சீனாவின் யுவான் அரசமரபை நிறுவிய பேரரசர் From Wikipedia, the free encyclopedia
குப்லாய் கான்[note 4] (23 செப்டம்பர் 1215 – 18 பெப்ரவரி 1294) என்பவர் சீனாவின் யுவான் அரசமரபை தோற்றுவித்தவர் ஆவார். இவர் யுவானின் பேரரசர் ஷிசு (Emperor Shizu of Yuan) என்ற இவரது கோயில் பெயர் மற்றும் இவரது அரச பட்டப் பெயரான செத்சென் கான் (Setsen Khan) ஆகிய பெயர்களாலும் அறியப்படுகிறார். 1260 முதல் 1294 வரை மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது ககான்-பேரரசராகவும்[note 1] இவர் திகழ்ந்தார். எனினும், பேரரசு பிரிந்ததற்குப் பிறகு ககான் என்ற இவரது நிலையானது பெயரளவு நிலையாக மட்டுமே இருந்தது. 1271இல் இவர் அரசமரபின் பெயராக "பெரும் யுவான்"[note 5] என்ற பெயரை அறிவித்தார். 1294இல் இவரது இறப்பு வரை இவர் யுவான் அரசமரபை ஆண்டார்.
யுவானின் பேரரசர் ஷிசு 元世祖 செத்சென் கான் 薛禪汗 ᠰᠡᠴᠡᠨ ᠬᠠᠭᠠᠨ | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மங்கோலியப் பேரரசின் 5ஆம் ககான் (பேரரசு பிரிந்ததன் காரணமாக பெயரளவில் மட்டும் ககான்) சீனாவின் பேரரசர் (யுவான் அரசமரபின் முதல் பேரரசர்) | |||||||||||||||||||||
மங்கோலியப் பேரரசின் ககான்-பேரரசர்[note 1] | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 21 ஆகத்து 1264 – 18 பெப்ரவரி 1294[note 2] | ||||||||||||||||||||
முடிசூட்டுதல் | 5 மே 1260 | ||||||||||||||||||||
முன்னையவர் | மோங்கே கான் அரிக் போகே (பிரதிநிதி மற்றும் அரியணைக்கு உரிமை கோரியவராக) | ||||||||||||||||||||
பின்னையவர் | தெமுர் கான் (யுவான் அரசமரபு) | ||||||||||||||||||||
யுவான் அரசமரபின் பேரரசர் | |||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 18 திசம்பர் 1271 – 18 பெப்ரவரி 1294[note 3] | ||||||||||||||||||||
பின்னையவர் | தெமுர் கான் | ||||||||||||||||||||
பிறப்பு | 23 செப்டம்பர் 1215 மங்கோலியப் பேரரசு | ||||||||||||||||||||
இறப்பு | 18 பெப்ரவரி 1294 (அகவை 78) கான்பலிக், யுவான் அரசமரபு | ||||||||||||||||||||
புதைத்த இடம் | |||||||||||||||||||||
பேரரசி |
| ||||||||||||||||||||
குழந்தைகளின் பெயர்கள் | சென்சின் | ||||||||||||||||||||
| |||||||||||||||||||||
மரபு | போர்சிசின் | ||||||||||||||||||||
அரசமரபு | யுவான் | ||||||||||||||||||||
தந்தை | டொலுய் | ||||||||||||||||||||
தாய் | சோர்காக்டனி பெகி | ||||||||||||||||||||
மதம் | பௌத்தம் |
டொலுய் மற்றும் அவரது முதன்மையான மனைவி சோர்காக்டனி பெகியின் இரண்டாவது மகன் குப்லாய் ஆவார். இவர் செங்கிஸ் கானின் ஒரு பேரன் ஆவார். 1227இல் செங்கிஸ் கான் இறந்த போது இவருக்கு கிட்டத்தட்ட 12 வயதாகி இருந்தது. 1260இல் ககானாக இவரது அண்ணன் மோங்கேவுக்கு பிறகு இவர் பதவிக்கு வந்தார். ஆனால் 1264 வரை நீடித்திருந்த டொலுய் உள்நாட்டுப் போரில் இவரது தம்பி அரிக் போகேயை இவர் தோற்கடிக்க வேண்டி வந்தது. இந்நிகழ்வானது பேரரசு சிதறுண்டதன் தொடக்கத்தைக் குறித்தது.[5] ககானாக ஈல்கானரசில் இவர் தொடர்ந்து செல்வாக்கு கொண்டிருந்த போதிலும் கூட, குப்லாயின் உண்மையான அதிகாரமானது யுவான் பேரரசுக்குள் தான் அடங்கியிருந்தது. ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைவான அளவில் தங்க நாடோடிக் கூட்டம் மீதும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார்.[6][7][8] அந்நேரத்தில் மங்கோலியப் பேரரசை ஒட்டு மொத்தமாக ஒருவர் கருதினால் இவரது நாடானது அமைதிப் பெருங்கடல் முதல் கருங்கடல் வரையிலும், சைபீரியா முதல் தற்போதைய ஆப்கானித்தான் வரையிலும் விரிவடைந்திருந்தது.[9]
1271இல் குப்லாய் யுவான் அரசமரபை நிறுவினார். முந்தைய சீன அரசமரபுகளில் இருந்து மரபு வழியாக வந்த அரசமரபு யுவான் என அதிகாரப்பூர்வமாக கோரினார்.[10] யுவான் அரசமரபானது தற்போதய சீனா, மங்கோலியா, கொரியா, தெற்கு சைபீரியா மற்றும் அதன் அண்டைப் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகள் மீது ஆட்சி நடத்தியது. ககானாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலும் இவர் செல்வாக்கு பெற்றிருந்தார். 1279 வாக்கில் சாங் அரசமரபை யுவான் வென்ற நிகழ்வானது முடிக்கப்பட்டது. பாரம்பரிய சீனா முழுவதையும் ஆண்ட ஆன் சீனர் அல்லாத முதல் பேரரசராக குப்லாய் உருவானார்.
குப்லாயின் ஏகாதிபத்திய உருவப்படமானது யுவான் பேரரசர்கள் மற்றும் பேரரசிகளின் உருவப் படங்களின் ஒரு தொகுப்பின் பகுதியாகும். இது தற்போது தைவான் தலைநகர் தைபேயின் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புகளில் உள்ளது. குப்லாயின் ஏகாதிபத்திய ஆடையின் வண்ணமான வெள்ளையானது ஐந்து மூலக்கூறுகள் என்ற சீன தத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு யுவான் அரசமரபின் ஏகாதிபத்திய வண்ணமாக திகழ்ந்தது.[11]
குப்லாய் டொலுயின் நான்காவது மகன் ஆவார். சோர்காக்டனி பெகியுடன் டொலுயின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தாத்தா செங்கிஸ் கானின் அறிவுறுத்தலின் படி குப்லாய்க்கு தாதியராக பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒரு தாங்குடு பெண்ணை சோர்காக்டனி பெகி தேர்ந்தெடுத்தார். பிற்காலத்தில் இத்தாதியருக்கு குப்லாய் உயர்ந்த மரியாதை செய்தார். குவாரசமியப் பேரரசை தான் வென்றதற்குப் பிறகு வீடு திரும்புகையில் தன்னுடைய பேரன்கள் மோங்கே மற்றும் குப்லாய்க்கு ஒரு விழாவை இலி ஆற்றுக்கு அருகில் 1224இல் இவர்களது முதல் வேட்டைக்குப் பிறகு செங்கிஸ் கான் நடத்தினார்.[12] குப்லாய்க்கு அந்நேரத்தில் ஒன்பது வயதாக இருந்தது. குப்லாய் தன் அண்ணனுடன் சேர்ந்து ஒரு குழி முயலையும், ஒரு மறிமானையும் கொன்றிருந்தார். மங்கோலியப் பாரம்பரியத்தை ஒத்தவாறு குப்லாயின் நடு விரலில் கொல்லப்பட்ட விலங்குகளில் இருந்து எடுக்கப்பட்ட கொழுப்பை செங்கிஸ் கான் தடவினார். பிறகு அவர் கூறியதாவது "இச்சிறுவன் குப்லாயின் வார்த்தைகளானவை முழுவதும் மெய்யறிவுடையவையாக உள்ளன, இவற்றை நன்றாகக் கேளுங்கள் - நீங்கள் அனைவரும் நன்றாக கேளுங்கள்." வயது முதிர்ந்த செங்கிஸ் கான் இந்நிகழ்வுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து 1227இல் இறந்தார். அப்போது குப்லாய்க்கு வயது 12 ஆக இருந்தது. குப்லாயின் தந்தையான டொலுய் மங்கோலியப் பேரரசை பிரதிநிதியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டார். பிறகு செங்கிஸ் கானுக்கு அடுத்த மன்னனாக குப்லாயின் மூன்றாவது பெரியப்பா ஒக்தாயி 1229ஆம் ஆண்டு ககானாக அரியணை ஏறினார்.[சான்று தேவை]
சின் அரசமரபு மீதான மங்கோலியர்களின் படையெடுப்புக்குப் பிறகு 1236இல் ஒக்தாயி 80,000 வீடுகளையுடைய ஏபெய் மாகாணத்தை டொலுயின் குடும்பத்திற்கு கொடுத்தார். டொலுய் 1232ஆம் ஆண்டே இறந்திருந்தார். குப்லாய் இவருக்கென சொந்த பண்ணை ஒன்றையும் பெற்றார். இது 10,000 வீடுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இவர் அனுபவமற்றவராக இருந்த காரணத்தால் குப்லாய் உள்ளூர் அதிகாரிகளை கடிவாளமின்றி செயல்பட அனுமதித்தார். இவரது அதிகாரிகள் மத்தியிலான ஊழல் மற்றும் ஆக்ரோசமான வரிவிதிப்பு ஆகியவை பெரும் எண்ணிக்கையிலான ஆன் இன விவசாயிகள் தப்பித்து ஓடுவதற்கு காரணமானது. வரிவருவாய் குறைவதற்கு இது இட்டுச் சென்றது. குப்லாய் சீக்கிரமே ஏபெயிலிருந்த தனது ஒட்டு நிலத்திற்கு வந்தார். சீர்திருத்தங்களுக்கு ஆணையிட்டார். இவருக்கு உதவுவதற்காக புதிய அதிகாரிகளை இவரது தாய் சோர்காக்டனி பெகி அனுப்பினார். வரிச் சட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டன. இந்த முயற்சிகளின் காரணமாக தப்பித்துச் சென்ற மக்களில் பெரும்பாலானோர் திரும்பி வந்தனர்.[சான்று தேவை]
குப்லாய் கானின் ஆரம்ப வாழ்வின் மிக முக்கியமான மற்றும் விவாதத்திற்குரிய வகையில் இருந்தாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய அங்கமானது ஆன் பண்பாடு குறித்து இவர் படித்தது மற்றும் சம கால ஆன் பண்பாடு மீது இவருக்கு ஏற்பட்ட வலிமையான ஈர்ப்பு ஆகியவை ஆகும். வடக்கு சீனாவில் முதன்மையான பௌத்த துறவியாக இருந்த ஐயுனை குப்லாய் மங்கோலியாவில் இருந்த தன்னுடைய ஓர்டாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1242இல் கரகோரத்தில் ஐயுனை இவர் சந்தித்த போது பௌத்த தத்துவம் குறித்து அவரிடம் குப்லாய் கேட்டறிந்தார். 1243ஆம் ஆண்டு பிறந்த குப்லாயின் மகனுக்கு செஞ்சின் (சீனம்: உண்மையான தங்கம்) என்ற பெயரை வைத்தார்.[13] முன்னர் தாவோயியத்தைச் சேர்ந்தவராகவும், அந்நேரத்தில் பௌத்தத் துறவிமாகவும் இருந்த லியூ பிங்சோங்கை ஐயுன் குப்லாயிடம் அறிமும் கூட செய்து வைத்தார். லியூ ஓர் ஓவியராகவும், அழகு எழுத்தராகவும், கவிஞராகவும் மற்றும் கணிதவியலாளராகவும் திகழ்ந்தார். தற்போதைய பெய்ஜிங்கில் உள்ள தனது கோயிலுக்கு ஐயுன் திரும்பி வந்த போது லியூ குப்லாயின் ஆலோசகராக உருவானார்.[14] சீக்கிரமே குப்லாய் சான்சியைச் சேர்ந்த அறிஞரான சாவோ பியை தனது பரிவாரத்தில் சேர்த்துக் கொண்டார். உள்ளூர் மற்றும் ஏகாதிபத்திய விருப்ப எண்ணங்கள், மங்கோலியர் மற்றும் துருக்கியர் ஆகியோரிடையே சமநிலையை பேண பிற தேசியங்களைச் சேர்ந்த மக்களையும் குப்லாய் பணிக்கு அமர்த்தினார்.[சான்று தேவை]
1251இல் குப்லாயின் அண்ணன் மோங்கே மங்கோலியப் பேரரசின் கான் ஆனார். குவாரசமியாவைச் சேர்ந்த மகமூது எலாவச் மற்றும் குப்லாய் ஆகியோர் முதன்மையான சீன பகுதிக்கு அனுப்பப்பட்டனர். வடக்கு சீனாவுக்கான அரசப் பிரதிநிதி என்ற பதவியை குப்லாய் பெற்றார். தன்னுடைய ஓர்டாவை நடு உள் மங்கோலியாவுக்கு நகர்த்தினார். அரச பிரதிநிதியாக இவருடைய ஆண்டுகளின் போது குப்லாய் தன்னுடைய நிலப்பரப்பை நன்முறையில் மேலாண்மை செய்தார். ஹெனனின் விவசாய உற்பத்தியை அதிகரித்தார். சிய்யானை பெற்றதற்கு பிறகு சமூக நல செலவீனங்களை அதிகப்படுத்தினர். இச்செயல்கள் ஆன் இன போர் பிரபுக்களிடமிருந்து பெரும் பாராட்டை பெற்றன. யுவான் அரசமரபு நிறுவப்படுவதற்கு இவை இன்றியமையாததாக அமைந்தன. 1252இல் குப்லாய் மகமூது எலாவச்சை விமர்சித்தார். எலாவச் தன் ஆன் இன உதவியாளர்களால் என்றுமே உயர்வாக மதிக்கப்படவில்லை. ஒரு நீதி மறு ஆய்வின் போது சந்தேகிக்கப்பட்ட நபர்களை இவர் மரண தண்டனைக்கு உட்படுத்தினார். அரியணையை பொறுத்த வரையில் இவரது மட்டு மீறிய தன்னம்பிக்கை உடைய நடத்தைக்காக சாவோ பி இவரை தாக்கினார். மோங்கே மகமூது எலாவச்சை பதவியில் இருந்து நீக்கினர். கன்பூசிய மரபில் பயிற்றுவிக்கப்பட்ட ஆன் அதிகாரிகளிடமிருந்து இது எதிர்ப்பை ஏற்படுத்தியது.[15]
1253இல் யுன்னானைத் தாக்குமாறு குப்லாய்க்கு ஆணையிடப்பட்டது. அடி பணியுமாறு தலி இராச்சியத்திடம் வேண்ட இவர் முயற்சித்தார். ஆட்சி செய்து வந்த காவோ குடும்பமானது எதிர்ப்பு காட்டியது. மங்கோலிய தூதுவர்களை கொன்றது. மங்கோலியர்கள் தங்களது படைகளை மூன்றாக பிரித்தனர். ஒரு பிரிவானது கிழக்கே சிச்சுவான் வடிநிலத்தை நோக்கிச் சென்றது. இரண்டாவது பிரிவானது சுபுதையின் மகன் உரியங்கடையின் கீழ் மேற்கு சிச்சுவானின் மலைகள் வழியாக ஒரு கடினமான பாதையை தேர்ந்தெடுத்தது.[16] புல்வெளிகளை தாண்டி தெற்கே குப்லாய் சென்றார். முதல் பிரிவை சந்தித்தார். வடக்கிலிருந்து ஏரியின் பக்கவாட்டில் உரியங்கடை பயணித்த அதே நேரத்தில் குப்லாய் தலியின் தலைநகரத்தை கைப்பற்றினார். தன்னுடைய தூதர்களை கொன்றிருருந்த போதும் அந்நாட்டு குடிமக்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார். தலியின் பேரரசர் துவான் சிங்சி (段興智) மங்கோலியர்கள் பக்கம் கட்சி தாவினர். அவரது துருப்புக்களை பயன்படுத்தி எஞ்சிய யுன்னானை மங்கோலியர்கள் கைப்பற்றினர். தலியின் கடைசி மன்னரான துவான் சிங்சி மோங்கே கானால் முதல் துசி அல்லது உள்ளூர் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். ஓர் அமைதிப்படுத்தும் ஆணையரை அங்கே நிறுத்தி வைக்க துவான் ஒப்புக் கொண்டார்.[17] குப்லாய் திரும்பியதற்குப் பிறகு சில பிரிவுகளுக்கு மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது. 1255 மற்றும் 1256இல் அவைக்கு துவான் சிங்சி வரவழைக்கப்பட்டார். யுன்னானின் வரைபடங்களையும், இன்னும் சரணடையாத பழங்குடியினங்களை தோற்கடிப்பது குறித்த ஆலோசனைகளையும் மோங்கே கானிடம் அளிக்க அவர் முன்வந்தார். மங்கோலிய இராணுவத்திற்கு வழிகாட்டிகளாகவும், முன்வரிசை படையினராகவும் சேவையாற்ற ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான இராணுவத்திற்கு துவான் பிறகு தலைமை தாங்கினார். 1256ஆம் ஆண்டின் முடிவில் யுன்னானை உரியங்கடை முழுவதுமாக அமைதிப்படுத்தினார்.[18]
குணப்படுத்துபவர்களாக திபெத்தியத் துறவிகளின் ஆற்றலால் குப்லாய் ஈர்க்கப்பட்டார். 1253இல் சாக்கிய பள்ளியின் துரோகோன் சோக்யல் பக்பாவை இவரது பரிவாரத்தின் ஓர் உறுப்பினராக குப்லாய் ஆக்கினார். குப்லாய் மற்றும் இவரது மனைவி சாபி ஆகியோருக்கு தொடங்கி வைக்கும் சடங்கை பாக்பா நடத்தினார். 1254ஆம் ஆண்டு தனது அமைதிப்படுத்தும் ஆணையத்தின் தலைவராக கோச்சோ இராச்சியத்தின் (1231-1280) லியான் சிசியானை குப்லாய் நியமித்தார். குப்லாயின் வெற்றியால் பொறாமை கொண்ட சில அதிகாரிகள் தன்னுடைய நிலைக்கு மீறி குப்லாய் செல்வதாகவும், மோங்கேயின் தலைநகரான கரகோரத்துடன் போட்டியிடுவதன் மூலம் தன்னுடைய சொந்த பேராசை அமைத்துக் கொள்வது குறித்து கனவு காண்பதாகவும் கூறினர். 1257ஆம் ஆண்டு குப்லாயின் அதிகாரிகளை தணிக்கை செய்ய ஆலம்தார் (அரிக் போகேயின் நெருங்கிய நண்பர் மற்றும் வடக்கு சீனாவின் ஆளுநர்) மற்றும் லியூ தைப்பிங் ஆகிய இரு வரி ஆய்வாளர்களை மோங்கே கான் அனுப்பினார். அவர்கள் தவறு நடந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். விதிகள் 142 இடங்களில் மீறப்பட்டுள்ளதை பட்டியலிட்டனர். ஆன் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினர். அவர்களில் சிலரை மரண தண்டனைக்கு உட்படுத்தினர். குப்லாயின் புதிய அமைதிப்படுத்தும் ஆணையமானது ஒழிக்கப்பட்டது.[19] தன்னுடைய மனைவியுடன் சேர்த்து ஓர் இரு நபர் தூதுக்குழுவை குப்லாய் அனுப்பினார். பிறகு மோங்கேயிடம் தானாகவே நேரில் சென்று முறையிட்டார். மோங்கே பொது இடத்தில் தன்னுடைய தம்பியை மன்னித்தார். அவருடன் நட்புறவு கொண்டார்.[சான்று தேவை]
பௌத்த கோயில்களைக் கைப்பற்றியதன் மூலம் தங்களது செல்வம் மற்றும் நிலையை தாவோயியத்தைச் சேர்ந்தவர்கள் பெற்றிருந்தனர். பௌத்தத்தை தேவையற்று விமர்சிப்பதை தாவோயியத்தைச் சேர்ந்தவர்கள் நிறுத்த வேண்டுமென மோங்கே தொடர்ந்து கோரினார். குப்லாயின் நிலப்பரப்பில் தாவோயியத்தவர் மற்றும் பௌத்த சமயத்தவர்களுக்கு இடையிலான மத குருமார்களின் மோதலை முடித்து வைக்குமாறு குப்லாய்க்கு மோங்கே ஆணையிட்டார்.[20] 1258ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தாவோயிய மற்றும் பௌத்தத் தலைவர்களின் ஒரு மாநாட்டிற்கு குப்லாய் அழைப்பு விடுத்தார். அம்மாநாட்டில் தாவோயியத்தவரின் கருத்துக்களானவை அதிகாரப்பூர்வமாக மறுக்கப்பட்டன. 237 தாவோயியக் கோயில்களை பௌத்த சமயத்தைச் சார்ந்தவையாக குப்லாய் கட்டாயப்படுத்தி மாற்றினார். தாவோயிய நூல்களின் அனைத்து பிரதிகளையும் அழித்தார்.[21][22][23][24] குப்லாய் கானும், யுவான் அரசமரபும் தெளிவாக பௌத்தத்திற்கு ஆதரவளித்தனர். அதே நேரத்தில் சகதாயி கானரசு, தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் ஈல்கானரசு ஆகியவற்றில் இருந்த இவரது சம கால மன்னர்கள் வரலாற்றின் பல்வேறு நேரங்களில் இசுலாமுக்கு பின்னர் மதம் மாறினர். தங்க நாடோடிக் கூட்டத்தின் பெர்கே குப்லாயின் சகாப்தத்தின் போது ஒரே முசுலிமாகத் திகழ்ந்தார். பெர்கேவுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர் இசுலாமிற்கு மதம் மாறவில்லை.[சான்று தேவை]
1258இல் கிழக்கு இராணுவத்தின் தலைமைப் பதவியில் குப்லாயை மோங்கே அமர வைத்தார். சிச்சுவான் மீதான தாக்குதலுக்கு உதவுமாறு அவரை வரவழைத்தார். கீல் வாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததால் வீட்டில் இருக்க குப்லாய்க்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், இருந்த போதிலும் மோங்கேவுக்கு உதவுவதற்காக குப்லாய் அணி வகுக்க ஆரம்பித்தார். 1259இல் குப்லாய் வருவதற்கு முன்னர் மோங்கே இறந்து விட்டார் என்ற செய்தியானது குப்லாயை அடைந்தது. தன்னுடைய அண்ணனின் இறப்பை இரகசியமாக வைத்து, யாங்சி ஆற்றுக்கு அருகில் ஊகான் மீதான தாக்குதலைத் தொடர குப்லாய் முடிவு செய்தார். ஊச்சாங்கை குப்லாயின் படையானது முற்றுகையிட்டிருந்த நேரத்தில் உரியங்கடை இவருடன் இணைந்து கொண்டார். அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குப்லாயை இரகசியமாக சாங் மந்திரியான சியா சிதாவோ சந்தித்தார்.[சான்று தேவை] யாங்சி ஆற்றை இரு அரசுகளுக்கும் இடையிலான எல்லையாக மங்கோலியர்கள் ஒப்புக் கொண்டால், அதற்கு பதிலாக ஆண்டு தோறும் 2 இலட்சம் தேல் வெள்ளிகள் (10,000 கிலோ வெள்ளி) மற்றும் 2,00,000 பட்டுத் துணிகள் ஆகியவற்றை கொடுப்பதற்கு முன் வந்தார்.[25] முதலில் குப்லாய் இதற்கு மறுப்பு தெரிவித்தார். பிறகு சியா சிதாவோவுடன் ஓர் அமைதி உடன்படிக்கையை எட்டினார்.
குப்லாயின் தம்பி அரிக் போகே துருப்புக்களை சேர்த்து வருவதாக தன் மனைவியிடமிருந்து ஒரு செய்தியைக் குப்லாய் பெற்றார். எனவே இவர் வடக்கே மங்கோலியப் பீடபூமிக்குத் திரும்பினார்.[26] தான் வருவதற்கு முன்னரே தலைநகரமான கரகோரத்தில் அரிக் போகே ஒரு குறுல்த்தாயை (மங்கோலியப் பேரவை) நடத்தியிருப்பதை குப்லாய் அறிந்தார். பெரும்பாலான செங்கிஸ் கானின் வழித்தோன்றல்களின் ஆதரவுடன் அரிக் போகேவுக்கு பெரிய கான் என பெயரிடப்பட்டதை அறிந்தார். குப்லாயும், இவரது நான்காவது சகோதரர் ஈல்கான் குலாகுவும் இதை எதிர்த்தனர். அரியணையைப் பெறுமாறு இவரது ஆன் இன பணியாளர்கள் குப்லாயை ஊக்குவித்தனர். வடக்கு சீனா மற்றும் மஞ்சூரியாவிலிருந்த கிட்டத்தட்ட அனைத்து மூத்த போர்சிசின் இளவரசர்களும் குப்லாயின் தகுதிக்கு ஆதரவளித்தனர்.[27] தன்னுடைய சொந்த நிலப்பரப்புகளுக்கு திரும்பிய போது குப்லாய் தன்னுடைய சொந்த குறுல்த்தாய்க்கு அழைப்பு விடுத்தார். சூச்சியின் வழித்தோன்றல்கள் தவிர அனைத்து போர்சிசின் வழித்தோன்றல்களின் பிரதிநிதிகளையும் இந்த சிறிய அளவிலான பங்கேற்பாளர்கள் உள்ளடக்கியிருந்த போதிலும் பட்டத்திற்கு குப்லாயின் உரிமை கோரலுக்கு அரச குடும்பத்தின் மிகச் சில உறுப்பினர்களே ஆதரவளித்தனர். கானாக வருவதற்கு அரிக் போகேவுக்கு சட்டபூர்வமான உரிமை இருந்த போதிலும் குப்லாயை பெரிய கானாக இந்த குறுல்த்தாய் ஏப்ரல் 15, 1260 அன்று அறிவித்தது.[சான்று தேவை]
குப்லாய் மற்றும் அரிக் போகேவுக்கு இடையில் சண்டை ஏற்படுவதற்கு இது இட்டுச் சென்றது. கரகோரத்தில் இருந்த மங்கோலியத் தலைநகரம் அழிக்கப்படுவதில் முடிந்தது. சென்சி மற்றும் சிச்சுவான் ஆகிய இடங்களில் மோங்கேயின் இராணுவமானது அரிக் போகேவுக்கு ஆதரவளித்தது. சென்சி மற்றும் சிச்சுவானுக்கு லியான் சிசியானை குப்லாய் அனுப்பி வைத்தார். அங்கு அரிக் போகேயின் பொதுப்பணி நிர்வாகியான லியூ தைபிங்கை இவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தினர். தயங்கிய ஏராளமான தளபதிகளை தங்கள் பக்கம் சேர்த்தனர்.[28] தெற்கு முனையை பாதுகாப்பதற்காக குப்லாய் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக முயற்சித்தார். தன்னுடைய தூதர்களை காங்சூவிற்கு அனுப்பினார். ஆனால் சியா தன்னுடைய வாக்கை காப்பாற்றத் தவறினார். அவர்களை கைது செய்தார்.[29] சகதாயி கானரசுக்கு புதிய கானாக அபிசுகாவை குப்லாய் அனுப்பினார். அரிக் போகே அபிசுகா, இரண்டு பிற இளவரசர்கள் மற்றும் 100 பேரை கைது செய்தார். தன்னுடைய சொந்த நபரான அல்குவுக்கு சகதாயியின் நிலப்பரப்பின் கானாக மகுடம் சூட்டினார். அரிக் போகே மற்றும் குப்லாய்க்கு இடையிலான முதல் ஆயுத சண்டையில் அரிக் போகே தோற்றார். யுத்தத்தில் அரிக் போகேயின் தளபதி ஆலம்தார் கொல்லப்பட்டார். பழி வாங்க அரிக் போகே அபிசுகாவை மரண தண்டனைக்கு உட்படுத்தினார். ஒக்தாயி கானின் மகனான கதானின் ஆதரவுடன் கரகோரத்திற்கு உணவுப் பொருட்கள் செல்லும் வழிகளை குப்லாய் அடைத்தார். குப்லாயின் பெரிய இராணுவத்திடம் கரகோரமானது சீக்கிரமே வீழ்ந்தது. ஆனால் குப்லாய் அங்கிருந்து சென்ற பிறகு 1261இல் அரிக் போகே தற்காலிகமாக அந்நகரத்தை மீண்டும் கைப்பற்றினார். இசோவுவின் ஆளுநரான லீ தான் பெப்ரவரி 1262இல் மங்கோலிய ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டார். தன்னுடைய வேந்தர் சி தியான்சே மற்றும் சி சு ஆகியோருக்கு லீ தானை தாக்குமாறு குப்லாய் ஆணையிட்டார். ஒரு சில மாதங்களிலேயே லீ தானின் கிளர்ச்சியை இரு இராணுவங்களும் தொறுக்கின. தான் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். லீ தானின் மாமனாரான வாங் வென்டோங்கையும் இந்த இராணுவங்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தின. வாங் வென்டோங் குப்லாயின் ஆட்சியின் ஆரம்ப காலத்தின் போது மைய தலைமைச் செயலகத்தின் முதன்மை நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தார். குப்லாய் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த ஆன் சீன அதிகாரிகளில் ஒருவராகவும் உருவாகியிருந்தார். ஆன் இன சீனர்கள் மீது நம்பிக்கையின்மையை குப்லாய்க்கு இந்நிகழ்வானது ஏற்படுத்தியது. பேரரசராக மாறியதற்குப் பிறகு ஆன் இன போர்ப் பிரபுக்களுக்கு பட்டங்களையும், வருவாய்களையும் வழங்குவதை குப்லாய் தடை செய்தார்.[சான்று தேவை]
அரிக் போகேயால் நியமிக்கப்பட்டிருந்த சகதாயி கானான அல்கு குப்லாய்க்கு தன்னுடைய ஆதரவை அறிவித்தார். 1262இல் அரிக் போகேயால் அனுப்பப்பட்ட தண்டனை வழங்கும் ஒரு படையெடுப்பை தோற்கடித்தார். ஈல்கான் குலாகுவும் குப்லாய் பக்கம் சேர்ந்தார். அரிக் போகேயை விமர்சித்தார். ஆகத்து 21, 1264 அன்று சனடுவில் குப்லாயிடம் அரிக் போகே சரணடைந்தார். குப்லாயின் வெற்றி மற்றும் மங்கோலியாவில் அவரது ஆட்சியை மேற்கு கானரசுகளின் ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.[30] ஒரு புதிய குறுல்த்தாய்க்கு அவர்களை குப்லாய் அழைத்த போது தான் முறையின்றி பெற்ற பதவிக்கு அங்கீகாரம் வழங்குமாறு அல்கு குப்லாய் கானிடம் மாறாகக் கேட்டார். குலாகு மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய பெர்கே ஆகிய இருவரும் தங்களுக்கிடையே சண்டைகள் இருந்த போதிலும் குப்லாயின் அழைப்பை முதலில் ஏற்றுக்கொண்டனர்.[31][32] எனினும் பிறகு அவர்கள் சீக்கிரமே குறுல்த்தாய்க்கு வருவதற்கு மறுப்புத் தெரிவித்தனர். அரிக் போகேயின் முதன்மையான ஆதரவாளர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தியிருந்த போதிலும், குப்லாய் அரிக் போகேயை மன்னித்தார்.
குலாகுவிடம் சேவையாற்றிய மூன்று சூச்சி இன இளவரசர்களின் மர்மமான மரணங்கள், பகுதாது முற்றுகை மற்றும் போரில் பெறப்பட்ட பொருட்களை சமமற்ற முறையில் பகிர்ந்து கொண்டது ஆகியவை தங்க நாடோடிக் கூட்டத்துடனான ஈல்கானரசின் உறவு முறைகளைப் பாதித்தது. 1262இல் சூச்சி துருப்புகளைக் குலாகு முழுவதுமாக ஒழித்துக் கட்டினார். அரிக் போகேயுடனான குப்லாயின் சண்டையில் குப்லாய்க்கு குலாகு ஆதரவளித்தார். இது ஈல்கானரசுடனான தங்க நாடோடிக் கூட்டத்துடனான வெளிப்படையான போருக்கு வழி வகுத்தது. மங்கோலியப் பேரரசின் மேற்கு பகுதிகளில் அரசியல் பிரச்சினைகளை அமைதிப்படுத்தும் ஒரு முயற்சியாக 30,000 இளம் மங்கோலியர்களை குலாகுவிற்கு குப்லாய் வலுவூட்டல் படையாக அனுப்பினார்.[33] பெப்ரவரி 8, 1264 அன்று குலாகு இறந்தார். ஈல்கானரசை வெல்வதற்காக திபிலீசிக்கு அருகில் பெர்கே அணி வகுத்து வந்தார். ஆனால் வரும் வழியிலேயே இறந்தார். இந்த இறப்புகள் நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே சகதாயி கானரசின் அல்கு கானும் இறந்தார். தன்னுடைய குடும்ப வரலாற்றின் புதிய அதிகாரப் பூர்வ பிரதிகளில் அரிக் போகேவுக்கு பெர்கே அளித்த ஆதரவு மற்றும் குலாகுவுடனான பெர்கேயின் போர்கள் ஆகியவற்றின் காரணமாக தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாக பெர்கேயின் பெயரை எழுதுவதற்கு குப்லாய் மறுத்தார். எனினும் சூச்சியின் குடும்பமானது முறைமையான குடும்ப உறுப்பினர்களாக முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டனர்.[34]
குப்லாய் கான் புதிய ஈல்கானாக (கீழ்ப்படிந்த கான்) அபகாவை பெயரிட்டார். தங்க நாடோடிக் கூட்டத்தின் தலைநகரமான சராயின் அரியணைக்கு படுவின் பேரனான மெந்தேமுவை முன்மொழிந்தார்.[36][37] ஈல்கான்களின் ஆட்சி முடிவுக்கு வரும் காலம் வரை கிழக்கில் இருந்த குப்லாய் வழித்தோன்றல்கள் ஈல்கான்கள் மீது மேலாண்மை நிலையைத் தொடர்ந்து பெற்றிருந்தனர்.[27][38] தன்னுடைய கணவரின் இறப்பிற்குப் பிறகு குப்லாயின் அனுமதியின்றி 1265ஆம் ஆண்டு தன்னுடைய இளம் வயது மகன் முபாரக் ஷாவை அரியணையில் சகதாயி கானரசின் பேரரசியான ஒயிரட் இனத்தைச் சேர்ந்த ஒர்கானா அமர வைத்தார். இந்த அரசவையைப் பதவியில் இருந்து தூக்கி எறிவதற்காக தன்னுடைய அடைக்கலவாசி கியாசுதீன் பரக்கையும் கூட குப்லாய் அனுப்பினார்.
ஒக்தாயி குடும்பத்தின் இளவரசனான கய்டு குப்லாயின் அரசவைக்கு நபராக நேரில் வர மறுத்தார். கய்டுவை தாக்குவதற்கு பரக்கை குப்லாய் தூண்டி விட்டார். தன்னுடைய நாட்டை வடக்கு நோக்கி விரிவாக்க பரக் தொடங்கினார். 1266இல் இவர் ஆட்சியைக் கைப்பற்றினார். கய்டு மற்றும் தங்க நாடோடிக் கூட்டம் ஆகிய இரு பிரிவினருடனும் சண்டையிட்டார். தாரிம் வடிநிலத்தில் இருந்து பெரிய கானின் மேற்பார்வையாளரை வெளியேற்றினார். கய்டு மற்றும் மெந்தேமு இணைந்து குப்லாயை தோற்கடித்த போது, கிழக்கில் குப்லாய் மற்றும் மேற்கில் அபகாவுக்கு எதிராக ஒக்தாயி குடும்பம் மற்றும் தங்க நாடோடிக் கூட்டத்துடன் பரக் ஒரு கூட்டணியில் இணைந்தார். அதே நேரத்தில் குப்லாயின் நாட்டுக்கு எதிராக எந்த ஒரு நேரடி இராணுவ படையெடுப்பையும் மெந்தேமு தவித்தார். மெந்தேமுவால் கிளர்ச்சியாளர் என்று அழைக்கப்பட்ட கய்டுவை தோற்கடிக்க தங்களது ஆதரவை குப்லாய்க்கு வழங்குவதாக தங்க நாடோடிக் கூட்டம் உறுதியளித்தது.[39] தலாசு என்ற இடத்தில் நடந்த குறுல்த்தாயில் கய்டு மற்றும் மெந்தேமுவால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மீதான அவர்களின் சண்டையின் காரணமாக இவ்வாறு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது. 1269இல் மங்கோலியப் பாரசீகத்தின் இராணுவங்கள் படையெடுத்து வந்த பரக்கின் படைகளைத் தோற்கடித்தன. அடுத்த ஆண்டு பரக் இறந்த போது சகதாயி கானரசின் கட்டுப்பாட்டை கய்டு எடுத்துக் கொண்டார். மெந்தேமுவுடனான் தனது கூட்டணியை திரும்பப் பெற்றார்.[சான்று தேவை]
இதே நேரத்தில், கங்வதோவில் 1259ஆம் ஆண்டு கொர்யியோவின் வோஞ்சோங்கை (ஆட்சி. 1260-1274) அரியணையில் அமர்த்தியதற்குப் பிறகு, மற்றொரு மங்கோலியப் படையெடுப்புக்கு இராணுவத்தை திரட்டியதன் மூலம் கொரியத் தீபகற்பம் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை நிலைநாட்ட குப்லாய் முயற்சித்தார். மத்திய கிழக்கு மற்றும் காக்கேசியா மீது தங்க நாடோடிக் கூட்டம் ஒரு கண் வைத்திருந்த போதும், தங்க நாடோடிக் கூட்டம் மற்றும் ஈல்கானரசின் இரண்டு ஆட்சியாளர்களும் ஒருவருடன் மற்றொருவர் 1270இல் இணக்கமாக குப்லாய் அவர்களை கட்டாயப்படுத்தவும் கூட செய்தார்.[40]
1260இல் குப்லாய் தன்னுடைய ஆலோசகர்களில் ஒருவரான காவோ சிங்கை சாங் அரசமரபின் பேரரசர் லிசோங்கின் அரசவைக்கு அனுப்பினார். லிசோங் குப்லாயிடம் அடிபணிந்தால், அவரது அரசமரபை சரணடைய வைத்தால் குப்லாய் லிசோங்குக்கு ஓரளவு தன்னாட்சியைக் கொடுப்பார் என்று கூறுவதற்காக இத்தூதர் சென்றார்.[41] குப்லாயின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள பேரரசர் லிசோங் மறுத்து விட்டார். காவோ சிங்கை சிறைப்படுத்தினார். காவோ சிங்கை விடுதலை செய்ய ஒரு தூதுக் குழுவை குப்லாய் அனுப்பிய போது லிசோங் அவர்களை திருப்பி அனுப்பினார்.[41]
சாங் சீனாவின் கோட்டைகளை அழிக்கும் பொருட்டு ஈல்கானரசைச் சேர்ந்த இரு ஈராக்கிய முற்றுகைப் பொறியாளர்களை குப்லாய் அழைத்தார். 1273இல் சியாங்யாங்கின் வீழ்ச்சிக்குப் பிறகு குப்லாயின் தளபதிகளான அஜு மற்றும் லியூ செங் ஆகியோர் சாங் அரசமரபுக்கு எதிராக ஓர் இறுதிப் படையெடுப்புக்கு பரிந்துரைத்தனர். இதற்கு பாரினின் பயனை உச்ச பட்ச தளபதியாக குப்லாய் நியமித்தார்.[42] சீனாவை வெல்லும் தனது முயற்சிக்கு ஆதாரங்களையும், போர் வீரர்களையும் கொடுப்பதற்காக தங்க நாடோடிக் கூட்டத்தின் இரண்டாம் மக்கட்தொகை கணக்கெடுப்பைச் செம்மைப்படுத்த மோங்கே தெமூருக்கு குப்லாய் ஆணையிட்டார்.[43] இசுமோலென்சுகு மற்றும் விதேப்சுகுவில் 1274-75இல் எடுக்கப்பட்டதையும் சேர்த்து, தங்க நாடோடிக் கூட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கட்தொகை கணக்கெடுப்பானது நடைபெற்றது. பால்கன் குடா பகுதியில் மங்கோலியச் செல்வாக்கை வலிமைப்படுத்துவதற்காக நோகை கானையும் கூட கான்கள் அங்கே அனுப்பினர்.[44]
1271இல் சீனாவில் இருந்த மங்கோலிய அரசுக்கு தை யுவான் என்று குப்லாய் பெயர் மாற்றினார். தசம இலட்சக் கணக்கிலான ஆன் சீன மக்களின் கட்டுப்பாட்டை பெரும் பொருட்டு சீனாவின் பேரரசராக தன் மீதான பிறரின் கண்ணோட்டத்தை சீனமயமாக்க விரும்பினார். (தடு என்றும் அழைக்கப்பட்ட தற்போதைய பெய்ஜிங்கிற்கு) கான்பலிக்கிற்குத் தன்னுடைய மையப்பகுதியை இவர் நகர்த்திய போது பழைய தலைநகரமான கரகோரத்தில் எழுச்சி ஏற்பட்டது. இதை குப்லாயால் சிறிதளவே கட்டுப்படுத்த முடிந்தது. பழமைவாதிகளால் குப்லாயின் செயல்கள் கண்டிக்கப்பட்டன. ஆன் சீனப் பண்பாட்டுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளதாக குப்லாய் மீது இவருடைய விமர்சகர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர். அவர்கள் இவருக்கு "நம்முடைய பேரரசின் பழைய பழக்க வழக்கங்கள் ஆன் சீன சட்டங்கள் கிடையாது... பழைய பழக்க வழக்கங்கள் எதிர்காலத்தில் என்ன ஆகும்?" என்ற ஒரு செய்தியை அனுப்பினர்.[45][46] மங்கோலியர்களின் பிற உயர்குடியினரையும் கய்டு ஈர்த்தார். குப்லாய்க்குப் பதிலாக அரியணைக்கு ஒரு முறைமை வாய்ந்த வாரிசாக தன்னையும், செங்கிஸ் கானின் பாதையிலிருந்து குப்லாய் விலகிச் சென்றுவிட்டதாகவும் அறிவித்தார்.[47][48] குப்லாயின் அரசமரபில் இருந்து கட்சி தாவியவர்கள் ஒக்தாயி குடும்பத்தினரின் படைகளை பெரிதாக்கினர்.
1276இல் யுவானிடம் சாங் ஏகாதிபத்திய குடும்பமானது சரணடைந்தது. ஒட்டு மொத்த சீனாவையும் வென்ற ஆன் சீனரல்லாத முதல் மக்களாக மங்கோலியர்களை இது ஆக்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கடைசி சாங் விசுவாசிகளை யுவான் கடற்படையினர் நொறுக்கினர். சாங் பேரரசி தோவகரும், அவரது பேரன் சாங்கின் பேரரசர் கோங்கும் கான்பலிக்கில் பிறகு குடியமர வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வரி செலுத்தத் தேவையற்ற சொத்து வழங்கப்பட்டது. அவர்களது நலத்தில் குப்லாயின் மனைவி சாபி ஒரு தனிப்பட்ட கவனம் செலுத்தினார். எனினும், பிறகு குப்லாய் பேரரசர் கோங்கை ஒரு துறவியாக மாறுவதற்காக சாங்யே என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்.[சான்று தேவை]
ஒரு சக்தி வாய்ந்த பேரரசைக் கட்டமைப்பதில் குப்லாய் வெற்றி பெற்றார். கல்வி நிலையங்களையும், அலுவலகங்களையும், வணிகத் துறைமுகங்களையும், கால்வாய்களையும் உருவாக்கினார். அறிவியல் மற்றும் கலைகளுக்குப் புரவலராக விளங்கினார். மங்கோலியர்களின் பதிவானது குப்லாயின் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட 20,166 பொதுப் பள்ளிகளைப் பட்டியலிடுகிறது.[47] பெரும்பாலான ஐரோவாசியா மீது உண்மையாகவோ அல்லது பெயரளவிலோ அதிகாரத்தைப் பெற்றதற்கு மற்றும் சீனாவை வென்றதற்குப் பிறகு, சீனாவைத் தாண்டிக் காணும் ஒரு நிலையில் குப்லாய் இருந்தார்.[49] எனினும், வியட்நாம் (1258), சக்கலின் (1264), பர்மா (1277), சம்பா (1282) மற்றும் மீண்டும் வியட்நாம் (1285) மீது இவர் எடுத்த செலவீனத்தை ஏற்படுத்திய படையெடுப்புகள் இத்தகைய நாடுகளிடமிருந்து திறை பெறும் நிலையை மட்டுமே உறுதி செய்தன. இவரது சப்பானிய (1274 மற்றும் 1281), மூன்றாம் வியட்நாமிய (1287-88) மற்றும் சாவகப் (1293) படையெடுப்புகள் தோல்வியில் முடிந்தன.
இதே நேரத்தில் மங்கோலிய நிலப்பரப்புகள் மீது தொடர்ந்து படையெடுத்த சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் மம்லூக்குகளைத் தோற்கடிக்க மங்கோலியர்கள் மற்றும் மேற்கு ஐரோப்பிய (பிரெஞ்சு) சக்திகளின் ஒரு பெரும் கூட்டணியை உருவாக்க குப்லாயின் தம்பி மகனான ஈல்கான் அபகா முயற்சித்தார். அபகாவும், குப்லாயும் பெரும்பாலும் அயல் நாட்டுக் கூட்டணிகளை ஏற்படுத்துவதன் மீது கவனம் செலுத்தினர். வணிக வழிகளைத் திறந்து விட்டனர். ககான் குப்லாய் ஒரு பெரும் அரசவையுடன் ஒவ்வொரு நாளும் உணவு அருந்தினார். பல தூதுவர்கள் மற்றும் அயல்நாட்டு வணிகர்களைச் சந்தித்தார்.[சான்று தேவை]
குப்லாயின் மகன் நோமுகனும், இவரது தளபதிகளும் 1266 முதல் 1276 வரை அல்மலிக்கை ஆக்கிரமித்தனர். 1277இல் மோங்கேயின் மகன் சிரேகி தலைமையிலான, செங்கிஸ் கானின் வழிவந்த இளவரசர்களின் ஒரு குழுவானது கிளர்ச்சியில் ஈடுபட்டது. குப்லாயின் இரு மகன்கள் மற்றும் இவரது தளபதி அந்தோங்கைக் கடத்தியது. அவர்களை கய்டு மற்றும் மோங்கே தெமூரிடம் ஒப்படைத்தது. மோங்கே தெமூர் கய்டுவுடன் இன்னும் தொடர்ந்து கூட்டணியிலேயே இருந்தார். 1269இல் இக்கூட்டணி ஏற்படுத்தப்பட்டது. ஒக்தாயி வழித் தோன்றல்களிடமிருந்து குப்லாயை பாதுகாக்கத் தான் இராணுவ ஆதரவை வழங்குவதாக குப்லாயிடம் மோங்கே தெமூர் உறுதியளித்திருந்த போதிலும் இவ்வாறாக நடந்து கொண்டார்.[47] குப்லாயின் இராணுவங்கள் கிளர்ச்சியை ஒடுக்கின. மங்கோலியா மற்றும் இலி ஆற்று வடிநிலத்தில் இருந்த யுவான் கோட்டைக் காவல் படையினரை வலுப்படுத்தின. எனினும், கய்டு அல்மலிக்கின் கட்டுப்பாட்டைப் பெற்றார்.
மங்கோலியப் பழக்க வழக்கங்களை மீறியதாக இருந்ததால், 1279-80இல் இசுலாமிய (தபிபா) அல்லது யூத (கஷ்ருட்) சட்டங்களின் படி கால்நடைகளைக் கொல்லும் யாருக்கும் மரண தண்டனை என்று குப்லாய் ஆணையிட்டார்.[50] 1282இல் ஈல்கானரசின் அரியணையை தேகுதர் கைப்பற்றிய போது மம்லூக்குகளுடன் அமைதி ஏற்படுத்த அவர் முயற்சித்தார். அபகாவின் பழைய மங்கோலியர்கள் இளவரசன் அர்குனின் தலைமையில் குப்லாயிடம் முறையிட்டனர். அகமது பனகதியின் அரசியல் கொலை மற்றும் அவரது மகன்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதற்குப் பிறகு அர்குனின் முடிசூட்டு விழாவை குப்லாய் உறுதிப்படுத்தினார். அவரது தலைமை தளபதி புகாவிற்கு வேந்தர் என்ற பட்டத்தை குப்லாய் வழங்கினார்.[சான்று தேவை]
தங்க நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு கொங்கிராடு இன தளபதியை குப்லாயின் உடன் பிறப்பின் மகளான கெல்மிசு மணம் புரிந்து இருந்தார். குப்லாயின் மகன்கள் நோமுகன் மற்றும் கோக்சு ஆகியோர் திருப்பி அனுப்பப்பட வைக்கும் அளவுக்கு அவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார். சூச்சி இனத்தைச் சேர்ந்த மூன்று தலைவர்களான தொடே மோங்கே, கோச்சு, மற்றும் நோகை ஆகியோர் இளவரசர்களை விடுதலை செய்ய ஒப்புக் கொண்டனர்.[51] 1282இல் யுவான் அரசமரபுடன் ஓர் அமைதி முயற்சியாக இளவரசர்களை தங்க நாடோடிக் கூட்டத்தின் அரசவையானது விடுதலை செய்து திருப்பி அனுப்பியது. குப்லாயின் தளபதியை விடுதலை செய்யுமாறு கய்டுவையும் இணங்க வைத்தது. வெள்ளை நாடோடிக் கூட்டத்தின் கானான கோஞ்சி யுவான் மற்றும் ஈல்கானரசுடன் நட்புறவை நிறுவினார். இதற்குக் கைமாறாக ஆடம்பரப் பரிசுகள் மற்றும் தானியங்களை குப்லாயிடமிருந்து பெற்றார். [52]ககான் யார் என்பது குறித்து செங்கிஸ் கானின் குடும்பத்தின் போட்டியிட்ட பிரிவுகளுக்கு இடையே அரசியல் முரண்பாடு இருந்த போதிலும், பேரரசின் பொருளாதார மற்றும் வணிக அமைப்பானது தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருந்தது.[53][54][55][56]
குப்லாய் கான் சீனாவை தன்னுடைய முதன்மையான அடிப்படைப் பகுதியாகக் கருதினார். பெரிய கானாக இவர் அரியணைக்கு வந்து ஒரு தசாப்தத்திற்குள்ளாகவே சீனாவை ஆளுவதன் மீது கவனம் செலுத்தத் தனக்கு இருந்த தேவையை உணர்ந்தார்.[57] இவரது ஆட்சியின் தொடக்கத்தில் இருந்தே சீன அரசியல் மற்றும் பண்பாட்டு வடிவங்களை இவர் பின்பற்ற ஆரம்பித்தார். சாங் அரசமரபின் காலத்திற்கு முன்னரும், அக்காலத்தின் போதும் பெரும் சக்தியை கொண்டிருந்த மாகாணப் பிரபுக்களின் தாக்கத்தை குறைக்க குப்லாய் நடவடிக்கை எடுத்தார். 1276 வரை தன்னுடைய சீன ஆலோசகர்களை குப்லாய் பெரிதும் சார்ந்திருந்தார். லியூ பிங்சோங் மற்றும் சூ கெங் போன்ற பல ஆன் சீன ஆலோசகர்களை இவர் கொண்டிருந்தார். பல பௌத்த உய்குர்களையும் பணிக்கு அமர்த்தியிருந்தார். இவர்களில் சிலர் சீன மாவட்டங்களை ஆண்ட குடியமர்ந்த ஆணையர்களாக இருந்தனர்.[58]
தனது ஏகாதிபத்திய ஆசானாக சாக்கிய லாமாவான துரோகோன் சோக்யல் பக்பாவை குப்லாய் நியமித்தார். பேரரசின் அனைத்து பௌத்தத் துறவிகளுக்கும் மீதான சக்தியை அவருக்கு வழங்கினார். 1270 வாக்கில் பக்பா லாமா பக்பா எழுத்து முறையை உருவாக்கியதற்குப் பிறகு, ஏகாதிபத்திய ஆசானாக அவர் பதவி உயர்த்தப்பட்டார். திபெத்து மற்றும் சீனத் துறவிகளின் விவகாரங்களை நிர்வாகிப்பதற்காக பக்பா லாமாவுக்குக் கீழ் உச்சபட்ச கட்டுப்பாட்டு ஆணையத்தை குப்லாய் நிறுவினார். திபெத்தில் பக்பா இல்லாத போது திபெத்தியத் துறவியான சங்கா உயர்ந்த பதவியை அடைந்தார். ஆணையத்திற்கு பௌத்த மற்றும் திபெத்திய விவகாரங்களுக்கான ஆணையம் என்று பெயர் மாற்றம் செய்தார்.[59][60] 1286இல் அரசமரபின் முதன்மையான வருமான அதிகாரியாக சங்கா உருவானார். எனினும், இவர்களது அரசியல் ஊழலானது பின்னர் குப்லாயை கசப்புணர்வுக்கு உள்ளாக்கியது. பிற்காலத்தில் இளம் மங்கோலிய உயர்குடியினரை முழுவதுமாக குப்லாய் சார்ந்திருந்தார். சலயிர் இன அந்தோங்கு மற்றும் பாரின் இன பயன் ஆகியோர் 1265 முதல் பெரும் ஆலோசகர்களாகச் சேவையாற்றினர். அருலது இன ஒசு-தெமூர் தணிக்கைக் குழுவிற்கு தலைமை தாங்கினார். போரோகுலாவின் வழித் தோன்றலான ஒச்சிசெர் மங்கோலிய ஏகாதிபத்தியக் காவலர்களான கெசிக் மற்றும் அரண்மனை விநியோக ஆணையம் ஆகியவற்றின் தலைமைப் பதவியை வகித்தார்.[சான்று தேவை]
சியுவானின் எட்டாம் ஆண்டில் (1271) குப்லாய் அதிகாரப்பூர்வமாக யுவான் அரசமரபை உருவாக்கினார். இதைத் தொடர்ந்த ஆண்டு தன்னுடைய தலைநகராக தடுவை (சீனம்: 大都; வேட்-கில்சு: ட-டு; நேர்பொருளாக "பெரும் தலைநகரம்" மங்கோலியர்கள் இதை கான்பலிக் அல்லது தைடு என்று அறிந்திருந்தனர், இது தற்போதைய பெய்ஜிங்கில் அமைந்திருந்தது) அறிவித்தார். இவரது கோடைக் கால தலைநகரமானது சங்டுவில் (சீனம்: 上都; நேர்பொருளாக "மேல் தலைநகரம்" இது சனடு என்றும் அழைக்கப்பட்டது, இது உள் மங்கோலியாவின் தற்போதைய தோலோன் நோர் என்ற இடத்திற்கு அருகில் அமைந்திருந்தது) அமைந்திருந்தது. சீனாவை ஒன்றிணைக்க,[61] 1274இல் தெற்கு சாங் அரசமரபின் எஞ்சியவர்களுக்கு எதிராக ஒரு பெரும் தாக்குதலை குப்லாய் தொடங்கினார். 1279இல் இறுதியாக சாங் அரசமரபை அழித்தார். யாமென் யுத்தத்தில் கடைசியாக சீனாவை ஒன்றிணைத்தார். அந்த யுத்தத்தில் கடைசி சாங் பேரரசரான சாவோ பிங் கடலுக்குள் குதித்ததன் மூலம் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறாக சாங் அரசமரபு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.[62]
பெரும்பாலான யுவான் பகுதிகள் மாகாணங்களாக நிர்வகிக்கப்பட்டன. இவற்றை மொழி பெயர்க்கும் போது "தலைமைச் செயலகப் பிரிவு" என்றும் பொருள்படுகிறது. இவை ஒவ்வொன்றையும் ஓர் ஆளுநர் மற்றும் துணை ஆளுநர் நிர்வகித்தனர்.[63] இப்பகுதிகளில் முதன்மையான சீனா, மஞ்சூரியா, மங்கோலியா, மற்றும் கொரியத் தீபகற்பத்துக்குள் விரிவடைந்திருந்த ஒரு சிறப்பு செங்டோங் தலைமைச் செயலகப் பிரிவு ஆகியவையும் அடங்கும்.[64][65] நாட்டின் மையப் பகுதியானது (சீனம்: 腹裏) எஞ்சிய பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டிருந்தது. இது தற்போதைய வடக்கு சீனாவின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அரசமரபின் மிக முக்கியமான பகுதியாக இது கருதப்பட்டது. தடுவிலிருந்து சோங்சு செங் என்ற தலைமைச் செயலகப் பிரிவால் இது நேரடியாக ஆளப்பட்டது. பௌத்த மற்றும் திபெத்திய விவகாரங்களுக்கான துறை என்று அழைக்கப்பட்ட மற்றொரு உயர் நிலை நிர்வாகத் துறையால் திபெத்தானது ஆளப்பட்டது.
சீனப் பெரும் கால்வாயை மீண்டும் கட்டமைத்தது, பொதுக் கட்டடங்களைச் சீரமைத்தது மற்றும் நெடுஞ்சாலைகளை விரிவாக்கியது ஆகியவற்றின் மூலம் பொருளாதார வளர்ச்சியை குப்லாய் ஊக்குவித்தார். எனினும், இவரது உள்நாட்டுக் கொள்கையானது பழைய மங்கோலிய வாழ்க்கை முறைப் பாரம்பரியங்களின் சில அம்சங்களை உள்ளடக்கியிருந்தது. இவரது ஆட்சி தொடர்ந்த போது இந்தப் பாரம்பரியங்கள் பாரம்பரிய சீனப் பொருளாதார மற்றும் சமூகப் பண்பாட்டுடன் அடிக்கடி வளர்ந்து வந்த சண்டைகளை ஏற்படுத்தியது. 1262இல் மங்கோலியர்களின் வணிகக் கூட்டாளிகள் வரிகளுக்கு உட்பட்டவர்கள் என குப்லாய் அறிவித்தார். 1268இல் இவற்றை மேற்பார்வையிட சந்தை வரிகளின் அலுவலகத்தை உருவாக்கினார்.[66] சாங் அரசமரபை மங்கோலியர்கள் வென்றதற்குப் பிறகு முசுலிம், உய்குர் மற்றும் சீன வணிகர்கள் தங்களது செயல்பாடுகளை தென்சீனக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கும் விரிவாக்கினர்.[66] 1286இல் கடல் வாணிபமானது சந்தை வரிகளுக்கான அலுவலகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவரது அரசாங்கத்தின் வருமானத்தின் முதன்மையான ஆதாரமாக உப்பு உற்பத்தியில் கொண்டிருந்த ஏக போக நிலை திகழ்ந்தது.[67]
1227ஆம் ஆண்டு முதல் காகிதப் பணங்களை மங்கோலிய நிர்வாகமானது வெளியிட்டது.[68][69] ஆகத்து 1260இல் சியாவோசாவோ என்றழைக்கப்பட்ட முதல் ஒன்றிணைந்த காகிதப் பணத்தை குப்லாய் உருவாக்கினார். யுவான் நிலப்பரப்பு முழுவதும் காலாவதி தேதி குறிப்பிடாமல் உறுதிச் சீட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. பணத்தின் மதிப்பைக் குறைப்பதற்கு எதிரான பாதுகாப்பு அளிப்பதற்காக பணமானது வெள்ளி மற்றும் தங்கத்தின் மூலமே மாற்றப்படலாம் என்ற முறை பின்பற்றப்பட்டது. வரி செலுத்துவதும் காகிதப் பணத்தில் மட்டுமே அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1273இல் சாங் அரசமரபு மீதான தன்னுடைய படையெடுப்புக்கு நிதி திரட்டுவதற்காக அரசாங்கத்தால் ஆதரவளிக்கப்பட்ட ஒரு புதிய தொடர்ச்சியான உறுதிச் சீட்டுகளை குப்லாய் வெளியிட்டார். எனினும், நிதி கட்டுக் கோப்பு இல்லாமை மற்றும் விலைவாசி ஆகியவை இறுதியாக இந்நகர்வை ஒரு பொருளாதார அழிவாக மாற்றின. காகிதப் பணத்தின் வடிவத்தில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற தேவை இருந்தது. காகிதப் பணத்தின் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக தனியார் குடிமக்கள் மற்றும் அயல்நாட்டு வணிகர்களிடமிருந்து தங்கம் மற்றும் வெள்ளியை குப்லாயின் அரசாங்கமானது பறிமுதல் செய்தது. ஆனால், வணிகர்கள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காகிதப் பணத்தை இதற்கு மாறாகப் பெற்றனர். மாற்ற இயலாத பணத்தை உருவாக்கிய முதல் நபராக குப்லாய் கான் இவ்வாறாகக் கருதப்படுகிறார். காகித உறுதிச் சீட்டுகளானவை வரி வசூலித்தல் மற்றும் பேரரசின் நிர்வாகத்தை எளிதாக்கின. நாணயங்களை இடம் மாற்றும் செலவீனத்தைக் குறைத்தன.[70] 1287இல் குப்லாயின் மந்திரியான சங்கா சியுவான் சாவோ என்ற ஒரு புதிய பணத்தை அரசாங்கத்தின் வரவு செலவில் ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்வதற்காக உருவாக்கினார்.[71] இது மாற்ற இயலாததாக இருந்தது. செப்புப் பணங்களாக வெளியிடப்பட்டது. ஈல்கானரசின் மன்னனான கய்கடு பின்னர் இந்த அமைப்பை ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் பின்பற்ற முயற்சித்தார். இது ஒரு முழுவதுமான தோல்வியாக அமைந்தது. இதற்குப் பிறகு கய்கடு சீக்கிரமே அரசியல் கொலை செய்யப்பட்டார்.[சான்று தேவை]
ஆசியக் கலைகளை குப்லாய் ஊக்குவித்தார். சமய சகிப்புத் தன்மையுடன் விளங்கினார். தாவோயியத்துக்கு எதிராக இவரது ஆணைகள் இருந்த போதிலும் குப்லாய் தாவோயியத் துறவிகளை மதித்தார். தாவோயிய மர்ம வரிசையின் தலைவராக சாங் லியூசானை நியமித்தார்.[72] சாங்கின் ஆலோசனைக்குக் கீழ் அறிஞர்களின் நிறுவனத்தின் கீழ் தாவோயியக் கோயில்கள் கொண்டு வரப்பட்டன. இவரது பேரரசுக்கு பல ஐரோப்பியர்கள் வருகை புரிந்தனர். இதில் குறிப்பிடத்தக்கவர் இத்தாலியப் பயணியான மார்க்கோ போலோ ஆவார். இவர் 1270களில் பேரரசுக்கு வருகை புரிந்தார். பேரரசு முழுவதும் கானின் அயல் நாட்டுத் தூதுவராகச் சேவையாற்ற மார்க்கோ போலோ நியமிக்கப்பட்டார். பேரரசின் நிலங்களில் 17 ஆண்டுகளுக்கு மார்க்கோ போலோ வாழ்ந்தார்.[73][74]
தெற்கு சாங் காலத்தின் போது குபுவில் இருந்த கன்பூசியசின் ஒரு வழித் தோன்றலான யாங்செங் கோமகன் காங் துவான்யூ தெற்கு நோக்கி சாங் பேரரசருடன் குசோவுக்குத் தப்பி ஓடினார். அதே நேரத்தில் வடக்கே புதிதாக நிறுவப்பட்ட சின் அரசமரபானது குபுவில் தொடர்ந்து தங்கியிருந்த காங் துவான்யூவின் சகோதரரான காங் துவான்காவோவை யாங்செங் கோமகனாக நியமித்தது. அந்நேரம் முதல் யுவான் அரசமரபின் காலம் வரை இரண்டு யாங்செங் கோமகன்கள் இருந்தனர். குபுவில் வடக்கே ஒருவரும், குசோவில் தெற்கே மற்றொருவரும் இருந்தனர். குபுவுக்குத் திரும்பி வரும் அழைப்பானது தெற்கு யாங்செங்கின் கோமகனான காங் சூவிற்கு யுவான் அரசமரபின் பேரரசர் குப்லாய் கானால் விரிவாக்கப்பட்டது. இந்த அழைப்பை கோங் சூ நிராகரித்ததற்குப் பிறகு தெற்குப் பிரிவிடமிருந்து இப்பட்டமானது எடுத்துக் கொள்ளப்பட்டது. இக்குடும்பத்தின் வடக்குப் பிரிவினர் யாங்செங் கோமகன் என்ற பட்டத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர்.[75][76][77][78][79][80][81] தெற்குப் பிரிவானது குசோவுவில் தொடர்ந்து இருந்தது. அங்கு அவர்கள் இன்றும் கூட வாழ்ந்து வருகின்றனர். குசோவுவில் மட்டும் கன்பூசியசின் வழித்தோன்றல்கள் சுமார் 30,000 பேர் உள்ளனர்.[82][நம்பகத்தகுந்த மேற்கோள்?]
குப்லாய் கான் போன்ற யுவான் பேரரசர்கள் யூத (கஷ்ருட்) அல்லது முசுலிம் (தபிபா) சட்டங்களின் படி விலங்குகள் கொல்லப்படுவதைத் தடை செய்தனர். பிற கட்டுப்பாட்டு ஆணைகளும் தொடர்ந்தன.[83][84][85]
குப்லாய் கானின் அரசவையில் 30 முசுலிம்கள் உயரதிகாரிகளாகச் சேவையாற்றினர். அரசமரபின் 12 நிர்வாக மாவட்டங்களில் எட்டு மாவட்டங்கள் குப்லாய் கானால் நியமிக்கப்பட்ட முசுலிம் ஆளுநர்களைக் கொண்டிருந்தன.[86] முசுலிம் ஆளுநர்களில் சையசய்யிது அச்சல் சம்சல்தீன் ஒமர் யுன்னானின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். கன்பூசிய மற்றும் தாவோயியப் பாரம்பரியங்களில் நன்முறையில் கற்றறிந்த மனிதராக இவர் திகழ்ந்தார். சீனாவில் இசுலாமை இவர் பரப்பினார் என்று நம்பப்படுகிறது. பிற நிர்வாகிகளாக நசீரல்தீன் (யுன்னான்) மற்றும் மகுமூது எலாவச் (யுவான் தலை நகரத்தின் மேயர்) ஆகியோர் திகழ்ந்தனர்.
குப்லாய் கான் முசுலிம் அறிஞர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்குப் புரவலராக விளங்கினார். சென்சியில் ஒரு வானிலை ஆய்வு மையத்தை கட்டமைப்பதில் முசுலிம் வானியலாளர்கள் பங்களித்தனர்.[87] ஜமாலதீன் போன்ற வானியலாளர்கள் 7 புதிய கருவிகள் மற்றும் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தினர். சீன நாட்காட்டியைஅ சரி செய்வதற்கு இது பங்களித்தது.[சான்று தேவை]
முசுலிம் நிலப்படத் தயாரிப்பாளர்கள் பட்டுப் பாதையை ஒட்டியிருந்த அனைத்து நாடுகளின் வரைபடங்களையும் துல்லியமாக உருவாக்கினர். யுவான் ஆட்சியாளர்கள் மற்றும் வணிகர்களின் அறிவு மீது அதிக தாக்கத்தை இது ஏற்படுத்தியது.[சான்று தேவை]
முசுலிம் மருத்துவர்கள் பெய்ஜிங் மற்றும் சங்டுவில் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்தும், மருத்துவம் குறித்த தங்களது சொந்த நிலையங்களை கொண்டும் இருந்தனர். பெய்ஜிங்கில் புகழ் பெற்றிருந்த குவாங் குயி சீயானது ("விரிவான கருணைத் துறை") அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குயி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையானது பயிற்றுவிக்கப்பட்டது. அவிசென்னாவின் நூல்கள் இக்காலத்தின் போது சீனாவில் பதிப்பிக்கப்பட்டன.[88]
முசுலிம் கணிதவியலாளர்கள் சீனாவுக்கு யூக்ளீட் வடிவியல், கோள முக்கோணவியல் மற்றும் அராபிய எண்முறை ஆகியவற்றை அறிமுகப்படுத்தினர்.[89]
குப்லாய் சீனாவுக்கு முற்றுகைப் பொறியாளர்களான இசுமாயில் மற்றும் அலாவல்தீன் ஆகியோரைக் கொண்டு வந்தார். இருவரும் இணைந்து "முசுலிம் திரெபுசெத்" கல் எறியும் கருவியை (அல்லது குயிகுயி பாவோ) உருவாக்கினர். சியாங்யாங் யுத்தத்தின் போது குப்லாய் கானால் இது பயன்படுத்தப்பட்டது.[90]
கெசிக் காவலர்களின் பணிகளைக் குப்லாய் குறைத்த போதும் இவர் ஒரு புதிய ஏகாதிபத்தியக் காவல் அமைப்பை உருவாக்கினார். முதலில் இது முழுவதுமாக ஆன் இனத்தவர்களைக் கொண்டிருந்தது. பிறகு கிப்சாக்கு, ஆலன் (அசுத்), மற்றும் உருசியப் பிரிவுகளால் வலிமைப்படுத்தப்பட்டது.[91][92][93] 1263இல் இவரது சொந்த கெசிக் அமைக்கப்பட்ட போது குப்லாய் தொடக்க கால கெசிக்குகளில் மூன்றை செங்கிஸ் கானின் உதவியாளர்களான போரோகுலா, பூர்ச்சு மற்றும் முகாலியின் வழித்தோன்றல்களின் தலைமையின் கீழ் கொடுத்தார். தன்னுடைய கெசிக்கின் நான்கு பெரிய உயர்குடியினருக்கு ஜர்லிக்குகளுக்கு குறியிடும் பழக்க வழக்கத்தைக் குப்லாய் தொடங்கி வைத்தார். இப்பழக்கமானது பிற அனைத்து மங்கோலியக் கானரசுகளுக்கும் பரவியது.[94] செங்கிஸ் கான் பயன்படுத்திய அதே தசம அமைப்பைப் பயன்படுத்தி மங்கோலிய மற்றும் ஆன் பிரிவுகள் அமைக்கப்பட்டன. புதிய சேணேவி மற்றும் தொழில்நுட்பங்களை மங்கோலியர்கள் ஆர்வத்துடன் பின்பற்றினர். தெற்கு சீனாவில் ஒரு நுட்பமான மற்றும் மிதமான பாணி இராணுவப் படையெடுப்புகளைக் குப்லாயும், இவரது தளபதிகளும் பின்பற்றினர். சாங் அரசமரபைச் சீக்கிரமே வெல்வதற்கு யுவான் இராணுவத்திற்கு ஆன் மக்களின் கடற்படை தொழில்நுட்பங்களை திறம்பட இணைத்துக் கொண்டது பங்களிப்பாக அமைந்தது.[சான்று தேவை]
1285இல் திரிகுங் கக்யூ பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். சாக்கிய பௌத்த மடாலயங்களைத் தாக்கினர். சகதாயி கானான துவா கிளர்ச்சியாளர்களுக்கு உதவி புரிந்தார். காவோசங் நகரத்தை முற்றுகையிட்டார். தாரிம் வடிநிலத்திலிருந்த குப்லாயின் கோட்டைக் காவல் படையினரைத் தோற்கடித்தார்.[95] பெசுபலிக்கில் ஓர் இராணுவத்தை கய்டு அழித்தார். இதைத் தொடர்ந்த ஆண்டில் நகரத்தை ஆக்கிரமித்தார். யுவான் அரசமரபின் கிழக்குப் பகுதியில் இருந்த பாதுகாப்பான தளங்களுக்கு பல உயுகுர்கள் கஷ்கரை விட்டு வெளியேறினர். திரிகுங் கக்யூ பிரிவினரின் எதிர்ப்பைக் குப்லாயின் பேரன் புகா தெமூர் நொறுக்கினார். 1291இல் 10,000 திபெத்தியர்களைக் கொன்றார். பிறகு திபெத் முழுவதுமாக அமைதிப்படுத்தப்பட்டது.[சான்று தேவை]
குப்லாய் கான் கொரியத் தீபகற்பத்தில் இருந்த கொர்யியோ அரசு மீது படையெடுத்தார். 1260இல் திறை செலுத்தும் ஓர் அரசாக அதை மாற்றினார். 1273இல் மற்றொரு மங்கோலியத் தலையீட்டுக்குப் பிறகு கொர்யியோ மேலும் கடினமான யுவானின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.[96][97][98][99][100] கொர்யியோ ஒரு மங்கோலிய இராணுவத் தளமானது. ஏராளமான செயலற்ற இடங்கள் அங்கே நிறுவப்பட்டன. கொர்யியோ அரசவையானது மங்கோலியப் படையெடுப்புகளுக்குக் கொரியத் துருப்புக்களையும், பெருங்கடல் கடற்படையையும் வழங்கியது.[சான்று தேவை]
இவரது கன்பூசிய மரபில் பயிற்றுவிக்கப்பட்ட ஆலோசகர்களின் சிலரின் எதிர்ப்பு இருந்த போதிலும், தன்னுடைய மங்கோலிய அதிகாரிகளில் சிலரின் பரிந்துரைகளைத் தொடர்ந்து சப்பான், பர்மா, வியட்நாம் மற்றும் சாவகம் மீது படையெடுக்கக் குப்லாய் முடிவு செய்தார். வெளிப்புற நிலங்களான சக்கலின் போன்றவற்றை அடி பணிய வைக்கவும் கூட இவர் முயற்சித்தார். சக்கலினின் பூர்வீக மக்கள் 1308ஆம் ஆண்டு வாக்கில் மங்கோலியர்களிடம் இறுதியாக அடி பணிந்தனர். இது குப்லாவின் இறப்பிற்குப் பிறகு நடந்தது. இந்தச் செலவீனத்தை ஏற்படுத்திய படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், மற்றும் காகிதப் பணத்தை அறிமுகப்படுத்தியது ஆகியவை விலை வாசி உயர்வுக்குக் காரணமாயின. 1273 முதல் 1276 வரை தெற்கு சாங் அரசமரபு மற்றும் சப்பானுக்கு எதிரான போரானது காகிதப் பணம் புழக்கத்தில் விடப்படுவதை 1,10,000 டிங் மதிப்பில் இருந்து 14,20,000 டிங் மதிப்பு வரை அதிகமாக்கியது.[102]
குப்லாயின் அரசவைக்குள் இவரது மிகுந்த நம்பிக்கைக்குரிய ஆளுநர்களும், ஆலோசகர்களும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு நியமிக்கப்பட்டனர். இதில் மங்கோலியர், சேமு, கொரியர், குயி மற்றும் ஆன் மக்கள் என பல தரப்பட்ட மக்களும் இருந்தனர்.[86][103] ஓகோவு எனும் சப்பானியக் கடற்கொள்ளையர்கள் சிதைவடைந்து கொண்டிருந்த தெற்கு சாங் அரசமரபுக்கு ஆதரவைக் கொடுத்ததன் காரணமாக சப்பான் மீதான படையெடுப்புகளைக் குப்லாய் கான் தொடங்கினார்.
சப்பான் மீது படையெடுக்கக் குப்லாய் கான் இரு முறை முயற்சித்தார். இம்முயற்சிகள் தோல்வியடைந்ததற்கு மோசமான காலநிலை அல்லது கப்பலின் வடிவமைப்பில் இருந்த ஒரு குறைபாடு ஆகியவை ஒரு பங்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இக்கப்பல்கள் படகு அடிக் கட்டையற்ற ஆற்றுப் படகுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக இவரது கப்பல் குழுக்கள் அழிக்கப்பட்டன. முதலாவது படையெடுப்பு முயற்சியானது 1274ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 900 கப்பல்களைக் கொண்ட ஒரு குழு முயற்சித்தது.[104]
இரண்டாவது படையெடுப்பானது 1281இல் நடைபெற்றது. மங்கோலியர்கள் இரண்டு தனித் தனிப் படைகளை அனுப்பினர். முதல் படையானது 40,000 கொரிய, ஆன் மற்றும் மங்கோலியத் துருப்புக்களை 900 கப்பல்களில் ஏற்றிக் கொண்டு மாசன் என்ற இடத்தில் இருந்து புறப்பட்டது. அதே நேரத்தில் 1 இலட்சம் பேரை உடைய மற்றொரு படையானது தெற்கு சீனாவிலிருந்து 3,500 கப்பல்களில் புறப்பட்டது. இதில் ஒவ்வொரு கப்பலும் கிட்டத்தட்ட 240 அடி (73 மீட்டர்) நீளத்தைக் கொண்டிருந்தன. இந்தக் கப்பல் குழுவானது அவசர அவசரமாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கடலில் ஏற்படும் சீற்றங்களை எதிர் கொள்ள சரியான வழி முறைகளைக் கொண்டிருக்கவில்லை. நவம்பரில் கொரியா மற்றும் சப்பானைப் பிரிக்கும் 180 கிலோ மீட்டர் அகலமுடைய மோசமான கால நிலை கொண்ட கடல் வழியாகப் பயணித்தது. இந்நீரிணைப்பில் பாதி தொலைவில் இருந்த துசுசிமா தீவை மங்கோலியர்கள் எளிதாகக் கைப்பற்றினர். பிறகு கியூஷுவுக்கு அருகிலிருந்த இகி தீவைக் கைப்பற்றினர். சூன் 23, 1281 அன்று ககதா விரிகுடாவை கொரிய கப்பல் குழுவானது அடைந்தது. அதன் துருப்புக்கள் மற்றும் விலங்குகளை அங்கு இறக்கியது. ஆனால் சீனாவில் இருந்து புறப்பட்ட கப்பல்கள் எங்குமே தென்படவில்லை. மங்கோலியப் படைகள் இறுதியாக அகசகா யுத்தம் மற்றும் தோரிகை-கதா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தகேசகி சுவேனகாவின் சாமுராய்கள் மங்கோலிய இராணுவத்தைத் தாக்கினர். இவர்களுடன் சண்டையிட்டனர். சிரைசி மிச்சியசுவால் தலைமை தாங்கப்பட்ட வலுவூட்டல் படைகள் அவ்விடத்திற்கு வந்தடைந்தன. மங்கோலியர்களைத் தோற்கடித்தன. இதில் சுமார் 3,500 மங்கோலியர்கள் உயிரிழந்தனர்.[105]
தங்களது பழக்க வழக்கங்களைப் பின்பற்றி சாமுராய் வீரர்கள் மங்கோலியப் படைகளுக்கு எதிராகத் தனித் தனி நபராகச் சண்டையிடப் பயணித்தனர். ஆனால் மங்கோலியர்கள் தங்களது யுத்த வியூகத்தை மாற்றவில்லை. மங்கோலியர்கள் ஓர் ஒன்றிணைந்த படையாகச் சண்டையிட்டனர். தனித் தனி நபர்களாகச் சண்டையிடவில்லை. சாமுராய் மீது வெடிக்கும் ஏவுகணைகளை ஏவியும், அம்பு மழையைப் பொழிந்தும் தாக்கினர். இறுதியாக கடற்கரைப் பகுதியில் இருந்து நிலப்பகுதிக்குள் இருந்த ஒரு கோட்டைக்குள் எஞ்சியிருந்த சப்பானியர்கள் பின் வாங்கினர். மங்கோலியப் படைகள் தப்பித்து ஓடிய சப்பானியர்களை அவர்கள் பகுதிக்குள் பின் தொடரவில்லை. ஏனெனில் அப்பகுதி குறித்து நம்பிக்கைக்குரிய உளவுத் தகவல்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தனித் தனிச் சண்டைகளில் மங்கோலியப் படைகள் அவர்களது கப்பல்களுக்கு சாமுராய்களால் முறியடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இது மொத்தமாக கோவன் படையெடுப்பு (弘安の役) அல்லது "ககதா விரிகுடாவின் இரண்டாம் யுத்தம்" என்று அறியப்படுகிறது. சப்பானிய இராணுவமானது எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தங்களது கடற்கரைகளில் இரண்டு மீட்டர் உயரச் சுவர்களை அமைத்து அதன் மூலம் வலுப்படுத்தியிருந்தது. தங்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட மங்கோலியப் படைகளை எளிதாக அவர்களால் முறியடிக்க முடிந்தது.[சான்று தேவை]
கடல்சார் தொல்லியலாளர் கென்சோ கயசிதாவால் தலைமை தாங்கப்பட்ட ஓர் ஆய்வுக் குழுவானது சப்பானின் சிகா மாநிலத்தின் தகசிமா மாவட்டத்தின் மேற்குக் கரையில் இரண்டாவது படையெடுப்புக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல்களின் உடைந்த பாகங்களைக் கண்டறிந்தது. இவரது குழுவின் கண்டுபிடிப்புகள் சப்பான் மீது படையெடுக்க குப்லாய் அவசரமாகச் செயல்பட்டார் என்பதைக் காட்டுகின்றன. ஒரே ஆண்டில் இந்தப் பெரிய கப்பல் குழுவை கட்ட இவர் முயற்சித்திருந்தார். இச்செயலானது நன்முறையில் கட்டமைக்க ஐந்து ஆண்டுகள் எடுத்திருக்கும். இது சீனர்களை எந்த ஓர் எஞ்சியிருந்த கப்பல்களையும் பயன்படுத்தும் நிலைக்குக் கட்டாயப்படுத்தியது. இதில் ஆற்றுப் படகுகளும் உள்ளடங்கும். மிக முக்கியமாகக் குப்லாயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த சீனர்கள் இந்த இரு படையெடுப்புகளுக்கும் கப்பல் குழுவை வழங்கும் பொருட்டு பல கப்பல்களை அவசரமாகக் கட்டமைத்தனர். கயசிதாவின் கோட்பாட்டின் படி குப்லாய் தரமான, மூழ்குவதைத் தடுக்கும் வளைந்த அடிக் கட்டையைக் கொண்ட, பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்களை நன்முறையில் கட்டமைத்திருந்தால் சப்பானிற்கு வந்த மற்றும் சப்பானிலிருந்து சென்ற பயணத்திற்குப் பிறகு இவரது கடற்படையானது எஞ்சியிருந்திருக்கும். இவர்கள் எண்ணியதைப் போலவே இவர்களால் சப்பானை வென்றிருந்திருக்கவும் கூட முடிந்திருக்கும். அக்தோபர் 2011இல் நாகசாகியின் கடற்கரையை ஒட்டி குப்லாயின் படையெடுப்புக் கப்பல்களில் ஒன்று என்று கருதப்பட்டதன் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.[106] தன்னுடைய மங்கோலியப் போர் பிரபுக்கள் எனும் நூலில் தாவீது நிக்கோல் என்ற வரலாற்றாளர், "இழப்புகள் மற்றும் செலவீனங்களின் வகையில் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டன, அதே நேரத்தில் கிழக்காசியா முழுவதும் மங்கோலியர்கள் வெல்ல முடியாதவர்கள் என்ற பிம்பமானது உடைக்கப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இவர் மேலும் எழுதியுள்ளதன் படி, "ஒரு மூன்றாவது படையெடுப்பையும் தொடங்கக் குப்லாய் கான் முடிவெடுத்திருந்தார். பொருளாதாரத்திற்கு செலவை ஏற்படுத்திய, இவர் மற்றும் மங்கோலிய மதிப்புக்கு இழுக்கு ஏற்படுத்திய முதல் இரண்டு தோல்விகள் ஏற்பட்ட போதிலும் இவர் இவ்வாறு முடிவெடுத்திருந்தார். இவரது இறப்பு மற்றும் ஒட்டு மொத்தமாக இவரது ஆலோசகர்கள் மூன்றாவது முயற்சியாக நடக்கக் கூடாது என்று ஒப்புக் கொண்டதே இதைத் தடுத்தது.[107]
1257 முதல் 1292 வரையில் மொத்தமாக ஐந்து வெவ்வேறு ஊடுருவல்கள் மற்றும் 1258, 1285 மற்றும் 1287 ஆகிய ஆண்டுகளில் முக்கியமான படையெடுப்புகள் மூலம் குப்லாய் கான் தாய் வியட்/அன்னம் (தற்போது வியட்நாம்) மீது படையெடுத்தார். மங்கோலியர்கள் முக்கிய இராணுவத் தோல்விகளை அடைந்த போதிலும் தாய் வியட்டிடமிருந்து திறை பெரும் உறவு முறையை நிறுவியதன் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான அறிஞர்களால் இந்த மூன்று படையெடுப்புகள் வெற்றியில் முடிந்ததாகக் கருதப்படுகின்றன.[108][109][110] மாறாக, வியட்நாமிய வரலாற்றியலில் அவர்கள் "மங்கோலிய நுகத்தடிகள்" என்று அழைக்கப்படும் அயல் நாட்டுப் படையெடுப்பாளர்களுக்கு எதிராக ஒரு முக்கிய வெற்றியாக இப்போர் கருதப்படுகிறது.[111][108]
முதல் படையெடுப்பானது ஒன்றிணைந்த மங்கோலியப் பேரரசின் கீழ் 1258ஆம் ஆண்டு தொடங்கியது. சாங் அரசமரபு மீது படையெடுப்பதற்காக மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருந்த மங்கோலியப் பேரரசு இப்படையெடுப்பை நடத்தியது. வியட்நாமிய தலைநகரான தாங் லோங்கை (தற்கால அனோய்) கைப்பற்றுவதில் மங்கோலியத் தளபதி உரியங்கடை வெற்றி பெற்றார். பிறகு வடக்கு நோக்கித் திரும்பி 1259ஆம் ஆண்டில் சாங் அரசமரபு மீது தற்போதைய குவாங்ஷி என்ற இடத்தின் வழியாக, ஓர் ஒன்றிணைக்கப்பட்ட மங்கோலியத் தாக்குதலின் ஒரு பகுதியாகப் படையெடுத்தார். மோங்கே கானுக்குக் கீழான இராணுவங்கள் சிச்சுவானைத் தாக்கின. பிற மங்கோலிய இராணுவங்கள் தற்கால சாண்டோங் மற்றும் ஹெனன் ஆகிய பகுதிகளைத் தாக்கின.[112] சாங் அரசமரபுக்குத் திறை செலுத்தி வந்த வியட்நாமிய அரசமரபானது யுவான் அரசமரபுடன் திறை செலுத்தும் ஒரு முறையை நிறுவுவதற்கு இந்த முதல் படையெடுப்பு காரணமாக அமைந்தது.[113]
மேலும் பெரிய திறையைக் கோரும் எண்ணத்திலும், தாய் வியட் மற்றும் சம்பாவின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியான யுவான் மேற்பார்வையைப் பெறும் பொருட்டும் யுவான் அரசமரபானது 1285ஆம் ஆண்டு மற்றொரு படையெடுப்பைத் தொடங்கியது. தாய் வியட் மீதான இரண்டாவது படையெடுப்பானது அதன் இலக்குகளை அடைவதில் தோற்றது. 1287ஆம் ஆண்டு யுவானுடன் ஒத்துழைக்க மறுத்த தாய் வியட் ஆட்சியாளரான திரான் நான் தோங்கிற்குப் பதிலாக தங்கள் பக்கம் கட்சி மாறிய இளவரசனான திரான் இச் தக்கை அரியணையில் அமர வைக்கும் பொருட்டு மூன்றாம் படையெடுப்பைத் தொடங்கியது. இரண்டாம் மற்றும் மூன்றாம் படையெடுப்புகளின் முடிவில் தாய் வியட் மற்றும் சம்பா ஆகிய இரு நாடுகளுமே யுவான் அரசமரபின் பெயரளவிலான மேலாண்மை நிலையை ஏற்றுக் கொண்டன. மேற்கொண்ட சண்டையை தவிர்ப்பதற்காக திறை செலுத்தும் அரசுகளாக மாறின. இந்த இரண்டு படையெடுப்புகளுமே முதலில் வெற்றிகளையும், இறுதியாக மங்கோலியர்களுக்கு முக்கியமான தோல்விகளையும் கொடுத்தன.[114][115]
1277, 1283 மற்றும் 1287 ஆகிய ஆண்டுகளில் பர்மாவுக்கு எதிராக மூன்று படையெடுப்புகளை யுவான் அரசமரபு நடத்தியது. இவை மங்கோலியப் படைகளை ஐராவதி சமவெளிக்குக் கொண்டு வந்தன. அங்கு இவர்கள் பாகன் இராச்சியத்தின் தலைநகரான பாகனைக் கைப்பற்றினர். தங்களது அரசாங்கத்தை அங்கு நிறுவினர்.[116] ஒர் அதிகாரப்பூர்வ மேலாண்மை நிலையை நிறுவுவதுடன் குப்லாய் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் பாகன் இறுதியில் ஒரு திறை செலுத்தும் அரசாக மாறியது. 1368இல் மிங் அரசமரபுக்கு யுவான் அரசமரபு வீழ்ச்சியடைந்தது வரையிலும் யுவான் அரசவைக்கு திறையை பாகன் அரசு அனுப்பி வந்தது.[117] இப்பகுதிகளில் மங்கோலிய ஆர்வங்களாக வணிகம் மற்றும் திறை செலுத்தும் உறவு முறைகள் இருந்தன.[சான்று தேவை]
குப்லாய் கான் சியாம் அரசுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்தார். குறிப்பாக சியாங்மையின் இளவரசன் மங்ரை மற்றும் சுகோத்தாயின் மன்னன் இராம கமேங் ஆகியோருடன் பேணி வந்தார்.[118] நான்சாவோவில் இருந்து தெற்கு நோக்கி தாய் இனத்தவர் வெளியேற்றப்பட்டதற்குப் பிறகு உண்மையில் கெமர்களைத் தாக்குவதற்கு தாய் இனத்தவரை குப்லாய் ஊக்குவித்தார்.[118][119][120] மங்கோலியர்களுக்கு திறை செலுத்த கெமர் பேரரசின் எட்டாம் செயவர்மன் மறுத்தற்குப் பிறகு இந்நிகழ்வு நடந்தது.[118][121][122] குப்லாய்க்குத் திறை செலுத்தக் கூடாது என்பதில் எட்டாம் செயவர்மன் உறுதியாக இருந்தார். மங்கோலியத் தூதுவர்களை சிறையில் அடைத்தார்.[118][122][120] சியாமிடம் இருந்து வந்த இந்தத் தாக்குதல்கள் இறுதியாக கெமர் பேரரசை பலவீனமாக்கின. சம்பா இராச்சியத்திலிருந்து நிலம் வழியாக தெற்கு நோக்கி 1283இல் கம்போடியாவுக்குள் நுழைய மங்கோலியர்கள் பிறகு முடிவெடுத்தனர்.[123] 1284 வாக்கில் கம்போடியாவை இவர்களால் வெல்ல முடிந்தது.[124] 1285 வாக்கில் குப்லாய்க்கு திறை செலுத்த இறுதியாக எட்டாம் செயவர்மன் கட்டாயப்படுத்தப்பட்ட போது கம்போடியா நடைமுறை ரீதியில் ஒரு திறை செலுத்தும் அரசாக மாறியது.[123][125][126]
தன்னுடைய ஆட்சியின் கடைசி ஆண்டுகளின் போது குப்லாய் சாவகத்தில் (1293) இருந்த சிங்காசாரிக்கு எதிராக 20,000 முதல் 30,000 வீரர்களைக் கொண்ட ஒரு தண்டனைப் படையெடுப்பைக் கடற்படையைக் கொண்டு தொடங்கினார். ஆனால், படையெடுத்து வந்த மங்கோலியப் படைகள் மயாபாகித்து பேரரசால் பின் வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டன. 3,000க்கும் மேற்பட்ட துருப்புகளை மங்கோலியர்கள் இழந்தனர். எவ்வாறாயினும், குப்லாய் கான் இறந்த ஆண்டான 1294 வாக்கில் சுகோத்தாய் மற்றும் சியாங் மையின் தாய் இராச்சியங்கள் யுவான் அரசமரபிற்குத் திறை செலுத்தும் அரசுகளாக மாறின.[116]
குப்லாய்க்குக் கீழ் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான நேரடித் தொடர்பானது நிறுவப்பட்டது. நடு ஆசிய வணிகப் பாதைகள் மீதான மங்கோலியக் கட்டுப்பாடானது இதை சாத்தியமாக்கியது. திறன் வாய்ந்த தபால் சேவைகளின் இருப்பால் இது எளிதாகப்பட்டது. 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வணிகர்கள், பயணிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சமய தூதுவர்கள் போன்ற ஐரோப்பியர்களும், நடு ஆசியர்களும் தங்களது பயணத்தைச் சீனாவிற்கு மேற்கொண்டனர். மங்கோலிய சக்தியின் இருப்பானது ஒரு பெரும் எண்ணிக்கையிலான யுவான் குடிமக்களை போர் அல்லது வணிகம் சார்ந்து மங்கோலியப் பேரரசின் பிற பகுதிகளுக்கு பயணிக்க அனுமதியளித்தது. இவர்கள் உரூசு, பாரசீகம் மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகிய பகுதிகளை அடைந்தனர்.[சான்று தேவை]
13ஆம் நூற்றாண்டில் மொகதிசு சுல்தானகமானது முந்தைய சீன அரசுகளுடனான அதன் வணிகத்தின் வழியாக ஆசியாவில் குப்லாய் கானின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு தேவையான பெயரைப் பெற்றது.[127] மார்க்கோ போலோவின் கூற்றுப் படி சுல்தானகத்தை வேவு பார்ப்பதற்காக முக்தீசூவிற்கு ஒரு தூதுவரை குப்லாய் அனுப்பினார். ஆனால், இந்த தூதுக் குழுவானது பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவுக்குத் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட மங்கோலியத் தூதுக் குழுவை விடுவிப்பதற்காக மற்றொரு தூதுவரை குப்லாய் கான் பிறகு அனுப்பினார்.[128]
மே 5, 1260 அன்று சங்டுவில் தனது இருப்பிடத்தில் குப்லாய் கான் ககானாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு நாட்டை ஒருங்கிணைப்பதை இவர் தொடங்கினார். ஒரு மைய அரசாங்க அதிகாரியான சாங் வெங்கியான் குப்லாயால் 1260இல் தாமிங் என்ற இடத்துக்கு அனுப்பப்பட்டார். அங்கு உள்ளூர் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டிருந்ததாக தகவல் கூறப்பட்டிருந்தது. சாங்கின் நண்பரான குவோ சோவுசிங் இப்பயணத்தில் அவருடன் சென்றார். குவோ பொறியியலில் ஆர்வமுடையவராக இருந்தார். ஒரு சிறந்த வானியலாளராகவும் திகழ்ந்தார். கருவிகளை உருவாக்குவதில் திறமை பெற்றிருந்தார். அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கருவிகளைச் சார்ந்தே நல்ல வானியல் ஆய்வுகள் இருந்தன என்பதை அறிந்திருந்தார். துல்லியமான நேரத்திற்காக நீர்க் கடிகாரங்கள் மற்றும் வானியல் கோளத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்மில்லரி கோளங்கள் உள்ளிட்ட வானியல் கருவிகளைக் குவோ கட்டமைக்கத் தொடங்கினார். துருக்கிசுதானி கட்டடவியலாளரான இக்தியாரல்தீன் ககானின் நகரத்தில் (கான்பலிக்/தடு) கட்டடங்களை வடிவமைக்கத் தொடங்கினார்.[129] தன்னுடைய புதிய தலைநகரத்தை கட்டுவதற்கு அயல்நாட்டுக் கலைஞர்களையும் கூட குப்லாய் கான் பயன்படுத்தினார். அவர்களில் ஒருவர் நேவார் இனத்தைச் சேர்ந்தவரான அரானிகோ ஆவார். இவர் கான்பலிக்/தடுவில் இருந்த மிகப் பெரிய கட்டடமான வெள்ளைத் தூபியைக் கட்டினார்.[130]
நீர்ம விசைப் பொறியியலில் குவோ ஒரு முன்னணி நிபுணர் என்று குப்லாயிடம் சாங் குறிப்பிட்டார். பாசனம், தானியப் போக்குவரத்து மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கு நீர் மேலாண்மையானது முக்கியம் என்பதை குப்லாய் அறிந்திருந்தார். தடு (தற்போது பெய்ஜிங்) மற்றும் மஞ்சள் ஆற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் இத்தகைய அம்சங்கள் குறித்து பார்வையிடுமாறு குவோவை இவர் கேட்டுக் கொண்டார். தடுவிற்கு ஒரு புதிய நீர் வழங்கலை ஏற்படுத்த சென் மலையில் இருந்த பைபு நீரோடையைக் குவோ கண்டுபிடித்தார். தடுவிற்கு நீரைக் கொண்டு வர 30 கிலோ மீட்டர் நீளக் கால்வாயை வெட்டினார். வேறுபட்ட ஆற்று வடிநிலங்களுக்கு மத்தியில் நீர் வளங்களுக்காக அவற்றை இணைக்க இவர் பரிந்துரைத்தார். நீர் அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க மதகுகளுடன் கூடிய புதிய கால்வாய்களை இவர் கட்டமைத்தார். இவரால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றார். இது குப்லாயை மன நிறைவுக்கு உள்ளாக்கியது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற திட்டங்களை செயல்படுத்த குவோவிடம் குப்லாய் கேட்டுக் கொண்டார். 1264இல் கான்சு பகுதியில் மங்கோலியா முன்னேற்றதின் போது ஆண்டுக் கணக்கில் நடைபெற்ற போரால் நீர்ப்பாசன அமைப்புகள் சேதமடைந்திருந்தன. அவற்றைச் சீரமைக்க அங்கு செல்லுமாறு இவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். தன்னுடைய நண்பர் சாங்குடன் குவோ விரிவாகப் பயணம் மேற்கொண்டார். அமைப்பின் மோசமடைந்த பகுதிகளைச் சரி செய்யவும், அதன் திறனை மேம்படுத்தவும் என்ன வேலை தேவை என்பது குறித்து இவரது நண்பர் சாங் குறிப்புகளை எடுத்துக் கொண்டார். இந்த அறிக்கையை அவர் நேரடியாக குப்லாய் கானுக்கு அனுப்பினார்.[சான்று தேவை]
சின் அரசமரபை வெற்றி கொண்ட போது செங்கிஸ் கானின் தம்பிகள் மஞ்சூரியாவில் பெரிய ஒட்டு நிலங்களைப் பெற்றனர்.[131] 1260இல் குப்லாய்க்கு மகுடம் சூட்டப்பட்டதற்கு அவர்களது வழித்தோன்றல்கள் வலிமையாக ஆதரவளித்தனர். ஆனால் இளம் தலைமுறையினர் மேற்கொண்ட சுதந்திரத்தை விரும்பினர். தங்களது ஓட்டு நிலங்களில் மேற்பார்வையாளர்களையும், பெரிய கானின் சிறப்பு அதிகாரிகளையும் மங்கோலிய உயர்குடியினர் நியமிக்கலாம் என்ற ஒக்தாயி கானின் விதிமுறைகளை குப்லாய் அமல்படுத்தினார். மற்ற படி ஒட்டு நில உரிமைகளுக்கு மதிப்பளித்தார். சங்கான் மற்றும் சான்சி ஆகிய இடங்கள் மீது 1272இல் நேரடியான கட்டுப்பாட்டை குப்லாயின் மகனான மங்களன் நிறுவினார். 1274இல் மஞ்சூரியாவில் மங்கோலிய ஓட்டு நிலங்களைக் கொண்டிருந்தவர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை விசாரிக்க லியான் சிசியானைக் குப்லாய் நியமித்தார்.[132] லியா-துங் என்றழைக்கப்பட்ட பகுதியானது உடனடியாக ககானின் கட்டுப்பாட்டின் கீழ் 1284இல் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்த மங்கோலிய உயர்குடியினரின் தன்னாட்சியை இது நீக்கியது.[133]
குப்லாயின் நிர்வாகமயமாக்கலின் முன்னேற்றத்தால் அச்சுறுத்தலுக்குள்ளான நயன் என்பவர் 1287ஆம் ஆண்டு ஒரு கிளர்ச்சியைத் தூண்டினார். இவர் செங்கிஸ் கானின் தம்பிகளான தெமுகே அல்லது பெலகுதையின் ஒரு நான்காம் தலைமுறை வழித்தோன்றல்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் (ஒன்றுக்கு மேற்பட்ட பெயருடைய நயன் என்ற இளவரசர்கள் இருந்ததால் அவர்களது அடையாளமானது குழப்பமுடையதாக உள்ளது).[134] நடு ஆசியாவில் குப்லாயின் போட்டியாளரான கய்டுவுடன் படைகளை இணைக்க நயன் முயற்சித்தார்.[135] பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்த மஞ்சூரியாவின் பூர்வீக சுரசன்கள் மற்றும் நீர் தாதர்கள் நயனுக்கு ஆதரவளித்தனர். கச்சியுனின் ஒரு வழித்தோன்றலான அதானுக்குக் கீழிருந்த மற்றும் கசரின் ஒரு பேரனான சிகுதூருக்குக் கீழ் இருந்த அனைத்து உறவினர்களும் நயனின் கிளர்ச்சியில் இணைந்தனர்[136]. நயன் ஒரு பிரபலமான இளவரசனாக இருந்ததால் செங்கிஸ் கானின் மகன் குல்கனின் ஒரு பேரனான எபுகன் மற்றும் குயுக் கானின் தம்பியான குதேனின் குடும்பம் ஆகியோர் இந்தக் கிளர்ச்சிக்குத் துருப்புகளைப் பங்களித்தனர்.[137]
ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டது மற்றும் கோழையான தலைமைத்துவம் ஆகியவற்றால் கிளர்ச்சியானது பலவீனமடைந்து இருந்தது. நயன் மற்றும் கய்டுவைப் பிரித்து வைக்க கரகோரத்தை ஆக்கிரமிக்க பயனை குப்லாய் அனுப்பினார். மஞ்சூரியாவில் இருந்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மற்றுமொரு இராணுவத்திற்குக் குப்லாய் கான் அதே நேரத்தில் தலைமை தாங்கினார். சூன் 14 அன்று நயனின் 60,000 அனுபவமற்ற வீரர்களை குப்லாயின் தளபதியான ஒசு தெமூரின் மங்கோலியப் படை தாக்கியது. அதே நேரத்தில் ஆன் மற்றும் ஆலன் இனக் காவலர்கள் லீ திங்கின் தலைமையில் குப்லாயைப் பாதுகாத்தனர். கொர்யியோவின் சங்னியோல் இராணுவமானது யுத்தத்தில் குப்லாய்க்கு ஆதரவளித்தது. ஒரு கடினமான சண்டைக்குப் பிறகு தங்களது வண்டிகளுக்குப் பின்னால் நயனின் துருப்புக்கள் பின்வாங்கின. லீ திங் வெடி மருந்துகளைப் பயன்படுத்தித் தாக்க ஆரம்பித்தார். அந்நாள் இரவு நயனின் முகாமை இவர்கள் தாக்கினர். குப்லாயின் படையானது நயனைத் துரத்தியது. இறுதியாக அவர் பிடிக்கப்பட்டு இரத்தம் சிந்தாமல் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். தோல் போர்வையால் போர்த்தப்பட்டு குதிரைகளை ஓட விட்டதன் மூலம் அவர் கொல்லப்பட்டார். பாரம்பரியமாக இளவரசர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தும் ஒரு வழியாக இது இருந்தது. [137]இதே நேரத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இளவரசனான சிகுதூர் லியாவோனிங் மீது படையெடுத்தார். ஆனால் ஒரு மாதத்திற்குள்ளாகவே தோற்கடிக்கப்பட்டார். ஒரு யுத்தத்தைத் தவிர்ப்பதற்காக கய்டு மேற்கு நோக்கிப் பின்வாங்கினார். எனினும், கான்காய் மலைகளில் ஒரு முக்கியமான யுவான் இராணுவத்தைக் கய்டு தோற்கடித்தார். 1289இல் குறுகிய காலத்திற்கு கரகோரத்தை ஆக்கிரமித்திருந்தார். குப்லாய் ஒரு பெரிய இராணுவத்தை ஒன்றிணைப்பதற்கு முன்னரே கய்டு அங்கிருந்து சென்று விட்டார்.[42]
பரவலான ஆனால் ஒன்றிணைக்கப்படாத நயனின் ஆதரவாளர்களின் எழுச்சிகளானவை 1289 வரை தொடர்ந்தன. இவை இரக்கமற்ற முறையில் ஒடுக்கப்பட்டன. கிளர்ச்சி செய்த இளவரசர்களின் துருப்புக்கள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டன. ஏகாதிபத்திய குடும்பத்தினர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டன.[138] மங்கோலியா மற்றும் மஞ்சூரியாவில் கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட தருகச்சி எனும் வரி வசூலிப்பாளர்களைக் குப்லாய் கடுமையாகத் தண்டித்தார்.[139] திசம்பர் 4, 1287 அன்று லியாவோயங் தலைமைச் செயலகப் பிரிவை உருவாக்குவதற்கு குப்லாய் அனுமதி வழங்குவதற்கு இந்தக் கிளர்ச்சியானது கட்டாயமாக இருந்தது. அதே நேரத்தில் தன் குடும்பத்தைச் சேர்ந்த விசுவாசமான இளவரசர்களுக்குக் குப்லாய் கான் சன்மானம் வழங்கினார்.[சான்று தேவை]
1291இல் குப்லாய் கான் தனது பேரன் கம்மலாவை புர்கான் கல்துன் மலைக்கு இக் கோரிக் (விலக்கப்பட்ட பகுதி) தனக்குச் சொந்தமானது என்று உறுதிப்படுத்த அனுப்பினார். அங்கு தான் செங்கிஸ் கான் புதைக்கப்பட்டார். அந்தப் புனிதமான பகுதி குப்லாய் கானின் வழி வந்தவர்களால் மிகக் கடுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டது. 1293ஆம் ஆண்டில் பயன் கரகோரத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதனைச் சுற்றியிருந்த பகுதிகளின் மீது தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தினார். எனவே குப்லாயின் எதிரியான கய்டு பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எடுக்க முயற்சி செய்யவில்லை. 1293இல் இருந்து குப்லாயின் இராணுவம் கய்டுவின் படைகளை நடு சைபீரியப் பீடபூமியில் இருந்து அப்புறப்படுத்தியது.[சான்று தேவை]
1281இல் குப்லாய் தன் மனைவி சாபி இறந்தவுடன் தனது ஆலோசகர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதிலிருந்து பின் வாங்கினார். தனது இராணிகளில் ஒருவரான நம்புயி மூலமாக அறிவுரைகளை வழங்கினார். குப்லாயின் மகள்களில் இரண்டு பேரின் பெயர்கள் மட்டுமே தெரிய வருகின்றன. அவருக்கு வேறு மகள்களும் இருந்திருக்கலாம். தனது தாத்தா செங்கிஸ் கானின் காலத்தில் இருந்த வல்லமை மிக்க பெண்களைப் போல் இல்லாமல் குப்லாய் கானின் மனைவிகள் மற்றும் மகள்கள் கிட்டத்தட்ட இருந்த இடம் தெரியாமல் இருந்தனர். குப்லாய் தனக்கு அடுத்து கானாக தனது மகன் செஞ்சினைத் தேர்ந்தெடுத்திருந்தார். செஞ்சின் செயலகத்தின் தலைவராக இருந்தார். மேலும் அரசமரபை கன்பூசிய வழிமுறைகளின் படி நிர்வாகம் செய்தார். தங்க நாடோடிக் கூட்டத்தின் பிடியில் இருந்து திரும்பி வந்த நோமுகன் செஞ்சினைத் தேர்வு செய்ததில் தனக்கு இருந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவர் வடக்குப் பகுதிக்கு நாடு கடத்தப்பட்டார். 1285இல் ஒரு அதிகாரி செஞ்சினுக்காக குப்லாய் கான் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அந்த ஆலோசனை குப்லாய் கானைக் கோபப்படுத்தியது. செஞ்சினைப் பார்க்க மறுத்தார். 1286இல் செஞ்சின் இறந்தார். தனது தந்தைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் இறந்தார். குப்லாய் கான் இதற்காக வருந்தினார். தனது மனைவி பைரம் (கொகேஜின்) உடன் தொடர்ந்து நெருக்கமாக இருந்தார்.[சான்று தேவை]
தனது விருப்பத்திற்குரிய மனைவி, மற்றும் தேர்வு செய்யப்பட்ட வாரிசு செஞ்சின் ஆகியோரின் இறப்புகளால் குப்லாய் கான் சோர்வுற்றிருந்தார். வியட்நாம் மற்றும் சப்பான் ஆகிய நாடுகளின் மீது எடுக்கப்பட்ட படையெடுப்புகளும் தோல்வியில் முடிந்திருந்தன. ஆறுதல் தேடிக் கொள்வதற்காக குப்லாய் கான் உணவு மற்றும் மதுவின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். இதன் காரணமாக இவரின் எடை கூடியது. கீல்வாதம் மற்றும் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டார். மது மற்றும் பொதுவாகவே மாமிசம் நிறைந்த மங்கோலிய உணவுகளை குப்லாய் கான் அதிகமாக உட்கொண்டார். இவருக்குக் கீல்வாதம் வந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தனது குடும்பத்தின் இழப்பு, உடல்நலக் குறைவு மற்றும் வயோதிகம் ஆகியவற்றின் காரணமாக குப்லாய் கானுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. அந்நேரத்தில் கிடைத்த எல்லா விதமான மருத்துவ சிகிச்சைகளையும் குப்லாய் கான் பெற்றார். கொரிய ஷாமான்கள் முதல் வியட்நாமிய மருத்துவர்கள் வரையானவர்களிடம் இருந்து தீர்வுகள் மற்றும் மருந்துகளை எடுத்துக் கொண்டார். ஆனால் எதுவும் பலன் தரவில்லை. 1293ஆம் ஆண்டின் இறுதியில் பாரம்பரிய புத்தாண்டுப் பிறப்பு விழாவில் கலந்து கொள்ள பேரரசர் மறுத்தார். தனது இறப்பிற்கு முன்னர் குப்லாய் பட்டத்து இளவரசரின் முத்திரையை செஞ்சினின் மகனான தெமுரிடம் கொடுத்தார். தெமுர் மங்கோலியப் பேரரசின் அடுத்த ககானாகவும், யுவான் அரசமரபின் இரண்டாவது ஆட்சியாளராகவும் பதவி ஏற்றார். குப்லாய் கான் படிப்படியாக உடல் நலம் குன்றினார். 1294ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் தேதி தனது 78வது வயதில் இறந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு மங்கோலியாவில் இருந்த கான்களைப் புதைக்கும் இடத்திற்கு இவரது உடல் கொண்டு செல்லப்பட்டது.[சான்று தேவை]
குப்லாய் முதலில் தெகுலனைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் தொடக்கத்திலேயே இறந்து விட்டார். பிறகு இவர் கொங்கிராடு இனத்தைச் சேர்ந்த சாபியைத் திருமணம் செய்து கொண்டார். இவரின் விருப்பத்திற்குரிய பேரரசியாக சாபி திகழ்ந்தார். 1281இல் சாபியின் இறப்பிற்குப் பிறகு குப்லாய் சாபியின் இளம் உறவினரான நம்புயியைத் திருமணம் செய்து கொண்டார். சாபியின் விருப்பப் படி இத்திருமணம் நடந்ததாகத் தெரிகிறது.[140]
முதன்மையான மனைவிகள் (முதல் மற்றும் இரண்டாம் ஓர்டோசு):
மூன்றாம் ஓர்டோவைச் சேர்ந்த மனைவிகள்:
நான்காம் ஓர்டோவைச் சேர்ந்த மனைவிகள்:
துணைவியர்:
குப்லாய் சீனக் கவிதைகளை ஏராளமாக எழுதிய ஒரு கவிஞர் ஆவார். எனினும், இவரது பெரும்பாலான கவிதைகள் தற்போது தொலைந்து விட்டன. இவரால் எழுதப்பட்ட ஒரே ஒரு சீனக் கவிதை மட்டும் யுவான் கவிதைகளின் தேர்ந்தெடுப்புகள் (元詩選) என்ற நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 'இளவேனிற்கால மலை மீது ஏறியதை அனுபவித்த போது பதியப்பட்ட அகத்தூண்டுதல்' என்ற தலைப்பில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இது மங்கோலிய மொழிக்கு உள் மங்கோலிய அறிஞரான புயன் என்பவரால் பாரம்பரிய மங்கோலியக் கவிதை நடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கான்பாதர் என்பவரால் சிரில்லிக் எழுத்து முறைக்கு இதை ஒலி பெயர்த்துள்ளார். மேற்குக் கான்பலிக்கில் (பெய்ஜிங்) உள்ள கோடை அரண்மனையில் உள்ள ஒரு பௌத்தக் கோயிலுக்குப் பிரார்த்தனை செய்வதற்காக குப்லாய் கான் ஒரு முறை இளவேனிற்காலத்தில் சென்றார் என்று குறிப்பிடப்படுகிறது. சென்று திரும்பும் வழியில் ஆயுள் நீட்டிக்கும் குன்று என்று அழைக்கப்பட்ட குன்றின் மீது ஏறினர். அங்கு அகத்தூண்டுதல் பெற்ற இவர் இக்கவிதையை எழுதினார்.[141]
தோழமையுள்ள இளவேனிற்காலத்தில் நறு மணம் வீசிய குன்றின் மீது நான் ஏறினேன் |
1260இல் குப்லாய் கான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வானது மங்கோலியப் பேரரசை ஒரு புதிய திசையில் உந்தியது. இவரது சர்ச்சைக்குரிய தேர்வானது மங்கோலியர்களிடையே ஒற்றுமையின்மையை அதிகரித்த போதும், சீனாவுடன் மங்கோலியப் பேரரசின் மற்ற பகுதிகளுக்கிடையே பெயரளவிலான தொடர்பை ஏற்படுத்துவதில் குப்லாய்க்கு இருந்த விருப்பமானது சர்வதேச கவனத்தை மங்கோலியப் பேரரசின் மீது ஈர்த்தது. ஓர் ஒன்றிணைந்த, இராணுவ ரீதியில் சக்தி வாய்ந்த சீனாவை மறு உருவாக்கம் செய்வதில் குப்லாய் மற்றும் இவரது முன்னோர்களின் படையெடுப்புகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைந்தன.[சான்று தேவை] திபெத், மஞ்சூரியா மற்றும் மங்கோலியப் புல்வெளி ஆகியவற்றை நவீன பெய்ஜிங்கை தலைநகராகக் கொண்டு ஆண்ட மங்கோலிய ஆட்சியானது பின்வந்த சிங் அரச மரபின் உள் ஆசியப் பேரரசுக்கு முன்னோடியாக அமைந்தது.[142]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.