நடு ஆசியாவில் 1226–1347இல் இருந்த துருக்கிய மயமாக்கப்பட்ட ஒரு மங்கோலியக் கானரசு From Wikipedia, the free encyclopedia
சகதாயி கானரசு என்பது ஒரு மங்கோலியக் கானரசாகும். இது பிற்காலத்தில் துருக்கியமயமாக்கப்பட்டது.[6][7][8] செங்கிஸ் கானின் இரண்டாவது மகனான சகதாயி கான், அவரது வழித்தோன்றல்கள் மற்றும் பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் இது யுவான் அரசமரபின் பெயரளவிலேயே இருந்த தலைமை நிலையை ஏற்றுக் கொண்டது.[9] எனினும் குப்லாய் கானின் ஆட்சியின் போது சகதாயி கானான கியாசுத்தீன் பரக் பேரரசரின் ஆணைகளை ஏற்பதை நிறுத்திவிட்டார். 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதன் அதிகபட்ச பரப்பளவின்போது இந்தக் கானரசானது ஏரல் கடலின் தெற்குப் பகுதியில் ஆமூ தாரியா முதல் நவீன கால மங்கோலிய-சீன எல்லையில் உள்ள அல்தாயி மலைகள் வரை பரவியிருந்தது.[10]
சகதாயி கானரசு | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||
1375ஆம் ஆண்டு கட்டலான் வரைபடத்தில் உள்ள சகதாயி கானரசின் கொடி | |||||||||||||||
நிலை | |||||||||||||||
தலைநகரம் |
| ||||||||||||||
பேசப்படும் மொழிகள் | |||||||||||||||
சமயம் | |||||||||||||||
அரசாங்கம் |
| ||||||||||||||
கான் | |||||||||||||||
• 1225–1242 | சகதாயி கான் | ||||||||||||||
சட்டமன்றம் | குறுல்த்தாய் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | பிந்தைய நடுக்காலங்கள் | ||||||||||||||
1225 | |||||||||||||||
• சகதாயியின் இறப்பு | 1242 | ||||||||||||||
1340கள் | |||||||||||||||
• மேற்குப் பேரரசு வீழ்ந்தது | 1370 | ||||||||||||||
• கிழக்குப் பேரரசு வீழ்ந்தது | 1680கள் | ||||||||||||||
பரப்பு | |||||||||||||||
1310 அல்லது 1350ஆம் ஆண்டு மதிப்பீடு[4][5] | 3,500,000 km2 (1,400,000 sq mi) | ||||||||||||||
நாணயம் | நாணயங்கள் (திர்காம்கள், கெபெக் மற்றும் புல்) | ||||||||||||||
|
14ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சகதாயி கான்கள் திரான்சாக்சியானாவின் கட்டுப்பாட்டைத் தைமூரியப் பேரரசிடம் இழந்தனர். எஞ்சிய பகுதியானது மொகுலிசுதான் என்று அழைக்கப்பட்டது. இது 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நீடித்தது. பிறகு எர்கந்து மற்றும் துர்பன் கானரசுகளாகப் பிரிந்தது. 1680ஆம் ஆண்டு எஞ்சிய சகதாயி கானரசின் பகுதிகள் தங்களது சுதந்திரத்தைச் சுங்கர் கானரசிடம் இழந்தன. 1705ஆம் ஆண்டு கடைசி சகதாயி கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இவ்வாறாக சகதாயி அரசமரபானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
செங்கிஸ் கான் 1227ஆம் ஆண்டு இறந்தபோது அவரது மகன் சகதாயி முந்தைய கருப்பு சீனா பேரரசின் பகுதிகளை தோராயமாகப் பெற்றார். அப்பகுதிகள் இசிக்-குல் ஏரி, இலி ஆறு, சூ ஆறு, தலாசு ஆறு, திரான்சாக்சியானா, மற்றும் தாரிம் வடிநிலம் ஆகியவை ஆகும். எனினும் சகதாயி தன்னுடைய கானரசைச் சுதந்திரமாக நடத்தவில்லை. அவர் அன்றும் கரகோரத்தில் இருந்து ஆணைகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். திரான்சாக்சியானாவின் ஆளுநரான மகமுத் யலாவச்சை சகதாயி நீக்கிய போது பெரிய கானான ஒக்தாயி யலாவச்சை மீண்டும் பதவியில் அமர்த்தினார். யலாவச்சின் அரசமரபானது திரான்சாக்சியானாவைச் சகதாயியின் இறப்பிற்குப் பிறகும் தொடர்ந்து ஆண்டு கொண்டிருந்தது. 1238 ஆம் ஆண்டு முசுலிம்கள் புகாரா நகரத்தில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அங்கு மங்கோலியத் துருப்புக்கள் வருவதற்கு முன்னரே மகமுத்தின் மகனான மசூத் அந்தக் கிளர்ச்சியை அடுத்த ஆண்டு ஒடுக்கினார். இதன்மூலம் மங்கோலிய பழிவாங்கலில் இருந்து மக்களைக் காப்பாற்றினார்.[11]
சகதாயி கான் 1242ஆம் ஆண்டு இறந்தார். சகதாயிக்குப் பிறகு அவரது பேரனான காரா ஹுலாகு ஆட்சிக்கு வந்தார். காரா ஹுலாகு 1221ஆம் ஆண்டு பாமியான் முற்றுகையின் போது இறந்த முத்துகனின் மகனாவார். சுதந்திரமாக ஆட்சி செய்வதற்கு காரா ஹுலாகு மிகவும் இளையவராக இருந்ததால் விதவையான எபுசுகுன் கதுன் அவரது பெயரில் பிரதிநிதியாக ஆட்சி செய்தார். 1246ஆம் ஆண்டு குயுக் கான் காரா ஹுலாகுவிற்குப் பதிலாக அவரது சித்தப்பா எசு மோங்கேயைப் பதவியில் அமர்த்தினார்.[12]
குயுக் கானிற்குச் சொந்த நண்பனாக இருந்த காரணத்தினாலேயே எசு மோங்கே பதவிக்கு வந்தார். எசு மோங்கே குடிகாரனாக இருந்தார். அரசு விவகாரங்களைத் தனது மனைவி மற்றும் மந்திரி பெகா அத்-தின் மர்கினானி ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தார். 1252 ஆம் ஆண்டு மோங்கே கான் எசு மோங்கேயைப் பதவியிலிருந்து நீக்கினார். காரா ஹுலாகுவை மீண்டும் பதவியில் அமர்த்தினார்.[12]
தன் நாட்டிற்குத் திரும்பும் வழியில் கார ஹுலாகு இறந்தார். கார ஹுலாகுவிற்குப் பிறகு அவரது மகன் முபாரக் ஷா ஆட்சிக்கு வந்தார்.[12]
ஆட்சி செய்ய முபாரக் ஷா மிகவும் இளையவராக இருந்தார். இதன் காரணமாக அரசு விவகாரங்களை அவரது தாய் ஒர்கானா கவனித்துக் கொண்டார்.[12] 1260ஆம் ஆண்டு அரிக் போகே முபாரக் ஷாவைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சகதாயி கானின் பேரனாகிய அல்குவைப் பதவியில் அமர்த்தினார்.[13] ஆட்சிக்கு வந்த பிறகு அல்கு அரிக் போகேவிற்கு எதிராகச் செயல்பட ஆரம்பித்தார். டொலுய் உள்நாட்டுப் போரில் குப்லாய் கான் பக்கம் சேர்ந்து கொண்டார். அரிக் போகே அல்குவைத் தாக்கினார். அரிக் போகேயின் ராணுவத்தில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதில் அல்கு ஆரம்பத்தில் வெற்றிகண்டார். எனினும் 1263ஆம் ஆண்டு சமர்கந்துக்குத் தப்பிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டார். அல்கு இல்லாத நிலையில் இலி பகுதியை அரிக் போகே மோசமாகச் சேதப்படுத்தினர். ஒர்கானா மற்றும் மசூத் யலாவச் ஆகியோரின் உதவியுடன் ஒரு புதிய ராணுவத்திற்கு ஆட்களை அல்கு சேர்த்தார். பிறகு கய்டுவின் படையெடுப்பை அல்கு முறியடித்தார். அரிக் போகேவை தனது பகுதிகளிலிருந்து துரத்தினார். அரிக் போகே 1264ஆம் ஆண்டு குப்லாய் கானிடம் சரணடைந்தார். 1265ஆம் ஆண்டு அல்கு இறந்தார். ஒர்கானா தனது மகன் முபாரக ஷாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்.[14]
இஸ்லாமுக்கு மதம் மாறிய முதல் சகதாயி கான் முபாரக் ஷா தான். இவரது ஆட்சி இவரது உறவினரான கியாஸ்-உத்-தின் பரக்கால் இடையூறு செய்யப்பட்டது. குப்லாய் கான் உதவியுடன் கியாஸ்-உத்-தின் பரக், முபாரக் ஷாவைப் பதவியிலிருந்து நீக்கினார்.[14]
தாரிம் வடிநில பகுதியை ஆட்சி செய்வதில் கியாஸ்-உத்-தின் பரக் மற்றும் குப்லாய் கான் இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்பகுதியை ஆட்சி செய்ய குப்லாய் கான் அனுப்பிய நபரைப் பரக் துரத்தி அடித்தார். குப்லாய் கான் 6,000 குதிரைப்படை வீரர்களை அனுப்பியபோது பரக் 30,000 குதிரைப்படை வீரர்களைக் கொண்டு அவர்களை சந்தித்தார். அவர்களை பின்வாங்க கட்டாயப்படுத்தினார். பரக் கய்டுவுடனும் பிரச்சனையில் இருந்தார். கய்டு தங்க நாடோடிக் கூட்டத்தின் கானாகிய மெங்கு-தைமூரின் உதவியுடன் பரக்கைத் தாக்க முயற்சித்தார். 50,000 வீரர்களைக் கொண்ட தங்க நாடோடிக் கூட்டத்தின் இராணுவமானது தன் பக்கம் இருப்பதை கொண்டு கய்டு திரான்சாக்சியானா பகுதியில் இருந்து தப்பிச் செல்லும் நிலைக்கு பரக்கைக் கட்டாயப்படுத்தினார். 1267ஆம் ஆண்டு கய்டுவுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொள்ள பரக் ஒப்புக்கொண்டார். திரான்சாக்சியானாவுக்குக் கிழக்கில் இருந்த பகுதிகளைப் பரக் துறந்தார். ஈல்கானரசின் மீது படையெடுக்குமாறு பரக்கைக் கய்டு மிரட்டினார்.[15] பரக் முதலில் தாக்கினார். இளவரசன் புச்சினைத் தோற்கடித்தார். புச்சின் அபகா கானின் சகோதரரும் குராசான் பகுதியின் ஆளுநரும் ஆவார். அபகா அவசர அவசரமாக அசர்பைஜானில் இருந்து திரும்பினார். 22 சூலை 1270ஆம் ஆண்டு ஹெறாத் நகரத்திற்கு அருகில் பரக்கைத் தோற்கடித்தார். பரக்கைப் பின் வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தினார். திரும்பும் வழியில் பரக் தன்னுடைய குதிரையிலிருந்து விழுந்தார். நடக்க இயலாத நிலைக்கு ஆளானார். எனவே குளிர்காலத்தை புகாரா நகரத்தில் கழித்தார். சிறிது காலத்திற்குப் பிறகு இறந்தார். தனது இறப்பிற்கு முன்னர் பரக் இஸ்லாமுக்கு மதம் மாறினார்.[16]
பரக்கின் நான்கு மகன்கள் மற்றும் அல்குவின் இரண்டு மகன்கள் ஆகியோர் பரக்கின் இறப்பிற்குப் பிறகு கய்டுவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். ஆனால் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டனர். திரான்சாக்சியானாவின் கானாக நெகுபெய்யைக் கய்டு பதவியில் அமர்த்தினார். நெகுபெய் கிளர்ச்சி செய்தபோது அவரும் கொல்லப்பட்டார். 1274இல் புதிய கானாகப் புகா தெமூர் பதவியில் அமர்த்தப்பட்டார். புகா தெமூர் எப்போது இறந்தார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது இறப்பிற்கு பிறகு பரக்கின் மகனான துவா அடுத்த கானாக நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் 1272ஆம் ஆண்டு அபகா திரான்சாக்சியானாவைத் தாக்கினார். புகாராவைச் சூறையாடினர். 50,000 பேரைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றார்.[17]
1275ஆம் ஆண்டு யுவான் அரசமரபுக்கு எதிரான போரில் கய்டுவுடன் துவா இணைந்தார். ஆனால் அவர்களது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. 1295ஆம் ஆண்டு பஞ்சாப் பகுதியைத் துவா தாக்கினார். சேதம் விளைவித்தார். தில்லி சுல்தானகத்தின் மீதும் பல்வேறு படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.[18] செப்டம்பர் 1298ஆம் ஆண்டு தெமுர் கானின் மைத்துனரான கோர்குசைத் துவா பிடித்தார். அவரைக் கொன்றார். ஆனால் இந்நிகழ்வுக்குச் சிறிது காலத்திலேயே யுவான் படைகள் துவாவுக்கு மோசமான தோல்வியைக் கொடுத்தன. 1301ஆம் ஆண்டு கரகோரத்தின் மீது தாக்குதல் நடத்திய போது அவர்கள் மீண்டும் தோற்கடிக்கப்பட்டனர். பின்வாங்கும் வழியில் கய்டு இறந்தார்.[19]
1301ஆம் ஆண்டு கய்டுவின் இறப்பிற்குப் பிறகு துவா மற்றும் கய்டுவின் மகனான சபர் ஆகியோர் யுவான் அரசமரபின் உச்சநிலையை 1303இல் அங்கீகரித்தனர். எனினும் சபருடன் தனக்கு இருந்த கூட்டணியைத் துவா முறித்துக் கொண்டார். யுவான் அரசமரபு மற்றும் துவா ஆகிய இருவருமே சபர் மீது தாக்குதல் நடத்தினர். 1306ஆம் ஆண்டு சபரின் பகுதிகளைக் கட்டாயப்படுத்தித் துவாவிடம் சரணடைய வைத்தனர். அதேநேரத்தில் 1303ஆம் ஆண்டு தில்லி சுல்தானகத்தின் மீது இளவரசர் துர்கை படையெடுத்தார். தில்லிப் பகுதியைச் சூறையாடினார். 1304ஆம் ஆண்டு அவர்கள் மீண்டும் படையெடுத்தனர். ஆனால் தோல்வியைச் சந்தித்தனர். துவா சீக்கிரமே இறந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் கோன்செக் ஆட்சிக்கு வந்தார். ஒன்றரை வருடம் ஆட்சி செய்த பிறகு கோன்செக்கும் இறந்தார். புகா தெமூரின் சகோதரர்களில் ஒருவராகியத் தலிகு ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் துவாவின் குடும்பமானது கிளர்ச்சி செய்தது. ஒரு விருந்தில் தலிகுவைக் கொன்றது. துவாவின் இளைய மகனான கெபெக் கானானார். 1305ஆம் ஆண்டு மீண்டும் தில்லி சுல்தானகத்தின் மீது கெபெக் படையெடுத்தார். முல்தான் பகுதியைச் சூறையாடினார். ஆனால் திரும்பிச் செல்லும் வழியில் தோற்கடிக்கப்பட்டார். இந்த அரசியல் குழப்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொல்ல சபர் முயற்சித்தார். கெபெக்கைத் தாக்கினார். ஆனால் தோல்வி அடைந்தார். யுவான் அரசமரபுக்குச் சபர் தப்பியோடினார். சகதாயி கானரசில் மற்றொரு குறுல்த்தாய் நடத்தப்பட்டது. இந்தக் குறுல்த்தாயில் துவாவின் மகன்களில் ஒருவரான முதலாம் எசன் புகா தேர்ந்தெடுக்கப்பட்டார். கெபெக் விட்டுக் கொடுத்த அரியணையை ஏற்றுக்கொண்டார். 1315ஆம் ஆண்டு துவாவின் பேரனான தாவூத் கோசாவிற்கு ஆதரவாக ஈல்கானரசு மீது எசன் புகா படையெடுத்தார். தாவூத் கோசா கிழக்கு ஆப்கானித்தானில் ஆட்சி செய்து வந்தார். முர்கப் பகுதியில் ஈல்கானரசின் இராணுவத்தை எசன் புகா தோற்கடித்தார். ஹெறாத் நகரம் வரை முன்னேறினார். ஆனால் யுவான் அரசமரபானது இவரை கிழக்குப்பகுதியில் இருந்து தாக்கியபோது பின்வாங்க வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். இசிக்-குல் ஏரி பகுதியை யுவான் இராணுவமானது கடும் சேதத்திற்கு உள்ளாக்கியது. 1315ஆம் ஆண்டு சகதாயி இளவரசன் எசவுர் ஈல்கானரசின் பக்கம் கட்சி மாறினார். ஆனால் கிளர்ச்சி செய்து குராசான் பகுதியை எடுத்துக் கொண்டார். சகதாயி மற்றும் ஈல்கானரசு ஆகிய இரண்டு நாட்டுப் படைகளும் எசவுரைத் தாக்கின. தப்பித்துச் செல்லும்போது எசவுர் கொல்லப்பட்டார். 1318ஆம் ஆண்டு முதலாம் எசன் புகா இறந்தார். அந்நேரத்தில் கெபெக் மீண்டும் ஆட்சிக்குத் திரும்பினார். கெபெக் ஈல்கானரசு மற்றும் யுவான் அரசமரபுடன் அமைதி ஏற்படுத்திக் கொண்டார். 1325ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தார்.[20]
கெபெக்கிற்குப் பிறகு அவரது மூன்று சகோதரர்கள் ஆட்சிக்கு வந்தனர். எல்சிகிடே மற்றும் துவா தெமுர் ஆகியோர் ஒவ்வொருவரும் சில மாதங்களுக்கு ஆட்சி புரிந்தனர். இஸ்லாம் தர்மசிறின் (1326–1334) இசுலாம் மதத்திற்கு மாறினார். தில்லி சுல்தானகத்தைத் தாக்கினார். தில்லி வரை முன்னேறிச் சென்றார். கிழக்கே இருந்த பழங்குடியினர் செய்த முசுலிம் எதிர்ப்புக் கிளர்ச்சியால் தர்மசிறின் பதவி இறக்கப்பட்டார். துவாவின் ஒரு மகனான சங்சி 1335ஆம் ஆண்டு அரியணைக்கு வந்தார். சங்சின் மகன்களில் ஒருவருக்கு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. திருத்தந்தை 12ஆம் பெனடிக்ட் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த பர்கண்டியின் ரிச்சர்ட்டை 1339ஆம் ஆண்டு அல்மலிக்கிற்குச் செல்ல நியமித்தார். ஆனால் இலி பகுதியில் இருந்த முசுலிம்களால் ரிச்சர்ட் கொல்லப்பட்டார். திருத்தந்தையின் தூதரான ஜியோவானி டி மரிக்னொல்லி இலி பள்ளத்தாக்கிற்கு அடுத்த ஆண்டு வந்தார். அவர் யுவான் அரசமரபை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அங்கு அவர் ஒரு தேவாலயத்தைக் கட்டினார். அங்கு இருந்த போது சில மக்களுக்கு ஞானஸ்நானம் செய்வித்தார். ஆனால் அவர் அந்த இடத்தை விட்டு புறப்பட்டுச் சிறிது காலத்திற்குள்ளேயே கிறிஸ்தவம் அங்கு இல்லாமல் போய்விட்டது.[21]
இந்தக் கானரசானது பின் வந்த ஆண்டுகளில் அதிக நிலையற்ற தன்மைக்கு உள்ளானது. 1340களில் இரண்டாகப் பிரிந்தது. திரான்சாக்சியானாவானது கசன் கான் இப்னு யசவுரால் ஆளப்பட்டது. 1346ஆம் ஆண்டு ஒரு பழங்குடியினத் தலைவனான கசகான் கசனைக் கொன்றார். தனிசுமெஞ்சி என்பவரைக் கைப்பாவை கானாக ஆட்சியில் அமர வைத்தார். தனிசுமெஞ்சி ஒரு ஆண்டுக்குப் பிறகு கொல்லப்பட்டார். அவருக்குப் பதிலாக பயன் குலி ஆட்சிக்கு வந்தார். 1351ஆம் ஆண்டு ஹெறாத் நகரத்தைக் கசகான் கப்பம் கட்ட வைத்தார். 1357ஆம் கசகான் ஆண்டு அரசியல் கொலை செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு அவரது மகன் அப்துல்லா ஆட்சிக்கு வந்தார். அப்துல்லா 1358ஆம் ஆண்டு பயன் குலியைக் கொன்றார். இச்செயல் தைமூரின் உறவினரான ஹாஜி பேக் போன்ற உள்ளூர்ப் பிரபுக்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அப்துல்லாவை ஹாஜி இந்து குஷ் பகுதிக்குத் துரத்தினார். அங்கு அப்துல்லா இறந்தார். இதற்குப் பிறகு திரான்சாக்சியானாவின் சகதாயி கான்கள் பெயரளவிலேயே ஆட்சியாளர்களாக இருந்தனர். பிறகு இப்பகுதியானது தைமூரியப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.[22]
கிழக்கே இருந்த சக்தி வாய்ந்த துக்லத்துகள் 1347ஆம் ஆண்டு மொகுலிசுதானின் கானாக முதலாம் எசன் புகாவின் ஒரு மகனாகிய துக்லுக் தைமூரை ஆட்சியில் அமர்த்தினர். 1350ஆம் ஆண்டு துக்லுக் இசுலாம் மதத்திற்கு மாறினார். 1360ஆம் ஆண்டு திரான்சாக்சியானாவின் மீது படையெடுத்து அதை வென்றார். அதிக சக்தி வாய்ந்த துக்லுக்கை எதிர்கொள்ள முடியாமல் ஹாஜி பெக் தப்பி ஓடினர். எதிர்காலப் படையெடுப்பாளரான தைமூர் துக்லுக்கிடம் பணிக்குச் சேர்ந்தார். ஷாரி செப்சின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். திரான்சாக்சியானவிலிருந்து துக்லுக் கிளம்பிய பிறகு ஹாஜி பெக் படையுடன் திரும்பி வந்தார். ஆனால் மீண்டும் துக்லுக்கால் துரத்தப்பட்டார். செப்செவர் என்ற இடத்திற்கு அருகில் ஹாஜி பெக் கொல்லப்பட்டார். இதன் விளைவாகத் தைமூர் ஆட்சிக்கு வந்தார். அமீர் உசைனைத் தோற்கடித்ததன் மூலம் தனது பகுதிகளை ஆப்கானித்தானுக்குத் துக்லுக் விரிவுபடுத்தினார். இவ்வாறாகச் சகதாயி கானரசானது துக்லுக்கின் தலைமையில் மீட்டெடுக்கப்பட்டது. 1363ஆம் ஆண்டு துக்லுக்கின் இறப்பிற்குப் பிறகு தைமூர் மற்றும் அமீர் உசைன் திரான்சாக்சியானாவை எடுத்துக் கொண்டனர். துக்லுக்கிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த இலியாசு கோசாவைத் தைமூர் மற்றும் அமீர் உசைன் ஆகியோர் திரான்சாக்சியானாவில் இருந்து வெளியேற்றினர். பிறகு அமீர் உசைனையும் தைமூர் தீர்த்துக் கட்டினார். இதன் மூலம் திரான்சாக்சியானாவிற்கு (1369–1405) ஒரே எஜமானராகத் தைமூர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். தனக்கு முன்னிருந்தவர்களைப் போலவே தன்னுடைய ஆட்சிக்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிப்பதற்காக ஒரு கைப்பாவை கானைத் தைமூர் அரியணையில் அமர்த்தினார். ஆனால் இந்தக் கைப்பாவை கான்கள் சகதாயின் வழித்தோன்றல்களாக இல்லாமல் ஒக்தாயியின் அரசமரபைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.[23]
இலியாசு கோசா 1364 ஆம் ஆண்டு தைமூரைத் தாக்கினார். சிர் தாரியா ஆற்றின் வடக்குக் கரையில் அவரைத் தோற்கடித்தார். பிறகு சமர்கந்து நகரத்தை முற்றுகையிட்டார். ஆனால் தனது படையினரிடையே தொற்றுநோய் பரவியதால் பாதிப்புக்கு உள்ளானார். இதன் காரணமாக அடுத்த ஆண்டு திரான்சாக்சியானாவில் இருந்து பின்வாங்கும் நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டார். துக்லத் கமருத்தீன் கான் துக்லத் கிளர்ச்சி செய்தார். 1368இல் இலியாசு கோசாவைக் கொன்றார். அரியணையைத் தனக்காக எடுத்துக் கொண்டார். இலியாசு கோசாவின் சகோதரரான கிசிர் கோசா துர்பனுக்குத் தப்பித்து ஓடினார். அங்கு தன்னுடைய சொந்த சுதந்திரமான அரசை அமைத்தார். அங்கிருந்த கடைசி உய்குர் மக்களை இசுலாம் மதத்திற்கு மாற்றினார். 1375ஆம் ஆண்டு மொகுலிசுதான் மீது தைமூர் படையெடுத்தார். இலி பகுதியைச் சூறையாடினார். கமர் பதிலுக்குப் பெர்கானாவைத் தாக்கினார். தைமூரால் துரத்தப்படும் வரை கமர் அப்பகுதியில் இருந்தார். இந்த நேரத்தில் தைமூர் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடைபெற்றது. அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். சமர்கந்திற்குப் பின்வாங்கினார். 1376 மற்றும் 1383 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் தைமூர் மீண்டும் தாக்கினார். ஆனால் இரண்டு முறையும் மொகுலாய கானைப் பிடிப்பதில் தோல்வியடைந்தார். மாறாக 1389ஆம் ஆண்டு தைமூர் கிசிர் கோசாவைத் தாக்கினார். கோபி பாலைவனத்திற்குத் தப்பிச் செல்லும் நிலைக்கு அவரை உள்ளாக்கினார். 1390ஆம் ஆண்டு மீண்டும் மொகுலிசுதானைத் தைமூர் தாக்கினார். மீண்டும் கமரைப் பிடிப்பதில் தோல்வியடைந்தார். ஆனால் தப்பித்து ஓடிய கமர் மீண்டும் என்ன ஆனார் என்கிற எந்தச் செய்தியும் இல்லாமல் போய்விட்டது. கிசிர் கோசா மொகுலிசுதானுக்குத் திரும்பினார். மீண்டும் ஒரு முறை ஆட்சிக்கு வந்தார். தன்னுடைய மகளை தைமூருக்கு மணம் முடித்துக் கொடுத்தார். தைமூருடன் 1397ஆம் ஆண்டு அமைதி ஏற்படுத்திக் கொண்டார். 1399ஆம் ஆண்டு கிசிர் கோசா இறந்தார். அவருக்குப் பிறகு வரிசையாக அவரது மூன்று மகன்கள் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் ஷம்சி ஜகான் (1399–1408), முகம்மத் கான் (1408–1415) மற்றும் நக்ஷி ஜகான் (1415–1418) ஆகியோர் ஆவர். கிசிர் கோசாவின் இறப்பிற்குப் பிறகு மொகுலாய நிலங்களைச் சூறையாட மற்றொரு இராணுவத்தை அனுப்ப தைமூர் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.[24]
உவைசு கான் 1418ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். உவைசு கான் தனது ஆட்சியின் போது ஒயிரட்கள் மீது போர் தொடுத்தார். ஒயிரட்களின் தலைவர் எசன் தைசியால் கைதியாகப் பிடிக்கப்பட்டார். உவைசு அரச குலத்தை சேர்ந்தவராக இருந்ததால் எசன் தைசி அவரை மரியாதையுடன் நடத்தி விடுவித்தார். ஒயிரட்களுக்கு எதிராக மேலும் இரண்டு தோல்விகளை உவைசு அடைந்தார். இரண்டாவது முறையாக கைதியாக பிடிக்கப்பட்டார். தன்னுடைய சகோதரியை பிணையக் கைதியாக எசன் தைசியின் குடும்பத்திடம் அனுப்பிய பிறகு உவைசு விடுவிக்கப்பட்டார். 1429ஆம் ஆண்டு உவைசு உயிரிழந்தார். உவைசின் இரண்டு மகன்களான யூனுஸ் கான் மற்றும் இரண்டாம் எசன் புகா ஆகியோர் அரியணைக்காக தத்தமது பிரிவினர் உதவியுடன் சண்டையிட்டனர். இச்சண்டையில் இரண்டாம் எசன் புகா வெற்றி பெற்றார். யூனுஸ் சமர்கந்துக்கு தப்பிச் சென்றார். இரண்டாம் எசன் புகாவிற்குக் கீழ் சக்தி வாய்ந்த துக்லத் சயித் அலி மிகுந்த செல்வாக்கு மிக்கவராக உருவானார். இரண்டாம் எசன் புகா அரியணையை வெல்வதற்கு இவர் உதவியாக இருந்தார். சயித் அலி குச்சா மற்றும் கசுகர் ஆகிய இரண்டு நகரங்களையும் நிர்வகித்தார். 1451ஆம் ஆண்டு இரண்டாம் எசன் புகா தைமூரியப் பேரரசின் வடக்கு எல்லை மீது தாக்குதல் நடத்தினார். மொகுலாயகளை இரண்டாக பிரிக்க தைமூரிய ஆட்சியாளரான அபு சயித் மிர்சா திட்டமிட்டார். அதற்காக 1456ஆம் ஆண்டு யூனுஸ் கானை வரவழைத்தார். இலி பகுதியில் யூனுஸ் கானின் அதிகாரத்திற்கு ஆதரவளித்தார். கசுகர் நகரத்தை வெல்ல யூனுஸ் முயற்சித்தார். ஆனால் சயித் அலி மற்றும் இரண்டாம் எசன் புகா ஆகியோரால் அவரது தாக்குதல் முறியடிக்கப்பட்டது. 1462ஆம் ஆண்டு இரண்டாம் எசன் புகா இறந்தார். அவரது மகன் தோசுது முகமது 17 வயதே ஆன அனுபவமற்றவராக இருந்தார். துக்லத்துகளின் பகுதியை அவர் சூறையாடினார். 1469ஆம் ஆண்டு அவர் இறந்த பொழுது அவரது ஆட்சி பகுதிகள் பொதுவான கிளர்ச்சியில் இருந்தன. இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட யூனுஸ் மொகுலாய தலைநகரமான அக்சுவை கைப்பற்றினார். தோசுது முகமதுவின் இளைய மகனான கெபெக் சுல்தான் துர்பனுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கானாக அறிவிக்கப்பட்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது ஆதரவாளர்கள் இவரை கொன்றனர். யூனுஸிடம் கொண்டு சென்றனர். இவ்வாறாக 1472ஆம் ஆண்டு மொகுலிசுதானின் ஒரே ஆட்சியாளராக யூனுஸ் பதவியில் அமர்ந்தார்.[25]
எசன் தைசியின் மகனாகிய அமசஞ்சின் தலைமையில் ஒயிரட்டுகள் யூனுசின் ஆட்சியின் தொடக்கத்தின் போது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக சிர் தரியா பகுதிக்கு யூனுஸ் தப்பி ஓடினார். ஒயிரட்டுகள் தாங்கள் கொள்ளையடித்த பொருட்களுடன் திரும்பிச் சென்றபோது யூனுஸ் திரும்பி வந்தார். 1465ஆம் ஆண்டு மிர்சா அபுபக்கர் துக்லத்தின் தலைமையிலான ஒரு கிளர்ச்சியை யூனுஸ் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. எர்கந்து மற்றும் கோடான் ஆகிய நகரங்களை துக்லத் கைப்பற்றி கொண்டார். 1479 மற்றும் 1480 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் யூனுஸ் அபுபக்கரை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கு இரண்டு முறை முயற்சி செய்தார். ஆனால் இரண்டு முறையும் தோல்வி அடைந்தார். இதற்கு பிறகு அபுபக்கர் கசுகர் நகரையும் கைப்பற்றிக் கொண்டார். மேற்கில் காரா தெல் அரசிடமிருந்து அமி நகரத்தை யூனுஸ் கைப்பற்றினார். காரா தெல் அரசினர் மிங் அரசுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தனர். ஒரு மிங் இராணுவமானது மொகுலாயர்களை அமி நகரத்தில் இருந்து வெளியேற்றியது. ஆனால் அவர்களை பிடிப்பதில் தோல்வியடைந்தது. மிங் இராணுவம் திரும்பிச் சென்றபிறகு மொகுலாயர்கள் மீண்டும் கமி நகரத்திற்கு திரும்பி வந்தனர். மேற்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல் குழப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட யூனுஸ் பெர்கானாவில் இருந்த இரண்டாவது உமர் சேக் மிர்சாவின் அரசை கப்பம் கட்ட வைத்தார். 1484ஆம் ஆண்டு யூனுஸ் தாஷ்கந்து நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். நிலையான வாழ்க்கை வாழ தொடங்கினார். நாடோடி வாழ்க்கை முறையை கைவிட்டார். யூனுசின் நாடோடி ஆதரவாளர்கள் அவரது இச்செயலால் அதிர்ச்சி அடைந்தனர். புல்வெளிப் பகுதிக்கு திரும்பி சென்றனர். தங்களுடன் யூனுசின் இரண்டாவது மகனான அகமத் அலக்கை கூட்டி சென்றனர். 1486ஆம் ஆண்டு யூனுஸ் இறந்தபோது அவரது அரசானது இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மேற்கே இருந்த எர்கந்து கானரசை மகமுத் கானும், வட மேற்கே இருந்த துர்பன் கானரசை அகமத் அலக்கும் ஆட்சி செய்தனர்.[26]
அகமது அலக்கின் சுருங்கிப்போன நாடோடி அரசானது ஒயிரட்கள், கிர்கிசுகள், மற்றும் கசக்குகள் ஆகியோருடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டது. தரிக்-இ ரஷீதி என்ற நூலின் படி ஒயிரட்டுகள் அகமதை அலாஷா என்று அழைத்தனர். இதன் பொருள் "கொலைகாரன்" என்பதாகும். 1482ஆம் ஆண்டு கன்சினின் ஆட்சியின் கீழ் அமி நகரமானது காரா தெல் அரசின் கீழ் மீண்டும் கொண்டு வரப்பட்டது. ஆனால் 1488ஆம் ஆண்டு அகமது கன்சினைக் கொன்றார். அமி நகரத்தை மீண்டும் கைப்பற்றினார். அடுத்த ஆண்டு அமி நகரத்திலிருந்து அகமது துரத்தப்பட்டார். 1493ஆம் ஆண்டு காரா தெலின் ஆட்சியாளரான சம்பாவை அகமது பிடித்தார். அவரைக் கைதியாக வைத்திருந்தார். மிங் அரசிடமிருந்து ஆதரவை சம்பா பெற்றார். துர்பனுடன் இருந்த எல்லைகளை மிங் அரசு மூடியது. துர்பனின் வணிகர்களைத் தன் சந்தைகளில் இருந்து வெளியேற்றியது. தன் நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக அமி மீதான தனது ஆசைகளை அகமது கைவிட வேண்டி வந்தது. 1499ஆம் ஆண்டு கசுகர் மற்றும் எங்கிசர் ஆகிய நகரங்களை மிர்சா அபுபக்கர் துக்லத்திடம் இருந்து அகமது கைப்பற்றினார்.[27]
1500ஆம் ஆண்டுவாக்கில் அகமதுவின் சகோதரரான மகமுது கானை முகமது சாய்பானி தாக்கினார். அகமதுவிடம் மகமுது கான் உதவி கோரினார். அகமது மற்றும் மகமுது ஆகிய இருவரையும் முகமது தோற்கடித்தார். தாஷ்கந்து மற்றும் சய்ரம் ஆகிய இரண்டு நகரங்களையும் முகமது கைப்பற்றினார். அகமது கைது செய்யப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே விடுவிக்கப்பட்டார். ஒரு ஆண்டுக்குப் பிறகு அக்சு நகரில் வாதம் காரணமாக அகமது இறந்தார்.[28] அகமதுவிற்கு பிறகு அவரது சகோதரர் மன்சூர் கான் ஆட்சிக்கு வந்தார். கசுகரின் சக்திவாய்ந்த துக்லத்தான மிர்சா அபுபக்கர் துக்லத், குச்சா மற்றும் அக்சு ஆகிய நகரங்களை சூறையாடிய நிகழ்வுடன் மன்சூரின் ஆட்சியின் ஆரம்பமானது பிரச்சினைகளுடன் தொடங்கியது. 1514ஆம் ஆண்டு மன்சூரின் சகோதரரான சுல்தான் சையது கான் கசுகர், எர்கந்து மற்றும் கோடான் ஆகிய நகரங்களை அபுபக்கரிடமிருந்து கைப்பற்றினார். அபுபக்கரை லடாக்கிற்கு தப்பிச் செல்லும் நிலைக்கு உட்படுத்தினார். மொகுலிசுதான் இரண்டு அரசுகளாக பிரிக்கப்படும் கடைசி நிகழ்வாக இது அமைந்தது. சையது கசுகரிலும், மன்சூர் துர்பனிலிருந்தும் ஆட்சி செய்தனர். இந்த துர்பன் அரசானது உய்குரித்தான் என்றும் அழைக்கப்பட்டது.[29]
1513ஆம் ஆண்டு காரா தெல் அரசானது மன்சூரிடம் அடிபணிந்தது. 1517ஆம் ஆண்டு மன்சூர் நிரந்தரமாக அமி நகரத்திற்கு இடம்பெயர்ந்தார். மிங் அரசமரபுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினார். மன்சூருக்கு பிறகு 1545ஆம் ஆண்டு அவரது மகன் ஷா கான் ஆட்சிக்கு வந்தார். ஷா தன்னுடைய சகோதரர் முகமதுவுடன் சண்டையில் ஈடுபட்டார். முகமது அமியின் பகுதிகளை கைப்பற்றினர். ஒயிரட்டுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். ஷா 1560ஆம் ஆண்டு இறந்தார். அவருக்கு பிறகு முகமது ஆட்சிக்கு வந்தார். முகமது தன்னுடைய மூன்றாவது சகோதரன் சுபி சுல்தானுக்கு எதிராக சண்டையிட வேண்டிவந்தது. அரியணையை கைப்பற்ற மிங் அரசின் ஆதரவை சுபி சுல்தான் பெற்றார். 1570இல் முகமதுவின் இறப்பிற்குப் பிறகு துர்பன் கானரசானது வரலாற்று நூல்களிலிருந்து மறைந்து போய்விட்டது. 1647 மற்றும் 1657 ஆகிய ஆண்டுகளில் பெய்ஜிங்கிற்கு தூதுக்குழுக்களைத் துர்பன் கானரசு அனுப்பியது என்பது தான் கடைசியாக அவர்களைப் பற்றி கேட்ட செய்தி. சிங் அரசமரபானது இந்த தூதுக் குழுக்களை உண்மையான சகதாயி அரசமரபில் இருந்து வந்ததாக ஏற்றுக்கொண்டது.[30]
மேற்கே தாஷ்கந்து நகரத்திலிருந்து எர்கந்து கானரசை மகமுது கான் ஆண்டு கொண்டிருந்தார். சமர்கந்தை மையமாகக் கொண்ட தைமூரியப் பேரரசானது தாஷ்கந்து நகரத்தை மீட்டெடுக்க 1488ஆம் ஆண்டு முயற்சித்தது. ஆனால் மகமுதால் தோற்கடிக்கப்பட்டது. 1487ஆம் ஆண்டு முகமது சாய்பானிக்கு மகமது அடைக்கலம் கொடுத்தார். தைமூரியர்களிடமிருந்து புகாரா மற்றும் சமர்கந்து ஆகிய நகரங்களை சாய்பானி 1500ஆம் ஆண்டு கைப்பற்றினார். தன்னைத் திரான்சாக்சியானாவின் ஆட்சியாளராக்கிக் கொண்டார். சாய்பானி உடனே மகமதுவுக்கு எதிராக திரும்பினார். மகமது தனது சகோதரர் அகமதுவை உதவிக்கு அழைத்தார். சாய்பானி இரண்டு மொகுலாய கான்களையும் தோற்கடித்தார். அவர்களை கைதிகளாக சிறை பிடித்தார். சாய்பானி அவர்களை சீக்கிரமே விடுவித்தார். ஆனால் தாஷ்கந்து மற்றும் சைரம் ஆகிய நகரங்களை வைத்துக் கொண்டார். இந்நிகழ்வுக்கு பிறகு சீக்கிரமே அகமது இறந்தார். 1508ஆம் ஆண்டு மகமது சிறை பிடிக்கப்பட்டார். பிறகு கொல்லப்பட்டார். சகதாயிகள் திரான்சாக்சியானாவிலிருந்து வெளியேற்றப்பட்டது இதுவே கடைசி முறையாக அமைந்தது.[28]
1514ஆம் ஆண்டு மன்சூர் கானின் சகோதரரான சுல்தான் சையது கான் கசுகர், எர்கந்து மற்றும் கோடான் ஆகிய நகரங்களை மிர்சா அபுபக்கர் துக்லத்திடமிருந்து கைப்பற்றினார். மகமுது இல்லாத நேரத்தில் துக்லத் ஆட்சி செய்து கொண்டிருந்தார். லடாக்கிற்குத் தப்பிச் சொல்ல வேண்டிய நிலைக்குத் துக்லத் கட்டாயப்படுத்தப்பட்டார். மொகுலிசுதானானது இரண்டு பகுதியாக கடைசியாக பிரிக்கப்பட்ட நிகழ்வாக இது அமைந்தது. சையது கசுகரிலிருந்தும் மன்சூர் துர்பனிலிருந்தும் ஆட்சி செய்தனர். துர்பன் பகுதியானது உய்குரித்தான் என்றும் அழைக்கப்பட்டது. 1529ஆம் ஆண்டு சையது படக்சானைத் தாக்கினார். 1531ஆம் ஆண்டு லடாக் மீது படையெடுத்தார். இந்த படையெடுப்பின்போது கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்திற்கு சென்ற காரணத்தினால் சையதுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 1533ஆம் ஆண்டு சூலை மாதம் தன் நாட்டிற்கு திரும்பும் வழியில் அவர் இறந்தார். அவருக்கு பிறகு அவரது மகன் அப்துரசீத் கான் ஆட்சிக்கு வந்தார். துக்லத்துகளுடன் அப்துரசீத் சண்டையில் ஈடுபட்டார். துக்லத்துகளின் தலைவர்களில் ஒருவரான சயித் முகமது மிர்சாவை தண்டித்தார். இலி பகுதி மற்றும் இசிக்-குல் ஏரி ஆகியவற்றில் ஊடுருவலில் ஈடுபட்ட கிர்கிசுகள் மற்றும் கசக்குகள் ஆகியோருடன் போரிடுவதில் தன்னுடைய ஆட்சிக் காலத்தை அப்துரசீத் கழித்தார். கிர்கிசுகள் இலி பகுதியை கைப்பற்றுவதைத் தடுப்பதில் இறுதியாக அவர் வெற்றி பெற்றார். 1565ஆம் ஆண்டு அப்துரசீத்திற்குப் பிறகு அவரது மகன் அப்துல் கரீம் கான் ஆட்சிக்கு வந்தார். அவர் தலைநகரத்தை எர்கந்திற்கு மாற்றினார். 1590ஆம் ஆண்டு அப்துலுக்கு பிறகு அவரது சகோதரர் முகம்மது சுல்தான் ஆட்சிக்கு வந்தார். புகாரா கானரசின் இரண்டாம் அப்துல்லா கான் தலைமையிலான படையெடுப்பை அவர் முறியடித்தார்.[31] 1610ஆம் ஆண்டு முகமது இறந்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் சுதிசாத்தீன் அகமது கான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் 1619ஆம் ஆண்டு அவர் அரசியல் கொலை செய்யப்பட்டார். அவருக்கு பிறகு அப்தல் லத்தீப் கான் ஆட்சிக்கு வந்தார். அப்தல் லத்தீப் கானுக்குப் பிறகு அவரது உறவினரான சுல்தான் அகமது கான் 1631ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். இவர் புலத் கான் என்றும் அழைக்கப்பட்டார். புலத் கானை மொகுலாய கானான அப்தல்லா ஆட்சியிலிருந்து 1636ஆம் ஆண்டு தூக்கி எறிந்தார். அப்தல்லா தனது அவையை நிலைப்படுத்தினார். முதிய உயர்குடியினர் பலரை இந்தியாவிற்கு நாடு கடத்தினார். கோடான் மற்றும் அக்சு ஆகிய பகுதிகள் மேல் படையெடுத்த ஒயிரட்டுகளை இவர் முறியடித்தார். 1655ஆம் ஆண்டு சிங் அரசமரபுடன் கப்பம் கட்டும் உறவுமுறையை ஏற்படுத்திக்கொண்டார். மேலும் புகாரா மற்றும் முகலாயப் பேரரசு ஆகிய இரண்டு அரசுகளுடனும் நட்பு ரீதியிலான உறவுகள் நிறுவப்பட்டன. 1667ஆம் ஆண்டு அப்தல்லாவின் மகனான உல்பர்சு கான் தனது தந்தையை ஆட்சியில் இருந்து நீக்கினார்.[32]
16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் எர்கந்து கானரசானது கோசாக்களின் செல்வாக்கின் கீழ் வந்தது. கோசாக்கள் என்பவர்கள் முசுலிம்கள் ஆவர். அவர்கள் தங்களை இறைதூதர் முகம்மது நபியின் வழித்தோன்றல்கள் அல்லது முதல் நான்கு அரபிக் கலீபகங்களின் வழிவந்தவர்கள் என்று கூறினர். 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சையதின் ஆட்சியின்போது அரசவை மற்றும் கானின் மீது வலிமையான செல்வாக்கை கோசாக்கள் செலுத்திக் கொண்டிருந்தனர். 1533ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க அளவிற்கு செல்வாக்குடைய கோசாவான மக்துமி அசம் என்பவர் கசுகர் நகருக்கு வருகை புரிந்தார். அங்கு தனது இரண்டு மகன்களுடன் வாழத் தொடங்கினார். அந்த இரண்டு மகன்களும் ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டனர். தங்களுடைய வெறுப்பை தங்களது குழந்தைகளுக்கும் அளித்தனர். இந்த இருவரின் வழிவந்தவர்கள் கானரசின் பெரும்பாலான பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். தங்களது இரு பிரிவினருக்கிடையே கானரசைப் பிரித்துக் கொண்டனர். அவை கசுகரிலிருந்த அக் தக்லிக் மற்றும் எர்கந்திலிருந்த காரா தக்லிக் ஆகியவையாகும். அக் தக்லிக் என்பதன் பொருள் வெள்ளை மலை மற்றும் காரா தக்லிக் என்பதன் பொருள் கருப்பு மலை ஆகியவை ஆகும். உல்பர்சு வெள்ளை மலைக்காரர்களுக்கு ஆதரவளித்தார். கருப்பு மலைக்காரர்களை வன்மையாக அடக்கி வைத்துக் கொண்டிருந்தார். இது கிளர்ச்சிக்கு வித்திட்டது. 1670ஆம் ஆண்டு உல்பர்சு அரசியல் கொலை செய்யப்பட்டார். உல்பர்சுக்குப் பிறகு அவரது மகன் ஆட்சிக்கு வந்தார். அவர் குறுகிய காலத்திற்கே ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு இசுமாயில் கான் ஆட்சிக்கு வந்தார். இசுமாயில் இரண்டு முசுலிம் பிரிவுகளுக்கு இடையே இருந்த ஆட்சி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். வெள்ளை மலைக்காரர்களின் தலைவரான அபக் கோசாவை விரட்டியடித்தார். அபக் கோசா திபெத்துக்குத் தப்பி ஓடினார். அங்கு 5வது தலாய் லாமா சுங்கர் கானரசின் ஆட்சியாளரான கல்டன் போசுக்து கானின் உதவியை அபக்கிற்குப் பெறுவதில் அவருக்கு உதவினார்.[33]
1680ஆம் ஆண்டு கல்டன் தலைமையில் 1,20,000 சுங்கர்கள் எர்கந்து கானரசுக்குள் நுழைந்தனர். சுங்கர்களுக்கு வெள்ளை மலைக்காரர்கள், அமி மற்றும் ஏற்கனவே அடிபணிந்திருந்த துர்பன் அரசு ஆகிய அரசுகள் உதவி புரிந்தன. கசுகருக்கான யுத்தத்தில் சுங்கர்களுக்கு எதிராகப் போரிட்ட இசுமாயிலின் மகனான பபக் சுல்தான் இறந்தார். எர்கந்தைத் தற்காக்கும் முயற்சியில் தளபதி இவாசு பெக் இறந்தார். மொகுலாய படைகளை சுங்கர்கள் எளிதாக தோற்கடித்தனர். இசுமாயில் மற்றும் அவரது குடும்பத்தினரை கைதிகளாக பிடித்தனர். பபக்கின் மகனான இரண்டாம் அப்தர் ரசீத் கானை கைப்பாவை கானாக கல்டன் அமர வைத்தார். அபக் கோசாவை மீண்டும் தப்பிச் செல்லும் நிலைக்கு புதிய கான் உட்படுத்தினார். ஆனால் அப்தர் ரசீத் ஆட்சியும் இரண்டே வருடங்களில் சீக்கிரமே முடிவுக்கு வந்தது. எர்கந்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. அவருக்குப் பிறகு அவரது சகோதரர் முகமது இமின் கான் ஆட்சிக்கு வந்தார். சுங்கர்களை எதிர்த்து போராட சிங் அரசமரபு, புகாரா கானரசு மற்றும் முகலாயப் பேரரசு ஆகிய நாடுகளிடம் முகமது உதவி கோரினார். 1693ஆம் ஆண்டு சுங்கர் கானரசு மீது வெற்றிகரமாக ஒரு தாக்குதலை முகம்மது நடத்தினார். 30,000 பேரை கைதிகளாக பிடித்தார். துரதிர்ஷ்டவசமாக அபக் கோசா மீண்டும் தோன்றினார். தன்னுடைய ஆதரவாளர்களை கொண்டு ஒரு கிளர்ச்சியை நடத்தி முகமதுவை ஆட்சியிலிருந்து தூக்கி எறிந்தார். அபக் கோசாவின் மகனான எகியா கோசா ஆட்சியில் அமர வைக்கப்பட்டார். 1695ஆம் ஆண்டு அவரும் அவரது தந்தையும் உள்நாட்டு கிளர்ச்சியை ஒடுக்கும் முயற்சியில் கொல்லப்பட்ட போது அவரது ஆட்சியும் சிறிது காலத்திற்குள்ளேயே முடிவுக்கு வந்தது. 1696ஆம் ஆண்டு அக்பசு கான் அரியணையில் அமர வைக்கப்பட்டார். ஆனால் கசுகரில் இருந்த பெக்குகள் அவரை அங்கீகரிக்க மறுத்து விட்டனர். மாறாக கிர்கிசுகளுடன் இணைந்து எர்கந்தை தாக்கினர். அக்பசை கைதியாக பிடித்தனர். எர்கந்தின் பெக்குகள் சுங்கர்களிடம் சென்றனர். சுங்கர்கள் தங்களது படையினரை அனுப்பினர். 1705ஆம் ஆண்டில் கிர்கிசுகள் வெளியேற்றப்பட்டனர். சுங்கர்கள் சகதாயியாக இல்லாத மிர்சா அலிம் ஷா பெக்கை ஆட்சியில் அமர்த்தினர். இவ்வாறாக சகதாயி கான்களின் ஆட்சியானது முடிவுக்கு வந்தது.[34]
சகதாயி மங்கோலியர்கள் பெரும்பாலும் தங்களது அரசாங்கத்தை நாடோடி வழியிலேயே நடத்தினர். 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை நகர்ப்புற மையங்களில் அவர்கள் குடியமரவில்லை. திரான்சாக்சியானா மற்றும் தரிம் வடிநிலம் ஆகிய பகுதிகளில் இருந்த நகர்ப்புறக் குடிமக்களை தங்களது சார்புப் பிராந்தியங்களாகவே சகதாயி கானரசின் மங்கோலியர்கள் நடத்தினர்.[35]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.