From Wikipedia, the free encyclopedia
கேடிரி அல்லது பாஞ்ஞாலு என்று அழைக்கப்பட்ட நாடானது பொ. பி 1042 முதல் 1222 வரை, இன்றைய இந்தோனேசியாவில் அமைந்திருந்த, பண்டைய சாவக இந்து அரசு ஆகும். பழைய ஆதாரங்கள் பெருமளவு கிடைக்காமையால், இதன் வரலாறு சரிவரத் தெரியவில்லை.[1] எனினும், இதன் காலகட்டத்திலேயே, எம்பு சேடாவால் "கேக்கவின் பாரதயுத்தம்", எம்பு பாணுலுவால் "கடோற்கயாசிரய", எம்பு தர்மயாவால் "சுமாராதனா" முதலான சாவக நூல்கள் எழுந்தன. பிராந்தாசு ஆற்றுப்பள்ளத்தாக்கில், இன்றைய கேடிரி நகரின் சுற்றுப்பகுதியிலேயே, கேடிரி அரசு இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. இதன் தலைநகரம், "தகா", "தகனா" என்றெல்லாம் அழைக்கப்பட்டிருக்கின்றது.
கேடிரி அரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1045–1221 | |||||||||||
தலைநகரம் | தகா (இன்றைய கேடிரி) | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பழஞ்சாவகம், சங்கதம் | ||||||||||
சமயம் | சாவகநெறி, சைவம், பௌத்தம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
மன்னன் | |||||||||||
• 1104–1115 | செயவர்சன் | ||||||||||
• 1200–1222 | கர்த்தசெயன் | ||||||||||
வரலாறு | |||||||||||
• ஏரிலங்கன் தன்னாட்டை பாஞ்சாலு (கேடிரி), யங்ஙலா என இரண்டாகப் பிரித்தான் | 1045 | ||||||||||
• துமாபெல்லின் கென் அரோக்கால் கர்த்தசெயன் வீழ்த்தப்பட்டான் | 1221 | ||||||||||
|
ஈசியானா வமிசத்தைச் சேர்ந்த ஏரிலங்கனால் பொ. பி 1045இல் தன் இரு மகன்களுக்காகக் ககுரிபன் அரசை இரண்டாகப் பிரித்துக்கொடுத்த பின் உருவான அரசு ஆகும்.[2]:146-147,158 கேடிரி என்ற பெயர், முசுக்கொட்டை மரத்தைக் குறிக்கும் "கட்ரி" எனும் சங்கதச் சொல்லிலிருந்து வந்ததாக நம்பப்படுகின்றது. இதேபெயரில், ஆந்திராவிலும் ஓர் ஊர் இருக்கிறது.
கேடிரியின் முதல் மன்னனாக, "ஸ்ரீ ஜெயவர்ஷ திக்ஜெய ஹஸ்தப்பிரபு" (1104 - 1115) அறியப்படுகின்றான்.. ஏரிலங்கனைப் போலவே, தன் கல்வெட்டுக்களில், தானும் திருமாலின் அவதாரம் என்றே சொல்லிக்கொள்கிறான். கேடிரியின் இரண்டாம் மன்னன் காமேசுவரன். இவனது முடிக்குரிய பெயர், "ஸ்ரீ மஹாராஜ ராகே சிறிஙன் ஸ்ரீ காமேஸ்வர சகலபுவனஸ்துதிகாரண சர்வாணிவர்யாவீர்ய பராக்ரம திக்ஜயோத்துங்கதேவன்" என்பதாகும். இவனது "சந்திரகபாலம்" எனும் அரச முத்திரை, கபாலமும் இளம்பிறையும் இணைந்ததாக சிவபிரானைக் குறிப்பதாக அமைந்திருக்கின்றது. இவன் காலத்தில் எழுதப்பட்ட "சுமராதகனா" அல்லது "சுமராதனா" எனும் சாவககா நூல், சிவனால் எரிக்கப்பட்டு புவியில் அவதரித்த தெய்வீகத் தம்பதியரான 'காமஜெயன் மற்றும் காமரதியாக, மன்னன் காமேசுவரனையும் அவன் தேவி, ஸ்ரீகிரணாவையும் சித்தரிக்கின்றது. காமதகனத்தைக் குறிக்கும் வகையிலேயே, அவன் தலைநகரும் "தகனா" என உலகப்புகழ்பெற்றது என்று அந்நூல் மேலும் குறிப்பிடுகின்றது. காமேசுவரன், ஸ்ரீகிரணா எனும் அரசதம்பதியரின் பேரழகு, மரபுரைகளிலும் மிக விரிவாக வருணிக்கப்படுகின்றது. சுமராதகனாவில் சொல்லப்படும் கதை, பிற்காலத்தில் "பஞ்சி வட்டம்" என்ற நாட்டார் கதையாக சயாம் நாடு உட்பட, தென்கிழக்காசியா முழுவதும் புகழ்பெற்றது.
காமேசுவரனை அடுத்து, "ஸ்ரீ மகாராஜ ஸ்ரீ தருமேசுவர மதுசூதனாவதாரநிந்தித சுக்ருத்சிங்க பராக்ரம திக்ஜயோத்துங்கதேவன்" எனப் ப்பட்டாஅபிடேகம் பெற்ற ஜெயாபயன் ஆவான். இவனது அரசமுத்திரையாக ஆளரி காணப்பட்டது. இவன் காலத்திலேயே பாரதத்தின் சாவக வேறுமமான "கேக்கவின் பாரதயுத்தம்" எனும் நூல், 1157இல் "எம்பு சேடா" எனும் புலவரால் இயற்றப்பட்டது. அவர் தமையர் எம்பு பாணுலு, அரிவம்சம், கடோற்கயாசிரயம் ஆகிய நூல்களை இயற்றினார். ஜெயாபயனின் காலம், சாவக இலக்கியத்தின் பொற்காலமாகக் கருதப்படுகின்றது. இந்தோனேசித் தீவுக்கூட்டத்தை வெள்ளையர் ஆளுவர். பின் மஞ்சள் இனமொன்று ஆளும். அதற்குப்பின் இப்பகுதி பழையபடி புகழ்பெறும் எனும் தீர்க்கதரிசனமொன்று அமைந்த "ப்ரேம்பாங் ஜொயோபயோ" எனும் சாவகநூல், இவனைப் புகழ்ந்தே இயற்றப்பட்டிருக்கின்றது.
ஜெயாபயனுக்குப் பின் சருவேசுவரனும் (1160-1170) அவனுக்குப் பின் ஆனைமுகனை அரச முத்திரையாகப் பயன்படுத்திய ஆரியேசுவரனும் (1170-1180) ஆட்சிபுரிந்தனர். அவர்களுக்குப் பின், "ஸ்ரீ மகாராஜ ஸ்ரீ கிரௌஞ்சார்யதீப கந்தபுவனபாலக பராக்ரமநிந்தித திக்ஜயோத்துங்கதேவாநம ஸ்ரீ காண்டிரன்" எனும் பட்டத்தைத் தரித்த காண்டிரன் ஆட்சிபுரிந்தான். இவன் காலத்தில் கேடிரிக்கென்ன்று ஒரு கப்பற்படை இருந்திருக்கின்றது என்பதற்்கு சான்றாக, கடற்படைத் தளபதிகளைக் குறிக்கும் "லெட்சுமணன்", "சேனாபதி சர்வஜலன்" முதலான பெயர்கள் இவன் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. 1190இலிருந்து1200 வரை, சங்கும் இளம்பிறையும் கொண்ட அரச முத்திரையைப் பயன்படுத்திய சிருங்கன் என்பவன் கேடிரியை ஆண்டான். கேடிரியின் கடைசிமன்னனான கர்த்தஜெயன் 1200இலிருந்து 1222 வரை கருடமுகம் கொண்ட முத்திரையுடன் கோலோச்சினன். 122இல் கென் அரோக்கைச் சரனடைந்து, சிங்கசாரி அரசிடம் தோற்று, அடிபணியவேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு ஏற்பட்டது. அத்துடன், கேடிரி அரச்சு மறந்து சிங்கசாரி அரசு சாவகத்தில் மலர்ந்தது.[2]:185-187,199
சில கல்வெட்டுகளின் படி, மயாபாகித்து அரசு வீழ்ச்சியுற்ற 15ஆம் நூற்றாண்டின் இறுதியில், கேடிரியின் தலைநகரான "தகா" சற்று அரசியல் பலம் வாய்க்கப் பெற்றதைக் காணமுடிகின்றது. கர்த்தபூமியை 1478இல் வீழ்த்திய கிரீந்திரவர்த்தனன் தன் அரசிருக்கையாக, தகாவையே பயன்படுத்தினான். எனினும், 1527இல் ்முழு மயாபாகித்தும் தெமாகின் காலடியில் வீழ்ந்ததுடன், மீண்டும் தகா மறந்துபோனது.
சிறிவிஜய நாட்டின் சமகாலத்தில் இருந்த கேடிரி அரசு, 11ஆம் 12ஆம் நூற்றாண்டுகளில், முக்கிய வணிகமையமாகவும், இந்திய மற்றும் சீன நாடுகளுடன்[3] சிறப்பான உறவைப் பேணியமைக்கும் சான்றுகள் உண்டு. ராஜேந்திர சோழனால் சிறீவிஜயமும் கடாரமும் வீழ்ச்சியுற்ற பின், கேடிரி போன்ற அரசுகள், வாணிபத்தை அன்றி, விவசாயத்திலேயே தங்கியிருக்கும் நிலை உண்டானது. எனினும் கூடிய விரைவிலேயே, கேடிரி மீண்டும் கடலாளும் வல்லமையைப் பெற்றது.
சாவக இலக்கியத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய கேடிரி ஆட்சிக்காலம், பிற்காலத்தில், "லுப்தக", "விருத்தசஞ்சய", "கிருஷ்ணாயன", "சுமணசந்தக" முதலான் புகழ்பெற்ற நூல்கள் உண்டாக வழிகோலியது.
தூக்கிலிடப்பட்ட கொள்ளையர் தவிர, ஏனைய குற்றவாளிகளுக்கு, கேடிரி அரசில் தண்டனை எதுவும் இருக்கவில்லை. அவர்கள் தண்டப்பணமாக பொற்காசு செலுத்தினாலே போதுமானது. திருமண ஏற்பாடுகளின் போது, மணமகன் வீட்டாரால், மணமக்கள் வீட்டாருக்கு, ்வரதட்சணை வழங்கப்பட்டது. மருத்துவத்தை நம்புவதை விட, நோய்கள் வரும்போது கேடிரி மக்கள், புத்தரை வழிபடுவதிலேயே கவனம் செலுத்தினர். ஆண்டின் ஐந்தாம் மாதத்தில், மக்கள் ஆற்றில் படகோடி மகிழும் நீர்த்திருவிழா ஒன்றும், பத்தாம் மாதத்தில்மலைவாழ்மக்கள் கூடி எடுக்கும் பெருவிழாவும், கேடிரியின் பெருவ்விழாக்களாக இருந்தது.[4]
கேடிரியின் வாணிபம், பெரும்பாலும் விவசாயத்திலேயே தங்கியிருந்தது. விலங்கு வளர்ப்பும், காய்கறி விற்பனையும் கூடக் காணப்பட்ட்டதுடன், ககுரிபன் அரசு காலத்தில் அமைக்கப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் இவற்றுக்குப் பேருதவி புரிந்தன. பிற்காலத்தில், கேடிரி வர்த்தகம், கடற்றொழில்லும், வாசனைத் திரவிய ஏற்றுமதியிலும் பெருவளர்ச்சி கண்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.