பகுதி | பபிலோனியா புது பாபிலோனியப் பேரரசு |
பரப்பளவு | 9 km2 (3.5 sq mi) |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிமு 2300 |
பயனற்றுப்போனது | கிபி 1000 |
கலாச்சாரம் | அக்காதியம், அசிரியா, அமோரிட்டுகள், காசிட்டுகள், சால்டியம், அகமானிசியம், எலனிய கிரேக்கம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | அருமுசித் ரசிசம், இராபர்ட் கோல்டிவே |
நிலை | சிதலமடைந்துள்ளது. |
உரிமையாளர் | பொது |
பொது அனுமதி | ஆம் |
பபிலோனியா இராச்சியத்தின் தலைநகரமாக பாபிலோன் நகரம் விளங்கியது. கிமு 2300ல், பாபிலோன் நகரம், அக்காடியப் பேரரசில் சிறு நகரமாகவே இருந்தது.
கிமு 19ம் நூற்றாண்டு முதல் முதலாம் பாபிலோனிய வம்சத்தவர்களின் நகர இராச்சியமாக பாபிலோன் நகரம் விளங்கியது. பபிலோனியா மன்னர் அம்முராபி பாபிலோன் நகரத்தை விரிவாக்கி, அதனை தனது தலைநகராக் கொண்டார். அம்முராபிக்குப் பின்னர் பாபிலோன் நகரம், அசிரிய மக்களின் பழைய அசிரியப் பேரரசு, காசிட்டுகள் மற்றும் ஈலாம் இராச்சியத்தின் ஒரு பகுதியாக விளங்கியது.
பாபிலோன் நகரம் அழிக்கப்பட்டப் பின்னர் மீண்டும் புது அசிரியப் பேரரசில் (கிமு 609 – 539) பாபிலோன் நகரம் மீண்டும் புதிதாக கட்டப்பட்டு, அதன் தலைநகரங்களில் ஒன்றாக விளங்கியது.
பாபிலோனின் தொங்கு தோட்டம் உலகப் புகழ்பெற்றதாகும். புது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின், பாபிலோன் நகரம், கிமு 626 முதல் கிமு 539 முடிய புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரானது. பின்னர் பாரசீகத்தின், அகாமனிசியப் பேரரசு, செலூக்கியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, உரோமைப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசின் கீழ் வந்தது.
கிமு 1770 - கிமு 1671 மற்றும் கிமு 612 - கிமு 320 காலகட்டங்களில் பாபிலோன் நகரம் உலகின் பெரும் நகரங்களில் ஒன்றாக, 900 எக்டேர் பரப்பளவுடன் விளங்கியது.[2][3][4]
பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், ஈராக் நாட்டின் பபில் ஆளுநனரகத்தின், இல்லா எனும் பகுதியில், பகுதாது நகரத்திற்கு தெற்கே 85 கிமீ தொலைவில் உள்ள டெல் தொல்லியல் களத்தில் களிமண் செங்கற்களாலான சிதைந்த கட்டிடங்களுடன் காணப்படுகிறது. டெல் தொல்லியல் களத்தில் கிமு 6ம் நூற்றாண்டின் ஆப்பெழுத்துகளுடன் கூடிய சுட்ட களிமண் பலகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ள்து.[5]
பண்டைய பாபிலோன் நகரத்தின் சிதிலங்கள், இயூபிரட்டீசு ஆற்றின் மேற்கே ஈராக் நாட்டின், பபில் ஆளுநகரத்தில், பகுதாது நகரத்திற்கு தெற்கு 85 கிமீ தொலைவில் இல்லா எனும் ஊரின் டெல் தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]
பண்டைய பாபிலோன் நகரத்தின் வரலாற்றுக் குறிப்புகள், ஈராக் நாட்டின் உரூக், நிப்பூர் மற்றும் அரதும் தொல்லியல் களங்களில் கிடைத்த கல்வெட்டுக் குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.
புது பாபிலோனிய நகரம் தொடர்பான செய்திகள் தொல்லியல் அகழாய்வுகள் மூலமும், எரோடோட்டசு, இசுட்ராபோ போன்ற பண்டைய கிரேக்க வரலாற்று அறிஞர்கர்கள் மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளது.[7]
கிமு மூவாரயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய அக்காதியம் மற்றும் சுமேரிய இலக்கியங்களில் பாபிலோன் நகரம் குறித்தான குறிப்புகள் கிடைக்கப்பெறுகிறது.
அக்காடியப் பேரரசர் சார் - காளி - சர்ரி (Šar-kali-šarri) காலத்திய ஆப்பெழுத்துகளில் வடிக்கப்பட்ட சுடுமண் பலகைகளில், பாபிலோன் நகரத்தில் அன்னுநிதம் மற்றும் இலபா தெய்வங்களுக்கு எழுப்பட்ட கோயில்களின் அடிக்கல் குறித்தான குறிப்புகள் உள்ளது.
கிமு 19ம் நூற்றாண்டில் தெற்கு மெசோபத்தோமியாவை, கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய வடக்கு லெவண்ட் நாடோடி மக்களான அமோரைட்டு மக்கள் பபிலோனியாவைக் கைப்பற்றி, பாபிலோன் நகர அரசை நிறுவினர்.
கிமு 21 – 20ம் நூற்றாண்டுகளில் வடக்கு லெவண்ட் பகுதியிலிருந்து தெற்கு மெசபத்தோமியாவின் பாபிலோன் பகுதிக்கு எலமைட்டு மக்களுடன் குடியேறிய, அமோரிட்டு மக்களை, பழைய அசிரியப் பேரரசு ஆட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
அசிரியர்கள் சின்ன ஆசியாவை கைப்பற்றுவதற்கு தங்கள் கவனத்தை திருப்பிய வேளையில், அமோரிட்டு மக்கள் பாபிலோனில் தங்கள் குடியேற்றங்களை நிறுவினர்.
துவக்க காலத்தில் பாபிலோன் ஒரு நகர அரசாக இருந்தது. அம்முராபி (கிமு 1792–1750) பாபிலோன் நகர அரசாக ஆவதற்கு முன்னர், அசிரியா, ஈலாம், லார்சா மற்றும் இசின் ஆட்சியாளர்களின் கீழ் பாபிலோன் நகரம் இருந்தது. பாபிலோன் மன்னர் அம்முராபி ஈலாம், மாரி, எல்பா பகுதிகளைக் கைப்பற்றி ஆண்டார். பாபிலோன் நகர அரசு மன்னராக அம்முராபி பபிலோனியா இராச்சியத்தை நிறுவினார். பின்னர் பாபிலோன் பழைய அசிரியப் பேரரசின் கீழ் வந்ததது.
கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டடைட்டுக்களால் வெல்லப்பட்டது. பண்டைய பாரசீகத்தின் காசிட்டு மக்களின் கீழ் பாபிலோன் நகரம், கிமு 1160 வரை, 435 ஆண்டுகள் இருந்தது. பின்னர் காசிட்டு மக்களின் பாபிலோன், பழைய அசிரியப் பேரரசில் (கிமு 1365–1053) வரை இருந்தது. அசிரியப் பேரரசர் முதலாம் துக்குல்தி - நினுர்தா கிமு 1235ல் பாபிலோனில் முடிசூட்டிக் கொண்டார்.
கிமு 1155ல் அசிரியர்களும், ஈலாமிரியர்களும் பாபிலோன் நகரத்தின் மீது நடத்திய தொடர் தாக்குதல்களால், பாபிலோனை விட்டு காசிட்டு மக்கள் வெளியேறினர்.
பின்னர் அக்காடியப் பேரரசின் ஆட்சியின் கீழ் முதல் முறையாக பாபிலோன் சென்றது. பின்னர் மீண்டும் அசிரியர்கள் ஆட்சியில் பாபிலோன் ஒரு சிற்றரசாக விளங்கியது.
கிமு 11ம் நூற்றாண்டில் லெவண்ட் பகுதியிலிருந்து வந்த மேற்கு செமிடிக் மொழி பேசிய ஆர்மீனியர்களும், கிமு 9ம் நூற்றாண்டில் சால்டியர்களும் பாபிலோன் நகரைக் கைப்பற்றியாண்டனர்.
புது அசிரியப் பேரரசர் சென்னாசெரிப் [9] ஆட்சிக் காலத்தில் (கிமு 705 – 681), ஈலமைட்டுகள் உதவியுடன் உள்ளூர் தலைவன் இரண்டாம் மர்துக்-அப்லா-இதின்னா (Marduk-apla-iddina II) நடத்திய கலவரங்களில் பாபிலோன் நகரம் முற்றாக அழிக்கப்பட்டது. கிமு 689ல் பாபிலோன் நகரக் கோட்டைச் சுவர்களும், கோயில்களும், அரண்மனைகளும் முற்றிலும் அழிக்கப்பட்டது.
ஈசர்கத்தோன் (கிமு 681–669) ஆட்சியில் பாபிலோன் நகரம், மீண்டும் எழுப்பட்டது. பாபிலோனை ஆண்ட மன்னர் அசூர்பனிபால் ஆட்சிக்கு எதிராக, நினிவே நகரத்தின் ஆளுநரும், அவரது தம்பியுமான சாமாஸ்-சும்- உகின், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த ஈலமைட்டுகள், சால்டியர்கள், பாரசீகர்கள், யூதர்கள், மற்றும் அரபு மக்கள் உதவியுடன் கிமு 625ல் உள்நாட்டுப் போரை நடத்தி பாபிலோன் நகரத்தைக் கைப்பற்றினார்கள்.
அசிரியர்கள் பெரும்படையுடன் பாபிலோன் நகரத்தை நீண்ட நாட்கள் முற்றுகையிட்டு, மீண்டும் பாபிலோனை புது அசிரியப் பேரரசில் இணைத்தனர். பாபிலோன் நகர ஆளுநராக கந்தாலுனு என்பவரை, புது அசிரியப் பேரரசால் நியமிக்கப்பட்டார்.
அசூர்பனிபால் ஆட்சிக்கு பின்னர் வந்த புது அசிரியப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில், பாபிலோனில் ஏற்பட்ட தொடர் உள்நாட்டுப் போரால் கிமு 608 பாபிலோனை ஆண்ட புது அசிரியப் பேரரசு முடிவிற்கு வந்தது.[10]
புது அசிரியப் பேரரசர் அசூர்பனிபால் கிமு 627ல் இறந்த பிறகு, கிமு 626ல் நடந்த அசிரிய உள்நாட்டுப் போரின் போது, பபிலோனியாவின் 11வது வம்சத்தின் முதலாமர் நபோபேலசர் எனும் நபு-அப்லா-உசூர், மீடியர்கள், பாரசீகர்கள், சிதியர்கள் துணையுடன் பாபிலோன் மற்றும் நினிவே[12] நகரங்களைக் கைப்பற்றி புது பாபிலோனியப் பேரரசை அமைத்தார். பாபிலோன் நகரம் புது பாபிலோனியப் பேரரசின் தலைநகரமாகயிற்று.
புது பாபிலோனியப் பேரரசில் கிமு 629 முதல் பாபிலோன் நகரம் தன்னாட்சியுடன் ஆண்ட போது, சுமேரிய-அக்காடிய பண்பாட்டுகளின்படி கோயில்களை கட்டினர். அரமேயம் மொழி மக்களின் பேச்சு மொழியானது. அக்காதியம் ஆட்சி மொழியானது. அக்காடியர்களின் ஆப்பெழுத்து முறை சீரமைக்கப்பட்டடது. அக்காடிய வழக்கப்படி, அரசகுடும்பப் பெண் கோயில் பூசாரியாக நியமிக்கப்பட்டனர். இரண்டாம் நெபுகாத்நேசர் பாபிலோனின் தொங்கு தோட்டம் அமைத்தார். இரண்டாம் நெபுகாத்நேசர் யூதர்களை பாபிலோனை விட்டு வெளியேற்றினார்.
87 ஆண்டுகள் ஆண்ட புது பாபிலோனியப் பேரரசை, கிமு 539ல் ஓபிசு போரில் அகாமனிசியப் பேரரசர் சைரசு கைப்பற்றி தனது பேரரசில் இணைத்துக் கொண்டார். அகாமனிசியப் பேரரசில் புது பாபிலோனியப் பேரரசும், அசிரியப் பேரரசும் சிற்றரசுகளாக விளங்கியது.[7][13][14][15]
எலனியக் காலத்தில் கிமு 331ல் அகாமனிசியப் பேரரசின் இறுதிப் பேரரசரை, பேரரசர் அலெக்சாந்தர் வெற்றி கொண்டு பாபிலோன் நகரை கைப்பற்றினார்.[16]
கிமு 323ல் அலெக்சாந்தர் பாபிலோன் அரண்மனையில் இறந்த பிறகு, எலனியக் காலத்தில் அலெக்சாந்தர் கைப்பற்றிய இராச்சியங்களை அவரது படைத்தலைவர்கள் செலூக்கசு நிக்காத்தர் உள்ளிட்ட கிரேக்கப் படைத்தலைவர்கள் பிரித்துக் கொண்டு ஆண்டனர். மேற்காசியா, நடு ஆசியா உள்ளிட்ட பகுதிகள் செலுக்கஸ் நிக்கோத்தரின் செலுக்கியப் பேரரசில் வந்ததது.
பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசு மற்றும் சசானியப் பேரரசுகளின் ஆட்சியில் ஒன்பது நூற்றாண்டுகளாக, கிபி 650 வரை பாபிலோன் மற்றும் அசிரியா ஒரு மாகாணாக விளங்கியது. பாபிலோன் நகரத்தினர் தமது பண்பாடு மற்றும் அரமேய மொழியை போற்றி காத்தனர். கிபி 1 – 2ம் நூற்றாண்டுகளில் பாபிலோனில் கிறித்தவம் அறிமுகமாகியது.
கிபி 7ம் நூற்றாண்டின் இறுதியில் மெசொப்பொத்தேமியாவையும், பாபிலோனையும் இசுலாமியர்களின் உதுமானியப் பேரரசு கைப்பற்றி, பெரும்பாலான பாபிலோனிய மக்களை இசுலாமிற்கு சமய மாற்றம் செய்தனர். இசுலாமுக்கு மதம் மாற மறுத்த பாபிலோனிய யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் மீது ஜிஸ்யா வரி செலுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டதால், அவர்கள் பாபிலோனை விட்டு வெளியேறினர்.
கிபி 10ம் நூற்றாண்டில் பபிலோனியாவின் பாபிலோன் நகரத்தில் யூதர்களின் சிதிலமடைந்த கோயில் மட்டும் இருந்தது.[17]
மத்தியகால அரபு இலக்கியங்களில் பாபிலோன் நகரத்தைப் பற்றிய குறிப்புகளில், பகுதாது நகரத்திலிருந்து பசுரா நகரத்திற்கு செல்லும் வழியில் பாபிலோன் நகரம் இருந்ததாக கூறப்படுகிறது.[18][19]
கிபி 18ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாட்டவர்கள் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் அறிஞர்கள் பபிலோனியா மற்றும் மொசபத்தோமியாவின் பகுதாது மற்றும் பசுரா நகரங்களில் அகழாய்வுகள் மேற்கொண்டனர். அகழாய்வில் கிடைத்த அரிய தொல்பொருட்கள் பெர்லின் போன்ற அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைத்தனர்.
1920ல் நவீன ஈராக் அரசு அமைந்ததிலிருந்து பாபிலோனின் தொல்பொருட்களின் உருவங்களை அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சலட்டைகளில் பொறித்தனர். 1960ல் இசுதர் கோயிலின் நுழைவுவாயிலினை பிரதி எடுத்து மக்களின் காட்சிக்கு வைத்தனர்.
14 பிப்ரவரி 1978ல் ஈராக்கில் சதாம் உசேன் அரசு ஆட்சி அமைத்த பிறகு பாபிலோன், நினிவே, ஊர், நிம்ருத் நகர சிதிலமடைந்த தொல்லியல் களங்களை சீரமைத்தார். மேலும் இரண்டாம் நெபுகாத்நேசர் கட்டிய சிதிலமடைந்த அரண்மனைகளை சீரமைத்தார்.
பாபேல் என்பது பாபிலோனிய நகரத்திற்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எபிரேய பெயராகும். இது பாபேல் கோபுரம் இருந்த இடமாகும். பெயரின் தொடக்கம் பற்றி ஆதியாகமம் 11:9 இல் கூறப்பட்டுள்ளது. அதன்படி பாபேல் என்ற பெயரானது குழப்பம் என பொருளுடைய "பாபல்" என்ற எபிரேய மொழி சொல்லின் மருவலாகும் என்பது விவிலிய கருத்தாகும். ஆனால் இது. அக்காத் மொழியில் "கடவுளின் வாயில்" எனப்பொருள்படும் "பப்-இலு" வின் மருவலாகும் என்பது ஆய்வாளரின் கருத்தாகும்.
ஆதியாகமம் 10:10[20] இல் பாபேல் நிம்ரோத் அரசனின் வசிப்பிடம் என குறிப்பிடுகிறது. மேலும் ஆதியாகமம் 11:1-9[21] இல் ஊழிவெள்ளத்துக்கு பின்பு மனிதர் பேழை தங்கிய மலையிலிருந்து வெளியேறி சமவெளி ஒன்றில் தங்கினார்கள். அங்கு அவர்கள் விண்ணை எட்டும் மிக உயரமான கோபுரம் ஒன்றை கட்டினார்கள். இது பாபேல் கோபுரம் எனப்பட்டது. பின் வந்த காலங்களில் பாபேல் என்பது பொதுவான கிரேக்க பதமான பபிலோனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.