Remove ads
From Wikipedia, the free encyclopedia
டாவோயிசம் அல்லது தாவோயிசம் ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு. இது பல வகையான மெய்யியல், சமயம் ஆகியவை சார்ந்த மரபுகளையும், கருத்துருக்களையும் உள்ளடக்குகிறது. இம் மரபுகள் கிழக்காசியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இவற்றுட் சில உலக அளவிலும் பரவியுள்ளன. "டோ" என்றால் வழி என்று பொருள்படும். அண்டம் இயல்பாக ஒரு "டோ" அல்லது வழியைக் கொண்டிருக்கின்றது. மனிதன் அந்த வழியை அறிந்து ஒத்துப்போகும் பொழுது அவன் முழுமை அல்லது திருப்தி அடைகின்றான் என்று தாவோயிசம் போதிக்கிறது. டாவோயிச நெறிமுறைகள் மும்மணிகள் பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை, கருணை, அடக்கம், பணிவு என்பனவாகும். தாவோயிசச் சிந்தனைகள் நலம், நீண்ட வாழ்நாள்,இறவாமை, இயல்புச் செயற்பாடு, தற்றூண்டல் (spontaneity) போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது.
மக்கள் மட்டத்திலான தாவோயிசத்தில் இயற்கை வணக்கம், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் என்பன பொதுவாகக் காணப்படுகின்றன. முறைப்படுத்திய தாவோயிசம், அதன் சடங்கு முறைகளையும், நாட்டுப்புறச் சமயத்தையும் வேறுபடுத்திக் காண்கிறது. சீன இரசவாதம், சோதிடம், சமையல், பலவகைச் சீனப் போர்க்கலைகள், சீன மரபுவழி மருத்துவம், பெங்சுயி, "சிகொங்" எனப்படும் மூச்சுப் பயிற்சி போன்றவை தாவோயிசத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன.
தாவோ என்பது சீனத் தத்துவவியலில் பல கருத்தியல்களுக்கு அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. தாவோயிசம் உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளின் இருப்பு குறித்த மூலம் மற்றும் அமைப்பு கொள்கையைக் குறிக்கிறது.[1][2] உறுதியான சடங்கு முறைகள், மற்றும் சமுதாய ஒழுங்கு ஆகியவற்றை கட்டாயப்படுத்தாத தன்மையில் இது [[கன்பூசியசியம்|கன்பூசியசியத்திலிருந்து மாறுபடுகிறது.[1]
தாவோயிசத்தின் வேர்களானது பொ.ஊ.மு. 4 ஆம் நுாற்றாண்டு வரையாவது செல்கிறது. ஆரம்பகால தாவோயிசம் அதன் அண்டவியல் கருத்துக்களை இயற்கைவாதிகளின் தத்துவங்கள் (இங்யாங்) மற்றும் இயற்கைவாதிகள் வசமிருந்தும், சீன கலாச்சாரத்தின் பழமையான நூல்களில் ஒன்றான யிஜிங் இடமிருந்தும் பெற்றுள்ளது எனலாம். இந்த நுாலானது, இயற்கையின் மாற்று சுழற்சிகளுக்கு இணங்க மனித நடத்தையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு தத்துவம் சார்ந்த வழியை விவரிக்கிறது. லாவோ சீ (சீனம்: 老子; பின்யின்: lǐozǐ; வேட்-கில்சு: லாவோட்சு) என்ற கற்பிதக் கோட்பாடு கொண்ட தாவோ தே ஜிங் என்ற கையடக்கப் புத்தகமும் பின்னர் ஜுவாங்சி எழுதிய எழுத்துக்கள் கொண்டுள்ள கருத்துக்களே தாவோயிச மரபின் மூலக்கருத்துக்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.
இன்றைய நிலையில் சீன மக்கள் குடியரசில் அலுவல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மதங்களின் தத்துவ கோட்பாடுகளில் தாவோயியத்தின் கோட்பாடும் ஒன்றாகும். தாய்வான் நாட்டிலும் தாவோயியம் அலுவல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெற்றுள்ளது. தாவோயியம் கிழக்கு ஆசியாவில் தனது தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், அது விரைந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடவில்லை. ஆனால், அது பல சமுதாயங்களிலிருந்தும் தனக்கான பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது.[3] குறிப்பாக இது ஹாங்காங், மாகாவ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளது.
மாறுதல் தானாக நிகழும் என்பது லாவோ சீ கூறிய கோட்பாடு. இதுவே 'தாவோயிசம்' என அழைக்கப்பட்டது. பிரெஞ்சுப் பேரறிஞர் இழான் பவுல் சார்த்ர முன்வைத்த 'இருத்தலியல்' (Existentialism) என்ற கோட்பாட்டுக்கும், லாவோ சீ எடுத்துரைத்த தாவோயிசக் கோட்பாட்டுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை.[4]
தாவோயியம் ஆபிரகாமிய மரபுகள் வழி வந்த மதங்களைப் போன்று ஒழுங்கமைக்கப்பட்ட மதம் என்ற வரையறைக்குள் அடங்காததாகும். அதே போன்று சீன நாட்டுப்புற மதம் வேறுபட்ட வடிவம் என்றும் சொல்லிவிட முடியாது. சீன நாட்டுப்புற மதத்திற்கும், தாவோயியத்திற்கும் சில பொதுவான கோட்பாடுகள் இருந்தாலும், தாவோயியத்தின் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைப் போதனைகளிலிருந்து சீன நாட்டுப்புற மதமானது வேறுபட்டதாகும்.[5] சீன மொழி நாகரிக வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளர்கள் இசபெல்லோ ராபினெட் மற்றும் லிவியா கோன் ஆகியோர் "தாவோயியம் ஒருபோதும் ஒருமித்த மதமாக இருக்கவில்லை, தொடர்ந்து பலவிதமான உண்மையான அனுபவங்களின் வாயிலாக உணரப்பட்ட போதனைகளைின் கலவைகளை உள்ளடக்கிய வழியாகும்“ என்ற கருத்தை ஒத்துக்கொள்கின்றனா்."[6] சீன தத்துவவாதியான சுங்-யிங் செங், சீனாவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் உட்பொதிக்கப்பட்ட ஒரு மதமாக டாயிஸத்தை கருதுகிறார். கன்பூசியம், தாவோயியம் அல்லது பிற்கால சீன பௌத்த மதம் இவை அனைத்தும் தனித்தனியான அறிவார்ந்த மற்றும் தத்துவவியல் நடைமுறை அறிவுப்புலத்தைக் கொண்டிருந்தாலும், சிந்தனையைத் துாண்டுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை மதத்தின் பெயரால் நிலைக்கச் செய்வனவாகவே இருக்கின்றன என்கிறார்.[7]
சங்-யிங்-செங் தாவோயியப் பார்வையில் சொர்க்கம் என்பது உற்றுநோக்கல் மற்றும் தியானத்திலிருந்தே கிடைக்கிறது என்கிறார். தாவோ (கற்றுக்கொடுக்கும் வழி) மனித இயல்பை சாராமல் சொர்க்கத்துக்கான வழியை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.[7] சீன வரலாற்றில், புத்த மதம், தாவோயியம், கன்பூசியம் ஆகியவை தங்களது தனித்தனியான பார்வைகளில், வழிகளில் பயணித்தாலும், அவைகளுக்கிடையே ஓர் ஒத்திசைவையும், ஒருங்கிணைப்பையும் காண்பதற்கான செயல்முறைகளை உள்ளடக்கிய முயற்சிகளையும் கொண்டுள்ளன எனலாம். இதன் காரணமாகவே, நாம் “மூன்று மதங்களின் போதனைகளிலும் காணப்படும் ஒற்றுமை” (unity of three religious teaching) (சஞ்சியோ ஏயி)".[8]
லாவோ சீ உண்மையான, மூல முதலான மதத்தன்மை உடைய தாவோயியத்தின் நிறுவனராகக் கருதப்படுகிறார். [9]அவர் உண்மையாகவே அவ்வாறானவராக இருந்திருப்பது குறித்து விவாதங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.[10][11] தாவோ தே ஜிங் – என்ற அவருடைய சிந்தையிலிருந்து உருவான நுாலானது பொ.ஊ.மு. நான்காம் நுாற்றாண்டுக்குரியதாக இருக்கிறது. [12]
தாவோயியம் தனது அண்டம் சார்ந்த தத்துவ அடிப்படைகளை, பொ.ஊ.மு. 3 ஆம் நுாற்றாண்டு முதல் பொ.ஊ.மு. 4 ஆம் நுாற்றாண்டு வரையிலான, சீனாவின் சண்டையிடும் மாநிலங்களுக்கிடையேயான காலத்தில் உருவான (யின் - யாங் மற்றும் பஞ்ச பூத நிலை என்ற) இயற்கைவாதிகளின் முக்கிய தத்துவக் கோட்பாடுகளிடமிருந்து பெற்றுள்ளது. [13] இராபினெட் தாவோயியம் வெளிப்படுவதற்கான நான்கு கூறுகளை அடையாளம் கண்டுள்ளார். அவை:
தாவேயியத்தின் சில கூறுகளை அடியொட்டிச் சென்றால் அவை வரலாற்றுக்கு முந்தைய சீன நாட்டுப்புற மதங்களுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. பின்னாளில் இவை தாவோயியத்துடன் ஒன்றிப்போயுள்ளன. [14][15] குறிப்பாக, போரிடும் மாநிலங்கள் சார்ந்த நுாற்றாண்டிற்குரிய நிகழ்வுகளான வு, சீன சமனியம் (வடக்கு சீனாவில் காணப்பட்ட சமனிக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய) மற்றும் பங்சி ஆகியவற்றிலிருந்து பல நடைமுறைகளை தாவோயிம் பெற்றுள்ளது. ஆனால், தாவோயியத்தை பின்பற்றும் பிற்காலத்தைச் சேர்ந்தவர்கள் இதை மறுக்கிறார்கள். [16] சமனியம் மற்றும் பங்சி இரண்டு வார்த்தைகளுமே மந்திர தந்திரம், மருத்துவம், எதிர்காலத்தை அறிதல், நீண்ட ஆயுளைக் கொண்ட வாழ்க்கை, பேரின்பத்தை நோக்கிய பயணம், ஆவிகளைத் துரத்தும் நடைமுறை ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தவர்களை குறிப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தைகளாகும். வு, சமன்சு அல்லது சார்செரர்சு ஆகியவை வார்த்தைகளின் மொழிபெயர்ப்புகளாவே பயன்படுத்தப்படுகின்றன. [16] பங்சியானது தத்துவார்த்தமாக இயற்கைவாதிகளின் தத்துவங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும், வானவியல் மற்றும் நாட்காட்டி சார்ந்த ஊகங்கள், எதிர்காலத்தைப் பற்றிய குறி சொல்லும் செயல்களையே அதிகம் சார்ந்துள்ளது. [17]
இரண்டாம் நுாற்றாண்டில் இறுதியில், ஐந்து முகத்தலளவை அரிசி இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட டியான்சி யின் வானவியல் தத்துவவியலாளர்களால் (பின்னர் இது செங்யி தத்துவ மரபு என அழைக்கப்பட்டது) முதன் முதலில் தாவோயியத்தின் வடிவமானது ஒழுங்கமைக்கப்பட்டது. செங்யி டாவோ மரபானது சாங் டாவோலியங் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் லாவோட் சூ தனது 142 வது வயதில் தோன்றினார் என்று கூறுகிறார். [18] டியான்சி தத்துவ மரபானது 215 ஆம் ஆண்டில் காவ் காவ் என்ற ஆட்சியாளரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு பலனாக அவராலேயே ஆட்சியின் அங்கீகாரத்தைப் பெற்றது. [19] பொ.ஊ.மு. இரண்டாம் நுாற்றாண்டின் மத்தியில் லாவோட் சூ தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்ற மேன்மை தங்கிய அங்கீகாரத்தைப் பெற்றார். [20]தாவோயியம், சாங்கிங் தத்துவ மரபு வடிவில் சீனாவில் மீண்டும் டாங் வம்சத்தின் (618–907) ஆட்சிக் காலத்தில் ஆட்சி அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பெற்றது. டாங் வம்சத்தின் பேரரசர்கள் லாவோ சீயை தங்களது உறவினர் என்று கூறிக்கொண்டனர். [21]
ஷாங்கிக் இயக்கமானது, மிகவும் முன்னதாகவே, அதாவது 4 ஆம் நூற்றாண்டில், 364 மற்றும் 370 க்கு இடையில் ஒரு குறிப்பிட்ட “யாங் சி“ க்கு கடவுளர்கள் மற்றும் ஆவிகள் மூலம் தொடர்ச்சியான வெளிப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அறிய முடிகிறது. பொ.ஊ.மு. 397 மற்றும் 402 க்கு இடையில் கே சாவோஃபு பல தொடர்ச்சியான நூல்களைத் தொகுத்தார். இந்தத் தொகுப்பே லிங்போ பள்ளி க்கான அடிப்படையாக அமைந்தது. [22] லிங்போ தத்துவ மரபானது சாங் வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் (960–1279) செல்வாக்கினை அடையப்பெற்றது.[23] பல்வேறு சாங் வம்ச பேரரசர்கள், குறிப்பாக, உய்சாங், போன்றவர்கள் தாவோயியத்தை முன்னெடுத்துச் செல்வதில் செயலுாக்கம் மிகுந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் பல்வேறு தாவோயிய உரைகளை சேகரித்து டாவோசாங் இன் அடுத்த பதிப்புகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தினர். [24]
பன்னிரெண்டாம் நுாற்றாண்டில் சான்டாங்கில் குவான்சென் தத்துவ மரபு தொடங்கப்பட்டது. 13 மற்றும் 14 ஆம் நுாற்றாண்டுகளில் இந்த மரபானது யுவான் வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் வளமும், செழுமையும் பெற்று வடக்கு சீனாவில் மிக முக்கியமான மற்றும் பெரிய தாவோயிய மரபாக விளங்கியது. 1222 ஆம் ஆண்டில் செங்கிசுகானை இந்த தத்துவ மரபின் பெருமதிப்பு பெற்ற குருவான கியு சுஜி சந்தித்தார்.செங்கிசுகான் தனது வெறித்தனமான வெற்றிகளுக்குப் பிறகும் தன்னடக்கத்தை வெளிப்படுத்தியதற்கு கியு சுஜியினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கமே காரணம் எனலாம். செங்கிசுானின் தீர்ப்பாணையின் காரணமாக இந்த சாண்டாங் தத்துவ மரபினரின் குருகுலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. [25]
ஓஷோ அவர்கள் "தாவோ"இயத்தின் கருத்துகளை முன்வைத்தும் 'சுவாங்க்தஸு' கூறிய பொன்மொழிகளை முன்வைத்தும் "நீங்கள் நிறைய சேர்த்து வைத்துள்ளீர்கள். மிகவும் நிறைய சேர்ந்து விட்டதால் உங்களுக்குள் எதுவும் ஊடுருவி செல்ல முடியாது. உங்கள் கதவுகள் மூடப்பட்டுவிட்டன. நீங்கள் மறையும்போது, நீங்கள் இல்லாதபோது கதவுகள் திறந்து கொள்கின்றன. பிறகு, நீங்கள் அளவிட முடியாத விண்ணைப்போல் ஆகிவிடுகின்றீர்கள். இதுதான் உங்களுடைய இயற்கைத் தன்மை. இதுதான் 'தாவ்(TAO)' என விளக்கம் தருகிறார் [26] .
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.