Remove ads
பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி, விநியோகம் மற்றும் நுகர்வு தொடர்பான சமூக அறிவியல் From Wikipedia, the free encyclopedia
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் என்ற சொல் மிகவும் பழமையான ஆய்க்கனோமிக்ஸ் என்னும் கிரேக்க மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது.
பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன
என்பனவாகும். இவைதவிர
எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், [1] கல்வி,[2] குடும்பம், சட்டம், அரசியல், சமயம்,[3] சமூக நிறுவனங்கள், போர்,[4] அறிவியலுக்கும் [5] பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.[6]
பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை.
துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது.
1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் நலப் பொருளாதாரம் எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது.
பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள் (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது:
"பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்".
இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் எனப்படுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது.
சில பொதுவான எடுகோள்கள்:
மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும்.
மதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது.
சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது.
ஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் தேவை விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது.
தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது சமநிலை விலை எனப்படுகிறது.
எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.
"அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.