மங்கோலிய ஆட்சியின் அமைதியான விளைவுகளைக் குறிக்கும் சொற்றொடர் From Wikipedia, the free encyclopedia
பாக்ஸ் மங்கோலிகா (Pax Mongolica) எனும் பதத்திற்கு இலத்தீன் மொழியில் “மங்கோலிய அமைதி” என்று பொருள். இது பாக்ஸ் டாட்டரிகா என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1] இது அசல் பதமான பாக்ஸ் ரோமனாவிலிருந்து உருவானது. 13 வது மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் மங்கோலியப் படையெடுப்புகளால் ஐரோவாசியப் பகுதியில் வாழ்ந்த மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார வாழ்க்கையில் ஏற்பட்ட நிலைத்தன்மையை இது குறிக்கிறது. இந்தப் பதமானது ஒன்றுபட்ட நிருவாகத்தால் உருவான எளிதாக்கப்பட்ட தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் மங்கோலியர்களின் வெற்றிகளைத் தொடர்ந்து அதன் விளைவாக பரந்த நிலப்பரப்பில் ஏற்பட்ட அமைதியான காலம் ஆகியவற்றைப் பற்றி விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
செங்கிசு கான் (ஆட்சி 1206–1227) மற்றும் அவரது வழிவந்தவர்களின் வெற்றிகள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து கிழக்கு ஐரோப்பா வரை பரவியிருந்தது. இதனால் கிழக்கு உலகம் மேற்கு உலகத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் வணிக மையங்களை இணைக்கும் பட்டுப் பாதை, மங்கோலியப் பேரரசால் ஒரே ஆட்சியின் கீழ் வந்தது. "தங்க நகையை அணிந்திருக்கும் ஓர் இளம் பெண் பேரரசில் முழுவதும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயமின்றி பாதுகாப்பாகச் செல்ல முடியும்” என்று மங்கோலியப் பேரரசைப் பற்றிக் கூறப்பட்டது.[2][3] மங்கோலியப் பேரரசு நான்கு கானேடுகளாகப் (யுவான் வம்சம், தங்க நாடோடிக் கூட்டம், சகதை கானரசு மற்றும் ஈல்கானரசு) பிரிக்கப்பட்டபோதும், படையெடுப்புகளும் உள்நாட்டுப் போரும் ஒரு நூற்றாண்டிற்குத் தொடர்ந்த போதிலும், 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலைத்த தன்மை ஏற்பட்டது. கானேடுகளின் பிரிவு, கறுப்புச் சாவின் தொடக்கம், 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகெங்கிலும் வணிக வழித்தடங்களில் அது பரவியது போன்ற காரணங்களால் பாக்ஸ் மங்கோலிகா முடிவுக்கு வந்தது.
பாக்ஸ் மங்கோலிகாவின் அடிப்படை மங்கோலியப் பேரரசில் அமைந்துள்ளது. இது பதிமூன்றாம் நூற்றாண்டில் செங்கிசுக்கானில் இருந்து தொடங்குகிறது. அப்பகுதியில் இருந்த பல்வேறு பழங்குடியினரை வெல்லும் முயற்சியில் மங்கோலியப் பழங்குடியின சமூகம் அமைக்கப்பட்டிருந்ததை செங்கிசுக்கான் புரட்சிகரமாக மாற்றியமைத்தார்.[4] ஒவ்வொரு புது வெற்றியின் பின்னரும் மேலும் மேலும் மக்கள் செங்கிசுக்கானின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டனர். இதன் காரணமாக பழங்குடி இனத்தின் சமூக அமைப்பு வேறுபட்ட மக்களை கொண்டிருந்தது. 1203 இல் செங்கிஸ் கான் தனது படையைப் பலமாக்கும் பொருட்டு அதன் அமைப்பை மாற்றி அமைக்கும் சீர்திருத்தத்தை ஆணையிட்டார். அதே நேரத்தில் அவர் முக்காலத்தில் சமூகம் மற்றும் ராணுவத்தை பிரித்த பாரம்பரிய இன மற்றும் வாரிசு அடிப்படையிலான பிரிவுகளை பிரித்தார். அவர் தனது படைத்துறையை அருபன்களாக (பல்வேறு இனங்களின் 10 பேர் அடங்கிய குழு) அமைத்தார். ஓர் அருபனின் உறுப்பினர்கள் இன வேறுபாடின்றி ஒருவருக்கொருவர் விசுவாசமாய் இருக்குமாறு ஆணையிடப்பட்டது.[5] பத்து அருபன்கள் ஒரு சூன் அல்லது ஒரு கம்பெனியாக ஆக்கப்பட்டனர்; பத்து சூன்கள் ஒரு மிங்கன் அல்லது ஒரு படைப்பிரிவாக ஆக்கப்பட்டனர்; பத்து மிங்கன்கள் ஒரு தியுமன் அல்லது பத்தாயிரம் பேரை கொண்ட ஒரு ராணுவமாக ஆக்கப்பட்டனர். செங்கிசுக்கானின் வலிமையான படையின் இந்த பத்தின் அடிப்படையிலான அமைப்பானது படையின் மூலமோ அல்லது பணிய வைத்தோ நடு ஆசியாவின் புல்வெளியின் பல்வேறு பழங்குடியினரை வெல்வதில் தங்கள் திறமையை நிறுவிக்காட்டியது. மேலும் இது மங்கோலிய சமூகத்தை மொத்தமாக வலிமையானதாக ஆக்கியது.[6] 1206 இல் செங்கிசுக்கானின் படைத்துறை விரிவாக்கம் மங்கோலியாவின் பழங்குடியினரை ஒன்றுபடுத்தியது. அதே ஆண்டில் அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
புதிய மங்கோலிய பேரரசானது விரைவாகவே நிலப் பகுதிகளைக் கைப்பற்றத் தொடங்கியது. முதல் மங்கோலிய படையெடுப்பானது வடமேற்கு சீனாவில் இருந்த மேற்கு சியாவின் மீது நடத்தப்பட்டது.[7] 1209 இல் மங்கோலியர்கள் மேற்கு சியாவை கைப்பற்றினர். 1213 மற்றும் 1214 க்கு இடைப்பட்ட காலத்தில் மங்கோலியர்கள் ஜின் பேரரசின் பகுதிகளை கைப்பற்றினர். 1214 ஆம் ஆண்டின் முடிவில் மங்கோலியர்கள் மஞ்சள் ஆற்றின் வடக்கே இருந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றியிருந்தனர்.[7] 1221 இல் மங்கோலிய தளபதிகளான ஜெபே மற்றும் சுபுதை காஸ்பியன் கடலை சுற்றி தங்களது பயணத்தை தொடர்ந்தனர். கீவ உருசியாவுக்கு சென்றனர். சிந்து நதி யுத்தத்தின்போது துருக்கிய ஜலால் அத்-தின் மிங்புர்னுவை செங்கிஸ் கான் தோற்கடித்தார். அதே ஆண்டில் குவாரசமிய பேரரசானது தோற்கடிக்கப்பட்டது. 1235 இல் மங்கோலியர்கள் வெற்றிகரமாக கொரியா மீது படையெடுத்தனர்.[7] இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 1237 இல் படு கான் மற்றும் சுபுதை உருசியா மீதான மங்கோலிய தாக்குதலைத் தொடங்கினர். 1241 இல் அவர்கள் போலந்து மற்றும் ஹங்கேரி மீது படையெடுத்தனர். 1252 இல் மங்கோலியர்கள் தெற்கு சீன படையெடுப்பை தொடங்கினர். 1276 இல் அதன் தலைநகரான ஹாங்சோவுவை கைப்பற்றினர். 1258 இல் ஹுலாகு கான் பாக்தாத்தை கைப்பற்றினார்.[7]
ஒவ்வொரு புதிய வெற்றியும் மங்கோலியர்களுக்கு புதிய மக்களை அவர்களுடன் இணைத்து கொள்வதற்கான வாய்ப்பை அளித்தது. குறிப்பாக அயல் நாட்டு பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மங்கோலிய சமூகத்தில் இணைத்து கொள்ளப்பட்டனர். ஒவ்வொரு புதிய வெற்றியும் புதிய வணிக பாதையை அவர்களுக்கு பெற்று தந்தது. இதன் மூலம் வரி மற்றும் திறையை கட்டுப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறாக மங்கோலிய தேசியமானது நிலப் பகுதி விரிவாக்கத்தின் மூலம் ஒரு பேரரசாக மட்டும் மாறாமல் தொழினுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் அடைந்த அரசாக மாறியது.[6]
அதன் உச்ச எல்லைப் பரப்பளவின் போது மங்கோலிய பேரரசானது கிழக்கில் சாங்கைகுவானில் இருந்து மேற்கில் புடாபெஸ்ட் வரையிலும், வடக்கில் உருசியாவில் இருந்து தெற்கில் திபெத்து வரையிலும் பரவியிருந்தது. கண்டத்தின் மிகப்பெரிய பகுதியானது ஒரே அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது என்பதே இதன் பொருள் ஆகும். இதன் விளைவாக வணிகர்களால் பயன்படுத்தப்பட்ட வணிகப் பாதைகளானவை பயணம் செய்ய பாதுகாப்பானவையாக மாறின. கிழக்கில் சீனாவில் இருந்து மேற்கே பிரிட்டன் வரையிலான வணிகமானது வளர்ச்சி அடைந்து விரிவடைந்தது.[8] இவ்வாறாக, பாக்ஸ் மங்கோலிகாவானது 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளின் போது ஐரோவாசியாவில் இருந்த பல்வேறு நாகரிகங்களின் மீது அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது.
மங்கோலியர்களின் ஆட்சியின் கீழ் பழைய உலகம் முழுவதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருட்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக ஐரோவாசியாவில் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றது. தாமசு டி. ஆல்சென் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி மங்கோலிய காலகட்டத்தில் பல்வேறு தனிநபர் பரிமாற்றங்களும் நடைபெற்றன.[9] பொருளாதாரம் (முக்கியமாக வணிகமும் பொது நிதியும்), இராணுவம், மருந்துகள், வேளாண்மை, உணவு, வானியல், அச்சிடுதல், புவியியல், வரலாற்றுவரைவியல் ஆகிய துறைகளில் பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இத்தகைய முன்னேற்றங்கள் ஐரோவாசியாவில் மட்டுமல்லாமல் வடக்கு ஆப்பிரிக்காவிலும் ஏற்பட்டன.
மங்கோலியர்களின் எழுச்சிக்கு முன்னர் பழைய உலகின் அமைப்பானது தனித் தனியாகப் பிரிந்து கிடந்த ஏகாதிபத்திய அமைப்புகளைக் கொண்டு இருந்தது.[10] புதிய மங்கோலிய பேரரசானது ஒரு காலத்தில் தனித்தனியாக இருந்த நாகரிகங்களை ஒரு புதிய கண்ட அமைப்பிற்குள் ஒருங்கிணைத்தது. பட்டுப் பாதையை முக்கியமான பயண வழியாக மீண்டும் நிலை நிறுத்தியது. மங்கோலியர்களின் கீழ் ஐரோவாசியா ஒருங்கிணைந்த நிகழ்வானது, ஒருவருக்கொருவர் போட்டியிட்டு வணிகப் பாதை முழுவதும் திறை பெற்றுக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்தது. பயணம் செய்தவர்களுக்கு அதிக பாதுகாப்பை கொடுத்தது.[11] பாக்ஸ் மங்கோலிகாவின் போது, மார்க்கோ போலோ போன்ற ஐரோப்பிய வணிகர்கள் ஐரோப்பாவில் இருந்து சீனாவிற்கு, அனத்தோலியா மற்றும் சீனாவை இணைத்த, நன்றாக பராமரிக்கப்பட்ட மற்றும் நன்கு பயணிக்கப்பட்ட சாலைகளில் பயணித்தனர்.
பட்டுப் பாதையில் சீனப் பட்டு, மிளகு, இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் சாதிக்காய் ஆகியவை கொண்ட வண்டிகள் மசாலா தீவில் இருந்து மேற்கு உலகத்திற்கு கண்டங்களுக்கு இடையிலான வணிக பாதைகள் வழியாக வந்தன. கிழக்கு உலக உணவுகள் ஐரோப்பியர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.[12] இந்திய மஸ்லின்கள், பருத்தி, முத்துக்கள் மற்றும் இரத்தினக் கற்கள் ஐரோப்பாவில் விற்கப்பட்டன. ஆயுதங்கள், போர்வைகள், தோல் பொருட்கள் ஆகியவை ஈரானில் இருந்து ஐரோப்பாவில் விற்கப்பட்டன.[12] வெடிமருந்தானது சீனாவில் இருந்து ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர் திசையில், ஐரோப்பியர்கள் வெள்ளி, நல்ல துணிகள், குதிரைகள், லினன் மற்றும் பிற பொருட்களை அண்மைய மற்றும் தூரக் கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பினர்.[12] வணிகம் அதிகரிப்பு என்பது பல்வேறு நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு புதிய பொருட்கள் மற்றும் சந்தைகளை அறிமுகப்படுத்தியது. இவ்வாறாக, வணிக அமைப்பில் பங்கெடுத்த ஒவ்வொரு நாடு மற்றும் சமூகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தது. 13 ஆம் நூற்றாண்டு உலக வணிக அமைப்பில் பங்கெடுத்த பல்வேறு நகரங்கள் சீக்கிரமே அளவில் வளர்ச்சி அடைந்தன.[13]
நில வணிக பாதைகளுடன் கடல் பட்டுப் பாதையும் பொருட்களின் பரிமாற்றத்திற்கு முக்கிய காரணமாயிருந்தது. பாக்ஸ் மங்கோலிகாவை நிலைநிறுத்துவதில் பங்கெடுத்தது. இந்த கடல் சார் பட்டுப்பாதையானது தெற்கு சீனாவில் சிறிய கடலோர வழிகளில் ஆரம்பித்தது. தொழினுட்பம் மற்றும் கடல் பயணங்களின் முன்னேற்றத்திற்கு பிறகு இந்திய பெருங்கடலுக்கு செல்லும் உயர் கடல் வழிகளாக இந்த வழிகள் முன்னேற்றம் அடைந்தன. இறுதியில் அரபிக்கடல், பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக இந்த வழிகள் முன்னேற்றம் அடைந்தன.[14]
பொருட்களுடன், மக்கள், தொழில்நுட்பங்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களும் மிகத் தெளிவாக ஐரோவாசிய நிலப்பகுதி முழுவதும் முதல் முறையாக பரவின.[15] உதாரணமாக, பெய்ஜிங்கின் பேராயரான மான்டிகோர்வினோவின் யோவான் இந்தியா மற்றும் சீனாவில் ரோமானிய கத்தோலிக்க மறைபணி செய்தார். மேலும் இவர் புதிய ஏற்பாட்டை மங்கோலிய மொழிக்கும் மொழி பெயர்த்தார்.[15] நீண்ட தூர வணிகமானது தூர கிழக்கிலிருந்து ஐரோப்பாவிற்கு வியாபாரம் செய்யும் புதிய முறைகளை கொண்டு வந்தது; வங்கித்தாள், நிதி சேமிப்பு, மற்றும் காப்பீடு ஆகிய முறைகள் பாக்ஸ் மங்கோலிகாவின் போது ஐரோப்பாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டன.[16] நீண்ட தூரத்திற்கு பயணம் செய்வதை வங்கித்தாள் மிக எளிதாக்கியது. ஏனெனில் ஒரு பயணி உலோக நாணயங்களின் எடையை சுமப்பதற்கான தேவை இல்லாமல் போனது.[17]
பாக்ஸ் மங்கோலிகாவின் போது இஸ்லாமிய கணித, வானியல் மற்றும் அறிவியல் முறைகள் ஆப்பிரிக்கா, கிழக்காசியா மற்றும் ஐரோப்பாவிற்கு பரவின.[18] காகிதம் தயாரித்தல் மற்றும் அச்சிடும் முறைகள் சீனாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவின. அடிப்படை வங்கி அமைப்புகள் நிறுவப்பட்டன. பண பரிமாற்றம் மற்றும் கடன் கொடுக்கும் முறைகள் பொதுவானதாக மாறின. இதன் காரணமாக வணிகர்களின் செல்வமானது பெருமளவில் உயர்ந்தது.[19]
வணிக அமைப்பில் ஒரு பெரிய பங்காற்ற மங்கோலியாவால் முடிந்ததற்கான காரணம், அது ஆசிய கண்டத்தில் புவியியல் ரீதியாக மையப்பகுதியில் அமைந்திருந்ததும் ஆகும்.[20] பெரும்பாலான மங்கோலியப் பேரரசு முழுவதும் மங்கோலிய ராணுவத்தால் எளிதாக ஒரு வலிமையான ஆட்சியை[specify] அமைக்க முடிந்தது.[17] விநியோக வழிகள் மற்றும் வணிக பாதைகளில் பயணம் சுமூகமாக நடப்பதை ராணுவம் உறுதி செய்தது; வணிகப் பாதைகளில் பயணம் செய்யும் பயணிகளை பாதுகாக்க பாதைகளுக்கு அருகிலேயே நிலையான காவல் பகுதிகள் அமைக்கப்பட்டன.[17] மங்கோலிய பேரரசு முழுவதும் வணிகர்கள் மற்றும் வணிகத்தின் தன்மை எளிதாக பயணிப்பதற்காக மங்கோலிய ஆட்சிக்கு முன்னர் இருந்த குழப்பமான உள்ளூர் வரி மற்றும் திறை அமைப்புகள் நீக்கப்பட்டன.[17] எடைகள் மற்றும் அளவீடுளை கொண்ட ஒரு அமைப்பு தரப்படுத்தப்பட்டது.[17] வணிக பாதைகளில் பயணத்தின் கடினத்தன்மையை குறைப்பதற்காக வெயில் மாதங்களில் வணிகர்கள் மற்றும் பயணிகளுக்கு நிழல் தருவதற்காக சாலைகளின் ஓரங்களில் மரம் நடும் வேலையைக் கூட மங்கோலியர்கள் செய்தனர்; இந்த மரங்கள் குளிர்காலத்தில் சாலைகளின் இடத்தை அறிந்து கொள்வதற்காகவும் பயன்பட்டன. மரங்களை வளர்க்க முடியாத இடங்களில் மங்கோலியர்கள் கல் தூண்களை சாலைகளை அறிந்து கொள்வதற்காக எழுப்பினர்.[17]
பேரரசு முழுவதும் வணிகம் எளிதாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மங்கோலியர்கள் மற்ற நாடுகள் மற்றும் சமூகங்களுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டனர்.[17] மங்கோலிய ராணுவத்தால் அதிக முக்கியத்துவம் இல்லாத அல்லது எளிதில் அடைய முடியாத நகரங்கள் அழிக்கப்பட்டன. இதனால் கண்டம் முழுவதும் நடைபெற்ற வணிகமானது மாற்றியமைக்கப்பட்டு வழிமுறைபடுத்தப்பட்டது.[21] மங்கோலிய இராணுவமானது பெரும்பாலும் குதிரைப் படை வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. இதனால் நீண்ட தூரங்களுக்கு அவர்களால் வேகமாகவும் எளிதாகவும் பயணம் செய்ய முடிந்தது.[22]
மங்கோலியர்-ஓர்டோக் கூட்டாண்மைகளில், முதலீடுகள் மற்றும் கடன்கள் தொடர்பான பொறுப்பு என்ற கருத்துக்களை மங்கோலியர்கள் உருவாக்கினர். மங்கோலியப் பேரரசின் வணிக ஒருங்கிணைப்பை எளிதாக்குவதற்காக வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவித்தனர். மங்கோலிய காலங்களில், ஒரு மங்கோலியர்-ஓர்டோக் கூட்டாண்மையின் ஒப்பந்த அம்சங்களானவை கிராத் (நடுக்கால இஸ்லாமிய உலகத்தின் அடிப்படை நிதி கருவிகளில் ஒன்று) மற்றும் கமெண்டா ஏற்பாடுகளை நெருக்கமாக ஒத்திருந்தது. இருப்பினும், மங்கோலிய முதலீட்டாளர்கள் உலோக நாணயங்கள், காகித பணம், தங்கம் மற்றும் வெள்ளி இங்காட்கள் மற்றும் வர்த்தகம் செய்யக்கூடிய பொருட்களை கூட்டு முதலீடுகளுக்கு பயன்படுத்தினர். முதன்மையாக வட்டிக்கு விடுதல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தனர்.[23] மேலும், மங்கோலிய ஆளும் வர்க்கத்தினர், மார்க்கோபோலோ குடும்பம் உள்ளிட்ட ஐரோப்பா, நடு மற்றும் மேற்கு ஆசியாவில் இருந்து வந்த வர்த்தகர்கள் உடன் வணிக ஒப்பந்தங்களை ஏற்படுத்தினர்.[24]
யசா ("மாபெரும் சட்டம்") என்று அழைக்கப்பட்ட மங்கோலிய சட்டத்தின் நெறிகளானவை மங்கோலியப் பேரரசின் சமூகத்தின் பல இடங்களுக்கு கடினமான விதிகள் மற்றும் தண்டனைகளை வகுத்தன. குறிப்பாக வணிகம் சம்பந்தமான நெறிகள் இவ்வாறு வகுக்கப்பட்டன. யசா ஆனது பழங்குடியின காழ்ப்புணர்ச்சி மற்றும் போர்களுக்கான பாரம்பரிய காரணங்களை ஒடுக்க உதவியது. இவ்வாறாக ஒரு அமைதியான வணிக மற்றும் பயண சூழ்நிலையை உருவாக்குவதில் அது உதவி செய்தது.[25] பொருட்கள் மற்றும் விலங்குகளை திருடுவது என்பது சட்டத்துக்குப் புறம்பான செயலென ஆக்கப்பட்டது. செங்கிஸ் கான் தலைமையிலான மங்கோலிய பேரரசு அதனது தொலைந்து போன பொருட்களை கண்டுபிடிக்கும் ஒரு பெரிய அமைப்பை நிறுவியது.[26] திருட்டுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. திருடப்பட்ட பொருட்களின் மதிப்பை போல் 9 மடங்கு திருடியவர்கள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பன போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டன. இது போன்ற தண்டனைகள் மங்கோலிய சாலைகளில் திருட்டை குறைக்க உதவின.[27] யசா சட்டமானது முழுமையான மத சுதந்திரத்தை வழங்கியது. பௌத்தர்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்றோர் பேரரசு முழுவதும் சுதந்திரமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்; மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கல்லறை பெட்டகம் செய்வோர், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் போலவே மதத் தலைவர்களுக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[26] யசா சட்டங்களானவை அதை மாற்றி எழுதக்கூடிய வளைந்து கொடுக்கும் தன்மையை பெற்றிருந்தன. பேரரசின் தொலைதூரப் பகுதிகளில் இருந்த சட்டம் அமைப்புகளை யசாவானது ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விதிகளை எடுத்து அதன் மூலம் மேலும் வளர்ந்தது.[28][29]
மங்கோலிய சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஒரு படிநிலையான சட்ட நிர்வாகமானது உருவாக்கப்பட்டது. "சுக்-ஷு-ஷெங்" (ஜோங்ஷு ஷெங், 中书省) என்று அழைக்கப்பட்ட செயலக சபையானது இந்த சட்ட நிர்வாகத்திற்கு தலைமை தாங்கியது. "சிங்-ஷெங்" (Xing Sheng 行省). இந்த செயலக சபை "சிங்-ஷெங்" என்று அழைக்கப்பட்ட பத்து மாகாண அரசாங்கங்களுக்காக பணி செய்தது. சிங்ஷெங்கானது மேலும் சிறிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. சட்ட வழக்குகளை இந்த சிறிய மாவட்டங்கள் கவனித்துக் கொண்டன. "சியேன் வெயி" (xian wei 县委) என்ற பெயருடைய ஒரு காவல் ஆணையர் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கான பொறுப்பை ஏற்றிருந்தார். சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யும் அதிகாரம் அவரிடம் இருந்தது. பேரரசை இத்தகைய கூட்டாட்சி முறைக்குள் கொண்டு வந்ததன் காரணமாக கண்டம் முழுவதும் சட்டங்களை நிர்வாகப்படுத்துவது என்பது எளிதாகவும் மற்றும் அதிக திறம்படவும் நடந்தது.[30]
மங்கோலியர்கள் யாம் (மொங்கோலியம்: Өртөө, சோதனைச்சாவடி) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். தூர கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளை இணைத்த முதல் தகவல் தொடர்பு அமைப்பு இந்த யாம் தான். ஒவ்வொரு 25-30 மைல்களுக்கு அல்லது ஒரு குதிரையில் ஒரு நாளைக்கு சராசரி பயணம் செய்யக்கூடிய தூரத்திற்கு தொடர்ச்சியான குதிரை நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையங்கள் 1234 இல் ஒக்தாயி கானால் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய குதிரைகள் மற்றும் தீவனத்தை விநியோகித்தன. அவரது சகோதரர்கள் சகதை கான் மற்றும் டொலுய் மற்றும் அவரது அண்ணன் மகன் படு கான் ஆகியோர் இந்த அமைப்பை மேலும் விரிவாக்கினார்.[20]
மங்கோலிய ராணுவம் இந்த யாம் அமைப்பை நிர்வகித்தது. இந்த யாம் அமைப்பானது மங்கோலிய பகுதியில் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அமைதிப் பெருங்கடல் வரை நீண்டிருந்தது.[31] இந்த அமைப்பின் பாதைகளானவை நன்றாக அமைக்கப்பட்டு, நிதி வழங்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்பட்டன.[32] அந்த நேரத்தில் இருந்த மற்ற தகவல் தொடர்பு அமைப்புகளுடன் ஒப்பிடும் போது, இந்த நவீன தகவல் தொடர்பு மற்றும் பயண அமைப்பானது, முக்கியமான செய்திகளை அனுப்புவதை மற்றும் குறைந்த நேரத்திலேயே நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்வதை எளிதாக்கியது. ஒப்பீட்டளவில் தெளிவான தகவல் பரிமாற்றம் மற்றும் எளிதான பயணம் ஆகியவற்றின் காரணமாக மங்கோலியர்களால் அவர்களது பெரிய பேரரசை திறம்பட ஆட்சி செய்ய முடிந்தது. இதன் காரணமாக அரசியல் மற்றும் பொருளாதார நிலை தன்மையானது உறுதிப்படுத்தப்பட்டது.[20]
பாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சியானது ஒரு சில காரணிகளால் நிகழ்ந்தது: திறமையற்ற மற்றும் போட்டியிடும் தலைவர்கள், ஊழல், கிளர்ச்சிகள், நலிவு, பிரிவுப் போராட்டங்கள், படுகொலைகள், வெளி தாக்குதல்கள் மற்றும் நோய். பாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சி காரணமாக கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையில் இருந்த எளிதான வணிகமானது வீழ்ச்சி அடைந்தது.[20]
மங்கோலியப் பேரரசானது அதன் வீழ்ச்சியின் போது பல வேறுபட்ட பகுதிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒரு "கானேடு" என வரையறுக்கப்பட்டு இருந்தது. மங்கோலிய உலகமானது தனித்துவிடப்பட்ட[specify] காரணத்தால் 14 ஆம் நூற்றாண்டில் இருந்த பல்வேறு ஆட்சியாளர்கள் தங்களது சொந்த கானேடுகளின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
பாக்ஸ் மங்கோலிகாவின் வீழ்ச்சிக்கான ஒரு முக்கிய காரணி சமய சகிப்புத்தன்மை இல்லாததாகும். உருசியாவில் மங்கோலியர்கள் (தங்க நாடோடிக் கூட்டம் என்று அறியப்பட்டவர்கள்) படிப்படியாக தங்களது அதிகாரம் மற்றும் நிலப்பகுதிகளை இழந்தனர். இதற்கு காரணம் வேறு பட்ட மதங்களின் மீது அவர்களுக்கு இருந்த குறிப்பிடத்தகுந்த சகிப்பு தன்மை இன்மை ஆகும். உருசிய மங்கோலியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். அரசியல் காரணங்களுக்காக எகிப்திய அடிமை வம்சத்தவர்களுடன் இணைந்து செயலாற்றினார். ஒருமுறை டெரக் போரின்போது உருசிய மங்கோலியர்கள் பாரசீக மங்கோலியர்கள் எதிர்த்து போரிட்டனர்.[20] உருசிய மங்கோலியர்களின் கிழக்குப் பகுதியான வெள்ளை நாடோடி கூட்டமானது, இல்கானேடு மற்றும் உயர்ந்த கானுடன் நட்பு ரீதியான தொடர்புகளை கொண்டிருந்தது. பேரரசின் பரவலாக்கமானது, வணிக அமைப்பு சிதைவு மற்றும் மங்கோலிய இளவரசர்களுக்கு இடையிலான பகை ஆகியவை காரணமாக தகவல் தொடர்புக்கு கடினமான சூழ்நிலை ஏற்பட்டதால் நிகழ்ந்தது. இறுதியாக 1295 இல் பாரசீக மங்கோலிய தலைவரான கசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இது, ஒரு முஸ்லிம் ஒயிரட் தளபதியான, நவ்ருசின் அதிகாரம் வளர்வதற்கு காரணமானது.
சீனாவில் குப்லாய் கானின் வழிவந்தவர்கள் மங்கோலியர்கள் "அதிகப்படியாக சீனர்களாக" மாறியதால் அவர்களது ஆட்சி வலிமை இழந்ததாக கூறினர். இது யுவான் பேரரசர்கள் தங்கள் மங்கோலிய அடையாளத்தை நிலைநிறுத்த மற்றும் சீன கலாச்சாரத்தை ஒதுக்குவதற்காக அவர்களது குடிமக்களிடம் இருந்து விலகுவதற்கு இட்டுச் சென்றது. குப்லாய் கான் ஒரு காலத்தில் சீன கலாச்சாரம் மற்றும் அதை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் யுவான் பேரரசர்களின் ஆட்சியின் கீழ் இது தடை செய்யப்பட்டது. சீன கலாச்சாரம் மாற மாற சகிப்புத் தன்மை குறைவு என்பது மிகப் பொதுவானதாகி போனது. சில சீனர்கள் மங்கோலியர்கள் தங்களது குழந்தைகளை கொல்வதற்கு மற்றும் பாலியல் வன்புணர்வு சடங்குகளை[specify] செய்வதற்கு திட்டமிடுவதாக கருதினர். இதனால் பெரும்பாலான சீனர்கள் மங்கோலிய இனத்தை கண்டு அஞ்சினர். இது சீன ஆட்சியாளர்கள் மங்கோலியர்களை சீனாவில் இருந்து வெளியேற்றி மிங் அரசமரபை அமைப்பதற்கு இட்டுச் சென்றது.[20][33]
மங்கோலியப் பேரரசின் கானேடுகள் பிரிந்து வீழ்ச்சி அடைந்தது மட்டுமே பாக்ஸ் மங்கோலிகா வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமான முக்கிய காரணிகள் கிடையாது. அரையாப்பு ப்ளேக் அல்லது கறுப்புச் சாவின் பரவலும் பாக்ஸ் மங்கோலிகா வீழ்ச்சி அடைந்ததற்கு முக்கியமான காரணமாகும். மங்கோலியப் பேரரசானது ஒரு காலத்தில் தனித்தனியாக இருந்த பகுதிகளை இணைத்திருந்தது. கறுப்புச் சாவு வேகமாக பரவுவதை இது எளிதாக்கியது.[34] வில்லியம் ஹெச். மெக்நீல் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப்படி பிளேக் நோயானது தெற்கு சீனா மற்றும் பர்மாவின் இமாலய அடிவாரப் பகுதிகளில் நிலத்தில் வாழ்ந்த கொறிணிகளிடமிருந்து மங்கோலிய வீரர்களுக்கு அவர்கள் அந்தப் பகுதி மீது 1252 இல் படையெடுத்தபோது பரவியது.[35] 1331 இல் அரையாப்பு ப்ளேக் சீனாவில் இருந்ததாக பதிவுகள் உள்ளன.[35] கிழக்கு ஆசியாவில் இருந்து பட்டுப் பாதை வழியாக வணிகர்கள் மற்றும் மங்கோலிய வீரர்கள் மூலம் மேற்கு நாடுகளுக்கு இந்த நோய் பரவியது. பாக்ஸ் மங்கோலிகாவின் போது அவர்களால் கண்டம் முழுவதும் சுதந்திரமாக மற்றும் வேகமாக பயணிக்க முடிந்ததும் இதற்கு காரணம். ப்ளேக் தொற்று கொண்ட ஈக்கள் குதிரைகளின் பிடரி, ஒட்டகங்களின் முடிகள் அல்லது, சரக்குகள் அல்லது பொதி மூட்டைகளில் இருந்த கருப்பு எலிகளின் மேல் இருந்தன.[36] கறுப்புச் சாவின் காரணமாக சீனாவின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மற்றும் ஐரோப்பாவின் மக்கள்தொகையில் 25-50% பேரும் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[37]
மக்கள் தொகையை பொறுத்தவரையில் வீழ்ச்சியைச் சந்தித்த மங்கோலியர்களால், அவர்களது பேரரசின் தொலைதூர பகுதிகளின் மீது ஆட்சியை திறமையாக நடத்த முடியவில்லை. பிளேக் நோய் பரவ ஆரம்பித்த பிறகு அப்பகுதிகள் கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தன.[38] பாக்ஸ் மங்கோலிகா இந்த கிளர்ச்சிகள் பொருட்கள் உற்பத்தி மற்றும் வணிகப் போக்குவரத்தை பாதித்தன. இதனால் பாக்ஸ் மங்கோலிகா முடிவுக்கு வந்தது.[39]
பின் வந்த அடுத்த 300 ஆண்டுகளுக்கு சீனா தன்னை மற்ற நாடுகளிலிருந்து தனிமைப்படுத்திக் கொண்டு உள்நாட்டு விவகாரங்களை மட்டும் கவனித்துக் கொண்டது.[சான்று தேவை] சீனர்கள் தவிர மற்ற அயல் நாட்டவர்கள், அயல்நாட்டு வணிகம் மற்றும் மொழிகளை தடை செய்தது.[சான்று தேவை] கன்பூசியம் மற்றும் தாவோயியம் ஆகிய மதங்கள் தேசிய மதங்களாக மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. சீனர்கள் கலாச்சார தேக்கத்தை அனுபவித்தனர்.[40] மிங் அரசமரபின் ஆரம்பகால வருடங்களின் போது, செங் கே பயணங்களை மேற்கொண்ட போதும் உலகின் மற்ற பகுதிகளுடனான வர்த்தகம் பொதுவாக குறைந்தது.[40] "கொள்கை மாற்றம்" என்பதை விட போர்கள், தொற்றுநோய்கள் மற்றும் பரவலான இடையூறுகளே இதற்கு காரணமாகும். .[40] பொருளாதார சிக்கல்களும் ஒரு முக்கியமான உலக வர்த்தக நாடாக இருந்த சீனாவின் வீழ்ச்சிக்கு பங்களித்தன.[40] கறுப்புச் சாவானது உலகின் மற்ற பகுதிகளின் வர்த்தக அமைப்பிற்கு உடனே பரவியது. பாக்ஸ் மங்கோலிகாவின் போது பொதுவானதாகவும் மற்றும் பாராட்டப்பட்டதுமான தொலைதூர வர்த்தகமானது கிட்டத்தட்ட முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.