Remove ads
From Wikipedia, the free encyclopedia
சிதியர்கள் அல்லது சகர்கள் (Scythians - Saka) (ஆட்சிக் காலம்:கிமு 7-ஆம் நூற்றாண்டு முதல் கிமு 3-ஆம் நூற்றாண்டு முடிய) என்பவர்கள் பண்டைய நடு ஆசியாவின் கால்நடைகளை மேய்க்கும் நாடோடி இனக் குழுக்கள் ஆவர்.[1][2][3][4] சிதியர்கள் மத்திய ஆசிய - ஐரோப்பாவின் யுரோசியாவின் ஸ்டெப்பிப் புல்வெளிகளில் ஆடு, மாடு, மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளை மேய்த்த நாடோடி இன மக்கள் ஆவர்.[5] சிதியர்களின் மொழிகள் அனைத்தும் கிழக்கு பாரசீக மொழியின் கிளை மொழிகள் ஆகும்.[6][7]சிதியர்கள் குதிரை வளர்ப்புக் கலையில் வல்லவர்கள். போர்களில் குதிரைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள். கட்டுமஸ்தான உடல்வாகு, வலிமை, போர்க்குணம், வீரம் நிரம்பிய ஒரு நாடோடி குழுவாக வாழ்ந்து சென்ற இடங்களை எல்லாம் கைப்பற்றிய அசாத்திய ஆக்கிரமிப்பாளர்களாக இந்த பழங்குடியினரை வரலாற்றாய்வார்கள் அடையாளப்படுத்துகிறார்கள். மத்திய ஆசியாவில் பரவலாகவும் சீனா முதல் வடக்கு கருங்கடல் பகுதிவரை இவர்களின் ஆக்கிரமிப்புச் சுவடுகளை வரலாற்றாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கிரேக்க வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, பண்டைய சிதியர்கள் கருங்கடலுக்கும் - காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள காக்கேசியா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என அறியப்படுகிறது. பிற சிதியர்களின் இனக்குழுவினரை மத்திய ஆசியாவைச் சேர்ந்த சகர்கள் என புது அசிரியப் பேரரசும் மற்றும் ஹான் சீனர்களும் குறித்துள்ளனர்.[8]
சிதியர்கள் குதிரை வளர்ப்புக் கலையில் வல்லவர்கள். போர்களில் குதிரைகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள்.[9] கி மு எட்டாம் நூற்றாண்டில் கிழக்கு சீனாவின் ஜொவ் அரச குலத்தினர் மீது படையெடுத்தனர்.[10] பின்னர் மேற்கில் போண்டிக் புல்வெளியின் சிம்மேரியர்கள் மீது படையெடுத்து போண்டிக் ஸ்டெப்பி புல்வெளி நிலங்களைக் கைப்பற்றினர்.[11] சிதியர்கள் அதிகாரத்தில் உச்சத்தில் இருந்த போது யுரேசியாவின் மொத்தப் புல்வெளி நிலங்களின் மீது அதிகாரம் செலுத்தினார்கள்.[12]
மேற்படி படையெடுப்புகளின் துவக்கத்தில், வடக்கு பாரசீக சிதியர்கள் பண்பாடு மற்றும் மொழியில் தனிக் குழுவினராகவே இருந்தனர். பிந்தைய வெண்கலக் காலத்திற்கும் அல்லது இரும்புக் காலத்திற்கு முன்னரும் வடக்கு பாரசீக சிதியர்கள், மத்திய ஐரோப்பாவின் மேற்கில் உள்ள கார்பதிய மலைகள் முதல், கிழக்கில் சீனா, வடகிழக்கில் சைபீரியா வரையிலும் பரவியிருந்தனர். சிதியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இப்பகுதிகளை மத்திய ஆசியாவின் முதல் நாடோடிப் பேரரசு என அழைத்தனர்.
தற்கால உக்ரைன், தெற்கு ஐரோப்பாவின் ரசியா, கிரிமியா பகுதிகளை ஆண்ட மேற்கு சிதியர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு விளங்கினர். சிதியர்கள் பட்டுப் பாதையை தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர்.[13] கி மு ஏழாம் நூற்றாண்டில் காக்கேசியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளில் அடிக்கடி படையெடுத்தன் வாயிலாக அப்பகுதிகளில் அரசியல், சமயம் போன்றவற்றில் முக்கிய பங்களித்தனர். கி பி 630 - 650-களில் சிதியர்கள் மேற்கு பாரசீக மேட்டு நிலங்களை கைப்பற்றினர்.[14][15]
சிதியர்கள் கி மு 612-இல் அசிரியாவை கைப்பற்றி அழித்தனர். அதைத் தொடர்ந்து அகாமனிசியப் பேரரசை வெற்றி கொண்டனர். ஆனால் கி மு நான்காம் நூற்றாண்டில் மேற்கு சிதியர்கள் மாசிடோனியா பேரரசால் பலத்த சேதம் அடைந்தனர்.[9] இருப்பினும் மத்திய ஆசியாவின் பாரசீக சர்மதியர்களை (Sarmatians) வென்றனர்.[16]
கி மு இரண்டாம் நூற்றாண்டில் சகர்கள் என அழைக்கப்படும் கிழக்கு சிதியர்கள் ஆசியப் புல்வெளி நிலங்கள் மீது படையெடுத்து தெற்காசியாவின் தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தான் வட இந்தியாவில் நிரந்தரமாக குடியேறினர்.[17][18] தெற்காசியாவில் குடிபெயர்ந்த கிழக்கு சிதியர்களை சகர்கள் (Saka or Śaka) அல்லது இந்தோ-சிதியர்கள் என அழைக்கப்பட்டனர். சீனாவின் ஆன் அரசமரபு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், சகர்கள் எனும் இந்தோ-சிதியர்களின் ஒரு கூட்டம் பாமிர் மலைகளைக் கடந்து சீனாவின் மேற்கு பகுதிகளைக் அவர்களின் பகுதிகளைக் கைப்பற்றி வாழ்ந்தனர்.[18][19]
சிதியர்கள் துவக்க கால சரத்துஸ்திர சமயத்தைப் பின்பற்றினர்.[20] சிதியர்கள் தங்களின் முந்தைய கடவுளுக்குப் பதிலாக தீக்கடவுளை வணங்கினர்.[20] போதை தரும் செடிகளை வளர்த்து உண்டனர். குறி செல்பவர்களாகவும் விளங்கினர்.[20]
மத்திய ஆசியாவின் கிழக்கு சிதியர்கள் பஷ்தூ மொழி மற்றும் பாமிரி மொழிகளையும், சகர்களின் மொழிகளையும் பேசினர். [21]மேலும் பார்சி மொழி போன்ற கிழக்கு ஈரானிய மொழிகளை பேசினர்.
மேற்கில் சிதியர்கள் சிதியோ-சர்மதியன் மொழிகளையும்; வரலாற்றின் மத்திய காலத்தில் மேற்கு சிலாவிய மொழிகள் மற்றும் துருக்கி மொழிகள் பேசினர்.
பஷ்தூன் மக்கள், பார்த்தியர்கள், ஹூணர்கள் கிழக்கு சிதியர்களின் வழித்தோன்றல்கள் எனக் கருதுகிறார்கள். மேலும் பிக்ட்ஸ், கால்ஸ், அங்கேரியர்களின் ஜாஸ்சிக் மக்கள், செர்பியர்கள், போஸ்னியர்கள், குரோசியர்கள் தங்களை மேற்கு சிதியர்களின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக் கொள்கிறார்கள்.
இந்திய பகுதியில் போர் தொடுத்த கிழக்குச் சிதியர்களின் வழித்தோன்றல்களான சகர்களின் மேற்கு சத்திரபதிகளின் அரசை, கிபி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்ர சதகர்ணியால் வெற்றி கொள்ளப்பட்டது முதல் சிதியர்களின் அரசு இந்தியாவில் படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது. பிறகு கிபி 395-இல் மேற்கு சத்திபதி மன்னர் மூன்றாம் ருத்திரசிம்மனை குப்த பேரரசர் இரண்டாம் சந்திரகுப்தர் கிபி 395-இல் தோற்கடித்து, இந்தியாவில் கிழக்குச் சிதியர்களின் வழித்தோன்றல்களின் அரசை முற்றிலும் முறியடிக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.