From Wikipedia, the free encyclopedia
மயாபாகித்து பேரரசு (ஆங்கிலம்: Majapahit Empire; சாவகம்: Karaton Mojopahit; இந்தோனேசியம் Kerajaan Majapahit) என்பது, 1293 முதல் 1500-கள் வரை, சாவகத் தீவில் (தற்போதைய இந்தோனேசியா) அமைந்திருந்த பேரரசு ஆகும். இந்தோனேசிய மற்றும் தென்கிழக்காசிய வரலாற்றில் உச்சம் பெற்றிருந்த மிகப்பலம் வாய்ந்த பேரரசுகளில் மயாபாகித்து ஒன்றாகும்.
1293–1527 | |||||||||||
தலைநகரம் | மயாபாகித்து, வில்வதீக்தா (தற்போதைய துரோவுலான்) | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பழஞ்சாவகம் (மக்கள் மொழி), சங்கதம் (சமய மொழி) | ||||||||||
சமயம் | சைவம், பௌத்தம், சாவகத் தொன்னெறி, | ||||||||||
அரசாங்கம் | முடியரசு | ||||||||||
அரசன் | |||||||||||
• 1295–1309 | கர்த்தராயச செயவர்த்தனன் | ||||||||||
• 1478–1527 | கிரீந்திர வர்த்தனன் | ||||||||||
மகாபதி | |||||||||||
• c. 1336–1364 | கஜ மதன் | ||||||||||
வரலாறு | |||||||||||
• முடிசூடல் | நவம்பர் 10 1293 | ||||||||||
• தெமாகு சுல்தானகம் பொறுப்பேற்பு | 1527 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா மலேசியா சிங்கப்பூர் புரூணை தாய்லாந்து |
ஹயாம் வுரூக் எனும் அதன் சக்கரவர்த்தி காலத்தில், (1350 - 1389) அதன் உன்னதமான நிலையில் காணப்பட்ட மயாபாகித்து, கஜ மதன் எனும் பேரமைச்சரின் வழிகாட்டலில் இன்றைய தென்கிழக்காசியாவின் பெரும் பரப்பளவைத் தன்னுடையதாகக் கொண்டிருந்தது.
1365-இல் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்" எனும் சாவக நூலின் படி, மயாபாகித் பேரரசு இன்றைய இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, புரூணை, தெற்கு தாய்லாந்து, பிலிப்பீன்சு, கிழக்குத் திமோர் உட்பட 96 திறைநாடுகளுடன் சுமாத்திராவிலிருந்து நியூ கினி வரை பரந்திருந்தது.
ஆனாலும் மயாபாகித்து பேரரசின் தாக்கங்கள் இன்னும் வரலாற்று ஆசிரியர்களின் மத்தியில் ஆய்வுக்கு உரியதாக உள்ளது.[3]
இந்தோனேசியாவின் இன்றைய எல்லைகளுக்கு மயாபாகித்து பேரரசின் பண்டைய ஆட்சி எல்லைகளும் ஒரு காரணமாகும்.[4](p19)[5]
மயாபாகித்து என்பது உண்மையில், இன்றைய துரோவுலான் நகருக்கும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிக்கும் வழங்கப்பட்டிருந்த பெயர் ஆகும். ராதன் விஜயனால் இப்பகுதி காடழித்து நகராக்கப்பட்ட போது, வேலையாட்கள் வில்வ மரமொன்றின் கசப்பு நிறைந்த பழத்தை உட்கொண்டுவிட்டு சாவக மொழியில் "கசப்பான வில்வம்" எனும் பொருள்படும் "மயா + பாகித்" எனப் பெயர் சூட்டியதாகச் சொல்லப் படுகின்றது.[6][7] "வில்வதீக்தா" என்பது அதேபொருள் தரும் சங்கதப் பெயராகும். தலைநகரின் பெயரில் நாடு அழைக்கப்படுவது மரபென்பதால், மயாபாகித்து மன்னரால் ஆளப்பட்ட முழுநாடும் மயபாகி என்றானது.
மயாபாகித்தின் சிதைவுகள் மிகக் குறைந்த அளவிலேயே கிட்டுகின்றன.[8] பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்தோனேசியாவை 1811 முதல் 1816 வரை ஆண்டுவந்த ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி ஆளுநரான ஸ்டம்போர்ட் ரபெல்சால், இன்றைய துரோவுலான் பகுதியில் மயாபாகித்து சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.[9]
எனினும் சாவக மக்கள், மயாபாகித்தை முற்றாக மறக்கவில்லை என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு "பாபத் தனா யாவி" எனும் சாவக வரலாற்று நூல் சான்றாகின்றது.
1365-இல் பழஞ்சாவகத்தில் எழுதப்பட்ட "நகரகிரேதாகமம்", கவி மொழியில் 1600 களில் எழுதப்பட்ட "பரராத்தன்" ஆகிய நூல்கள், மயாபாகித்து பற்றிய மேலதிக ஆய்வுகளுக்கு வழிசமைத்தன.[10] இவை ஒல்லாந்தரால், '"சக்கரநகர அரச வம்சத்துக்கு" எதிராக 189 4இல் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்பில், கைப்பற்றப்பட்டன.
2011 இல் மேற்கொள்ளப்பட்ட இறுதி ஆய்வுகளின் முடிவுகளின் படி, முன்பு நினைத்திருந்ததை விட, மயாபாகித்து தலைநகர் மிகப் பெரிதாக இருந்திருக்கின்றது என்பது கண்டு அறியப்பட்டு இருக்கின்றது.[11]
மலாய அரசு 1290 இல் தோற்கடிக்கப்பட்டபின்,[12] இந்தோனேசியப் பகுதியின் பலம்வாய்ந்த அரசாக சிங்காசாரி அரசு எழுச்சியடைந்தது. மொங்கோலிய அரசின் குப்லாய் கான், அதை அடிபணிவிக்க எண்ணி, திறைகேட்டு தூது அனுப்பினான்.
சிங்கசாரியின் இறுதி மன்னனான கர்த்தநகரனோ, அதற்கு மறுத்ததுடன், குப்லாய் கானையும் அவமானப்படுத்தி, தூதனை இழிவுசெய்து அனுப்பி வைத்தான். இதற்குப் பழிவாங்குவதற்காக, 1293-இல், குப்லாய் கானின் ஆயிரம் கப்பல்கள் கொண்ட பெரும்படை சிங்கசாரி்யை முற்றுகையிட்டன.
இதற்கிடையில், சிங்கசாரியின் சிற்றரசாக இருந்த பழைய கேடிரி நாட்டரசன் செயகாதவாங்கன், சிங்கசாரிக்கு எதிராக கிளர்ச்ச்சி ஏற்படுத்தி, கர்த்தநகரனையும் கொன்றான். மதுரா தீவுக்கு அதிபதியாக இருந்த ஆரிய வீரராசனின் வேண்டுகோளுக்கிணங்க, கர்த்தநகரனின் மருமகன் ராடன் விஜயன் செயகாதவாங்கனால் மன்னித்து விடப்பட்டார்.
அத்துடன், அவன் ஆட்சிக்காக தாரிக் வனாந்தரமும் வழங்கப்பட்டது. அப்பகுதியில், மயாபாகித்து எனும் சிறு நகரொன்றை அமைத்தான் விஜயன். குப்லாய்கானின் பெரும்படை, சிங்கசாரிக்கு எதிராக போர் தொடுத்த போது, விஜயனும் தானாகவே சென்று செயகாதவாங்கனுக்கு எதிராக மொங்கோலியப் படையுடன் இணைந்து கொண்டான்.
செயகாதவாங்கன் கொல்லப் பட்டதுமே, தன் படையை எதிர்பாராதவிதமாக மொங்கோலியப் படைக்கு எதிராகத் திருப்பிய விஜயன், அவர்களையும் சாவகம் விட்டுத் துரத்தி அடித்தான்.[13] அதே ஆண்டில், மயாபாகித்தில் இருந்து, சாவகத்தின் சிங்கசாரியின் ஆட்சிப் பகுதிகளும் சேர்த்து பேரரசு ஒன்றை அமைத்தான் விஜயன்.[14]:200–201 சக ஆண்டு 1215 கார்த்திகை 15-ஆம் நாள் (நவம்பர் 10, 1293)[6] "கர்த்தராயச செயவர்த்தனன்" எனும் பெயரில் மயாபாகித்து பேராரசனாக முடிசூடிக் கொண்ட விஜயன், கர்த்தநகரனின் நான்கு மகள்களையும்; பின்னர் மலாய் இளவரசி இந்திரேசுவரியையும் மணந்து கொண்டான்.
ஆரம்பத்தில் பல கலகங்களைச் சந்தித்தாலும், மயாபாகித்துதை மிக உறுதியாக நிறுவிக் கொண்டான் விஜயன். கலகங்களுக்கு அடிப்படையாக இருந்த பழைய ""மகாபதி"யான (பேரமைச்சர், ராஜகுருவை ஒத்த மிகப் பெரும் பதவி) கலாயுதனையும் தூக்கிலிட்டான்.[13]
1309-இல் விஜயன் இறந்தபின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகன் செயநகரன் பெரும் பெண் பித்தனாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். அதனால் அரண்மனை வைத்தியர் தங்கன் என்பவனால் திட்டமிட்டுக் கொல்லப்பட்டான் செயநகரன்.
அவனை அடுத்து ஆட்சியைப் பொறுப்பு ஏற்கவிருந்த இராசமாதா காயத்திரியோ(விஜயனின் மகாராணி), தன் கணவன் மறைந்த பின் பௌத்த துறவறத்தை ஏற்றிருந்ததால், அரசை ஏற்க மறுத்தாள்.
இறுதியில் அவள் மகள் திரிபுவன விஜயதுங்கதேவி அரசுபீடம் ஏறினாள். அவள் காலத்தில் (1336) மகாபதியாகப் பொறுப்பேற்ற கயா மடா என்பவர் நாட்டை விரிவாக்கும் பெருங்கனவு கொண்டிருந்தார். அத்துடன், அதற்காக புகழ்பெற்ற பலாபா சூளுரையையும் சபதம் எடுத்துக் கொண்டார்.[5]
திரிபுவனாவின் ஆட்சியின் கீழ், அவளது மதியூகியான மகாபதி கயா மடாவின் வழிகாட்டலில், அருகிருந்த பாலி நாடு, மயாபாகித்தின் கீழ் வந்ததுடன்,[14]:234 மயாபாகித்து பெரும் வளர்ச்சி கண்டது. திரிபுவனாக்கு பின் ஆட்சிக்கு வந்த அவள் மகன் ஹயாம் வுரூக் காலத்தில், தன் காலத்தின் அதியுச்ச நிலையில் புகழோங்கி விளங்கியது மயாபாகித்து.[14]:234
மயாபாகித்து, பெருமளவு இந்தோனேசிய தீவுக்கூட்ட நாடுகளைத் தன்வசம் கொண்டு வந்துகொண்டிருந்த காலத்தில், அண்டை நாடான சுண்டாவின் இளவரசி "டியா பிதாலோகா சித்திரரேஸ்மியை" மணமுடிக்க முடிவுசெய்தான்.[15] சுண்டா மன்னர் அதை நட்புக்கூட்டணி அழைப்பாக ஏற்றுக்கொண்டு, திருமணத்துக்கும் ஒத்துக்கொண்டார். 1357இல் அவர்கள் திருமணத்துக்காக மயாபாகித்து வந்தபோது,[14]:239 அவர்களை எதிர்கொண்டழைக்க வந்த கயா மடா, சுண்டாவைத் தன் வலையின் கீழ் கொணரக்கூடிய சந்தர்ப்பமாக அதைக் கண்டார். மறுத்த சுண்டா அரசின் குடும்பத்தவர் யாவரும் எதிர்பாராதவிதமாக வெட்டிக்கொல்லப்பட்டனர்.[16] துரோகமிழைக்கப்பட இளவரசியும் மனமுடைந்துபோய், நாட்டுக்காக தன் இன்னுயிரை நீத்ததாக மரபுரைகள் சொல்கின்றன..[17] நகரகிரேதாகமத்தில் சொல்லப்படாதபோதும் புபாத் சதுக்கத்தில் இடம்பெற்ற இப்படுகொலை, பல சாவக நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
கயா மடா மறைந்து சில ஆண்டுகளுக்குப் பின், 1377 இல் பலெம்பாங்கில் இடம்பெற்ற ஒரு கலகத்தை அடக்கிய மயாபாகித்து, சிறீவிசய அரசின் முடிவுக்கும் வழிவகுத்தது.[4](p19) 14 ஆம் நூற்றாண்டில் புதிதாக உருவான சிங்கபுர அரசு, மயாபாகித்து அரசின் கடற்படையை துமாசிக்கில் (இன்றைய சிங்கப்பூர்) தாக்கியது. எவ்வாறெனினும், 1398 இல் சிங்கபுரம்,, மயாபாகித்தால் சூறையாடி அழித்தொழிக்கப்பட்டது[18][19][20] அதன் இறுதி மன்னனான இஸ்கந்தர் சா, மலாகா சுல்தானகத்தை அமைப்பதற்காக 1400இல் மலாய்த் தீவுகளுக்குத் தப்பிச் சென்றான்.
மயாபாகித்தின் ஆட்சியியல்புகள் பற்றி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. பாலி - கிழக்கு சாவகம் தவிர அதன் ஆட்சி நேரடியாக வேறெந்த நாட்டிலும் செல்வாக்கு செலுத்தவில்லை என்று சொல்லப்படுகின்றது.[21] பெரும்பாலும் திறைசெலுத்தலின் கீழ் மட்டும் மையப்படுத்தப்பட்ட அரச முறைமையின் கீழ், மயாபாகித்தின் ஆட்சி அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.[4](p19) மயாபாகித்து மன்னர்களின் அடுத்த அரசுகளின் மீதான படையெடுப்புகளெல்லாம், இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் மத்தியில் தாம் மட்டுமே வாணிபப் பேருரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவர்களது பேரவாவைக் காட்டுகின்றது. அதன் எழுச்சிக்காலமே பெருமளவு முஸ்லிம் வாணிபர்கள் இந்தோனேசியாவுக்கு வருகை தந்த காலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹயாம் வுரூக் 1389இல் மறைந்ததைத் தொடர்ந்து, அவன் மகள் குசுமாவார்த்தனியின் கணவன் விக்ரமவர்த்தனுக்கும், ஹயாமின் மகன் முடிக்குரிய இளவரசன் வீரபூமிக்குமிடையில் அரசாட்சிக்குப் ப்போட்டி இடம்பெற்றது. இதற்காக இடம்பெற்ற போரொன்றில், வீரபூமி கொல்லப்பட்டதை அடுத்து, விக்கிரமவர்தனன் அரசமைத்தான்.[4](p18) விக்கிரமவர்தனன் காலத்தில் இடம்பெற்ற சீன இசுலாமிய ஆளுநனான செங் ஹேயால் மேற்கொள்ளப்பட்ட படையெடுப்புகளால், வட சாவகம் செங்ஹே வசமானதுடன், அங்கு சீன மற்றும் இசுலாமியக் குடியிருப்புகள் பெருமளவு உண்டாயின.
விக்கிரமவர்த்தனுக்குப் பின், அவனது ஆசைநாயகியான வீரபூமியின் மகளுக்குப் பிறந்த "சுகிதா" 1426இல் ஆட்சிக்கு வந்தாள்[14]:242 அவள் இறந்த பின் 1447இல், அவள் சகோதரன் கர்த்தவிசயனும்,[14]:242 அவனுக்குப் பின் 1451இல் இராயசவர்த்தனன் என்பவனும், ஆட்சிக்கு வந்தனர். இராயசவர்த்தனன் இறந்த 1453இலிருந்து மூன்றாண்டுகள், அரசரில்லாமல் மயாபாகித்து அரசியலில் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. பின் கர்த்தவிசயனின் மகனான கிரீசவர்த்தனன் 1456 முதல் 1466 வரை ஆட்சிபுரிய, 1466இல் "சிங்கவிக்கிரமவர்தனன்" ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொண்டான். மயாபாகித்து அரசில் உரிமைகோரி, இன்னொரு இளவரசன் கர்த்தபூமி அவனுக்கெதிராகக் கிளர்ச்சி செய்தான். இதனால், மயாபாகித்து பகுதி, கர்த்தபூமிக்கும், பழைய கேடிரி நாட்டின் தலைநகர் அமைந்திருந்த "டாகா" பகுதி சிங்கவிக்கிரமவர்த்தனுக்கும் பங்கிடப்பட்டது. அவனுக்குப் பின், அவன் மகன் ரணவிசயன் 1474இல் ஆட்சிக்கு வந்தான்.
பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மயாபாகித்து பேரரசின் மேற்குப் பகுதியில் உருவான மலாக்கா சுல்தானத்தின் எழுச்சியை, மயாபாகித்தால் தடுக்க முடியவில்லை. எனினும் இசுலாமிய வணிகர்களுக்கு வாணிப உரிமைகளைக் கொடுத்து, கர்த்தபூமி, ஓரளவு மயாபாகித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டான். இதனால், மயாபாகித்தில் இசுலாமின் வளர்ச்சி தீவிரமடைந்தது. சாவகத்தின் மரபார்ந்த சைவ - பௌத்த நெறிகள் வீழ்ச்சியடைவதைத் தாங்க முடியாத அம்மதத்தினர், கர்த்தபூமியை விட்டுவிலகி, ரணவிசயனை நோக்கி நகர்ந்தனர்.
1478இல் மயாபாகித்து சாம்ராச்சியம் சரிவடைய ஆரம்பித்தது என்று கருதப்படுகின்றது.[4](pp37 and 100)) அவ்வாண்டிலேயே, தளபதி உடாரன் தலைமையில் படையெடுத்துச் சென்ற ரணவிசயன், கர்த்தபூமியைக் கொன்றான்.[22][23] டெமாக் சுல்தானத்திலிருந்து கர்த்தபூமிக்கு படையுதவி வழங்கப்பட்டபோதும், அது அவர்களை வந்தடையும் முன்பே, கர்த்தபூமி கொல்லப்பட்டிருந்தான். எனினும், தெமாகுப் படையால் ரணவிசயனின் படை பின்வாங்கச் செய்யப்பட்டபோதும், தோல்வியை ஏற்கமறுத்த ரணவிசயன், தான் பிரிந்திருந்த மயாபாகித்தை ஒன்றிணைத்திவிட்டதாக உரிமைகோரினான்.[24] கிரீந்திரவர்த்தனன் எனும் பெயரில் முடிசூடிக் கொண்ட ரணவிசயன், 1474 இலிருந்து 1498 வரை மயாபாகித்தை ஆண்டபோதிலும், கர்த்தபூமியின் கொடிவழியில் வந்த தெமாகு சுல்தானகத்தால் அடிக்கடி தாக்கப்பட்டது தலைநகர் டாகா.
எதிர்பாராவிதமாக, தன் தளபதி உடாரனால், 1498இல் ரணவிசயனின் ஆட்சிகவிழ்க்கப்பட்டான். இதற்குப் பின்பு, டெமாக்கிற்கும், டாகாவிற்கும் இடையே போரேதும் நடக்கவில்லை என்று சொல்லப்படுகின்றது. உடாரன், தெமாகு சுல்தானகத்துக்குத் திறை செலுத்த ஒத்துக்கொண்டது இதற்கொரு காரணமாகலாம். எனினும், மலாக்காவிலிருந்த போர்த்துக்கேயரின் உதவியை நாடி, உடாரன் டெமாக்கைத் தாக்கியதால், மீண்டுமொரு தாக்குதல் டாகா மீது இடம்பெற்றது. டெமாக் தாக்குதலைத் தவிர்க்க, அரசவையினர், கலைஞர்கள், அரச குடும்பத்தினர் எனப் பெரும்பாலானோர், அருகிருந்த பாலித்தீவில் தஞ்சம் நாடினர். இவ்வாறு 1517 இல் டெமாக்கால் டாகா சிதைத்தொழிக்கப்பட்டதுடன்[4](pp36–37) மயாபாகித்து பேரரசு மறைந்து போனது.[25]
கர்த்தபூமிக்கு அவனது சீன ஆசைநாயகியிடம் பிறந்த "ராடன் பதாக்" எனும் டாகா இளவரசனின் கீழ் தெமாகு சுல்தானகம் வந்ததுடன், அவன் தன்னை மயாபாகித்தின் சட்டபூர்வ வாரிசு என்று உரிமைகோரினான். இன்னொரு கருதுகோளின்படி, முன்பு மயாபாகித்தின் சிற்றரசாக இருந்த தெமாகு, உத்தியோகபூர்வ மயாபாகித்து வாரிசான ராடன் பதாக்கை இலகுவாக தன்வசம் உள்ளீர்த்துக் கொண்டது எனலாம். தெமாகு, தன்னை இந்தோனேசியாவின் முதலாவது இசுலாமிய சுல்தானகமாக நிறுவிக் கொண்டதுடன் பின்பு பிராந்திய வல்லரசாகவும் எழுந்தது. மயாபாகித்து பேரரசு வீழ்ந்த பின்னர், சாவக இந்து அரசுக்களாக, கிழக்குச் சாவகத்திலிருந்த பிளாம்பங்கனும், மேற்குச் சாவகத்து சுண்டா அரசிருக்கையான பயாயாரனும் மட்டுமே எஞ்சின. பெரும்பாலான இந்துச் சமூகங்கள், பாலிக்கு இடம்பெயர்ந்ததுடன், இந்துக்களின் மிகச் சிறிய குடித்தொகை ஒன்று, ரெங்கர் மலைப்பகுதியில் இன்றும் எஞ்சியிருக்கின்றது.
மயாபாகித்து ஆட்சியாண்டின் முக்கிய நிகழ்வாக, சித்திரை மாத முதல்நாளில் அனைத்துச் சிற்றரசுகளின் பிரதிநிதிகளும் அரண்மனையில் கூடி திறைசெலுத்தும் நிகழ்வே காணப்பட்டது. மயாபாகித்தும் சுற்றயலும், பாலி மற்றும் கிழக்குச் சாவகம், வெளியரசுகள் (பகுதிச் சுயாட்சியுரிமை கொண்டிருந்த மயாபாகித்து சிற்றரசுகள்) என்று முப்பெரும் பிரிவாக்க மயாபாகித்து இராசாங்கம் பிரிக்கப்பட்டிருந்தது.[26](p107)
தலைநகர் துரோவுலான் அதன் பிரமாண்டமான விழாக்களாலும் அழகாலும் பலரையும் கவர்ந்திருந்தது. இந்து, பௌத்தம் ஆகியவற்றின் மையமாக விளங்கிய துரோவுலானின் மன்னன், சிவபிரான், புத்தர் ஆகியோரின் இணைந்த அவதாரமாகக் கருதப்பட்டான். "நகரகிரேதாகமத்தில்" இசுலாம் பற்றிய குறிப்புகள் காணப்படாவிடினும், அக்காலத்தில் சில முசுலீம்களும் துரோவுலானில் இருந்திருக்கலாம்.[4](p19)
1318 – 1330 இற்கிடையில் மயாபாகித்து வந்ததாகக் கருதப்படும் இத்தாலிய பிரான்சிசுகன் துறவியான மத்தியுசி, தன் பயணக்க்குறிப்பில், மயாபாகித்தின் செல்வச் செழிப்பையும், அதன் வளத்தையும் வியந்து கூறியுள்ளார். செங் ஹேயின் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய "யிங்யாய் செங்லான்" எனும் சீன நூல், "மன்-சே-போ-யி" என்ற பெயரால் மயாபாகித்துதைக் குறிப்பதுடன், அதை 1413களில் ஆண்டிருக்கக்கூடிய மன்னன் (விக்கிரமவர்தனன்) பற்றியும், மயாபாகித்து பற்றியும் பல குறிப்புகளைச் சொல்கின்றது. மன்னன் யானை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணித்ததையும், பூணூல் அணிந்து பட்டாடை புனைந்து, தங்கமலர்களால் அலங்கரித்த கிரீடம் அணிந்து மன்னன் உலவியதையும் வர்ணிக்கின்றது.[27]
மயாபாகித்து மக்கள் தம் முகங்களைப் புனிதமானதாகக் கருதியதால், முகத்தை மாற்றார் யாரும் வலுக்கட்டாயமாகத் தொட்டால், தொட்டவரைக் கத்தியால் குத்திக் கொல்லுமளவுக்கு புனிதம் பேணினர். குத்தியவர் மூன்று நாட்கள் தலைமறைவாய் வாழ்ந்தால், தண்டனையிலிருந்து தப்பலாம் எனும் வழக்கமொன்றும் காணப்பட்டது. எவ்வகைக் குற்றம் செய்த எவரும் மயாபாகித்தில் ஒன்றுபோலவே கருதப்பட்டனர். கைகளைப் பின்னே கட்டி, நகர்வழியாக ஊர்வலமாக அழைத்துவந்து, கழுவேற்றுவதே குற்றவாளிகளுக்கான தண்டனை.[27] சுண்ணம் தடவி தாம்பூலம் தரிக்கும் வழக்கமும், வட்டமாக அமர்ந்து தயிர்ச்சாதம் உண்பதும், விருந்தினரைத் தாம்பூலம் வழங்கி வரவேற்பதும் வழக்கமான உணவுப்பழக்க வழக்கமாக இருந்தது.[27] கீழ்க்குலத்தார் இறந்த பிணங்களைக் கடலோரம் போடுவதும், மேற்குலத்தார் எரிப்பது அல்லது நீரிலிடுவதும் வழக்கத்தில் இருந்தது. விதவைகளும், ஆசை நாயகிகளும் வலுக்கட்டாயமாக உடன்கட்டையேறச் செய்யப்பட்டனர். வளமான மொழியைக் கொண்ட அவர்கள் எழுதுவதற்கு அவர்கள் "சோழி எழுத்தை" (சோழ மண்டல எழுத்து) பயன்படுத்தினர். மென்மையாகவும் அழகாகவும் அந்நாட்டினர் பேசுகின்றனர்.[27] என்றெல்லாம் வருணிக்கும் யிங்யாய் மேலும் பல அரிய தகவல்கலைச் சொல்லிச் செல்கின்றது.
கிழக்கிந்தியப் பல அரசின் செல்வாக்கு, மயாபாகித்தில் காணப்பட்டது.[28] முந்தைய சிங்கசாரி, கேடிரி சாவக அரசுகளின் கலையின் தொடர்ச்சியாக மயாபாகித்தின் கலைநுட்பம் காணப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டு சாவகச் சிற்பங்களுடன் ஒப்பிடும் போது, இவற்றில் இந்தியச் சாயலை சற்று அதிகமாகவே காணமுடிகின்றது. அரசர் - அரசியரை தெய்வச் சாயலில் செதுக்கும் மரபும் காணப்பட்டது.. ராடன் விஜயனின் மாலொருபாகன் சிற்பம், திரிபுவனாவின் பார்வதி சிற்பம் என்பன இதற்கு உதாரணமாகும்.
யிங்யாயில் மயாபாகித்து கோட்டை பற்றிய சித்தரிப்புக்களும் உள்ளன.. செங்கற்களாலான அரண்மனையும், மரத்தாலான தரையும், இருதளத்திலமைந்த அரச மாளிகையும் அதில் சிறப்புறச் சொல்லப்படுகின்றன.[27] சாதாரன வீடுகள் ஓலை வேய்ந்தனவாக இருந்ததையும், செங்கல்லாலான களஞ்சிய அறைகள் இருந்ததும், அவற்றின் மேலேயே கூரை வேய்ந்து மக்கள் வாழ்ந்ததையும் அது வர்ணிக்கின்றது.
மயாபாகித்து ஆலயங்கள், கிழக்கு சாவக மரபில் அமைந்தவை. மெலல்லிய உயரமான ஆலயங்களே பொதுவானவை. இந்துக் கோயில்கள், கனவுரு வடிவிலும், பௌத்த விகாரங்கள், கோள வடிவிலும் காணப்பட்டன. செங்கல் முதலானவற்றால் இவை அமைக்கப்பட்டன.[29] கிழக்கு சாவகத்தின் உயரமான கோயிலாகக் கருதப்படும் "சண்டீ பெனதாரன்" ஹயாம் வுரூக், அடிக்கடி வரும் "பலா கோயில்" என்று நகரகிரேதாகமம் சொல்கின்றது.
மயாபாகித்து காலத்தில் அமைக்கப்பட்ட புதுமையான கட்டுமானங்களில் ஒன்று, "பத்து ராக்சாசா" என்றழைக்கப்பட்ட வாயிலொத்த அமைப்புக்கள். இவை பாதுகாப்புக்குப் பயன்படாதபோதும், அலங்கார நோக்கத்தீலேயே பயன்பட்டன. "பயாங் ராது" வாயில், படுரக்சாக்கு ஓரு சிறந்த உதாரணம் ஆகும்.
ஹயாம் வுரூக்கால் உருவாக்கப்பட்ட ஆட்சியதிகார அமைப்பு, உறுதியானதாக விளங்கியதுடன், மயாபாகித்து வரலாற்று முழுவதும் மாறாமலே காணப்பட்டது.[30] மன்னனே பெரும் அதிகாரங்களைக் க்கொண்டிருந்ததுடன், அவன் பூமியில் வாழும் கடவுளாகக் கருதப்பட்டான். மன்னனின் நெருங்கிய உறவினர்கள், பெரும்பதவிகளை அனுபவித்ததுடன், பின்வருவோர், மயாபாகித்துஹ் அரசவையை அலங்கரித்தனர்:
ராக்ரியான் மந்திரி ரீ பகீரா-கிரான் உடன், "ராக்ரியான மகாபதி" எனும் பேரமைச்சர்களும் அங்கம்வகித்தார்கள். இவர்கள் அனைவரும் இணைந்தே நாட்டின் சட்டம், ஒழுங்கு என்பவற்றைக் கண்காணித்தார்கள். தர்மதியாக்சர்களுள், "தர்மதியாக்சர் ரிங் கசேவான்களும்" (அரச சைவப் பூசகர்கள்), "தர்மதியாக்சர் ரிங் கசோகதன்களும்" (அரச பௌத்தப் பூசகர்கள்) இருந்தனர். இவர்கள் இருவரும் தத்தம் மதநெறிகளை மயாபாகித்தில் ஒழுங்கமைத்து வந்தனர். இவர்களைத் தவிர, அரச குடும்பத்தவரை அங்கத்தவராகக் கொண்ட "பத்தாரா சப்தப்பிரபு"' எனும் ஆலோசனைச் சபையும் அமைந்திருந்தது.
மயாபாகித்து சிற்றரசுகள் "பாதுகா பத்தாரா" என்போரால் ஆளப்பட்டன. இவர்களுக்கு மாமன்னனுக்கு அடுத்த பட்டமாகக் கருதப்படும் "ப்ரே" என்பது வழங்கப்பட்டிருந்தது. ஹயாம் வுரூக் காலத்தில், ப்ரேக்களால் ஆளப்பட்ட இத்தகைய பன்னிரு மாநிலங்கள் அமைந்திருந்தன.
மன்னர் | முடிக்குரிய பெயர் | ஆட்சிக்காலம் |
---|---|---|
ராடன் விஜயன் | கர்த்தராயச செயவர்த்தனன் | 1293 - 1309 |
காலா கெமெட் | சிறீ செயநகரன் | 1309 - 1328 |
சிறீ கிதார்யா | திரிபுவன விஜயதுங்கதேவி | 1328 - 1350 |
ஹயாம் வுரூக் | சிறீ இராயசநகரன் | 1350 - 1389 |
விக்கிரமவர்தனன் | 1389 - 1429 | |
சுகிதா | டியா ஆயு காஞ்சனா வுங்கு | 1429 - 1447 |
கர்த்தவிசயன் | பிரவிசயன் I | 1447 - 1451 |
இராயசவர்த்தனன் | பிரவிசயன் II | 1451 - 1453 |
கிரீசவர்த்தனன் | பிரவிசயன் III | 1456 - 1466 |
சிங்கவிக்கிரமவர்தனன் | பிரவிசயன் IV | 1466 - 1468 |
ப்ரே கர்த்தபூமி | பிரவிசயன் V | 1468 - 1478 |
ரணவிசயன் | பிரவிசயன் VI | 1478 - 1498 |
பதி உடாரன் | 1498 - 1517 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.